நவம்பர் 2007


இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

kaarththigai vadai 1

தேவையான பொருள்கள்: 

முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்

kaarththigai vadai 2

செய்முறை:

  • தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு  வரும் அளவு ஊறவேண்டும்.)
  • கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
  • பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
  • களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
  • அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
  • நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
  • வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிவிட்டு, முழுமையாகச் சத்தம் அடங்கி, மொறுமொறுப்பானதும்,  எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.

* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.

* முழுமையாக தோல்பருப்புதான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கால் அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே தோல் உளுத்தம் பருப்பும், மீதிக்கு தோல் நீக்கிய முழுப் பருப்பும் கூட சேர்த்து, கடைசியில் களையாமல் நீரை மட்டும்  வடித்து, அப்படியே அரைக்கலாம். இது அதிகம் ஊறத் தேவையில்லை. நான்கு மணி நேரத்தில் அரைக்கலாம்.

ஏற்கனவே சொல்லியிருக்கும்  பாகு செலுத்திச் செய்யும் அப்பம் தான் கார்த்திகைக்கும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இதையும் நான் அடிக்கடி செய்வேன்.

paal appam 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
தேங்காய் – 2 பத்தை
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • ரவை, மைதா, சர்க்கரை, பால், ஏலப்பொடி எல்லாவற்றையும் சொல்லியிருக்கும் அளவு மட்டும் கலந்து, கையால் கட்டியில்லாமல் கரைத்து, (சர்க்கரையைக் கரைக்க வேண்டாம், அதுவே கரைந்துவிடும்.) அப்படியே 4 மணி நேரம் வைக்கவும்.
  • இரண்டு பத்தை தேங்காயை மெலிதாக, பொடிப் பொடியாகக் கீறிக் கொள்ளவும்.
  • நான்கு மணி நேரம் கழித்து தேங்காயையும் கலவையில் கலந்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது பால் கலந்து கெட்டியான அப்ப மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, ஒரு கரண்டியால் சிறிது சிறிதாக மாவை எடுத்துவிட்டு, நிதானமான குறைந்த தீயில் இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்ததும் எடுக்கவும்.

paal appam 2

* சனிக்கிழமை போன்ற நாள்களில் ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.

* அப்பத்திற்கு கொஞ்சம் அதிக எண்ணெயும் அதிகப் பொறுமையும் குறைந்த தீயும் தேவை. எண்ணெயை அதிகம் குடிக்காது. ஆனால் அதிக எண்ணெய் இருந்தால் நன்றாக அசைந்து மூழ்கி, வேகும்.

* புதிதாகச் செய்பவர்கள், பாகு, பதம் என்றெல்லாம் குழம்புபவர்கள், ஆண்கள் கூட இதைச் சுலபமாகச் செய்யலாம். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் சுவையாக இருக்கும். திகட்டாது.

* அப்பக்குழியிலும் செய்யலாம்.

முன்பெல்லாம் பாட்டி காலத்தில் எங்கள் வீட்டில் நெல்லை மணலோடு சேர்த்து வறுத்து, மணல் சூட்டோடு நெல் பொரிந்ததும் மணலைச் சலித்து, நெல் உமியை சுளகில் புடைத்து நீக்கி, அப்புறம் இருக்கும் பொரியையும் நாங்களெல்லாம் உட்கார்ந்து நெல் இருந்தால் பொறுக்க வேண்டும். வீட்டிலேயே செய்வது மிக மிக அதிக நேரம் எடுக்கும் வேலையாக இருந்தது. இதில் பாட்டியின் ஆசார கெடுபிடி வேறு. இப்போது கடைகளில் கிடைக்கும் பொரியை வாங்கிச் செய்தேன். அதிலும் ஓரளவு நம் திருப்திக்கு, நெல் கலந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.

தேவையான பொருள்கள்:

நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்

nelpori urundai (thirukkaarththigai)

செய்முறை:

  • நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
  • கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ‘ணங்’ என்று சத்தம் கேட்க வேண்டும்.)
  • பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
  • பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.
  • கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.
  • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும். (பாட்டி காலத்தில் இந்த வேலை எல்லாம் எனக்குத் தான் வரும். சுளகு சுத்தவே இல்லை, உன் உடம்பு தான் சுத்துது என்று கிண்டல் செய்வார்கள்.)
  • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
  • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.

கூம்பு:

என் பாட்டியெல்லாம் கையாலேயே முதலில் சாஸ்திரத்திற்கு இரண்டு கூம்பைப் பிடித்துவிடுவார்கள். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாததால் கூம்பில் தான் செய்தேன்.

  • கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவும்.
  • சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.
  • கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம். எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.
  • இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு செய்தித்தாளில் கவிழ்த்து வைத்து, ‘டங்’ என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பு பிரிந்து கீழே விழுந்துவிடும்.

அன்னிக்கு ரங்கமணி ஆபீசுக்கு ‘சும்மா’ லீவ். இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் எனக்கு அத்திப் பூத்த மாதிரி எப்பவோ கிடைக்கற வாய்ப்பு. விடலாமா? நேத்தி, நாம நாளைக்கு D’Mart shopping போகலாமான்னு கேட்ட அம்மணிகிட்டயே, “நோ நோ நாளைக்கு கோவிந்த் லீவ். (தரோவ வேலை வாங்கிக்கணும்) நான் வரலைனு சொல்லி வெச்சிருந்தேன்.

“SBOA ஸ்கூல்கிட்ட Reliance Fresh திறந்து பத்து நாளாச்சு. இப்ப போய் பாத்துட்டு வந்துரலாம். சண்டேன்னா கூட்டமாயிருக்கும்.”

“சான்ஸே இல்லை. இன்னிக்கு முழுக்க நான் ரிலாக்ஸ்டா இருக்கப் போறேன். டிவி பாக்கணும். நிறைய படிக்கணும். என் பொண்ணு வந்ததும் அவளோட விளையாடணும். உனக்கு குக்கர் கேஸ்கட் போடறது, தெச்ச ஜாக்கெட் வாங்கிட்டு வர்றது, பிஞ்ச செருப்பு தெச்சு வாங்கறதுக்கெல்லாம் என் லீவை வேஸ்ட் பண்ண முடியாது.”

ஆண்களால பெண்கள் மனசைப் படிக்க முடியாதுன்னு யார் சொன்னது? 🙂

“தேவை இல்லை. தாரளமா செய்ங்க. எனக்கென்ன? ஆனா ஃப்ரிட்ஜ்ல காய் சுத்தமா இல்லை. நாளைக்கு ஆபீசுலேருந்து வரும்போது நீங்களே ராத்திரி ஒம்போது மணிக்கு மேல ஒரு வாரத்துக்கான காய் வாங்கிட்டு வாங்க.”

Reliance Fresh 1

வெச்ச குறி தப்பலை. காய்கறிங்கற வார்த்தை எப்படி ஆளை அசைக்கும்னு தான் இவ்ளோ வருஷமா பாத்துகிட்டிருக்கேனே. இந்தியாவின் கடைக்கோடிக்கே ஊர் சுத்தப் போனாலும் புஸ்தகங்களுக்கு அடுத்தபடியா அல்லது அதுக்குச் சரியா ஃப்ரெஷ் காய்கறிகளைப் பார்த்தா பரபரக்கும் ஜீவன்; எப்படியெல்லாம் பார்த்து பார்த்து வாங்கணும்னு பழக்கியிருக்கும் மாமியார்(வாழ்க!); ஆன காரணங்களால இத்தனை வருஷமாகியும் எனக்கு இன்னும் காய் வாங்கத் தெரியாமலே போச்சு. (தக்காளி மட்டும் வாங்குவேன். இதைச் சொன்னால் எங்கம்மாவே என்னடீ இப்படி இருக்கன்னு அதிர்ச்சியாறா.) நம்ப அவங்களோட கூடவே போய், சும்மா பையை வெச்சுகிட்டு பராக்கு பாக்க வேண்டியதுதான். அவங்களே வாங்கி வாங்கிப் போடுவாங்க. “கொஞ்சம் நீயும் வாங்கக் கத்துக்கலாமில்ல?”ன்னு சொல்றது காதுல கேட்காத தூரத்துல வாகா நிக்க வேண்டியது.

அதைவிட முக்கியமா பெரிய பெரிய வேலை எல்லாம் சலிக்காம செய்ற எனக்கு, சில சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்யப் பிடிக்காது. அதுல முக்கியமானது வாங்கிவந்த காயைப் பிரிச்சு ஃப்ரிட்ஜ்ல வைக்கறது, ராத்திரி பழம் நறுக்கரது… தலைவர் இருக்கும்போதே வாங்கிட்டா அவரே அதை கையோட பொறுப்பா செஞ்சுடுவாரு. அதனால சண்டேனா ரெண்டுல முக்கியமான ஒன்னு காய்கறி வாங்கறதுதான். இதுல இன்னொரு வசதி. தினம் தினம் கத்திரிக்காயா, முள்ளங்கியா மாதிரி குற்றச்சாட்டே எங்க வீட்டுல எழுந்ததில்லை. ஏன்னா, வாங்கறது நான் இல்லையே. 😉 ப்ரிட்ஜ்ல இருந்தா சட்டில வரும். அவ்ளோதான் பதில்.

“காய்தானே. அதுக்கு ரிலயன்ஸ் எல்லாம் வேண்டாம். காயெல்லாம் ஏசில சுருங்கி இருக்கும். நம்ப மார்க்கெட்லயே ஃப்ரெஷ்ஷா வாங்கலாம்.” ப்ரோக்ராம்ல ட்விஸ்ட். 😦 மார்க்கெட்ல அததுக்குன்னு தனித்தனி கடைகள் வைச்சிருக்கோம். கீரை, பயறுகள், இங்லீஷ் காய்கறிகள், கிராமத்திலேருந்து வர நாட்டுக் காய்கறிகள், பழங்கள் இப்படி. ஒருவாரம் போகலைன்னாலும் வாடிக்கை மறந்ததும் ஏனோன்னு விசாரிப்பாங்க.

“இல்லை, சும்மா எட்டிப்பார்த்துட்டு மார்க்கெட்டுக்கே போயிடலாம்.”

ஒருவழியாக அடம்பிடிச்சு கிளம்பிப் (அடுத்த திருப்பம் தான்.) போனா, வாசல்ல கும்பல் கும்பலா மக்கள் நின்னுகிட்டிருந்தாங்க. கடை சரியாப் பத்து மணிக்குத் தான் திறப்பாங்களாம். இன்னும் 5 நிமிஷம் இருந்தது. என்ன மக்களோ! நான் பிசினஸ் செஞ்சா காலைல எழுந்ததும் எதுக்கும் கடையைத் திறந்துட்டுதான் பல்லையே தேய்ப்பேன். இத்தனை நேரத்தில் மார்க்கெட்ல பாதி வாங்கி முடிச்சிருக்கலாம். ரங்கமணி உச்’ கொட்ட ஆரம்பிச்சாச்சு. கொஞ்சம் தள்ளி ஒரு கும்பல் தமிழ்ல பேசறது விட்டு விட்டுக் கேட்டுது. திடீர்னு ஒரு வண்டி வந்து நிஜமாகவே ஃப்ரெஷ்ஷா காய்கறிகள் இறங்க ஆரம்பிச்சதும் பக்கத்து முகத்துல பல்பு. மீ ரிலாக்ஸ்.

கடை திறந்ததும் சொல்லி வைச்சது மாதிரி எல்லோருமே காய்கறிகள் பக்கம் தான் போனாங்க. காய்கறிகள் உண்மையிலேயே நன்னா இருந்தது. எனக்குத் தான் மார்க்கெட் மாதிரி சும்மா நிக்க முடியாம பிளாஸ்டிக் பைகளைக் கிழிச்சுக் கிழிச்சுக் (ஏதோ என்னாலான ஹெல்ப்பீஸ்) கொடுக்க வேண்டியதாகிப் போச்சு. பரவாயில்லை.

வந்திருந்தவங்கள்ல பெரும்பாலானவங்க தமிழர்களா மட்டுமே இருந்ததோட காரணம் எனக்குப் புரியலை. அலுவலக நாளா இருந்ததால பலர் ஹவுஸ்வைஃப், ரிட்டயர்ட் இந்த வகையறாவில் தான் இருந்திருப்பாங்க. இரண்டு மாமிகளும் ஒரு மாமாவுமா வந்த ஒரு குடும்பம் அநியாயத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓடி, கத்திக் கலக்கிண்டிருந்தாங்க.

“இந்த நாமக் கத்திரிக்காய் அரைக் கிலோ வாங்கலாமோடீ?” பொறுக்கி எடுத்துண்டு எதிர்ப்பக்கம் நின்ன மனைவியைக் கேட்டார். பெண்கள் ரெண்டுபேரும் பீன்ஸ் பொறுக்கிண்டிருந்தாங்க.

“ஐயோ சமத்தே, உங்களை யார் அந்த வேலையெல்லாம் சொன்னது? (பக்கத்திலிருந்த பெண்ணிடம்) வீட்லயே விட்டுட்டு வரலாம்னு சொன்னேனே கேட்டியா? (திரும்ப மாமாகிட்ட) நாமம் போட்ட கத்திரிக்காய் காரலா இருக்கும். நீளக் கத்திரிக்காய் தான் வாங்கணும், நீங்க சித்த சும்மா இருங்கோளேன், நான் பாத்துக்கறேன்”, மாமி கத்திச் சொன்னதுக்கு அந்தப்பக்கம் தமிழ் தெரிஞ்ச அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தாங்க. அதாவது அத்தனை பேருக்குத் தமிழ் தெரிஞ்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. தவிர்க்கவே முடியாம நானும் ரங்கமணியும் ஒருத்தரையொருத்தர் பார்த்து சிரிச்சுண்டோம். பொதுஇடத்துல புருஷனை ஒரு போடு போடறதெல்லாம் எவ்ளோ சுகமான விஷயம். நாகரிகம்ங்கற பேர்ல நாம இழந்ததுதான் எவ்வளவு? 🙂 இப்பல்லாம் ஸ்ரீரங்கத்துலயே இந்த சீன் எல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. மாமாவைப் பாத்து அலுத்துண்டே மாமிகள் தாலிச்சரட்டுல தாயர் மஞ்சள் காப்பைத் தேய்ச்சுக்கறதெல்லாம்…. சரி விடுங்க. அவர் கொஞ்சம் தயங்கி திரும்ப தான் எடுத்ததை எல்லாம் மொத்தக் காய்கறியில சேர்த்தார்.

திடீர்னு கோவிந்த், “ஏன் இவ்ளோ கொஞ்சமா தக்காளி வாங்கியிருக்க, போதுமா?ன்னு ஆச்சரியமா (வாங்கத் தெரிந்த ஒரே காய்ங்கறதால வஞ்சனை இல்லாம குறைஞ்சது 2 கிலோவாவது வாங்குவேன்.) கேட்டதுக்கு அதைவிட ஆச்சரியப்பட்டேன். நான் எதுவுமே இதுவரைக்கும் கறிவேப்பிலை தவிர எங்க கார்ட்ல எடுத்துப் போடலை. அப்போலேருந்து சும்மா வேடிக்கைதான் பாத்துகிட்டிருந்தேன். அப்பத்தான் ரெண்டுபேரும் கவனிச்சோம், நடுவுல இருக்கற எங்க கார்ட்ல அந்த மாமி வேகவேகமா காய்களைக் குவிச்சுகிட்டிருக்கறதை. “இது எங்களொடதுங்க” ன்னு ரங்கமணி அரைக்காலே முக்கால் டெசிபள்ல மாமிகிட்ட சொன்னது எனக்கே பாவமா இருந்தது. அதைக் கூட பாத்துக்காம என்ன செஞ்சுகிட்டிருக்க அப்டீங்கற மாதிரி திரும்பி என்னைப் பாத்ததை நான் பாக்கலை. 🙂

“நான் இங்க இருக்கேன்டீ!” மாமா எங்கோ தள்ளி அவங்களோட கார்ட்டைப் பிடிச்சுண்டு, நெஞ்சை நிமிர்த்திண்டு (அல்லது அப்படி நினைச்சுண்டு ) சொன்னதும், மாமி (தன் தவறை மறைக்க) அவரை முறைச்சதும், என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. என்னோட தலையாயப் பிரச்சினை பொது இடத்தில் இப்படி அடக்க முடியாம சிரிப்பு வர்றதுதான். தலையை வேற எங்கயாவது பருப்புகள் ஷெல்ஃபுல புதைச்சுக்கலாம், பாவம் அவங்க தப்பா நினைக்கப் போறாங்கன்னு நினைச்சு அங்கேருந்து ஓடிப் போய், அப்றம் தனியாச் சிரிச்சா வேற யாராவது வேற மாதிரி நினைக்கப் போறாங்களேன்னு திரும்ப ரங்கமணியோட வந்து ஒட்டி நின்னுகிட்டேன்.

மாமி தானே தன் பக்கம் கார்ட்டை வெச்சுகிட்டாங்க. மாமா சிரமப்பட்டு ஒரு 5 கிலோ எண்ணெய் டின்னைக் கொண்டுவந்து தங்களோடதுல வெச்சுட்டு தள்ளிப் போய் நின்னார். ஐயோ, எதுக்கு எண்ணெய் எல்லாம் எடுக்கறேள், அதுவும் இவ்ளோ பெருசு, சித்த சும்மாத் தான் இருங்கோளேன்” ன்னு மாமி திரும்ப கத்த, கனஜோரா, “அது உனக்கு வண்டி அடையாளத்துக்கு வெச்சிருகேன். எல்லாம் வாங்கி முடிச்சதும் அதை இங்கயே வெச்சுட்டு பாக்கிக்கு மட்டும் பில் போடலாம்” மாமா சொல்ல, “புத்திசாலி!!” ங்கற மாதிரி மாமி ஒரு பார்வை. இல்லையா பின்ன? 🙂

Reliance Fresh 2

இப்படி வேடிக்கை பார்த்ததுல நம்ப ஆளு பூசணிக்காய், பீட்ரூட் எல்லாம் அடுக்கறதை கவனிக்கலை. திடீர்னு பாத்து, இதெல்லாம் இருக்கு, வேண்டாம்னு சொன்னதுல செம காண்டு.

“இருக்கா? பின்ன காய்கறியே இல்லைன்னு சொன்னியே?”

“ப்ரிட்ஜ்ல காய்கறியே இல்லைன்னா சொன்னேன்? காய்கறியே சுத்தமா இல்லைன்னு தான் சொன்னென். சமைக்கும்போது அலம்பிட்டு சமைக்கணும்.” இவ்ளோ கேவலமான ஜோக்கை எல்லாம் சொல்லி பொது இடத்துலதான் சின்ன முறைப்போட தப்ப முடியும். “காய்கறின்னு சொல்லாம சும்மா கடையைப் பாக்க கூப்டா வருவீங்களா? அதான்.”

அப்படியும் கணிசமா தேத்தி எடை போடற இடத்துல எக்கச்சக்க நேரம். அதுக்கு இருந்ததே 2 பேர். அதுலயும் ஒருத்தங்க ரொம்பப் புதுசு போல.(கடை திறந்தே 10 நாள் தான் ஆகுது. அதுலயும் பழசு புதுசு.) “தீதீ!” ன்னு இன்னோரு பெண்ணை எல்லாத்துக்கும் கூப்டு சந்தேகம் கேட்டுக் கேட்டு எடை போட்டதுல ரங்கமணி கடுப்பாகி, சந்தேக நிவர்த்திப் பெண்ணோட க்யூலயே கொஞ்சம் பெருசா இருந்தாலும் பரவாயில்லைன்னு திரும்ப நின்னாரு. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடப் போகுதேன்னு முகத்துல கவலையான கவலை. அவங்க ஆனாலும் அநியாயத்துக்கு, வாங்கின எலுமிச்சை, பூண்டு, இஞ்சிக்கெல்லாம் தனித்தனியா பைபோட்டு, பில் ஒட்டி.. “எப்படி திரும்ப பிளாஸ்டிக் பை டாமினேட் செய்ய ஆரம்பிச்சிடுச்சு பாம்பேல, சை!”

அப்படியே மற்ற செக்ஷனையும் பாக்கலாம்னு ஒரு சின்ன ரவுண்ட். வழக்கமா இந்த மாதிரி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்ல இருக்கற அதே எவர்சில்வர் பாத்திரங்கள், crockery, பிளாஸ்டிக்.. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடும்னு பிண்ணனி இசை ஒலிச்சு(விரட்டிக்)கிட்டே இருந்தது. வேகமா பாத்துட்டு பில்போடற இடத்துக்கு வந்தா 4, 5 மெஷின் இருந்தாலும் ரெண்டு மிஷின் தான் வேலைல இருந்தது. எல்லாரும் பரபரத்துகிட்டே இருந்தாங்க கடைக்காரங்களை. எல்லா மெஷின்லயும் பில் போட்டா என்னன்னு எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்ன காரணமோ அவங்ககிட்ட பதில் இல்லை. பாவம்.

புதுசா யாராவது தொழில் தொடங்கினா அவங்களை உற்சாகப் படுத்தணும்னு உடனே அங்க ஆஜராகிற நம்ப ரங்கமணிகூட அன்னிக்கு பொருந்தாம படுத்தினதுதான் ஆச்சரியம். ஹோட்டல்ல சரியா பரிமாறலைன்னாலே, ‘பாவம், புது ஹோட்டல், புது ஸ்டாஃப், வேலை கிடைச்ச சந்தோஷத்துல இருக்காங்க. கொஞ்ச நாள்ல செர்வ் பண்ண பழகிடுவாங்க, நாமதான் என்கரேஜ் செய்யணும், விட்டுப் பிடிக்கணும்னு எனக்கே கீதோபதேசம் செய்ற ஆள், ரிலையன்ஸ்ங்கரதாலயோ (அப்படி இருந்தாலும் அந்தப் பணியாளர்கள் புதுசுதானே பாவம்) அல்லது பொண்ணு நினைப்புலயோ அன்னிக்கு நெருப்பு மேல டான்ஸ். உலகத்துல எங்கயும் காய் வாங்கினா இவ்ளோ நேரம் ஆகாது, நீ இரு நான் போறேன்னு ஒரே பொலம்பல். தொணப்பு தாங்காம ரங்கமணியை வெளில நிக்கச் சொல்லி, பணத்தை வாங்கிண்டு, நானே பில்போட்டு வாங்கிவரதா சொல்லிட்டேன்.

பக்கத்து லைன்ல ஒரு பொண்ணு ரங்கமணியையே மிஞ்சற அளவுல என் குழந்தை ஸ்கூல் பஸ் வந்துடும்னு குதிச்சுகிட்டிருந்தாங்க. வாங்கின சாமான்களைப் பாத்தா நறுக்கி பேக் செஞ்சிருந்த பாகற்காய், முருங்கைக்காய் வகையறா. அட அம்மணிகளா? என்னதான் அவசர யுகம்னாலும் பாகற்காய் முருங்கை எல்லாம் நறுக்க முடியாத அளவு அல்லது நறுக்க நேரம் எடுக்கற அளவு கஷ்டமான காய்களா? என்னிக்கி நறுக்கி என்னிக்கி பேக் செஞ்சதோ.

அதுக்குள்ள என் க்யூல இருந்த மாமாவுக்கு 300 ரூபாய்க்கு இறுநூத்து சொச்சம் போக பாக்கி சில்லறை கொடுக்க அவங்ககிட்ட இல்லை. கொஞ்சம் சில்லறை வெச்சுகிட்டு கல்லா திறக்க மாட்டாங்களா? எனக்கு ஆச்சரியமா இருந்தது. அவரோட ரூபாய் நோட்டை வெச்சுகிட்டு அந்தப் ஆள்(பையன்?) பேய் முழி முழுச்சிகிட்டிருந்தாரு. இவங்க எல்லாம் எப்ப செட்டில் பண்ணி என் முறை வருமோன்னு யோசிக்கும்போதே என் கைல இருந்த 500 ரூபாய் பல்லிளிச்சுது. கட்டினவன் கூட வர தைரியத்துல கைப்பை(கிரெடிட் கார்ட்) எடுத்துவராம இருந்திட்டேன். உங்க கார்டுல வாங்கிடலாம்னு சைகை செஞ்சு ரங்கமணியை திரும்ப உள்ள கூப்பிட்டேன்.

உள்ள வந்து, உச்சு கொட்டி, எப்படித்தான் குழந்தையைப் பத்தி கவலைப்படாம இருக்கியோங்கற புலம்பல் என் காதுக்குள்ள விழறதுக்குள்ள பக்கத்து க்யூலேருந்து வீல்’னு ஒரு சத்தம். தொடர்ந்து அந்தப் பொண்ணு மராத்தில மானாவாரியாகத் திட்டிண்டிருந்தாங்க. அந்த மெஷினும் எந்தக் காரணத்தாலோ பாதியிலேயே இயக்கத்தை நிறுத்தியிருக்கு. அந்த ஆள் அதோட சைடுல எல்லாம் தட்டிக்கிட்டிருந்தாரு. ஸ்கூட்டரைப் போல பிளேனையும் லேசா சாய்ச்சு ஸ்டார்ட் செய்யலாம்னு சொல்ற ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது. என் குழந்தை வந்திருக்கும்னு அழற நிலைக்கு அந்தப் பெண் போயிட்டாங்க.

“பரவாயில்லை, இன்னும் தாய்மை சாகலை நாட்டுல” ரங்கமணியோட முணுமுணுத்த கமெண்ட்டுல என் ஈகோ இடறிவிழுந்தது. எனக்கு என் பொண்ணு ஸ்கூல்லேருந்து வர நேரம் தெரியும். இன்னும் அரை மணி நேரம் இருக்கு. ஒரே ஒருநாள் வீட்டுல இருக்கறவங்க எல்லாம் இவ்ளோ அலப்பறது கொஞ்சம் அதிகம்.

“அவங்க குழந்தை எல்கேஜியா இருக்கும். உங்க பொண்ணு சீனியர் பசங்களையே அடிச்சு, கீழ தள்ளிட்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்கிகிட்டு வரா. ஒருநாள் வரும்போது கதவு பூட்டியிருந்தா எப்படி பிஹேவ் பண்ணனும்னு இந்த சிச்சுவேஷனும் தான் கத்துக்கட்டுமே, இப்ப என்ன போச்சு? இந்த ப்ரொகிராம் நான் போட்டதால தானே இவ்ளோ ஆர்பாட்டம். இதே நீங்க கூப்பிட்ட இடத்துல இப்படி லேட்டாகியிருந்தா பேசியிருப்பீங்களா? உங்களுக்கும் மத்தவங்க மாதிரி நறுக்கின காயும், நாளுநாள் பழசுல குழம்பும் ஊத்தினாத்தான் சரியாவீங்க. ஐயோ பாவம்னு வாழைப்பூ வாங்கி, மடல் மடலா எடுத்து, கை கறையானாலும் பரவாயில்லைன்னு ஒவ்வொண்ணுக்கா கள்ளன் ஆய்ஞ்சு, மணிக் கணக்கா திருத்தி, பருப்பு ஊறவெச்சு அரைச்சு, வேகவெச்சு, உதுத்து, வாழைப்பூ பருப்புசிலி செஞ்சு போடணும்னு நினைக்கறேனில்ல, எனக்கு இதெல்லாம் தேவைதான்…. .”

என்னாலயே என் ஃப்ளோவை நிறுத்தவும் முடியலை; தங்குதடையில்லாத என் தமிழ்ல ஆச்சரியப்படாம இருக்கவும் முடியலை. நிறுத்தினபோது (“ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:”) எனக்கு முன்னால இருந்தவங்க பில். இன்னொரு லைனும் எங்களுக்குப் பின்னாலயே திட்டிண்டே  வந்து நின்னாங்க. 

எனக்கு முன்னால பில் போட்டவங்க 3 ஃப்ளேவர்ல ஃபாமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கியிருந்தாங்க. பாத்தா, ஒவ்வொண்ணுக்கா மிஷின்ல காமிச்சு விலை மட்டும் கேட்டு (170, 180, 175) எது இருக்கறதுக்குள்ள விலை குறைவா இருக்கோ அதை பில் போடச் சொல்லி, மீதி ரெண்டையும் வைக்க உள்ள போனபோது எனக்கே வாழ்க்கை வெறுத்தது. வீட்டுக்குப் போய்ச்சேருவோமான்னு இருந்தது. பின்னால நின்னவங்க எல்லாம் அவங்களை சத்தம் போட்டாங்க. அட ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடறவங்க பிடிச்ச ஃப்ளேவர வாங்காம அஞ்சு பத்துக்கு கணக்குப் பாக்கற மனவியல் எனக்குப் புரியலை. (இதை எழுதும்போது Mint ங்கற business newspaperல பெரிய பெரிய பிஸ்தாக்கள் எல்லாம் எப்படி எல்லா இடத்துலயும் பேரம்பேசி மட்டுமே வாங்கறாங்கன்னு 4 நாள் முன்னால வந்த கட்டுரை (When MRP equals minimum retail price) நியாபகம் வருது. டயானாவுக்கு Dodi Fayed பாரிஸ்ல வாங்கின so called engagement மோதிரம் ( “Tell me yes” ring) பேரம் பேசி வாங்கினாருன்னா, அப்புறம் இதெல்லாம் என்ன தப்பு?  And you and I end up paying full price ன்னு கட்டுரையாளர் புலம்பியிருந்தாரு.

ஒருவழியா அவங்க பணம் கொடுத்து, இவங்க மிச்சம் எப்படியோ திரட்டிக் கொடுத்து, ஹை ஜாலி, எங்க முறை. காய்கறிக்கு கார்டு  யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்னு சொன்னதை காதுல வாங்காம வேகமா சாமான்களை எடுத்துவெச்சேன். பருப்பு, வேற சில சாமான்களும் வாங்கியிருந்தேன். பில் வந்ததும், கார்டை மிஷின்ல தேய்ச்சு,(கடவுளே, அந்த மிஷினும் வேலை செய்யணும்) பில்லுல கையெழுத்து வாங்க… பேனா… இல்லை.

உங்ககிட்ட பேனா இருக்கான்னு எங்களையே திருப்பிக் கேட்டாங்க. அப்புறம் அவங்களுக்குள்ளயே ஒருத்தரையொருத்தர் கேட்டு இல்லைன்னு சொல்லிண்டாங்க. ரங்கமணி என்னைப் பாத்த போது நான் அந்தப் பக்கம் ஒரு குழந்தையை மும்மரமா கொஞ்சிண்டிருந்தேன். குழந்தைகளைப் பாத்தா கொஞ்சாம இருக்க முடியுமா சொல்லுங்க? 🙂

எப்படியோ கடைக்குள்ள சாமான் எடுத்துகிட்டிருந்த ஒருத்தர் கிட்ட இருந்த பேனாவை வாங்கிக்கிட்டு வந்து கடைப் பணியாளர் கொடுக்க (அவர் பயந்து பின்னாலயே வந்து கையெழுத்துப் போட்டதும் கையோட வாங்கிப் போயிட்டாரு.) ஒருவழியா கிளம்பும்போது அவங்க கைகொடுத்து, மெம்பர்ஷிப் கார்டுக்கு ஒரு ஃபாரமும், ஒரு அரைக்கிலோ சர்க்கரை இலவசமாயும் கொடுத்தாங்க.  வாங்கிக்கிட்டு வீடுவந்து சேர்ந்த போது ஸ்கூல் பஸ் வந்து நின்னுது. சுபம்.

Reliance Fresh 3

* காய்கறிகள் காலைல பத்துமணிக்கே போனா ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. D’Mart ல எப்பவுமே ஏசில சுருங்கின காய்கள்தான். அதனால காய்கறி மார்க்கெட்ல தான் வாங்குவோம். ஆனா மார்க்கெட்ல கிடைக்காத பல காய்கள் (வாழைப்பூ வெறும் ரூ.5.44 க்கு.), ஒரே காய்ல பல வெரைட்டி (கத்திரிக்காய், தக்காளி, அவரை…) எல்லாம் கிடைக்குது. (வாழைத்தண்டுக்கும் ஏற்பாடு பண்ணுங்கப்பா. ரொம்ப மிஸ் பண்றேன்.) முக்கியமா எடை நிச்சயமா மார்க்கெட்ல வாங்கறதை விட நிறைய வித்யாசம்.
 

* பழங்கள் மார்க்கெட்டைவிடவே குறைவோன்னு எனக்கு ஒரு எண்ணம். பைனாப்பிள்(எனக்குப் பிடிச்ச பழங்கள்ல இரண்டாது இடம்) வாரா வாரம் நான் பொறுக்கிக் கொடுத்தா தோல்சீவி, பேக்பண்ணி ரூ.25க்கு ஒரு கிழவர் கொடுப்பாரு. அதைவிடவே கொஞ்சம் பெரிய பழம் 16 ரூபாய்க்கு. கத்தியால பேராவூரணித் தேங்காயே உடைக்கறவ நான். நானே தோல்சீவ ஆரம்பிச்சா வாரம் 9 ரூபாய் மிச்சம்.
 

* துவரம் பருப்பு இதுவரைக்கும் நான் வாங்கின எல்லா இடங்களையும் விட ரொம்ப சிறப்பா இருந்தது. உளுந்து ஏகப் போடுவான். பொதுவா எல்லா மளிகைச் சாமான்களுமே D’mart க்கு சமமா அல்லது அதைவிட சிறப்பாவே இருந்தது. சாம்பார், ரசப் பொடி செய்ய எல்லாம் ஸ்பெஷலா  சாமான் வாங்கிண்டு வந்தேன். விலையை இனிமேதான் பொருத்திப் பாக்கணும். ஆனா தரமான சுவையான சாமான்களுக்காக எனக்கு மாச பட்ஜட்ல சில நூறுகள் அதிகமான பரவாயில்லை.
 

* இலவசமா கொடுத்த சர்க்கரை நல்லா இல்லை. அண்ணாச்சி கடை சர்க்கரையும். ஆனா காசு கொடுத்து வாங்கினது, D’Mart சர்க்கரை மாதிரி கல்கண்டா இருந்தது.
 

* ட்ரை ஃப்ரூட்ஸ் வகைல பிற கடைகள்ல கிடைக்காத சில டூட்டி ஃப்ரூட்டி, தர்பூஸ், கர்பூஸ் விதை எல்லாம் கூட கிடைச்சது. அல்வா செய்ய வெள்ளரி விதை கிடைக்கலை. (ஸ்ரீரங்கத்துல செட்டியார்கள் வீட்டுல, பெண்கள் சும்மா இருக்கும்போதெல்லாம் இந்த விதையை உரிச்சுகிட்டிருப்பாங்க. ஆனா எங்க கிடைக்கும்னு தெரியலை.)

0

# முக்கியமா அரிசியும் டீயும் இவங்க தயாரிப்பு இன்னும் வாங்கி உபயோகிக்கலை. அரிசியை ரங்கமணியும் (என்னதான் குழம்பு ரசம், காய் எல்லாம் நல்லா சமைச்சாலும் அடிப்படைல சாதம் நல்லா இருந்தாதான் சமையல் ருசிக்கும்னு பெரிய நம்பிக்கை), டீ பரவாயில்லைன்னாவது எங்கவீட்டுல வேலை செய்ற அம்மணியும் சொன்னாங்கன்னா தான் இன்னும் நம்பிக்கை கூடும். இது ரெண்டும் நடக்கறது கொஞ்சம் கஷ்டம்.
 

# காய்கறிகளைப் பொறுக்கி, அதுக்கு எடை போட அதிக நேரம் எடுக்கறது, பில் போடற மிஷின் மக்கர், பாக்கி சில்லறை இல்லாதது, பேனா இல்லாதது (இந்த முறை நான் போனபோதும் பேனா இல்லை, நான் கொண்டு போயிருந்தேன்.) எல்லாம் என்னை மாதிரி நாலுபேர் திரும்பத் திரும்பச் சொன்னா சரி செஞ்சுடுவாங்க. இந்த ஞாயிற்றுக் கிழமை (கொஞ்சமே) கொஞ்சம் வேகம் அதிகம் தான்.
 

# மெயின் கடைத்தெருவுலயோ அல்லது குடியிருப்புகள் பக்கத்துலயோ இல்லாம ஸ்கூல், லேடீஸ் ஹாஸ்டல் கிட்ட இருக்கறது கொஞ்சம் அபத்தமா இருக்கு. அதுக்குப் பக்கத்துல எந்த ஷாப்பிங்கும் செய்ய முடியாம திரும்ப வேண்டியிருக்கு.
 

# நாங்க முந்தி இருந்த வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டே D’mart. 3 மாடிக் கட்டிடமா மிகப் பிரம்மாண்டமா வந்து, கிடைக்காத பொருளே இல்லைன்னு நிலைமை. அங்க எந்தப் பொருளும் கண்ணை மூடிகிட்டு இருக்கற இடம் தெரிஞ்சு எடுக்கற அளவுக்கு பழகிட்டேன். ஆனா ரிலையன்ஸ் என்னவோ ரொம்பச் சின்ன இடமா இருக்கு. இனி, மேல மாடி கட்டினாத்தான் அதிகமா வைக்க முடியுங்கற நிலைமைல இப்பவே பல வீட்டுபயோகப் பொருள்கள், நான் தொடர்ந்து வாங்கற Lizol (citrrs fragrance), fabric conditioner எல்லாம் இல்லவே இல்லை. அதனால இது முழுமையா ஷாப்பிங் செய்ய ஏத்த இடம் இல்லை. இப்போதைக்கு பெரிய அளவுல வளர முடியும்னும் தோணலை. Nerul மக்கள் D’Mart தான் அந்த வகைல தேர்ந்தெடுப்பாங்க.

# இன்னமும் பச்சரிசி, இட்லி அரிசிலேருந்து, வெத்தலை, வாழையிலை, கனுவுக்கு மஞ்சள் கொத்து, இதோ வரப்போற கார்த்திகைக்கு பொரி வரைக்கும் நம்பளோட வழமையான பல தேவைகளுக்கும்,

சொக்காயிக்கு படம் காட்ட மினுக்கு வத்தலா, வரவழைச்சுடுவோம், அதென்ன திருநெல்வேலில அப்பக் கொடி,  அதளக்காய் வத்தலா, தாமரைத்தண்டான்னு கேட்டுப் பாக்கறேன்னு பத்து ரூபாய் சாமானுக்கெல்லாம் மெனக்கெடத் தயாரா இருக்கவும்,

பஞ்சாப் கோதுமையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தா (தேவைப்பட்டா சோயாவும் நாமே சொல்ற அளவு சேர்த்து) மிஷின்ல அரைச்சுக் கொண்டுவந்து கொடுக்கவும், (ஒருதடவை மிஷின்ல அரைச்சு உபயோகிச்சவங்க, கம்பெனி கோதுமை மாவு எப்பவும் வாங்க மாட்டாங்க.)

“சாம்பார்ப்பொடிக்கு விரளி மஞ்சள் வாங்க மறந்திட்டீங்களா, ஏன் வெயில்ல அலையறீங்கக்கா, தலைவலி வரும், தம்பிகிட்ட இப்பவே கொடுத்தனுப்பறேன்”

“இல்லை, எதிர்ல ஐயப்பன் கோவில் வாசல்ல பூவும் வாங்கணும், நானே வரேன்”

“அட, என்ன பூ, எவ்வளவுக்குன்னு சொல்லுங்க, கையோட வாங்கிவாரச் சொல்லுதேன், வேற என்ன வேணுங்க்கா”

போன்ற பேங்க் ஆஃப் இந்தியா [சேவையைக் கடந்த நேசமிகு உறவுகள் :)] மாதிரி விஷயங்களுக்காகவும் இன்னும் அண்ணாச்சிகளையும் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கு.

பிற்சேர்க்கை:

வாழைத் தண்டும் கிடைக்குது. 🙂 அதுவும் வெறும் ரூ.5.38 க்கு.

கருப்பு உளுத்தம் பருப்பு(தோல் பருப்பு) ஊறவெச்சு 24 மணி நேரம் ஆகியும் தோல் பிரியலை; நனைச்ச தண்ணில கருப்புச் சாயம்.

RV- channa dalRSelect - channa dal

பேக் செஞ்ச எல்லா மளிகைச் சாமான்களுமே Reliance Value, Reliance Select -ன்னு இரண்டு தரத்துல இருக்கு. முன்னது RV பாக்கெட்ல தமிழும் சேர்த்து 8 மொழிகள்ல அச்சிடப்பட்டு கொஞ்சம் விலை தரம் இரண்டுலயுமே குறைவாவும், பின்னது RSelect 4 மொழிகள்ல மட்டும்(தமிழ் இல்லை) அச்சிடப்பட்டு மிகக் குறைந்த விலை வித்யாசத்துல ஆனா மிகச் சிறந்த தரத்தோட இருக்கு. காரணம் தெரியலை. (உதாரணம் கடலைப் பருப்பு RV – கிலோ ரூ.58, RSelect – கிலோ ரூ. 60. தரத்துல பெரிய வித்யாசம்.)

-0-

Nerul Times: இந்த ஞாயித்துக்கிழமை, வீட்டுக்கிட்ட இருக்கற ATM போய் அப்படியே எதிர்ல இருந்த பிரபல நெருள் சனீஸ்வரன் கோயிலுக்குப் போனா அங்க நோட்டீஸ் போர்டுல சனிக்கிழமை உபயதாரர் பேர் அழிக்காம இருந்தது. இந்தக் கோயில் ரொம்பப் பிரபலம். சனிக்கிழமை பூஜை எல்லாம் பெரிய அளவுலயும், அதிகக் கூட்டமாவும் இருக்கும். போர்டுல இருந்த உபயதாரர் சச்சின் டெண்டுல்கர்!

 ஒரு கார உணவோடு குறிப்புகளை முடித்துக் கொள்ளலாம் என்றால் முடியவில்லை.  “நம்ம தமிழ் மக்களுக்கு காஜு கத்லி, மைசூர்பாக் தவிர வேற ஒன்னும் தெரியாதா” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு இந்தக் குறிப்பு சமர்ப்பணம்.  🙂 தீபாவளி வாழ்த்துகள் கனிமொழி!

தேவையான பொருள்கள்:

ரசகுல்லா:
பால் – 1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர்
சர்க்கரை – 400 கிராம்
மைதா – 25 கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள்
தண்ணீர் – 2 லிட்டர்

ரசமலாய்:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
ஏலப் பொடி
முந்திரி, பிஸ்தா, பாதாம் – தலா 4
குங்குமப் பூ
 

rasagulla

செய்முறை:

ரசகுல்லா:

  • ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும்.
  • உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணி அல்லது பனீர் வடிகட்டியில் கொட்டி, வாயைக் கட்டித் தொங்கவிடவும். எதற்கும் பனீர் மூட்டையையும் ஒரு முறை குழாயடியில் நீட்டிக் கழுவினால் வினிகர் அல்லது எலுமிச்சையின் வாசனை போய்விடும்.
  • இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து சக்கை(பனீர்) மட்டும் நிற்கும்.
  • இந்தப் பனீருடன் மைதா மாவைச் சேர்த்து, சுமார் 15 நிமிடங்கள் நன்றாகப் பிசைந்து, சுமார் 10லிருந்து 15 சம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சர்க்கரையுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரை கரைந்து, நன்றாகக் கொதிக்கும் போது, ஒரு டேபிள்ஸ்பூன் பாலை விடவும். அழுக்கு இருந்தால் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அதை நீக்கவும்.
  • இப்போது அடுப்பை நன்றாக எரியவிட்டு, ரோஸ் எசன்ஸ் சேர்த்து, மெதுவாக பனீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்த பிறகு, அதில் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விடவும். இதனால் கொதி அடங்கி மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்.
  • மீண்டும் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிடவும். இப்படியே 5,6 முறை செய்வதற்குள் ரசகுல்லாக்கள் நன்றாக ஊறி மேலே வந்திருக்கும். (ஒரேயடியாக கொதி நிலையிலேயே வைத்தால் தனியாகப் பிரிந்துவிடும்.)
  • அடுப்பிலிருந்து இறக்கி, பாகிலிருந்து ரசகுல்லாக்களை தனியாக எடுத்து ஃபிரிட்ஜில் குளிரவைக்கவும். அல்லது சிரப்புடனே ஃப்ரிட்ஜில் குளிர வைத்து சாப்பிடலாம்.

rasamalai 1

ரசமலாய்:

  • 2 முந்திரிப் பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். .
  • ஒரு லிட்டர் பாலை அரை லிட்டராகக் கொதிக்க வைத்துக் கொள்ளவும். கறந்த பாலாக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் பாக்கெட் பாலே உபயோகிக்கலாம்.
  • பாதி கொதிக்கும் போதே சர்க்கரை, ஏலப் பொடி, முந்திரி விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  • பால் குறைந்து, அரையளவு ஆகி, லேசாகத் திரிதிரியாக வர ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து விடவும்.
  • ரசகுல்லாக்களை நீரை ஒட்ட வடித்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். (ரசகுல்லா உருண்டையாகச் செய்யலாம். ஆனால் ரசமலாய் செய்ய இருப்பதானால் லேசாக கைநடுவில் வைத்து அழுத்தி சிறிது தட்டையாக ஆக்கிக் கொள்ளவும்.)
  • குறுக்கிய பாலைச் சேர்த்து, மேலாக பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், குங்குமப் பூ தூவி, குறைந்தது 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.

rasamalai 2

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

வாழ்த்துகள் சொல்லாத, சொல்ல விரும்பாத, சமூக, அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!! 🙂

தேவையான பொருள்கள்:

காரா பூந்தி
ஓமப் பொடி
காராச் சேவு
ரிப்பன் பக்கோடா
நிலக்கடலை
பொட்டுக் கடலை
முந்திரிப் பருப்பு
பாதாம் பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய்
நெய்
மிளகாய்த் தூள், உப்பு (விரும்பினால்)

kaaraa boondhi

oma podi 2ribbon murukku 2

kaaraa sev 2

nuts (kaara mixer)

செய்முறை:

  • ஓமப்பொடி, காராச் சேவு, ரிப்பன் பக்கோடா இவற்றை தேவையான அளவு எடுத்து ஒடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • காராபூந்தியையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • நிலக்கடலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும் அல்லது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பை அப்படியே அல்லது ஊறவைத்து உலர்த்தி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • பொட்டுக் கடலையை சிறிது சிறிதாகப் போட்டு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையையும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் கைபடாமல் ஒரு கரண்டியால் கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.

kaara mixer

    மேலே உள்ள பட்சணங்களில் சேர்த்துள்ள காரமே(ஓமம், மிளகு, மிளகாய்த் தூள்) போதுமென்றால் அப்படியே விட்டு விடலாம். மேலும் காரம் வேண்டுமென்று நினைப்பவர்கள்– சிறிது நெய்யை உருக்கி, அதில் மிளகாய்த் தூள், உப்பைக் குழைத்துக் கொள்ளவும். நிலக்கடலை, பாதாம், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பை மட்டும் கலந்து அதனோடு இதனையும் சேர்த்துப் பிசிறி, மொத்த மிக்ஸரில் இந்தக் கலவையைக்கலந்துவிட்டால் சீராகக் கலந்துவிடும். தனித்தனியாக இவைகளை மிக்ஸரில் கலக்கப் பார்த்தால் சரியாக வராது.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 1/2 கப்
அரிசி மாவு – 1 கப்
மஞ்சள் தூள்
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எள் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

ribbon murukku

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மஞ்சள் தூள், எள், உப்பை மாவில் சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ரிப்பன் நாழியில் பிழியவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அதைவிட சிறிதான ஆனால் தட்டையான வேறு டிசைன் இருந்தால் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது நெய்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

kaaraa sev 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மிளகை நைசாக அரைக்காமல் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • வெண்னெய் அல்லது நெய்யைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை காராச் சேவு கரண்டியில் தேய்க்கவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அவ்வளவு பெருவட்டாக இருப்பது சாப்பிடும் போது தனித்து ருசிக்கும். எனவே ஓமப்பொடிக்கு மேல் சற்றே பெரிதாக தேன்குழல் அச்சில் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

* அச்சில் பிழிந்திருந்தால், வேண்டிய அளவுக்கு ஒடித்துக் கொள்ளவும்.

* காரம் அதிகம் தேவைப்பட்டால் இன்னும் அதிக மிளகு சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய்த் தூள் சேர்க்கக் கூடாது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

oma podi 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • ஓமத்தை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஓமநீர், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ஓம அச்சில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும். (ஓமப்பொடி மெலிதாக இருப்பதால் உடனே வெந்துவிடும். அதிக கவனம் தேவை.)
  • தேவைக்குத் தகுந்த அளவில் ஒடித்து உபயோகிக்கலாம்.

* ஓமம் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எண்ணெய் 

kaaraa boondhi

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் பஜ்ஜி மாவை விட சற்றே தளர்ந்த பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பூந்திக் கரண்டியில் சிறிது எண்ணெய் தடவி,  வாணலி எண்ணெய்க்கு மேலாக நீட்டி, மாவுக் கரைசலை கொஞ்சமாக விட்டு, லேசாகத் தட்டினால் பூந்தி விழ ஆரம்பிக்கும். வாணலிக்கு மிக அருகில் கரண்டியை நீட்டினால் நல்ல உருளையாகவும், சற்றே மேலே வைத்திருந்தால் நீள் உருளையாகவும் விழும். (உன்னோடது ஏன் இப்படி வாலோடு இருக்குன்னு யாரும் கேட்டுடாதீங்க. 🙂 ஜாரிணி இல்லாம புளி வடிகட்டி வெச்சு செஞ்சது. எல்லாரும் இதுவே கரகரப்பா, வித்யாசமா நல்லா இருக்குன்னு சொல்றதால ஜாரிணி வாங்காமலே இருந்துட்டேன். கடைல வாங்கினதான்னு இப்ப யாரும் கேக்க முடியாதில்ல. 🙂 பூந்தியின் பின்நவீனத்துவக் கட்டுடைப்புன்னு புரிஞ்சுண்டவங்க புத்திசாலிகள்.)
  • வாணலி எண்ணெய் முழுவதும் நிறைந்ததும், நிறுத்திவிட்டு, பூந்தியைத் திருப்பிவிடவும். சத்தம் அடங்கி, கரகரப்பாக வேகும் வரை காத்திருந்து வெளியே எடுத்து வடியவிடவும். (லட்டுக்குச் செய்வது போல் சீக்கிரம் எடுத்துவிடக் கூடாது.)

* விரும்பினால், மிக்ஸருக்கு அல்லது தயிர்வடை, ராய்த்தா மாதிரி உணவுகளுக்கு உபயோகிக்க விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். நான் சேர்ப்பதில்லை. டால்டா அல்லது எண்ணெய் சேர்ப்பதிலேயே மொறுமொறுப்பாக இருக்கும்.

மைசூர்பா செய்ததன் பரிகாரமாக கால் ஸ்பூன் நெய்யில் தேங்காய் பர்பி.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 2 டேபிள்ஸ்பூன்
கோவா – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
ஏலப்பொடி
முந்திரி, பாதாம், பிஸ்தா –  தலா 4
குங்குமப்பூ

thengaai barfi

செய்முறை:

  • தேங்காயை அதன் அடிப்பாகம்(தோல்) இல்லாமல் வெண்மையான பாகத்தை மட்டும் துருவிக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயை 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். (பொதுவாக துருவிய தேங்காயை அப்படியே பர்பி செய்தால் சாப்பிடும் போது முதலில் சர்க்கரை வாயில் கரைந்து, கடைசியில் தேங்காயைத் தனியாக சக்கையாய் சாப்பிட வேண்டியிருக்கும். அரைத்தால் அந்தப் பிரச்சினை இல்லை.)
  • அடுப்பில் வாணலியில், அரைத்த தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
  • கிளறக் கிளற இறுகி வர ஆரம்பிக்கும்போது கோவா சேர்த்து மேலும் கிளறவும். பர்பி, மிகவும் தூளாக கரகரப்பாக இல்லாமல் இருப்பதற்கு இப்படி சிறிது கோவா சேர்த்தால் மென்மையாக வரும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி அழுத்தாமல் பரத்தவும்.
  • மிகச் சிறிய துண்டுகளாக முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை நறுக்கி, குங்குமப்பூவும் சேர்த்து மேலே தூவி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடலாம்.

* விரும்பினால் திருமணம், இதர விசேஷங்களுக்கு விதவிதமான கலர் சேர்த்துக் கொள்ளலாம். விதவிதமான டிசைன்களிலும் வெட்டலாம். எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும்.

இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு சொல்லுங்க” என்று திருத்துவார்கள். அப்போது பல ஊர்களில் கிடைக்காமல் இருந்ததால் வெளியூரில் யார் வீட்டுக்குப் போனாலும் சாய்ஸே இல்லாமல் இதை மட்டுமே வாங்கிப் போகவேண்டி இருந்தது. ஆனால் மிகச் சுலபமாகச் செய்யக் கூடிய ஒரு இனிப்பு இந்த மைசூர்பா தான். பல வருடங்களாக, கடையில் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்.

krishna mysorepa 1

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 2 1/2 கப்

செய்முறை:

  • கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
  • சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும்.
  • மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.
  • நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம். கடைகளில் கிடைப்பதுபோல் நீள் சதுரமாகவோ, வழக்கமான சதுரங்களாகவோ தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிள்ளையாருக்கான சின்ன மோதக அச்சில் கூட வார்த்து எடுக்கலாம். எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரமானலும் கலவை வளைந்து கொடுக்கும். வாயில் கரையும்.

krishna mysorepa 2

* சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். மைசூர்பாகிற்க்குச் செய்வது போல் டால்டா உபயோகிக்கக் கூடாது.

* அதிகம் நெய்க்கு பயந்தவர்கள், 2 பங்கு மட்டும் நெய் சேர்த்தும் செய்யலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.
 
** சொல்ல மறந்தது, உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி உணவில் இஞ்சித் துவையல், மிளகு ரசம், கொள்ளுப் பொங்கல் என்று சமைத்துச் சாப்பிடவும். 🙂

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1/2 கப்
சர்க்கரை – 2
ஏலப்பொடி

[படம் மூன்று நான்கு மாதம் முன்பே செய்த போது எடுத்து வைத்திருந்த நியாபகம். எந்த ஆல்பம் என்று தேடி எடுத்துப் போடுகிறேன்; அல்லது புதிதாகச் செய்துதான் சேர்க்கவேண்டும். :(]

செய்முறை:

  • கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் சலித்து, வெற்று வாணலியில் மிக லேசாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான உருளியில் சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
  • இந்த நேரத்தில் இன்னொரு அடுப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரை முழுவதும் கரைந்து, ஒற்றைக் கம்பிப் பாகு வந்ததும், கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே, கைவிடாமல் கட்டியாகாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • எல்லா மாவும் சேர்த்து, கட்டி எதுவும் இல்லாமல் மாவு மொத்தமாக சர்க்கரைக் கலவையில் கலந்ததும், பக்கத்து அடுப்பில் சூடாக, உருகி இருக்கும் நெய்யை(இதன் அடுப்பை சிம்’மிலே வைத்து சூடு குறையாமலே வைத்திருக்கவும்.) ஒவ்வொரு கரண்டியாகச் சேர்க்க ஆரம்பிக்கவும்.
  • நெய்யைச் சேர்க்கும்போதெல்லாம் கலவை சர்’ரென பொங்கும்; கைவிடாமல் கிளறவும்.
  • எல்லா நெய்யும் சேர்த்து முடித்ததும், ஏலப் பொடியும் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கும்போது, நுரை மாதிரி பொங்கி, தானே வெடித்து உடைந்து உடைந்து பொத்தல்கள் வரும். இதுதான் மைசூர்பாகு பதம்.
  • அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்; சமப்படுத்தும்போது அழுத்தக் கூடாது.
  • லேசாக ஆறியதும் வில்லைகள் போடலாம். மேலாக சர்க்கரை தூவி அலங்கரிக்கலாம். (சூடாக இருக்கும்போது சர்க்கரை தூவினால், சூட்டில சர்க்கரை கரைய ஆரம்பித்துவிடும்.)

* ஹோட்டல் மைசூர்பாகு மாதிரி ஒரு பகுதி சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், கடைசியில் சில விநாடிகள் கலவையை கிளறாமல் கொட்டினால் அடிப்பக்கக் கலவை மட்டும் அதிகம் சிவந்து அப்படிக் கிடைக்கும்.

* நெய் தரமானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே இறுகி இருக்கும் நெய்யை உருக்குவதை விட புதிதாக வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, அந்தச் சூட்டோடு செய்தால் இன்னும் மணமாக இருக்கும்.

* நெய்க்குப் பதிலாக டால்டாவிலும் செய்யலாம். ஆனால் டால்டாவையும் சூடான உருகிய நிலையில் வைத்துத் தான் சேர்க்க வேண்டும்.

 * சிலர் கொதிக்கிற நெய்யில் மொத்த கடலைமாவையும் பொரித்து, சர்க்கரைப் பாகில் கலவையைச் சேர்த்தும் செய்கிறார்கள். நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. பொதுவாக அனைத்தும் நல்ல கொதி நிலையில் இருந்தால் சரியாக வரும் என்றுதான் தோன்றுகிறது.

இனிப்புகள் செய்ய ஆரம்பிக்கிற யாராவது இதை ஒருமுறையாவது செய்யாமல் இருந்திருப்பார்களா என்பது ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு பிரபலமான, சுலபமான ஒன்று. எந்தத் தவறும் நேர்ந்துவிடாது என்பதால் யாரும் தைரியமாகச் செய்யலாம்.
 
தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி

seven star cake

செய்முறை:

  • கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • தேங்காயை அதன் தோல் சேர்ந்துவிடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 டேபிள்ஸ்பூன் பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.
  • அத்துடன் நெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம்பிக்கவும்.
  • கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி, இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும்.
  • இன்னும் சிறிது நேரம் இழுத்துக் கிளறியும் இறக்கலாம். இந்தப் பதத்தில் பர்பி மாதிரி இறுக்கமாக வரும். ஆனால் தேங்காய் சேர்த்திருப்பதால் மைசூர்பாகு மாதிரி பாறையாகிவிடும் பயம் இதில் இல்லை. இதுவும் சாப்பிட மென்மையாகவே இருக்கும். சொல்லவருவது, தெரியாமல் பதம் தாண்டி இறக்கிவிட்டாலும் தவறாகிவிடாது. சுவையாகவே இருக்கும். 
  • ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடலாம்.

* வாயில் போட்டதும் மைசூர் பாகா, தேங்காய் பர்பியா என்று நாக்கு ஒரு நொடி குழம்பும். குழம்பட்டும். 🙂 ஆனால் இரண்டையும் விட இந்த ஸ்வீட் சுவையாக இருக்கும். புதிதாகச் செய்பவர்கள் இதிலிருந்து ஆரம்பித்தால் ஸ்வீட் செய்வதில் ஒரு தைரியம் வரும்.

பெண்களுக்கு மல்லிகைப் பூவோடு ஏன் அல்வாவைப் பிடிக்கும் என்று முடிவெடுத்தார்கள், தெரியவில்லை. இது தமிழ் கலாசாரத்தில் (அதாங்க தமிழ் சினிமாவில்!) மட்டும் தானா அல்லது இந்தியாவுக்கே பொதுவானதா என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழில் பட்டை, நாமம் என்பதற்கெல்லாம் அர்த்தமே மாறிப்போனது போல் அல்வாவுக்கும் அர்த்தம் மாறிப்போனது தமிழில் மட்டும் தான், அது நிச்சயம். எப்படி இருந்தாலும் கோதுமை அல்வா இனிப்புகளில் ராணி என்றால் மிகை இல்லை. 
 

தேவையான பொருள்கள்:

சம்பா கோதுமை – 250 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 350 கிராம்
ஏலப்பொடி
முந்திரி
கேசரிப் பவுடர்
பால் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)

kothumai paal halwa 1

செய்முறை:

  • சம்பா கோதுமையை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்.
  • அடுப்பில் அடிகனமான வாணலியில் சர்க்கரையை, கம்பிப் பதமாகப் பாகு வைக்கவும்.
  • பாகில் ஒரு டீஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.
  • இப்போது கோதுமைப் பாலின் தெளிவை இறுத்துவிட்டு, கெட்டிப் பாலை மட்டும் பாகில் விடவும்.
  • அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, கேசரிப் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
  • இப்போது சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் அல்வா அடிப்பிடிக்காமல் வேகமாகப் பந்து மாதிரி கிளம்பி சீக்கிரம் கெட்டியான பதத்திற்கு வரும். (சாறு சேர்க்காமலும் செய்யலாம்.)
  • கலவை கொதித்து கெட்டியாக வர ஆரம்பிக்கும்போது கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
  • இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஆறாவது கப் வெந்நீரும், மிச்சமிருக்கும் நெய்யையும் சேர்த்த பின் வருவதே சரியான பதம். கிளறிக்கொண்டே இருந்தால் வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
  • மேலே சீவிய முந்திரி அல்லது முழு முந்திரிப் பருப்பால் அலங்கரிக்கவும்.

kothumai paal halwa 2

* பொதுவாக அல்வாக்களுக்கு முந்திரியை விட வெள்ளரி விதைகளை வறுத்துச் சேர்ப்பதே சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.

* ஒருவேளை தவறுதலாக கலவை இறுகி, பாறை மாதிரி ஆகிவிட்டால், ஒரு தேங்காயை அரைத்துப் பாலெடுத்து, அதை அல்வாவில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அல்வா நெகிழ்ந்து சரியான பதத்திற்கு வந்துவிடும். சுவை மாறுபட்டாலும் பொருள் பாழாகாது.

* சம்பா கோதுமை ரவையிலும் இந்த அல்வாவைச் செய்யலாம்.

* சம்பா கோதுமை கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ரெடி மிக்ஸ் வாங்கியும் செய்யலாம். ரெடி மிக்ஸில் செய்தால் மொழுக்கென்று இருக்கும், நன்றாக இருக்காது என்பது தவறான அபிப்ராயம். அந்த பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் சும்மா 15 நிமிடங்கள் மட்டும் கிளறி இறக்காமல் பொறுமையாகச் செய்தால் ஓரளவு சுவையாக வரும்.

  • எந்தக் கம்பெனியாக இருந்தாலும், பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் பொருள்களைச் சேர்த்து அடுப்பில் வாணலியில் வைக்கவும்.
  • மேலே சொல்லியிருப்பது போல் ஒருமுறை கெட்டியானதும் இறக்கி விடாமல் கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
  • இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து முடிக்கவும். 
  • இறுதியில் கெட்டியாகி, வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, உடனே இறக்கி விடாமல் மேலும் சில நிமிடங்கள் இழுத்துக் கிளறி, பின் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அடுத்த பக்கம் »