Sujatha 3

 

‘சின்னி இறந்திருந்தாள்’ன்னு உங்களோட ஏதோ ஒரு தொடர்கதையோட கடைசி வரிபடிச்சு அழுதது மட்டும் தான் நினைவிருக்கு. அந்தக் கதை நினைவில்லை. வீட்டுல திட்டு, அதோட கதை புஸ்தகமெல்லாம் கட். பொதுவாவே கதை புஸ்தகம் படிச்சா படிப்பு கெட்டுப் போயிடுங்கற ‘ஆசாரமான’ குடும்பம். இதுக்கப்பறம் அக்கம்பக்கம் வாங்கிப் படிக்கக் கூட தடை. அப்படியும் விடலை. ரெண்டுவீடு தள்ளி ஒருத்தங்க வீட்டுக்கு சாயங்காலமா குழந்தையைக் கொஞ்சற மாதிரி போய் விகடன், குமுதம், கல்கின்னு உங்களோட எழுத்தை மட்டும் டக்னு திறந்து படிச்சுட்டு (இதுக்கு லஞ்சமா குழந்தையை தூளில ஆட்டிகிட்டே படிக்கணும். ஆனா அது எப்பவும் பிடிச்ச வேலைதானே. அதனால டபிள் பெனிஃபிட் ஸ்கீம்ல சந்தோஷமா செய்வேன். வெளிலேருந்து எங்கம்மா குரல்கொடுத்தா, ‘அவ தூளி ஆட்டிகிட்டிருக்கா, குழந்தை தூங்கற நேரமில்லைன்னு சொன்னா கேட்டாதானே’ன்னு பாப்பாவோட அம்மா பதில் சொல்லிடுவாங்க. அதெல்லாம் படிக்கற பத்து நிமிஷம் மட்டும் தான். படிச்சு முடிச்சதும் குழந்தையோட அம்மா அலற அலற பாதி தூக்கக் கலக்கத்துல இருக்கற குழந்தையை அப்படியே அள்ளிகிட்டு, ஓடீடுவேன் எங்கவீட்டுக்கு.

படிக்கறது ஒரு சுகம்னா அதைவிட பதின்மவயசுல(இப்பவும் தான்) அதகளமான கூட்டத்துல அதைப் பேசிகிட்டே இருக்கறது அதைவிட சுகம். அப்படித்தான் எனக்கு RSV வாத்தியாரோட ட்யூஷன் பிடிக்க ஆரம்பிச்சது. எங்க வீடு மாதிரி புத்தகங்களுக்குத் தடை எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல இல்லை. அவங்கல்லாம் காலைலயே படிச்சுட்டு வந்து ட்யூஷன் நேரத்துலயே பேசி முடிச்சுடுவோம். சாயங்காலம் நான் திருட்டுப் புத்தகம் படிக்கறது சும்மா ஒரு எக்ஸ்ட்ரா வாசிப்பனுவத்துக்குத் தான். க்ளாஸ்ல உங்களைப் பத்தி பேசுகிட்டிருக்கும்போது RSV, “ரெங்கராஜன் என்னோட ஸ்கூல்மேட். கிரிக்கெட் போட்டியெல்லாம் அடையவளஞ்சான் வீதிக்கு வந்து விளையாடுவான். எங்காத்து கீழ்ரூம் ஓரத்துல சாத்திவெச்சிருக்கற பேட்(bat) ரெங்கராஜன் விளையாடினதுதான்”னு சொன்னதும் நம்பமுடியாம(அவர் வயசென்ன, உங்க வயசென்ன?) ஆனா சந்தோஷமாயிட்டேன். ஒருநாள் அடக்கமுடியாம அவங்கவீட்டு வாசப்பக்க கீழ இருட்டுஉள்ல ஜன்னலை ஒட்டி சாத்தி வெச்சிருந்த பேட்டை வெளித் திண்ணைலேருந்து ஜன்னல் வழியா கையை உள்ள விட்டு தொட்டுப் பார்க்க நினைச்சு உள்ள கையை விட, அதுக்குள்ள RSV இறங்கிவர, அவசரத்துல கையை வெடுக்குனு எடுக்க.. போகும்போது கை எப்படி சுளுவா போச்சுன்னு தெரியலை. வெளில எடுக்கும்போது கை மட்டும்தான் வந்துது. வளையல் எல்லாம் உள்ளயே உடைஞ்சு கொட்டிடுச்சு. கொஞ்சூண்டு இரத்தம் வேற. 😦

அப்படியே விட்டிருக்கலாம். வீதி பிஸ்தாக்கள்கிட்ட இதைச் சொல்லி பீத்திக்கணும்னு நினைச்சு விலாவாரியா சொல்லிட்டேன். ஆளாளுக்கு என்னை அழவெச்சுட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவர் (பாய்ஸ் ஹைஸ்) ஸ்கூல் மேத்ஸ் வாத்தியாராச்சே.

“RSVஆ? அவர் பீலா விடுவாருன்னு தெரியும். அதுக்காக இப்படியா?”

“எந்த சுப்புணி பேட்டையோ தொட்டுட்டு… பாவம்டா.”

“அவர் சொன்னா இந்த கேப்ஸ் (கேப்ஸ்- KPVT யோட ஷார்ட் ஃபார்ம். இது எங்க வீதி குழூஉக்குறி) ஏன் நம்பணும்?”

“இல்லை, அவர் இதுக்கெல்லாம் பொய் சொல்ல மாட்டாரு. ரொம்ப நல்லவரு”ன்னு நான் திரும்பத் திரும்பச் சொன்னதை யாரும் நம்பத் தயாரில்லை. அல்லது நம்பினாலும் என்னை ஓட்டியே தீரணும்னு முடிவா இருந்திருக்காங்களோ என்னவோ.

“இவகிட்ட நமக்கென்னடா பேச்சு. அந்த பேட்டை வாங்கி மேக்கை(make) பாத்தா தெரிஞ்சுட்டுப் போகுது. என்ன மரம், எந்தக் கடை, எந்த வருஷம் எல்லாம் சொல்லிடமாட்டோம்?”

பயந்துட்டேன். இவங்க வாத்தியார்கிட்ட கேட்டுடுவாங்கன்னில்லை. அது நீங்க தொட்டு விளையாடின பேட்டா இல்லாம இருந்துடக் கூடாதேன்னு. வீட்டு வாசல்ல அழுதுகிட்டிருந்ததைப்; பாத்து பாட்டி வந்து விசாரிச்சா. “அது என்ன நடந்துச்சுன்னா… உங்க பேத்தி…” ன்னு ஒருத்தன் விஸ்தாரமா சொல்ல ஆரம்பிக்க, என் அழுகைக்கு பயந்து இன்னொருத்தன் “வேண்டான்டா” ன்னு அவன் வாயைப் பொத்த, ‌அவன் அந்தக் கையையும் வலுக்கட்டாயமா தள்ளி, “உங்க பேத்தி டேஷ் டேஷ் டேஷ்..” ன்னு கத்திட்டுப் போனான்.

அம்மா வந்து அலட்சியமா என்னன்னு விசாரிச்சா. “வளையல் உடைஞ்சிடுச்சாம், திட்டுவீங்களோ?”ன்னு எவனோ எடுத்துக் கொடுத்தான். “ஆமா, போன மாசம் காதுல இருந்த தங்கத் தோடை தொலைச்சா. போன வாரம் வெள்ளிக் கொலுசைத் தொலைச்சா. அதுக்கே பாட்டியும் பேத்தியும் வெளிய சொல்லாம கமுக்கமா இருந்திட்டாங்க. கண்ணாடி வளையலுக்கா அழப்போறா இவ. அதெல்லாம் பசப்பு”ன்னு நல்லவேளை கண்டுக்கலை.

ஆனாலும் அப்றம் வந்த நாள்கள்ல இந்தப் பசங்கபோய் வாத்தியாரைக் கேட்டு அது நீங்க விளையாடினதில்லைன்னு ஆயிடுமோன்னு ஒரே பக்பக்தான்.  எங்கண்ணன் தான் தைரியம் சொன்னான், இவனுங்க எல்லாம் போய் கேக்கமாட்டாங்க. அவர் ரொம்ப ஸ்டிரிக்ட். அவரைப் பாத்தாலே டிராயரை நனைச்சுடுவாங்கன்னு. அதே கொஞ்சம் நிம்மதி. ஸ்கூல்ல அவர் பையன்கள் கிட்ட அப்படி ஸ்டிரிக்டா இருப்பாரோ என்னவோ எங்களை எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். ‘அவருக்கு கல்யாணம் ஆகலை இல்ல‌. அதனால பெண்களை எப்படி டீல் பண்றதுன்னு அவருக்குத் தெரியாது. ஏதாவது சொன்னா எங்கயாவது அழுதுகிழுது வெச்சிடுவீங்களோன்னு பயப்படுவாரு’ன்னு ஒருத்தன் ஆரூடம் சொல்லியிருந்தான். இருக்கலாம். ஆனா அதை நான் தான் முழுமையா (மிஸ்)யூஸ் பண்ணின்டேன். 🙂

ஆனா RSV அன்னிக்கி ஒருநாள் ஆர்வமா உங்களைப் பத்தி சொன்னதோட சரி. அப்றமெல்லாம் உங்களைப் பத்தி நாங்க பேசறதை வகுப்புல அனுமதிக்கவே இல்லை. அப்றம் கொஞ்சம் பொறுக்காம நீதான் எல்லாரையும் கெடுக்கறன்னு என்னை குறிப்பிட்டு சொல்லிகிட்டே இருந்தாரு. நமக்கு அதெல்லாம் ஒன்னும் உரைக்காதுன்னு வைங்க.

ஒருநாள் ____ குனிஞ்சு மெதுவா என் காதுல கிசுகிசுப்பா, இப்பல்லாம் உங்க பொழுதுபோக்கு வாக்மேன்ல பாட்டு கேட்கறதுதான்னு சொன்னா. “ஐயய்யோ காது சீக்கிரம் செவிடாயிடுமே!”ன்னு கொஞ்சம்- கொஞ்சம்னா பக்கத்துல எல்லாருக்கும் காது செவிடாகிற மாதிரி– சத்தமா என்னை மறந்து கத்திட்டேன். RSV சடக்னு சாக்பீஸை தூக்கி எறிஞ்சுட்டு கீழ விடுவிடுன்னு கோபிச்சுகிட்டுப் போயிட்டாரு. இதென்ன ஸ்கூலா, நாம போய் மன்னிப்பெல்லாம் கேட்டு திரும்பக் கூட்டி வர. நான் நல்லதாப் போச்சுன்னு தொடர்ந்து உங்க பேட்டியோட முழு விபரமும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். (இப்ப இத்தனை வருஷம் கழிச்சு உங்களுக்கு உடம்புசரியில்லாம இருந்தபோது தேசிகன் உங்களைப் பார்த்துட்டு உடனே போன்செஞ்சு, “சார் ரொம்ப bore அடிக்குதுன்னு சொல்றாரு. வாக்மென்ல பாட்டு கேட்கறதுதான் ஒரே பொழுதுபோக்கு. அதுவும் என்னவோ சரியில்லயாம். காட்லெஸ் ஹெட்போன் கேக்கறாரு. சென்னைலயே கடைல தேடணும்”னு சொன்னபோது நெகிழ்ந்துட்டேன். நான் பயந்தமாதிரி உங்க காதுக்கு ஒன்னும் ஆகியிருக்கலை.)

எந்த ரியாக்ஷனும் எங்ககிட்ட இல்லாததாலே, RSV தானே மேல வந்து தூக்கி எறிஞ்ச சாக்பீசை கண்ல ஒத்திகிட்டாரு (பாவம்! ஆனா என்மேல என்ன தப்பு?). “நீ நாளைலேருந்து _______யோட டயத்துக்கு ட்யூஷன் வா. அவ தமிழ் மீடியம். ரெண்டு பேருக்கும் சேர்ந்து சொல்லிக் கொடுக்கறது எனக்கு கஷ்டம். ஆனாலும் அவ்ளோ கஷ்டமில்லைன்னு சொல்லிட்டாரு. ஒருவேளை இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன், இங்கயே இருக்கேன்னு சொல்வேன்னு நினைச்சிருப்பாரோ என்னவோ. நான் நடக்றது நடக்கட்டும். நாம கெட்டதோட சந்திரபுஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்துடலாம்னு தயாராயிட்டேன். அதெல்லாம் சரியா வராது. ரொம்ப அறுக்கும். வேற ஏதாவது யோசிக்கலாம்னு மத்த ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.

மறுநாள் அந்தப் பொண்ணை பேர் என்னன்னு (சும்மா. அதெல்லாம் தெரியாமலா இருக்கோம்.) கேட்டேன். வாத்யாரே பதில் சொன்னாரு. “அவ அதிகம் பேச மாட்டா”ன்னு உபரி வாக்கியம் வேற. கடுப்பாயிட்டேன். “சரி, பேசவேண்டாம் ஒரு பாட்டு பாடேன்”ன்னு சொன்னேன். “எனக்கு கர்நாடிக் தான் தெரியும். உங்களுக்கு(?!) அதெல்லாம் புரியாது”ன்னு அந்தப் பொண்ணு சொன்னதை நான் மன்னிச்சுட்டேன். ஆனா மூணே நாள்ல அந்தப் பொண்ணு என் நண்பன் ஒருத்தனை யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுகிட்டு ட்யூஷனையே நிறுத்தினதைத்தான் அவரால மன்னிக்கவே முடியலை பாவம்!  :)))))

அப்றம் என்ன, நான் என் ஜோதில கலந்து, வழக்கம்போல கலக்க ஆரம்பிச்சுட்டேன். RSV திட்டாட்டாலும் அப்பப்ப பாராளுமன்ற ஸ்பீக்கர் மாதிரி அமைதி காக்க வேண்டிகிட்டே இருப்பாரு. நாங்களும் உறுப்பினர் மாதிரி வெளிநடப்பெல்லாம் செய்யாம ரணகளப் படுத்திகிட்டிருந்தோம். எல்லா வாத்யார்களையும் போலவே, “போன செட் கொஞ்சம் பேசுவாங்களே தவிர ரொம்ப ஸ்மார்ட். படிப்புன்னு வந்தா அசத்திடுவாங்க”ன்னு அடுத்து வந்த செட்கிட்ட புகழ்ந்துகிட்டிருந்தாராம். காரணம், அவர் நிஜமாவே அருமையா மேத்ஸ் சொல்லித் தருவாருங்கறதுதான். RSV வீட்டு மாடிரூம் சுவர்களும், கீழ அடையவளஞ்சான் மதில் சுவர், ஹெட்போஸ்ட் ஆபிஸ் பக்கம் எல்லாம் இன்னும் கூட உங்க கதைகளையோ உங்களைப் பத்தியோ என் குரலை எதிரொலிக்கலாம். இத்தனை வருஷம் கழிச்சும் அங்க போகும்போது ரொம்ப சின்ன பொண்ணா ரொம்ப உற்சாகமா ஆயிடறேன்.

=====

எப்படி இருந்தாலும் நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல எல்லாருக்கும் அலர்ஜியோ அப்படி பதின்ம வயசுக்கு மேல ‘சுஜாதா’ங்கற பேர் அலர்ஜியாயிடுச்சு. 🙂 ஸ்கூல், காலேஜ் கட் அடிச்சுட்டு சினிமா எல்லாம் ஓக்கே, கதைபுக் படிக்கக் கூடாதுங்கறது என்ன லாஜிக்னு எனக்கு இன்னும் புரியலை. அதை விட நாமதான் ஸ்கூல் போயிடறோம். அப்பக் கூட கடமையா அம்மா ஏன் அக்கம்பக்கம் கூட புக்ஸ் வாங்கிப் படிக்கறதில்லைங்கறது என் ஆச்சரியமாவும், நாம வீட்டுலயே புக்ஸ் வாங்கலை. ஆனா இவ எங்க எப்படி படிக்கறாங்கறது அம்மாவோட ஆச்சரியமாவும் தொடர்ந்து இருந்துகிட்டே இருந்தது. முடிஞ்சவரைக்கும் அடக்கியே வாசிப்பேன். ஆனாலும் அதை இத்தனை வருஷம்கழிச்சு கிளறிட்டேன். 😦

2005 ஜூன்ல ஸ்ரீரங்கத்துலேருந்து இரண்டு நாள்ல மும்பை கிளம்பணும். எல்லாம் தயார். கண்ணுல லேசர் சிகிச்சை; அதனால இடைல ரெண்டுநாள் மட்டும் கொஞ்சம் ஓய்வு. மதியம் 3 மணிக்கு கரண்ட் போயிடுச்சு. கரண்ட் போனா ஊர் ஏன் இப்படி ஒரு அமைதியாகுது தெரியலை. அப்பா அடுத்த ரூம்ல ஏதோ பீரோவை குடைஞ்சுகிட்டிருந்தாரு. அம்மா கூடத்துல தரைல உட்கார்ந்து அரிவாள்மணைல பீன்ஸ் நிதானமா காம்பு, நார் நீக்கி திருத்தறா. எதுவும் செய்யத் தோணாம அம்மா மடில போய் படுத்துக்கறேன்.

“போய் தலைகாணியை வெச்சுப் படு. திருத்தற இடத்துல..”

“போம்மா”

“கண்ல என் கை பட்டுடப் போறதுடா. தள்ளிப் படேன்.”

“போம்மா”

உலகத்துலயே எந்த ஈகோவும் பார்க்காத அனுமதி தேவை இல்லாத ஒரே இடம் எந்தக் காலத்துலயும் அப்பா அம்மா மடிதான்.

“கண் ஆபரேஷன் ஆனதால இன்னிக்கு வெளில போக முடியலையாக்கும். இல்லைன்னா அப்பாவும் பொண்ணும் வெயில் வீணாப் போறதேன்னு திரிலோக சஞ்சாரம் கிளம்பியிருப்பீங்க”

“ஆபரேஷன்னு சொல்லி கேவலப்படுத்தாத. சின்ன சிகிச்சை. நான் என்ன பாட்டிமாதிரி கண்ல பச்சைத் திரை கட்டிகிட்டா உட்கார்ந்திருக்கேன்?”

“வேண பணத்தை கொட்டி அழுதிருக்கு. அப்றம் என்ன சின்ன சிகிச்சை?”

“போம்மா”

“போம்மா போம்மான்னுண்டிரு. கண் ஒன்னுதான் அழகா இருந்தது. அதையும் கெடுத்துண்டாச்சு. உன் வயசுல எல்லாம் நான் எப்படி இருந்தேன்!”

“என்னோட எல்லா வயசுலயும் நீ இதையேதான் சொல்லிகிட்டிருக்க. சும்மா விடாத. நீங்களெல்லாம் சின்ன வயசுலயே எப்படி இருந்தீங்கன்னு சார் சொல்லிட்டாரு”

“சாரா? யாரு அது?”

இதுதான் எனக்குப் பிரச்சினை. உங்களை சுஜாதான்னு பெண்பேர்ல கூப்பிடப் பொருந்தலை. ரெங்கராஜன்கற பேர் ரொம்ப அந்நியமா இருக்கு. சார்னு சொன்னா அது நீங்க மட்டும்தான். மற்ற ஆண்கள் யாரையும் நான் அப்படி கூப்பிடறதில்லை. நான் பேர் சொல்லி அவங்களைக் கூப்பிடறதை செரிக்கமுடியாத ஆண்களைக் கூட அவங்க பேரோட சார், அல்லது எக்ஸ்க்யூஸ்மீ இப்படியே ஒப்பேத்திகிட்டிருக்கேன். என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் சார்னு சொன்னா அது நீங்கதான்னு புரியும். அப்படிப் புரிஞ்சுக்காதவங்களைப் பாத்தா கோபமா வருது. அம்மாவோட இன்னொசன்ஸ்(அல்லது இக்னரன்ஸ்) எப்பவும் போல மன்னிச்சுட வேண்டியதுதான்.

“எங்கவீதி (கீழச்சித்திரை வீதி) பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ சிலாக்கியமா இருக்காது. ப்ரோட்டீன் சத்து குறைஞ்ச பொண்ணுங்க”ன்னு எழுதியிருக்காரு.

“ஏய், அவர் யாரைச் சொன்னாரோ, அந்தாள் காலத்துல நம்பாளு வயசுக்கே வரலை”– அடுத்த ரூம்லேருந்து அப்பா.

அப்பா எங்க பேச்சை கேட்டுகிட்டிருக்காரு. அதைவிட அதிர்ச்சி. நீங்க என் அம்மா அப்பாவை விட வயசுல பெரியவரு. இது எனக்குத் தெரிஞ்சதுதான்னாலும் என் மனசுல பதிஞ்சதே இல்லை. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. அதெப்படி வயசு தெரியும் ஆனா தெரியாதுன்னு சொல்ற. உளறாதன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்குத் தெரியலை. நிறைய சந்தர்ப்பங்கள்ல உங்க வயசை யாராவது சுட்டும்போது அல்லது நிகழ்வுகள் குறிக்கும்போது எனக்கு இன்னும் அதிர்ச்சியாவேதான் இருக்கு. ஃபோன்ல நீங்க என்கிட்ட பேசும்போது உங்க‌குர‌ல் அதைவிட‌ மோச‌மா குழ‌ந்தையோட‌ உற்சாக‌த்தோட‌ இருந்த‌து.

[அம்பலம் சாட்ல ஒருதடவை ஹரியண்ணாவுக்கு ‘நாட்கள்’ குறிச்சு நீங்க சொல்லிகிட்டிருந்தபோது அப்படித்தான்– நாங்க எல்லாம் மரியாதைகொடுக்கற ஹரியண்ணாவே ஏன் உங்ககிட்ட இப்படி ஏதோ பெரியவர்கிட்ட பேசறமாதிரி மரியாதையா பேசறாருன்னு அதிர்ச்சியா இருந்தது. 🙂 இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள். எனக்கெல்லாம் உங்களோட தடால் தடால்னு சண்டைபோட்டு எதிர்த்துப் பேசி கலாய்ச்சே பழகிடுச்சு.]

அம்மாவுக்கு இன்னும் யாருன்னு தெரியலை. ஆனா கோபமாயிட்டா. தான் சின்ன வயசுல ரொம்ப ரொம்ப அழகா இருந்ததா இன்னும் ஊர்ல சொல்ற காலத்துல இந்த கமெண்ட்.. “யார் சொன்னது?”

“எழுத்தாளர் சுஜாதா! :)”

“திமிருதான்!”

“என்ன திமிரு? :)) எப்பவுமே சட்டை மேல் பட்டனுக்கு ஊக்குதான் போடுவீங்களாமே வீதில. போடுவீங்களா இல்லையா? :))”

அம்மா அதுக்கு உடனே ஒன்னும் சொல்லலை. அம்மாவுக்கு கவிஞர் வாலி பத்தி கொஞ்சம் குறையுண்டு. கோமளத்து மாமியாத்து வாச திண்டுல உட்கார்ந்துண்டு, வெத்தலையும் புகையுலையும் போட்டு, துப்பிண்டு… சே ஒரு பொண்ணும் அந்தப் பக்கம் போகவர முடியாது. ஆனா பாவம், உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தட்டிவிட்டே சின்ன வயசுல ‘ரேடியோ மாமா’ நிகழ்ச்சி நாடகத்துலேருந்து ஹைஸ்கூல் நாடகம் வரைக்கும் ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி வாங்கி நான் பேர் வாங்கிட்டேன்’னு கொஞ்சம் நன்றியுணர்வோட சொல்வா. ஆனா சுஜாதாங்கர பேர்ல எந்தக் கருத்தும் இல்லாம இருந்திருக்கா போல. நானாத்தான் நாறிட்டேன். 🙂

திடீர்னு அஞ்சு நிமிஷ அமைதிக்கப்புறம் அம்மா, “அந்தாள் தன் மூஞ்சியை கண்ணாடில பாத்ததே இல்லையா? நட்டுவெச்ச நட்ராஜ் பென்சிலுக்கு கையும் காலும் ஒட்டவெச்ச மாதிரி இருந்துண்டு எங்களை கிண்டலாக்கும்!” [எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு வந்த விமர்சனங்கள்லயே இந்தக் கோணத்து விமர்சனம்– அதுவும் தெருப் பொண்ணுகிட்டேயிருந்து இதாத்தான் இருக்கணும். சே சே பாவம் சார் நீங்க. ஏதோ என்னாலானது. :))) ]

அம்மா ரொம்ப பாதிக்கப் பட்டுட்டாங்க போலன்னு தோணிச்சு. :)) எத்தனை வயசானாலும் ஆண்களோட இந்த மாதிரி கமெண்ட் பெண்களுக்கு தாங்கறதில்லைன்னு நினைச்சுகிட்டேன்.

“அதெல்லாம் சும்மா சொல்லாத. சார் சின்ன வயசுல சூப்பரா இருப்பாரு. இப்பத்தான் டயட்ல மெலிஞ்சிருக்காரு.”

“ஆமா, நீதான் பாத்த.”

“சரி நான் பாக்கலை. நீதான் சிறப்புத் தமிழ் எடுத்துப் படிச்சவள்னு பீத்திக்கற. நீயும் புத்தகங்களுக்கு எழுதியிருக்கலாமில்ல, கீ.சி.வீதி பாய்ஸ் எல்லாம் ப்லா ப்லா அவ்ளோ சுவாரசியம் இல்லைன்னு..”

“நீ எழுதுவ அப்படி எல்லாம்”:

“நான் எழுதமாட்டேன். ஆனா சார்கிட்ட அடுத்த சாட்ல எங்கம்மா மட்டும் அதுல விதிவிலக்கு. அழகோ அழகா இருந்தாங்கன்னு சொல்லிடறேன். போதுமா?”

“அப்படியே நீ உங்கப்பா ஜாடைன்னும் சொல்லிடு”

“அதெல்லாம் பிரச்சினை இல்லை. சாட் தானே. என் மூஞ்சி தெரியாது. :)”

“வெட்டி!”

“போம்மா”

அப்புறம் பேச்சே இல்லை. ஒரு கால்மணி நேரம் கழிச்சு மெல்ல திரும்பி அம்மாவைப் பாத்தேன். கைதான் காயை திருத்திண்டிருந்தது. முகமெல்லாம் வரிவரியா நினைவுகள் ஓடற மாதிரியே ஆழ்ந்த சிந்தனை. முழுமையா கீழச்சித்திரை வீதி நாள்களுக்குப் போயிட்டாங்க. அசைக்காம விழியை மட்டும் நகர்த்தி காயைப் பாத்தேன். 4, 5 பீன்ஸ்தான் பாக்கி இருந்தது. காய் தீர்ந்ததும் திரும்ப நிஜவாழ்க்கைக்கு வந்துடுவாங்களேன்னு கவலையா இருந்தது.

=====

jaysனு என் கையெழுத்தை வெச்சு என்னைக் கூப்பிடற ப்ரெண்ட்ஸ்லேருந்து விலகி, நீங்க சுருக்கி வெச்ச jsri ங்கற பேர்தான் என் அடையாளமும் ஐடி முகவரிகளுமா மாறி 5 வருஷமாச்சு. மரத்தடி, பதிவுகள், தமிழ் இணையம்னு வாழ்க்கையே உங்க மூலமா மாறினாலும், என்னவோ இணையத்துல எல்லாருக்கும் என்னைத் தெரிஞ்சப்பறம், அம்பலம் சாட் எல்லாம் பொதுவுல வர ஆரம்பிச்சதும், பொதுவுல சாட் செய்றதுல என் அந்தரங்கம் பாதிக்கப்படறமாதிரி இருந்தது. இனிமே சாட்டுக்கு வரமாட்டேன், வருவேன் பேச மாட்டேன், இல்லைன்னா சொந்தப் பேர்ல வரமாட்டென்னு மாத்தி மாத்தி பாடாப் படுத்தி லெட்டர் போட்டாலும், “I understand”, “I guessed that much”, “I know” மாதிரி ஒருவரி பதில். ஆமா, நாம இல்லைன்னு தான் குறையுதான்னு சும்மா பாத்துகிட்டு நான் பேசாம இருந்தாலும் என் புனைப்பெயரைக் கூப்பிட்டு இழுத்துவெச்சு ரெண்டு மூணு கேள்வி, விசாரிப்பு… (‘கண்டுகொண்டேன்”னு சொல்ற மாதிரி)…  உஷா சந்திச்ச போது நான்னு நினைச்சு நீங்க பேச ஆரம்பிச்சதா சொன்னதும் மனசுக்குள்ள படபடத்த பட்டாம்பூச்சியை, தீவிர ரசிகைகள் நேர்ல சந்திக்கமாட்டாங்கன்னு சொல்லிச் சொல்லியே அடக்கிட்டேன்.

உங்க மேல நிறைய அன்பும் மரியாதையும் வெச்சிருந்தும் ஏன் எப்பவும் சண்டை போடற மாதிரியே இருந்தேன்னு தெரியலை. எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சமத்தா இருப்பேன்னு தோணுது.

“சார், நானும் மரபுக் கவிதை எழுதக் கத்துக்கப் போறேன்”

“நீ மரபு மீறாம சரியா எழுதலாம். ஆனா அது கவிதையாங்கறதுக்கு நான் கியாரண்டி இல்லை. :)”

இதுக்கே வீம்பா கத்துக்கணும்னு தோணித்து.

“என்னவோ சொன்னீங்களே, என் வெண்பாவுக்கு மரத்தடில பரிசு கிடைச்சிருக்கு”

“என்ன பரிசு?”

“நமக்குத்தான் எப்பவும் இரண்டாம் பரிசே பிடிக்காதே”

“முதல் பரிசா. வாழ்த்துகள்”

“இல்லை. :(( அதை “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” ரேஞ்சுல கடைசில யாரோ ஒரு புலவர் வந்து எழுதி வாங்கிட்டு போயிட்டாரு”

“??”

“மூணாவது பரிசு”

“ஹா ஹா”

“பரவாயில்லை”

“btw jsri, regarding your venbas they were quite competent but not brilliant.”

“பரவாயில்லை”

“perhaps the last line was restrictive”

“பரவாயில்லை”

“I am looking for Venbas with innovative mix of modern words and topics”

“தேவையில்லை. எனக்கு மரபு சொல்லிக் கொடுத்த கனடா பசுபதிங்கறவரே நல்லாருக்கு. எனக்கு நம்பிக்கையா இருக்குன்னு சொல்லிட்டார். அது போதும்.”

” 🙂 ”

(என் ஈகோவை இட‌றிவிட்ட‌ ஸ்மைலி)

“உங்களைக் கூடத்தான் எல்லாரும் மரபுக்கு விரோதின்னு சொல்றாங்க”

“யார் சொல்கிறார்கள்?”

“எல்லாப் பெரியவங்களும்தான்”

“யார் பெரியவர்கள்?”

“(ஙே.. நீங்கதான் எல்லாரையும் விட பெரியவரா?) ஐ மீன் இணையத்துல என்னை விடப் பெரியவங்க… மரபுல எல்லாம் எழுதி முடிச்சாச்சுன்னெல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டீங்களாமே”

“அவர்களை பசித்த புலி தின்னட்டும். நான் பதினான்கு வயதிலிருந்தே ‘மரபுநேசன்’ என்கிற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதிவருகிறேன்.” (அதெல்லாம் பேசும்போது நல்லா பேசுங்க. ஸ்டேட்மெண்ட் விடும்போது கோட்டை விட்டுடுங்க.)

அநேக நேரங்கள்ல பதில் சொல்றதும், உங்க தனிப்பட்ட செய்கையும் வேறயாவே இருக்கு. என்னாலயே இன்னும் முழுமையா புரிஞ்சுக்க முடியலை. நாய் மட்டும் ஏன் நன்றியுள்ளதா இருக்குன்னு கேட்டா, “அதைத் தனியாக் கூப்பிட்டுக் கேட்டா எல்லாம் ஒரு சர்வைவலுக்குத்தான்னு சொல்லும்”னு அலட்சியமா/நகைச்சுவையா பதில் சொல்றீங்க. 2003ல சுதந்திர தினத்தன்னிக்கு என்ன செஞ்சுகிட்டிருந்தீங்கன்னு(ரொம்ப முக்கியம்) மறுநாள் உங்க ரசிகர் ஒருத்தர் கேக்கறாரு, “நேத்தி என் வளர்ப்பு நாய்க்கு இறுதிநாள். முழுநாளும் அதுகூடவே ரெண்டுபேரும் இருந்தோம். வேற எதுவும் ஓடலை. ரொம்ப துக்கமா இருக்கு”ன்னு ஃபீலிங்ஸ் விடறீங்க.

ப‌த்ரி ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ச் சொல்லி எனக்கு அறிமுகம் செஞ்சீங்க. அதெல்லாம் ஒன்னும் புரியவே இல்லை. தமிழே இல்லை, உவ்வேக். எனக்கு ஒன்னுமே புரிலயலை. இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்காய்ங்களோ”ன்னு நான் சொன்னதை மறுத்து, “அசடு, அது உலக இணையத் தமிழ் மாநாடு பதிவுகள். ரெகுலர் படி”ன்னு நிறைய சிபாரிசு செஞ்சீங்க. என்னை உருப்படியா ஒரு 15, 20 பதிவுகளை சுட்டி எடுத்து அனுப்பச் சொன்னீங்க. ஆனா பொதுவுல பதிவுகளைப் பத்தி வேற கமெண்ட் வெச்சீங்க. அதுலயும் அப்ப எனக்கு பெரிய மாற்றுக்கருத்து இல்லைன்னு வைங்க.

விஷ்ணுபுரம் 14 பக்கம் தாண்டலைன்னு சொல்லிகிட்டிருந்தீங்க. அப்ப 15 பக்கம் தாண்டினா நான் உங்களைவிடப் பெரியாளான்னு கேட்டதுக்கு ‘நிச்சயமா’ன்னு சொன்னீங்க. ஆனா படிச்சுட்டு, ஜெயமோகன்கிட்ட தனிப்பட்ட முறைல அந்த நாவலுக்கான உங்க மறுப்பை சத்தமில்லாம ஆனா அழுத்தமா சொல்லியிருக்கீங்க. கிரேட். இவ்ளோ பிரபந்தங்கள் மேல ஈடுபாட்டோட இருக்கறவரு எப்படி கனிமொழி, கமலஹாசன்னு நட்பா இருக்காருன்னு எல்லாரும் கேக்கறாங்க. (கனிமொழி, ‘திருப்பாவையை எரிச்சுடுவாங்களா?’ன்னு காஃபி வித் அனு’ல கேக்கறாங்க) அதுக்கும் இதுக்கும் குழம்பத் தேவை இல்லைன்னாலும் உங்க மறுப்பை தேவையான இடங்கள்ல, மத்தவங்ககிட்டயும் சொல்லாம இருந்திருக்க மாட்டீங்கன்னு இப்ப நம்பறேன். வேணா, எல்லாருக்கும் ஜெயமோகன் மாதிரி அதை பொதுவுல ஒத்துக்கற நேர்மை இல்லாம இருக்கலாம். இன்னும் வாழ்நாள் முழுக்க தெரிஞ்சுக்க உங்க ஆளுமைல பாக்கி இருக்குன்னு தான் தோணுது. நல்லவேளையா அதையெல்லாம் பகிர்ந்துக்கவும் எப்பவும் எனக்கு ஆள் இருக்கு.

=====

கல்யாணத்துக்கப்புறம் படிக்க புக்ஸ் இருந்தது; கட்டுபாடு இல்லை; ஆனாலும் ஏதோ குறை. அது என்னன்னா அதைப் பேசி பகிர்ந்துக்க ஆள் இல்லாதது. பக்கத்துவீட்டுல ஜேஎஸ்ராகவன் இருந்தாரு. உங்களைப் பாத்தேன், பேசினேன்னெல்லாம் சொல்வாரே தவிர ஒன்னும் சுவாரசியம் இல்லை. பெரிய பீத்தல்னு விட்டுடுவேன். வாழ்க்கையே மாறிப்போச்சுன்னு நினைச்சுகிட்டிருக்கும்போது தான் அந்தப் புதையல் கிடைச்சது. மதியம் இரண்டு மணிக்கு போஸ்ட் பாத்துட்டு குட்டிப் பாப்பாவைக் கொஞ்சிண்டே இரண்டாவது மாடி ஏறும்போது அந்தப் பொண்ணு விடுவிடுன்னு இறங்கிண்டிருந்தா. வேலைக்குப் போற அவசரம், ஹேண்ட்பேக், கைல கர்ச்சீப், அதோட அந்தப் புக்– ‘பதவிக்காக’. மனசுக்கு முன்னால மூளை சட்டுனு முழுச்சுண்டுடுத்து. பதவிக்காக ஹீரோ என்னோட நிஜ ஹீரோவாச்சே.

“இந்தப் புடைவை ரொம்ப நல்லா இருக்கு. அதைவிட நீங்க கட்டிகிட்டிருக்கறது”

சடேர்னு நின்னா. “அப்படியா, எனக்கு இது அவ்ளவா பிடிக்காது.” (அப்பாடீ, எனக்கும்தான் பிடிக்கலை. ஒரே டேஸ்ட்.)

அது என்ன புக்? ஓ பதவிக்காகவா. யார் எழுதினது? நான் இன்னும் (பதினஞ்சாவது தடவை) படிக்கலை. படிக்கலாமா?

“ம். லைப்ரரி புக்தான். சுஜாதாவோடது (அதுசரி, எனக்கேவா?)” உடனே கைல கொடுத்தா. ‘பரவாயில்லை, உனக்கும் டேஸ்ட் இருக்கு’ மாதிரி ஒரு பார்வை. இறங்கிப் போயிட்டா.

அடுத்த தடவைலயே, “அதென்ன அப்படி கேவலமான டிசைன்ல ஒரு புடைவை. வெள்ளைப் புடைவைல பெரிய பெரிய கிளி. இதெல்லாம் எப்படி வாங்கணும்னு தோணும்?” அப்படீன்னு நான் பொட்டுனு கேட்க, இரண்டு பேரும் இணைஞ்சு சிரிச்ச சிரிப்புல பிசிறே இல்லை.

கல்யாணம் ஆனாலே எந்தப் பொண்ணும் வீட்டுக்காரர் வேலை, பிரமோஷன், குழந்தைவளர்ப்பு, ஸ்கூல், , சாக்ஸ் எப்படி வாஷ் பண்றது, அசைன்மெண்ட், யூனிஃபார்ம், பெடிக்யூர்னு மட்டும் பேசி, கேள்விகேட்டு, திரும்பத் திரும்ப என்னை வீட்டுக்குள்ளயே இருக்கற உணர்வைத் தர பெண்களுக்குள்ள எனக்கான ஃப்ரெண்ட். எப்ப என்ன கேப்பான்னே தெரியாது. ஆனா அதெல்லாம் மேல சொன்னவைகள்ல வராது. இதே கருத்தையே என்னைப் பத்தி அவளும் சொன்னது தான் அதைவிட ஆச்சரியம்.

சென்னைல எதிர்த்த ஃப்ளாட்தான். ஆனாலும் மெனக்கெட்டு ஆபிஸ்போய் அங்கேருந்து ஃபோன் பண்ணித்தான் பேசுவா.

95ஆ, 96ஆ சரியா நினைவில்லை. பாஜக அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துமேல பாராளுமன்றத்துல பேசுகிட்டிருக்கறது அப்ப லைவா டிவில. பாராளுமன்றம் எல்லாம் இப்படி பார்க்கமுடியும்னு நினைச்சுக்கூட பார்க்காத நாள்கள்ல அது எனக்கு ரொம்ப அதிசயம். ஆட்சி கவிழப் போறது. அத்வானி ஒளஒளாங்காட்டிக்குப் பேசிகிட்டிருக்காரு. ஆனாலும் பரவசமா பாத்துகிட்டிருக்கேன். திடீர்னு ஃபோன்.

“டீவி பாக்கறியா?”

“பின்ன?”

“அத்வானிக்கு பின்னால ரெண்டாவது லைன்ல யாரு? புதுசா இருக்கு”

“ஏதோ மகாஜன். ஸ்கூல் வாத்தியார். பிரம்பு வெச்சிருப்பாரு.”

“ஓ. எப்படி இந்தக் கோஷ்டிகளைத் தெரிஞ்சுவெச்சிருக்க?”

“புதுசு இல்லை. கொஞ்சநாள் முன்னால டெபோனர்ல அண்ணன் பேட்டி வந்திருந்தது”

“டெபோனருக்கும் பாஜக மகாஜன் அண்ணனுக்கும் என்ன சம்பந்தம்?” (மற்ற பெண்களா இருந்திருந்தா, நான் அதைப் படிக்கறேன்னு கூட சொல்லிக்க முடியாது.)

“மரத்தைப் பத்தி எல்லாம் சொல்லி முடிச்சுட்டு, ‘அப்படியாப்பட்ட மரத்துல மாட்டைக் கட்டலாம்’னு சொல்ல முடியாதா? அப்படித்தான். சினிமா எல்லாம் குடும்பத்தோட நடுக் கூடத்துல உட்கார்ந்து நெளியாம பாக்கற மாதிரி இருக்கணும்னு திருவாய் மல‌ர்ந்திருக்காரு.”

“எங்க? டெபோனர்லயா?”

“யா யா”

“அதுசரி!”

:)))))))))

நாங்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த முறையைப் பொருத்த வரைக்கும் எந்தப் புள்ளிலயுமே சேரமுடியாது. இவ்வளவு முரண்களோடயும் ஆனா எப்பவும் யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் பேசக்கூடிய ஒரு ஃப்ரெண்டு கிடைச்சது, எங்க ரெண்டுபேரையும் தனித்தனியா பிரிச்சுகூட வேற யாரும் யோசிக்கமுடியாத அளவுக்கு எங்களுக்கு நடுவுல இருந்த/ இருக்கற/ இருக்கப் போகிற ஒரே கயிறு நீங்கமட்டும்தான்.
“நேத்தி நான் எடுத்து வந்த புக் படிச்சுகிட்டிருக்கியா?”

“ம். 58ம் பக்கம்?”

“என்ன சொல்லியிருக்கான்?[கான் – உங்களைத்தான். பின்ன? :)].

….
….

“என்ன நடை இல்லை? எவ்ளோ அறுவையான மேட்டர் எல்லாம்கூட இவ்ளோ அழகா சொல்ல வருது. சரியான பொறுக்கி.” 🙂 (பொறுக்கி – பொர்க்கி மாதிரி ஒலிக்கணும். சார்-க்கு எப்படி அதோட அர்த்தம் போச்சோ அதுமாதிரி பொறுக்கிக்கு அர்த்தமும் அழகுமே மாறிப் போச்சு.) “இந்தாளு வரலைன்னா நாம ________, ______ களையெல்லாம் படிச்சுகிட்டிருக்கணும். எவ்ளோ கொடுமையா இருந்திருக்கும்?”

:)))))))

அநேகமா எங்க பேச்சு எங்க ஆரம்பிச்சாலும் உங்ககிட்ட வந்து முடிஞ்சுடும் அல்லது அதோட நின்னுடும். அதைவிட பேச ஒன்னும் உலகத்துல ஸ்பெஷலா விஷயமே இல்லாத மாதிரி.

உங்க உடல்நிலை மோசமானதும் இப்ப இணையத்துல இருக்கற யாரையும் விட என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸோ அல்லது இவளோ பக்கத்துல இருந்தா எப்படி இருக்கும்னுதான் நினைச்சுகிட்டிருந்தேன். காலைலேருந்தே அழுதுகிட்டிருந்தாலும் இரவு செய்திகேட்டதும், ‘இந்த தேசிகனுக்கு ஏதாவது உளறிகிட்டே இருக்கணும். அப்படி எல்லாம் எதுவும் நடக்கவே முடியாது. ஏதாவது மிராகிள் நடக்கும்’னு நம்பினேன். முதல் SMS இந்த ப்ரெண்ட்கிட்டேயிருந்து– “i could hear you weeping dear. enough of it please. on duty. ‘ll talk to you after 12 midnight”

ஆனா நினைச்ச மாதிரி அது ஆறுதலா இல்லை. ஐயய்யோ இது உலகத்துகே இப்ப தெரிஞ்சுபோச்சு. இனிமே எதுவும் மாத்த முடியாது. எல்லாரும் அஞ்சலின்னு பதிவு போடுவாங்களேன்னு பதறிட்டேன். யாரோடயும் பேசப் பிடிக்கலை. முக்கியமா இணையத்துல. பெருசா எதுலயோ தோத்துப் போன மாதிரி. ரூம்ல போய் கதவை சாத்திகிட்டேன். இணைய‌மும் ந‌ண்ப‌ர்க‌ளும் ரொம்ப அந்நியமா தெரிஞ்சாங்க. ஆனா ஆச்சரியமா எங்கப்பா, அம்மா தொலைப்பேசி சொன்ன ஆறுதலும், கோவிந்த் தனக்கு ஃபீவர்னு சொல்லி லீவ் எடுத்து கவனிச்சுகிட்டதும் நான் கொஞ்சம்கூட எதிர்பாராத‌ ஆனா தேவையான ஆறுதலா இருந்தது.

“நம்ப முடியுதா பாரு. அந்தாளுக்கு எனக்குத் தெரிஞ்சு 35 வயசு ஆச்சு. அப்றம் வருஷா வருஷம் அதே தானே வயசாச்சு. எப்படி திடீர்னு 73 ஆகும்?”

எங்க ரெண்டுபேரையும் எல்லாரும் ‘two hearts that beat as one’ன்னு சொல்வாங்க. அதை அன்னிக்கிதான் அவ்ளோ நிச்சயமா உணர்ந்தேன். எனக்கும் தெரியலைன்னு கதறமட்டும் தான் முடிஞ்சது. நீங்களாவது சொல்லியிருக்கலாமில்ல. அழுது அழுது கண் வீங்கி, டாக்டர்கிட்ட காண்பிச்சு, ஜுரம் வந்து அடுத்த இரண்டுநாள் நினைவில்லாம போனது ரொம்ப நல்லாதாப் போச்சு. நடப்பு எதுவும் என் கவனத்துக்கு வரலை.
 

தாயோடு
அறுசுவை போகும்;
தந்தையோடு
கல்வி போகும்
குழந்தையோடு
பெற்ற செல்வப் பெருமை போகும்;
செல்வாக்கு
உற்றாரோடு போகும்;
உடன்பிறந்தாரோடு
தோள் வலிமை போகும்;
……
……
எல்லாம் இருக்க,
போடா (பொர்க்கி)
உன்னோடு இளமை போச்!

எனக்கு உங்களைமாதிரி வாக்மேன்ல பாட்டுக் கேட்கறேன்னு காதுக்குள்ள பாட்டை நேரடியா ஊத்தறதெல்லாம் பிடிக்காது. இசை என்னைச் சுத்தியிருக்கற காத்துல கலந்து, குழைஞ்சு அதுவா என் காதுகளையும் தொட்டுப் போகணும். நிறைய பாட்டு உங்களுக்குப் பிடிச்சவைகளை அப்பப்ப நீங்க சொல்லியிருந்தாலும், இப்ப கொஞ்சம் மட்டும்….

* நித்யஸ்ரீ மகாதேவனோட வீச்சான சாரீரம் இந்தப் பாட்டுக்கு அழகைச் சேர்த்திருக்கலாம். ஆனா அந்தச் சாரீரமும் கர்நாடக இசையுமே இறுதில திரும்பச் திரும்பச் சொல்லும் பல்லவியோட சங்கதியில அவ்ளோ மென்மையா கேட்கவேண்டிய கேள்வியோட பாவத்தை நீர்த்துப்போகச் செஞ்சுடுதோன்னு எனக்கு ஒரு எண்ணம்.

* டிஜிடலில் செதுக்கிய குரல்னு உண்மையிலேயே சொல்லலாம். காதல்ல்ல்ல்…. னு பாடும்போது போத்தலிலிருந்து ஒயினை கோப்பைகள்ல நிரப்பற ஒலி மாதிரி….. உங்களாலதான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும்.

* சாத்திரம் மீறிய கீர்த்தனம்… 🙂

* உங்களுக்குப் பிடிச்சதுங்கற காரணத்தைவிட இந்தப் பாட்டுக்கு இன்னொரு பெருமை— நீங்க கடைசி வரை காதலிச்சு கைவிடாம வெச்சிருந்த மிஸ் தமிழ்த்தாய்க்கு இந்தப் பாட்டால அங்கீகாரமும் பெருமையும் கிடைச்சது. இந்தப் படத்தோட இந்திப் பதிப்புக்கு பாடல் எழுத ஆரம்பிச்ச கவிஞர், தமிழ்ல பல்லவியோட முதல் வரி அர்த்தம் மட்டும் கேட்டே, “தமிழ் மொழியில் இவ்வளவு ஆளுமையும் சாத்தியமும் இருக்கா?”ன்னு ஆச்சரியப்பட்டு பாராட்டினாராம். ஆனா இப்ப எனக்குக் கேக்கும்போதெல்லாம் மனம் அதிருது.

இன்னிக்கி பிறந்தநாள்னு உங்களுக்குப் பிடிச்ச இந்தப் பாட்டெல்லாம் காத்துல ஓடவிட்டுகிட்டு நான் ஸ்ரீரங்கத்துலதான் இருப்பேன். எனக்குத் தெரியும் நீங்க இனிமே எப்பவுமே ஸ்ரீரங்கத்துல தான் இருப்பீங்க. உங்களுக்கும் இதெல்லாம் கேக்குமா?

பி.கு: 🙂

1. ‘சுஜாதா என்றதும் உங்களுக்கு நினைவில் வருவது?’ன்னு தமிழோவியத்துக்காக bsubra ஒரு கடிதத்துல கேட்டிருந்தாரு. ஏதாவது ஒன்னு ரெண்டா இருந்தா சொல்லலாம். இருந்தாலும் அந்த ஒத்தை வார்த்தை இந்தப் பதிவுல இருக்குன்னே நினைக்கிறேன்.

2. சாருநிவேதிதா, உங்களை மாதிரி எழுத்தாளரைப் பத்தி எழுதும்போது உங்க எழுத்துலேருந்து எதையெல்லாம் எடுத்துகிட்டோம், கத்துகிட்டோம்னு தான் எழுதணும்னு சொல்றாரு. அப்டியாங் சார்? நீங்களும் எவ்வளவோ முயற்சி செஞ்சு கதைக்கு knot, டிரிக் எல்லாம் சொல்லி என்னை எழுது எழுதுன்னு சொன்னீங்க. நான் எழுதினேனா? நான் என்ன எழுத்தாளரா? இல்லை எல்லாரும் வாத்தியார்னு கூப்பிடற மாதிரி உங்க மாணவியா? ஒரு ரசிகையா எனக்குத் தோன்றதைத்தானே சொல்லமுடியும். நீங்க இருந்து உங்ககிட்ட சாருவைப் போட்டுக் கொடுத்தா, “அதெல்லாம் தேவை இல்லை. நீ பாட்டுக்கு நினைக்கறதை எழுது அவரை அப்றம் அடிச்சுடலாம்!”னு சொல்வீங்க இல்ல, இப்பவும் அப்படி சொல்லுங்க. 🙂

3. என்னவோ எல்லாரும் நினைச்சதை எல்லாம் வார்த்தைல கொண்டுவர முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் நினைவுகள் எல்லாம் வார்த்தைகள்ல வந்துடக் கூடாதேன்னு ரொம்ப வடிகட்டி வடிகட்டி எழுதியிருக்கேன். அதே தலைப்பு.