ஆதௌகீர்த்தனாரம்பத்திலிருந்தே வைகுண்ட ஏகாதசி என்பது உள்ளூர்க்காரர்களுக்கு– முக்கியமாக வீட்டுப் பெண்களுக்கு உண்டானதல்ல என்றே இருந்துவந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் கோயில் நிர்வாகத்தில் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் ஏகாதசி 20 நாளும் வீடு– ஊர்பேர்கூட தெரியாத விருந்தினரால் ஜேஜே என்று இருக்கும். ‘பெருமாள் சேவிக்க வந்திருக்கோம்’ என்ற ஒற்றைப் பதம் போதுமாயிருந்தது பாட்டிக்கு யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க. வருகிறவர்களில் ஆசாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் ‘மாமிக்கு தோஷமில்லை’ என்பவர்களால் பிரச்சினை அதிகமில்லை. வீட்டில் காசு இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் சமைத்துப் போடும் சாமர்த்தியம் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இருந்தது.

ஆனால் ஆசாரக்காரர்களுக்கு (ஒருவர் தொட்டு அடுத்தவர் சாப்பிடமாட்டார்கள் என்று) நீண்ட ரேழி முழுவதும் தனித்தனியாக கும்முட்டி அடுப்பு, சருகுத் தொன்னைகளில் அவர்கள் கேட்கிற மளிகைச் சாமான்கள் எல்லாம் எடுத்துத் தருவது, அவர்கள் ‘சுத்தபத்தமாய்’ சமைத்துச் சாப்பிட்டபின் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவைப்பது, (உண்மையில் 6, 7 குடும்பங்களுக்கு தனித்தனியாக சாமான் வழங்கி சமைக்கவைப்பதைவிட நாமே ஒரே தடவையாக 50 பேருக்கு சமைப்பது சுலபம் என்பது இப்பொழுதைய அம்மாவின் கூற்று.), பாலுக்கு தோஷமில்லை என்று பத்துப் பதினைந்து தடவை காபி போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருப்பது… “கோவில்ல வேட்டுப்போட்டுட்டானே, சித்த என் புடைவையைமட்டும் பிழிஞ்சு உலர்த்திடேன்டிம்மா, உள்ளூர்க்காரிதானே, உனக்கு இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… ரெங்கன் உனக்கு ஒரு கொறையும் வெக்கமாட்டான்” என்று அவசரமாக ஓடிக்கொண்டே அவர்கள் கூறும் ஆசியோடு கூடிய ஆணைகளைச் சிரமேற்கொண்டு கிணற்றில் நீர் இறைத்து,  9 கஜம் சின்னாளப்பட்டுகளையும், 8 முழம் வேட்டிகளையும், துண்டுகளையெல்லாம் தூக்கமுடியாமல் தூக்கித் தோய்த்து, கையால்(?!) பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு(?!) கூட்டிக்கொண்டு சில அரையர் சேவைகளுக்குப் போயிருக்கலாம். அம்மாவிற்கு அதுவும் இல்லை. அதிகபட்சமாய் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டும் இலவசமாய் ஆர்யபடாள் வாசலில் மோகினி அலங்காரம், ஏகாதசி காலையில் மணல்வெளியில் ரத்னங்கி கம் வைகுண்டவாசல், யாராவது பட்டர் அல்லது கோயில்காரர்கள் மிஞ்சிப்போய் பாஸ் கொடுத்தால் கடைசிக்கு முதல்நாள் முத்தங்கி அல்லது கடைசி நாள் நீண்ட வரிசையில் இலவச தரிசனம் என்பதோடு முடிந்துவிடும்.

எங்களுக்கெல்லாம் அந்த 20 நாளும் சமர்த்தாக இருந்து, “பரவாயில்லையே பத்தானி நன்னா வளர்த்திருக்கா பேத்தி பேரன்களையெல்லாம்” என்று பேர் வாங்கிக் கொடுப்பது வருடாந்திரக் கடமை. முக்கியமாய் வைகுண்ட ஏகாதசி 3 நாளில் நம்வீட்டுக்குள்ளேயே நாம் தொலைந்துபோய்விடுவோம்.

Muththangi 9th day

இப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. யாரும் யார் வீட்டுக்கும் தேவையில்லாமல் செல்வதில்லை, சென்றாலும் அதிக வேலைகள் கொடுப்பதில்லை. பிள்ளைகள் பரிட்சை என்றால் பேசுவதே பிழை. அதனால் ஊர் கொண்டாட்டங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் அதிலும் அப்பொழுதைப் போலவே இப்பொழுதும்  பலருக்கு பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். முக்கியமாய் கணக்கில்லாமல் பெருகிவிட்ட கூட்டத்தால் கோயிலுக்குச் செல்வது, அவர்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்துவது பலருக்கு சாத்தியமில்லாமலிருக்கலாம். அதைக் கணக்கில் கொள்ளாமல் நிர்வாகம் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

Govindarajur Rajarethinam
1. ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தில் கிளி மண்டபத்தில் சென்று அரங்கரை தரிசிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்து வந்தது. அதற்கும் இந்த வருடம் வந்தது வினை. நாழி கேட்டான் வாசலுக்குள் நுழைவதற்கே இயலாத வண்ணம் முத்தங்கி சேவை தரிசன வரிசையினை வைத்து கிளி மண்டபம் நேரிடையாக செல்லும் பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தி விட்டது கோவில் நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் ஏகாதசி திருவிழாவில் உள்ளுரில் உள்ள சாதாரண மக்கள் கலந்து கொண்டு அரங்கரை தரிசிக்கும் நிலையினை எப்பொழுதுதான் நிர்வாகம் ஏற்படுத்தும்? சென்ற அரசில் கூட இந்த அளவிற்கு கட்டுபாடுகள் கெடுபிடிகள் இல்லை என்பது நிதர்சனம் முதல்வருக்கு தெரிந்து இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா அல்லது நிர்வாகம் மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான செயல்பாடுகளா என்பது தெரிய வில்லை.

2. இன்று (8-1-2014) மதியம் ‘திருக்கோவில் அறிவிப்பு’ என்று தெருக்கள் தோறும் டாம் டாம் மூலம் அறிவிப்பு செய்ய பட்டதை கேட்க நேர்ந்தது. ஏகாதசி திருவிழா வின் முக்கிய விழா நாட்களான மோகினி அலங்காரம் மற்றும் ஏகாதசி ஆகிய இரு தினங்களிலும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுரம் தவிர மற்ற இரு திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டர்கள் என்பதே அந்த அறிவிப்பு. மோகினி அலங்காரம் அன்று கோவில் உள்ளே தரிசனம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் மணல் வெளியில் நம்பெருமாள் உலா வரும்பொழுது தரிசிக்க எதுவாக வெள்ளை கோபுரம் மற்றும் தாயார் சந்நிதி கோபுரம் வழியாக சென்று இதுவரை தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வாயிலில் பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதை நிர்வாகம் உணர்ந்ததாக தெரிய வில்லை. மேலும் ஏகாதசி அன்று முதல் நாள் இரவில் கோவில் உள்ளே சென்று தங்கி இருந்து சொர்க்க வாயில் வழியாக வர இயலாத முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள், தாய்மார்கள் அதி காலை திருக்கொட்டகையில் சாதாரா மரியாதையின் பொழுது வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக ஆயிரக்கால் மண்டபம் வந்து இதுவரை தரிசனம் செய்து வந்த உள்ளூர் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. சொர்க்க வாசல் செல்ல விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வரிசையில் வரிசையில் நின்றது போக நேரடியாக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம் பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்களும் அதே வரிசையில்தான் நின்று செல்ல வேண்டும் என்பது ஒரே பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம்பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்கள் திருக்கோவில் பக்கம் வர வேண்டாம் என்பதற்கே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கருதுகிறேன். இது தொடர்பாக திருக்கோவில் நிர்வாகத்தின் சரியான விளக்கத்தினை பெற்று பதிவிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும்.

இவை அங்கிருப்பவர் சொல்லியவை, நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் அங்கிருக்கும் மற்றவர்களும் சொல்வதை வைத்துச் சொல்ல நினைப்பதெல்லாம்…

மேன்மேலும் பெருகுகின்ற கூட்டத்திற்காக நிர்வாகம் சிலபல மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் அதில் சாமான்யர்கள் பாதிக்கப்படாமல், மேலும் பலரும் பயன்பெறும்படி அந்த மாற்றங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியும்.

படம்(பகல்பத்து  9ஆம் திருநாள் முத்தங்கி) Sivakumar N Vellala