பொது


தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

 ஒரு கார உணவோடு குறிப்புகளை முடித்துக் கொள்ளலாம் என்றால் முடியவில்லை.  “நம்ம தமிழ் மக்களுக்கு காஜு கத்லி, மைசூர்பாக் தவிர வேற ஒன்னும் தெரியாதா” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு இந்தக் குறிப்பு சமர்ப்பணம்.  🙂 தீபாவளி வாழ்த்துகள் கனிமொழி!

தேவையான பொருள்கள்:

ரசகுல்லா:
பால் – 1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர்
சர்க்கரை – 400 கிராம்
மைதா – 25 கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள்
தண்ணீர் – 2 லிட்டர்

ரசமலாய்:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
ஏலப் பொடி
முந்திரி, பிஸ்தா, பாதாம் – தலா 4
குங்குமப் பூ
 

rasagulla

செய்முறை:

ரசகுல்லா:

  • ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும்.
  • உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணி அல்லது பனீர் வடிகட்டியில் கொட்டி, வாயைக் கட்டித் தொங்கவிடவும். எதற்கும் பனீர் மூட்டையையும் ஒரு முறை குழாயடியில் நீட்டிக் கழுவினால் வினிகர் அல்லது எலுமிச்சையின் வாசனை போய்விடும்.
  • இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து சக்கை(பனீர்) மட்டும் நிற்கும்.
  • இந்தப் பனீருடன் மைதா மாவைச் சேர்த்து, சுமார் 15 நிமிடங்கள் நன்றாகப் பிசைந்து, சுமார் 10லிருந்து 15 சம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சர்க்கரையுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரை கரைந்து, நன்றாகக் கொதிக்கும் போது, ஒரு டேபிள்ஸ்பூன் பாலை விடவும். அழுக்கு இருந்தால் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அதை நீக்கவும்.
  • இப்போது அடுப்பை நன்றாக எரியவிட்டு, ரோஸ் எசன்ஸ் சேர்த்து, மெதுவாக பனீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்த பிறகு, அதில் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விடவும். இதனால் கொதி அடங்கி மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்.
  • மீண்டும் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிடவும். இப்படியே 5,6 முறை செய்வதற்குள் ரசகுல்லாக்கள் நன்றாக ஊறி மேலே வந்திருக்கும். (ஒரேயடியாக கொதி நிலையிலேயே வைத்தால் தனியாகப் பிரிந்துவிடும்.)
  • அடுப்பிலிருந்து இறக்கி, பாகிலிருந்து ரசகுல்லாக்களை தனியாக எடுத்து ஃபிரிட்ஜில் குளிரவைக்கவும். அல்லது சிரப்புடனே ஃப்ரிட்ஜில் குளிர வைத்து சாப்பிடலாம்.

rasamalai 1

ரசமலாய்:

  • 2 முந்திரிப் பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். .
  • ஒரு லிட்டர் பாலை அரை லிட்டராகக் கொதிக்க வைத்துக் கொள்ளவும். கறந்த பாலாக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் பாக்கெட் பாலே உபயோகிக்கலாம்.
  • பாதி கொதிக்கும் போதே சர்க்கரை, ஏலப் பொடி, முந்திரி விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  • பால் குறைந்து, அரையளவு ஆகி, லேசாகத் திரிதிரியாக வர ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து விடவும்.
  • ரசகுல்லாக்களை நீரை ஒட்ட வடித்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். (ரசகுல்லா உருண்டையாகச் செய்யலாம். ஆனால் ரசமலாய் செய்ய இருப்பதானால் லேசாக கைநடுவில் வைத்து அழுத்தி சிறிது தட்டையாக ஆக்கிக் கொள்ளவும்.)
  • குறுக்கிய பாலைச் சேர்த்து, மேலாக பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், குங்குமப் பூ தூவி, குறைந்தது 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.

rasamalai 2

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

வாழ்த்துகள் சொல்லாத, சொல்ல விரும்பாத, சமூக, அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!! 🙂

தீபாவளியன்று காலையில் சூடான பஜ்ஜிக்கு துணையாகச் செய்ய, அவசர விருந்தாளி என்று குறைந்த நேரத்தில் செய்திட பல நேரங்களில் கைகொடுக்கும் சுலபமான இனிப்பு வகை உணவு.

ravai kesari 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்
ஏலப்பொடி
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்

ravai kesari 3

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
  • ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
  • ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
  • இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
  • பொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.

ravai kesari 2

* இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் dessert உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 5, 6 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.

* கேசரிக்கு கிஸ்மிஸ் பழைய ஸ்டைல். ஒரு திருமணத்தில் டூட்டிஃப்ரூட்டியைப் பார்த்டேன். கிஸ்மிஸ் மாதிரி இடையில் புளிக்காமல் சுவையாக இருந்தது.

* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில்  1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை என்றால் அல்வா என்று சொல்லிவிட்டு அநியாயத்துக்கு ‘சூஜி கா அல்வா’ என்று கேசரியை நீட்டுகிற(அல்வா கொடுப்பது என்பது இதுதானா?) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. 🙂 கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்?) சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.

* பலருக்கு கேசரியில் பால் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எனக்கு பாலின் ஃப்ளேவர் இதில் வருவதில் விருப்பமில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளலாம்.

# 2.

புதிதாகச் செய்பவர்கள், ரவை கட்டி தட்டிவிடும் என்று அஞ்சுபவர்கள், கேசரி பொலபொலவென உதிராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், அந்தப் பதினைந்து நிமிட நேரம் கூட கவனிக்க நேரமில்லாமல் வேறு வேலை இருப்பவர்கள் கீழே சொல்லியுள்ள மாதிரியும் செய்யலாம்.

  • ஒரு கப் ரவையை 1/2 கப் நெய்யில் பொரித்த மாதிரி பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த ரவையுடன் ஒரு கப் சூடான பால், கேசரி கலர், ஏலப்பொடியும் கலந்து வைக்கவும்.
  • குக்கர் உள்பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும்(பாகு ஆகிவிட வேண்டாம்.) பால் சேர்த்த ரவையையும் சேர்த்துக் கலந்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடலாம். மீதி நெய், வறுத்த முந்திரி இத்யாதிகளைக் கலந்து பரிமாறலாம். இந்த முறையில் ரைஸ் குக்கரிலும் செய்யலாம். கேசரி உதிர் உதிராக வரும். அளவு நிறைய செய்யும்போது இந்த முறை வசதியானதும் கூட.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பஜ்ஜி, போண்டா, கார மிக்ஸர்,

இது விஜயதசமியன்று ஹயக்ரீவருக்காகச் செய்யப்படும் உணவு. மற்றும் பள்ளிக்கு புதிதாக குழந்தைகளை அனுப்பும்(வித்யாரம்பம்) நாளன்றும் செய்து ஹயக்ரீவரை வழிபடலாம்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 1 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்

hayagreeva

செய்முறை:

  • கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
  • கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.

-0-
 
திருவஹீந்திரபுரம்:

கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தலம். தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்(நடுநாட்டுத் திருப்பதி) ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.

இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது.

hayagriva

தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

இவர்களை வணங்கி நாமும் நமது நல்ல செயல்களைத் துவங்கலாம்!

வடகலை தென்கலை பேதங்களா, அதெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என்று சொல்லும் இளையவர்கள், அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்! போயிந்தே, Its gone என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதியவர்கள் இங்கே சென்றுவரவும். :Lol: :(((

நவராத்திரி வெள்ளிகிழமை, பெண் வயதுக்கு வருவது, சீமந்தம் போன்ற விசேஷங்களுக்குச் செய்யும் இனிப்பு வகை உணவு.

arisi puttu (salladai for premalatha)arisi puttu (maavu)

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
நெய் – 1/2 கப்
முந்திரிப் பருப்பு – 100 கிராம்
கொப்பரைத் தேங்காய் – 1/2 மூடி
ஏலப்பொடி

arisi puttu

செய்முறை:

  • பச்சரிசியை நன்றாக நீரில் களைந்து, நீரை வடியவைக்கவும்.
  • மிக்ஸியில் பொடித்து நைஸ் மாவாக அரைத்து, மாவு அல்லது மைதாச் சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (மேலே தங்கியிருப்பதை மீண்டும் மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் ஒரு டீஸ்பூனுக்கு மேல் அரிசி ரவை மிஞ்சாது.)
  • அடுப்பில் வாணலியில் சிறிது சிறிதாக சலித்த மாவைப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் ஆறவிட வேண்டும்.
  • ஆறியதை மீண்டும் நைஸ் சல்லடையில் சலித்து கட்டிகளை உடைத்துக் கொள்ளவும்.
  • நல்ல கொதிக்கும் வெந்நீராக வைத்து, அதை மாவில் சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசிறவும்.(கை சுடும்!) தண்ணீர் அதிகம் சேர்த்துவிடக் கூடாது. மாவு, பிடித்தால் பிடிபடவும், உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இப்படித் தண்ணீர் சேர்க்கும்போதே ஓரளவு மாவு பொரிந்து பெரிதாகும். இதை அப்படியே ஒரு பாத்திரத்தில் அழுத்தி வைத்து முக்கால் மணி நேரம் வைக்கவும்.
  • மறுபடியும் கொஞ்சம் பெரிய ரவைச் சல்லடையில் (இப்போது மாவு அளவில் பெரிதாகி இருப்பதால்) சலித்து, கட்டிகளை நீக்கி, மாவை ஒரு துணியில் முடிச்சிட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து, குக்கரில் வெயிட் போடாமல் இட்லி மாதிரி அல்லது இட்லி வாணலியில் ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். (முடிச்சிடாமல் ஒரு அகலமான பாத்திரத்தில் துணியை விரித்து மாவைக் கொட்டி, நாலு பக்கமும் வெளித் தெரியாமல் மூடினாலும் போதும்.)
  • குக்கர் அணைத்த அடுத்த விநாடியே மூடியைத் திறந்து,  பாத்திரத்தை (உள்ளிருக்கும் மாவோடு) வெளியே எடுத்துவிடவும். (குக்கர் மூடியை உடனே திறக்காமல் வைத்தால் மூடியில் இருக்கும் நீர் துணிமீது விழுந்து, ஆங்கே மாவுக்கும் பொசிந்து, கட்டி தட்டிவிடும். 😦
  • துணியைப் பிரித்து, வெந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, பாதி நெய்யையும் உருக்கிச் சேர்த்து கையால் உதிர்த்துக் கொள்ளவும். அதிக யத்தனமுமில்லாமல் மாவு தானே உதிரும்.
  • தேங்காயை மிக மெலிதாகக் கீறிக் கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி தேங்காய்த் துண்டுகளைப் பொரித்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்ல பாகு வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து முற்றிய கெட்டிப் பாகாகக் காய்ச்சவும். இறுதியில் ஏலப் பொடி சேர்க்கவும்.
  • பாகு காய்ந்ததும் இறக்கி, பொரித்த முந்திரி தேங்காய்த் துண்டுகளும், வேகவைத்து உதிர்த்து வைத்திருக்கும் மாவையும் கொட்டி நன்றாகக் கிளறவும்.
  • மீதி இருக்கும் நெய்யையும் உருக்கிச் சேர்க்கவும். 

* 2 கப் அரிசிக்கு சுமார் 6 கப் புட்டு கிடைக்கும்.

* பச்சரிசியை வறட்டு மாவாக மிஷினில் அரைத்து வந்து, வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து, தொடர்ந்து மேலே சொல்லியுள்ளபடியும் செய்யலாம்.

 நவராத்திரி நாயகி: ஸ்ரீரங்கநாயகி ஷைலஜா

பயத்தம் பருப்பு/ கடலைப் பருப்பு சுண்டலை இந்த முறையிலும் செய்யலாம். ஆனால் இப்போது சொல்வது, செய்வதற்கும் உண்பதற்கும் எளிமையான சுண்டல். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலே செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு(அல்லது கடலைப் பருப்பு) – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1/4 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு,  இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

payaththam paruppu sundal

செய்முறை:

  • பருப்பை நன்கு கழுவி, ஒன்றரைப் பங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் 5 நிமிடம் வெயிட் போடாமல் வேகவிடவும்.
  • திறந்து பார்த்து, பருப்பு அரைப்பதம் மட்டும் வெந்ததும் (கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும், அவ்வளவே.) நீரை வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் வைத்து கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பருப்பைக் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து உபயோகிக்கலாம்.

kadalai paruppu sundal

* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழைந்துவிடும் என்று அஞ்சுபவர்கள்:

ஒன்றிரண்டு மணி நேரங்கள் பருப்பைத் தன்ணீரில் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து, பருப்பையும் அதில் கொட்டி, அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சரியான பதத்தில் இருக்கும். கடலைப் பருப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். மிச்ச நீரை வடித்து விடவும்.

அல்லது

தண்ணீரில் ஊறவைக்காமல், குக்கரிலும் வைக்காமல், நேரடியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரைப் பங்கு தண்ணீர் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், சிம்மில் வைத்து, அதில் பருப்புடன் உப்புச் சேர்த்து வேகவிடவும். அடிக்கடி திறந்து பார்த்து, அரைப்பதம் வெந்ததும், (பத்தே நிமிடங்களில் ஆகிவிடும்.) இறக்கி நீரை வடியவிடவும். நம் கை மீறி எதுவும் நடக்காது.

சரி, எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மட்டுமல்ல, தட்டப் பயறு, பச்சைப் பயறு போன்ற மென்மையான பயறுகள் கூட குக்கரில் வைத்ததில் லேசாகக் குழைந்து விட்டது. இனிமேலும் வாணலியில் போட்டு வதக்கினால் மேலும் நிலைமை மோசமாகும் என்றால் என்ன செய்வது? சிம்ப்பிள்! இறக்கிய உடனே, வெந்த பயறிலிருந்து நீரை வடித்துவிட்டு  நேராக குளிர்ந்த நீர்க் குழாயடியில் நீட்டவும் அல்லது குளிர்ந்த நீரை நிறைய சேர்த்து வடிகட்டவும். பயறு ஒன்றோடென்று ஒட்டாமல் கொஞ்சம் கடினத் தன்மை அடையும். பின்னர் சமாளிப்பது சுலபம். எதற்கும் பயறுகளை குக்கர் அடங்கியதும் உடனே திறந்துபார்த்துவிடுவது நல்லது.

-0-

வெல்லச் சுண்டல்:

* பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்து, தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கிளறி, நீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* ஒரு கப் பயத்தம் பருப்போடு ஒரு கப் கேரட் துருவலும் சேர்த்துச் செய்தால் ஒன்றரை கப் வெல்லம் போட்டுக் கிளறலாம்.

* கால் கிலோ கடலைப் பருப்பை வாணலியில் வறுத்து, நீர் விட்டு முக்கால் பதம் வேகவைத்து, 200 கிராம் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறுகியதும் ஏலப்பொடி, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு – 1 கிலோ
பச்சை மிளகாய் – 6, 7
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
 
தாளிக்க: எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

pachchai payaru sundal

செய்முறை:

  • பச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
  • தேங்காய், 4 பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிச்சமிருக்கும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.

* இந்த முறையில் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் செய்யலாம்.

* அரைத்த விழுதை, பயறில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்து, தாளித்தும் செய்யலாம். இதில் நன்றாக சுவை உள்ளே ஊறியிருக்கும். சீக்கிரம் வதக்கி இறக்கிவிடலாம்.

-0-

வெல்லச் சுண்டல்:

பச்சைப் பயறை வறட்டு வாணலியில் வறுத்து, குக்கரில் நன்றாக வேகவைக்கவும். கால் கிலோ பருப்பிற்கு 300 கிராம் வெல்லம் கெட்டிப் பாகாக வைத்து, வேக வைத்த பயறு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, இறுகியதும் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

தட்டப் பயறு இரண்டு மூன்று அளவுகளில் கிடைக்கும். நான் அநேகமாக பெரிய அளவான பயறில் காரச் சுண்டலும், சிறிய அளவிலான பயறில் இனிப்பு சுண்டலும் செய்கிறேன். எந்த அளவிலும் மற்ற சாமான்கள் சேர்க்க வேண்டிய அளவு ஒன்றுதான்.

thatta payaru

தேவையான பொருள்கள்:

தட்டப் பயறு – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 மூடி
ஏலப்பொடி
நெய் – 2 டீஸ்பூன்

thatta payaru vella sundal

செய்முறை:

  • தட்டப் பயறை 12 மணி நேரம் நன்கு ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை சிறிது நீர் விட்டு முற்றிய பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • பாகு தயாரானதும், வெந்த பயறு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும்.
  • இறக்கும் முன் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டல் சீக்கிரம் கெடாது. இரண்டு நாள்களுக்கு வைத்திருக்கலாம்.

* எல்லா வெல்லச் சுண்டல்களுக்கும் இறுதியில் சிறிது நெய் சேர்த்துக் கிளறுவது அதிக மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

நவராத்திரி: துர்கா பூஜா (கல்கத்தா) – நிர்மலா
 

இதை ஏற்கனவே மரத்தடிக் குழுமத்தில் இட்டிருக்கிறேன். அங்கே ரசனை இல்லாதவர்களால் கண்டுகொள்ளப்படாமல் போனது. (Grrr..) பின்னர் ஜி.ராவின் பதிவில் பின்னூட்டமாக இட, கைப்புள்ளயும் ஜோசஃப் சாரும் “junk பாஷை, ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லிவிட்டார்கள். :(( அதனால் முடிந்தவரை புரிகிற மொழியில்….

-0-

என்னவோ எல்லோரும் நவராத்திரி என்றாலே சுண்டல் என்று தான் நினைக்கறார்கள். நிஜத்தில் ஒரு நான்கைந்து நாள்கள் தான் சுண்டல் செய்வோம். அநேகமாக முதல் நாள் ஏதாவது பழமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அன்று அதிகம் யாரும் வீட்டுக்கு வர மாட்டார்கள்.

ஆனால் எங்கள் பக்கத்தில் (இந்த ‘எங்கள் பக்கத்தில்’ என்பது என்னவென்று எனக்கே சரியாக define செய்யத் தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேன் என்று அப்போது சொல்லியிருந்ததையே இப்போதும் சொல்கிறேன்.) நவராத்திரி வெள்ளிக்கிழமை வந்தால் உக்காரை, சனிக்கிழமை எள்ளுருண்டை (அல்லது எள்ளுப் பொடி), ஞாயிற்றுக்கிழமை கோதுமை அப்பம் இப்படித்தான் செய்வார்கள்.

உக்காரை ஒரு மரபு சார்ந்த உணவு. முக்கியமாக தீபாவளிக்கும் அந்தக் காலங்களில் இதைச் செய்வார்களாம். ரொம்ப அந்தக் கால ஐட்டம். ஸ்ரீரங்கத்துலயே எனக்குத் தெரிந்து மொத்தம் ஒரு பத்து பேர் வீட்டில் கூட  செய்வார்களா என்று தெரியவில்லை. பொதுவாக எல்லோர் வீட்டிலும் அன்று அரிசிப் புட்டு தான் செய்வார்கள். நாங்கள் அதை ‘மென்னியடைச்சான் பொடி’ என்று தான் சொல்வோம். அப்படியே தொண்டையை அடைக்கும். படுமோசமாக இருக்கும். 😦

இனி உக்காரை..

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெல்லம் – 2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
மு.பருப்பு – 50கிராம்
தேங்காய்
ஏலப்பொடி.

ukkaarai 1

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து  முடிந்தால் கிரைண்டரில் நன்றாக- மிக நன்றாக இட்லி மாவுப் பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு, வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
  • இட்லிகள் நன்கு ஆறியபின், மிக்ஸியில் இரண்டு இரண்டு இட்லிகளாக உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றினாலே பொடியாக உதிர்ந்துவிடும். இட்லிகள் நன்கு ஆறியிருக்க வேண்டியது முக்கியம். (சின்ன வயதில், மிக்ஸியில்லாத காலத்தில் நெய்யைத் தொட்டுக் கொண்டு கை விரல்களால் திரித்துத் திரித்து சிறு கட்டி கூட இல்லாமல் பாட்டி மெனக்கெட்டு உதிர்த்தது நினைவிருக்கிறது.)
  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து *முற்றிய பாகாகக்* காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பின், அடுப்பை சிம்மில் வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை அடுப்பு எரிந்தால் போதும்.
  • தேங்காயை மிக மிகச் சன்னமாக நறுக்கி கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
  • நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துணுக்குகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
  • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர் உதிராக இருக்கும்; எடுத்து உபயோகிக்கலாம்.

ukkaarai 2

* இட்லி உதிர்ப்பதற்கு முன் நன்கு ஆறியிருக்க வேண்டும், பாகு மிக முற்றியதாக இருக்க வேண்டும் என்பதும் உதிர் உதிரான நல்ல உக்காரைக்கு மிக முக்கியம்.

ukkaarai 3

சில சாதாரணக் குறிப்புகள்:

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் உக்காரைக்கு 2 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய உக்காரை காணும்; நல்ல உதிராக வரும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப்பாதி எடுத்துக் கொள்ளலாம்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் உக்காரைக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்துவிட்டு, தேவைப்படும் பொழுது பாகு காய்ச்சி (காய்ச்சிக் கொண்டிருக்கும்போதே இட்லிகளைப் பொடித்து) இதை பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

சந்தோஷமான குறிப்புகள்:

* இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)

* எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

மிக முக்கியமான குறிப்புகள்: 🙂

* உக்காரையில் தேங்காய், முந்திரி தவிர வீட்டில் புத்தாண்டிற்கு வந்த ட்ரை ·ப்ரூட்ஸ், மிஞ்சிக் கிடக்கும் கிஸ்மிஸ் எல்லாவற்றையும் அதன் தலையில் பொரித்துக் கொட்டக் கூடாது. புனிதம் போய்விடும். 🙂

* ஏற்கனவே எப்படி நான் அக்கார அடிசிலை, சர்க்கரைப் பொங்கல் என்றோ, பாயசம் என்றோ சொல்லிக் கேவலப்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனோ அதே மாதிரி இந்த ‘உக்காரை’யை ‘புட்டு’ என்றோ, அடுத்ததாக எழுதப் போகிற சீயாளத்தை ‘டோக்ளா’ என்றோ சொல்பவர்களை பசிக்காத புலி தின்னட்டும். 🙂 உக்காரையை வழக்கு மொழியில் ஒக்கோரை என்றும் சிலர் சொல்வர்(நானும்தான்). அது பரவாயில்லை.

-0-

இல்லை, அரிசிப்புட்டுதான் உசத்தி என்று சொல்பவர்கள், உக்காரையை செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு தகுந்த வாதங்களோடு வர வேண்டும். நான் ரெடி! 🙂

ஆனால் புட்டு தான் அப்படி(!) இருக்குமே தவிர, எங்கள் பக்கத்தில் சீமந்தம் முடிந்து மறுநாள் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குக் கிளம்பும்போது மாமியார், இந்தப் புட்டுடன் ‘உருண்டை’ என்ற ஒன்றை செய்து இரண்டையும் கலந்து கட்டிக்கொடுத்து மருமகளை அனுப்புவார்கள். அந்த உருண்டை நிஜமாவே அபாரமாக இருக்கும். அதுவும் அப்படித்தான், உடனே சாப்பிடக் கூடாது. புட்டில் ஊற விட்டுவிட வேண்டும். அப்புறம் ஆழ்வார்

….. என்னைத் தன் வாரமாக்கி வைத்தாய்
வைத்ததன்றி என்னுள் புகுந்தாய்….’

என்று பெருமாளைப் பாடின மாதிரி அப்படியே புட்டுடைய சிறப்புகள் உருண்டைகளுக்குள்ளும் உருண்டைகளின் சிறப்புகள் புட்டுக்குள்ளும் நுழைந்து ஆஹா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்னமோ போங்க! இப்பல்லாம் all lazy மாமியார்ஸ், இதெல்லாம் செய்யறதேயில்லை. சும்மா ஒரு மட்டைத் தேங்காயைக் கட்டி அனுப்பிடறாங்க. Very bad!

நவராத்திரி நாயகி: சமயபுரம் மாரியம்மன் – ஷைலஜா. 

vinaayagar chathurthi_2006

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்
 
பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி

செய்முறை:

சொப்பு:

inippu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.

பூரணம்:

inippu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

கொழுக்கட்டை:

inippu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
  • எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம்.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

inippu kozhukkattai_4 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.

* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.

* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.

* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

உப்புக் கொழுக்கட்டை

இதை அநேகமாக எங்கள் வீட்டில் குழந்தை பிறந்து தொட்டிலிட்டு, பெயர்வைக்கும் நாளிலும் முதல் ஆண்டுநிறைவன்று காதுகுத்தும் நாளிலும் செய்வார்கள்.

sreejayanthi

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
பொட்டுக் கடலை –  200 கிராம்
நிலக்கடலை – 200 கிராம்
வெள்ளை எள் – 50 கிராம்
கொப்பரைத் தேங்காய்
ஏலப்பொடி
நெய்

செய்முறை:

  • குருணை இல்லாத, முனை முறியாத பச்சரிசியை கால் மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, நிழலில் உலர்த்திக் கொள்ளவும். (ஆற நேரமில்லை என்றால் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம்.)
  • வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • கொப்பரைத் தேங்காயை சின்னஞ்சிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
  • எள், கொப்பரைத் துண்டுகளை சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை முற்றிய பாகாக வைத்து முதலில் முக்கால் பதம் உலர்ந்த அரிசியைச் சேர்க்கவும். பாகின் சூட்டிலேயே அரிசி பொரியும்,
  • பின், ஏலப்பொடி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள், தேங்காய்த் துண்டுகளைக் கலந்து கிளறி இறக்கவும். 
  • காப்பரிசி முதலில் இறுக்கமாக இருக்கும். ஆனால் ஆறியதும் உதிர்ந்துகொள்ளும்.

* பண்டிகைக்காக இல்லாமல் சாதா நாளில் செய்தால் சீரக மிட்டாய்களை அழகுக்காகக் கலந்து கொள்ளலாம்.

* சிலர் அரிசியை நன்றாக வறுத்தே, பின் பாகில் சேர்ப்பார்கள். அரிசி முனை முறிந்தோ உடைந்தோ விடலாம் என்பதால் நான் செய்வதில்லை.

தேவையான பொருள்கள்:

சன்னமான அவல் – 1 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1/2 கப்
ஏலப்பொடி
குங்குமப் பூ
பச்சைக் கற்பூரம்

செய்முறை:

  • பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து, அவலையும் நன்கு சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கலந்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

அவல் – 1 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
ஏலப்பொடி
கேசரிப் பவுடர்
பச்சைக் கற்பூரம்
நெய்
முந்திரி
கிஸ்மிஸ்

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் நெய் விட்டு, அவலைப் பொரித்துக் கொள்ளவும்.
  • அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  • அவல் வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • அல்வாப் பதமாக சேர்ந்துவரும்போது, பாலில் கேசரிப் பவுடர், ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

தேவையான பொருள்கள்:

அவல் – 1 1/2 கப்
வெல்லம் – 1 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
ஏலப்பொடி
முந்திரி
கிஸ்மிஸ்
நெய்

செய்முறை:

  • அவலை வறட்டு வாணலியில் கைவிடாமல் வறுத்து, லேசாகப் பொரிய ஆரம்பித்ததும், இறக்கிவிடவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பயத்தம் பருப்பை இலையிலையாக வேகவைத்து(குழையக் கூடாது.) நீரை வடிகட்டவும்.
  • அவல்பொடியில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். (கையால் உருட்டினால் உருட்டவும், விட்டால் உதிரவும் செய்யுமாறு இருக்கவேண்டும்.)
  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகாகக் காய்ச்சவும். (தண்ணீரில் சிறிது விட்டு உருட்டினால், கெட்டியான உருண்டையாக வர வேண்டும்.)
  • பாகு தயாரானதும், தேங்காய்த் துருவல், வெந்த பருப்பு, ஏலப்பொடி இவற்றை அவல் மாவில் கலந்து, அதில் பாகைச் செலுத்தி, நன்றாகக் கலந்துவைத்து விடவும்.
  • ஒரு மணி நேரத்தில் உதிர் உதிராக அருமையான புட்டு தயாராகி இருக்கும்.
  • நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து இத்துடன் சேர்க்கவும்.

திருவாடிப் பூரத்தை முன்னிட்டு…

தேவையான பொருள்கள்:

கெட்டியான பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 4, 5
பச்சைக் கற்பூரம்.

paalkoaa

செய்முறை:

  • காலையில் கறந்த பாலை மாலையில், அல்லது மாலையில் கறந்த பாலை மறுநாள் காலையோ (பாக்கெட் பாலை அப்படியே உபயோகிக்கலாம்.) செய்யலாம். கெட்டியான பாலை அடி கனமான வாணலியில் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச ஆரம்பிக்கவும்.
  • காய்ந்ததும் பொங்கி வழிய விடாமல், அடிப் பிடிக்காமல், நிதானமான தீயில் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பால் இறுகி வற்ற ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்’மில் வைத்து, அடிப்பிடிக்காமல் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • நன்கு வற்றியதும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரையும் கரைந்து சேரும்வரை கிளறவும்.
  • சிறிதளவு மட்டுமே ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* பாக்கெட் பாலாக இல்லாமல் கறந்த பாலாக இருந்தாலே மிகவும் ருசியாக இருக்கும்.

* கொஞ்சம் மேலே சொன்னபடி பழைய பாலாக இருந்தால் கிளறும்போது தானாகவே திரிதிரியாக வரும். புதிய பாலாக இருந்து, திரியாவிட்டால் சில சொட்டுகள் தயிர்விட்டால் சற்று திரிந்த மாதிரி வரும்.

* நல்ல க்ரீம் உள்ள பாலில் செய்தால், கிளறியதும் தானே நெய்யை கக்கும். அப்படி இல்லாமல் கையால் எடுத்துப் பார்த்து, கொஞ்சம் ஒட்டினால், மேலும் 2 அல்லது 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.

* அடிப்பிடிக்காமலோ அதிகம் பொங்காமலோ இருக்க ஒரு நாணயத்தை அல்லது கோலிக் குண்டைப் போடலாம் என்று சொல்கிறார்கள். நான் போடவில்லை. நான்-ஸ்டிக்கில் செய்தேன். 

* பால்கோவா இறக்கும்போது சற்று தளர்வாக இருப்பது போல் பார்த்து இறக்கினால், ஆறியதும் இன்னும் இறுகி சரியான பதத்தில் இருக்கும். இறக்கும்போதே சரியான பதத்தில் இருந்தால், ஆறியதும் மிகவும் கெட்டியாகி உதிர ஆரம்பித்துவிடும். புகைப்படத்தில் இருப்பது இப்பொழுதுதான்அரை மணி நேரம் முன்னால், இறக்கியதும் எடுத்தது. [இந்த கோவாவை மட்டும் வைத்துக் கொண்டே இன்னும் சில இனிப்பு வகைகள் செய்யலாம். அவை அப்புறம்…]

* பொதுவாகவே இந்த மாதிரி பாலில் செய்யும் இனிப்புகளை சீக்கிரம் தீர்த்துவிடுவது அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது நல்லது.

* சர்க்கரைக்குப் பதில் வெல்லம் போட்டுக் கிளறலாம். திரட்டுப் பால் என்று பெயர். உண்மையில் இதுவே ஸ்ரீவில்லிபுத்தூரில் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எங்கள் வீட்டுத் திருமணங்களில் அதிகம் உபயோகிப்பார்கள். எவ்வளவு வெல்லம் என்று முதலிலேயே சரியாகச் சொல்ல வரவில்லை. பால் இறுகியதும் விழுது எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வெல்லாம் போட்டால் சரியாக இருக்கும் என்று அங்கே சொன்னார்கள். இருக்கிறது.

[இதில் தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். தேங்காய்த் திரட்டுப் பால் என்று பெயர். அதுவும் அப்புறம்..]
 

அடுத்த பக்கம் »