தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மைதா – 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு
சீரகம்
முந்திரிப் பருப்பு
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
நெய்

ravaa dosai 1ravaa dosai

செய்முறை:

  • ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (வழக்கமாகச் சொல்வதுதான் – மாவுக் கலவையை அரை நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுலபமாகக் கலக்கலாம்.)
  • சிறிது நெய்யில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு துண்டுகள், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை என்ற வரிசையில் சேர்த்து தாளிக்கவும்.
  • தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து அப்படியே ஒருமணிநேரம் வைத்திருக்கவும்.
  • தோசை வார்க்க ஆரம்பிக்கும் முன் மேலும் தேவையிருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நீர்க்க இருத்தல் அவசியம்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒருகரண்டியால் மாவை ஓரத்திலிருந்து சுற்றிவிட்டு, நடுவிலும் விட வேண்டும். (மாவை இழுத்து, காலி இடத்தை நிரப்பப் பார்ப்பது, வட்டவடிவமாக வார்க்க ஆசைப்படுவது எல்லாம் தேவை இல்லை.)
  • சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து நன்கு வெந்து அடிப்பாகம் மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து திருப்பவும்.
  • அடுத்தப் பக்கமும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
  • சுடச்சுட மட்டுமே பரிமாறவும். ஆறினால் கட்டைமாதிரி ஆகிவிடும்.

* நான்-ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் சுவையான மொறுமொறுப்பான தோசைகள் வரும். முதலிரண்டு தோசைகள் சரியாகவராமல் படுத்தலாம். [அவற்றை ‘மாமியார் தோசை’ என்பது குழூஉக்குறி. :)] தொடர்ந்து சரியாக வரும்.

* என்னைப் பொருத்தவரை மாவு கரைத்ததுமேகூட வார்க்கலாம். சரியாக வரும்.

* முந்திரிப் பருப்பு, மிளகு, தேங்காய்த் துண்டுகள், எங்கேயோ கொஞ்சமாக வரும் நெய்வாசனை, இவையே ரவா தோசைக்கான அடிப்படை அலங்காரப் பொருள்கள். இவை நான்கின் கூட்டணிச் சுவைதான் ரவா தோசை என்ற அங்கீகாரத்தைத் தரும். (அதிகம் நெய்விடக் கூடாது. நெய், தோசையை மென்மையாக்கிவிடும்.)

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நடுவில் தூவினால் ஆனியன் ரவா.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்…

ஐந்தே நிமிடங்களில் மாவு தயாரித்து,  புதிதாய்  சமைப்பவர்கள்  கூட சுலபமாக செய்துவிடக் கூடிய எளிய தோசை.
 
தேவையான பொருள்கள்:

மைதா மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு –  தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய்.

maida dosai 1maida dosai

செய்முறை:

  • மைதா, ரவை, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சாதாரண தோசைமாவை விட நீர்க்க, கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (மைதா, ரவையை 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கட்டிகளில்லாமல் கரைப்பது மிகச் சுலபம்.)
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.
  • பொடியகா நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
  • அடுப்பில் தோசைக் கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • மாவை ஒரு கரண்டியால் எடுத்து கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து உள்வரை வட்டமாக ஊற்றிக்கொண்டே வரவும். (சாதாரணமாக தோசை வார்ப்பதுபோல் நடுவில் மாவை விட்டு கல்லில் வட்டமாக இந்த மாவைப் பரத்த முடியாது.)
  • சுற்றி சில துளிகள் மட்டும் எண்ணெய் விடவும். அதிக எண்ணெய் விட்டால் சொதசொதவென்று இந்த மாவு எண்ணெயைக் கக்கிவிடும்.
  • அரை நிமிடத்திலேயே அடிப்பாகம் வெந்து மேலெழுந்துவிடும். புதிதாக தோசை செய்பவர்கள்கூட சுலபமாக முழுதாகத் திருப்பிவிடலாம்.
  • அடுத்தப் பக்கமும் அரை நிமிடம் வேகவைக்கவும்.
  • மேலும் மொரமொரப்பாகத் தேவைப்பட்டால் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, இன்னும் சில நொடிகள் வைத்திருந்து எடுக்கலாம்.

* தோசை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே மாவு கெட்டியாகிவிட்டால் அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்க இருந்தால்தான் மெலிதாக சுவையாக வரும். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி (தோசை) மிளகாய்ப் பொடி, தக்காளிச் சட்னி, சாம்பார், வெந்தயக் குழம்பு போன்ற குழம்பு வகைகள்…
 

ஏற்கனவே சொல்லியிருக்கும்  பாகு செலுத்திச் செய்யும் அப்பம் தான் கார்த்திகைக்கும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இதையும் நான் அடிக்கடி செய்வேன்.

paal appam 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
தேங்காய் – 2 பத்தை
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • ரவை, மைதா, சர்க்கரை, பால், ஏலப்பொடி எல்லாவற்றையும் சொல்லியிருக்கும் அளவு மட்டும் கலந்து, கையால் கட்டியில்லாமல் கரைத்து, (சர்க்கரையைக் கரைக்க வேண்டாம், அதுவே கரைந்துவிடும்.) அப்படியே 4 மணி நேரம் வைக்கவும்.
  • இரண்டு பத்தை தேங்காயை மெலிதாக, பொடிப் பொடியாகக் கீறிக் கொள்ளவும்.
  • நான்கு மணி நேரம் கழித்து தேங்காயையும் கலவையில் கலந்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது பால் கலந்து கெட்டியான அப்ப மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, ஒரு கரண்டியால் சிறிது சிறிதாக மாவை எடுத்துவிட்டு, நிதானமான குறைந்த தீயில் இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்ததும் எடுக்கவும்.

paal appam 2

* சனிக்கிழமை போன்ற நாள்களில் ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.

* அப்பத்திற்கு கொஞ்சம் அதிக எண்ணெயும் அதிகப் பொறுமையும் குறைந்த தீயும் தேவை. எண்ணெயை அதிகம் குடிக்காது. ஆனால் அதிக எண்ணெய் இருந்தால் நன்றாக அசைந்து மூழ்கி, வேகும்.

* புதிதாகச் செய்பவர்கள், பாகு, பதம் என்றெல்லாம் குழம்புபவர்கள், ஆண்கள் கூட இதைச் சுலபமாகச் செய்யலாம். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் சுவையாக இருக்கும். திகட்டாது.

* அப்பக்குழியிலும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
ரவை – 1 டேபிள்ஸ்பூன்
மைதா – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • கோதுமை மாவை நன்கு சலித்துக் கொள்ளவும்.
  • சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை அதில் கரைத்துக் கொள்ளவும்.
  • அதில் கோதுமை மாவு, ரவை, மைதா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* அப்பக் குழியிலும் செய்யலாம்.

* விரும்புபவர்கள் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தையும் நன்கு மசித்துக் கலந்து கொள்ளலாம். மிகுந்த மென்மையாக வரும்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சக்தி வழிபாடு – சித்ரா ரமேஷ்.

போகிப் பண்டிகையன்று இனிப்புப் போளி தயாரிக்கும்போது அதே முறையில் சுலபமாக இந்தப் போளியையும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

மேல்மாவு:

மைதா – 1 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்(*)
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை (விரும்பினால்)
எண்ணை – 1/2 கப்
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

பூரணம்:
 
கடலைப்பருப்பு – 2 கப்
தேங்காய் – 1
கசகசா – 2 டீஸ்பூன்
உருளைக் கிழங்கு – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 8
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
நெய் – தேவையான அளவு

செய்முறை:

  • மேல்மாவு பொருள்கள் அனைத்தையும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்துவர வேண்டும். ரொட்டிக்கு மாவு பிசைவதை விட சிறிது தளர்வாக வந்ததும், மீதி எண்ணையையும் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • கடலைப்பருப்பை முக்கால் பதத்திற்குமேல் வேகவைத்து(*) நீரைவடித்துக் கொள்ளவும்.
  • வெந்த கடலைப்பருப்போடு தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, வேகவைத்த உருளைக் கிழங்கு, உப்பு, அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து இறுக்கமாகக் கிளறி இறக்கவும்.
  • மேல்மாவு, பூரணமாவு இரண்டையும் சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
  • மேல்மாவு உருண்டையை நடுவில் குழித்து கிண்ணம் மாதிரி செய்து, பூரண உருண்டையை வைத்து முழுவதும் வெளித் தெரியாமல் மூடி, சப்பாத்திப் பலகையில் வைத்து மெதுவாக சிறிசிறு அப்பள வடிவில் மெலிதாகப் பரத்தவும். பலகையில் மாவைத் தூவிக்கொண்டு அப்பளமிட்டால் சுலபமாக இருக்கும்.
  • இட்ட போளிகளை நெய் அல்லது எண்ணை தடவி தோசைக்கல்லில் போட்டு சீரான சூட்டில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

* கடலைப் பருப்பை 4 மணிநேரம் ஊறவைத்து நீரை ஒட்ட வடித்து மற்ற சாமான்களோடு அரைத்தும் செய்யலாம்.

* சிலர் முழுவதுமே கோதுமை மாவு உபயோகிப்பார்கள். இதற்கு கோதுமை மாவில் மேல்மாவைப் பிசைந்து உரலில் போட்டு இடித்து பின் வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணை தடவி அப்பளமாகத் தட்ட வேண்டும்.

* கடலைப் பருப்பை ஊறவைக்கவோ, வேகவைக்கவோ நேரமில்லையென்றால் தேங்காய் பச்சை மிளகாயை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். கடலை மாவை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, வறுத்த மாவையும் சேர்த்துக் கொட்டி கிளறி கொத்தமல்லித் தழை சேர்த்து, ஆறியபிறகு உருண்டைகளாக்கியும் போளி செய்யலாம். ருசியாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கொத்தமல்லிச் சட்னி (2)