ஏப்ரல் 2007


எச்சரிக்கை: ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிரச்சினைகளா என்று உருகுபவர்கள், இளகிய மென்மையான மனதுக் காரர்கள் தவிர்க்கவும்.

தேவையான பொருள்கள்:

பணிவு
பொறுமை
அடக்கம்
நேரந்தவறாமை
சுறுசுறுப்பு
சிரித்த முகம்
 

தாளிக்க – பதிபக்தி, பெரியோரிடம் மரியாதை, மிதமிஞ்சிய தாய்மையுணர்வு, கலாசாரத்திலேயே கருத்தும் கவனமும், இன்ன பிற பாவனைகள்…
 

செய்முறை:

வீடு முழுவதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். (அப்படியே ஒருமுறை மொத்தமாக ஃப்ளாட்டை தண்ணீரில் முக்கி எடுப்பது மாதிரி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?)

ஜன்னல்கள், கதவுகள், கர்ட்டன் துணிகள், டிவி, டிவிடி வகையறாக்கள், படுக்கை, விரிப்புகள், தலையணை, குளியலறைக் கண்ணாடி முதல் கழிவறை டியோரண்ட், கால் மிதிக்கும் மிதியடி வரை, சமையலறை ஷெஃபுகள், மிக்ஸி, கிரைண்டர் உபகரணங்கள், சிங்க், முதல் அஞ்சறைப் பெட்டிவரை… நேர்ப்படுத்தி துப்புரவாக வைக்கவும்.

மறைக்க வேண்டிய பொருள்களை மறைப்பதும், தூக்கி ஏறக் கட்டியிருந்த பொருள்களை இறக்கிச் சீராட்டுவதும் முக்கியம். (உதாரணமாக முறையே அடுப்பில் வைத்துவிட்டு இணையப் பக்கம் எட்டிப் பார்த்ததில் கருகிய பாத்திரங்கள், பூச்சூட்டலுக்கு வாங்கிய புடைவை)

நாலரை மணிக்கு அலாரம் அடித்தால் படு நிதானமாகத் திரும்பிப் படுத்து, ‘பேசாம மும்பைக்கு மாத்திண்டிருக்கவே வேண்டாம். ஏன் நான் மட்டும் இவ்ளோ சிக்கிரம் எழுந்து…’ என்பது முதல் ‘தேடித் தேடி பேங்க் காரனுக்குக் கொடுத்த எங்கப்பாவைச் சொல்லணும்’ வரையிலான வகை வகையான பத்து நிமிடப் புலம்பலை நினைத்துக் கூடப் பார்க்காமல், அப்படியே அலாரம் சத்தம் கேட்டதும் வில்லிலிருந்து அம்பு புறப்படுவது போலவோ, விடுபட்ட ஸ்பிரிங் போலவோ எழுந்திருக்கவும்.

32 பற்களைத் தேய்க்க 3 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாலும் முழு உடம்பிற்கும் குளிப்பதை 2 நிமிடங்களில் முடிக்கக் கற்றுக் கொள்ளவும்.

பாலை அடுப்பில் வைத்துவிட்டு காய்வதற்குள், ஃப்ளாட்தான் என்றாலும் இருக்கும் குட்டி வாசலைக் கூட்டித் துடைத்து குறைந்தது ஒரு 8 புள்ளி 8 வரிசை கோலம் போடவும். வழக்கமான ஸ்டார், மாவிலைக் கோல ஜல்லிகளுக்கு விலக்கு.

காஃபி போட்டு, அந்தக் களைப்பைப் போக்க நிதானமாக பால்கனியில் தரிசனம் தந்துகொண்டு உறிஞ்சுவது, ஆறரைக்கு கோவிந்த் கிளம்புவதற்குள் ஆறே காலுக்கே காலில் ஷூவை மாட்டிக் கொண்டு, “வாக்கிங் போறேன், கிளம்பும்போது லைட் ஃபேன் எல்லாம் ஒழுங்கா அணைச்சுட்டுப் போங்க, பை” சொல்லிவிட்டு தெருவில் போகிறவர்களுக்கெல்லாம் ‘ஹாய்’ சொல்லிக்கொண்டு ஒரு மணி நேரம் நகர்வலம் வருவது, நாமும் போஸ்டர் பதிவுக் கலாசாரத்தைத் துவங்கலாமா என்று யோசிப்பது, பார்க்கில் பயிற்சி செய்வோரில் தம்மின் மெலியாரைப் பார்த்து ‘ஹூம்!’ என்று பெருமூச்சு விட்டு ஏங்குவது, பெரியோரைப் பார்த்து “அம்மாடீ, நாம பரவாயில்லை, எந்தக் கடை கோதுமையோ!” என்று இறுமாப்பு கொள்வது அனைத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்.

“ஹய்யய்யோ… என் உசுருக்குள்ள தீயைவெச்சான் அய்யய்யோ.. என் மனசுக்குள்ள நோயைத் தெச்சான் அய்யய்யோ” க்களை இப்பொழுதைக்கு மனதினால் நினைக்காவிட்டாலும் மறந்தும் தன்னிச்சையாய் வாயினால் வழக்கம்போல் 50 டெசிபலில் பாடிவிடாமல் இருக்க வேண்டும். (ஏற்கனவே ஒருமுறை இதற்கான விலையைக் கொடுத்தாகிவிட்டது.) “நான் வாடாஆ மல்லி, நீ போடாஆ அல்லி” என்று பெண் பாடினாலும், உடனே உணர்ச்சிவசப்பட்டு, “அது ‘அல்லி’ இல்லைடா செல்லம், ‘அள்ளி’; எங்க, நாக்கை உள்ள மடிச்சு சொல்லு!” என்று கனகாரியமாய் இப்போது பெண்ணுக்கு தமிழறிவை ஏற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஆனாலும் பாடிய வாயும் ஆடிய காலும் அடங்குமா தெரியவில்லை. ரொம்ப அடக்க முடியவில்லை என்றால் எதற்கும் “அதரம் மதுரம்.. வதனம் மதுரம்.. நயனம் மதுரம்…” என்று மதுராஷ்டக வகையறாக்களை  திரும்பத் திரும்ப மனனம் செய்தால் அகிலம் மதுரமாக சாத்தியம் இருக்கிறது. 😉

நடுமுதுகிற்கு மேல் பிடரிக்குக் கிழிருந்து மெலிதாக விர்ரென்று ஒரு வலி ஆரம்பிக்கிறதா? அட நம்ப நண்பர் மைக்ரேனார். ஐயோ வேண்டாம், ரம்பையின் காதலில் அஞ்சலிதேவி புல்லாங்குழலிசை கேட்டுப் பாடுவது போல் “அழைக்காதே.. நினைக்காதே” பாடித் தடுக்கப் பார்க்கவும். சொன்னால் கேட்பானா தெரியவில்லையே. 😦

பொதுவில் வந்து “என்னங்க..” என்று அழைக்கும்போது நம் குரம் நமக்கே கொஞ்சம் கேவலமான toneல் பிசிறுகிற மாதிரி இருக்கலாம். ஆனால் அதைக் கேட்டும் கண்டுகொள்ளாத மாதிரி இருந்துவிட்டு சாவகாசமாக, “என்னையா கூப்ட?’ என்று முழிக்கும் கணவனை முதல் இரண்டு முறை மட்டுமே மன்னிக்கலாம். மூன்றாவது முறையாக அந்தச் சம்பவம் நடந்தால் அது நடிப்பு அல்லது கொழுப்பு. “Why all these..? Feel free.. ” என்று வழக்கம்போல் சொன்னாலும் ஏற்கவேண்டாம்.

கணவரையாவது ஒரு முறைப்பில் சமாளிக்கலாம். ஆனால் பெண் கேட்கப் போகும்,

“ஏன் இப்பல்லாம் கம்ப்யூட்டர் எனக்கே கொடுத்திட்ட? மரத்தடி தமிழ்மணம் எல்லாம் மூடிட்டாங்களா, பாஸ்வேர்ட் மறந்திட்டயா?”
 
“ஏன் இப்பல்லாம் என்னைத் திட்டவே மாட்டேங்கற? நான் சமத்தா இருக்கேனா?”

“ஏன் இப்பல்லாம் சிடில பாட்டே போடமாட்டேங்கற? வீணையை வீணையை எடுத்து வெச்சு வாசிச்சுப் பாக்கற?”

“அப்பாவோட ஏன் சத்தமா பேச மாட்டேங்கற?” அல்லது “அப்பாகிட்ட ஏன் எப்பவும் ரகசியம் பேசிண்டே இருக்க?”

“ஏன் எப்பவும் ஏதாவது வேலை செஞ்சுண்ட்டே இருக்க?”

“ஏன் எல்லாத்தையும் துடைச்சு துடைச்சு வெக்கற?”

“ஏன் அப்பா செய்ற வேலையை எல்லாம் நீயே நீயே செய்யற?”

“ஏன் மத்யானம் என்னோட தூங்க மாட்டேங்கற?”

“அப்பாவை ஏன் சர்கேஸ்டிக்கா கூப்பிடற?” (மரியாதையா கூப்பிட்டா, அது சர்கேஸ்டிக்னு நினைக்கற அளவுக்கு கலாசாரம் சீரழிஞ்சிருக்கா வீட்டுல?))

“ஏம்மா தெனக்கும் தெனக்கும் வெளில கிளம்பும்போது இப்பல்லாம் அம்மா மாதிரி அழகா இருக்க?” (அட, அதில் பயப்பட எதுவுமில்லை. புடைவை கட்டும்பொழுதெல்லாம் பெண் பல வருடங்களாகச் சொல்வதுதான். அம்மா என்பவள் புடைவை, தலையில் துண்டு கட்டிக் கொண்டு இருக்கவேண்டும் என்பது இங்கேதான் குழந்தைகளுக்கு கர்ப்பத்திலேயே அழுத்தமாக போதிக்கப் படுகிறது. த்ரிஷாவே அம்மாவாக நடித்தாலும் புடைவைதான்.)

……
……

இடையிடையே ஃபோனில் அம்மா அடக்கமாக(!) இருக்கச் சொல்லி அட்வைஸ், அப்பாவின் நலன் விசாரிப்பு, அண்ணா மன்னியின் அன்பைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் இந்தத் தம்பி என்ற பெயரில் இருக்கும் வானரம், “என்ன லக்ஸ், சிந்தால்லேருந்து ஹமாம் லைப்பாய் வரைக்கும் ஒரே சோப்பு வாசனை இதுவரைக்கும் வருது? அந்தப் பக்கம் பயங்கரமா சோப்புப் போடறியா, திருந்துங்கடீ” என்று பதில் சொல்லமுடியாத கேள்விகளாகக் கேட்டுக் கொண்டு அந்தப் பக்கம் சிரித்துக் கொண்டே இருப்பதையும், “பதில் பேசு, என்ன பேசமாட்டேங்கற? ஃபோனை அங்க குடு, நானே கேட்டுக்கறேன்’ என்று சீண்டுவதையும் எல்லாவற்றிற்கும் ‘ஹி…. ஹி’ என்று மட்டும் வழிந்துகொண்டு ‘சரி வெச்சுடவா, வேலை இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே 20 நிமிடம் கேட்க வேண்டியிருப்பதைத் தான் பொறுக்க முடிவதில்லை. இந்தத் தடவை எப்படியும் இதை திடமாகக் கடக்க வேண்டும்.

இன்னும் சில சின்னச் சின்ன dos and donts…

சாப்பாட்டு மேசையாக டைனிங் டேபிளையே உபயோகித்து கம்ப்யூட்டர் டேபிளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

உடன் உட்கார்ந்து டி.வி சீரியல்களை ஆர்வத்தோடு பார்ப்பதுபோல் நடிக்க முடிந்தால் நல்லது. சீரியலில் வரும் பெண்களுக்கான சிக்கல்களுக்காக நம் முகத்தையும் சிந்தனையையும் கூட சீரியஸாக வைத்துக் கொண்டு கவலைப்பட முடிந்தால் மேலும் நல்லது.

வெயில் காலமாக இருப்பதால் தலையை விரித்துக் கொண்டே இருப்பானேன்? நன்றாக இழுத்து வாரி எப்பொழுதும் ஒரு band போட்டுக் கொள்ளலாம்.

குழந்தையை எந்தக் காரணம் கொண்டும் கடிந்துகொள்ளாமல் சிரித்துக் கொண்டே அதைச் சமாளிக்கவும். கேட்டதை எல்லாம் ஒரு தாய்க்கே(?!) உரிய பொறுமையுடன் செய்து தரவும். மற்ற குழந்தைகளையும் அப்படியே செல்லமாக வைத்துக் கொள்ளவும். ஆனால் மற்ற குழந்தைகளிடம் அளவை மிஞ்சி விட வேண்டாம். அதனால் பெண்னுக்குக் கோபம் வந்து மீண்டும் மேலே இருக்கும் கேள்விகளில் எதையாவது ஒன்றிரண்டை அது பொதுவில் உருவிப் போடலாம். 

நைட்டி என்பது இரவுக்கான உடை மட்டுமே என்பதை இவ்வளவு காலங் கடந்தாவது உணருவது நல்லது. மற்றபடி டைனிங் சேர், சோபா, கம்ப்யூட்டர் ஸ்பீக்கர், கிரைண்டர் என்று அங்கிங்கெனாதபடி இருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் முழு ஓய்வு கொடுத்துவிட்டு துப்பட்டாவை எப்பொழுதும் சொந்தத் தோளிலேயே சுமக்கவும்.

ஞாயிறு என்றால் ஏழு மணிக்கு எழுந்தால் போதுமே என்று கோவிந்த் சொல்வதைக் கேட்டு வழக்கம்போல் ஒன்பது மணி வரை தூங்கிவிடவேண்டாம். அதெல்லாம் பொதுவாக உலகில் ரங்கமணிகளுக்கானது.

இத்தனையையும் இன்னும் எதிர்கொள்ளப்போகும் எதிர்பாராத பலவற்றையும்கூட சமாளிக்க வேண்டும். ஆனால் கஷ்டமோ, வலியோ முகத்தில் தெரியாமல் சமாளிக்க வேண்டும். அப்போதுதான், “இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. என்னோடது எப்பவுமே ஒரு ஆர்கனைஸ்ட் குடும்பம்தான்” மாதிரி சீன் கிடைக்கும். முடியுமா என்று கேட்டால் முடிய வேண்டும். ஏர்போர்டில் handbaggageல 18 கிலோ பொருளை அடைத்து வைத்துவிட்டு சந்தேகம் வராமல் இருக்க 8 கிலோவுக்கே குறைவு மாதிரி அவர்கள் பார்க்கும்போது அலட்சியமாகத் தூக்கி இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம் வைப்பதில்லையா? (உள்ளே நரம்பு எலும்பெல்லாம் தெறிக்கும்!) ஒருமுறை ஒரு 19 கிலோ + 2 கிலோ கிரைண்டரையே(2 கிலோ, கிரைண்டருக்கு கம்பெனி பாக்கிங் பத்தாது என்று எக்ஸ்ட்ராவாக அண்டக் கொடுத்திருந்த ஜீன்ஸ், டவல் வகையறா) அப்படி எடுத்துக் கொண்டு போன நம் திறமையை இப்போது நினைத்துப் பார்க்கவும்.

Hand baggage போதாது என்று கர்ச்சீப், பர்ஸ் வைக்கிற சின்ன கைப்பையிலேயே 5 கிலோவை வழக்கமாக ஏற்றுவதையும் நினைவுப்படுத்திக் கொள்ளவும். ஆனால் கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். போனமுறை பெண்ணின் கையிலும் ஒரு கைப்பையைக் கொடுத்து பேருக்கு ஒரு 20 பக்க டிராயிங் நோட் வைத்ததையே அந்தக் குழந்தை தூக்க முடியாமல் ஏர்போர்ட் பொது இடத்தில் அழுத வரலாறுகளை (அதோட ஒரு ஓரமா ‘கொற்றவை’, ‘ஆதவன் கதைகள்’ ரெண்ரே ரெண்டு புக் மட்டும் என்னோடது வெச்சிருந்தேன். அது ஒரு பெரிய வெயிட்டாப்பா?…) இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள். 

எப்பொழுதும் நாம் விச்ராந்தியாக இருப்பதைப் பார்த்து பொறாமைப் படும் அக்கம்பக்கத்தவர்கள் எல்லோரும், இப்போது நம்மை பால்கனியில் பார்க்கும் ஓரிரு நொடிகளில் “என்ன ரொம்ப பிசி போலிருக்கு?!” என்று கேட்கும் தொனியில் குரூர சந்தோஷமும், நக்கலும் இருப்பதாகத் தெரியலாம். தெரியலாம் என்ன தெரியலாம், நிச்சயம் இருக்கும். ஆனால் இந்தச் சமயத்தில் அக்கம்பக்கத்தினருடனான நல்லுறவு மிக முக்கியம். அதனால் அதையெல்லாம் இப்பொழுதைக்கு கண்டுகொள்ளாமல் பதிலுக்கு ஒரு ஸ்மைலியை மட்டும் போட்டு வைக்கவும். நாம் இணையத்தில் போடாத வெற்று ஸ்மைலியா?…

===

“இரு.. நிறுத்து… என்ன இணையம் வரைக்கும் வந்துட்ட? ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில எங்க இணையத்தையுமா? இந்த செய்முறை வேற முடியவே மாட்டேங்குது.. என்ன நடக்குது இங்க?”

“நான் இனிமே எப்படி இருக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்; புலம்பிக்கறேன். வலைப்பதிவு ஆரம்பிச்சதிலேருந்து எனக்குள்ளயே பேசிகிட்டாலும் எல்லாம் ரெசிபி ஃபார்மட்ல தான் சொல்ல வருது..”

“அது போகட்டும், எல்லா பதிவர்களுக்கும் இருக்குற கிறுக்குதான். ஆனா எதுக்கு இவ்ளோ அமக்களம்? 100 வது பதிவைப் போடப் போறியா?”

“அதெல்லாம் இப்ப இல்லை. 99 வரைக்கும்தான். அதுக்கப்புறம் வழக்கப்படி கொஞ்ச நாள் கட்டையா போட வேண்டியதுதான். நான் மட்டும் விதிவிலக்கா?”

“அடடா என்னாச்சு?”

“தங்கை தம்பிகள் அவங்க குடும்பம், குழந்தைகள், அம்மா அப்பா எல்லாரும் லீவுக்கு வராங்களே..”

“வாவ்! நல்ல விஷயம் தானே. அதுலயும் அம்மா வராங்கங்கற ஒரு சந்தோஷமே போதுமே! நாங்களெல்லாம் கேட்டதா சொல்லு. பிரமாதமா சமைச்சு அசத்திடுவியா? இங்க வலைப்பதுவுலயும் எல்லாச் சமையலையும் பகிர்ந்துப்ப இல்லை? ”

“நீங்க வேற, வர்றது கோவிந்தோட அம்மா! நானே டென்ஷன்ல இருக்கேன், எனக்கு உலை வெக்கவே மறந்தாப்ல இருக்கு!! அரிசிக்கு எவ்ளோ தண்ணி வெக்கணும்? ஃபில்டர்ல காப்பிப் பொடியை மேல போடணுமா, கீழ போடணுமா?”

“:))) அதுசரி, கதை அப்படிப் போகுதா? கஷ்டம் தான். அப்ப வேலை எல்லாம் முடிஞ்சுட்டு ராத்திரி 11 மணிக்கு மேலதான் கணினிப் பக்கமே வரமுடியும்னு சொல்லு!”

“ஐய, அவனவனுக்கு இருக்கற அலுப்புல அப்பாடீன்னு படுத்தாப் போதும்னு… “, ஐயய்யோ!!!…. படுக்கும்போது தாலிக்கொடியை அவிழ்த்து தலையணைக்கு அடியில் வைப்பதை மறக்காமல் மறந்துவிட வேண்டும்.

பாதித் தூக்கத்தில்…….
……
…….

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: (for the title)

As I am suffering from the severe above mentioned situation, I request you sir/madam to grant me leave for 12 days only from today (21/04/07 to 02/5/07).

Thanking you,

Yours seasoningly seasoning 😦
Jayashree Govindarajan.

“எனக்குப் பானிப் பூரி சாப்பிடணும்போல இருக்கும்மா!” பரிட்சைக்குப் படிக்கும்போது பாதியில் பெண் வலதுகை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களைச் சேர்த்து வாயில் சாப்பிடுவது போல் வைத்துக் காண்பித்துக் கேட்டபோது  நெகிழ்.. (ஓக்கே ஓக்கே).

அப்போது மணி காலை 11. மதியம் 3 மணிக்கு மேல் தான் இந்தக் கடைகள் எல்லாம் திறக்கும். இதற்கென்று கிளம்பிப் போனால் மேலும் அரை மணி நேரம் விரயம் ஆகும். அன்றைய பொழுதுக்கு வீட்டில் இருந்ததை வைத்து சூடாக இந்த குழிப் பணியாரத்தைச் செய்துகொடுத்து சமாளித்தேன். (பரவாயில்லை, நன்றாகவே இருந்தது!).

யோசித்துப் பார்த்தால், பல காரணங்களால் பானிப் பூரியை வீட்டில் நாமே செய்வதே சரியான வழி என்று தோன்றியது.

“எவ்ளோ நாசூக்கு பேசற. அந்தாளு தண்ணிக்குள்ள கையை விட்டு விட்டு அந்தப் பூரியைத் தர்றாரு, எப்படித்தான் இதெல்லாம் பிடிக்கிறதோ..” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ளும் கணவர்.

மழைக் காலத்தில் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. காய்ச்சாத தண்ணீரில் அந்த ‘பானி’யை நம்பிச் சாப்பிட முடியாது.

கடைக்காரர் கொடுக்கும் வேகத்துக்கு சாப்பிட முடியாமல் குழந்தை திணறும். (ஜல்தி ஜல்தி நஹி கிலானா அங்கிள்!)

[ஆனால் பானிப் பூரி கடைகளில் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒரு செட் என்பது 6 பூரி. அதை நாம் பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருப்போம். எப்போது முடியும் என்று தெரியாமல் திடீரென நீட்டும்போது இல்லை என்று சொல்லக் கூடாது என்பதற்காக அனைத்துக் கடைக்காரகளும் கடைசி பூரியை வைக்கும்போதே இது கடைசி என்று சொல்லிவிடுவார்கள்.:)]

பூரி மற்றும் பானிப் பூரி மசாலாவை கடையில் வாங்கி விட்டேன். மீடா சட்னி எப்பொழுதுமெ எங்களுக்குப் பிடிப்பதில்லை. (அப்படியே உள்ளெ தள்ளும்போது விர்ரென காரம் மட்டும் தலைக்கேற வேண்டும்.) ஆனால் எல்லாவற்றிற்கும் குறிப்புகள் மட்டும் கொடுத்திருக்கிறேன்.

-0-

பூரி

தேவையான பொருள்கள்:

உளுத்த மாவு – 1 1/4 கப்
ரவை – 1 கப்
மைதா – 3/4 கப்
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

puris

செய்முறை:

  • உளுத்த மாவு, ரவை, மைதாவை உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சற்று கனமாக வட்டமாக இட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

* பூரிகள் உப்பி வரவேண்டும். தட்டையாக இருந்தால் செய்ய வராது.

-0-

பானி

தேவையான பொருள்கள்:

புதினா – 1/2 கட்டு
தண்ணீர் – 4 கப்
பச்சை மிளகாய் – 3
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு –  தேவையான அளவு
கருப்பு உப்பு – 1 சிட்டிகை
வறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
Everest பானி பூரி மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்<a

    pudinaeverest pani puri masalapaani

  • புதினாவை இலைகளை ஆய்ந்து, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து மிக நைசாக அரைக்கவும்.
  • 5 கப் தண்ணீர் சேர்த்து டீ வடிகட்டியில் வடிகட்டவும். நைசாக அரைத்திருப்பதால் மிகச் சிறிதளவே சக்கை வரும். ஒட்ட பிழிந்து விடவும்.
  • அத்துடன் புளி நீர்(அல்லது ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்), உப்பு, கருப்பு உப்பு, வறுத்த சீரகப் பொடி, Everest பானிப் பூரி மசாலா, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும். பானி தயார்.

நான் இந்த முறையிலேயே செய்தேன்.
 

(அல்லது, Everest மசாலாப் பொடி இல்லை என்றால்..)

புதினா – 1/2 கட்டு
தண்ணீர் – 3 கப்
மிளகு – 2 டீஸ்பூன் (பொடித்தது)
உப்பு – தேவையான அளவு
கருப்பு உப்பு – 1 சிட்டிகை
ஆம்சூர் பொடி –  1 டீஸ்பூன் (அல்லது மாங்காய்த் துண்டு 1 கப்)
இஞ்சி – 1 துண்டு
வறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

  • மேலே சொல்லியிருக்கும் சாமான்களை ஒன்றாகக் கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • தேவையான போது எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.

-0-

இனிப்புச் சட்னி (விரும்பினால்)

தேவையான பொருள்கள்:  

புளித் தண்ணீர் – 1 கப்
வெல்லப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
தனியாப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மேலே சொல்லியிருக்கும் பொருள்களை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு அரைத்துக் கொள்ளலாம். இது சும்மா ‘நாம் கே வாஸ்தே’ அவசரத்திற்கு செய்கிற சட்னி.

(அல்லது)

தேவையான பொருள்கள்: 

புளி – எலுமிச்சை அளவு
பேரிச்சம் பழம் – 8
வெல்லப் பொடி – 1/2 கப்
உப்பு — 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

கோது, நாரில்லாத புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

20 நிமிடம் ஊறியதும் புளியோடு எல்லாப் பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

டீ வடிகட்டியில் கலவையை வடிகட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் வைத்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து பளபளவென்று சேர்ந்தாற்போல் ஆனதும் ஒரு டப்பாவில் எடுத்துவைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான பொழுது உபயோகிக்கவும். 6 மாதங்கள் வரை கெடாது. ரெகுலராக இவைகளை வீட்டில் செய்பவர்கள் இந்த முறையிலேயே செய்து வைப்பார்கள்.

-0-

உள்ளே வைக்க

  • வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த கடலைப்பருப்பு, குழைய வேக வைத்த (மஞ்சள்)பட்டாணி, தண்ணீரில் நனைத்துப் பிழிந்த பூந்தி இவைகளில் ஏதாவது ஒன்றை 2 கப் எடுத்துக் கொள்ளவும்.

paani puri fillings

  • தேவையான உப்பு, சீரகப் பொடி கலந்து மேலும் கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும். (சில கடைகளில் முளை கட்டிய பயிறு கூட வைக்கிறார்கள். உண்மையில் இது கடையின் தரத்தைப் பொருத்து மாறுபடும்.)

ஆக இப்போது தேவைப்படுவதெல்லாம்- பூரி, உள்ளே வைக்க ஏதாவது ஒரு பொருள், பானி, விரும்பினால் இனிப்புச் சட்னி.

பூரியை மேலாக லேசாகத் தட்டி உடைத்து, உள்ளே பூரணத்தை வைத்து, பானியை ஒரு கரண்டியால் எடுத்து உள்ளே விட்டுக் கொடுத்து….(அந்தத் தொன்னை, சும்மா ஒரு கடை ஃபீல் வருவதற்காக ;)] ஆர்வத்துடன் பெண்ணைப் பார்த்தால்…

“ம்ம்.. குச் தோ கமீ ஹை மா!”

paani puri

ஒரு நொடி தடக்’ என்று இருந்தாலும்,, இது வேலைக்காகாது என்று பூரியில் ஸ்டஃப் செய்து நேராக பூரியை கையை உள்ளே விட்டு பானிக்குள் முக்கி எடுத்துக் கொடுத்ததும்…”யெஸ்.. யெஸ்.. யெஸ்..” கை கட்டை விரல் உயர்த்தி, பெண் குஷியில் குதித்தது.

பின்ன அததுக்குன்னு ஒரு முறை இருக்கில்ல.. 🙂

* மழை மற்றும் குளிர் காலத்தில் இதைவிட சிறந்த வழியில் புதினா, சீரகத்தை உணவில் சேர்க்கமுடியுமா என்று தெரியவில்லை. வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்யமானது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

உள்ளே என்ன வைக்க வேண்டும் என்று அவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது? நான் எல்லாவற்றையுமே தயார் செய்து கொண்டு கலந்து அடித்தேன்.

சாவகாசமாக நானும் பெண்ணும் கீழே உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டே, ‘வேலை’ பார்த்ததில் பூரி பாக்கெட் காலி. அப்பா வந்ததும் பெண் விபரம் சொல்லி, ராத்திரிக்குப் பசிக்கவே இல்லை என்று சாதித்தாள்.

“அப்படி ஒரு பாக்கெட்ல எவ்ளோ பூரிடா இருந்தது?”

“பெரிய பாக்கெட் இருந்தது. ஆனா அம்மா அதை வாங்கலை. சின்னது தான் வாங்கினா, 50 தான் இருந்தது. :(”

அப்பா எங்களைப் பார்த்த பார்வை… (அடப் போய்யா, கொடுத்து வைக்காத, ரசிக்கத் தெரியாதவங்க!)

இது பெரிய சமையல் குறிப்பா என்று யாரும் வரவேண்டாம். ஆனால் எனக்கு இதில் சொல்ல கொஞ்சம் இருக்கிறது.

மிளகாய், தனியா, சீரகம், மிளகுப் பொடிகள் பாக்கெட்டுகளில் வாங்குவதே இப்போது எல்லோருக்கும் வழக்கமாகி விட்டது. ஆனால் உண்மையில் அவைகளின் shelf life அவ்வளவு நாள்கள் வருகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. நிச்சயமாய் எனக்கு ஹாங்காங், மும்பை போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இவை எடுத்து வைத்த 15 நாளில் கெட்டுப் போகின்றன.

masala items

பாட்டி காலங்களில் இவைகளை வெயிலில் காயவைத்து அரைப்பார்கள். இப்போது யாருக்கும் மொட்டை மாடியும் சொந்தம் இல்லை. வெளியில் வைத்து எடுத்து உபயோகிப்பது போல் சுற்றுச் சூழலும் அவ்வளவு சுத்தமாக இல்லை. இதுவே சாம்பார், ரசப் பொடி, கறி மசாலாப் பொடிகளுக்கும் பொருந்தும். அதனால் பொருள்களை நன்கு வாணலியிலேயே வறுத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்துக் கொண்டு, நன்கு வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொண்டால் பல நாள்களுக்குக் கெடுவதில்லை. (வறுத்திருப்பதால் மிக்ஸியும் அதிக சிரமம் இல்லாமல் அரைக்கும்.) மற்றும் இதன் வீர்யமும்(காரம், குணம். கொஞ்சம் உபயோகித்தாலே போதும்.) மணமும் மற்றதை விட ஏன் அதிகமாக இருக்கிறது என்பதும் ஆராயப் பட வேண்டிய விஷயம். ஒருமுறை சொந்தமாக அரைத்து சமைத்துப் பழகியவர்கள் மீண்டும் கடைகளில் வாங்க மாட்டார்கள்.

milagaai manjal thool

ஹாங்காங்கில் சார்ஸ் வந்த போது அதிசயமாக ஒரு இந்தியருக்குக் கூட அது தாக்கவில்லை என்று ஒரு கட்டுரை படித்தேன்.(நாங்கள் தான் வீட்டை விட்டே வெளியே வரவில்லையே.) காரணம் அவர்கள் உணவில் சேர்க்கும் அதிகமான மஞ்சள் தூள் என்று ஆராய்ந்து எழுதியிருந்தது அந்தக் கட்டுரையில். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் அதை உபயோகிப்பதே எனக்கு நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. விரளி மஞ்சளை வாங்கி உடைத்து அரைத்துக் கொள்வதில் கடையில் கிடைப்பதை விட நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், கலப்படமில்லாத நிஜ நிறம் என்பதில் ஒரு திருப்தி.

உண்மையில் இதற்கெல்லாம் அதிக நேரம் எடுக்கிறதா என்றால் இல்லை. எது தீர்ந்திருக்கிறதோ அதை வாணலியில் சாம்பார் அல்லது கறிக்காக அடுப்பில் வைக்கும்போது அதற்கு முன்னால் ஒரு 2 நிமிடம் இதை வறுத்துக் கொள்கிறேன். ஆறியதும் 2 நிமிடத்தில் அரைத்துக் கொள்கிறேன்.

dhania milagu seeragam thool

8 மிளகு உணவில் இருந்தால் எதிரி வீட்டில் கூட கை நனைக்கலாம் என்று சொல்வார்கள். சீரகமும் தனியாவும் கூட உடலுக்கு மிக முக்கியமான உணவுப் பொருள்கள். இவ்வளவு முக்கியப் பொருள்களை, அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களை முடிந்தவரை வீட்டிலேயே அவ்வப்போது அரைத்துக் கொள்ளவும்.

ஒருவேளை இதுகூட முடியாதவர்கள் 😦 பொடிகளை வாங்கி வாணலியில் வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும். கெடாமல் இருக்கும். மணமும் அதிகமாக இருக்கும்.

# ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்று சொல்கிறார். பொதுவில் நகைச்சுவைக்காகவோ அன்றி வீம்புக்காகவோ பலர் எதிர்க்கும்மி அடித்தாலும் உண்மையில் ஆண்களில் பலர் இன்றைய காலகட்டத்தில் சமையலில் ஆர்வமுடன் பங்கேற்கவே செய்கிறார்கள். இணையத்திலும் வெளியிலும் சமையல் குறித்த தகவல்கள் அவர்களுக்கும் அதிக அளவில் தெரிவதும், அம்மாவிற்கு உதவாதவர்கள்கூட மனைவிக்கு உதவ முன்வருவதும் மிகவேகமாக வளர்ந்துவரும் வரவேற்கத் தக்க முன்னேற்றம். எனக்குத் தெரிந்தவரை அவர்களை சமையலுக்குப் பின்னான துப்புரவு வேலைகளே மலைக்க வைக்கின்றன.

# என்னை மிகவும் சஞ்சலப்படுத்துவது உணவுப் பொருளை வீணாக்கும் இந்த மாதிரி செயல்கள் தான். மற்றபடி அது ஐஸ்வர்யாவிற்கா, அம்பாளுக்கா என்பது அவரவர் இஷ்டம் தான். அதிலெல்லாம் பிரச்சினன இல்லை. மேலும் சுட்டிகள்.. சுட்டி 1 | சுட்டி 2.

# அரிசி பழசுதான். ஆனால் நடை புதிது. நிறைய விஷயங்கள் புதிது. சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.  சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3.

# ஓட்ஸ் சாப்பிட்டால் சுகர் அதிகமாகும் என்பது தவறான கருத்தாக இருக்க வேண்டும். ஆனால் அதிகமாக ஜவ்வரிசி, பார்லி, ஓட்ஸ் போன்றவை சிறுநீரைப் பெருக்குவதால் நீரிழிவு நோயாளிகள் உடலில் மிக அதிக நீரிழிவுக்கு ஆளாவார்கள். அவர்கள் உடல் நலத்திற்குக் கேடு. முடிந்தவரை இவைகளை அவர்கள் தவிர்ப்பது நல்லது. 

# உணவு சம்பந்தப்பட்டதில்லை என்றாலும் எனக்குக் கவலையைக் கொடுத்த பதிவு. பொதுவாக யாராவது சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதது அவரவர் தனிப்பட்ட குணம் என்று போய்விடுவேன். ஆசிரியர்களை அப்படி விட முடிவதில்லை. :((

# தனிப்பட்ட முறையில் எனக்கு எந்நாளிலாவது தேவை இருக்கும் என்பதாலும், எனக்குத் தெரிந்த வெளி நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் இந்தச் சுட்டிகளை இங்கே சேமிக்க நினைக்கிறேன். 

0. கணினியும் இசையும்
1. குறுவட்டிலிருந்து MP3 க்கு மாற்றுதல்
2. ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்
3. ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்
…..
…..

# தம் பிரியாணி என்பது கரிப் புகையை பாத்திரத்தில் பிடித்துவிட்டு அதில் சமைப்பது. பிரியாணியில் அந்தப் புகை மணம்(?) இருந்துகொண்டே இருக்கும். பலருக்குப் பிடித்த அந்த மணம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. 😦 ஒரேமுறையோடு மறந்துவிட்டேன். இன்னொரு சுட்டி.

# தவச தானியம் என்றால் என்ன?

# சேவியரின் பதிவுகள் எல்லாமே தவறவிடாமல் படிக்க வேண்டியது. இந்த வாரத்திற்கு.. சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3.

# இருக்கற அவசரத்துல கீரையைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச தகவல்கள் கொஞ்சம், இங்கே….

# கடைசியா கண்ணுக்கு விருந்து.. விருந்து 1 | விருந்து 2

பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

பசலைக் கீரை – இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.

முருங்கைக் கீரை – இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.

வல்லாரைக் கீரை –  அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.

காசினிக் கீரை – அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது.

துளசி இலை – விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சம் சாறோடு அரைத்து வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடங்களில் பூசினால் விஷம் நீங்கி குணம் ஏற்படும்.

அரைக்கீரை – நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும். பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல், தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை.

கொத்தமல்லித் தழை – இரத்த சுத்தி

முளைக் கீரை – நரம்புத் தளர்ச்சி

முள்ளங்கிக் கீரை – சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான்(சரும வியாதி)களை குணமாக்கும்.

தூதுவளைக் கீரை – இளைப்பு மற்றும் கக்குவானுக்கு

புதினாக் கீரை – இரத்த சுத்தி

வெந்தயக் கீரை

venthaya keerai (मेथी, Fenugreek leaves)

உடலுக்குக் குளிர்ச்சி; பசியைத் தூண்டும். தோலின் சொறி, சிரங்கு போகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை – மூல நோய்க்கு. மேலும் போன கண்னைக் கொண்டுவரும் பொன்னாங்கண்ணி என்றே சொலவடை உண்டு.

மணத்தக்காளிக் கீரை – B காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருப்பது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

முடக்கறுத்தான் கீரை (மொடக்கத்தான் கீரை) – பெயரிலேயே இருக்கிறது- முடக்கு வாதத்திற்கு மிகவும் நம்பக்கூடிய இயற்கை உணவு.

அகத்திக் கீரை – உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சி பெறும்.

கறிவேப்பிலை – பசி மிகும்; தலைமுடி நரைக்காது.

கோவை இலை, ஆமணக்கு இலை, கீழாநெல்லிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை – மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து. ஈரலைச் சுத்தி செய்வதுடன் அஜீரணத்தைப் போக்கி பசியைப் பெருக்கும்.

வெயில் காலங்களில் அதிக அளவில் விதவிதமான கீரைகளை சாப்பாட்டில் பயன்படுத்தவும்.

தேவையான பொருள்கள்:

கத்திரிக்காய் – 1/2 கிலோ
புளி – நெல்லிக்காய் அளவு
கறி மசாலாப் பொடி(1) – தேவையான அளவு
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு

தாளிக்க – 2 டேபிள்ஸ்பூன் எண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

kaththirikkaai podi curry

செய்முறை:

  • கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி, லேசான புளித் தண்ணீரில் உப்புப் போட்டு குழையாமல் வேக வைத்து நீரை வடிய வைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வடிய வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, மஞ்சள் தூள், அத்துடன் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு, சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கிளறவும்.
  • கறி மசாலாப் பொடி(1)யைத் தூவிக் கலந்து மேலும் சிறிது நேரம் நன்றாக வதக்கி இறக்கவும்.
  • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* புளித் தண்ணீரில் தனியாக வேகவைத்துக் கொட்டாமல், வாணலியில் தாளித்து வதக்கும்போதே புளித் தண்ணீர் சேர்த்தும் வதக்கலாம். காய்கறியின் சத்து இதனால் வீணாகாமல் தடுக்கலாம்.  

* இதே மாதிரி வாழைக்காய், கொத்தவரங்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற நாட்டுக் காய்களிலும் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாம்பார் சாதம், பிசிபேளா, தயிர் சாதம், எலுமிச்சை, தேங்காய் போன்ற கலந்த சாதங்களுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

இரண்டு தக்காளி, வெங்காயம் இரண்டு பச்சை மிளகாயை கூட நறுக்கிப் போட்டு வதக்கினால் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

கத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தக்காளி, வெங்காயம் பச்சை மிளகாய் கூட நறுக்கிப் போட்டு வதக்கி, உதிர வடித்த சாதத்துடன் கலந்தால் ‘வாங்கிபாத்’ மாதிரி சுவையாக இருக்கும்.

(1)
தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 10 அல்லது 12
மல்லி விதை – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பெருங்காயம் – 1 துண்டு

curry podi

செய்முறை:

  • மேலே சொல்லியிருப்பவற்றை தனித் தனியாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் மெல்லிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை கத்திரிக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய் மாதிரி நாட்டுக் காய்களுக்கு இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.

 -0-

(2)
தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 15
மல்லி விதை – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு

செய்முறை:

  • மேலே சொல்லியிருக்கும் சாமான்களை வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியை எல்லாக் காய்கறிகளுக்கும் இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.

-0- 

(3)
தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 10
மல்லி விதை – 200 கிராம்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
லவங்கப் பட்டை – 1 (பெரியது)
கசகசா – 2 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
வால் மிளகு – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 4
விரளி மஞ்சள் – 3

செய்முறை:

  • இவைகளை தனித் தனியாக வாணலியில் வறுத்துக் கொண்டோ, நல்ல வெயிலாக இருந்தால் காய வைத்தோ எடுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளலாம்.

காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு மற்ற சாமான்களை மட்டும் அரைத்துக் கொண்டு, காரத்தை அன்றாடம் தனியாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறையில் பொடியை ருசிக்கேற்றவாறு அவரவர் கூட அல்லது குறைய, போட்டுக் கொண்டு, தேவையான அளவு காரத்தை மட்டும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இந்த மசாலா அதிகம் வேண்டாதவர்கள், காரத்திற்காக மட்டும் இதை அதிகம் சேர்க்கத் தேவை இல்லை. அல்லது அதிகம் மசாலா தேவை இருப்பவர்கள், காரம் அதிகமாகிக் கஷ்டப்பட வேண்டாம்.

சுண்டைக்காய் வற்றல்: எலந்தைப் பழத்தைவிட சிறியதாக இருக்கும். இதை வாங்கி நுனியைக் கல்லால் தட்டினால் வாய் பிளந்துகொள்ளும். அப்படியே வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். கடைகளில் வாங்குவதில் உள்ளே இருக்கும் விதைகள் எல்லாம் நீங்கி சரியாக இருக்காது, வீட்டிலேயே செய்வதுதான் நன்றாக இருக்கும் என்பது வீட்டுப் பெரியவர்களின் மாற்ற முடியாத கருத்து.

மணத்தக்காளி வத்தல்: வாங்கி எதுவும் செய்யாமல் அப்படியே காய வைக்கலாம்.

மினுக்கு வத்தல் (aka மிதுக்கு வத்தல்): குட்டிக் குட்டியாய் கோவக்காய்(அல்லது கோவைக்காய்?) மாதிரி நீளமாக இருக்கலாம். ராமநாதபுரம் பகுதிகளில் கிடைக்கும் இதை ‘தும்டிக் காய்’ என்று சொல்வார்கள். இரண்டு மூன்றாக நறுக்கிக் காய வைக்கலாம்.

minukku vatral

 இந்தப் படம் சொக்காயிக்கு… 

காய்கறி வற்றல்:

வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் போன்ற நாட்டுக் காய்களை லேசான புளித் தண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் போட்டு அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை ஒட்ட வடித்துவிட்டு, வெயிலில் காயவைத்து, பொரித்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மோர் வற்றல்:

  • சுண்டைக்காய், மணத்தக்காளி, தும்டிக்காய் மட்டுமல்ல, மிளகாய்(இது சின்னச் சின்னதாக பிஞ்சாக இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும். காரமில்காத பெரிய மிளகாயும் நன்றாக இருக்கும்.) போன்றவற்றில் தேவையானதை எடுத்துக் கொள்ளவும்.
  • சுண்டைக்காயாக இருந்தால், வாயை உடைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயாக இருந்தால் உடல் பகுதியில் கொஞ்சம் லேசாகக் கீறிக் கொள்ள வேண்டும். மினுக்கு வத்தலை நறுக்கியும் மணத்தக்காளியை அப்படியேயும் போடலாம்.
  • தயிரைக் கடைந்து கெட்டியான மோராக்கி, உப்புப் போட்டு அதில் இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து பகலில் காயை மட்டும் எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
  • பின்னர் மீண்டும் மாலையில் அதே தயிரில் போட்டுவிட இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.
  • இப்படி முழுத்தயிரும் காய்கிற வரை செய்து, நன்றாகக் காயவைத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • தயிரில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் வற்றல் கருக்காமல் பார்க்க அழகாக இருக்கும்.

தஞ்சாவூர் குடமிளகாய் வற்றல்:

தேவையான பொருள்கள்: 

குடமிளகாய் – 1 கிலோ
தயிர் – 1 லிட்டர் (அதிகம் புளிப்பில்லாதது)
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
உப்பு – 250 கிராம்.

செய்முறை:

  • தஞ்சாவூர் குடமிளகாய் செம குட்டியாக குண்டாக இருக்கும். கொஞ்சம் பெரிய அளவில் கிடைத்தாலும் பரவாயில்லை, வாங்கிக் கொள்ளவும். 
  • முதலில் உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தையும் தண்ணீரில் ஊறவைத்து பெருங்காயம் சேர்த்து நைசாக இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை கொஞ்சம் காம்புப் பகுதியை விட்டு மிச்சத்தை நறுக்கி விடவும். நடுவில் லேசாகக் கீறலாம் அல்லது ஒரு ஊசியால் அங்கங்கே குத்தலாம். உள்ளே இருப்பது வெளியே வந்துவிடக் கூடாது என்பது முக்கியம்.
  • ஒரு பாத்திரத்தில் மிளகாய், அரைத்த விழுது, தயிர், உப்பு, சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி மூடி வைத்து விடவும்.
  • இரண்டு நாள்கள் அப்படியே அவ்வப்போது கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
  • மூன்றாம் நாள் காலையில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் மிளகாய் கலவையைத் தனியாக எடுத்து வெயிலில் உலர்த்தவும். அருகிலேயே அந்தத் தயிர் பாத்திரத்தையும் வைக்கவும்.
  • மாலையில் திரும்ப மிளகாயை தயிரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.
  • இரண்டு மூன்று நாள்களில் இப்படி செய்துவந்தால் மிளகாய் எடுத்துக் கொண்டதுபோக எல்லா நீரும் வற்றி இருக்கும்.
  • மேலும் 2 அல்லது 3 நாள்கள் மிளகாயை உலர்த்தி, ஈரப்பதம் இல்லாமல் முற்றிலும் காய்ந்ததும் (கலகல என்று சப்தம் கேட்கும்) ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
  • தேவையான போது வாணலியில் சிறிது எண்ணை வைத்து கருகாமல் பொரித்து எடுத்து உபயோகிக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதா வற்றல் மற்றும் காய்கறி வற்றல்களை வற்றல் குழம்பிற்கு உபயோகிக்கலாம்.

மோர் வற்றல்களை, எண்ணையில் பொன்னிறத்துக்கும் மேலேயே கொஞ்சம் கருக வறுத்தால், தயிர்சாதத்திற்கு மிகப் பொருத்தமான துணை. வெளியூர் பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. மோர் மிளகாயை தாளித்தும் தயிர்சாதத்தில் கலக்கலாம்.

சூடான நெய் சாதத்தில் மோரில் நனைத்துக் காயவைத்த சுண்டைக்காய், மணத்தக்காளி அல்லது மினுக்குவத்தலைப் பொடித்துப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

srirangam11

வாழைக்காய்த் தோல் என்று இல்லை, எந்தக் காய்கறியின் தோலையும் அன்றாடம் சேருவதை காலையில் வாசல் சிமெண்ட் தளத்தை சுத்தம் செய்து, தோல் சமாச்சாரங்களைக் கீழே வைத்து ‘ப்பா.. ப்பா’ என்று கூப்பிட்டு தெருவில் போகும் ஆட்டுக்குட்டிக்கு சாப்பிடக் கொடுத்து, அது சாப்பிடுவதை ரசிப்பதே ஸ்ரீரங்கத்தில் எனக்குப் பிடித்தமான அன்றாட வேலை. (நானும் ஏதோ கொஞ்சம் வேலை செய்வேனாக்கும் அம்மா வீட்டுல!) வாசல் சிமெண்ட் தளமோ, ஆட்டுக்குட்டியோ என்னை மாதிரி சமத்துப் பொண்ணோ வீட்டில் இல்லாதவர்கள் தோலை வீணாக்காமல் இந்த மாதிரி கறி செய்யலாம்.

சாதாரண வாழைக்காயை விட நேந்திரங்காய்த் தோல் தான் இந்த கறிக்கு சுவையாக இருக்கும். (பொதுவாகவே பஜ்ஜிக்கு சீவுவது தவிர நாம் அன்றாடம் செய்யும் வாழைக்காய் கறிக்கு, நறுக்கும்போது அதிகம் தோலை நீக்கவேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் பச்சைக் கலர் இருக்குமாறு அடித்தோலோடேயே கறி செய்யலாம். தோல், வாழைக்காயின் சுவையான பகுதி. 🙂

வாழைத்தோலின் மேல்பகுதியையும் லேசாக கத்தியை சாய்த்துப் பிடித்து உரித்து விடவும். மிக மென்மையாக அந்தத் தோல்பகுதி சுலபமாக வந்துவிடும்

தேவையான பொருள்கள்:

வாழைக்காய்த் தோல்
புளி – நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

  • தோலை கொஞ்சம் காய்ப் பகுதியுடனேயே உரித்துக் கொண்டு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை கரைத்துக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பு இலையிலையாக அல்லது அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய காயை(?)ப் போட்டு, புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். சட்டெனெ வெந்துவிடும். (கொஞ்சம் துவர்ப்பாக இருக்குமென்பதால் புளி கட்டாயம் தேவை.)
  • காரம் அதிகம் விரும்புபவர்கள், 1/2 டீஸ்பூன் கறிப் பொடியும் தூவிக் கொள்ளலாம்.
  • அரை வேக்காடாக துவரம்பருப்பை வேகவைத்து, நீரை ஒட்டப் பிழிந்து, பருப்பை இத்துடன் சேர்த்துக் கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  • தேங்காய், கொத்தமல்லைத் தழை தூவி உபயோகிக்கவும்.

* நேந்திரங்காய்த் தோலை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீரில் அரைவேக்காடு வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல் பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொண்டு, அதையும் காயுடன் சேர்த்து, மேலும் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும். ‘துவரன்’ என்று பெயர்.

* தோலை நன்றாக வதக்கிக் கொண்டு, அத்துடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் கடுகு தாளித்தால் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

வற்றல் குழம்பு செய்வதில் இது இன்னொரு முறை. இதை  மணத்தக்காளி வற்றல் குழம்புக்கான குறிப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதே முறையில் சுண்டைக்காய் வற்றல், மினுக்கு வத்தல், வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் வற்றல்களிலும் செய்யலாம். நான் இரண்டு மூன்றை சேர்த்துப் போட்டும் செய்வேன்.

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
தேங்காய் – அரை மூடி
நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் *
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
வெல்லம் – சிறிது (விரும்பினால்)

தாளிக்க:

நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6,7
துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுந்து அப்பளம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

vaththa kuzambu

 

செய்முறை:

  • புளியை 2,3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், சீரகத்தைத் தாளித்துக் கொள்ளவும்.
  • இதில் ஒரு உளுந்து அப்பளத்தை 4,5 ஆக உடைத்துப் போட்டு, பொரிந்ததும் மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • மற்றொரு வாணலியில் மீதி இருக்கும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையில் மணத்தக்காளி வற்றலைச் சிவக்க வறுத்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதக்கிய கலவையை கொதிக்கத் தொடங்கியிருக்கும் புளித் தண்ணீரில் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

* மணத்தக்காளிக் குழம்பை இரவு வேளைகளில் சாப்பிடுவதால், அதீத வேலையால் ஏற்படும் உடல் வலியைப் போக்கி, களைப்பை விரட்டி, நல்ல தூக்கத்தையும், மறுநாள் உற்சாகத்தையும் கொடுக்கும்.

* மணத்தக்காளி பெண்களுக்கு வரப்பிரசாதம்.  கருப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது. தாய்ப்பால் ஊற மணத்தக்காளி அருமருந்து. பிரசவ காலங்களில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாகவே வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு வற்றல் குழம்பு செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இங்கே…

வற்றல் குழம்பு செய்வதில் இது ஒரு முறை. இதை சுண்டைக்காய் வற்றல் குழம்புக்கான குறிப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதே முறையில் மணத்தக்காளி வற்றல், மினுக்கு வத்தல், வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் வற்றல்களிலும் செய்யலாம். நான் இரண்டு மூன்றை சேர்த்துப் போட்டும் செய்வேன்.

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
சுண்டைக்காய் வற்றல் – 20 *
வற்றல் குழம்புப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
வெல்லம் – சிறிது (விரும்பினால்)

தாளிக்க –  கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

sundaikkaai vaththal

செய்முறை:

  • புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முதலில் வற்றலை வறுத்துக் கொள்ளவும்.
  • அதன்மேலே கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும்.
  • மேலே வற்றல் குழம்புப் பொடியைப் போட்டு வறுத்துக் கொண்டு, புளிநீரைச் சேர்க்கவும். (வாசனை தூக்குகிறதா?)
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியாக இறுகி, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு இறக்கவும். 
  • விரும்பினால் இறக்கும் முன் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். நோ கொத்தமல்லித் தழை.

*  வற்றல் குழம்புப் பொடி இல்லாவிடில் அன்றாடம் உபயோகிக்கும் சாம்பார்ப் பொடியையே உபயோகிக்கலாம். 

* சுண்டைக்காயில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது. வறட்டு இருமல், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுப் பூச்சியினால் ஏற்படும் வலி, சிறுநீர்ப் பிரச்சினை என பலவற்றிற்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. காரணம் தெரியாமல் திடீரென வயிற்றுவலி வந்தால், சுண்டைக்காயை எண்ணையில் வறுத்து, நெய், உப்புடன் சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டுப் பார்க்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதத்தோடு பிசைந்து சாப்பிட, குழம்பு கெட்டியாக புளிக்காய்ச்சல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சாதம் கலக்க மேலும் ஒருபங்கு தண்ணீர் அதிகமாக வைத்து நீர்க்கச் செய்வதே சரி.. சூடான சாதத்தில் நெய், நல்லெண்ணை, வற்றல் குழம்பைச் சேர்த்து வேகமாகக் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். கலப்பதற்கு முன் முடிந்தால் மிளகாய், சுண்டைக்காய் வற்றலை தனியாக எடுத்துவைத்துக் கொண்டு கலக்கவும். கலந்தபின் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாயோ, வற்றலோ சாதத்தில் சிதைந்தால் சுவை கெடும்.

பயத்தம் பருப்பு சேர்த்த கூட்டு அல்லது காரம் அதிகம் இல்லாத கூட்டு வகைகள், சுட்ட அப்பளம், பொரித்த வடாம் வகைகள். கீரை மசியல் அல்லது கீரைக் கூட்டு எல்லாவற்றையும் மிஞ்சும்.

தேவையான பொருள்கள்: 

காய்ந்த மிளகாய் – 1 கப்
தனியா – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 3 டேபிள்ஸ்பூன்
காயம் – சிறு துண்டு

vaththak kuzambu podi

செய்முறை:

  • மேலே சொல்லியிருக்கும் எல்லாச் சாமான்களையும் வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் மிக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை கெடாது.

மீண்டும் எண்ணை, மசாலா அதிகம் இல்லாத ஒரு கறிவகை.

தேவையான பொருள்கள்:

முற்றிய வாழைக்காய் – 4
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் (விரும்பினால்)

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazaikkaai podimaas 1

 

செய்முறை:

  • வாழைக்காய்களை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில், ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் வாழைக்காய்களைப் போட்டு மூடி, நிதானமான சூட்டில், 5 நிமிடம் வேக வைக்கவும். அரைவேக்காடுக்கும் கீழே மட்டுமே வெந்து தோல் மட்டுமே உரிக்கவரும்.
  • நீரை வடித்து ஆறவைத்து தோலை உரித்துக் கொள்ளவும்.
  • கேரட் துருவியில்(பெரிய அளவு) வாழைக்காய்களைத் துருவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து, உப்பு மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.
  • துருவி வைத்துள்ள வாழைக்காயைச் சேர்த்து நிதானமான சூட்டில் மேலும் 5 லிருந்து 10 நிமிடங்கள் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.
  • விரும்பினால் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம். சுவையாக இருக்கும்.

vaazaikkaai podimaas 2

* இதுபோன்ற அதிகம் கரண்டியால் பிரட்டிவிடமுடியாத காய்களுக்கு உப்பு, மஞ்சள் தூளை தாளிக்கும் எண்ணையிலேயே காயைப் போடுவதற்கு முன் சேர்த்துவிட்டால், அவை காயில் சுலபமாக, சீராக, சீக்கிரம் பரவி விடும்.

* வாழைக்காய் பொடிமாஸையும் முன்னர் இப்படி உருளைக் கிழங்கு போல் தான் உதிர்த்து செய்துகொண்டிருந்தேன். ஒரு திருமண விருந்தில் சமையல்காரர் இப்படிச் செய்வதைப் பார்த்ததிலிருந்து சுலபமாக இருப்பதால் இதுவே வழக்கமாகி விட்டது.

[திருமணம் காதுகுத்து போன்ற பெரிய விருந்துகளில் அவசியம் உணவு தயாரிக்கும் இடத்திற்கு விஜயம் செய்து கொஞ்ச நேரம் செலவழித்தால் மிகப் பயனுள்ள குறிப்புகள் கிடைக்கும். சமயத்தில், ‘இந்த மைசூர்பாகு சரியா வந்திருக்கான்னு பாருடீ குழந்தே/ பாரும்மா/ பாருங்கோ மாமீ/’ வகை போனஸும். மைசூர்பாகை சுடச் சுட, நாக்கு பொரியப் பொரிய கிளறிக் கொட்டியதும் சாப்பிடவில்லை என்றால் அப்புறம் சாப்பிடவே தேவை இல்லை. நானெல்லாம் ‘No, Thanks’ சொல்லிவிடுவேன். கிளம்பும்போது அவசியம் சமையல் காரர்களையும், நாதஸ்வரக் காரர்களையும் இரண்டு வார்த்தை பாராட்டிவிட்டு வரவும். இவர்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் விசேஷங்களில் எதுவுமே இல்லை.]

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அட நல்லா இருக்கும்; அப்படியே சாப்பிடலாம். 

குழம்பு, ரசம், தயிர் என்று எல்லாச் சாதத்தோடும் சேரும்.

கொஞ்சம் எண்ணை அதிகம் விட்டு, அதிக நேரம் அடுப்பில் வைத்து முறுகலாகச் செய்தால் சாம்பார் சாதம், தேங்காய், எலுமிச்சை போன்ற கலந்த சாதங்களுக்கும் நன்றாக இருக்கும். அப்பளம் வடாம் என்று பொரிப்பதற்குப் பதில் இது பரவாயில்லை.

உருளைக் கிழங்கை ஓரளவாவது தைரியமாகச் சாப்பிட ஏற்ற கறிவகை.

தேவையான பொருள்கள்:

உருளைக் கிழங்கு – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 2
இஞ்சி – சிறு துண்டு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
பச்சைப் பட்டணி – 50 கிராம் (விரும்பினால்)
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் (விரும்பினால்)

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

urulaik kizangu podimaas

செய்முறை:

  • குக்கரில் உருளைக் கிழங்கை நன்றாக வேகவைத்து தோலை உரித்து கையால் உதிர்த்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, தாளிக்கவும்.
  • பொடியாக அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள் போட்டு, அத்துடன் உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கைச் சேர்த்து நிதானமான சூட்டில் மேலும் 5 லிருந்து 10 நிமிடங்கள் கிளறவும்.
  • எலுமிச்சை சாறு பிழிந்து, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.

* இதுபோன்ற அதிகம் கரண்டியால் பிரட்டிவிடமுடியாத காய்களுக்கு உப்பு, மஞ்சள் தூளை தாளிக்கும் எண்ணையிலேயே காயைப் போடுவதற்கு முன் சேர்த்துவிட்டால், அவை காயில் சுலபமாக, சீராக, சீக்கிரம் பரவி விடும்.

* ஒரு பச்சை மிளகாயைக் குறைத்துக்கொண்டு, வெங்காயம் இல்லாமலும் இதைச் செய்யலாம்.

* எலுமிச்சைச் சாறு சேர்க்காமலே, உருளைக் கிழங்குப் பொடிமாஸ் சுவையாக இருக்கும் என்றாலும், சேர்ப்பதால் நாம் செய்திருக்கும் காயில் உப்பு அல்லது காரத்தில் ஏதாவது பிழை இருந்தால் அது தானாகவே இதனால் பெருமளவில் களையப் பட்டு விடும். நல்ல மணத்தைக் கொடுக்கும்.

* இதே போல் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கிலும் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

குழம்பு, ரசம், தயிர் என்று எல்லா சாதத்தோடும் சேரும்.

சப்பாத்திக்கும் ஓக்கே.

இந்தப் பொடிமாஸை இப்போதே சொல்லியிருப்பதன் காரணம், இது பின்னர் போண்டாவிலிருந்து லாலூவின் சமோசா, வடை பாவ் என்று பலவகை சாட்’களுக்கு உபயோகப் படப் போகிறது.

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை

ulundhu vadai

செய்முறை:

  • உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம்(மட்டும்) ஊறவைத்துக் கொள்ளவும்.
  • கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்தை பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து, அத்துடன் தேவையான உப்பைக் கலந்துகொள்ளவும்.
  • மாவில் மற்ற எல்லாப் பொருள்களும் நன்றாக சீராகக் கலந்தபின் கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி லேசாக அழுத்தாமல் விரல்களால் கலந்துகொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு, மாவை வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் நன்கு சிவப்பாகும் வரை பொரித்து எடுக்கவும். (நன்கு சிவக்கப் பொரித்தெடுத்தால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.)

* உளுந்தை அதிகம் ஊறவிடக் கூடாது. அரை மணிக்குமேல் ஒரு மணிநேரமே போதுமானது.

* மாவு கெட்டியாக இருக்கவேண்டியது முக்கியம். அப்பொழுதான் வடைகளாகத் தட்ட முடியும். மேலும் தளர்வாக இருந்தால் அதிக எண்ணை குடிக்கும்.

கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காவிட்டாலும், கையால் தள்ளிவிட்டுக்கொண்டே அப்படி கெட்டியாக அரைப்பது சுலபம். மற்றும் கல்லில் அரைபடுவதால் சுவையாகவும் இருக்கும். மாவு அதிகம் கிடைக்கும்.

மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைப்பது சிரமம். அதனால் பிளேடு உயரம் வரை மட்டுமே உளுந்தைப் போட்டு 3,4 தவணைகளாக அரைத்தால் அதைச் சுலபமாக அரைக்க முடியும். எல்லா மாவையும் அரைத்தபின் உப்பையும் சேர்த்து மொத்தமாக நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

எந்த முறையில் அரைத்தாலும் மொத்தமாக மாவு அரைத்தபின் கடைசியிலேயே உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவை உடனே தட்டாமல், 10லிருந்து 20 நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தண்ணீரைத் தொட்டுக் கொண்டு வடைகளாகத் தட்டுவது சுலபமாக இருக்கும்.

* இத்தனை மெனக்கெடலுக்குப் பிறகும் ஏதாவது காரணத்தால் வடை மாவு நெகிழ்ந்துவிட்டால்….

எக்காரணம் கொண்டும் உளுத்தம் மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கக் கூடாது. இதனால் வடை கல் மாதிரி ஆகிவிட வாய்ப்பு அதிகம்.

சிறிது அவலைக் கலந்து தட்டலாம். அவல் கலப்பது, தட்டச் சுலபமாகவும் வடை மிருதுவாகவும் இருக்க உதவும்.

ரவையைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். ரவை ஊறி, மாவு கெட்டியாவதுடன், சூடு ஆறியபின்னும் கூட இந்த முறையில் வடை கரகரப்பாகவே இருக்கும்.

ஜவ்வரிசி சிறிது சேர்த்து ஊறவைக்கலாம்.

பாயச சேமியா(அளவில் மெலிதாக இருக்கும்) சிறிது சேர்க்கலாம்.

ஒரு பிடி பயத்தம் பருப்பைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பருப்பு நீரை உறிஞ்சுவதுடன், நன்றாகப் பொரிந்து, வடை நன்றாக இருக்கும். பருப்பு வடைகள் அனைத்துக்கும் இதுவே ஆகச் சிறந்த திரிசமன். யாராவது கேட்டால், வடை ingredients-லியே ப.பருப்பு உண்டாக்கும் என்று சொல்லிக் கொள்ளலாம். 🙂

* வடையிலும் ஆங்கங்கே நறுக்கிய பச்சை மிளகாய் இருந்தால் சாப்பிடும்போது இடையிடையே சுரீர் என மிளகாய் அகப்பட்டு, சுவையாக இருக்கும். காரத்திற்கு அஞ்சுபவர்கள் பிஞ்சு மிளகாயாகவாவது சேர்க்கலாம்.

* பச்சை மிளகாய்க்குப் பதில் அரைத்த மாவில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்தும் போடலாம். மாவோடு சேர்த்து மிளகை அரைப்பதோ, மிளகை பொடியாக்கிக் கலப்பதோ சுவையைக் கெடுத்து ஒருவித மருந்து வாசனை வந்துவிடும்.

* வடை வெளியே கரகரப்பாக இருந்தாலும் உள்ளே மிருதுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்காத நாள்களில் கோஸ் அல்லது கேரட்டைத் துருவிக் கலக்கலாம். (எப்பொழுதும்  சொல்வதுதான், தேங்காய் தவிர, எந்தக் காய்கறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்ப்பதாக இருந்தாலும் முதலில் வேண்டிய பொருள்களைச் சேர்த்து கலவையை நன்கு அழுத்தமாக சீராகக் கலந்துகொண்டு, கடைசியில் காய்கறிகளை அழுத்தாமல் விரல்களால் மேலாகக் கலந்துகொள்ள வேண்டும்.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

Ketchup, தேங்காய்ச் சட்னி, சாம்பார்….

rasa vadai

ரசத்தில் ஊறவைத்து சாப்பிடும் ரச வடை மிக மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். இதை ஏனோ எப்பொழுதும் சாப்பாட்டுடனே தான் பரிமாறுகிறார்கள். ரசத்தைக் கொதிக்கவைத்து, அதில் வடைகளை நேரடியாகப் போட்டு, சுடச் சுட சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சாம்பார் வடை, தயிர் வடை எல்லாம் அப்புறம்.

அடுத்த பக்கம் »