தவலை இட்லி – நன்றி ‘அடுப்படி மாமி’
வலையுலக ‘அடுப்படி மாமி’ என்றால் அது ஜெயஸ்ரீ தான் என்று வலைப்பதிவு எழுதும் பெரிய குழந்தைக்கு கூட தெரியும். சில நாட்களுக்கு முன் ‘தவலை இட்லி’ பற்றி எழுதியிருந்தார். சரி, நீண்ட நாட்களாக அவரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் சில. ( ஜெயஸ்ரீ மாமியின் 108 பதிவை முன்னிட்டு )
Labels: மொக்கை
நீங்கள் மொக்கை போட நான் தான் கிடைத்தேனா? நானே சமூகம், அரசியல், பின் முன் நடு நவீன இலக்கியம், பெண்ணியம், அலுமினியம், பித்தளை இயங்கள் இசங்கள் எதுவுமே வேண்டாமென்றுதானே ஒரு ஓரமாக தாளித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குமுன்… எனக்கு 108வது பதிவு என்று உங்களுக்கு(அல்லது உங்களில் ஒருவருக்கு) எப்படித் தெரியும்? நானே இந்தக் கணக்கெல்லாம் பார்ப்பதில்லை. பாஸ்டன் காரர் தானே இந்தக் (வெட்டிக்)கணக்கெல்லாம் வைத்திருப்பார்? 😉 சரி போகட்டும்.

1. செய்யும் பதார்த்தங்களை நீங்கள் என்றாவது சுவைத்து பார்த்திருக்கிறீகளா ?
ஆமாம். ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேயிருந்து அப்படிச் செய்ததால் தான் கொடுமை தாங்காமல் இந்த அளவாவது தேற முடிந்தது. பின்னே தினமும் தூக்கிக் கொட்டவா முடியும்?
2. போட்டோ எடுப்பதற்காக பதார்த்தங்களுக்கு மேக்கப் போடுவீர்களா ?
இல்லை. இது குறித்து வந்த தனிமடல்களுக்கும் இதுவே பதில். உண்மையில் என் சமையல் நேரம் கொஞ்சம் odd ஆனது. காலையில் ஆறரைக்குள் அப்பாவும் பெண்ணும் கிளம்பிவிடுவார்கள். எப்பொழுதும் அடுப்பில் வாணலியிலிருந்து நேரே தட்டுக்கே மாற்றப்படும் அவசரம் தான். அதனால் நிதானமாக மேக்கப் எல்லாம் போட முடியாது. எப்படி டைனிங் டேபிளுக்கு எடுத்துப் போகிறேனோ அப்படியே– அதற்குமுன் ஒரு செகண்ட் சமையல் மேடையிலேயே வைத்து ஒரு க்ளிக். அவ்வளவுதான். (பல நேரங்களில் அதற்குக் கூட நேரமில்லாமல் போய்விடுகிறது.) மற்றவர்களின் சமையல் பதிவுகளில் இருக்கும் புகைப்படங்களுக்கும் என் படங்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் அதுதான். அந்த எளிமையையே (கருப்பு மார்பிள் பின்னணி) என் பதிவின் புகைப்படங்களின் அடையாளமாக வைத்துக் கொள்ள நினைக்கிறேன். (இதற்கே ரங்கமணி தினமும் சாப்பிடும் முன் ‘காமிரா சாப்பிட்டாச்சா? நாங்க சாப்பிட ஆரம்பிக்கலாமா? ஒரு கேமிராவை இப்படி கேவலமா மிஸ்யூஸ் பண்றியே’ என்று கிண்டல். அவர் ஒளி ஓவியக் கலைத் தாகத்தோடு காக்காவின் மூக்கு, செடியின் இலை நுனியில் இருக்கிற கிழிசல், வராண்டா கம்பியில் எட்டுக்கால் பூச்சியின் ஏழாவது காலும் வலையும் என்றெல்லாம் எடுக்க யூஸாகும் என்று வாங்கிய காமிரா. நான் தான் கேவலமா மிஸ்யூஸ்.)
3. செய்யும் பதார்த்தங்களை பக்கத்து வீட்டுக்குக் கொடுப்பீர்களா ?
கொடுப்பேன். பொதுவாக பக்கத்துவீட்டுக் காரர்கள் மாறுதலுக்குட்பட்டவர்கள். இப்பொழுது இருப்பவர் மஹாராஹ்டிர மாநில புத்த மதத்தவர்கள். கர்ப்பிணியாக இருந்தார். முன்பு ஒரு பெளர்ணமியின் போது விரதம் என்று சொல்லிவிட்டார்கள். புதிதாகக் குழந்தை வேறு பிறந்திருக்கிறது. அதனால் அவர்கள் சாப்பிடுவார்களா, தூரக் கொட்டுவார்களா என்று தெரியாது. நீங்கள் கேட்டபின் கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. மற்றவர்கள், பக்கத்து வீட்டில் இல்லாமல் எதிர் வீட்டிலோ ஏழு வீடு தள்ளியிருந்தாலும், சாப்பிட்டு நானே பார்த்திருக்கிறேன்.
4. உங்கள் பக்கத்துவீட்டில் குடியிருப்பவர் இன்னும் காலி செய்யவில்லையா ? (3 விடை ஆமாம் என்றால் )
கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா? நாங்கள் வங்கி அதிகாரிகள் காலனியில் இருக்கிறோம். மாற்றல் ஆனால் தான் வீட்டை மாற்ற முடியும். ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒருவரை ஒருவர், சமையல் உள்பட எல்லாவற்றிலும் சகித்துக் கொள்வோம். இந்தியா முழுக்க கலந்த மாதிரி பாரத விலாஸாக இருப்போம். பழகுவோம். எது நடந்தாலும் ஸ்மைலிகளை இறைத்துக் கொண்டே இயைந்து இயல்பாக வாழ்வோம். இல்லாவிட்டாலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருப்பதால், எங்களுக்கெல்லாம் சாப்பாட்டு விஷயத்தையும் சேர்த்து, சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம். (இணையத்தில் வரும் மொழி, இனச் சண்டைகள் என்னால் செரிக்கமுடியாமல் இருப்பதற்கும் அதுவே கூட ஒரு காரணமாக இருக்கலாம்.)
முக்கியமாக, நான் கேவலமாக சமைத்தால் என் சமையல்திறனை சந்தேகப் பட மாட்டார்கள். தமிழ்நாட்டுச் சமையலே அப்படித்தான் போலிருக்கிறது என்று நினைப்பார்கள். அதனால் எனக்கு பொறுப்பு அதிகம். கொடுமையாக இருந்தால் நானே கொடுக்க மாட்டேன்.
5. தவலை இட்லி போல் தவலை வடை இருக்கா ? ( இட்லிவடை கூட்டணியில் பிரச்சனை உண்டு பண்ணாதீர்கள் )
ஓ, தாரளமாக இருக்கிறதே! ஆமாம் உங்கள் கூட்டணியில் இன்னும் ஒரே ஒரு வடை மட்டும் தான் இருக்கிறதா? நிறைய பேர் என்று கேள்விப்பட்டேனே. அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று தவலை வடையிலேயே 3 விதம் சொல்லியிருக்கிறேன். சந்தேகத்துக்கு தவலை அடை கூட சேர்த்தே சொல்லியிருக்கிறேன்.
தவலை வடை | தவலை அடை
அவற்றையும் நீங்கள் நாந்-வெஜ் ஆக்கிக் கொள்ளலாம். (அந்தத் தவ*ளை* செம க்யூட்! SPB, ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ நிகழ்ச்சியில் பலருக்குச் சொல்வது போல் உங்களுக்கும் ‘ல’, ‘ள’ பிரச்சினை இருக்கிறது போலிருக்கிறது. திருத்திக் கொள்ளவும்.)
6. செய்யும் ஐட்டங்களை பார்சல் செய்து அனுப்ப முடியுமா ?
ஆஹா, இதற்காகத்தானே காத்திருந்தாயடி ஜெயஸ்ரீ! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பொதுவில் இல்லாவிட்டாலும் தனிமடலிலாவது சொல்ல முடியுமா? 🙂 ஒருவருக்கா, ஒன்பது பேருக்குமேயா? சென்னை? பெங்களூர்? யுஎஸ் வரை என்றால் வருவதற்குள் ஊசிவிடுமே. பரவாயில்லையா? அட்ரஸ் சொன்னதும் வந்துகொண்டே இருக்கிறது.
7. ‘மேட்ச் ஃபிக்சிங் கார்னர்’ மாதிரி ‘சைடு எபெக்ட்ஸ்’ கார்னர் என்று தர முடியுமா ?
To every action there is an equal and opposite reaction என்று கேள்விப்பட்டதில்லையா? நான் சமைப்பது மட்டும் தான் என்றில்லை எல்லா உணவுக்குமே ஏதாவது சைட் எஃபக்ட் கட்டாயம் உண்டு. அது நல்ல சைட் எஃப்க்டா, அல்லாததா என்பது தான் பிரச்சினை. பொதுவாக அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதில் எனக்கு உடன்பாடு. எதையும் ஒதுக்காமல் ஆனால் எல்லாவற்றையும் மிதமாக உண்டால் ஒரு பாலன்ஸ் இருக்கும். மீறிய சைட் எஃபக்ட்ஸை அவ்வப்போது பதிவுகளில் சொல்லியும் வருகிறேன். நன்றாக கவனித்தீர்களானால், சொல்லியிருக்கும் ரெசிபிக்கும் நம் முன்னோர் அதற்கு வைத்திருக்கும் மேட்ச் ஃபிக்சிங் உணவிற்கும் இடையில் இந்த மாதிரி ஒரு பாலன்ஸ் இருப்பது தெரியும்.
பின்குறிப்பு: நீங்கள் நகைச்சுவைக்காக பொதுவில் பெண்களை, சில இணையக் குழுமங்களை கொஞ்சம் சத்தமில்லாது கிண்டல் செய்வது, மற்றும் பதிவுகளில் இருக்கும் வேறு சில அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு அவ்வப்போது ஒப்புமை இல்லை. இந்தப் பதிவிலேயே மாமி என்ற குறிப்பு தேவையே இல்லாதது. எனக்கு இணையத்தில் இருக்கும் மிகப் பெரிய சௌகரியமாக நான் நினைப்பது, எந்தத் தலையும் வாலும் இல்லாமல் வெறும் பெயரை மட்டும் குறித்தே அனைவரையும் அழைக்க முடியும் என்பதுதான். நேரில் பேசும்போது எதிராளியை நொடிக்கு நூறு தடவை பெயர் சொல்லி அழைத்துத் தான் எனக்குப் பேசவே வரும். எல்லாப் பெண்களையும் அவரவர் ஜாதி வைத்தா அழைக்கிறீர்கள் என்று கேட்க நினைத்தேன். நான் சொல்ல நினைத்ததை விட அதிகமாக உஷா கேட்டுவிட்டார். என்றாலும் ஒரு விறுவிறுப்பான வலைப்பதிவை தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமலும், தொடர்ந்து சோர்ந்து போகாமலும் நடத்திவருகிறீர்கள் என்ற வகையில் வாசகியாக என் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! முடிந்தால் 108வது பதிவிற்கே கேள்வி கேட்கும் சேட்டைகளை எல்லாம் குறைத்துக் கொள்ளவும். குறைந்தபட்சம் சம்பந்தப்பட்டவரிடம் ஒரு முன் அனுமதி வாங்கி, பின் கேட்கலாம் என்பது என் எண்ணம். நன்றி.
-0-
ஹரன்பிரசன்னா: இன்னும் சில கேள்விகள்.
01. தவலை இட்லியும் உடைத்த இட்லியும் ஒன்றா?
உடைத்த இட்லி என்றால் என்ன, இட்லி செய்தபின் உடைக்க வேண்டுமா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த வகை இட்லி, வடைகளுக்கு முதலிலேயே மாவை மிஷினில் அல்லது மிக்ஸியில் உடைத்து வைத்துக் கொண்டும் செய்யலாம். அதைத் தான் கேட்கிறீர்கள் என்றால் விடை ஆமாம்.
02. உங்கள் வலைப்பதிவில் எழுத்துரு பிரச்சினை வந்தபோது அதை சரி செய்ய உதவிய படுபாவி(கள்) யார்?
உம்மாச்சி. 🙂 இது சிஃபி காரர்களுக்கே புரியவில்லை. கமால் ஹை என்று பான் குதப்பிக்கொண்டே ஆச்சரியப்பட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
03. இட்லி வடை ஒரு தடவை பொதுவில் பெயர் சொல்லி மாட்டிக்கொண்டு, சில நிமிடங்களில் அதை சரி செய்தது போல, உண்மையிலேயே நீங்கள் சொல்லும் ரெசிபிகளைச் செய்தது யார் என்று சொல்லி, மாட்டிக்கொள்ளுமுன் தப்பித்த அனுபவங்கள் உண்டுமா?
என் வீட்டில் அநேகமாக எல்லாவற்றையும் நானே சமைக்கிறேன். அல்லாத போது அதை வெளியில் சொல்வதிலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உப்புமா, ரங்கமணிதான் செய்வார் என்று இங்கே ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத நாள்களில், பெண்ணுக்கு தீவிரமாக பாடம் சொல்லிக் கொடுக்கும் நாள்களில் மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளுடன் நிதானமாகவும் சமைப்பதால் ஏதாவது ஒன்றிரண்டு ஐட்டங்கள் (முக்கியமாக, பெண்ணுக்குப் பிடித்ததைச்) செய்ய ஆர்வமுடன் முன்வருவார். எனக்கு மைக்ரேன் வந்து படுத்துவிட்டால் என் பெண் செய்து கொடுக்கும் 2 நிமிட நூடுல்ஸிற்கு ஈடு இணையே இல்லை. ஆனால் இதுவரை பதிவில் போட்டிருக்கும் அனைத்தும் நான் செய்தவையே.
04. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கும் பள்ளிக்கும் விடுப்பு எடுப்பது நீங்கள் சமையல் செய்யும் நாளிலா அல்லது மறுநாளா?
:)) சென்ற வருடம், என் பெண், வருட இறுதியில் வாங்கிய பரிசுகளில் ஒன்று – Full Attendance.
05. நான் சொன்ன சிறந்த ரெசிபிகளில் சிலவற்றை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். மற்றதை எப்போது வெளியிடப்போகிறீர்கள்? (வழக்கம்போல் என் பெயரைச் சொல்லவேண்டாம்!)
இந்தக் கேள்வியே புரியவில்லையே ப்ரசன்னா. நீங்கள் என்ன ரெசிபிகள், எங்கு சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் செய்துவிடலாம். வாழைக்காய் தோல் கறி கூட சொல்லிவிட்டேனே.
பின்குறிப்பு: இட்லிவடை எந்தப் பதிவு போட்டாலும் ஓடோடி வந்து, ‘ஆமா ஆமா பெரியய்யா..’ பாணியில் வருகையைப் பதிவு செய்கிறீர்களே, நீங்களும் இட்லிவடையில் ஒருவரா, அல்லது அவருடைய தீவிர விசிறியா? (ஏதோ என்னாலானது!)
-0-
யோவ் இட்லிவடை, பார்ட்டியை நீ என்ன மல்லிகா பத்ரிநாத் மாமியைக் கேக்கற மாதிரி கேட்டிருக்க. நீ வேஸ்ட்டுயா. நீ கலைஞரைக் கேள்வி கேக்கத்தான் லாயக்கு. நீ ஒத்து. நா கேக்கறேன்..
ஜெ! என்கிற ஜெஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களே,
தன்யனானேன். 🙂
1. ஏன் ஒரேயடியாக அடுப்படிப் பக்கம்?
அப்படி எதுவும் இல்லையே. மரத்தடியில் சமையல் தடைசெய்யப் பட்டிருந்தது. அதனால் அடக்கி வாசித்தேன். வலைப்பதிவு பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும், எனக்கே எனக்காக ஆனால் உபயோகமாக ஏதாவது செய்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்து, கிழிந்துகொண்டிருக்கும் டைரிக் குறிப்புகளை ஓசியில் ஒரு இடத்தில் சேமிக்கிறேன். விபரமாக பதிவின் முகப்பிலும், about பக்கத்திலும் சொல்லியிருக்கிறேன். மிகக் குறைவான நேரமே அங்கே இருக்கிறேன். மற்றபடி எல்லா விதமான பதிவுகளையும் படித்தே வருகிறேன். உங்களையும் படிக்கிறேனாயிருக்கும். 🙂
2. ஏன் திரட்டிகளில்(முக்கியமாக தமிழ்மணம்?) இல்லை?
🙂 இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. முன்பு காசி சில பதிவர்களை தமிழ்மணத்திலிருந்து தூக்கியபோது ஒரு வாசகியாக மட்டும் இருந்தாலும் நானும்கூட அதைக் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது நகைச்சுவைக்காக இட்லிவடை எழுதிய பதிவின் ஒரு வரி என்னை மிகவும் யோசிக்க வைத்தது..
“ஏன் திரட்டியிலிருந்து என்னை எடுத்தீர்கள் என்று கேட்பதைவிட, திரட்டிகளாக நம்மைத் தேடிச் சேர்த்துக் கொள்வதுபோல் ஒரு வலைப்பதிவை எழுதலாம்..”
கிட்டத்தட்ட இந்தக் கருத்தில் (வார்த்தைகள் மாறியிருக்கலாம். எனக்குத் தேட நேரமில்லை.) ஒன்றை எழுதியிருந்தார். நான் அறியாமலே என் மனதில் பதிந்த கருத்து அது. அப்படி ஒரு பதிவை நான் எழுதமுடியாது என்று தெரியும். திரட்டிகளின் தானியங்கிச் செயல்பாடு அப்படிப்பட்டது இல்லை என்றும் தெரியும். ஆனால் ஏனோ திரட்டிகளில் என்னை இணைக்க என் மனம் ஒப்பவில்லை. கருத்து மனதை(அல்லது என் ஈகோவை?) நெருடிக் கொண்டே இருக்கிறது. 🙂 என் பதிவை தன் சொந்தத் திரட்டிகளில் இணைத்து எனக்கும் தெரிவித்த தனிநபர்களின் முகவரிகளை என் பதிவில் ‘திரட்டறாங்க’ பகுதியில் கொடுத்தே இருக்கிறேன். அவற்றை நானாகச் சேர்க்கவில்லை.
தவிர நிஜ வாழ்க்கை என்னைச் சுற்றி அவ்வளவு மோசமாக இல்லாதபோது திரட்டிகளில் இருக்கும் ஜாதி, மத, இன அரசியல் எனக்கு மிகுந்த அயர்ச்சியைக் கொடுக்கிறது. 😦 இந்தச் சமுதாயத்தை புரட்டிப் போடும் பதிவு எதுவும் நான் எழுதவில்லை. அதனால் தேவைப்பட்டவர்கள் தேடி வந்து என்னுடையதைப் படித்துக் கொள்வார்கள். பிரச்சினைகள் தொடர்ந்தால் எனக்கே எனக்காக மட்டும் மூடிவிடும் எண்ணமும் உண்டு.
3. ஒரு பக்கம் பிகேஎஸ் என்கிற …… இன்னொரு பக்கம் மதி என்கிற ….. எப்படி இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள்? என்ன சமரசம் செய்துகொள்கிறீர்கள்?
இருவரிடமும் சண்டையே போடவில்லை. அதனால் சமரசம் எதுவும் எங்களுக்குள் தேவை இல்லாமல் போய்விட்டது. எப்படி இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள் [அப்படியா சிவா, மதி? :)] என்பது நீங்கள் அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. 🙂
இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்தால் யாருடன் பேசுவீர்கள்?
அதிகம் தமிழ்நாட்டில் அம்மாவின் அரசியல் பாதையிலேயே சிந்திப்பீர்கள் போல் இருக்கிறது. யாராவது இருவருக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு வந்தால் ஒருவர் நிற்கும் இடத்தில் அடுத்தவர் நிற்கக் கூட மாட்டார் என்று நீங்களே கற்பனை செய்துகொள்வீர்களா? சில கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் வந்திருந்தாலும் நாங்கள் மரத்தடி நிர்வாகக் குழுமத்தில் இருந்தவரை மிகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் ஆக்கப் பூர்வமாகவும் செயலாற்றி வந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இப்பொழுதும் இருவரும் ஒருவேளை நேரில் சந்தித்தால் சட்டென திரைகள் எல்லாம் விலகி, இயல்பாய் பழக முடியும் என்று திடமாக நம்புகிறேன். இது எந்த இருவருக்கும் நடக்கக் கூடியது. இணையத்தில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பதையும் பார்த்துவருகிறீர்கள் தானே? (என்னுடைய கவலை எல்லாம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு என்னை சும்மா நகம்கடிக்க வைத்து விடுவார்களோ என்பதுதான்.) அதனால் நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் சந்தித்தால் மூன்று பேருமாகச் சேர்ந்து மரத்தடியின் மேல் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் யார் என்று கலந்து பேசிக் கண்டுபிடிக்க முயல்வோம். :))
4. இந்த முறை வித்லோகாவில் என்னென்ன புத்தகம் வாங்கினீர்கள்? (இல்லை என்று மறுக்க வேண்டாம். மஞ்சள் சேலையில் வந்ததை நான் பார்த்தேன்.)
நான் வித்லோகா போனது சென்னையில் என்னுடன் தங்கியிருந்த என் தம்பி, அப்பாவிற்கே கூட தெரியாது. நான் பயணித்த ஆட்டோ டிரைவர் மட்டுமே அறிவார். எனக்கே மறந்துவிட்டது, கத்திரிப்பூ கலரில், மஞ்சளும், கிளிப்பச்சை கலரும் கலந்த சுடிதார் அணிந்திருந்ததாக அன்று எடுத்த புகைப்படங்கள் சொல்கின்றன. ஆனால் நீங்கள் புடைவைக் கலரெல்லாம் சொல்கிறீர்கள். 🙂 இதைத் தான் போட்டுவாங்குவது என்று சொல்வதா? வாழ்க! புத்தகங்கள் என்றால், ம்ம்.. உடல் மண்ணுக்கு, சுப்ரமணியராஜூ கதைகள் வாங்கினேன். ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வருவதற்குள்ளாகவே என்னுடைய லக்கேஜ் அதிகமாகிவிடுவதால் வழக்கம்போல் ரொம்ப யோசிக்க வேண்டியதாகி விட்டது.
5.. கிழக்குப் பதிப்பகத்தில் ஓனர் சரி. இன்னும் வேறு யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?
‘கிழக்குப் பதிப்பகத்தில் ஓனர் சரி’ என்றால் என்ன அர்த்தம்? புரியவில்லை.
🙂 🙂 🙂 ஸ்மைலிகள் உங்களுக்காக இல்லை. என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள. ஐயா அநாநி, கிழக்குப் பதிப்பக்கத்தின் ஓனர் (சத்யாவையா சொல்கிறீர்கள்? 🙂 ) மட்டும் ஏன் சரி? முதலில் எனக்கும் ஒரு பதிப்பகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல முடியுமா? எப்பொழுதும் கேட்பதுதான். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? அது எந்தத் திசையில் இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் என்றாவது ஒருநாள் நான், ஒரு பதிப்பகம் எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினால், நான் கேள்விப்பட்ட பதிப்பகம் என்ற வகையில் கிழக்குக்குப் போவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே. :)) வேறு யாரை எல்லாமும் நான் அங்கு சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நானே ‘எனக்கு ஐஜியைத் தெரியும். அவருக்குத் தான் என்னைத் தெரியாது’ என்கிற விவேக் நிலையில் இருக்கிறேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள எந்த விசிட்டிங் கார்டைக் காண்பிப்பது?
6. எனிஇந்தியனில் நடந்த இலக்கியவாதியுடனான சந்திப்பைப் பற்றி எழுதுவீர்களா?
என்னக் கொடுமை இது சரவணன்! ஆனாலும் அந்தக் கொடுமையைச் சொல்லியே ஆகவேண்டும். வித்லோகாவிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது தம்பி எனக்குக் கொடுத்திருந்தது 10 நிமிட நேரம் மட்டுமே. (“உன் பொண்ணு ஆவி, பேய் படம் பாக்கணும்னு ரெண்டு காலும் தரைல படாம குதிக்கறா. “முனி” படம் கிளம்பறோம். பத்து நிமிஷத்துல வந்தா நீயும் வரலாம். இல்லைன்னா ரூமைப் பூட்டி கையோட சாவிய எடுத்துப் போயிடுவோம். அப்புறம் நீ வாங்கிட்டு வர்ற புக்கைப் படிச்சுகிட்டு ராத்திரி 10 மணிவரைக்கும் வெளில கொசுக்கடில ஒக்காந்திரு!”) மிகவும் அயர்ச்சியாக இருந்தது. இருக்கிற பத்து நிமிடத்தில் ரத்னா கபேயில் ஒரு காஃபி சாப்பிடலாம் என்று நினைத்தேன். அதற்குள் எதிரில் இருக்கும் எனி இந்தியன் போனால் அதன் பொறுப்பாளர் நமக்கு வாங்கித் தர மாட்டாரா என்று நப்பாசை கம் நேர மிச்சம் யோசனை. ஆனால் அப்பொழுது இணைய இணைப்பு கிடைக்காததால் அவசரத் தேவை என்று வீட்டிற்கு போய்விட்டாராம். ஃபோனில் தொடர்புகொண்டால் நம்பரைப் பார்த்ததுமே நான் என்று நம்பரை வைத்துத் தெரிந்துகொண்டு பேச ஆரம்பித்தவர்தான்…. என்னை ஹலோ கூட சொல்லவிட வில்லை. நான் மும்பையில் என் வீட்டிலிருந்து பேசுவதாக நினைத்து, தொடர்ந்து 20 நிமிடங்கள்– இலக்கியத்திலிருந்து இணையம் வரை, ஹரப்பா நாகரிகத்திலிருந்து ‘ஹாசினி பேசும்படம்’ சுஹாசினி நாகரிகம் இல்லாமல் பேசுவது வரை பேசிக் கொண்டேஏஏஏஏ இருந்தார். (இடையில் கீக் கீக் என்று என் தம்பியிடமிருந்து தொடர்ந்து எனக்கு ஃபோனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.) ஏற்கனவே களைத்துப் போயிருந்த எனக்கு, கால் வலியோ வலி. ஒருவழியாக, “எனக்கு உங்களை மாதிரி எல்லாம் போன்ல வெட்டியா பேச(???!!!) நேரமில்லை. வேலை இருக்கு!” என்று சொல்லி பதிலுக்குக் காத்திருக்காமலே வைத்துவிட்டார். ஹலோ தான் சொல்லவில்லை என்றில்லை, ‘உங்க கடையிலிருந்துதான் பேசறேன்’ என்று கூட சொல்ல முடியவில்லை. மீண்டும் இந்தப் பத்தியின் முதல் வரியைப் படித்துக் கொள்ளவும். 😦
அங்கே கடைப் பொறுப்பில் வேறு ஒரு பெண்ணும் ஆணும் இருந்தார்கள். ஆணை உள்ளே நுழைந்ததும் என் கண்கள் அரை நொடியும், பொறுப்பாளர் குறித்த தகவல் சொல்லும்போது அந்தப் பெண்ணை 4,5 நொடிகளும் சந்தித்தன. அங்கே நடந்த சந்திப்பு என்றால் இதுதான். ஆனால் அவர்கள் இருவரும் இலக்கியவாதிகளா என்று எனக்குத் தெரியாது. :))
7. உங்கள் புத்தகத்தை வெளியிடப்போவது கிழக்கா, எனி இந்தியனா? ..some words deleted… (கேள்வி செந்தழலார் கொலைவெறிப் படை சார்பாகக் கேட்கப் படுகிறது.)
அடடா… நானே யாரோடாவது போட்டி போடத் தான் 4 வரி கிறுக்கியிருக்கிறேன். அதை அச்சடிக்க ஒரு நோட்டீஸ் பேப்பரே போதும். இதற்கு எதற்கு பெரிய பெரிய மக்களை எல்லாம் இழுக்கறீர்கள். வேண்டுமானால் சண்டை போட்டதை எல்லாம் தொகுத்துப் போடலாம். ஆனால் அதற்கு இந்தப் பதிப்பகங்கள் போறாது. 🙂 நானே சொந்தமாக பதிப்பகம் ஆரம்பித்தால் கூட புத்தகம் வெளியிடும் எண்ணம் எதுவும் இல்லை. திருப்தியா? 🙂
[செந்தழல் ரவி, சமீப காலமாக, உங்களுக்கும் எனக்கும் ஏதாவது பிரச்சினையா? 😦 அல்லது உங்கள் கொலைவெறிப் படைக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா? :(( அல்லது உங்கள் கொலைவெறிப் படைக்கும் வேறு யாருக்கும் ஏதாவது பிரச்சினையா? :(( தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்களே. எதாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். :வெள்ளைக் கொடி:]
8. நிறைய புத்தகம் படிக்கிறீர்கள் என்று தெரியும்.
:)) நான் படிக்கும் அறையில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், இப்படிச் சொல்ல? :)) மிக மிகக் குறைவாகப் படிக்கிறேன். நேரமில்லை என்பதில்லை. எனக்குப் படிப்பதில் இருக்கும் மனத் தடை. ஒரு சிறு இடத்தில் வார்த்தைகள் குறிப்புகள் தடங்கினாலும் என்னால் மேலே பக்கங்களைப் புரட்ட முடியாது, வெளியே வந்துவிடும் மனம். சமீபத்தில் ‘உடல் மண்ணுக்கு’ முதல் இரண்டு அத்தியாயங்களுக்குள் இருந்த வருட எண்ணில் இருக்கும் ஒரு சிறு அச்சுப் பிழை திரும்பத் திரும்ப என்னை பக்கங்களைப் புரட்ட வைத்தது. (ஒரு புத்தகத்தை 4, 5 பேராவது அச்சுக்கு முன் படித்திருக்க மாட்டார்களா? ஒருவருக்குக் கூடவா இதுபோன்ற தவறுகள் கண்ணில் படாது?) ஒரு வழியாக ஐந்தாம் அத்தியாத்தில் வந்து அமைதி கிடைத்தது. அத்தனை உணர்ச்சிக் கலவைகளோடு அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு மற்றவர்களாக இருந்தால் இரண்டு நாளில் படித்தே முடித்திருப்பார்கள்.
ஏன் எங்குமே புத்தக விமர்சனம் எழுதுவதில்லை?
என் மீது உங்களுக்கு என்ன ஐயா அவ்வளவு நல்லெண்ணம்? பாம்புப் புற்று என்று தெரிந்தே கைவிட நானும் என்ன படைய்ய்யப்பரா?
தமிழக விமர்சனச் சண்டைகள் கண்டு பயந்து “சந்தோஷமே போயிடும் ஜெயன்..” என்று அவள் பின்வாங்கி விட்டாள். உண்மைதான் என்று படுகிறது.
யார் பின்வாங்கியது தெரியுமா? அருண்மொழி நங்கை. பரமசிவன் கழுத்துப் பாம்பே அப்படிச் சொல்கிறார். நமக்கு இதெல்லாம் தேவையா? ‘நல்லாருப்போம் நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்’ என்று ஜோ மாதிரி சாக்லேட் கடித்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பதை விட்டுவிட்டு…
என் புத்தகத்தை அனுப்பினால் எழுதுவீர்களா?
அனுப்பத் தேவை இல்லை. நீங்கள் யார், எழுதிய புத்தகம் பெயர்(முடிந்தால் கிடைக்கும் இடம்) எல்லாம் பொதுவிலோ தனிமடலிலாவது சொன்னாலே போதும். வாய்ப்புக் கிடைக்கும்போது நானே வாங்கி, படித்துக் கொள்வேன். புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதே எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் மரியாதை என்று திடமாக நம்புகிறேன். விமர்சனம் எழுதுவது சந்தேகம் தான். எனக்கே தேவைப் பட்டால், தனிமடலில் கருத்து சொல்வேன். :safe game: (புத்தகம் எல்லாம் எழுதியிருக்கிற பெரியவர் எதற்காக ஐயா என்னைப் போல் சில்லுண்டிகளிடம் எல்லாம் வந்து கேள்வி கேட்டு பொழுதைக் கடத்துகிறீர்கள்?)
Last but not the least, ‘மரத்தடி’யில் இருக்கிறீர்களா?
இல்லாம பின்ன? 🙂
மரத்தடி சம்பந்தமான அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? (ஆம் என்றால் மேலும் 100 கேள்விகள் அது சம்பந்தமாகக் கேட்டு உங்கள் 108 வது பதிவிற்கு மெருகேற்றுவேன்.)
இல்லை. அதற்காக அங்கே மட்டுநர்கள் இருக்கிறார்கள். (எப்பொழுதுமே, ஒரு இடத்திலிருந்து வெளியே வந்தபின், அந்த இடத்தின் நல்ல விஷயங்களை மட்டுமே என் பதிவில் பகிர்ந்து கொள்வேன். அல்லாதவைகள் எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவப் பாடங்கள். என்னோடு மட்டுமே இருக்கும். இதுதான் என் சம்பந்தப்பட்ட எல்லா தளங்களுக்கும் நான் பயன்படுத்துவது. மரத்தடியில் அப்படி எதுவும் அல்லாதவையே என்னைப் பொருத்த வரை நடக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.)
முக்கியப் பின்குறிப்பு: (ஜெ!, உங்களுக்குத் தான் பின்குறிப்பு பிடிக்குமே)
அதி முக்கியப் பின்குறிப்பு:
பின்குறிப்புகள் பிடித்திருப்பதற்காக எழுதுவதில்லை அநாநி. சில விஷயங்களை அடிக்கோடிட அவை தேவையாக இருக்கின்றன.
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? முகமூடிகளுக்கு பதில் சொல்வதில்லை என்று தப்ப முடியாது. இட்லிவடையும் முகமூடியே.
முகமூடிகள் அநாநிகள் குறித்து எனக்கு ஒவ்வாமை எதுவும் எப்பொழுதும் இல்லை. ஆனால் இட்லிவடை எனக்குத் தெரிந்து 3,4 வருடங்களாகவே இட்லிவடையாகவே தொடர்ந்து இணையத்தில் எழுதிவருகிறார். ஆனால் நீங்கள் ராமசாமியாகவோ குப்புசாமியாகவோ இணையத்தில் இருந்துகொண்டு என்னிடம் கேள்வி கேட்க மட்டும் அநாநி அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். இரண்டுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
இட்லிவடை கேட்டிருக்கும் கேள்விகள் குறித்த உங்கள் விமர்சனம் சரி. ஆனால் அதற்காக நீங்கள் ஒன்றும் மலையைப் புரட்டும் கேள்விகளைக் கேட்டுவிட்டதாக நினைத்துக் கொள்ளத் தேவை இல்லை. அனைத்தும் “பக்கத்தாத்து பங்கஜம் மாமி” கேட்கும் பைசாவுக்குப் பிரயோசனமில்லாத வம்புக் கேள்விகள். பங்கஜம் மாமிகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. அல்லது சொன்னாலும் கழுவுற மீனில் வழுவுற மீனாய்ச் சொல்லி அவர்கள் பிபியை எகிறவைத்து மகிழ்வேன். உங்களுக்கும் பதில் சொல்லாமலே புறக்கணித்திருக்கலாம். அல்லது சமையல் கேள்விகளுக்கு மட்டும் பதில் என்று நழுவியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் நீங்கள் சொல்லியிருக்கும் செய்திகள் எல்லாம் உண்மை என்ற பிம்பம் இணையத்தில் ஏற்பட்டுவிட சாத்தியம் அதிகமாக இருக்கிறது. அதற்காகவாவது பொறுமையாக உண்மையை மட்டுமே பேசியிருக்கிறேன். பங்கஜம் மாமிகளைப் போல் இல்லாமல் உங்களுக்கு இதனால் அமைதியும் சமாதானமும் கிடைத்தால் மகிழ்ச்சியே!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார்ப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
உருண்டை செய்ய
அரைக்க:
துவரம் பருப்பு – 2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:
- பருப்புகளை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பருப்புக்குத் தேவையான அளவு உப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
- அரைத்து முடிக்கும் நேரம் தேங்காய்த் துருவலும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துவைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்துவைத்துள்ள விழுதில் கொட்டிக் கலந்துவைக்கவும்.
- புளியை மிகவும் நீர்க்கக் கரைத்து, புளிக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்து ஒரு உயரமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
- மீண்டும் வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து புளிக் கரைசலில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- குழம்பை நன்றாகக் கொதிக்கவிடவும். அரைத்த பருப்பு விழுதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஒவ்வொன்றாகப் போடவும். உருண்டைகளைச் சேர்க்கத் தொடங்கும்போது அடுப்பை கொஞ்சம் பெரிய தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இது முக்கியம்.
- அரை நிமிடத்திலிருந்து ஒரு நிமிடத்திற்குள் போட்ட உருண்டை மேலே மிதக்கும். ஒரு உருண்டை கொதித்து மேலே வந்ததும் மட்டுமே அடுத்த உருண்டையைப் போடவும். கடகடவென்று ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டால் உருண்டைகள் கரைந்துவிடும்.
- அப்படியே ஒவ்வொரு உருண்டையாகப் போட்டுக் கொண்டு வரும்போது இட நெருக்கடியாக இருந்தால், மேலே வந்த உருண்டைகளை எடுத்து தனியாக வைத்துவிடலாம். கரண்டியால் அதிகம் அழுத்தாமல் நாசுக்காகக் கையாள வேண்டும்.
- குழம்பில் மேலும் உருண்டைகள் போட, புளித் தண்ணீர் குறைந்துவிட்டால் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீர் விட்ட பின், மீண்டும் குழம்பு கொதிக்கத் தொடங்கியபின் தான், அடுத்தடுத்த உருண்டைகளைப் போட ஆரம்பிக்க வேண்டும்.
- மொத்த விழுதையும் உருட்டிப் போட்டபின் எடுத்து வைத்திருக்கும் எல்லா உருண்டைகளையும் போட்டு, தேவைப்பட்டால் நீர் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.
* விரும்புபவர்கள், பருப்பு விழுதோடு சின்ன வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.
* இந்த உருண்டைகளை…
— கொழுக்கட்டை மாதிரி ஆவியில் வேகவைத்தும் கொதிக்கிற குழம்பில் போடலாம்.
— வாணலியில் தாளித்தபின், இந்த விழுதைக் கொட்டி கொஞ்சநேரம் கிளறி, பின் உருண்டைகளாக்கியும் போடலாம்.
— பருப்பு விழுதோடு அரிசி மாவு ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்தும் செய்யலாம்.
மேற்சொன்ன மூன்று முறைகளில் உருண்டைகள் உடையாது. ஆனால் கடினத் தன்மையாக இருக்கும்.
— விழுதை, கரகரப்பாக அரைக்காமல் நைசாக அரைத்துவிட்டாலும் உருண்டை கடினத் தன்மையுடன் இருக்கும்.
உருண்டை கடினமாக இருந்தால் குழம்பு உருண்டைக்குள் முழுவதும் இறங்காமல் சுவை குன்றிவிடும்.
* சற்று கரகரப்பாக அரைத்து நல்ல தீயில், கொதிக்கும்போது ஒவ்வொன்றாக நிதானமாகச் சேர்த்து செய்வதே சரியான முறை. இந்த முறையில் உருண்டைகள் தளர்வாகவும்(ஆனால் உடையாமல்), முழுவதும் குழம்பு உள் இறங்கி சுவையாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இந்தக் குழம்பு சாதத்துடன் கீரை மசியல், பொரித்த அப்பளம், கேரட், பீட்ரூட் போன்ற சற்றே இனிப்பான பொரியல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடலாம். எதுவுமே இல்லாவிட்டாலும் உருண்டைகளை வைத்தே ஒப்பேத்தலாம்.
தயிர்சாதத்திற்கும் பருப்பு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ளலாம்.
எங்கள் வீட்டில் தனியாக சுடச் சுட உருண்டைகளை முதலில் சாப்பிட்டு விடுவோம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
தேங்காய்ப் பால் பாயசம், சின்ன வயதில் பிடித்துப் போனதற்கு அதில் இடையில் திடப்பொருள்கள் இல்லாமல் நீராக இருந்ததும், முழுங்க சுலபமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”
“பொழச்சுக் கிடந்தா பார்க்கலாம்..”
மறுநாள் தேங்காயைத் துருவி கொல்லைப்பக்கம் இருக்கும் பெரிய ஆட்டுரலில் அரைத்து துணியில் வெள்ளை வெளேர் என்று பாலை வடிகட்டும் போது ஏமாற்றமாக இருக்கும்.
“எனக்கு மட்டுமே 10 டம்ளர் வேணும்னு நேத்திக்கு சொன்னேனில்ல பாட்டி?”
“அதெல்லாம் வெல்லம் சேர்த்ததும் வந்துடும்.”
“வராது. நீ பொய் சொல்ற!”
“பெருமாளுக்குப் பண்றதுக்கு முன்னால இப்படி எல்லாம் பேசறதே தப்பு.”
பாட்டி ஏமாற்றியதும், அது குறித்து மேலே கேள்வி எழுப்ப முடியாமல் தடுத்துவிட்டதும்… அழகன் படப் பையன் மாதிரி ‘இந்த வீட்டுல பிறந்திருக்காமலே இருந்திருக்கலாம்!’ என்று ஆற்றாமையாக இருக்கும். முகம் வாடிப் போனதைப் பார்த்து, “உனக்கு வேணுங்கறதை எடுத்துக்க. அப்புறம் தான் மத்தவாளுக்கெல்லாம். எனக்கெல்லாம் வேண்டவே வேண்டாம்.” பாட்டி தொடர்ந்து அரைப்பார்.
பாலெடுத்த பதினைந்தாவது நிமிஷத்தில் பாயசம் தயாராகிவிடும்.
“ரொம்ப சுடறது. நான் சூப்பி சாப்பிடவா?”
“சாப்பிடு. ஆனா லோட்டாவைக் கொல்லைல கொண்டப் போடணும்.”
முதல் உறிஞ்சிலேயே வாய் பொரிந்தாலும் சுவை அல்லோலமாக இருக்கும். மெதுவாக ஒரு டம்ளர் பாயசம் சாப்பிட்டு முடித்ததும் அடுத்ததை தயாராக அம்மா வைத்திருப்பாள். முதலில் இருந்த ஆர்வம் இரண்டாவதில் இல்லாமல் போனதற்கு Law of diminishing marginal utility சமாசாரம் மட்டும் காரணம் அல்ல. சூட்டில் நாக்கு மரத்து வாய் மேலன்னம் தோல் கழண்டிருக்கும். ஆனாலும் குடித்து விடுவேன். மூன்றாவது தேவை இல்லை என்று தோன்றினாலும் பின்னர் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்தில்– அதற்குள் தம்பிக்கு ஒரு கப் பாயசம் முற்றாக ஆறவைத்து அம்மா ஊட்டிக் கொண்டிருப்பாள்– வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருப்பேன். அரை டம்ளரிலேயே மேலே ஒரு சொட்டு கூடக் குடிக்க முடியாது போல ஒரு மாதிரியாக இருக்கும். மிச்சத்தை ஒரேமடக்கில் முழுங்கிவிட்டு…
“நெத்தில (பொட்டு வைத்துக் கொள்ளும் இடத்தை, கைவைத்துக் காண்பித்து) எல்லாம் தூக்கமா வருதும்மா”.
அம்மா நமுட்டாகச் சிரிப்பார். பாட்டி கைக்காரியத்தைப் போட்டுவிட்டு தூக்கிக் கொண்டு போய் ஊஞ்சலில் தன் மடியில் என் தலையை வைத்துப் படுக்கவைப்பாள். “பேசாம கண்ணை மூடிண்டு தூங்கு. இன்னிக்கி பள்ளிக்கூடம் போகவேண்டாம்.”
மகிழ்ச்சியை அதிர்ச்சி மிஞ்சும். உறைந்து போவேன். ஏனென்றால் பள்ளிக்கு விடுமுறை எடுப்பது பாட்டியிடம் அவ்வளவு சுலபம் இல்லை. ஜுரமே அடித்தாலும், கழுத்தில் நெற்றியில் கைவைத்துப் பார்ப்பார். [பாட்டி கை நமக்கு ஜில்லென்றிருந்தால், ஜுரம் இருக்கிறதென்று அர்த்தம். இல்லாவிட்டால் லீவ் சாங்க்ஷன் ஆவது சந்தேகம் தான். 😦 ] ஜுரமெல்லாம் ஒன்றுமில்லை என்று உதடு பிதுக்கி விட்டால் அப்புறம் பாட்டி சொல்லுக்கு பயந்து தெர்மாமீட்டரும் பம்மிவிடும். ‘இல்லை பாட்டி உள்ள ஜுரம் மாதிரி இருக்கு’ என்று சதம்பினாலும் ‘காங்கையா இருக்கும். நெருக்கி 4 தடவை எண்ணை தேச்சுக் குளிச்சா சரியாயிடும்!’ என்ற தீர்மானத்தோடு, புளுகப் பார்த்த பாவத்துக்கு செவ்வாய் மாற்றி வெள்ளி என்று எண்ணைக் குளியல் வேறு படுத்தும்.
சிறிது நேரத்தில், ‘தர்ப்பண நாளாயிருக்கு. நான் தொடவேண்டாம். அந்தத் தலகாணியைக் கொண்டுவந்து குழந்தைக்கு வை!’ என்று அண்ணனுக்கு உத்தரவு போட்டுவிட்டு மெதுவாக தன் மடியை விடுவித்துக் கொண்டு விடுவார். ‘வாய் தான் இருக்கு. பத்து லோட்டா சாப்பிடற ஆளப் பார்த்தா தெரியலை. ரெண்டுக்கே தலை சுத்தியிருக்கு. இதுல நெத்தில தூக்கம் வருது, பொடனில தூக்கம் வருதுன்னு ஒளறல் வேற’ நக்கலும் பெருமையுமாய் பாட்டி சன்னமாய் ஊஞ்சலை ஆட்டிவிட்டுப் போவார். எப்படியோ ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டாளே என்பது அண்ணனின் ஆத்திரம்.
முழுமையாய் தூக்கம் எதுவும் வராமல்– ஆபிசுக்குக் கிளம்பும் அப்பா, ஸ்கூலுக்குக் கிளம்பும் அண்ணன், விவிதபாரதியின் ‘உங்கள் விருப்பம்’ முடிந்து வரும் பின்னணி இசை, வாசலில் ஆட்டுக்குட்டி கத்துவது, அம்மாவும் பாட்டியும் பேசிக்கொண்டே உள்ளே சாப்பிடுவது, அடுத்தாத்தில் துணி துவைக்கும் ஓசை எல்லாம் மங்கலாய் காதில் கேட்கும். சிறிது நேரத்தில் ஊரே அடங்கிப் போய்விடும். மயக்கம் தெளிந்து கண் விழிக்கும்போது தம்பி முழுமையாய் என் ஸ்கூல் பையிலிருக்கும் புத்தகங்களை வெளியே எடுத்துப் பிரித்துவைத்துக் கொண்டு மழலையாய் விநோதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருப்பான். (என்னை மாதிரி படிக்கிறானாம்!) அப்புறம் அது டீச்சர் விளையாட்டாய் மாறி, தொடர்ந்து அன்று முழுவதும் அவனுடன் ஜாலியாக விளையாடலாம்.
வீட்டில் அப்போதெல்லாம் ஃப்ரிட்ஜ் இல்லாததால் மதியத்திற்குள் பாயசத்தைத் தீர்த்துவிட வேண்டிய கட்டாயத்தில் மேலும் இரண்டு டம்ளர் பாயசத்தை உள்ளே தள்ளியதோடு இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் ஜென்மத்துக்கும் இது வேண்டாம் என்ற சபதத்தை நானும் என் நாக்கும் எடுத்துவிடுவோம். ஆனால் அடுத்த வருட ஆனி மாதம் கடைசி நாள், எடுத்த சபதத்தையே திரும்ப எடுத்துவிடுவோம்.
“இந்த வருஷமாவது எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா பாட்டி?”
“பொழைச்சுக் கிடந்தா பாக்கலாம்…”
-0-

தேவையான பொருள்கள்:
முற்றிய பெரிய தேங்காய் – 2
அரிசி – 2 டீஸ்பூன்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய் – 8
பச்சைக் கற்பூரம்.

செய்முறை:
- தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
- அரிசி, துருவிய தேங்காயை கிரைண்டரில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, பாலை வடிகட்டவும்.
- மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, தேங்காயை அரைத்து, ஒட்ட பாலை வடிகட்டவும்.
- இரண்டு பாலையும் கலந்து அடுப்பில் வைத்துக் கரண்டியால் கிளறவும்.
- நல்ல சூடு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து, கொதிவரும் சமயத்தில் இறக்கி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும்.
* கொதித்துவிட்டால் பால் முறிந்து போகும். சரியாகக் காயாவிட்டால் பச்சை வாசனை வரும். எனவே சரியாக, கொதிவரும் சமயத்தில் இறக்கவேண்டும்.
* ஏலப்பொடி தயாராக இல்லாவிட்டால் ஏலக்காயை தேங்காயோடு சேர்த்தே அரைக்கலாம்.
* மிக்ஸியில் அரைத்தும் பால் எடுக்கலாம். ஆனால் கிரைண்டரில் எடுப்பது போல் கொஞ்சமாய் நீர் சேர்த்து கெட்டியான பாலாக எடுக்க முடியாது. தேங்காயின் முழு வாசனையும் குணமும் வருவதற்கு கிரைண்டரில் அரைப்பதே நல்லது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...