போகிப் பண்டிகையன்று செய்யப்படும் இனிப்பு வகை…

தேவையான பொருள்கள்:

மேல்மாவு:

மைதா – 1 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்(*)
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை (விரும்பினால்)
எண்ணை – 1/4 கப்
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

பூரணம்:

கடலைப் பருப்பு –  2 கப்
வெல்லம் –  2 1/2 கப்
தேங்காய் – 1
கசகசா – 4 டீஸ்பூன்
வறுத்த கோவா – 1/2 கப் (விரும்பினால்)
ஏலப்பொடி –  2 டீஸ்பூன்
கிஸ்மிஸ் – 20 கிராம்
முந்திரி பருப்பு – 10
நெய் –  1 கப்

செய்முறை:

  • மேல்மாவு பொருள்கள் அனைத்தையும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்துவர வேண்டும். ரொட்டிக்கு மாவு பிசைவதை விட சிறிது தளர்வாக வந்ததும், மீதி எண்ணையையும் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • கடலைப்பருப்பை முக்கால் பதத்திற்குமேல் வேகவைத்து(*) நீரைவடித்துக் கொள்ளவும்.
  • வெந்த பருப்புடன், தேங்காய், முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது நெய்யை சூடாக்கி, கசகசா, கிஸ்மிஸ் இரண்டையும் பொரித்துக் கொண்டு, அரைத்த விழுது, பொடித்த வெல்லம், கோவா எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக சுருள வரும்வரை கிளறி இறக்கவும்.
  • மேல்மாவு, பூரணமாவு இரண்டையும் சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
  • மேல்மாவு உருண்டையை நடுவில் குழித்து கிண்ணம் மாதிரி செய்து, பூரண உருண்டையை வைத்து முழுவதும் வெளித் தெரியாமல் மூடி, சப்பாத்திப் பலகையில் வைத்து மெதுவாக சிறிசிறு அப்பள வடிவில் மெலிதாகப் பரத்தவும். பலகையில் மாவைத் தூவிக்கொண்டு அப்பளமிட்டால் சுலபமாக இருக்கும்.
  • இட்ட போளிகளை நெய்தடவி தோசைக்கல்லில் போட்டு சீரான சூட்டில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

* கடலைப் பருப்பை 4 மணிநேரம் ஊறவைத்து நீரை ஒட்ட வடித்து மற்ற சாமான்களோடு அரைத்தும் செய்யலாம்.

* சிலர் முழுவதுமே கோதுமை மாவு உபயோகிப்பார்கள். இதற்கு கோதுமை மாவிம் மேல்மாவைப் பிசைந்து உரலில் போட்டு இடித்து பின் வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணை தடவி அப்பளமாகத் தட்ட வேண்டும்.

* கடலைப் பருப்பை ஊறவைக்கவோ, வேகவைக்கவோ நேரமில்லையென்றால் மற்ற பூரண சாமான்களை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். கடலை மாவை லேசாக நெய்யில் வறுத்துக் கொண்டு, வெல்லம் பாகுவைத்து, அரைத்த விழுது, வறுத்த மாவையும் சேர்த்துக் கொட்டி சுருள வரும்வரை கிளறி ஆறியபிறகு உருண்டைகளாக்கியும் செய்யலாம். ருசியாக இருக்கும்.

* இதனைத் தயாரிக்கு போதே இதே முறையில் சுலபமாகக் கடலைப் பருப்பு கார போளியும் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

உருக்கிய நெய் அல்லது சூடான பாலுடன் பரிமாறலாம்.