இந்தச் சமையல் குறிப்பு இகாரஸ் பிரகாஷுக்கு… 🙂 பெண்ணியவாதிகள் ஏதாவது இதற்கு சன்மானம் கொடுக்க நினைத்தால் அதை பிரகாசருக்கே அனுப்பிவைக்கவும். :))
முதலில் சாம்பார் குறித்த என் தனிப்பட்ட கருத்து மற்றும் முன்னுரை… சொதி போன்ற குழம்பு வகைகள் அல்லது சாம்பாருக்காக ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் காய் இருப்பின் அளவில் குறைபாடு போன்ற பிரத்யேகக் காரணங்கள் தவிர்த்து, பொதுவாக ஏதாவது ஒரு காய்கறியில் சாம்பார் வைக்க நினைத்தால், அந்தக் காயை மட்டுமே உபயோகிப்பது தான் நல்ல சுவையைத் தரும். அப்போதுதான் அந்தக் காயின் முழுமையான குணத்தை அனுபவிக்க முடியும். இரண்டு அல்லது மேற்பட்ட காய்களை (கத்திரி, முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் இப்படி கலவையாக) சேர்த்துச் செய்வதால் ஒரு கலவையான வாசனை மற்றும் சுவையுமே கிடைத்து கொஞ்சம் அபத்தமாக, அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஒரே நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு மட்டுமே மேடையில் எல்லா அழகிகளும் தோன்றினால் எப்படி? ஒவ்வொருவராக, தனித் தனியாக, adamantஆ நடைபோட்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம் தானே? 🙂 அதே மாதிரி, ‘என்ன அவசரம், இன்னொரு காயில் நாளைக்கு சாம்பார் செய்தால் போயிற்று!’ என்பதே என் கோட்பாடு. 🙂
ஆனால் எந்தச் சாம்பாரிலும் தக்காளியை நறுக்கிப் போடுவதும், சின்ன வெங்காயம் கொத்தமல்லித் தழையை அரைத்துவிடுவதும் தவறு இல்லை. பார்க்கப் போனால், தக்காளி, மேடையில் அழகிகளின் கூடவே நடந்துவரும் வரும் ஆண் மாதிரி, மேடைக்கே சே!.. சாம்பாருக்கே கம்பீரம். மற்றும் சாம்பாரில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வெங்காயம், கொத்தமல்லித் தழையின் குணம், மென்மையாக ஆனால் தாளலயத்துடன் அரட்டும் பிண்ணனி இசை போன்றது. இவை இரண்டும் இல்லாவிட்டால் தான், எத்தனை வெளி(ச்ச) அலங்காரம் செய்தாலும் சாம்பார் சோபிக்காது. பஸ் ஸ்டாண்டில் சாதாரணமாகப் பார்க்கும் பெண்ணின் எபஃக்ட் தான் இதற்கு இருக்கும். இனி…
முருங்கைக் காய்ச் சாம்பார்
தேவையான பொருள்கள்:
முருங்கைக் காய் – 2
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 2
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- புளியை நீர்க்க இரண்டு மூன்று முறைகளாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
- துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
- முருங்கைக் காயை 3 அங்குலத் துண்டுகளாகவும் தக்காளியை மெல்லிதாக நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- அதில் நறுக்கிய முருங்கைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, வாணலியை மூடிவைக்கவும்.
- ஐந்து அல்லது எட்டு நிமிடங்களில் முருங்கை பாதி வெந்திருக்கும்; இப்போது புளித் தண்ணீர் சேர்க்கவும்.
- மேலே உப்பு, மஞ்சள்தூள், தக்காளி, அரைத்த மசாலா, சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
- புளிவாசனை போனபின், வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து இறக்கவும்.
- கொத்தமல்லித் தழை நறுக்கித் தூவி, பரிமாறவும்.
* முருங்கைக் காயை ஒரேயடியாகப் பிளந்து தனித் தனியாவது மாதிரி வேகவைத்துவிடக் கூடாது. கத்தரி போன்றவைகளுக்கும் இதுவே நியதி.
* முள்ளங்கி போன்ற காய்களை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளலாம்.
* பொதுவாக சாம்பாருக்கு மொத்த மசாலாவையுமே அவ்வப்போது வறுத்து அரைத்துக் கொள்வது சுவையாக இருக்கும் என்றாலும் அன்றாடம் அது நேரத்தை இழுக்கும் மற்றும் எத்தனைப் புளிக்கு எத்தனை சாம்பார்ப்பொடி என்ற கணக்கு நமக்கு வழக்கத்தில் தெரிந்திருப்பதால் கொஞ்சம் யோசிக்காமல் குழம்பாமல் இந்த முறையில் சாம்பார்ப் பொடியையே உபயோகித்து, மேல் மசாலாவை மட்டும் அரைத்துச் சேர்த்து செய்யலாம். இது சுலபம்.
* கதம்பச் சாம்பார் முதல் முருங்கைச் சாம்பார் வரை காய் சேர்த்த எந்தவிதமான சாம்பாரிலும் சாதம் கலக்கும்போது, கவனிக்க வேண்டியது.. ..
அவரவரே தனித்தனியாக சாதத்தில் கலந்து சாப்பிடுவதை விட இரண்டு பங்கு சாம்பார், சாம்பார் சாதமாகக் கலக்கத் தேவைப்படும். (வைத்த சாம்பார் அதிகமாக இருந்தால் தீர்ப்பதற்காகவே அதை சாம்பார் சாதமாகக் கலந்துவிடுவேன்.) சாதாரணமான சாம்பாரைவிட கலப்பதற்கான சாம்பார் இன்னும் நீர்த்து இருக்க வேண்டும். சுடும் சாதத்தில் சேர்க்கச் சேர்க்க இறுகும். (இப்படி அதிகமாக சாம்பாரைக் கொட்டி, சாதம் கலந்து அடிக்கடி சாப்பிடுவது வயிற்றில் அசிடிடியை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். நாம்தான் அநியாயத்திற்கு இவ்வளவு புளி, காரம் சமையலில் சேர்த்துக் கொள்கிறோம்.)
நன்கு வெந்த சாதத்தை (வழக்கமான நமது சாதத்தைவிட கொஞ்சம் குழைந்திருந்தாலும் இன்னும் நன்றாக இருக்கும்.) ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான நெய் (விரும்பினால் கொஞ்சம் நல்லெண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம். கலக்கலாக இருக்கும்.) சேர்த்து வைக்க வேண்டும். சாம்பாரைச் சேர்ப்பதற்கு முன் அதிலுள்ள காயை(முருங்கை, முள்ளங்கி) தனியாக எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும். வெறும் சாம்பாரை மட்டும் சேர்த்து நன்கு குழைய கலந்துவிட்டு, கடைசியில் எடுத்துவைத்திருக்கும் காயைக் கலவையில் கொட்டி மென்மையாக, காய் நசுங்கி உடைந்துவிடாமல் கலந்துவைக்க வேண்டும். மொத்தமாக எல்லாச் சாம்பாரையும் காயோடு சாதத்தில் கொட்டிக் கலந்தால் காய் காணாமல் போய்விடும். 🙂
மேலும் சில சுவையான சாம்பார்ச் சுட்டிகள்..
பலநாட்கள் தனியாக புளிக்குழம்பு வைத்து, அதில் பருப்புச் சட்டியை உடைத்துக் கலக்கி சாம்பார் செய்யப்பட்டது. சட்டி விலை உயர்ந்ததும், சட்டியை உடைக்க வேண்டாம், பருப்பை மட்டும் கொட்டினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
— “சாம்பார் பிறந்த கதை” என். சுவாமிநாதன் :))))
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாதம், இட்லி, தோசை, மெதுவடை, வெண்பொங்கல், பிற பொங்கல் வகைகள், உப்புமா…
புதன், மார்ச் 21, 2007 at 10:23 பிப
நான் சாம்பார் சாம்பார்னு பொலம்பினப்போ இதச் சொல்லித்தரவேல்ல நீங்க. சரி விடுங்க. சீக்கிரம் செஞ்சு பாத்திர்ரேன். என்ன சின்ன வெங்காயம் அப்டி இப்டின்னு கண்ணில பார்க்காத சமாச்சாரங்களப்பத்திச் சொல்றீங்க. ம்ம்ம்.. சின்ன வெங்காயத்தை மூட்டை மூட்டையாப் பார்த்த நான் நாலைஞ்சு மட்டும் போட்டுவைச்சிருக்கிற பாக்கெட்டைப் பார்க்குற நிலம.. 😦
சின்ன வெங்காயத்தை மட்டும் வைச்சு ஏதாவது ஒரு ஐட்டம் சொல்லுங்களேன்.
பிரகாசரே: அடுத்ததா அந்த வாழப்பழச்சப்பாத்தியா? 😉
-மதி
வியாழன், மார்ச் 22, 2007 at 8:04 முப
அம்மாடி, சாம்பாரி சந்திரமதி! நீங்க சாம்பார் சாம்பார்னு பொலம்பின மரத்தடில, சுத்தி உஷா, துளசி, ஷைலஜான்னு (நள)தமயந்திகளா இல்ல இருந்தாங்க. இதுல நான் எங்க? இருந்தாலும் நப்பாசை இருந்திச்சு. ஆனா, இனிமேலும் யாரும் சாம்பார்ங்கற வார்த்தையை மரத்தடில தட்டினா மவளே… வீட்டுக்கு ஆட்டோவுக்குப் பதில் ‘குதிரை’ இல்ல வரும்னு மிரட்டினாங்க. 😉
//சின்ன வெங்காயத்தை மட்டும் வைச்சு ஏதாவது ஒரு ஐட்டம் சொல்லுங்களேன்.//
சின்ன வெங்காயத்தை ‘மட்டும்’ வெச்சு சின்ன வெங்காயம் தான் செய்ய முடியும். மண்ணில புதைச்சா வேணா பெரிய வெங்காயமா செய்யலாம். 🙂
நியாபகப் படுத்தினீங்க, மரத்தடிச் சுட்டிகளும் இணைச்சுட்டேன்.
வியாழன், மார்ச் 22, 2007 at 9:53 முப
இன்னும் ஒர்த்தர் கிட்டேர்ந்தும் சன்மானம் வரலை… paypal மூலமாக அனுப்பலாம். இல்லேன்னா ஐசிஐசிஐ அக்கவுண்ட் எண் தரேன், தேவைப்படறவங்க மெயில் பண்ணுங்க…
வியாழன், மார்ச் 22, 2007 at 4:23 பிப
:))) ப்ரகாஷ், நமக்கெல்லாம் நினைப்பு தானே பொழப்பைக் கெடுக்குது. பெண்ணியவாதிகள்னு சொல்றதுக்குப் பதிலா கலாசார காவலர்கள்னு சொல்லியிருக்கணுமோ? போகட்டும், பிசிபேளா பாத்துக்கும் சாம்பார் சாதத்துக்கும் ஆறு வித்தியாசமாவது கண்டுபிடிச்சீங்களா? இல்லைன்னா இந்தப் பதிவே வேஸ்ட்.
வியாழன், மார்ச் 22, 2007 at 4:56 பிப
சாம்பார் செய்வது எப்படின்னு மரத்தடி. காமில் போட்டிருக்கேனே? ஹூம்.. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பிகளே நண்பிகளே 🙂
வியாழன், மார்ச் 22, 2007 at 11:33 பிப
சின்ன வெங்காயத்தை மட்டும் வைத்து ஒண்ணும் செய்ய முடியாது. தயிர் சாதத்துக்கு கடித்துக்கொண்டு சாப்பிடுவது தவிற.
இருந்தாலும் ஒரு சட்னி:
1. சின்ன வெங்காயம் – 20
2. பச்சை மிளகாய் – சிறியது – 4
3. புளி – குட்டி நெல்லிக்காய் அளவு
4. கறிவேப்பிலை – நாலைந்து இலை
5. உப்பு
(கொத்தமல்லி கூடாது)
மிக்ஸியில் அரைக்காமல் அம்மியில் அரைக்கவும். அல்லது ஒரு மணையின்மீது வைத்து நல்ல உருளைக் கல்லில் நன்றாக மசியத் தட்டவும்.
கடுகு,ஓரிரண்டு இலை கறிவேப்பிலை, தோலுள்ள, உடைத்த உளுந்து போட்டு தாளிக்கவும்.
மிக மெல்லிய தோசை அல்லது மெதுமெது இட்டிலிக்கு தொட்டுக்கொள்ள.
நான் இந்தச் சட்டினியில் தேங்காயெண்ணை சேர்த்து சாப்பிடுவேன். ஓகே ஓகே அது பொள்ளாச்சிக்காரங்க பழக்கம். மத்தவங்களுக்கு ஒத்துக்காது.
அருள்
வெள்ளி, மார்ச் 23, 2007 at 12:02 முப
Engey intha postla Jemini Ganesan photovai kaanom? :-)) Kidding. Jeminiku een sambarnu peru vanthathu enbatharku enaku therinji 2 reasons iruku. athaiyaavathu solli irukalaamey :-))
வெள்ளி, மார்ச் 23, 2007 at 7:02 முப
உஷா, ஆமாம், அப்ப நீங்க ஷைலஜா, துளசி, சுந்தர், ஷக்திப்ரபான்னு நிறைய பேர் சாம்பார் குறிச்சு எழுதியிருக்கீங்க. சுவாமிநாதனோடது நகைச்சுவைப் பதிவுங்கறதால சுலபமா நினைவு வந்து தேடி எடுத்து சுட்டி கொடுத்துட்டேன். உங்களோடதெல்லாம் தேடித் தான் பாக்கணும். [மரத்தடி.காம் போக ஏதோ சாக்கு. :)]
வெள்ளி, மார்ச் 23, 2007 at 7:10 முப
பொள்ளாச்சிக்காரரே,:)
சின்ன வெங்காயம் வெச்சு நானும் வெங்காயச் சட்னி, சாம்பார் எல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.
https://mykitchenpitch.wordpress.com/2007/01/08/vengaaya-chutneygal/
https://mykitchenpitch.wordpress.com/2007/01/08/chinna-vengaaya-saambaar/
ஆனா அதை மட்டுமில்ல வெச்சு செய்யணும்னு சொல்றாங்க. அதே அந்த பதில். 🙂
உங்க வெங்காயச் சட்னிக் குறிப்பை அந்தப் பதிவுக்கும் கொஞ்சம் கடத்திக்கறேன். பின்னூட்டக் கயமை எல்லாம் இல்லைங்க, நம்புங்க.
அப்றம் ஆமாம், கோயம்புத்தூர் அதைவிட அதிகமா பொள்ளாச்சிக் காரங்க சாப்பாடு பிஹேவியர்ல கேரளாவோட தாக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கும். 🙂 ஆனா எனக்கும் பிடிக்கும்; ஒத்துக்கும்.
வெள்ளி, மார்ச் 23, 2007 at 7:17 முப
சிவா, சாம்பார்னு ஏன் பேர்னு உங்களுக்குத் தெரிஞ்சா அதை நீங்கதான் இங்க தந்திருக்கணும். எனக்கு எப்படித் தெரியும்? எங்கவீட்டு ரங்கமணிக்கு சாம்பாரும், பிபிஸ்ரீநிவாசம் ஆயுட்கால தெய்வங்களா இருக்க சந்தா கட்டியிருக்காங்க. (அதனாலயே எனக்குப் பிடிக்கலைன்னு நினைக்கறேன்.) In fact, இவங்க ரெண்டு பேரையும் அவர் பிரிச்சுக்கூட யோசிச்சதில்லை. நீங்களெல்லாம் மீட்டிங் போடற உட்லண்ட்ஸுக்கு, பத்துவருஷம் முன்னாலயே பிபிஎஸ்ஸைப் பாக்கவே அடிக்கடி என்னையும் இழுத்துகிட்டுப் போவாரு அந்த ஆணாதிக்கவாதி.:( இதை எல்லாம் ஒரு தனிப்பதிவா கொட்டினாத்தான் எனக்கு ஆறும்.
வெள்ளி, மார்ச் 23, 2007 at 9:10 முப
பதிவுக்கு சம்பந்தமாகவும் கொஞ்சம் 🙂 —-
இருபத்தி ஒன்றாம் நூறாண்டில் சுவையான சாம்பார் செய்ய அடிப்படைத் தேவைகள் :
1. குக்கர் என்ற பாத்திரத்தின் கேஸ்கட்டைத் தொலைத்து விடவும். காய்கறிகளையோ, துவரம் பருப்பையோ தப்பித் தவறி குக்கரில் வேகவைத்தால் போச்சு. மண்பாத்திரமோ, அலுமினியப்பாத்திரமோ ஏதோ ஒரு பாத்திரம் சரி. குக்கர் மட்டும் ஆகாது.
2. தண்ணீர். நகராட்சி சப்ளை செய்யும் எந்தத் தண்ணீரும் குளோரின் வாசத்துடன்தான் இருக்கும், அதுவும் மழைக்காலத்தில் அவ்வளவுதான். காலரா வருதுன்னு வெள்ளை கெரசின் மாதிரி வரும் குளோரின் அடைத்த தண்ணீரில் எப்படிங்க சாம்பார் மணம் வரும்? ஏதாவது கிராமத்தின் நல்லதண்ணிக் கிணத்தில் இருக்கும் நீர்தான் சாம்பாருக்கு சரி. இல்லாவிட்டால் பத்து ரூபாய் ‘மினரல்’ வாட்டர் பயன்படுத்தவும். அதுவும் கிணற்று/போர் வெல் தண்ணீர்தான். குளோரினுக்கு பதிலாக அவ்வளவாக மணம்தெரியாத பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் சுவை குலையாது.
3. பருப்பு: சூப்பர் மார்க்கட்டில் இப்பல்லாம் கிடைக்கும் நல்ல அடர்மஞ்சளில், சற்றே சிவப்புக்கலர் தெரியும், பளபளப்பான எந்த துவரம்பருப்பைப் பார்த்தாலும் அந்த இடத்தை விட்டு ஓடவும். நல்ல நாட்டுப் பருப்பு என்பது சற்றே சிறியதாய், வெளிர் மஞ்சளில் பார்க்க டல்லாக நோஞ்சான் மாதிரி இருக்கும். உடனே அதை வாங்கவும். அதில்தான் சாம்பார் சுவையே இருக்கிறது. குக்கர் இல்லாதாதால் பருப்பு நன்றாக வேக ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் அல்லது நெய் விடவும்.
4. முருங்கைக்காய் சாம்பார். தக்காளியை போட்டுவிடாதீர்கள் ! ஒரே ஒரு கீற்று மாங்காய்தான் முருங்கை சாம்பாருக்கு சரியான சுவைகூட்டும்.
5. கண்டிப்பாக நல்ல கசப்புடைய பாகற்காயில் சாம்பார் செய்யவும். தமிழரின் இணையற்ற அமிர்தம் இது.
6. சாம்பார் பொடி: . எல்லா அம்மாக்களும் ஒன்றுதான். ஒவ்வொரு சுவை இருந்தாலும் சுவை நிச்சயம் இருக்கும். எந்த அம்மா சொன்னாலும் கேட்கவும். பெண்டாட்டிகள் கால் நூற்றாண்டு கழித்து மீண்டும் முயற்சி செய்யவும்.
அருள்
வெள்ளி, மார்ச் 23, 2007 at 4:31 பிப
அருள், நீங்க சொல்லியிருக்கற எல்லாக் குறிப்புகளையும் நானும் ஒத்துக்கறேன். நானும் அம்மி, ஆட்டுரல், கும்முட்டி அடுப்பு, வெண்கலப் பானைக்கு அடிமைதான். அதை அங்கங்க குறிப்புகள்ல சொல்லியும் வரேன். ஆனா அப்படி எல்லாம் செஞ்சுகிட்டேயிருந்தா சமையலறைவிட்டு வெளிய வந்து இந்த மாதிரி சப்பைப் பதிவுகூட போட நேரமிருக்காதே, என்ன செய்ய? 😦
//எந்த அம்மா சொன்னாலும் கேட்கவும். பெண்டாட்டிகள் கால் நூற்றாண்டு கழித்து மீண்டும் முயற்சி செய்யவும்.//
இந்த வலைப்பதிவோட sideல ‘My mom is great cook!’னு போட்டிருக்கேனே, அது உலகப் பொதுமொழின்னு தெரிஞ்சதாலதான் போட்டேன். 🙂
ஆனாலும் 25 வருஷம் முயற்சி செஞ்சப்பறமும் கூட கணவன்களால எந்த அப்பா இடத்தையும் வாங்க முடியலையே, அதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? :)))
சனி, மார்ச் 24, 2007 at 1:08 முப
ஜெயஸ்ரீ, . நம்ப எல்லா வீட்டிலும் குக்கரும் மைக்ரோவும் வந்துடுச்சு. பாருங்க முன்பு வேகவைத்தை எல்லாம், இப்ப புழுக்குகிறோம். (with a pressure cooker, we steam now what we previously used to boil. Steaming averages out all the flavours esp. under pressure. Like, with mixie we chop and shred what we used to pound and mash. In a mixie the flavours just donot blend . ). அதனாலே ஒரு குறிப்பாகவாவது இந்த மாற்றத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டும். அதுக்குத்தான் சொன்னேன். மத்தபடி மைக்ரோவேவில ரசம் கூட செய்கிறார்கள் (கடவுளே!). மிக நல்ல சமையல் குறிப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து கற்றுக்கொள்ள படிப்பேன்.
இருவத்தைந்து வருஷத்திலே நம்ப குழந்தைகளுக்கே அப்பாவாக இருக்கிறது சிரமம். சொன்ன பேச்சு கேட்பதே இலை. இதில் மத்தவங்க குழந்தைகளுக்குமா. :-).
அருள்
சனி, மார்ச் 24, 2007 at 11:48 முப
///இருவத்தைந்து வருஷத்திலே நம்ப குழந்தைகளுக்கே அப்பாவாக இருக்கிறது சிரமம். சொன்ன பேச்சு கேட்பதே இலை. இதில் மத்தவங்க குழந்தைகளுக்குமா. :-).///
ரொம்ப சரி. இதைக் கொஞ்சம் தெளிவா இந்தப்பக்கத்துலயும் புரிஞ்சுகிட்டா குடும்பத்துல பிரச்சினை இல்லை. ஆனா பெண்கள் மட்டும் வரும்போதே தாயா, தங்கையா, தோழியா, தாரமா, வேசியா இருக்கணும் blah blah ன்னு அட்டவணை விடும்போதுதான் எனக்குக் கோபம் வரதில்லை; கொலைவெறி வருது. 🙂
நீங்க அப்படி சொன்னீங்கன்னு சொல்லலை. நீங்க சொல்லவந்த விஷயத்தை மிகச் சரியாத்தான் உள்வாங்கியிருக்கேன். ஆனா பொதுவான ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒப்புமை அப்படி இருக்கிறது. நிச்சயம் சமையல்ல மனைவியை அம்மாவோட சேர்த்துப் பேசாத ஆணே இல்லை.
மனைவி சமையலும் நல்லாத்தான் இருக்கும் அருள், சாப்பிடக் கை கழுவும்போது கொஞ்சம் ஈகோவையும் கழுவிட்டு வந்து உட்கார்ந்தா.. :))) ஏன்னா அம்மாக்களும் அதே குக்கர் கேஸ்கட் எல்லாம் வெச்சுத்தான் இப்பல்லாம் சமைக்கறாங்க.
கோவைல இருக்கும்போது அம்மில அரைச்சு நான் சமைச்ச நாள்கள், நான் என் சமையல் திறமையின் உச்சத்தைத் தொட்டவை. “அம்மிணியின் அம்மி நாள்கள்”னு ஒரு பதிவு போடணும். 🙂 குறிப்புகள்லயும் முடிந்த போதெல்லாம் அதைச் சொல்லாம விடறதில்லை.
நீங்களும் சமைக்கக் கத்துக்கறதை வரவேற்கறேன். அதைவிட முக்கியமா உங்களுக்குத் தெரிஞ்ச எல்லாக் குறிப்புகளையும் இங்க தொடர்ந்து கொடுத்து வாங்க. நானே அரைகுறை தான். நன்றி.
சனி, செப்ரெம்பர் 1, 2007 at 12:36 முப
மேற்படி மசாலா அரைத்து விடும் விவரம் எனக்கு புதுசு. முயற்சி செய்து பார்த்தேன் – அசல் ஓட்டல் சாம்பாரைப் போலவே இருந்தது! அதனால் அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. 😦
புதன், திசெம்பர் 12, 2007 at 7:21 பிப
எனக்கு சாம்பார் என்றாலே அலர்ஜி, அது ஏன் என்றே தெரியாது. ஆனால் ஏன் கணவருக்கு சாம்பார் என்றால் மிகவும் பிடிக்கும். இக்காரணத்தினால் வேறு வழி இல்லாமல் சாம்பார் சமைக்க வேண்டிய நிலைமை. திருமணம் ஆகி ஒரு இருபது முறையாவது சாம்பார் செய்திருப்பேன், ஆனால் ஒரு முறை கூட ருசியாக வந்ததில்லை. அது என்ன காரணமோ தெரியாது எப்பொழுதும் தண்ணீர் அதிகமாகி விடும்……… ஏன் கணவர் சொல்லுவார் ஒரு வேலை எனக்கு புடிக்காத சமையலை செய்வதால் தான் அது ஒழுங்காக வரவில்லையோ என்று.
வியாழன், திசெம்பர் 13, 2007 at 2:37 பிப
kalai, பிடிக்காத பல உணவுகள் எனக்கு நான் சமைக்க ஆரம்பிச்சதும்தான் பிடிக்க ஆரம்பிச்சது. [இதைச் சொன்னா, அப்ப நான் கேவலமா சமைச்சேனான்னு எங்க அம்மா சண்டைக்கு வருவாங்க. :)] தண்ணி அதிகமாறது உங்க கண்ட்ரோல்லதானே இருக்கு. 20 தடவை நல்லா சமைச்சாலும் 21 தடவை சொதப்பவும் வாய்ப்பிருக்கு. அதனால நம்பர் கணக்கெல்லாம் பாக்காம செய்ங்க. நல்லா வரும். இது அறிவுரையெல்லாம் இல்லை. ரொம்ப அடிபட்டவளோட அனுபவப் பாடம். 😦
புதன், ஜூன் 17, 2009 at 5:11 பிப
Thanks you so much………i’m going to try tonight 🙂