கேரள மாநில உணவு. ஆனால் நாகர்கோயில் கன்யாகுமரி பக்க சைவ வேளாளர் அல்லது சைவப் பிள்ளைமார் உணவு என்று இங்கே சொல்கிறார்கள். தெரியவில்லை.
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் – 2
சேனைக் கிழங்கு – 250 கிராம்
நேந்திரங்காய் – 1 (விரும்பினால்)
தேங்காய் – 1
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகு – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணை – தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிது
பச்சரிசி – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- சேனைக் கிழங்கையும் வாழைக்காயையும் தோல்சீவி, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (கை கறையாகி இருக்கும். எண்ணை தடவி, பின் சோப் போட்டுத் தேய்த்தால் கறை போய்விடும்.)
- தேங்காயத் துருவிக் கொள்ளவும்.
- முதலில் சேனையை நன்கு இருமுறை கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் அரை வேக்காடு(மட்டும்) வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.
- புளியைக் நீர்க்க கரைத்து அடுப்பில் வாணலியில் அல்லது அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க ஆரம்பித்ததும், வாழைக்காய், பாதி வேகவைத்த சேனை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும்.
- மிளகை மிக மென்மையாக அரைத்து அத்துடன் சேர்க்கவும். [இப்போது கை அரிக்க ஆரம்பிக்கிறதா? 🙂 சொல்ல மறந்துவிட்டேன். சேனையின் உபயம். கையை சோப்புப் போட்டு கழுவியபின் மீண்டும் கைகளுக்கு தேங்காய் எண்ணை தடவிக் கொண்டு, பின் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கவும்.]
- மிளகின் பச்சை நெடி அடங்கியதும், தேங்காய்த் துருவலில் பாதி, பச்சரிசி சேர்த்து நன்றாக அரைத்து, எரிசேரியில் சேர்க்கவும்.
- மீதிப் பாதி தேங்காய்த் துருவலை 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் நன்கு சிவக்க வறுத்து, சேர்த்துக் கொதிக்கவிட்டு, தளர்வான கூட்டு பதத்தில் இறக்கவும்.
- இறுதியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணணயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பரிமாறவும்.
* வாழை, சேனை, நேந்திரங்காய் மூன்றும் சம அளவில் எடுத்துச் செய்யலாம். அல்லது ஏதாவது இரண்டில் மட்டும் செய்யலாம்.
* சிலர் ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பும் சேர்த்துத் தாளிப்பார்கள்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதம், தயிர் சாதம்.
சப்பாத்தி, இட்லி, தோசை என்றெல்லாம் யாராவது அடுக்கினால் நம்ப வேண்டாம். படு அபத்தமாக இருக்கும். 🙂
செவ்வாய், மார்ச் 4, 2008 at 8:16 பிப
எங்கள் காலனியில் வாழை குலை தள்ள,5 வாழைக்காய்கள் ஓசியாகக் கிடைக்க,என்ன செய்வது என்று யோசித்து,கால் கிலோ சேனை வாங்கி 2 வாழைக்காயுடன் சேர்த்து இன்று காலை உணவுக்கு எரிசேரி செய்து ,எப்போதும் காலை உணவுக்காகச் செய்யப்படும் கூட்டு எதுவாக இருந்தாலும் இரவு அதைச் சுட வைத்துச் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள வைத்துக்கொள்வது வழக்கமாகிப் போக, அது போலவே எரிசேரியையும் (அபத்தமாக இருந்தாலும்)சப்பாத்திக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட,அவ்வளவு அபத்தமாக அது தெரியாமல் போக அதன் விளைவே இந்தப் பின்னூட்டம்! அப்ப்ப்பா!வாக்கியம் முடிந்தது!
செவ்வாய், மார்ச் 11, 2008 at 9:09 பிப
மதுரைசொக்கன், :)) எப்படியோ நல்லா இருந்தா சரி. ஒருவேளை ஓசி வாழைக்காய்ன்றதால ரொம்ப சுவையா இருந்திருக்குமோ. எனக்கெல்லாம் அப்படித்தான். அப்பக்கூட எங்கவீட்டுல இப்படி எல்லாம் டபாய்க்க முடியாது. 😦
வியாழன், திசெம்பர் 20, 2018 at 8:17 பிப
அருமையான விளக்கம். புன்முறுவலூட்டும் மொழிநடை. நன்றி சகோதரி..