பிப்ரவரி 2008
Monthly Archive
செவ்வாய், பிப்ரவரி 26, 2008
தேவையான பொருள்கள்:
முள்ளங்கி – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம்.

செய்முறை:
- பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும்.
- துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
- கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
- ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)
* முள்ளங்கி தவிர, கேரட், கோஸ் போன்ற காய்களிலும் இந்த முறையில் கறி செய்யலாம். ஆனால் இங்கே முக்கியமாக முள்ளங்கியைச் சொல்லியிருப்பதற்குக் காரணம்– சாம்பார், ரொட்டி தவிர முள்ளங்கியை கறி, கூட்டாக செய்வதில் பலருக்கு அதன் மணம் பொருட்டு, ஆட்சேபம் இருக்கிறது. இந்த முறையில் முள்ளங்கியின் மணம் அறவே வராது.
* சின்னச் சின்ன இளமுள்ளங்கியாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லாமல் எவ்வளவு பெரிய, முற்றல் முள்ளங்கியில் இதைச் செய்தாலும் நன்றாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
குழம்பு, ரசம் சாதம் என்றெல்லாம் அடுக்குவதற்கு முன், அப்படியே சூடாக கறியை மட்டும் தனியாகச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். அதிகம் மசாலா சேர்க்காமல், அதிகம் அடுப்பில் வேகவைக்காமல், முள்ளங்கியின் மண்மணம் வராமல் செய்யக்கூடிய ஆகச் சிறந்த முறை.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
சனி, பிப்ரவரி 23, 2008
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக் கீரை – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய்


செய்முறை:
- வெந்தயக் கீரையை, தனித் தனி இலையாக ஆய்ந்து 😦 ஒரு கப் எடுத்து, தண்ணீரில் அலசி நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கீரையை லேசாக 2, 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். கீரை சுண்டிவிடும்.
- கோதுமை மாவு, கடலை மாவு, தயிர், மிளகாய்த் தூள், தேவையான உப்பு, சுண்டிய கீரை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக வெந்நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.
- குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- மைதா மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.) நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
- திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.
- இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.

* இந்தச் சப்பாத்தி ஆறியதும் சாதாச் சப்பாத்தியைப் போல் இல்லாமல் சிறிது மொறுமொறுப்பாக ஆகலாம். ஆனாலும் சுவையாக இருக்கும்.
* நீண்ட பிரயாணங்களுக்கும் எடுத்துப் போகலாம். கெடாது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தயிர்ப் பச்சடி(राइता, Raitha), தால் வகைகள், கார, இனிப்பு ஊறுகாய்கள்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
சனி, பிப்ரவரி 23, 2008
தேவையான பொருள்கள்:
தயிர் – 1 கப்
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கேரட்
கோஸ் (உள்பாகம்)
தக்காளி
….
….
கறிவேப்பிலை
கொத்தமல்லி
பெருங்காயம்
கருப்பு உப்பு [काला नमक, Black Salt] – (விரும்பினால்)
உப்பு
தாளிக்க: எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய்.

செய்முறை:
-
வெங்காயம், தக்காளி, கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்
-
வெள்ளரி, கேரட் போன்ற காய்களை துருவிக் கொள்ளவும்.
-
நறுக்கிய, துருவிய காய்கறிகள், பெருங்காயம் கலந்துவைத்துக் கொள்ளவும்.
-
பரிமாறும் நேரத்தில் தேவையான உப்பு, கருப்பு உப்பு (விரும்பினால்), கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும்.
-
சிறிது எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.
* தயிர் சாதத்திற்குச் சொன்னதைப் போலவே தயிர்ப் பச்சடிக்கும் தாளிக்கும்போது அதிக எண்ணெய் அல்லது கலங்கிய எண்ணெய் உபயோகிப்பது பச்சடியின் நிறத்தையும் தரத்தையும் கெடுக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொதுவாக மேத்தி சப்பாத்தி, புளியோதரை போன்ற உணவுகளுக்கு முடிந்தவரை எல்லா காய்களும் கலந்து செய்யலாம்.
வெஜிடபிள் பிரியாணி, புலவு போன்ற காய்கறிகள் உள்ள உணவிற்கு அதில் இல்லாத காய்களாக(வெள்ளரி, தக்காளி..) மட்டும் சேர்த்துச் செய்யலாம்.
ஏற்கனவே அதிகக் காரமாக உள்ள உணவிற்கு, இதில் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவை இல்லை.
தாளிக்காமல் கூட, தினமும் ஏதாவது ஒன்றிரண்டு பச்சைக் காய்கறிகளிலாவது தயிர்ப்பச்சடி செய்து கோடைக் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், பிப்ரவரி 19, 2008
நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்
தேவையான பொருள்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் – 2
வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க: (வெறும் வாணலியில்)
காய்ந்த மிளகாய் – 6, 7
வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
அரிசி – 1/2 டீபூன்
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை.

செய்முறை:
-
புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
-
வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
-
அடுப்பில், வாணலியில் நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
-
புளிநீர் ஒரு கொதி வந்ததும் அரைத்துவைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
-
மெலிதாக அரிந்துவைத்துள்ள வெங்காயத்தில் பாதியைப் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
-
மீதியிருக்கும் வெங்காயம், வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பாத்திரத்தை மூடிவிட வேண்டும். [ 😦 எப்ப திறக்கலாம்னு ஜெயஸ்ரீ சொன்னதும்தான் திறக்க முடியும்.]
-
பத்து நிமிடங்கள் சூடான குழம்பில் வெங்காயம் ஊறியபின் திறந்து பரிமாறலாம். [டடண்டடண்டடாங்… திறந்தாச்சு! :)]

* வெங்காயத்தைப் பச்சையாகச் சேர்ப்பதுதான் இதில் சிறப்பு.
* வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டும். [வெல்ல டப்பா எங்கவெச்சேன்னு வழக்கம்போல மறந்துபோச்சு! :)]
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொங்கல், மற்றும் அரிசி உப்புமாவுக்கு நல்ல ஜோடி.
நீங்க சொன்னப்புறம் வலையில் மெந்திப் புலுசு ன்னு தேடி பாத்தேன். மீன் சேர்த்து செய்வதுதான் ஒரிஜினல் மெந்திப் புலுசு போல இருக்கு. இத நான் ஒரு potluck dinnerல பார்த்து, நல்லா இருந்ததால செய்முறை கேட்டு வாங்கினேன். இதோட பேர் வேற எதாவதாவும் இருக்கலாம்.
[அப்படி எல்லாம் விட்டுட முடியுமா ஜெயஸ்ரீ? உப்புச்சாரே, ‘கருவாடு மைனஸ்’ செஞ்சு அசத்தியிருக்கோம். இதுவும் மெந்தி புலுசு (மீன் மைனஸ்)ன்னு போர்டு வெச்சுடலாம். :)]
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், பிப்ரவரி 18, 2008
தேவையான பொருள்கள்:
ரவை – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மைதா – 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு
சீரகம்
முந்திரிப் பருப்பு
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
நெய்


செய்முறை:
- ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (வழக்கமாகச் சொல்வதுதான் – மாவுக் கலவையை அரை நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுலபமாகக் கலக்கலாம்.)
- சிறிது நெய்யில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு துண்டுகள், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை என்ற வரிசையில் சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து அப்படியே ஒருமணிநேரம் வைத்திருக்கவும்.
- தோசை வார்க்க ஆரம்பிக்கும் முன் மேலும் தேவையிருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நீர்க்க இருத்தல் அவசியம்.
- அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒருகரண்டியால் மாவை ஓரத்திலிருந்து சுற்றிவிட்டு, நடுவிலும் விட வேண்டும். (மாவை இழுத்து, காலி இடத்தை நிரப்பப் பார்ப்பது, வட்டவடிவமாக வார்க்க ஆசைப்படுவது எல்லாம் தேவை இல்லை.)
- சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து நன்கு வெந்து அடிப்பாகம் மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து திருப்பவும்.
- அடுத்தப் பக்கமும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
- சுடச்சுட மட்டுமே பரிமாறவும். ஆறினால் கட்டைமாதிரி ஆகிவிடும்.
* நான்-ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் சுவையான மொறுமொறுப்பான தோசைகள் வரும். முதலிரண்டு தோசைகள் சரியாகவராமல் படுத்தலாம். [அவற்றை ‘மாமியார் தோசை’ என்பது குழூஉக்குறி. :)] தொடர்ந்து சரியாக வரும்.
* என்னைப் பொருத்தவரை மாவு கரைத்ததுமேகூட வார்க்கலாம். சரியாக வரும்.
* முந்திரிப் பருப்பு, மிளகு, தேங்காய்த் துண்டுகள், எங்கேயோ கொஞ்சமாக வரும் நெய்வாசனை, இவையே ரவா தோசைக்கான அடிப்படை அலங்காரப் பொருள்கள். இவை நான்கின் கூட்டணிச் சுவைதான் ரவா தோசை என்ற அங்கீகாரத்தைத் தரும். (அதிகம் நெய்விடக் கூடாது. நெய், தோசையை மென்மையாக்கிவிடும்.)
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நடுவில் தூவினால் ஆனியன் ரவா.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வியாழன், பிப்ரவரி 14, 2008
தேவையான பொருள்கள்:
காலிஃப்ளவர் – அரைக்கிலோ
உருளைக் கிழங்கு – 2 (பெரியது)
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி (விரும்பினால்)
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 4 பல்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கசுரி மேத்தி – 1 டீஸ்பூன் (कसुरी मेथी, Kasuri Methi –விரும்பினால்)
எலுமிச்சைச் சாறு – சில துளிகள் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தாளிக்க: எண்ணெய், சீரகம்.

செய்முறை:
-
உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
காலிஃப்ளவரை சற்றே பெரிய துண்டுகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
-
இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும்.
-
பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
-
வெங்காயம் சேர்த்து, பொன்னிறமானதும், தக்காளி, காலிஃப்ளவர் துண்டுகள், வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கவும்.
-
மேலே தனியாத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.
-
காலிஃப்ளவர் வெந்து நீர் வற்றும்வரை அவ்வப்போது திறந்து, கிளறிவிடவும்.
-
விரும்பினால் இறக்குமுன் கரம்மசாலா, கசுரி மேத்தி(कसुरी मेथी, Kasuri Methi) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
-
எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை நறுக்கிக் கலந்து பரிமாறவும்.
* கரம் மசாலா சேர்க்க விரும்பாதவர்கள் அதற்குப் பதில் மிளகாய் அல்லது மிளகாய்த் தூள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய் சாதம், சீரக சாதம் போன்ற சாதம் வகைகளுக்கு உபயோகிக்கலாம்.
சப்பாத்தி வகைகளுக்கு மிகவும் பொருந்தும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வியாழன், பிப்ரவரி 14, 2008
தேவையான பொருள்கள்:
இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்


செய்முறை:
-
இஞ்சியைத் தோல்சீவி, நன்றாகக் கழுவி, சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
-
இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
-
தேங்காயைத் துருவல், புளி, பச்சைமிளகாயைக் கலந்து ஆறவைக்கவும்
-
ஆறியதும், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
* வழக்கமாகச் சொல்வதுதான் என்றாலும்– காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். கல் உப்பு உபயோகிப்பது இன்னும் சுகம்.
* இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.
* விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.
* பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்லும்போது தேங்காயையும் நன்கு வதக்கியே அரைத்து எடுத்துச் செல்லலாம். சீக்கிரம் கெடாது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நல்லெண்ணெய் கலந்த சாதம், தயிர் சாதம், பொங்கல், உப்புமா….
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், பிப்ரவரி 12, 2008
தேவையான பொருள்கள்:
பச்சைப் பயறு – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்
கொத்தமல்லித் தழை

அரைக்க:
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
தனியா = 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
தாளிக்க: எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை:
-
பச்சைப் பயறை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
-
இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், தனியா, சீரகத்தை நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கலந்துகொள்ளவும்.
-
மேலே, அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைப் பயறு என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
-
தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து மூடிவைத்து நிதானமான தீயில் வேவைக்கவும்.
-
அடிக்கடி திறந்து கிளறிவிட்டு, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்க்கலாம்.
-
நீர் வற்றி, பயறு நன்கு வெந்து ஆனால் உடைந்து/மசிந்து விடாமல் இருக்க வேண்டும்.
-
தக்காளி சேர்த்திருப்பதால் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் தூவிப் பரிமாறலாம்.
* முளைகட்டிய பயறாக இருந்தால் நலம். நான் அதில்தான் செய்திருக்கிறேன்.
* கரம் மசாலா சுவை விரும்பாதவர்கள், காரத்திற்கு மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகமாக உபயோகித்துக் கொள்ளலாம்.
* பயறை மட்டும் தனியாக குக்கரில் வேகவிட்டு வைத்துக்கொண்டும், நீரை வடித்து, இதில் சேர்த்து வதக்கலாம்.
* இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடி இருந்தாலும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடிப்பதில்லை.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சப்பாத்தி, ரொட்டி வகைகள், நெய் சாதம்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வியாழன், பிப்ரவரி 7, 2008
தேவையான பொருள்கள்:
பச்சைப் பயறு – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் – 1 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க: எண்ணெய், சீரகம்.
காய்கறி: வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை.

செய்முறை:
-
பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
-
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
-
மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், லேசாய் நசுக்கிய பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
-
மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
-
சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
-
திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.
* காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நாம் மசால்தோசைக்கு உருளைக்கிழங்கு மசாலா நடுவில் வைத்துச் செய்வதுபோல இந்தத் தோசைக்கு நடுவில் கால் டீஸ்பூன் இஞ்சிச் சட்னியைத் தடவி, அதன்மேல் ஒரு சிறு கரண்டி ரவை உப்புமாவை வைத்து மடித்துப் பரிமாறவும். ரவை உப்புமா சன்ன ரவையில் செய்ததாகவும், சற்று தளர்வாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய ரவையாக இருந்தாலும் பரவாயில்லை.
தேங்காய்ச் சட்னி, சாம்பார் பொருத்தமாக இருக்கும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வியாழன், பிப்ரவரி 7, 2008
தேவையான பொருள்கள்:
பச்சைப் பயறு – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க: எண்ணெய், சீரகம்.



செய்முறை:
-
பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
-
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
-
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
-
சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
-
திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இந்தத் தோசையை ரவை உப்புமா, இஞ்சிச் சட்னி யுடன் பரிமாறுவது வழக்கம்.
ரவை உப்புமா, பொதுவாக சன்ன ரவையில் தயாரித்து, சற்று தளர்வாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய ரவையாக இருந்தாலும் பரவாயில்லை.
இஞ்சிச் சட்னி
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வியாழன், பிப்ரவரி 7, 2008
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க: எண்ணெய், சீரகம்.

செய்முறை:
- பயத்தம் பருப்பை 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
- இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு ஆனால் மிக மிக நைசாக அரைத்து அத்துடன் ரவையையும் கலந்து கொள்ளவும்.
- ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டவும்.
- அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
- சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
- திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.
* எவ்வளவு மெலிதாக வேண்டுமானாலும் இந்த மாவை இழுத்து வார்க்க முடியும். சுலபமாகத் திருப்ப முடியும்.
* பொதுவாக பச்சரிசி 2 டீஸ்பூன் சேர்த்து அரைத்து செய்வார்கள். அதைவிட ரவை சேர்ப்பது மொறுமொறுப்பாக வரும்.
* எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அதிக எண்ணெயை ஏற்காது.
* ரவை, பச்சரிசி எதுவுமே சேர்க்காமலும் மிக மிக மென்மையான ஸ்பான்ச் தோசைகள் வார்க்கலாம்.
* பச்சை மிளகாயைத் தவிர்த்துவிட்டு இரண்டு முந்திரிப்பருப்பை சேர்த்து அரைத்து தோசை செய்தால் சின்னக் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம். உண்ணவும், செரிக்கவும் எளிதானது. மிக மிக லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும். (ஒரு டேபிள்ஸ்பூன் பருப்பு மட்டும் நனைத்து மிக்ஸியின் சட்னி jar லியே அரைத்து என் பெண்ணிற்கு ஒரு வயதுக்கு மேல் ஆனதும் செய்து கொடுத்திருக்கிறேன்.)
* முடிந்தவரை இதுபோல் எண்ணெய் அதிகம் தேவைப்படாமலே சுலபமாக திருப்பக் கூடிய தோசைகளை மட்டுமாவது இரும்பு தோசைக்கல்லிலேயே தயாரிக்கலாம் என்பது என் கருத்து. இரும்பு வாணலியை உபயோகிப்பது முற்றிலும் நின்றுபோய்விட்ட இந்தக் காலத்தில் தோசைக் கல் மட்டுமாவது உபயோகத்தில் இருப்பது நல்லது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தக்காளிச் சட்னி, இஞ்சிச் சட்னி…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வியாழன், பிப்ரவரி 7, 2008
தேவையான பொருள்கள்:
இஞ்சி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் -நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 2, 3
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணெய், கடுகு.

செய்முறை:
-
இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
-
ஆறியதும், மிக்ஸியில், தேவையான உப்பு, பெருங்காயம், சேர்த்து அரைக்கவும்.
-
அத்துடன் சிறிது நீர்சேர்த்து நறுக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல், புளி, வெல்லம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
-
ஒரு டீஸ்பூன் எண்ணெயி.ல் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
* நான் வெல்லம் சேர்ப்பதில்லை. சுவையாகவே இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொதுவாக தோசைகள், உப்புமா, பொங்கல் வகைகளுடன் சேரும் என்றாலும் வழமையாக ஆந்திர பெசரட்டுடன் பரிமாறப் படுகிறது. தயிர் சாதத்திற்கு மிகப் பொருந்தும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், பிப்ரவரி 5, 2008
நான் திருமணமாகி, மஹாராஷ்டிரா வந்தபோது, ஊருக்கு வந்து இறங்கியதும் ஊர்த்தலைவர் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் கொடுத்ததிலிருந்து இந்த ஆலூ போஹா அறிமுகம். அதற்குப்பின் தொடர்ந்து யார் வீட்டிற்குப் போனாலும் எல்லா உணவுகளோடும் நிச்சயம் இது உண்டு. பத்தே நிமிடங்களில் தயாரித்து, ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கப்படும் இந்த உணவின் சுவை என்னை அவ்வளவு ஈர்த்தது. இதற்காகவே அவர்கள் சூஜி கா அல்வா என்று கொடுக்கும் சர்க்கரைக் குறைவான ரவை கேசரியை மன்னித்திருக்கிறேன். ஆனால் எனக்கு என்னவோ அப்பொழுதெல்லம் எத்தனை பேரிடம் செய்முறை கேட்டும், செய்வதை கூடவே நின்று பார்த்தும், செய்யவே வந்ததில்லை. இனி ஆலூ போஹாவே வாழ்க்கையில் செய்ய முயற்சிக்கக்கூடாது என்று ரங்கமணி சத்தியம் வாங்கும் அளவுக்கெல்லாம் சொதப்பியிருக்கிறேன்.
மீண்டும் இரண்டரை வருடங்கள் முன்பு ஹாங்காங்கிலிருந்து மும்பையில் விடிகாலை 3 மணிக்கு இறங்கியதிலிருந்து எதுவும் ஓடவில்லை. விடிந்ததும் விடியாததுமாக பெண்ணுக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு ஓடிப் போய் அப்ளிகேஷன் வாங்கி, பள்ளிகள் பண்ணும் பாவனைகளை(இந்தியப் பள்ளிகளின் பாவனைகள் எனக்குப் புதிது; அதிர்ச்சி) செரிக்கமுடியாமல் டென்ஷனாகி… “எனக்குப் பசிக்கவேயில்லை. வேலை முடியறவரைக்கும் யாரும் கிட்டயே வராதீங்க,” என்று உட்கார்ந்துவிட்டேன். “அப்படியெல்லாம் உன்னை விட்டுடமுடியுமா? மஹாராஷ்டிரா உன்னை வரவேற்கிறது” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூல் கேண்டீனில் வாங்கிய ஆலூ போஹா தட்டை ரங்கமணி நீட்டியதும், ஒரே ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே…’. வித்யாசமாய் நிலக்கடலை எல்லாம் சேர்த்திருந்தார்கள்.
ஏன் இதைத் தயாரிக்க இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.
தேவையான பொருள்கள்:
சன்ன அவல் – 1 கப்
வெங்காயம் – 1 (பெரியது)
உருளைக் கிழங்கு – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
எலுமிச்சை – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல்
தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – 12, 15 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:
-
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
உருளைக்கிழங்கை தோல் சீவியோ சீவாமலோ(நான் தோலை நீக்குவதில்லை.) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
அடுப்பை சிம்மில் வைத்து, அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
-
உருளைக் கிழங்கோடு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
-
உருளை வதங்கும் நேரத்தில், அவலை நீரில் சில நொடிகளுக்குள் அலசி நன்கு வடியவிடவும். அதிகம் தண்ணீரில் அவல் ஊறிவிடக் கூடாது.
-
வடித்த அவலையும் சேர்த்து மென்மையாகக் கிளறிவிடவும்.
-
அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
-
கேரட் துருவியில் தேங்காயை சன்னமாகத் துருவி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து பரிமாறவும்.
* உப்பு, மஞ்சள்தூளை முதலிலேயே சேர்த்தால்தான் அவலில் அவை சிரமமில்லாமல் முழுமையாகக் கலக்கும்.
* கெட்டி அவலிலும் செய்யலாம். கெட்டி அவல் 4,5 நிமிடங்கள் ஊறினால் சரியாக இருக்கும். ஆனால் சன்ன அவல் தண்ணீரில் அதிகம் இருந்துவிடாமல் உடனடியாக வடித்து அடுப்பில் சேர்த்துக் கிளறிவிடவேண்டும்.
இப்போதும், “ஆலூ போஹா என்று கேட்காதீர்கள், அவல் உப்புமா என்றேஏ க்கேட்டு வாங்குங்கள்!!” என்று டேபிளுக்கு வரும்போதே ரங்கமணி கிண்டலும் தங்கமினி ‘கிக்கிக்கி’ சிரிப்பும் இருக்கிறது. உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் எதோ குறைகிறது. தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், பிப்ரவரி 4, 2008
Posted by Jayashree Govindarajan under
சமையல் குறிப்பு,
சிற்றுண்டி,
தமிழ்ப்பதிவுகள்,
தோசை | குறிச்சொற்கள்:
மைதா,
ரவை |
[7] Comments
ஐந்தே நிமிடங்களில் மாவு தயாரித்து, புதிதாய் சமைப்பவர்கள் கூட சுலபமாக செய்துவிடக் கூடிய எளிய தோசை.
தேவையான பொருள்கள்:
மைதா மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய்.


செய்முறை:
-
மைதா, ரவை, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சாதாரண தோசைமாவை விட நீர்க்க, கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (மைதா, ரவையை 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கட்டிகளில்லாமல் கரைப்பது மிகச் சுலபம்.)
-
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.
-
பொடியகா நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
-
அடுப்பில் தோசைக் கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் வைக்கவும்.
-
மாவை ஒரு கரண்டியால் எடுத்து கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து உள்வரை வட்டமாக ஊற்றிக்கொண்டே வரவும். (சாதாரணமாக தோசை வார்ப்பதுபோல் நடுவில் மாவை விட்டு கல்லில் வட்டமாக இந்த மாவைப் பரத்த முடியாது.)
-
சுற்றி சில துளிகள் மட்டும் எண்ணெய் விடவும். அதிக எண்ணெய் விட்டால் சொதசொதவென்று இந்த மாவு எண்ணெயைக் கக்கிவிடும்.
-
அரை நிமிடத்திலேயே அடிப்பாகம் வெந்து மேலெழுந்துவிடும். புதிதாக தோசை செய்பவர்கள்கூட சுலபமாக முழுதாகத் திருப்பிவிடலாம்.
-
அடுத்தப் பக்கமும் அரை நிமிடம் வேகவைக்கவும்.
-
மேலும் மொரமொரப்பாகத் தேவைப்பட்டால் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, இன்னும் சில நொடிகள் வைத்திருந்து எடுக்கலாம்.
* தோசை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே மாவு கெட்டியாகிவிட்டால் அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்க இருந்தால்தான் மெலிதாக சுவையாக வரும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இட்லி (தோசை) மிளகாய்ப் பொடி, தக்காளிச் சட்னி, சாம்பார், வெந்தயக் குழம்பு போன்ற குழம்பு வகைகள்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், பிப்ரவரி 4, 2008
முக்கல புலுசு போலவே இந்த உணவும் நம் ஊர் பருப்புக் குழம்பின் ஆந்திர வெர்ஷன் தான்.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 3/4 கப்
காய்கறி – 2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெல்லம் – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:
-
புளியைக் கரைத்து நன்கு வடித்துக் கொள்ளவும்.
-
காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
துவரம் பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயத்தை வரிசையாகச் சேர்த்து வறுத்து, ஆறியதும் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
-
மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியபின் நறுக்கிய காய்கறி, தக்காளி சேர்த்து மேலும் சிறிது லேசாக வதக்கவும்.
-
சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேகவைக்கவும்.
-
காய்கறி பாதி வெந்ததும் புளிநீர், வறுத்து அரைத்த பொடி சேர்த்து மேலும் 4, 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
-
காய்கறிகள் வெந்து, புளி பச்சை வாசனை போனதும், வேகவைத்த துவரம்பருப்பு, வெல்லம் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும்.
-
அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.
* இதில் எல்லாவிதமான காய்களும் சேர்த்துக் கொள்ளலாம். நான் முள்ளங்கி, வெங்காய்த்தாள், தக்காளி சேர்த்து செய்திருக்கிறேன்.
* வேக அதிக நேரமெடுக்கும் காய்களை குக்கரிலேயே தண்ணீர் விடாமல் வேகவைத்து எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
* வறுத்து அரைக்காமல், நேரடியாக மிளகாய்த் தூள், கடுதுத் தூள், வெந்தயத் தூள் இருந்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம். வழமையாகச் செய்பவர்கள், பொதுவாக இந்தப் பொடியையும் நம் சாம்பார்ப் பொடி போல் முதலிலேயே மொத்தமாக தயாரித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கிறார்கள்.
* துவரம் பருப்பிற்கு பதில் பயத்தம் பருப்பும் உபயோகிக்கலாம். பலர் அதுதான் உபயோகிக்கிறார்கள். பருப்பு சேர்ப்பதால் கடலைமாவு சேர்த்து கரைத்துவிடத் தேவை இல்லை.
* முக்கல புலசு மாதிரி இல்லாமல் வெல்லம் சிறிதளவு சேர்த்தால் போதும். சேர்க்காமலும் செய்யலாம். 🙂
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் கலந்த சாதத்துடன் பரிமாறலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...