விடுமுறைக்கு ஸ்ரீரங்கம்போய் வந்ததை பாதி எழுதி வைத்திருந்தேன். அதற்குள் பொட்டி இயக்கத்தை நிறுத்த… அதை இனி தொடருவது அநியாயத்துக்கு மலரும் நினைவுகள் ஆகிவிடும். ஸ்ரீரங்கம் எங்கே போகிறது? அடுத்தவருடம் எழுதவேண்டியதுதான். ஆனால் அதன் கடைசிப் பகுதி மட்டும்..
எக்கச்சக்கமான ஊர்சுற்றல், சினிமா, ஹோட்டல் பேச்சு, சிரிப்பு, டென்ஷனே இல்லை, சமையல் என்ன என்று யோசிக்க வேண்டாம் என்று அத்தனை சொஸ்தங்களையும் தாண்டி, கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னரே எனக்கு வழக்கம்போல் ‘எங்காத்துக்குப் போகணும்’ மூடு வந்துவிட்டது. வழக்கம்போல் அம்மா அப்பா ஒருமாதிரியான அமைதிக்குத் திரும்பிவிட்டார்கள். வழக்கம்போலவே “நாநாவை நினைப்பியோ ஊருக்குப் போயி?” மாதிரி சில்லியான கேள்விகளை அப்பா பேத்தியிடம் கேட்க ஆரம்பித்தார். தினம் ஃபோன் பண்றீங்க, பின்ன எப்படி மறக்கமுடியும் என்று அபத்தத்தை எல்லாம் சுட்டிக்காட்டாமல் வழக்கம்போலவே சும்மா இருந்தேன். “அம்மா பாவம், அவளைப் படுத்தாதே.” மாதிரி வசனங்களை அம்மா பேத்தியிடம் எடுத்துவிடுவது, என்னவோ தான்தான் என்னை ரட்சிக்கப் பிறந்தமாதிரி, “அவகிட்டயும் என்னப் படுத்தாதன்னு சொல்லு நாநி” என்று தங்கமினி ஏறிக்கொள்வது, இத்தனை கூத்துகளையும் தாண்டி, செல்லவிடுபட்ட இடங்கள், வேலைகள் ஒருமாதிரி அவசரத்தில் நடந்துகொண்டேயிருக்க கிளம்புகிற நாள் வந்துவிட்டது. மதியம் 12 மணிக்கு வண்டி. காலையில் ஒருமணி நேரம் அனுபவித்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடவேண்டும் என்று நினைத்து உட்கார்ந்து ஐந்து நிமிடம் ஆகவில்லை. திரு. கிருஷ்ணன் வந்தார். மேலே சொல்வதற்குமுன் கிருஷ்ணன் பற்றி…
வி.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம். (தொலைப்பேசி எண்: 9842464451) குஷ்பு இட்லி (இதை முதலில் கோவை அன்னபூர்ணா சாப்பிட்டு, அதற்கு அடிமை ஆனேன்.) தயாரிப்பதில் நிபுணர். ஸ்ரீரங்கத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் போன்ற வண்டிகளுக்கு முதல் வகுப்புகளுக்கு(மட்டும்) இந்த இட்லியை சப்ளை செய்கிறவர். தனியாக வீட்டு விசேஷங்களுக்கு, அன்றாட குறைந்த தேவைகளுக்குக் கூட செய்து கொடுப்பார். எங்கள் வீட்டில் பெரிய விசேஷம் என்றால்கூட மற்ற சிற்றுண்டிகளை பரிசாரகர்கள் மண்டபத்தில் தயாரித்தாலும் இட்லியை மட்டும் இவரிடமிருந்து வரவழைத்துவிடுவோம். தயாரிப்பைப் பற்றிய குறிப்பை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் என் அம்மாவிற்குத் தெரிந்திருக்கும், பகிர்ந்துகொள்ள மாட்டார் என்பதும் தெரியும்.
இன்று வழிக்கு எடுத்துச் செல்ல எனக்குக் கொடுத்துப் போகவந்தார். அவரைப் பார்த்ததும் தான் மூளை ‘பிராமிஸ்” என்ற வார்த்தையை ஃப்ளாஷ் அடிக்க… ஐயய்யோ எப்படி மறந்துபோனேன்?
“அம்மாஆஆ…” என்று கத்திகொண்டே உள்ளே ஓடினேன். என்னடீ என்று கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. பர்ஸை எடுத்துக்கொண்டேன். இரு, வரேன் என்று காலில் செருப்பை மாட்டுக்கொண்டு ஓடினேன்.
“என்னாச்சு, நானும் வரேன் என்று கிளம்பின அப்பாவைத் தவிர்த்தேன். (‘எப்படி இதை மறந்துபோனேன்? அம்மா நடுவுல எத்தனைநாள் வாழைக்காய் பண்ணினாள்?’)
“உலகத்திலேயே எனக்கு ஒத்த நடைவேகம் உள்ளவர் அப்பா மட்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு என்றாலும் இன்று அவரும் தேவை இல்லை என்று தோன்றியது. (இப்பவே மணி ஏழரை. இனிமெ வாங்கிவந்து எடுக்கமுடியுமா?’)
ஓட்டமா நடையா என்று சொல்லமுடியாத வேகத்தில் வடக்குவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு ஓடினேன். (எத்தனை மணிவரைக்கும் ஆடு வரும்னு நினைவில்லையே’)
முன்பு உத்தரவீதி(முதல் சுற்று)யிலேயே மார்க்கெட் இருக்கும், இப்பொழுது சித்திரை வீதிக்கு மாற்றியதில் இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கவேண்டும். நடந்தேன். குதிரைக்கு திரைகட்டியது மாதிரி கண்களால் வாழைக்காயை மட்டும் தேடி ஒரு பாட்டியிடம் இருக்க, விரைந்தேன்.
“ஒரு அரை டஜன் காய் கொடுக்க”
“டஜன் எந்தக் காலம்? எடைதான்” பாட்டி விறைப்பான பதில்.
ப்ச், இதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஒரு 6 காயை நிறுக்கச் சொன்னேன். விலை மனதிலேயே பதியவில்லை. 50 ரூபாயைக் கொடுத்தேன். சில்லறை இல்லை என்று என்னைக் கேட்டு, அடுத்த கடைக்காரரைக் கேட்டு… பிறகு ஏதோ மீதி சில்லறையும், குறைவதற்கு இன்னும் இரண்டு காயும் தலையில் கட்டி…
பை கொண்டுவரவில்லை. மும்பைப் பழக்கம். தன்னிடமும் பை கிடையாது என்று சொல்லிவிட கையில் எட்டு காயையும் அள்ளிக்கொண்டு.. காம்பின் கறைபட ஆரம்பித்தது. சில்லறையையும் காயையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு அபத்தமாயும் கொஞ்சம் அபத்திரமாயும்…கேடுகெட்ட துப்பட்டா வேறு சரியாக உட்காரமல் படுத்த… மீண்டும் ஓட்டம். வழியெல்லாம்..
“என்ன சௌக்கியமா? எப்ப வந்த?”
“ம். இன்னிக்கு ஊருக்கு”
“வாழைக்காய் எல்லாம் அங்க கிடைக்காதில்ல? செம்பூர்ல எல்லாமே கிடைக்கும்னு என் தங்கை மாட்டுப்பொண் சொல்வாளே”…
வகையறா கேள்விகள், மனிதர்களுக்கெல்லாம் மையமாய் சிரித்துவைத்து… …
வீட்டுக்கு வந்ததும் அப்பா, ‘அங்க அவ்ளோ ரிக்ஷா நிக்குதே, ஏறி வரமாட்டியா? எதுக்கு ஓடிவர?’ என்று கேட்ட பின்தான் அட ஆமாம் என்று உறைத்தது. உள்ளே எடுத்துக்கொண்டு ஓடினேன். பெண் கூடத்தில் வழக்கம்போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாசல்ல ஆட்டுக்குட்டி வருதா பாருடா செல்லம். வந்தா சீக்கிரம் நிறுத்திவை,” கத்திவிட்டு உள்ளே ஓடி… சமையலறையில் கத்தியைத் தேடி (ஆமாம், அம்மாவீட்டில் அரிவாள்மணை. எனக்கு நறுக்கவராது. கத்தியைத் தேடுவேன்.)…
“ஐயய்யோ எதுக்குடா இத்தனை வாழைக்காயை வாங்கிண்டு வந்திருக்க?” அம்மா.
சரசரவென தோல்சீவ ஆரம்பித்தேன். சீவிமுடிப்பதற்குள் ஒருவேளை ஆடுவந்து பெண் கூப்பிட்டுவிடுவாளோ என்ற அவசரத்தில் தோலோடு சேர்த்து காயும் நிறைய வந்தது.
“நீ வந்தாதான் வாழைக்காயே வாங்குவோம். அப்பாவுக்கு ஆகாது. ஊருக்குக் கிளம்பும்போது எதுக்கு இத்தனையை வாங்கிண்டு வந்திருக்க? தளிகை எல்லாம் ஆயிடுத்தே.”
“தூர எறி. நான் அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது.” உல்டாவாக காயைக் கீழே தள்ளிவிட்டு தோலை எல்லாம் பதவிசாக கூடையில் அள்ளிக்கொண்டு போவதை அம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“இப்ப இத்தனை காயையும் நான் என்ன செய்றது? எதுக்கு குடுகுடுன்னு காரியம் பண்ற?” அம்மா என்னிடமிருந்து பதிலில்லாததால் பொறுமையிழந்து கத்தினாள்.
‘வாசப்பக்கம் போறவ டிவி சத்தத்தை நிறுத்திட்டுப் போகக் கூடாது?’ டிவி, அம்மா இரண்டு சத்தமும் ஒரே நேரத்தில் தாங்கமுடியாமல் மனதுக்குள் தங்கமினியைத் திட்டிக்கொண்டே தோல் கலக்ஷனைத் தூக்கிகொண்டே வாசலுக்கு ஓடிவரும்வழியில்…. இடையில் கூடத்தில் எதுவுமே பாதிக்காமல் பெண்– இருக்கும் இடத்தைவிட்டு இம்மியும் நகராமல் இன்னமும் அதே சாய்ந்தவாக்கில் டிவியைத்தான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் உன்னை என்ன சொன்னேன்?”
“நான் ஏற்கனவே ஆட்டுக்குட்டி பாத்திருக்கேன். I want to see only pigs.. Why no pigs in Srirangam ammaa?”
ஓங்கி முதுகில் நாலு போடலாம் என்ற ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “நான் ஆடு பாக்கணும். போய் வருதான்னு பாரு.”
“நாநா என்னை கோயிலுக்கு கூட்டிண்டுபோகப் போறா. நான் முடியாது.” சொன்னபோதுதான் கவனித்தேன். கோவிலுக்குப் போகிற காஸ்ட்யூமில் இருந்தாள்.
“ஒன்னும் வேண்டாம். ஊருக்குக் கிளம்பற அவசரத்துல. போனதெல்லாம் போதும்.”
“நான்தான் வரச் சொன்னேன். டிரஸ் மாத்திவிட்டேன்,” அப்பா.
“வேண்டாம்பா. எனக்கு அவசர வேலை இருக்கு” சொல்லும்போதே டென்ஷன் ஏறியது.
“நீ ஆடு பாக்க நான் ஏன் கோயிலுக்குப் போகக் கூடாது. நான் இப்பவே அப்பாவுக்கு ஃபோன்பண்ணி சொல்றேன்”, சார்ஜில் இருந்த செல்ஃபோனை நோக்கி ஓடினாள். இவ அப்பாவிற்கெல்லாம் நான் பயப்படுவேன் என்று நம்பும் இவள் குழந்தைமைக்கே கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. நமக்கு வேலை முடியவேண்டும் இப்போது.
“ப்ளீஸ்டா, அம்மா ஃபோட்டோ எடுக்கணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.” இறங்கிவந்தே ஆகவேண்டும்.
“ஓ ஆடு தோல் திங்கற ஃபோட்டோவா? போன தடவை எவ்ளோ திட்டின? நான் எடுக்க முடியாது.” பாழாப்போன தமிழ்ப் படம் பார்த்து பார்த்து எவ்வளவு நாளானாலும் நினைவு வைத்து பழிவாங்கும் குணம்.
“நீ எடுக்கவேணாம். நான் போய் காமிரா எடுத்துவரேன். நீ அதுக்குள்ள ஆடு வந்தா கூப்பிடு, போதும்.” அவசரமாக கேமிரா எடுக்க ஓடினேன்.
“எனக்கு அதோட பேர் தெரியாதே.”
“(Grrr…சனியனே), நாய்க்குதான் பேர் இருக்கும். ஆட்டுக்கெல்லாம் பேர் இருக்காது. போம்மா… வளவளன்னு பேசாத. ஆடெல்லாம் போயிடப் போறது.”
அப்படி எல்லாம் எதற்கும் பதட்டப்படாமல், அலட்டிக்கொள்ளாமல் இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க படுநிதானமாக நடந்துபோனாள். அவளையும் முந்திக்கொண்டு வாசலுக்குப்போய் ஆவலாய் இரண்டு பக்கமும்பார்த்தால் ஒத்தை ஆட்டைக் காணோம். காலங்காலையில் வரும். ஆனால் மணி எல்லாம் பார்த்து மனதில் குறித்துக்கொண்டதில்லை.
“குழந்தை(ஹி ஹி நான்தான்) இன்னிக்கு ஊருக்குக் கிளம்பறா. நானாவது கோயிலுக்குப் போயிட்டு வரேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அப்பா தனியாகக் கிளம்பிவிட்டார். ஒருஆள் வீட்டில் குறைந்தால் அவர் கிளப்பும் கேள்வியும் டென்ஷனும் குறையும் என்று நினைத்ததற்கு அப்புறம் வருந்தினேன்.
அடுத்த அரைமணிநேரம் காத்திருந்தும் வீதியின் கோடிவரை பார்வையில் ஆடு எதுவும் வருகிற மாதிரி தெரியவில்லை. கலக்கமாக இருந்தது. இந்தமுறை இல்லை என்றே முடிவுக்கு வந்துவிட்டேன். இதுதான் சாக்கு என்று தங்கமினி மண்ணில் காலால் எத்தி எத்தி விளையாட ஆரம்பித்தது வேறு எரிச்சல். கண்டிக்கக் கூட தெம்பில்லாமல் சொந்த சிந்தனை தடுத்தது.
“இந்த வாழைக்காய் சரியா வந்திருக்கா பார்,” சிறுதட்டில் மொறுமொறுவென்று சிவக்க வதக்கிய காயை அம்மா நீட்டியபோது பொங்கிப் போனேன்.
“என்னம்மா ஆட்டுக்குட்டியே காணோம். காலைலயே எல்லாம் போயிருக்குமா?”
“ஆடெல்லாம் இப்ப எப்படி வரும்? நன்னா காலங்கார்த்தால ஆட்டுக்காக வந்து உட்கார்ந்திருக்க வேலையைப் போட்டுட்டு..” என்று திருப்பிக் கேட்டதில் மொத்த ஃப்யூசும் போய்விட்டது. எப்ப வரும் என்று பதில் சொல்லாமல் பேத்தியை கவனிக்கப் போய்விட்டாள்.
“இனிமே வராதா பின்ன?” எல்லா எரிச்சலும் அம்மாமேல் வந்தது. அம்மா வேறு ஏதாவது ‘நல்ல’ ஊரில் இருந்திருக்கலாம்.
“ஆடா…?” என்று என்னிடம் இழுத்துவிட்டு வேறுபக்கம் திரும்பி, “____! மல்லிகை மகள், சிநேகிதி படிச்சுட்டா கொஞ்சம் கொண்டுவந்து குடேன்.” வேறு யாருக்கோ குரல்கொடுத்து பேசப் போய்விட்டாள். என்னைக் கொலைகாரியாக்காமல் அடங்கமாட்டார்களோ என்று தோன்றியது. “இவ இன்னிக்கு ஊருக்குப் போயிடுவா. இனிமேதான் என் ரெகுலர் க்ளாஸ், புக் படிக்கறதெல்லாம் ஆரம்பிக்கணும்” என்று எனக்கு செண்ட் ஆஃப் கொண்டாடிக் கொண்டிருந்தாள்.
“நீ எங்காத்துக்கு வராமலே போற. கிளம்பும்போதாவது எட்டிப்பார்த்துட்டு போ!”
“ஆடு எப்ப மாமி வரும் ரோட்டுல?”
“அதுக்கு இன்னும் நாழி இருக்கே.” மாமி வீட்டுக்குப் போகாமலே பால்வார்த்தார்.
“இப்பல்லாம் லேட்டாவா வரும். வந்திட்டுப் போயிருக்குமோ?” முன்பெல்லாம் நான் ஸ்கூல் போவதற்குமுன் வரும்.
“இப்பல்லாம் முனிசிபாலிடில வந்து தெரு சுத்தம் செய்யவிட்டுதான் ஆடுகளை அவுத்து விடறாங்க. இல்லைன்னா குட்டியெல்லாம் தெரியாம கண்ட பிளாஸ்டிக் குப்பையெல்லாம் சாப்பிட்டுடறதாம்.” மாமி இப்போது காபியே வார்த்தார்.
மாமி சொன்ன தகவல் நம்பமுடியாமலும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசுவாசத்தையும் தந்தது.
“ஏண்டீ மெனக்கெட்டு ஆட்டுக்காகவா உட்கார்ந்திருக்க. நீ போய் உள்ள உன் பேக்கிங் ஏதாவது பாக்கி இருந்தா பாரு போ.”
“நீ சும்மா இரு. நான் நாலு சாமானை விட்டுட்டு போனாலும் பரவாயில்லை. அடுத்த தடவை எடுத்துப்பேன். இப்ப கிளம்பறதுக்குள்ள நான் ஃபோட்டோ எடுத்தே ஆகணும்.”
“அட ஃபோட்டோவை அடுத்த தடவை எடுத்துகோயேன். ஆடு எங்க போறது?”
“இல்லை, இந்தத் தடவையே எடுத்தாகணும்.”
“அவ்ளோதானே. வடக்குவாசல் வரைக்கும் போனயே. அங்கயே டர்னிங்ல நிறைய கட்டிவெச்சிருப்பானே. இப்பக்கூட போனா எடுக்கலாம். ஆட்டோவைக் கூப்பிடவா?”
“வேண்டாம். வீட்டு வாசல்லதான் எடுக்கணும்.”
“அதுக்கு எதுக்கு வாழைக்காய் வாங்கப் போற. சௌசௌ தோல் நம்பாத்துலயே இருந்ததே. அதைக் காமிச்சாலும் ஆடு வருமே.”
“ஆனா எனக்கு வாழைக்காய்த் தோல் சாப்பிடற ஆடுதான் வேணும்.”
“என்னடீ கூத்து இது?”
“ஆமாம் கூத்துதான். சொன்னா உனக்குப் புரியாது.”
“அப்ப புரியறமாதிரி உருதுல சொல்லேன்” என்று அண்ணன் இருந்தால் கலாய்த்திருப்பான். அம்மா முணுமுணுத்துக்கொண்டே போய்விட்டாள். எனக்கு என்னவோ இவர்கள் சொல்கிற மாதிரி ஒன்பது மனிக்கு மேல் எல்லாம் ஆடு வருமா என்றே சந்தேகமாக இருந்….
தூரத்தில் கருப்பாக… இன்னும் கொஞ்சம் கிட்டே வரவும்… ஆமாம் ஆடேதான். 🙂
ஆடு இன்னும் கொஞ்சம் வேகமாக நடக்கப் பழகலாம். ரொம்ப பின்னிப் பின்னி என்னவோ புதுப்பெண் மாதிரி நடந்துவந்து என் பொறுமையைச் சோதித்தது. கொஞ்சம் தோலை சிமெண்ட் தளத்தில் போட்டுவிட்டு காமிராவைத் திறந்தேன். அதிர்ச்சி. முந்தாநாள் இரவுதான் திருவனந்தபுரம் கன்யாகுமரி சுற்றிவிட்டு வந்ததில் சார்ஜ் முழுக்க தீர்ந்து அணைந்து அணைந்து எரிந்தது. எக்கச்சக்கமாய் ஏற்கனவே படம் எடுத்துவிட்டதில் படம் எடுக்கவும் கொஞ்சம் தான் இடம் இருந்தது. இனிமேல் எதுவும் சரிசெய்ய நேரமில்லை. ஆடு கிட்டே வந்துவிட்டது.
டக்கென அணைத்துவிட்டேன். இருக்கும் சக்தியை சும்மா திறந்துவைத்து வீணாக்க முடியாது. அப்பொழுதைக்கு திறந்துகொள்ளலாம்.
ஆனால் அவ்வளவு நேரமாக வீட்டு ஓரமாக வந்த ஆடு, இரண்டு வீடு முன்னால் வரும்போது திடீரென எதிரே கோயில் மதில்சுவர் பக்கம் போய்விட்டது. திண்டாடட்டும் என்று இருந்த பெண்ணே கொஞ்சம் இரக்கப்பட்டு “ஆடு.. ஆடு…” என்று கூப்பிட ஆரம்பித்தாள்.
“ஏய் சும்மா இரு. அப்படிக் கூப்டா வராது” என்று சொல்லிவிட்டு ப்பா ப்பா என்று நான் கூப்பிட்டும் கண்டுகொள்ளாமல் போய்விட்டது. பதறிப்போனேன். பெண்ணைப் பின்னாலேயே போய் கூட்டிவரச் சொன்னேன். அவள் ஆடு ஆடு என்று கூப்பிட்டதைப் பார்த்த யாரோ ரோட்டில் போகிறவர் சிரித்துவிட்டது அவள் ஈகோவை உரசிவிட்டது. எனக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டாள்.
அப்பா இருந்திருந்தால் எப்படியாவது இதை எனக்குச் செய்திருப்பார் என்று நினைக்கும்போதே மீண்டும் ஒரு ஃப்ளாஷ். “ஸ்ரீரங்கம் வந்து பெருசா ஐயப்பன் சீரியல் எல்லாம் பாக்கற. ஐயப்பன் பாரு, அவங்க அம்மாவுக்கு புலி எல்லாம் கொண்டுவராரு. எனக்கு ஆடுகொண்டுவர கூட யாருமில்லை. I am blessed only that much!” செண்டியால் அடித்தேன். (டோண்டூ மன்னிப்பாராக! புரைதீர்ந்த நன்மைக்காக செண்டியால் அடிக்கலாம் என்றுதான்) வைத்த குறி தப்பாமல் வேலை செய்தது.
“சரி எப்படிக் கூப்பிடணும்?”
“கொஞ்சம் வாழைத்தோல் கைல எடுத்துக்கோ. ப்ப்பா ப்பான்னு கூப்பிடு. பின்னாலயே வரும். இங்க கூட்டிவந்துடு. நான் பாத்துக்கறேன்”
வலப்பக்கம் திரும்பிப் போனவளை ஐந்து நிமிடம் ஆகியும் காணவில்லை. அதற்குள் இடப்பக்கமே இன்னும் கொஞ்சம் ஆடுகள் வருவதில் நான் கவனமாக, “ம்மா ம்மா” என்று ஆடும் இல்லாமல் மனிதனும் இல்லாமல் ஒரு பிளிறல் பெண்போன திசையில் கேட்டது. பார்த்தால், தங்கமினி அலறிக்கொண்டு… ஒரு ஆட்டுக்கூட்டமே அவள் கையில் தோலைப் பார்த்து துரத்திக் கொண்டுவர, பயந்து, சமாளிக்கத் தெரியாமல் ஓடிவந்துகொண்டிருந்தாள்.
“தூக்கிப் போடு!” என்று நான் கத்தியதில் தூக்கிவாரிப் போட்டு வீதியே திரும்பிப்பார்த்தது. நான் சொன்னதைப் புரிந்துகொண்டு கையிலிருந்த தோலை துக்கிப் போட்டதில் அந்த ஆடுகள் அங்கேயே சாப்பிட்டுவிட்டு, மிச்ச தோலுக்கு நான் அழைத்தும் அப்படியே திரும்பிவிட்டன. பெண் அழுதுகொண்டே திரும்பிவந்தாள். சமாதானப்படுத்த கூட நேரமில்லாமல் இந்தப் பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் ஆடுகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒரு ஸ்கூல் பையன் நின்று வேடிக்கை பார்த்தவன், “இப்படி ரெண்டு பேரும் சவுண்ட் விட்டா ஆடு வராது. பிடிச்சு சூப் வெச்சுடுவீங்கன்னு பயந்துக்கும். மறைஞ்சுக்கங்க” என்று ஓசியில் ஐடியா கொடுத்தான். கிண்டல் செய்கிறானோ என்று சட்டென கடுப்பானாலும் அவன் சொல்வதும் நியாயமாகப் பட்டதில் திண்ணைச் சுவருக்குப் பின்னால் மறைந்துகொண்டேன். வீட்டோரமாக வந்துகொண்டிருந்த ரெண்டு ஆடு தோலைப் பார்த்து நடையைத் துரிதப்படுத்தி வாய்க்கும் தோலுக்கும் இடையே சில செண்டிமீட்டரே இடைவெளி இருக்க… நான் மெல்ல எழுந்து கேமிராவைத் திறக்க… யார் இருந்திருந்தால் வேலை சுலபமாக முடிந்திருக்கும் என்று கொஞ்சநேரம் முன்னால் நினத்தேனோ அந்த அப்பா கோயிலை முடித்துக்கொண்டு, “கூத்தெல்லாம் முடிஞ்சதா?” கேட்டுக்கொண்டே திடீரென வேகவேகமாகப் பிரவேசிக்க… ஆடுகள் அதைவிட வேகமாகக் கலைந்துபோயின.
“என்னப்பா..” என்று சலித்துக்கொண்டவள் தொடரமுடியாமல் பின்னால் இன்னும் ஓர் ஆடு வருவதால் ‘உஷ்!’ என்று அடக்கிவிட்டு…
ஆனால் அந்த ஆடு தோலருகில் வந்தும் எந்தச் சலனமும் இல்லாமல் நகர்ந்துபோனது.
“அப்பா ஆடா இருக்கும். அதுக்கும் வாழைக்காய் ஆகலை” என்று சம்மன் இல்லாமல் அம்மா ஆஜராக, அதற்குப் பின்னால் வந்த ஆடுகளும் கலைந்துபோயின.
இந்த ஃபோட்டோ செஷன் முடியட்டும் எல்லாரையும் ஒருபாடு வாயாரத் திட்ட வேண்டும் என்று கறுவிக்கொண்டு வேறுவழியில்லாமல் அமைதியாக இருந்தேன்.
கருப்பில் பளபளவென்று உயர்ந்த வெல்வெட்டில் செய்தமாதிரி சின்ன– ரொம்பச் சின்னதாய் ஒரு குட்டி வந்தது. தோல் அதை பாதிக்கவே இல்லை. என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு நின்றது. ப்பா என்று சன்னமாக செல்லமாகக் கூப்பிட்டதில் கொஞ்சம் பின்வாங்கியது. ஃபோட்டோவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், ஓடிப்போய் அள்ளிக்கொள்ளலாம் போல் இருந்தது. நான் ஒரு படி இறங்க ஆரம்பித்ததுமே நகர்ந்து ஓடிவிட்டது. “குழந்தை மாதிரி வேத்துமுகமா இருக்குமோ?” அப்பாவும் தன்பங்குக்கு கிண்டினார்.
இனி பொறுப்பதில்லை. “என்னைப் பாத்து ஒரு குழந்தையும் வேத்துமுகம் காட்டாது. உங்களை எல்லாம் பார்த்துதான் எல்லா ஆடும் பயப்படுது. எல்லாரும் உள்ள போங்க!” ஆனால் சிரித்துக்கொண்டே வேடிக்கைதான் பார்த்தார்கள்.
வாசலில் வீட்டோரமாய் கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது. என்னால் இனிமேல் படமே எடுக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அவமானமாக இருந்தது. நம் சொந்த ஊர், சொந்த வீதி, இந்த வீதியிலேயே என் சிறுவயது முழு வாழ்க்கையையும் திறந்த புத்தகமாய் தெருவிலேயே பாதிக்குமேல் வாழ்ந்திருக்கிறேன். இந்த வீதியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறேன். இப்போது அந்நியர்கள் அதிகம் வருவதில் நம்மை நாமே இடத்துக்கு அந்நியமாக உணருகிறோம் என்று இத்தனை டென்ஷனிலும் தவிர்க்கவே முடியாமல் தத்துவார்த்தம் குறுக்குசால் ஒட்டியது.
“இந்த சிமெண்ட் கார்னர்லதான் காய்கறித் தோல் எல்லாம் போடுவேன். தானே வந்து தினம் சாப்பிடும். என்னவோ நடலம் அடிக்கறா கார்த்தாலேருந்து…..” அம்மா.
அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி மணி பத்து, பத்தேகால், பத்தரை என்று பரிட்சை ஹாலில் நேரம் சொல்லும் சூபர்வைசர் மாதிரி அவ்வப்போது கிளம்ப நேரமாகிவிட்டதை மணிசொல்லி டென்ஷனையும் எரிச்சலையும் ஏற்றினார்கள்.
நம்பிக்கை எல்லாம் தளர்ந்தபோது தான் அந்த அதிசயம் நடந்தது.
ஒரு மூன்று ஆடுகள் சேர்ந்தவாக்கில் வந்தன. முதலில் ஒரு குட்டி ஆடு துணிந்து வந்து தோலைச் சாப்பிட ஆரம்பித்தது. முழுக்க சாப்பிட்டு முடித்தது. எழுந்தால் ஓடிவிடுமோ என்று பயத்தில் கை சில்லிட்டுப் போய் உட்கார்ந்திருந்தேன். பெண் அருகே போய் இன்னும் கொஞ்சல் தோலை வீசினாள். சட்டென படம் பிடிக்க ஆரம்பித்தேன்.

“கிளம்பிட்டாங்கடா. இதெல்லாம் யுஎஸ்-ஆ இருக்கும். ஒரு கேமிரா வாங்கிகிட்டு ஊருக்குள்ள வரவேண்டியது. வந்து ஆடு, கோழி, குளக்கரைன்னு படம் பிடிக்கக் கிளம்பிடுவாங்க”
ஒரே சைக்கிளில் வந்த இரண்டு காலேஜ் பையன்கள் இறங்கி ஒரு மாதிரி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து நின்றுகொண்டு கிண்டலடித்தார்கள். எனக்கு வேலை முடிந்துபோன மகிழ்ச்சி மற்றும் அவர்கள் நின்ற தினுசில் இருந்த நட்பின் நெருக்கம்தந்த மகிழ்ச்சி.. என்னவோ கோபமே வரவில்லை. இப்படி நக்கலடித்துப் பேசுவதில் அவர்களுக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி கிடைக்குமானால் அதுவும் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியே.


இன்னும் இன்னும் என்று தோலை எடுத்துப் போட இன்னொரு ஆடு வந்து சேர்ந்துகொண்டது. பின்னால் மதில் சுவரோரமாக இருந்த தன் துணையையும் அழைத்து சேர்த்துக் கொண்டது. சட் சட் என க்ளிக்கிவிட்டு, நண்பர்கள் பக்கம் திரும்பி எடுக்க நினைத்தபோது ஸ்பேஸ் இல்லை என்று கேமிரா சொல்லிவிட்டது. அது தெரியாமல் கேமிராவைப் பார்த்து தயங்கியோ பயந்தோ நகர்ந்துவிட்டார்கள். 🙂
பி.கு:
1. இந்தப் பதிவிற்காக இந்தப் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல் செய்துமுடித்துவிட்டேன். Oops! இந்தப் பதிவு டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி வகையறா ஒளிஓவிய பச்சான்களுக்கு சமர்ப்பணம்!
2. இன்னும் பின்னூட்டங்களுக்கே பதில் சொல்ல நேரமில்லாதபோது அதற்குமுன் அவசரஅவசரமாக இந்தப் பதிவை தட்டவேண்டிய காரணம், நாளை காலை ஸ்ரீரங்கம் கிளம்புகிறேன். அப்புறம் படங்கள் போட்டால் படங்களை இந்தப் பயணத்தில் எடுத்துப் போட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கலாம் என்ற முன்ஜாக்கிரதை. இவை சென்ற பயணத்தில் எடுக்கப்பட்டவையே.
3. இந்தப் பதிவை பாதி தட்டிக்கொண்டிருக்கும்போதே சட்டென ஒரு விஷயம் அதிர்ச்சியையும் சோர்வையும் தந்தது. நான் பொட்டியில் இருந்த டாக்குமெண்ட்களை அழித்தபோது படங்களும் அழிந்திருக்கும். இப்போது என்ன செய்வது என்று யோசித்தேன். லேசாக நினைவுவந்து திறந்துபார்த்தால் நல்லவேளையாக ஸ்ரீரங்கம் விசிட் பதிவிற்காக சில படங்களை ஏற்கனவே flickrல் ஏற்றியிருந்தேன். ம.நெ.காதன் மீண்டும் காப்பாற்றிவிட்டார்,
4. போதுமடா சாமி, இனி எதற்குமே எங்குமே சத்தியம் செய்ய மாட்டேன், இது சத்தியம்!!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
பரித்ரானாய ஸாதூனாம்… – Part 1.
விடுமுறைக்கு ஊருக்குப் போய் வந்ததிலிருந்தே கணினி கொஞ்சம் மக்கர். வைரஸ் இருப்பதாகப் புலம்பிக் கொண்டே இருந்தது. தேடித் தேடி அழித்து, புறக்கணித்து எல்லாம் செய்தும் ஒருநாள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. முதல் ஐந்துநிமிடம் வழக்கம்போல் படபடப்பாய் இருந்தாலும் ரங்கமணிக்குத் தெரிவிக்கவில்லை. கைவசம் மீட்பர் தொலைப்பேசி எண் இருப்பதால் இந்தமுறை அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. உடனே வரச்சொல்லி அழிச்சாட்டியம் செய்தும் மாலையில்தான் வரமுடியும் என்றார். தொலைப்பேசியை வைத்த நிமிடமே, திடீரென்று கொஞ்சம் யோசனை. இவ்வளவு அவசரமாக இதை மீண்டும் இயக்கி என்ன சாதிக்கப் போகிறோம் என்று ஒரு கேள்வி. ஒரு நாலுநாள் ப்ரேக் எடுக்கலாம். பழையவைகளை மீட்பது, ஃபார்மட் செய்வது போன்ற 4, 5 மணிநேர வேலையை விடுமுறை நாளில் வைத்துக்கொண்டால் மீட்பரோடு ரங்கமணியைக் கோத்துவிட்டு விட்டு, அந்த அறுவையிலிருந்து தப்பலாம். உடனே மீண்டும் பேசி ஞாயிறன்று வரச்சொன்னேன்.
ஆனால் ஒவ்வொரு ஞாயிறாக, எனக்கு பேங்க் க்ளோசிங், எனக்கு க்ளாஸ், எனக்கு எக்ஸாம், பார்ட்டி, கல்யாணம், காதுகுத்து… என்றே ரங்கமணியும் டபாய்த்ததில் தட்டிப் போய்க்கொண்டே இருந்தது. தொலையட்டும் நாமே வாரநாளில் வரச்சொல்லி சரிசெய்யலாம் என்ற எண்ணம் எனக்கும் துளிக்கூட வரவே வராததுதான் இந்த முறை நான் கண்ட பரிணாம வளர்ச்சி. ஒரே வாரத்தில், கணினி இல்லாதது வீட்டில் வேலையே இல்லாததுபோல் சுகமாக இருப்பதைக் கண்டுகொண்டேன். இந்த அழகில் நாளில் 6 மணிநேரம் 8 மணிநேரம் மின்வெட்டும் இருந்ததால்(நாங்கள் இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மாதிரி அலட்டிக்கொள்வதில்லை. சூரியன் கிழக்கே உதிக்கும் அளவுக்கு இயல்பாக எடுத்துக்கொள்வோமாக்கும். எங்கள் ஊருக்கு ஆற்காட்டார் யார் என்றே தெரியாது.) தூங்கித் தூங்கியே– வெங்கட் மொழியில் சொல்வதானால்– காலை எழுந்தவுடன் தூக்கம், பின்பு கனிவுகொடுக்கும் நல்லதூக்கம் மாலை முழுவதும் தூக்கம் என்று வழக்கப்படுத்திக்கொண்டும் இரவு படுத்ததும் தூக்கம் வந்தது. ‘நாங்களெல்லாம் படுத்ததுமே தூங்கற ஜாதி, வெள்ளை மனசு’ என்று ஜம்பம் அடிக்கும் ரங்ஸ்கூட ‘அடப்பாவி, படுக்கும்போதெல்லாம் தூங்கறயே’ என்று பொறமைப்படும் அளவுக்கு தூங்கிவழிந்தேன். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இரண்டு பக்கங்கள் தாண்டமுடியாமல் தூக்கம் வந்தது. என் தூக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் என் நன்றி.
உன் புக் எல்லாம் அப்படித்தான் இருக்கும். என்னோட கலக்ஷனைப் படி என்று தன்னுடையதை நீட்டிய ரங்கமணியின் சிபாரிசுக்கு காரணம் அன்னாருக்கு என்மேல் இருக்கும் அதீத அக்கறை என்றோ என்னையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி என்றோ தன் ரசனை குறித்த அதீத நம்பிக்கை என்றோ இன்னும் வேறு நல்லவிதமாகவோ நினைத்தால் அது தவறு. தான் புதிதுபுதிதாக வாங்கி சத்தமில்லாமல் உள்ளே திணித்து விடும் புத்தகங்களை நானாகப் பார்த்து ஒரு நாள் நிற்கவைத்துக் கேள்விகேட்பதைவிட முதலிலேயே ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி கணக்குக் காண்பித்துவிடும் வழிகளில் இதுவும் ஒன்று. Men of Mathematics, The Black Swan, Leadership the challenge,… சும்மா சொல்லக் கூடாது முதல் பக்கத்திலேயே தூக்கம்வந்தது. இந்த வகையில் என் புத்தகங்கள் கொஞ்சம் பின்தங்கி இருப்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். “ஆரம்பத்துலேருந்து அம்புலிமாமா மாதிரி படிக்காத. டக்குனு ஒரு பக்கம் அல்லது சேப்டர் திறந்து படி. அப்பத்தான் சுவாரசியமா இருக்கும்”, “ஒழுங்கா நிமிர்ந்து உட்கார்ந்து படி. படுத்துண்டு படிச்சா எந்த புக்கும் தூக்கம் வரத்தான் செய்யும்” என்று எக்கச்சக்க சமாளிப்புகள், அட்வைஸ்கள்… அதுக்கு வேறாளப் பாரு என்று தொடர்ந்து தூங்கினேன்.
படித்த புனைவுவகைகளில் கொஞ்சம் பாதித்தது அ.முத்துலிங்கத்தின் ‘மகாராஜவின் ரயில் வண்டி’ சிறுகதைத் தொகுப்பு. ‘… நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச்செல்பவை…. வெவ்வேறு தேசங்கள், கலாசாரங்கள், மனிதர்கள் ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் படைத்திருக்கிறார்’ என்று பின்னட்டையில் ஹைலைட் செய்து கொடுக்கப்பட்டுள்ள அம்பையின் விமர்சனம் நூத்துக்கு நூறு சரி. உண்மையில் புனைவு என்ற எண்ணமே வருவதில்லை. அறிந்த விஷயத்தை நேர்மையாகச் சொல்லும் வண்ணம் இருந்தன. வேண்டுமென்றே ஒரு நாளைக்கு ஒரு கதைதான் என்று திட்டமிட்டு நிறுத்தி அசைபோட்டுப் படித்தேன். கதைகளைவிடவும் அதிகமாக அந்த நடை என்னை யோசிக்கவைத்தது. எந்த இடத்திலும் எழுத்தாளனும் உணர்வுகளோடு துருத்திக் கொண்டிருக்காமல் ஒரு ஏற்ற இறக்கமில்லாத பரப்பில் ஸ்கேல் வைத்து நேராக, கூரான பென்சிலால் கோடுபோட்ட மாதிரி ஒரு நடை. ஆனால் அதுவே நம்மை அத்தனை உணர்ச்சிகளுக்கும் அழுத்தங்களுக்கும் சுலபமாகக் கொண்டுசென்று விடுகிறது. இது எப்படி சாத்தியம் என்று இன்னும் எனக்குப் புரியவில்லை.
உதாரணமாக, ‘…என் ஒருவனுக்கு மட்டுமே அந்தக் கறுப்புப் பூனைக்குட்டியின் பெயர் அரிஸ்டோட்டல் என்பது தெரியும்..’ மாதிரி வாக்கியங்கள் சடசடவென படிக்கும்போதே பல திறப்புகளை நமக்குள் நிகழ்த்திவிடுகின்றன.
அதற்காக எளிமையான நடையே எனக்கு உவப்பானது என்று அர்த்தமில்லை. எல்லாரும் அலறுவது போலில்லாமல் பெயரிலியின் சிடுக்குத் தமிழுக்கு நான் பரம ரசிகையாக்கும். 🙂 (ஆனால் என்ன, அவர் எவ்வளவு கடுமையான கோபத்தில் எழுதினாலும் அல்லது தீவிர விஷயங்களை எழுதினாலும், படிக்கும்போது நமக்கு அதையும்மீறி அந்த மொழியழகில் வெடிச்சிரிப்பு முதல் புன்முறுவல்வரை ஏதாவது வந்துவிடுவதால் நீர்த்துவிடுகிறது.)
எப்படியும் அடுத்த சுஜாதா நாந்தானாக்கும் என்று முனைந்தோ அல்லது தன்னை அறியாமலேயோ எழுதும் பல இணைய எழுத்துகளுக்கு நடுவில் நிச்சயம் ஆசுவாசமாக இருந்த நடை.
இன்னும் கொஞ்சம் நேரம் விழித்திருந்தபோது செய்தது கொஞ்சம் ஹிந்தி மொழியறிவை வளர்த்துக்கொண்டது. அடிப்படையிலோ, பேசுவதிலோ பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் தொடர்ந்து கொஞ்சம் vocabuloryயை ஏற்ற நினைத்தேன். முதலில் ஆங்கிலத்தில் CNN-IBN மாதிரி சேனல்களில் செய்தியைக் கேட்டுவிடுவது. பின்பு அதையே ஹிந்தி சேனலில் பார்ப்பது. இந்தமுறையில் செய்தியை அறிய அதிகமெனக்கெடல் இல்லாமலே மொழியை மட்டும் கவனித்து உள்வாங்க முடிந்தது. இப்போது அந்நியமொழி என்ற உறுத்தல் இல்லாமல் ஹிந்தியை மூளை ஓரளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்த வழியை பெண்ணுக்கு உரைநடை தமிழுக்கு செய்துபார்த்தேன். அவளுக்கு பேச்சுத் தமிழ் எப்போதும் பிரச்சினை இல்லை. ஆனால் உரைநடைக்கு தினகரன், தினத்தந்தி என்று வாங்கிப் பார்த்து என்னாலேயே சகிக்க முடியவில்லை. (இந்தப் பத்திரிகைகள் எப்படி நம்பர் ஒன் நாளிதழ் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மும்பை எடிஷன்தான் சகிக்கவில்லையோ?) மாற்றாக முதலில் அவள் ஏற்கனவே படித்துவிட்டு தூக்கிப்போட்ட சின்ன வயது ஆங்கிலக் கதைப் புத்தகங்களிலிருந்து குட்டிக் குட்டிக் கதைகளை எளிமையாக மொழிபெயர்த்து வைத்தேன். அறிந்த கதை என்பதால் அவளால் சுலபமாக மொழிக்குள் நுழைய முடிந்தது. வாரம் ஒரு பக்கமாவது தமிழ் படிப்பதையும் தொடரவைக்க ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இருக்கிற நேரப் போதாமைக்குள் தமிழைத் திணிப்பதே தெரியாமல் திணிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிற சாத்தியம் அதிகம்.
இப்படியாக இந்தப்பக்கத்தை மறந்தததில் மீட்பர் அழைப்புக்குக் காத்திருந்து காத்திருந்து ஒருநாள் நொந்துபோய் வேறு யாரையும் வைத்து வேலையை முடித்துவிட்டோமா என்று விசாரித்தார். இன்னொருமுறை தன் தொலைப்பேசி எண்கள் மாறியிருப்பதைச் சொல்லத்தான் ஃபோனினேன் என்று தகவல் சொன்னார். எதற்கும் அசையாமல் இருந்தேன். இடையிடையே சில நண்பர்கள் கடிதம் எழுதிவிட்டு அதை செல்ஃபோனிலும் சொல்லித்தொலைக்க வேண்டிய நிலைமைக்காக கடுப்படித்தார்கள். யாரோ அவசரமாக எனக்கு ட்விட்டர் கணக்குத் திறந்து ‘vettithendam’ என்ற கடவுச்சொல்லில் block செய்திருப்பதாகவும் தொடர்ந்து செல்பேசியில் அதை உபயோகிக்கச் சொன்னார். செல்ஃபோனும் தேவையா என்று இப்போது யோசிக்க ஆரம்பித்தேன்.
இடையில் ஒருமுறை சிஃபியின் உள்ளூர் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சிஃபிக்கு பதில் 24online என்றுசொல்லி தாங்களாகவே சிஃபியை நிறுத்தி தங்களுடையதை நிறுவ வந்தார்கள். என்பொட்டி காலி என்றதும் விடாமல் ரங்க்ஸின் லேப்டாப்பில் மாற்றிவிட்டுப் போனார்கள். யதேச்சையாக ஒருநாள் ரங்க்ஸ் திறந்த சமயமாக அது வராமல் போனதில் கடுப்பாக, மறுநாளே மீண்டும் சிஃபிக்கு மாற்றச் சொன்னேன். ஏன் 24online தங்களுடையது இல்லை என்று வாடிக்கையாளர்களுக்குச் சொல்லவில்லை என்று சிஃபிக்காரர்களுடன் சண்டைபோட்டேன். அங்கிருந்த ஒருவர் அப்படியெல்லாம் கஸ்டமரை நாங்க இழுக்கமுடியாது என்று எதிக்ஸ்(வசனம்) பேசியது என் எரிச்சலை அதிகப்படுத்தியது. தான் வேலைசெய்யும் நிறுவனம் அதைவிட முக்கியம் என்பது எப்போது இவர்களுக்குத் தெரியும்? கஸ்டமர் சர்வீஸ் குறித்து ஒரு பொழிப்புரை கொடுத்து வைத்தேன். ஒருவழியாக சிஃபி ஒன்றரைமாதம் கழித்து இப்போதுதான் தூக்கத்திலிருந்து முழித்துக்கொண்டு 24online எங்களுடையை சேவை இல்லை என்று தினமும் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பிக்கொண்டிருக்கிறது.)
எப்படியோ இணையம் இல்லாமலே பொழுது சுகமாகப் போனது அல்லது இணையம் குறித்த நினைவே அதிகம் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நாட்டுநடப்புகள் ஒவ்வொன்றிற்கும் யார் யார் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஏற்கனவே ஊகம் இருப்பதால் பெரிய ஆர்வம் வரவில்லை. முடிந்தால் இனி உட்கார்ந்து ஊகங்களைச் சரிபார்க்கலாம். 🙂 மாதாமாதம் சிஃபியிலிருந்து சந்தாப் பணம் வாங்கிக் கொள்ள வரும்போது மட்டும் இணைப்பு இனியும் தேவையா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பாலராஜன்கீதா ஒரு இரவு தொலைப்பேசி, விகடனில் இந்த வலைபதிவு குறித்த அறிமுகம் வந்திருப்பதாகச் சொன்னார். (இன்று இந்த வரியைத் தட்டிமுடிக்கும்போது சரியாக தொலைப்பேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னார். நூறு ஆயுசு என்று இதைத்தான் சொல்வார்கள்!) நான் உஷாவுடனும் தேசிகனுடனும் பேச பல விஷயங்கள் இருந்தாலும் அதில் இணையம் இல்லை. அப்பொழுதுதான் வந்தாரய்ய்யா வேதம் ஓதுபவர்.
“ஒருத்தன் வணக்கம் சொன்னா, ‘ஹாய்ங்கறது, யா’ங்கறது, ஹோல்டிங்கறது… என்ன நாகரிகம் இது? நான் தொலைப்பேசியை வைக்கறேன் ..” மாதிரி சிணுங்கல்கள் வந்தால் சாத்தான்(குளம்) ஊருக்கு வந்திருப்பதாக அர்த்தம். நான் ஆச்சரியப்பட்டு பாராட்டும் குணம் இவருடையது. எனக்கெல்லாம் ஊருக்குப் போனால் சொந்த வேலையையே முடிக்கவில்லை போன்ற குறை இருக்கும். ஆனால் வரும்போதெல்லாம் மரத்தடி கூட்டம், வலைப்பதிவர் கூட்டம் என்றெல்லாம் நடத்துவதோடு தனிப்பட்ட முறையில் எனக்கும் தொலைப்பேசி விசாரிக்கத் தவறியதே இல்லை. நிச்சயம் பாரட்டவேண்டிய குணம். பண்புடன் குழும ஆண்டுவிழாவுக்கான என் சேவையை (எழுத அழைத்து அவர் அனுப்பிய கடிதத்தை நான் படிக்காததால், எதுவுமே நான் அங்கு எழுதவில்லை.) மனதாரப் பாரட்டினார். அடுத்த அரைமணிநேரத்தில் மொத்த இணைய விஷயங்களையும் தொகுத்துக் கொடுத்தார். அப்பாவியாக, விடுபட்டவைகளுக்கே மலர்வனத்தை அறிமுகம் செய்துவைத்த தன் கேணத்தனத்தையும், ஆளாளுக்கு இவரிடமே விஷயம் தெரியுமா, என்று இருவரும் இணைந்த கதையைச் சொல்ல, தான் அப்படியா என்று ஆச்சரியப்பட வேண்டியிருந்த கொடுமையையும் சொன்ன கையோடு என்னிடமும், “விஷயம் தெரியுமா, எனிஇந்தியன் கிழக்கில் சேர்ந்தாச்சு!” என்றார். “அப்படியா??!!!” என்று நானும் என்னால் ஆனமட்டும் காட்டிய அதிர்ச்சியில் குறைந்தது ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரித்திருக்கலாம். எனிஇந்தியன் நமக்கு சுவாதீனமான இடமாச்சே. இனிமே அந்த இலக்கியவாதியை சந்திக்கவே முடியாதா என்று இரண்டு பேரும் (உள்ளூர சாக்கு கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டாலும்) வெளியே ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியா.
இப்படியாக வாரமொரு ஞாயிறும் பொழுதொரு காரணமுமாய் கணினி திருத்தமுடியாமலே தள்ளிப் போக, சுகமாகத் தூங்கிப் பெருத்த நேரம்போக மீதி நேரத்தை எல்லாம் எதிர்வீட்டின் புதுவரவான 4 மாதக் குழந்தையைக் கொஞ்சுவதில் குடும்பத்தினர் எல்லோருமே பத்து வயது குறைந்துவிட்டோம்…. ஆனால் அப்படியே நிம்மதியாய் இருந்துவிட முடியவில்லை. நான் வரவா வேணாமா என்று நொந்துபோன மீட்பர், விற்பதாக இருந்தால் அந்த LCD மானிட்டர் எனக்கு என்று முன்பதிவு செய்துவைத்தார். :(( கத்தரிக்காய் வாங்கப் போய் மழைக்கு ஒதுங்கிய ஒருநாளில் ரங்கமணி cromaவிற்குள் நுழைந்துவிட நானும் குஷியாய் வேடிக்கைபார்க்க நுழைந்தேன். பிறகுதான் தீவிரம் புரிந்தது. “நீ சரிபண்ணுவன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அதுக்கெல்லாம் 5 வருஷம்தான் லைஃப். போரடிக்குது. இன்னிக்கே புதுசு” என்று பிடிவாதம் பிடித்ததில் மூச்சே நின்றுவிட்டது. அப்பாவும் பெண்ணும் பாதிசோப் பெட்டியில் பாக்கி இருக்கும்போதே புதுசோப் கேட்டு பாத்ரூமிலிருந்து குரல் கொடுக்கும் டைப். எனக்கு அந்த இடத்திலேயே என் கணினிப் பொட்டியின் மேல் தாங்கமுடியாத பிரியம் வந்துவிட்டது. முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தேன். இந்தக் கம்பெனி, அந்த ப்ராசசர், இந்த ஆபரேடிங் சிஸ்டம், அந்த டைப் மானிட்டர் காம்பினேஷன்ல இருக்கா?” என்றெல்லாம் புடைவைக் கடையில் கலர், பார்டர், தலைப்பு விஷயத்தில் கடைக்காரரைக் குழப்பி வாங்காமல் வரும் ட்ரிக்கையே இங்கும் செயல்படுத்தி 5, 6 தடவை போயும் வாங்கவிடாமல் தடுத்தேன். ஆனால் ஒவ்வொருதடவையும் வேறு ஏதாவது ஒரு எலக்ட்ரானிக் பொருளை எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கிக் குவித்த பணத்துக்கு இன்னும் இரண்டு கணினியே வாங்கியிருக்கலாம். பெண்ணும் தன் பங்குக்கு குறைந்தது 2 சிடியாவது வாங்கி பில்போடும் நேரத்துக்கு வந்து நீட்டிக் கொண்டிருந்தாள். கணினி பக்கம் போனாலே தனுஷை மனோபாலா பார்ப்பதுமாதிரி அந்த ரெப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் கிறிஸ்துமஸ், நியூஇயருக்குள் எனக்குப் பிடித்த ஒரு புதுக் கணினியை என்னை எடுத்துப் போகவைப்பேன் என்று சபதமெடுத்தார்.
ரங்கமணி உணர்ச்சிவசப்பட்டு எங்கள் ஆஸ்தான ஃபர்னிச்சர் கடைக்குப் போனார். புதிதாக வரப்போகும் கணினிக்கு மேசையும் புதிதாகச் செய்யவேண்டும் என்பதில் அடுத்த தீவிரம். வாங்கறதே வாங்கறோம், ப்ரிண்டர், ஸ்கேனர் எல்லாம் அட்வான்ஸ்டா வந்திருக்கு. அதையும் சேர்த்து வாங்கிட்டு அதுக்கெல்லாம் தகுந்தமாதிரி நாமே டிசைன்செஞ்சு ஆர்டர் கொடுத்து செய்யலாமே என்று ஏற்றிவிட்டேன். ரெண்டுபேரும் குஷியோ குஷி. எப்படியோ நம்பறாங்களே, பாவம்!
திடீரென ஒருநாள் ஒரு சுமுகமான சூழலில் குட்டிப்பாப்பாவோடு குடும்பமே விளையாடிக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது நெட்மக்கள் வந்தார்கள். “மொத்த லைனும் போயிடுச்சு. நான் உங்கவீட்டில செக் செஞ்சுக்கலாமா?” என்பதோடு நிறுத்தாமல், “என்னங்க இப்பல்லாம் ஃபோனே செய்றதில்லை?” என்று சொந்த பெரியப்பா பையன்போல் சுவாதீனமாகத் திட்டிக்கொண்டே நேராக பொட்டியிடம் வந்தார்கள். 6 மாதங்களுக்குமேல் உபயோகத்தில் இல்லை என்றதும் ஆச்சரியமானார்கள்.
“அப்பல்லாம் கொஞ்ச நேரம் நெட் போனா கூட அமைதியா இருக்கமாட்டாங்க” என்று ரங்கமணிக்கு எடுத்துக் கொடுத்தார்கள்.
“உடனேஉடனே CCக்கு கம்ப்ளைண்ட் செய்வாங்களோ?” என்றபடி நீ நல்லபேரே வாங்கமாட்டியா என்று பையனைப் பார்க்கும் அப்பா மாதிரி சுவாரசியமில்லாமல் பார்த்த ரங்கமணியை நான் பார்க்கவில்லை.
“நீங்க வேற சார். CCக்கு செஞ்சாதான் பரவாயில்லையே. முதல்ல டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் எங்களுக்குத் தான் செய்வாங்க. நாங்க அரைமணிநேரத்துல வரலைன்னா, எப்படித்தான் நம்பர் கண்டுபிடிப்பாங்களோ, எங்க ஆஃபிசர், அவங்க ஆஃபிசர், அவங்க வீடு, சின்னவீடு வரைக்கும் எல்லா லேண்ட்லைன், மொபைல் நம்பருக்கும் அடிச்சு, போட்டுக் கொடுத்துடுவாங்க. இப்ப இந்த லைன் ரெண்டு நாளா ரிப்பேர். சொல்றவங்களே இல்லை” என்றதில் அதிக ரோஷமாகி ‘இருங்கடே, திரும்ப வரேன்’ என்று கறுவிக் கொண்டேன்.
“சரி பரவாயில்லை, கணினியை விக்கறதா இருந்தா நாங்க யாராவது மானிட்டரும் கீபோர்டும் எடுத்துக்கறோம், மறக்காம சொல்லுங்க,” என்று முடித்துக்கொண்டு போனார்கள். நான் கணினியின்மேல் காதலாகிக் கசிந்துருகிப் போனேன். உடனடியாக மீட்பருக்குப் பேசி பக்ரீத் லீவுக்கு வரச் சொன்னேன். ஐடிகாரங்களுக்கு அதுக்கெல்லாம் லீவ் இல்லையே என்று ஒருபாட்டம் அழுதார். ஒழி, இந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லி வழிமேல் விழி வைத்தும் வந்தாரில்லை. ஃபோன் தான் வந்தது. என் குழந்தைகளுக்கு இன்னிக்கு தடுப்பூசி போடணும். ட்வின்ஸ் வேற. தனியா என் மனைவி இரண்டையும் ஹாண்டில் பண்ண முடியாது. நானும் போயிட்டு ஈவினிங் வரேன் என்றார். காரணமே கவிதை மாதிரி இருந்ததில் கூலாகி, குழந்தைகளுக்கு ஜுரம் வரும், பாத்துக்குங்க, இன்னிக்கு வரவே வேணாம், முடிஞ்சபோது வேலை நாள்லயே வாங்க” என்று சொல்லி நெகிழ்ந்துவைத்தேன்.
ஒருவழியாக மீட்பர் வந்த அன்றுதான் இந்தப் பதிவின் தலைப்புக்கு வருகிறோம். இந்தத் தடவை பிரச்சினை இல்லை. எல்லா டாகுமெண்டும் அப்படியே அரைமணிநேரத்துல எடுத்துடலாம். அப்றம் ஃபார்மட் என்று உட்கார்ந்தார். எதையும் மீட்கவேண்டாம். அத்தனையும் அழிந்தால் பரவாயில்லை. நேராக ஃபார்மட் செய்யலாம் என்று சொன்னதை மீட்பரின் காதுகளால் நம்பவே முடியவில்லை. சென்றமுறை நடந்த கூத்துகளை ரீவைண்ட் செய்துகொண்டிருக்கிறார் என்பது முகத்திலேயே தெரிந்தது. “அப்படியெல்லாம் விடவே முடியாது. நான் எல்லாத்தையும் எடுத்துவெச்சுடறேன். நீங்க தேவைன்னா இறக்கிக்குங்க. இல்லைன்னா அழிச்சுக்கலாம்,” என்று பிடிவாதம் பிடித்தார். ஒரு வெயிட்டீஸ் விட்டு ரங்கமணிக்கு தொலைப்பேசி அவருடையது ஏதாவது இருக்கிறதா என்றுகேட்டேன். “எனக்கென்ன கண்ட இடத்துலயும் வெக்க கிறுக்கா பிடிச்சிருக்கு?” என்று கொழுப்பாக பதில்வந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு சிறிதுகூட தயங்காமல் அஹம் ப்ரம்மாஸ்மி என்றாகி நானே என் பகுதியிலிருக்கும் அத்தனை கோப்புகளையும் ஒரு க்ளிக்கில் அழித்தேன். மீட்பர் என்னங்க இப்படி பண்ணிட்டீங்க என்று புலம்பிக்கொண்டே தன் ஃபார்மட்டிங் வேலையைத் தொடர்ந்தார்.
மறுநாள் ஒருவழியாய் இணையஇணைப்பும் கொடுக்கவைத்து திறந்தால் வரவே இல்லை. “உங்களுக்கு விஷயமே தெரியாதா? மும்பை மொத்தமுமே நேத்திலேருந்து நெட் இல்லையே. இன்னிக்குள்ள சரியாயிடும்.”
மறுநாள் திறந்தால் மானிட்டர், கீபோர்ட், எலிக்குட்டி எல்லாம் அநியாயத்துக்கு மௌனவிரதம். எதையுமே கணினி access செய்யவில்லை. எல்லா இணைப்பும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துப் பார்த்து கண் வலித்தது. ரங்கமணிக்குப் பேசினால், “பின்ன கடைசில நீ என்வழிக்கு வராம முடியுமா? தலையைச் சுத்தி எறிஞ்சுட்டு புதுசா வாங்காம…” வேண்டுமென்றே ஏதோ கோளாறு செய்துவிட்டார்களோ என்று எரிச்சலாக இருந்தது.
துண்டித்துவிட்டு மீட்பருக்கு.. “ஓ, அது ஒன்னுமில்லை. திறந்து RAM ஒருதடவை துடைச்சுப் போடுங்க. சரியாயிடும்”
“விளையாடறீங்களா, எனக்கு எப்படி திறந்து செய்யத் தெரியும்?”
“இதுக்காக நான் மும்பைலேருந்து வரமுடியுமா? சிம்பிள்தான். போன வருஷம் நான் வந்தபோது திறந்ததை நீங்க பாத்தீங்களே?”
‘நான் கூடத்தான் போன வருஷம் நீ வந்தபோது தோசை வார்த்துப் போட்டேன். இப்ப உனக்கு செய்யத் தெரியுமா’ என்று கடுப்படிக்க நினைத்ததை நடத்தமுடியாமல் பின்னால் அந்தப்பக்கம் குட்டிப் பாப்பாக்களின் சத்தம் கேட்டது. ‘உனக்கு அடுத்த டெலிவரில triplets பிறந்து படுத்தட்டும் என்று சபித்து(!)விட்டு வைத்தேன்.
பாரீஸில் இருக்கும்போது வேறுவழியே இல்லாத நிலைமையில் நம்ம ஊர் சுமித் மிக்ஸியை நானே திறந்து உள்ளே பிரிந்து இருந்த இரண்டு ஒயரை கோத்துவிட்டதில் ஓட ஆரம்பித்த மிக்ஸி, இன்னும் தொடர்ந்து 7 வருஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொட்டியையும் திறந்து பார்ப்போம், என்ன ஆகிவிடப்போகிறது என்று கவிழ்த்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.
எங்கேயாவது திறக்க ஸ்க்ரூ இருக்கிறதா ஸ்க்ரூடிரைவரோடு தேடினால் கிடைக்கவே இல்லை. உருவினாலே திறக்கிறது என்று கண்டுபிடிக்கவே பத்து நிமிடம் போயிற்று. திறந்தால் உள்ளே ஒன்றுமே புரியாமல் இருந்தது. இதில் RAM யாரென்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்த ஒரே RAM அயோத்யாக்காரர்தான். எப்படியும் ரங்கமணி, மீட்பரை இதுவிஷயத்தில் கேட்பதில்லை என்று வைராக்யமாக இருந்தேன்.
தேசிகனுக்குப் பேசினேன். “ம்ம்ம் அதை எப்படிச் சொல்றது? ஒன்னு செய்ங்க. தூக்கிகிட்டிருக்கற எல்லாத்தையுமே ஒரு சின்ன அழுத்து அழுத்துங்க. ஓட ஆரம்பிக்கலாம்”
சின்னதாய் இல்லாமல் பெரிதாய் அழுத்தியும் எதுவும் நடக்கவில்லை. விரல்தான் வலித்தது. அப்படியே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தோல்வியோடு மூடவும் மனமில்லை.
அப்போதுதான் தம்பியிடமிருந்து ஃபோன். இந்தக் கழுதையை எப்படி மறந்துபோகிறேன்? பெரிய பிஸ்தா இல்லையென்றாலும் வீட்டில் வாங்கும் எந்தப் பொருளையும் ஒருதடவை பிரித்துமேய்ந்து திரும்ப மூடும் வழக்கமுள்ளவன்.
“உனக்குச் சொன்னவங்க உனக்கு ஏத்தமாதிரி சரியா சொல்லித் தரலை. நான் சொல்றேன். எல்லாத்தையும் பிடுங்கிப் பாரு. எது பிடுங்க வருதோ அதான் RAM.”
வந்தது. :)) ”
ஃபூ ஃபூன்னு ஊது!”
ஊதினேன். 🙂
“அவ்ளோதான். எடுத்த சாமானை எடுத்த எடத்துலயே வைக்கற உன் பாலிஸியை அடாப்ட் பண்ணு. ஆல் த பெஸ்ட்”
“தாங்க்ஸ்”
“அதை எனக்குச் சொல்லாத. எந்தக் காரியமும் செய்றதுக்கு முன்னலாயும் பர்த்தாவை மனசுல தியானிச்சுக்க. இதெல்லாம் அம்மா உனக்கு சொல்லித் தரலையா? அந்தக் காலத்துல பெண்கள் சட்டி செய்றதுலேருந்து அடுப்பெரிக்கற வரைக்கும் அப்படித்தான் சாதிச்சிருக்காங்க. நீ சதா அந்தாளைத் திட்டிண்டே இருந்தா…”
லைனைத் துண்டித்து மெஷின் ஆன் செய்ததில் எல்லாவற்றிற்குமே உயிர்வந்திருந்தது. ஒழுங்காய் மூடிவைத்து நிமிர்த்தினேன்.
சாதித்த திருப்தியில் ஒரு காபிக்குப்பின் நெட் திறக்கப் பார்த்தால், இரக்கமேயில்லாமல் account expired என்றது. கேட்டால் 24online போய் திரும்ப வந்திருக்கீங்க. அதான் auto renewal விட்டுப் போச்சு” பதிலும், “நீங்க அதெல்லாம் முதல்லயே பாக்கறதில்லையா?” கேள்வியும் பூமராங்காய் திரும்பிவந்தது. என் நெட்டில்லா சோகக் கதையைச் சொல்லிப் புரியவைத்து சரிசெய்து..
மறுநாள்.. மறுநாள் என்று நேற்று ஒருவழியாக வந்துவிட்டேன். எல்லாம் அழிந்து, துடைத்து துப்புரவாக இருக்கும் பெட்டியைப் பார்த்தாலே உற்சாகமாக இருக்கிறது. இனியும் தொடர்ந்து சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இகலப்பை மட்டும் போனால் போகிறதென்று இறக்கிக் கொண்டேன். முதலில் நம்ப பக்கம் போய்ப் பார்க்கலாம் என்றால் சுட்டி தட்டுவதே தடுமாற்றமாக இருந்தது. நாமெப்படி சமையல் பதிவுகள் போட்டு, பின்னூட்டத்துக்கு பதில் போட்டுக் கொண்டிருந்தோம் என்று மலைப்பாக இருந்தது. பக்கம் திறக்கும் வரை ஆர்வமில்லாமல், ஒரு கடினமான மனநிலையில் இருந்தாலும் திறந்ததும் முகப்பில் சப்பாத்தி, கூட்டு என்று இருக்காமல் சுஜாதாவின் படம்பார்த்ததும் நொறுங்கிவிட்டேன். (மனம் சில அடிப்படை விஷயங்களில் மாறுவதே இல்லை போலிருக்கிறது.) கடைசியாக இந்தப்பதிவுதான் எழுதினேன் என்ற அளவுக்குக்கூட என் பதிவுகுறித்த நினைவில்லை. பதிவுப்பக்கத்தில் சட்டெனெ கொட்ட ஆரம்பித்த பனிப் பொழிவு… போன வருடம் சீசனுக்கு வேர்ட்பிரஸ் செட்டிங்ஸில் வைத்திருந்தது இந்த வருடமும் தொடர்கிறது போலிருக்கிறது. என் மனமும் இளக இவ்வளவே போதுமாயிருந்தது. அப்புறம் என்ன செய்வது என்று மறந்து… நினைவுவந்து, பின்னூட்டங்களுக்காக கட்டுப்பாட்டகம் போனால் தலைசுற்றல். வேர்ட்பிரஸ் மொத்தமாகக் குதறிப் போட்டிருக்கிறார்கள். நிதானமாகப் படித்துத் தேறுவோம் என்று மூடிவிட்டு மெயில் பக்கம் திறந்தால் அதைவிட மோசம்.
நாங்க எல்லாம் ரொம்ப ஆர்கனைஸ்டாக்கும் என்று வலைப்பதிவுக்கு ஒரு ஐடி, க்ரூப் கடிதங்களுக்கு ஒரு ஐடி, பெர்சனலுக்கு ஒரு ஐடி என்று ஏகத்துக்கு பந்தா விட்டதில் இப்போது ஒவ்வொரு ஐடியும் கடவுச்சொல் போட்டுத் திறப்பதற்குள் டென்ஷனாகி விட்டது. சத்தியமாக கடைசியாய் என்ன வைத்திருந்தேன் என்று நினைவே இல்லை. இணையத் தெய்வம் தென்திருப்பேறை மகரநெடுங்குழைக்காதனை வேண்டிக்கொண்டே முயற்சி செய்ததில் சில உடனே திறக்க, சிலது முகத்தில் குத்துவிட்டது. ஒருவழியாய் எல்லாவற்றையும் மீட்டாகிவிட்டது. பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கே அதிகநேரம் சொதப்பிக் கொண்டிருந்தேன்.
கடந்த மாதங்களில் என் தினசரி வேலைகள், பழக்கங்கள், உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, தியானம் என்று அனைத்துமே மாறிவிட்டன. இனியும் சமையல்குறிப்பு எப்போது எழுத ஆரம்பிப்பேன் என்று தெரியவில்லை. அதற்குமுன் இந்தப் பதிவை ஏற்றித்தான் வேர்ட்பிரஸுடன் மீண்டும் ‘பழகிப்பார்க்க’ வேண்டும். பின்னூட்டங்களுக்கும் தனிமடல்களுக்கும் நேரம் எடுத்து பதில் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
-0-

பரித்ரானாய ஸாதூனாம் என்று இந்தமுறை பதிவிற்குப் பெயர் வைத்ததற்கு இன்னொரு நியாயமும் கிடைத்தது. இந்த இடைவேளையில் நான் செய்த ஒரே கணினி வேலை, கீதைக்கு பாரதியார் தமிழில் மொழிபெயர்த்த உரையில் கொஞ்சம் தட்டி ரங்க்ஸ் உதவியுடன் தமிழ் இந்து தளத்திற்கு அனுப்பியது.
“எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க, நானும் ரௌடிதான்! நானும் பெரிய ரௌடிதான்!!…” என்று ஜீப்பில் ஏறிக்கொள்ள ஆசைப்பட்டாலும் நமக்கும் வடிவேலு மாதிரியே இந்த விஷயத்தில் ‘பில்டிங் ஸ்ட்ராங்தான் பேஸ்மெண்ட்தான் வீக்’ என்பதால் சும்மா அவ்வப்போது இந்தத் தளத்தை படித்துமட்டும் வந்தேன். இந்த முறை நான் பெற்ற தெங்கம்பழமாய் என்னிடம் இருந்த கிழக்கு பிரசுரித்த புத்தகத்தை வைத்து 15 நாளில் தட்டமுடியும் என்று நினைத்து, ஆனால் கீபோர்டில் வைத்த கையை எடுக்க முடியாமல் மூன்றே நாளில் முடித்தேன். கீதை காரணமா, அதற்குப் பொருள் எழுதியவர் காரணமா, நிலைகுலைந்த என் மனநிலை காரணமா தெரியவில்லை. கிழக்கு விட்ட பிழைகள், என் தட்டுப்பிழைகள் எல்லாம் சேர்த்து, ‘எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், எத்தனை அடியேன் எத்தனை செயினும்’ திரு. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட குழுமம் அமர்ந்து அத்தனையையும் திருத்தி மிக நேர்த்தியாக இந்தத் தளத்தில் வலையேற்றியிருக்கிறார்கள்.
தட்டியதில் என் பங்கைவிட இந்த கீதை உரை இந்த நாள்களில் என் வாழ்வில் என் உள்ளத்தில், செய்த பங்கு மிகமிக அதிகம். ஜெயமோகனின் ஓவர்டோசில் கொஞ்சம் பயந்து ஓடியிருக்கிறேன். இனி திரும்ப அவைகளையும் படிக்கவேண்டும். வாய்ப்புக் கொடுத்த இந்து.காம் தளத்தாருக்கு என் நன்றி.
பி.கு:
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் (சொல்வதெல்லாம் பிற்போக்காமே?)
இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது, 6, 7 மாதமாக வரமுடியவில்லை. இனிமேலும் என்னால் தொடர்ந்து எழுதமுடியுமா என்று தயக்கமாக இருக்கிறது என்று மட்டுமே தான் சொல்ல நினைத்தேன். வழக்கம்போலவே உண்மைத் தமிழ(ன்)ச்சி பதிவாக நீண்டுவிட்டதன்மூலம் சொல்லிக் கொள்வதென்னவென்றால்… நான் இன்னும் மாறலை/திருந்தலை. 🙂
Like this:
Like ஏற்றப்படுகின்றது...