இது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, இராப் பத்து இருபது நாள்களில் மட்டும் கோவிலில் கிடைக்கும் சிறப்புப் பட்சணம்..
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ
நெய் – 1/2 கிலோ
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- அரிசியை முதல்நாளே ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
- பிறகு அதை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈரப் பதத்துடன் கையால் நன்கு அழுத்தி அடைத்து வைத்துவிட வேண்டும்.
- சலித்ததில் கடைசியாக மிச்சம் இருக்கும் மெல்லிய ரவை போன்ற கப்பியை உப்புப் போட்டு தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இவைகளை முதல்நாளே செய்துவைத்துக் கொண்டால் தான் மாவு புளிப்பாக இருக்கும்.
- அடுத்த நாள், முதல்நாள் தயார் செய்துவைத்துள்ள கஞ்சியை அடைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- தேவைப்பட்டால் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
- பிசைந்த மாவை ஒரு வெள்ளைத் துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டை மாதிரித் தட்ட வேண்டும். தட்டையை விட சற்று தடிமனாகத் தட்ட வேண்டும்.
- வாணலியில் நெய்யைச் சூடாக்கி, அப்பங்களைப் பொன்னிறமாக, நன்றாக ஓசை அடங்கும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்து, நெய்யை வடித்தபின் உபயோகிக்கவும்.
[இதைவிடக் கடினமான ‘உருப்படி’ என்ற ஒரு ஐட்டம் இருக்கிறது. அது ஏகாதசித் திருநாள் சாற்றுமுறை கடைசி இரண்டு நாள்கள் மட்டுமே கிடைக்கும்.]
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சில பண்டங்களுக்கு தொட்டுக் கொள்ள வேறு சில பண்டங்கள் தேவை இருக்கலாம். சில பண்டங்களுக்கு அதைச் சாப்பிடுவதற்கான சூழ்நிலை மிக முக்கியம். டிசம்பர் ஜனவரி அரையாண்டுத் தேர்வு நிர்ப்பந்தங்கள்… வீடு முழுவதும் கால் வைக்க இடமில்லாமல் அறிந்ததும் அறியாததுமாக திருநாள் சேவிக்க வந்து தங்கியிருக்கும் தாத்தா பாட்டிகள்…(பலரை யாரென்று என் பாட்டிக்கே தெரியாத அளவு சத்திரமாக வீடு இருக்கும்.) வீதியிலேயே ஒரே ஒருவர் மட்டும் கார் வைத்திருக்கும் காலத்தில் ‘சர்.. சர்..’ என்று தெருவில் கடந்துபோகும் கார்கள் (ரோட்டுக்குப் போயிடாதமா, காரும் வண்டியுமா வருது; ஆத்தோரமாவே விளையாடு என்று அரைமணிக்கொரு அட்வைஸ் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து)… சாவகாசமாய் நடந்துபோகும் போலீஸ்காரர்கள் (ஒரே பயம்தான் போங்க!).. புதிது புதிதாய் கூட்டம் கூட்டமாய அலங்காரமாய் நடமாடும் மனிதர்கள்…
இத்தனை அமர்க்களத்தில், நாம் சாப்பிடுவது முக்கியமல்ல. நாம் சாப்பிடுகிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பது மிக முக்கியம்.:) வாசலுக்கு எடுத்து வந்ததுமே, “எனக்குடீ..” என்று ஒரு சிறு வட்டம் சூழ வேண்டும். தட்டையை மாதிரி கையால் உடைக்க முடியாது. கடினமாக இருக்கும். நமது கவுன் சிந்தடிக் என்ற சாக்கில் எதிரில் இருப்பவனில் எவனாவது இளிச்சவாயன் சட்டை நுனியில் வைத்து இன்னொரு இளிச்சவாயன் காக்காய் கடி(இதற்கு ஏன் இந்தப் பெயர்?) கடிக்கவேண்டும். இது கொஞ்சம் சிரமம். யார் வீட்டிலிருந்தாவது யாராவது பெருசு பார்த்துவிட்டால் “எச்சலா பண்றீங்க!!” என்று எட்டு ஊருக்குக் கேட்பதுபோல் திட்டு விழும். அப்படியே அவனை சட்டையோடு தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து நம்வீட்டு வாசல் கல்படி உயரத்துக்கு அவனை உட்காரவைத்து (கிட்டத்தட்ட ஸ்கூட்டர் ஓட்டுகிற மாதிரி போஸில்), செல்வர் அப்பம் மூடிய சட்டைக்கு மேல் கருங்கல்லால் அடித்தால் உள்ளே சிலபல துண்டுகளும் கொஞ்சம் பொடியாயும் சிதறி இருக்கும். யாருக்கு எந்த அளவு பெரிய துண்டு என்பது அவர்கள் நமக்கு அன்றைய தேதியில் எவ்வளவு தூரம் நண்பர்கள் என்பதைப் பொருத்தது. இது வானிலை அறிக்கை மாதிரி- அன்றாடம் மாறக் கூடியதுதான். சட்டைக்காரனுக்கு ஒரு துண்டோடு பொடியும் இலவசம். நமக்குக் கிடைப்பது சிறு துண்டு தான் என்றாலும் அதன் சுவையே ஓஹோ!
முதலில் வாயில் போட்டதும் எதுவும் பெரிதாக உறைக்காது. சிறிது சிறிதாக உப்புச் சுவையும் நெய்யும் மட்டும் பிரிந்து பிரிந்து உமிழ்நீரில் கலக்க ஆரம்பிக்கும். (உமிழ்நீர் சுரப்பதால் சுவையாக இருக்கிறதா? சுவையாக இருப்பதால் நீர் சுரக்கிறதா?) பரமானந்தமாக இருக்கும். ஏதோ ஒரு ஏமாந்த நொடியில் அப்பம் சிதைந்து, வாயில் கரைந்து, கடித்து முழுங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். இவ்வளவு சுவையாக இருந்தும் எப்பொழுதுமே முழு செல்வர் அப்பத்திற்கு ஆசைப்பட்டதேயில்லை. ‘எல்லாத்தையும் தெருவுக்குத் தூக்கிண்டு போகணும்’ என்ற மனநிலையே இருந்தது. இந்தச் சூழ்நிலை இப்போது கிடைக்காது என்பதாலோ என்னவோ இதன்மேல் இப்போதெல்லாம் மொத்தமாகவே ஆர்வம் போய்விட்டது.
வெள்ளி, பிப்ரவரி 2, 2007 at 3:39 முப
தட்டிய அப்பங்களை நெய்யில் பொரிக்கணுமா இல்லை அப்படியே சாப்பிடலாமா ?
வெள்ளி, பிப்ரவரி 2, 2007 at 6:42 முப
Jayashree, நல்லாக் கேட்டீங்க. நெய்யில பொரிக்கணும். 🙂 ரெங்கநாதருக்கு நெய் தவிர வேற எதுவும் சமையலுக்கு உபயோகிக்க மாட்டாங்க.
இந்த சமையல் குறிப்பு எழுதறதெல்லாம் எனக்கு ரொம்பப் புதுசா இருக்கறதால இன்னும் முழுமையா சொல்ல வரலை. 😦
கத்திரிக்காய் புளிக் கொத்சுல அதோட காம்பை எப்ப நீங்கணும்னு சொல்லவே இல்லையே, அதையும் சேர்த்தே பிசையணுமான்னு இன்னிக்கி இன்னொருத்தர் (ரகசியமா) சந்தேகம் கேட்டிருக்காரு. :((
திருத்திட்டேன். நன்றி.
வெள்ளி, மார்ச் 16, 2007 at 10:39 முப
// எவனாவது இளிச்சவாயன் சட்டை நுனியில் வைத்து இன்னொரு இளிச்சவாயன் காக்காய் கடி(இதற்கு ஏன் இந்தப் பெயர்?) கடிக்கவேண்டும். //
எந்தக் காகமும் தனக்குச் சாப்பிட ஏதேனும் கிடைத்தால் அதைத் தான் மட்டும் தனியாகச் சாப்பிடாமல் பராசக்தி ஸ்டைலில் “கா…கா…கா” என்று கரைந்து தன் இனத்தவரை அழைத்து பங்கிட்டுச் சாப்பிடுவது உங்களுக்குத் தெரியும்தானே ? 🙂
வெள்ளி, மார்ச் 16, 2007 at 11:15 முப
வாவ்! சூப்பர் பதில். நான் இப்படி யோசிக்கவே இல்லை. ரொம்ப நன்றி.
ஹும்.. காக்காயா இருந்த காலம் எல்லாம் நல்லாத்தான் இருந்தது. கடிதத் தொடர்பெல்லாம் இல்லைன்னாலும் இப்பவும் கோடை விடுமுறைக்கு ஊருக்குப்போகும் போது சந்திச்சு சிரிச்சுக்குவோம். 🙂
வியாழன், திசெம்பர் 20, 2007 at 8:34 முப
பாருங்க ஜெயஸ்ரீ
இந்தப் பதிவை சேமிச்சி வச்சி, கரெக்டா வைகுண்ட ஏகாதசி அதுவுமா செல்வர் அப்பம் சாப்பிட்டு பின்னூட்டம் போடறேன்! 🙂
சம்பார தோசை
திருப்பள்ளி எழுச்சிப் பொங்கல்…இதெல்லாம் கிடையாதா? 🙂
திங்கள், திசெம்பர் 24, 2007 at 10:18 முப
Krs, செல்வர் அப்பம் நல்லா வந்ததா? திருப்பள்ளியெழுச்சிக்குன்னு தனிப் பொங்கல் இருக்கா என்ன? ஏற்கனவே வெண்பொங்கல் குறிப்பு சொல்லிட்டேன்.
ஸ்ரீரங்கத்துல சம்பார தோசை சாப்பிட்டிருக்கீங்களா? ரொம்ப சுவையா இருக்கும். அடுத்த முறை ஸ்ரீரங்கம் போகும்போது கிடைச்சா குறிப்பு தரேன்.
வியாழன், ஒக்ரோபர் 30, 2008 at 4:35 பிப
Just for back links.
Get all informations for women, real estate, beauty, songs from http://www.penmai.com