முன்குறிப்பு
தாமதமான பதிவு
சொந்தக் கதை
கொஞ்சம் அதிகமாய் (எனக்கே) போரடிக்கும்

2011 ஜூலை மாதக் கடும் மழைநாளில் (மும்பையாக்கும்) எலக்ட்ரிக் ட்ரெயினில் ‘குர்லா’வில் இறங்கி ‘க்ளக் ப்ளக்’ சாலையில் கல்லூரி என்று குறிப்பிடப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு இரண்டாவது முறையாகப் போனேன். இது எத்தகைய மெனக்கெடல் என்று மும்பைவாசிகளுக்குத்தான் புரியும். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸ் சேர விபரங்கள் கேட்டபோது TC இல்லாத காரணத்தால் ஏற்கனவே இந்த ஸ்டடிசெண்டரில் மறுத்திருந்தார்கள். “இதுக்குமேல இந்தப் பொண்ணு படிக்கமாட்டா” என்று எப்பொழுதோ சொன்ன ஜோசியக்காரனின் வாக்கை வியந்துகொண்டு திரும்பிவிட்டேன். சிறிதுநாளில் ஐஐடியில் படித்தவர்களுக்கு டிசி கிடையாது என்றாலும் சேர்ந்திருந்ததைப் படித்துவிட்டு   மீண்டும் கிளம்பினேன். எதற்கும் இந்த முறை தீர்மானமாகப் பேசவேண்டும் என்று ரயிலில் செல்லும்போதே 3, 4 தடவை இந்தியிலும் சொல்லிப் பார்த்துவைத்திருந்தேன். ஆனால் அங்கே இருந்தவர், “அதெல்லாம் நேரடியாகச் சேர்பவர்களுக்குச் சரியாக வரும்; இங்கிருந்து நாங்கள் தபாலில் அனுப்பினால் டிசி இல்லையென்றால் எதையுமே பார்க்காமல் அட்மிஷன் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதுவும் 6 மாதம் கழித்துதான் திரும்பவரும். செலவான பணத்துக்கு நிர்வாகம் பொறுப்பல்ல” என்று நல்ல தமிழிலேயே தெளிவாகச் சொல்லித் திருப்பியனுப்பினார். மீண்டும் ஜோசியனின் வாக்கை வியந்துகொண்டு..

ஆனால் அப்படியே விட குடும்பம் விடவில்லை. மறுநாளே தட்கலில் டிக்கெட் புக்செய்து, கையில் திணித்து சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்திருந்த அப்பா “எதையாவது கிளப்பிவிட்டுண்டேயிரு!” என்று சிரித்துக்கொண்டே ஸ்டேஷனிலிருந்து அழைத்துப் போனார். என்னுடைய கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் டிசியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏதோ கம்ப்யூட்டர் ப்ரொகிராமிங் கோர்ஸுக்காகக் கொடுத்து சேர்ந்து, சிதம்பரத்தில் தம்பியோடு ஒருவாரம் தங்கி அலப்பறை செய்து எழுதிய தேர்வுக்கு ரிசல்ட் வந்து, “நீதான் முதல் மார்க்காம்” என்று அப்பா ஃபோன் செய்தபோது நான் கல்யாணம் ஆகி மாமியார்வீட்டில் இருந்தேன். மார்க் ஷீட் மட்டும் அப்பாவிடம் இருக்கிறது. டிசி என்ற ஒன்றை அவர்கள் தரவில்லை போலிருக்கிறது. யாரும் இத்தனை வருடங்களில் அதை யோசிக்கவுமில்லை.

Pic From Surya Teja Vadapalli FB

குளித்துக் கிளம்பினோம். சென்னைப் பல்கலை அலுவலத்தில் ‘ஒற்றைச் சாளர முறை’ இடத்தில் இருந்தவர் தீர்மானமாக “டிசி இல்லாமல் சேரமுடியாது, (எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் படித்த) அண்ணாமலை பல்கலையில் “தொலைந்துவிட்டது” என்று எழுதிக்கொடுத்து டூப்ளிகேட் டிசி வாங்கிவந்தால்தான் உண்டு” என்று அடித்துப் பேசினார். அவரைவிட அதிகமாக– (பிகேஎஸ் மாதிரி ஃபேன் தலையில்தான் விழவில்லை)– சேர்த்தே ஆகவேண்டும் என்று நானும் அடித்துப் பேசினேன். எதற்கும் ஐஐடி-காரர் பதிவை கையில் பிரிண்ட் எடுத்துப் போயிருந்தேன். ஒன்று நமக்கு அட்மிஷன், இல்லை அவர்களுக்கு கேன்சலேஷன் என்று முடிவோடு அடுத்தடுத்து பெரிய தலைகளைப் பார்க்கத் தயாரானேன். அதற்குள், வந்த முதல் கிராக்கியே வாய்ச்சண்டை என்ற சலிப்பு அவர் முகத்தில் தெரிந்தாலும் திடீரென்று குரலைத் தாழ்த்தி, சரி, பூர்த்திசெய்து தாருங்கள் என்று சொன்னார். நம்பவே முடியாமல் MA என்று  டிக் செய்து, subject இடத்தில் வைணவம் என்று (ஏன் இப்படி எழுதினேன் என்று இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.) எழுதினேன். அப்பா கூர்ந்து பார்த்துவிட்டு ஒருநொடி ஆச்சரியப்பட்டு அமைதியானார். மற்றவர்களை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்த ஒ.சா.மு. அலுவலர் (உண்மையிலேயே அபார சுறுசுறுப்பு) வைணவம் என்பதைப் பார்த்து, எங்கிருந்து வரீங்க என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் உடனடியாக எங்களுக்கு உட்கார இடம்கொடுத்து, மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தனது பலப்பல அலுவல்களுக்கிடையேயும் வதவதவென்றிருந்த அப்ளிகேஷனை 5 நிமிடத்தில் நிரப்ப உதவி (அவர் ஒவ்வொருமுறை அருகில் வந்து ஏதாவது சொல்லும்போதும் ‘அம்மா மின்னலு’ என்று அப்பா காதில் ஓட்டிக்கொண்டேயிருந்தார்.), வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் இவங்க எம்.ஏ வைணவம் படிக்கப் போறாங்க என்று சொல்லி பார்வைப் பொருளாக்கி (டென்ஷனாகிவிட்டேன்), வங்கியில் வரிசையில் நிற்கவேண்டியிராமல் அவரே பக்கவாட்டில் கொடுத்து வாங்கி, அடுத்தப் பத்து நிமிடங்களில் புத்தகங்களும் ஐடியும் கைக்குக் கிடைத்தன. புத்தகங்களை நான் வாங்குவதற்குள் அப்பா கவுண்டருக்குள் கைவிட்டு வாங்கிவிட்டார். “கரஸ்னா எல்லாரும் பாஸ் பண்ணினா போதும்னு நினைப்பாங்க. அப்படியில்லாம நல்லாப் படிச்சு நெறைய மார்க் வாங்கு” என்று சொல்லிக் கொடுத்தார். இதில் முக்கியமானது SSLC புத்தகத்தில் அப்பா பெயர்தான் இனிஷியல் என்பதால், இப்பொழுதும் அதையே உபயோகிக்கவேண்டும் என்று ஒ.சா.மு அலுவலர் சொன்னதில் அப்பாவிடம் ஒரு மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமின்றி இத்தனை வருடப் பழக்கத்தில் மாற்றி எழுதுவிடுவேன் என்பதால் ஒவ்வொரு தேர்விற்கு உள்ளே நுழையும் கடைசிநொடியிலும் அதை நினைவுப்படுத்தி அனுப்பிக்கொண்டிருந்தார்.

தேர்வு மையங்கள்

ஆனால் படித்துமுடித்தும் (அந்தக் கதை பின்னால்) நினைத்த மாதிரி முதலாண்டுத் தேர்வு எழுதுவது சாத்தியமாகவில்லை. 2012 ஜூன்- 9,10,16,17,22 என 5 தாள்கள். முந்தைய மாதமே கோவிந்த் வடோதரா மாற்றலாகி வந்துவிட, நான் மட்டும் பெண்ணின் பத்தாம் வகுப்பு ரிசல்டுக்காக மும்பையில். எப்படியும் முதல்வருடத்தை அங்கேயே முடித்துவிடலாம் என்று ரிவர்ஸில் கடைசிப் பரிட்சையிலிருந்து படித்துக்கொண்டிருக்க, இடையில் தடைபட்டு ரிசல்ட் வந்து, வடோதரா போய் ஸ்கூல் அட்மிஷன், வீடு பார்த்துத் திரும்பும்போது, ஜூன் 18-ஆம் தேதியே பள்ளி திறக்கிறார்கள் என்பதால் மும்பையைவிட்டு அவசரமாகக் கிளம்பவேண்டியதாயிற்று. இந்தமுறை தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தேர்வு என்ற ஒன்றை உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்பதில் இருந்த த்ரில் இப்படி பொசுக்’ என அணைந்ததில் கடுப்பாகி, ஊரில் இருக்கும்வரை முதலிரண்டு தாள்களையாவது எப்படியாவது சத்தமில்லாமல் தள்ளிவிடலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கனவே முதலில் கடைசிப் பரிட்சையிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அவை இப்பொழுதைக்குப் பிரயோசனமில்லாமல் போய்விட, உடனடியாக ஏறக்கட்டிவிட்டு வீடு மாற்றும் வேலைகளைக்கூட பார்க்காமல், பெண்ணை தாஜா செய்து சமையல் செய்யவைத்து, 4 நாள்களில் முதல் இரண்டாவது தாள்களில் கவனம் வைத்துப் படித்து, கஷ்டப்பட்டு செண்டரைத் தேடிப்போய்… கோவிந்த் இருந்திருந்தால் முதல் நாளே செண்டரை நேரில்போய் பார்த்துவைத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அழைத்துப்போகப்பட்டிருப்பேனே என்ற நினைத்த மனதை மிரட்டி அடக்கி– குர்லாவில் இறங்கினால் ஆட்டோக்காரர்கள் உள்பட யாருக்கும் தெரியவில்லை. கொட்டுகிற மழையில் விசாரித்துக்கொண்டே– ஒரு ஆட்டோக்காரரிடம் ஏற்கனவே கேட்டதுதெரியாமல் இரண்டாம் தடவையும் கேட்டுவிட, அடிக்கவே வந்துவிட்டார்- பதறிக்கொண்டே நேர்க்கோடாய்ப் போய் பஸ்ஸ்டாண்ட் க்ரில்லில் உட்கார்ந்திருந்த ஒரு காதலர் ஜோடியைப் பிடித்தேன். இவர்கள் தான் இன்றைய தேதியில் ஊருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள். நினைத்தமாதிரியே கைகாட்டினார்கள். அட, அட்மிஷனுக்கு விசாரிக்க வந்த கல்லூரியேதான், இப்பொழுது பெயர் மாற்றியிருக்கிறார்கள். உள்ளேபோய் ஹால்டிக்கெட் வாங்கி எண் பார்த்து, இடம் தேடிப்பிடித்து உட்கார்ந்தபோது பெருமையாய் இருந்தது. மூன்றுமணிநேரம் ஓரிடத்தில் அமர்ந்து உலகை மறந்து தேர்வை எழுதிவிட்டு மீண்டும் ட்ரெயின்பிடித்து வீடு திரும்பி பெண் தந்த காபியை அனுபவித்துக் குடித்து முடிப்பதற்குள்… இடையில் ஹைதையில் ட்ரெய்னிங் முடிந்து எதிர்பாராமல் மும்பை வந்த கோவிந்த். 😦 “வீரம் என்பது தைரியம் இல்லை, பயப்படாத மாதிரி நடிப்பது” என்று ஒருமுறை மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டேன்.

“ப்ரொகிராம் போட்டமாதிரி காஸ், ஃபோன், இண்டர்நெட் ஒன்னுமே சரண்டர் பண்ணலையா?”

“உட்கார்ந்த இடத்துலேருந்து நல்லாப் பேசுங்க. எல்லாத்தையும் உங்க பேருல வெச்சுண்டா நான் எப்படி சரண்டர் பண்ணமுடியும்? நீங்க எழுதிக்கொடுத்தாதான் முடியும்னு சொல்லிட்டாங்க..”

“சாமான் எல்லாம் ஒழிக்கலை. எல்லாம் லாஃப்ட்லயே இருக்கு. வீட்டுல எதுவுமே மாறலை.. ரெண்டுநாள்ல லாரி வந்துடும் சாமான் ஏத்த. என்ன பண்ணிண்டிருந்தீங்க ரெண்டுபேரும் ஒருவாரமா?”

“அதுக்காக எல்லாத்தையும் இறக்கி வெச்சா, காலை எங்க வைக்கறது. எல்லாம் ஒழிச்சுதான் திரும்ப மேல வெச்சிருக்கு. அப்படியே வண்டில ஏத்தவேண்டியதுதான்” பொண்ணு கமுக்கமாய் இருந்தாலும் எப்பொழுதுவேண்டுமானாலும் சிரித்துக் காட்டிக்கொடுத்துவிடுவேன் மாதிரி மூஞ்சியை வைத்திருந்தது. வேலை சொல்லி உள்ளே அனுப்பினேன்.

“பாங்க் லாக்கர் நகையை எங்க வெச்சிருக்க?”

Oops! சுத்தமாக மறந்திருந்தேன். To do list-லேயே இது இல்லை. இதன் ஆபரேஷன் முழுப்பொறுப்பும் என்னிடமே என்பதால் எதிராளியைச் சாடமுடியாது. காலில் விழவேண்டியதுதான்…

“விளையாடறீங்களா… அப்பப்ப போய் கொஞ்சம் நகை வெச்சு எடுக்கறதுமாதிரியா? எல்லாத்தையும் எடுத்துண்டு நான் தனியா எப்படி வரமுடியும்? பயமா இருந்தது. எப்படியும் உங்க ஸ்டாஃபெல்லாம் பார்க்க நீ பாங்க் போகும்போது, நானும் வந்து இதை முடிக்கலாம்னுதான்….” பாம்பை அடித்துவிட்டு அதன்மீது நின்றுகொண்டு பாத்ரூமில் கரப்புக்கு பயம் என்று பெண் சொன்னாலும் நம்பும் ஆண்சமூகம்– இதையும் நம்பியது.

1450751_545121375565500_13968540_n
இரண்டாவது தாளுக்கு ஒருமுறைகூட பாடங்களைத் திருப்பிப் பார்க்காமல் மறுநாள் பெண்ணின் ட்யூஷன் செண்டரில் பரிசளிப்பு விழாவுக்கு அப்பாவும் பெண்ணும் கிளம்பியபின் மதியம் சமையலையும் முடித்துவைத்துவிட்டு இரண்டாவது தேர்வுக்கு ஓடினேன். முந்தைய நாள் போல் 12 மணிக்கே கிளம்பி, ரயிலில் புரட்டலாம் என்று நினைத்திருந்தைச் செய்ய முடியாமல் ஒரு மணிநேரத்திற்குமேல் (ஞாயிறென்பதால்) வண்டியே வராமல் பதறித் தவித்து– அந்த டென்ஷனிலும் ஸ்டேஷன் புழுக்கத்திலும் கடும் தலைவலி எட்டிப்பார்க்க… மும்பையில் ரயிலைவிட வேகமாக எந்த வழியிலும் ஓர் இடத்திற்குச் செல்ல வாய்ப்பேயில்லை. இனி போய்ப் பிரயோசனமில்லை, வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஒரு வண்டி வந்தது. பிதுங்கும் கூட்டத்தில் ஏறி ஒரு வழியாக குர்லாவில் கீழே தள்ளப்பட்டு, மழைபெய்த ரோட்டில் வீடு தீப்பிடித்ததுபோல் தலை(வலி)தெறிக்க ஓடினேன். போய் அமர்ந்தபோது இதயம் வாய்வழியாக வெளியே வந்துவிடுமோ என்பதுபோல் இறைத்தது. படித்த எதுவுமே நினைவில்லை. இன்னொருமுறை எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தே கேள்வித்தாளை வாங்கினேன். நான் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த பரிபாடல் எல்லாம் காலைவாரிவிட, புருஷசூக்தமும் ஈஸாவாச்யோபநிஷத்தும் கஞ்சத்தனம் இல்லாமல் கைவழியே கரைந்துகொண்டிருந்தன. கடைசி 35 நிமிடங்கள் ஈஸா-விற்கு என்று நேரம் குறித்துகொண்டு எழுத ஆரம்பித்தும், எழுத எழுத சூழ்நிலை மறந்து உபநிஷத்தில் கரைந்து இறுதிப் பாடல்களில் உடல் நடுங்க ஆரம்பித்தது. நல்லவேளையாக ஜாவா குமார், அரவிந்தன் நீலகண்டன், பழைய சண்டை எல்லாம் நினைவு வந்து மீண்டும் தேர்வு அறைக்கு மனம் திரும்பிவிட்டது. 😉  நடுவில் தலைவலி எப்போது எப்படி சரியானது என்றே தெரியவில்லை. வீடுவந்து ராவோடு ராவாக வீட்டுவேலைகளையும், ஒரே பகலில் வெளிவேலைகளையும் அசுரசாதனையாக முடித்து மறுநாள் லாரியில் சாமானை ஏற்றியாகிவிட்டது. #சலாம்மும்பை

இடைத் தேர்வு ஜனவரி 2013-இல். பல்கலை அலுவலகத்துக்கு தொடர்ந்து ஃபோன் செய்து அவர்கள் வெளியிடும் முன்பே தேதிகளைக் கேட்டு வாங்கினேன். விடுபட்ட 3 தாள்களை– குஜராத்தில் தேர்வுமையம் எந்த ஊர் என்று தீர்மானமாகத் தெரியாததால், தமிழ்நாட்டில் (ஸ்ரீரங்கத்தில் படித்து உருப்படமுடியாது) சேலம் என்று முடிவுசெய்து வாங்கிய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் 7. RAC கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பினேன் ரயிலில் உட்கார்ந்து படித்துக்கொண்டே போய்விடலாம் என்று மாலை 6 மணி வண்டிக்கு சாப்பாடு தயாரித்துக்கொண்டு கிளம்ப இருக்கையில் மதியம் 1 மணிக்கு தயாரிக்கப்பட்ட சார்ட்டில் WL-1லியே என் நிலை நின்றுவிட்டது. முன்னேற்பாடாக கோவிந்த் ஏற்பாடு செய்திருந்தபடி மறுநாள் அஹமதாபாத் சென்று விமானத்தில் சென்னை- விமானத்திலிருந்து குதித்தோடி முக்கால் மணிநேரத்தில் இரவு 10:25-க்கு தாம்பரத்தில் சேலம் வண்டியைப் பிடிக்கவேண்டிய நெருக்கடியில் சென்னையில் உதவிக்கு அந்நேரத்துக்கு யாரை அழைப்பது என்ற குழப்பி முடிப்பதற்குள்… அப்பா ஶ்ரீரங்கத்திலிருந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆட்டோ பறந்தது என்கிற க்ளிஷே வாக்கியத்திற்கு அன்றுதான் பொருள் தெரிந்தது. அப்பா தேர்வுகளுக்கு முன்னரே தேர்வுமையக் கல்லூரிக்குப் போய் தேர்வெழுதுமிடம், கழிவறை வசதி வரை செக் செய்துவிட்டு வந்தார். எங்கே யார் உட்கார வேண்டுமென்பதையே அரை மணி நேரம் முன்னர் தான் நோட்டீஸில் ஒட்டி, கால் மணி நேரம் முன்னதாகவே கேள்வித்தாள், விபரங்கள் நிரப்ப பதில் தாள் எல்லாவற்றையும் கொடுத்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள். ஒவ்வொரு நாளும் உட்காரும் இடத்தை மாற்றும் ஸ்ட்ரிக்ட் ஆப்பீசர்களாய் இருந்தார்கள். மும்பையில் வயதானவர்கள் உள்பட எல்லோரும் சூபர்வைஸரிடம் வந்து கேள்வித்தாளை வாங்க, எனக்கு மட்டும் தானே அருகில்வந்து கொடுத்தார்கள். “ஐயோ படிக்கறதுதான் வைணவம்; ஆனா நான் பெரிய பொறுக்கி!” என்று மனசு அலறியது. உண்மையிலேயே கூச்சமாக இருந்தது. நல்லவேளையாக பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக என் அருகில் அமர்ந்த ஒருவரை ஹால்டிக்கெட் முதற்கொண்டு தாங்களே கொண்டுவந்து கொடுத்து ஒவ்வொருவராய் வந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கிற பரிட்சை டென்ஷனிலும் சூர்யாவிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் சூர்யா நினைவு வருகிறது என்று மண்டைக்குடைச்சலாய் இருந்தது. திருமங்கையாழ்வாரை எழுதிக்கொண்டிருக்கையில் ரொம்பநேரம் குடையவிடாமல் நல்லவேளையாய் ஒரு காவல்துறையாளர் வந்து சல்யூட் அடித்ததில் புரிந்துவிட்டது. ஹாஹ் அந்த போலீஸ் ஹேர்கட்! மதியம் சரியாக 2 மணிக்கு எழுத ஆரம்பிக்கும்போது கரண்ட் போய்விடும் என்றாலும் வியர்க்காத அளவுக்கு அந்தக் காலக் கட்டடம் மிக வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. என்றாலும் இந்தக் கல்லூரியின் கழிவறை வசதி குறித்து அவசியம் பின்னர் எழுதவேண்டும். குடும்ப நினைவே இல்லாமல் சௌகரியமாய் அம்மா சமைத்துபோட அண்ணன், அப்பா என்று அருமையான 15 நாள்களும் 3 தேர்வுகளும்…. ஆனால் அப்படியே நிம்மதியாக இருந்துவிடமுடியவில்லை. முதல் தடவை அட்மிஷனுக்காகச் சென்னை சென்றிருந்தபோது, எல்லா விதங்களிலும் பெண்ணை பார்த்துக்கொள்ள முடிந்த கோவிந்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது பெண்ணின் நீளமான தலைமுடி. மும்பையின் காலை 6 மணி அவசரத்தில் எதிர்வீட்டு ‘ஆண்ட்டி’யிடம் போய்த்தான் பின்னிக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த முறை முடிக்குறைப்பு செய்துவிட்டதால் அந்தப் பிரச்சினையும் இல்லை என்று இருந்த நிம்மதியில் பெரிய கல்லாய், ட்ரெயினிங் என்று கோவிந்த் மும்பை கிளம்பவேண்டியிருக்க, இரண்டு நாள்களுக்குப் பெண்ணை அவசரமாக நண்பர் வீட்டில் விடவேண்டியிருந்தது. எங்கள் வாழ்நாளில் நாங்கள் இப்படிச் செய்வோம் என நினைத்ததில்லை. :((

அதனால் ஜூன் 2013-இல் நடக்கவிருந்த இரண்டாம் வருடத் தேர்வுகளை தேர்வுமையம் எந்த ஊரில் இருந்தாலும் குஜாராத்திலேயே எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த ஒருவருடப் பழக்கத்தில் சென்னை பல்கலைக்கழகம் எந்த மாதம் எந்தக் கிழமைகளில் ஆரம்பித்து முடிப்பார்கள் என்று முன்னதாகவே ஊகிக்க முடிந்ததால் எங்கு நடந்தாலும் இருந்து தங்கி எழுத உதவியாக அப்பா முன்கூட்டியே வந்துவிட்டார். தேர்வுநாள் காலை வரை காபி, டிபன், வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழித்துபோடுவது என்று வேலைகளைக் கட்டியழாமல் முன்னதாக ஒரு நாள் இரவாவது பாடங்களைத் திருப்பிப் பார்க்க நேரம் வேண்டும் என்று முடிவுசெய்து ஒவ்வொரு வாரமும் முதல்நாளே பர்தோலி (Bardoli) சென்று அறையெடுத்துத் தங்கி அடுத்தடுத்த இரண்டு வார சனி, ஞாயிறு தேர்வுகளையும், கடைசியில் இருந்த ஒரேயொரு தேர்வை மட்டும் அன்று அதிகாலையில் கிளம்பிப் போயும் எழுதினேன். கடைசிநாள் சனிக்கிழமை காலை 6 மணிக்குக் கிளம்பி 7:30 மணிக்குள் 160 கிலோமீட்டரைக்  கடந்து டிரைவர் சாதனை படைத்தார். இந்தப் பள்ளிக்கும் முதல்வாரமே குடும்பத்தோடு பார்த்துவரச் சென்றிருந்தோம். அந்த ஊர் பாங்க் மேனேஜர் தவறுதலாக எங்களை முற்றிலும் பிரம்மாண்டமான ஒரு இஸ்லாமிய மதராஸாவுக்குக் கூட்டிப்போய்விட்டார். பழக்கமில்லாத அந்தச் சூழ்நிலையே அச்சமூட்டுவதாக இருந்தது. ஸ்கூல் பெயர்ப் பொருத்தம் சரியில்லை, இதுவாயிருக்காது என்று மல்லுக்கட்டி, ஒருவாறு வெளியே விசாரித்து, சற்றுத் தள்ளி அதே பகுதியில் இருந்த MA Memon என்கிற சிறிய இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தைச் சரியாகப் பிடித்து விசாரித்தோம். நிர்வகிப்பவர் எங்களை வரவேற்றுப் பேசினாலும் அஹமதாபாத்தில் இல்லாமல் இங்கே இருப்பதற்கு எங்கள் அதிருப்தியைச் சொன்னபோது அவர் சற்றே வெகுண்டார்.  மிக விரும்பி சென்னைப் பல்கலையிடமிருந்து இந்த வாய்ப்பைப் பெற்றுச் செய்துவருவதாகக் கூறினார். அன்றுதான் மதியம் ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிட்டிருக்க அன்றே மாலையே நான் அதை எடுத்துவந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியபட்டார். எப்பொழுதுமே இணையத்தில்தான் குடித்தனம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். கையில் வாங்கிப் பார்த்தவர், என் பிரிவு வைணவம் என்பதில் முகம் சுருங்கினார். இன்னொருவரிடம் தீவிரமாக குஜராத்தியில் உரையாடினார். “ஐயோ நான் காஃபிராகிவிட்டேனா” என்று ஏற்கனவே மதராஸாவுக்குள் நுழைந்து வந்த அதிர்ச்சியில் மனதுக்குள் அலறிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்தது என்னவென்றால், ஒவ்வொரு நாளும் என்னை முதல் பென்ச்சில் உட்காரவைத்து, முதலில் எனக்குக் கேள்வி, விடை மற்றும் நிரப்பவேண்டிய மற்ற தாள்களைக் கையில் தந்து, பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதே தாள் சுலபமாக இருக்கிறதா என்று அக்கறையாக விசாரித்து, கூட வந்திருந்த என் அப்பாவை (இவர் அன்றாடம் காலையில் இட்டுக்கொண்ட ஸ்ரீசூர்ணம் கூட கலைக்காமல் வருவார்) வரவேற்று மூன்று மணிநேரமும் லைப்ரரியில் அமரவைத்து, கடைசிநாள் வரை உபசாரம் செய்தார்கள். பொதுவாக எல்லோருக்குமே நல்ல வரவேற்பும் தேர்வு நடத்துவதில் சிறந்த கண்காணிப்பும் இருந்தது. முன்பு தில்லியில் தேர்வுகள் எழுதியிருந்த ஒருவர் மொபைல் ஃபோன்களைக் கூட இங்கே அனுமதிக்காததைத் திட்டிக்கொண்டேயிருந்தார். மற்ற செண்டர்களில் எழுதும்போது குறிப்புகளை மொபைலில் எழுதிக்கொண்டுவந்துதான் தேர்வு எழுதுவார்களாம். மிக அதிகமான எண்ணிக்கையில் எம்பிஏ மாணவர்களே இருந்தனர். அதற்கு அடுத்ததாக சைக்காலஜி. தவிர மற்ற பிரிவினர். அத்தனை பேரிலும் நான் தாமதமாக உள்ளே நுழைந்தாலும் மற்றவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, என்னுடய தாள்களை முதலில் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்தார்கள்.  உபசரிப்பில் சந்தேகப்பட்ட சிலர் தனியாக என்னிடம் நான் யார் என்றும் விசாரித்தார்கள். பொறம்போக்கு என்பதற்கு ஹிந்தியில் வார்த்தை தெரியாததால், ஜெயஶ்ரீ என்றுமட்டும் சொல்லிவைத்தேன். ஏன் முதல் அறிமுகத்தில் முகம் சுருங்கினார் என்று கடைசிநாளில் தெரிந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் தேர்வுமையங்களுக்கு கேள்வித்தாள்கள் தபாலில் வந்து தேர்வுநேரத்தில் சீல் உடைத்துத் தருவதுபோல் இல்லாமல் இங்கே தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பாக பல்கலையிலிருந்து ஈமெயிலில் கேள்வித்தாள்களை அனுப்புகிறார்கள். இவர்கள் அவற்றை தேவையான எண்ணிக்கையில் ப்ரிண்ட் எடுத்து சரியாக தேர்வு நேரத்தில் விநியோகிக்கிறார்கள். என் கேள்வித்தாள் மட்டும் அவர்கள் அறியாத தமிழில் இருப்பதால் சரியாகப் போகவேண்டுமே என்று யோசித்ததாகச் சொன்னார்கள்.

இப்படியாக சுண்டைக்காய் கால்பணம்… கதையென குடும்ப இஸ்திரியான என் தேர்வு எழுது படலங்கள் நிறைவடைந்தன. ஆனால் இந்தத் தேர்வுகளுக்குப் படித்துத் தயார் செய்வதற்குள்…

(அதெல்லாம் அப்புறம்தான்…)

==

MA Vaishnavism 2013 Degree Certificate1

டிஸ்டிங்ஷன் மார்க் வாங்கியும் முதலாண்டுத் தேர்வை மாற்றல் காரணமாக மும்பையில் மே மாதம் எழுத முடியாமல்  வடோதரா போய் அக்டோபர் மாதம் எழுதியதால் “முதல் வகுப்பு” என்று மட்டுமே போட்டிருக்கிறார்களாம். விசாரித்தால், தேர்வு மனுவிலேயே அடியில் குட்டியாக இதுபற்றிக் குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஹூம், நாம் எப்போது அதையெல்லாம் படித்திருக்கிறோம், படித்திருந்தால் மட்டும் என்ன மாறியிருக்கப் போகிறது? 😦

ஆதௌகீர்த்தனாரம்பத்திலிருந்தே வைகுண்ட ஏகாதசி என்பது உள்ளூர்க்காரர்களுக்கு– முக்கியமாக வீட்டுப் பெண்களுக்கு உண்டானதல்ல என்றே இருந்துவந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் கோயில் நிர்வாகத்தில் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் ஏகாதசி 20 நாளும் வீடு– ஊர்பேர்கூட தெரியாத விருந்தினரால் ஜேஜே என்று இருக்கும். ‘பெருமாள் சேவிக்க வந்திருக்கோம்’ என்ற ஒற்றைப் பதம் போதுமாயிருந்தது பாட்டிக்கு யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க. வருகிறவர்களில் ஆசாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் ‘மாமிக்கு தோஷமில்லை’ என்பவர்களால் பிரச்சினை அதிகமில்லை. வீட்டில் காசு இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் சமைத்துப் போடும் சாமர்த்தியம் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இருந்தது.

ஆனால் ஆசாரக்காரர்களுக்கு (ஒருவர் தொட்டு அடுத்தவர் சாப்பிடமாட்டார்கள் என்று) நீண்ட ரேழி முழுவதும் தனித்தனியாக கும்முட்டி அடுப்பு, சருகுத் தொன்னைகளில் அவர்கள் கேட்கிற மளிகைச் சாமான்கள் எல்லாம் எடுத்துத் தருவது, அவர்கள் ‘சுத்தபத்தமாய்’ சமைத்துச் சாப்பிட்டபின் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவைப்பது, (உண்மையில் 6, 7 குடும்பங்களுக்கு தனித்தனியாக சாமான் வழங்கி சமைக்கவைப்பதைவிட நாமே ஒரே தடவையாக 50 பேருக்கு சமைப்பது சுலபம் என்பது இப்பொழுதைய அம்மாவின் கூற்று.), பாலுக்கு தோஷமில்லை என்று பத்துப் பதினைந்து தடவை காபி போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருப்பது… “கோவில்ல வேட்டுப்போட்டுட்டானே, சித்த என் புடைவையைமட்டும் பிழிஞ்சு உலர்த்திடேன்டிம்மா, உள்ளூர்க்காரிதானே, உனக்கு இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… ரெங்கன் உனக்கு ஒரு கொறையும் வெக்கமாட்டான்” என்று அவசரமாக ஓடிக்கொண்டே அவர்கள் கூறும் ஆசியோடு கூடிய ஆணைகளைச் சிரமேற்கொண்டு கிணற்றில் நீர் இறைத்து,  9 கஜம் சின்னாளப்பட்டுகளையும், 8 முழம் வேட்டிகளையும், துண்டுகளையெல்லாம் தூக்கமுடியாமல் தூக்கித் தோய்த்து, கையால்(?!) பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு(?!) கூட்டிக்கொண்டு சில அரையர் சேவைகளுக்குப் போயிருக்கலாம். அம்மாவிற்கு அதுவும் இல்லை. அதிகபட்சமாய் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டும் இலவசமாய் ஆர்யபடாள் வாசலில் மோகினி அலங்காரம், ஏகாதசி காலையில் மணல்வெளியில் ரத்னங்கி கம் வைகுண்டவாசல், யாராவது பட்டர் அல்லது கோயில்காரர்கள் மிஞ்சிப்போய் பாஸ் கொடுத்தால் கடைசிக்கு முதல்நாள் முத்தங்கி அல்லது கடைசி நாள் நீண்ட வரிசையில் இலவச தரிசனம் என்பதோடு முடிந்துவிடும்.

எங்களுக்கெல்லாம் அந்த 20 நாளும் சமர்த்தாக இருந்து, “பரவாயில்லையே பத்தானி நன்னா வளர்த்திருக்கா பேத்தி பேரன்களையெல்லாம்” என்று பேர் வாங்கிக் கொடுப்பது வருடாந்திரக் கடமை. முக்கியமாய் வைகுண்ட ஏகாதசி 3 நாளில் நம்வீட்டுக்குள்ளேயே நாம் தொலைந்துபோய்விடுவோம்.

Muththangi 9th day

இப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. யாரும் யார் வீட்டுக்கும் தேவையில்லாமல் செல்வதில்லை, சென்றாலும் அதிக வேலைகள் கொடுப்பதில்லை. பிள்ளைகள் பரிட்சை என்றால் பேசுவதே பிழை. அதனால் ஊர் கொண்டாட்டங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் அதிலும் அப்பொழுதைப் போலவே இப்பொழுதும்  பலருக்கு பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். முக்கியமாய் கணக்கில்லாமல் பெருகிவிட்ட கூட்டத்தால் கோயிலுக்குச் செல்வது, அவர்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்துவது பலருக்கு சாத்தியமில்லாமலிருக்கலாம். அதைக் கணக்கில் கொள்ளாமல் நிர்வாகம் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

Govindarajur Rajarethinam
1. ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தில் கிளி மண்டபத்தில் சென்று அரங்கரை தரிசிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்து வந்தது. அதற்கும் இந்த வருடம் வந்தது வினை. நாழி கேட்டான் வாசலுக்குள் நுழைவதற்கே இயலாத வண்ணம் முத்தங்கி சேவை தரிசன வரிசையினை வைத்து கிளி மண்டபம் நேரிடையாக செல்லும் பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தி விட்டது கோவில் நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் ஏகாதசி திருவிழாவில் உள்ளுரில் உள்ள சாதாரண மக்கள் கலந்து கொண்டு அரங்கரை தரிசிக்கும் நிலையினை எப்பொழுதுதான் நிர்வாகம் ஏற்படுத்தும்? சென்ற அரசில் கூட இந்த அளவிற்கு கட்டுபாடுகள் கெடுபிடிகள் இல்லை என்பது நிதர்சனம் முதல்வருக்கு தெரிந்து இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா அல்லது நிர்வாகம் மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான செயல்பாடுகளா என்பது தெரிய வில்லை.

2. இன்று (8-1-2014) மதியம் ‘திருக்கோவில் அறிவிப்பு’ என்று தெருக்கள் தோறும் டாம் டாம் மூலம் அறிவிப்பு செய்ய பட்டதை கேட்க நேர்ந்தது. ஏகாதசி திருவிழா வின் முக்கிய விழா நாட்களான மோகினி அலங்காரம் மற்றும் ஏகாதசி ஆகிய இரு தினங்களிலும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுரம் தவிர மற்ற இரு திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டர்கள் என்பதே அந்த அறிவிப்பு. மோகினி அலங்காரம் அன்று கோவில் உள்ளே தரிசனம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் மணல் வெளியில் நம்பெருமாள் உலா வரும்பொழுது தரிசிக்க எதுவாக வெள்ளை கோபுரம் மற்றும் தாயார் சந்நிதி கோபுரம் வழியாக சென்று இதுவரை தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வாயிலில் பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதை நிர்வாகம் உணர்ந்ததாக தெரிய வில்லை. மேலும் ஏகாதசி அன்று முதல் நாள் இரவில் கோவில் உள்ளே சென்று தங்கி இருந்து சொர்க்க வாயில் வழியாக வர இயலாத முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள், தாய்மார்கள் அதி காலை திருக்கொட்டகையில் சாதாரா மரியாதையின் பொழுது வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக ஆயிரக்கால் மண்டபம் வந்து இதுவரை தரிசனம் செய்து வந்த உள்ளூர் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. சொர்க்க வாசல் செல்ல விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வரிசையில் வரிசையில் நின்றது போக நேரடியாக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம் பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்களும் அதே வரிசையில்தான் நின்று செல்ல வேண்டும் என்பது ஒரே பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம்பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்கள் திருக்கோவில் பக்கம் வர வேண்டாம் என்பதற்கே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கருதுகிறேன். இது தொடர்பாக திருக்கோவில் நிர்வாகத்தின் சரியான விளக்கத்தினை பெற்று பதிவிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும்.

இவை அங்கிருப்பவர் சொல்லியவை, நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் அங்கிருக்கும் மற்றவர்களும் சொல்வதை வைத்துச் சொல்ல நினைப்பதெல்லாம்…

மேன்மேலும் பெருகுகின்ற கூட்டத்திற்காக நிர்வாகம் சிலபல மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் அதில் சாமான்யர்கள் பாதிக்கப்படாமல், மேலும் பலரும் பயன்பெறும்படி அந்த மாற்றங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியும்.

படம்(பகல்பத்து  9ஆம் திருநாள் முத்தங்கி) Sivakumar N Vellala

 

கைசிக ஏகாதசி குறித்து இங்கே கொஞ்சமாய் குறிப்பிட்டிருக்கிறேன்“ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி” என்று இணையத்தில் தேடினால் மேலும் விபரங்கள் கிடைக்கும்.

இந்த வருடச் செய்திக்கான சுட்டி: பிரம்ம ரத மரியாதை ரத்து பிரச்னையில் சுமுக தீர்வு

கோயில் ‘ஸ்ரீபாதந்தாங்கிகள்’ என்கிற பெருமாளைச் சுமந்துசெல்பவர்கள் மறுத்தாலும் பிற சீடர்கள் விரும்பிச் செய்யத் தயாராக இருந்தும் ம.க.இ.க போராட்டத்திற்கு பயந்து இராமானுஜர் காலத்திலிருந்து தொடர்ந்து நடக்கும் பிரம்ம ரதம் இந்த வருடம் நடக்காமல் ‘சுமுக’மாக முடிந்தது. இதுகுறித்து பட்டர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிறது சன் செய்திகள்.

போராட்டத்தின் நோக்கம்: மனிதனை மனிதம் சுமக்கும் அவலத்தை எதிர்த்து.

எனவே இந்த வருடம் ஏகாதசி இரவில் விடிய விடிய கைசிக புராணம் படித்த பட்டரய்யங்கார், முடித்த நொடியே (அதிகாலை) கோயிலின் பிற மரியாதைகளான சந்தனம், மாலை, மேளம் உள்பட அனைத்தையும்கூட மறுத்துவிட்டு (“நான் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யவந்தேன்; செய்துவிட்டேன். இவை எதுவும் தேவையில்லை”) வீட்டுக்குச் சென்றுவிட்டார். ம.க.இ.க உடனே தன் வெற்றியை, மகிழ்ச்சியை 10,000 வாலா வெடித்துக் கொண்டாடியும்  இன்று ஊரெங்கும்  பிரம்ம  ரதத்தைப் புறக்கணித்து ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் செவிவழிச் செய்தி.

அடுத்த மாதம் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இராப்பத்து ‘அரையர் சேவை’ முடிந்து கடைசியில் 4000 பாசுரங்களும் பாடிய அரையருக்கும் இந்த பிரம்மரத மரியாதை வழக்கமாக உண்டு. தமிழ்ப்பெயர் வைத்தாலே வரிவிலக்கு தரும் அரசாங்கத்தின்கீழ் இருக்கும் ‘இந்து’ அறநிலையத் துறையும் அறங்காவலர்களும் இந்த ஆண்டு என்னசெய்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

 வினவு

திருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா – அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை

“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு?” என்று நான் கேட்கமுடியவில்லை.

வழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார்.  😦

தீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…

கம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

 

மகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என்  சிற்றறிவை  வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

 

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

 

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர்  அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

 

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

 

* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.

* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.

* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.

* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே  நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான  :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…

கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

தேவையான பொருள்கள்:

பனைவெல்லம் (கருப்பட்டி) – 500 கிராம்
நெய் – 300 கிராம்
நல்லெண்ணெய் – 200 கிராம்
தேன் – 100 கிராம்

வறுத்துப் பொடிக்க:

அரிசித் திப்பிலி – 100 கிராம்
கண்டத்திப்பிலி – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
பரங்கிச் சக்கை – 50 கிராம்
சித்தரத்தை – 50 கிராம்
கசகசா – 50 கிராம்
கிஸ்மிஸ் – 50 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
ஜாதிபத்திரி – 10 கிராம்
எள் – 10 கிராம்
ஏலக்காய் – 10
கிராம்பு – 5
விரளி மஞ்சள் – 2

செய்முறை:

  • வறுத்துப் பொடிக்கச் சொல்லியிருக்கும் எல்லாப் பொருள்களையும்- நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்- தனித்தனியாக, குறைந்த தீயில், நிதானமாக, பக்குவமாக (திப்பிலியை வறுத்தபிறகு, அதைக் கையில் எடுத்து ஒடித்தால் ஒடியவேண்டும். இதுவே எல்லாப் பொருளுக்கும் பதம்.) வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் மிக்ஸியில் மிக மென்மையாகப் பொடித்து சல்லடையில் சலிக்கவும்.
  • அடுப்பில் வாயகன்ற வாணலியில் பனைவெல்லத்தைப் போட்டு, நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
  • வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  • சலித்துவைத்துள்ள பொடி, தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஆறியதும் காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைத்தால் சுமார் பத்துமாதங்கள் வரை கெடாது.

* மருந்து பக்குவமாக வர, வெல்லம் அதிகநேரம் அடுப்பில் காயக்கூடாது. ஒருமுறை அடுப்பிலிருந்து இறக்கியபின் மீண்டும் வெல்லத்தை அடுப்பில்வைத்துக் காய்ச்சக் கூடாது.

* மருந்து கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம்.

** எச்சரிக்கை: கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற நாட்டுமருந்து, கிளறின லேகியங்களை (மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்) உண்பது கூடாது.

அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
  • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
  • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
  • சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
  • சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
  • கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
  • நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும். 
  • 

* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும். 

* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.

* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா— பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.

* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
டால்டா – பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 20
டைமண்ட் கல்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு
ஏலக்காய் – 4
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
மஞ்சள் கலர்

பூந்தி லட்டு

 

செய்முறை:

  • கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு சலித்துக்கொள்ளவும்.
  • சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் டால்டாவைக் (அல்லது நெய்யைக்) காயவைக்கவும்.
  • பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (விடும்போது டால்டா நன்கு காய்ந்து, தீ மிதமான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடோ, தீயோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.)
  • வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி விழுந்ததும் நிறுத்திவிட்டு, திருப்பிவிட்டு வேகவிடவும்.
  • காராபூந்திக்குச் செய்வதுபோல் மிகவும் கரகரப்பாக ஆகும்வரை காத்திருக்காமல், வெந்ததும் சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில் எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும்.
  • ஒரு கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பாகுப் பதத்திற்கு சிறிது கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும். இறக்குமுன், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.
  • பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலந்து, கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

* காய் (கூம்பு) பிடிக்க நினப்பவர்கள் இங்கே சொல்லியிருப்பதைப் போல் இந்தக் கலவையிலும் காய் பிடித்துக்கொள்ளலாம்.

* ரிஃபைண்ட் எண்ணெயிலும் பூந்தியைப் பொரிக்கலாம். ஆனால் இனிப்புகளுக்கு நெய் அல்லது டால்டாவே சுவையைக் கூட்டிக் கொடுக்கும். நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். டால்டாவில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.

* பச்சைக் கற்பூரம் சேர்ப்பதுதான் வீட்டுத் தயாரிப்பு என்பதன் முக்கிய அடையாளம். கொஞ்சம் உம்மாச்சி வாசனையும்.

* கிராம்பு பிடிக்காதவர்கள், ஒற்றைக் கிராம்பை உச்சியில் செருகிவிட்டால் விரும்புபவர்கள் மட்டும் சாப்பிடலாம்; மற்றவர்கள் தவிர்க்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை கிராம்பு தவிர்க்கக் கூடாத, லட்டிற்கு மட்டுமே பிரத்யேகமான முக்கியச் சுவை/வாசனை.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)
பால் – 500 மிலி
மாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
இலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

  • பாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • திரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யு)
  • அரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை,  வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)
  • உதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

ஆடிப் பெருக்கை முன்னிட்டு வாசிக்க….

கட்டுரை: ஒரு நதியின் நசிவு

கவிதை: நதி நீராலானது மட்டுமல்ல

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 க்கு எழுதி மூன்றாம் பரிசு வென்ற வெண்பா (மரபுக் கவிதை)
சுஜாதா சொன்னதற்காக (மட்டும்) ஈற்றடி சற்றே மாற்றியமைக்கப்பட்டது.

-0-

அள்ளி யணைத்தவளு(ம்) அன்னையுமோர் பெண்ணாக
உள்ளில் உயிர்த்த உறவுமட்டும் பெண்ணாகில்
கள்ளிப்பா(ல்) ஊட்டியே காரியம் தீர்ப்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

விந்தைபல கற்றறிந்து விண்ணேர் பருவத்தில்
கந்தக வாசமுடன் கார்துடைத்து சேய்வளர்த்து
கள்ளம் பயின்றுக் கருகிடும் பிஞ்சுகளைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

செல்வம் இருக்குமிடம் சேருதிங்கே கல்வியுமே
அல்லாத மானிடர்க்கோ ஆறாக் கொடுமையிது
பள்ளியிலே வாணியைப் பண்டமென விற்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கல்வியு(ம்) ஆர்வமும் காரியத்தில் நேர்த்தியுடன்
வெல்திறமை கொண்டோரை வீணர்கள் செல்வாக்கால்
மெள்ளவவர் கீழ்தள்ளி மேல்வந்து நிற்பாரேல்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

காதலிலே கட்டுண்டு காதைபல பேசிப்பின்
வாழ்தலென்ற பேச்சுவரில் வக்கணையாய்க் காரணங்கள்
பிள்ளைக் கடனிங்கே பெற்றோர்சொல் கேளலென்பர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

திருமகளாய் வீட்டில் திகழ்ந்திருக்கும் பெண்ணின்
கருமங்கள் சொல்வ(ர்),அவள் கற்பின் நெறிகளும்;பின்
கள்ளத் தொடுப்பினில் காரிகைகள் தான்கொள்வர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

வாங்கிடு(ம்) ஊதியத்தை வங்கியிலே சேர்த்தபின்னும்
வீங்கிடு(ம்) உள்பையும் வெட்கமின்றி கர்ப்பம்பார்
கொள்ளத் தயங்கார் குடிகளிடம் லஞ்ச(ம்);அவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கொள்ளை யடிப்பர்தான் கொண்ட தொழிலிலே
உள்ளத்தி(ல்) ஆர்வம் உழைப்புடன் நேர்மையின்றி
கள்ளத் தனம்செய்வர் காரியத்தில் சோம்பிடுவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

அதிகாரம் பெற்று(ம்)இல்லை ஆணையிடும் வீரம்
மதியில்லா மந்திரிகள் மாண்புமிகு பாதத்தில்
வெள்ளப் புயல்மரமாய் வேரோடு சாய்வாரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

எண்ணக் கனவுக(ள்) இங்கே யடுக்கினேன்
வண்ண மிதற்கெலாம் வார்ப்பா(ய்) அறிவேன்;நான்
சொல்லிய வண்ணஞ் செயப்போகும் நீயேவிவ்
வெல்லுஞ் சமூகத்தின் சாவி.

 

 

 

 

 

 

 

 

ன்னில்
எல்லா வாத்தியங்களையும்
இசைக்கப் பார்க்கிறாய்

பிறந்த குழந்தையாய் நீவீறிட்டபோது
கறந்தபாலின் தூய்மையையும்
மிஞ்சிய தாய்மையுடன் என்
மார்சுரந்த பாலருந்த மறுத்தாய்.
வீணையில் வயலினிசை
வேண்டும் என்றே இன்னும் அழுகை

ஓடிப்பிடித்த கதைகளும்
உன் ஒளிந்து விளையாடிய நினைவுகளும் கேட்டு
உச்சிமுகர்ந்தளித்த முத்தம் உணர்ந்தறியாய்.
வீணையில் குட்டிக்கண்ணனின்
குழலினிமை இல்லையென்றொரு குதிப்பு

மீசைவைத்த ஆசைக்கதைகளும்
மீண்டுவந்த காதல்பாதைகளும்
தோழியைப்போல் கேட்டபோதென்
தோளில்சாய்ந்த சுகமறியாய்
வீணையில் நாதஸ்வரத்தின்
நாதமில்லையென்றொரு நகைப்பு

காதல்கிறக்கத்தில் நீயும்
மோனத்திருந்த நேரத்தில்
உள்ளமும் உடலும்
அதன் நீட்சியாய்
உடையும் கூட சற்றேநெகிழ்ந்ததை
உன்னோடு நானும்கூட
உணராதுறைந்து நிற்கையில்
தவறிய தாளத்திற்கு வீணையொரு
மேளமில்லாததே காரணமென்று
காலால் எட்டியோர் உதைப்பு

எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா?

நாண்மீட்டத் தெரியாதவனின் கைகளில்
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது

தேடல் எனக்கான நிஜமாய்
அடக்க மாட்டா ஆர்வத்துடனும்
கடக்க மாட்டாக் காதலுடனும்
வரும்பொழுதினில்
தரையமர்ந்து
மடியேந்தி
நெஞ்சின் நெருக்கத்தில் அழுத்தி
இருகைகளால் இசைக்க வேண்டியதில்லை என்னை
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்

அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.