ஓகஸ்ட் 2007
Monthly Archive
புதன், ஓகஸ்ட் 29, 2007
கடுப்பு வலியைப் போக்கும் கண்டத்திப்பிலி என்பது வழக்கு. மழை அல்லது சீதோஷ்ண மாற்றங்கள், மிகுதியான வேலை போன்ற காரணங்களால் வரும் உடல் வலி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளுக்கு இந்த ரசம் மிகவும் சிறந்த மருந்து.
ஸ்ரீகாந்த், மேலதிகத் தகவல்கள், குறிப்பில் மாற்றங்கள் இருந்தால் உங்கள் அம்மாவிடம் கேட்டு இங்கே சொல்லவும்.
தேவையான பொருள்கள்:
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
நெய்

வறுத்து அரைக்க:
கண்டத்திப்பிலி – 8, 10 குச்சிகள்
சதகுப்பை – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 2
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை:
- திப்பிலி, சதகுப்பை, மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை தனித் தனியாக, நன்கு சிவக்க நெய்யில் வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- புளியை நீர்க்கக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், லேசாக நசுக்கிய பூண்டுப் பல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- புளி வாசனை போனதும், அரைத்த விழுதைப் போட்டு, கொதித்ததும்(இந்த நேரத்தில் நல்ல வாசனை வரும்.), தேவையான தண்ணீர் மேலும் சேர்த்து விளாவவும்.
- நிதானமான தீயில் பொங்கிவரும்போது இறக்கவும்.
- ஒரு டீஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
* மற்ற ரசம் மாதிரி தெளிவாக இல்லாமல் கொஞ்சம் கலங்கி கெட்டியாகத் தான் இருக்கும்.
* திப்பிலி என்று பொதுவாகக் குறிப்பதைவிட கண்டத்திப்பிலி என்று சொல்வதே வசதி. ஏனென்றால் அரிசித் திப்பிலி என்றும் ஒரு மருந்துப் பொருள் (கருப்பாக மிளகுவகை மாதிரி) இருக்கிறது.
* சதகுப்பைக்குப் பதில் 10 அரிசித் திப்பிலியும் சேர்த்துக் கொள்ளலாம்.
* பொதுவாக இதில் தக்காளி சேர்ப்பதில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் இரண்டு தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சூடான சாதத்தில், சுடச் சுட இந்த ரசத்தை விட்டுச் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புத் துவையல். இத்துடன் வேறு உணவுகள், தயிர் சாதம் போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
புதன், ஓகஸ்ட் 29, 2007
நான் சமைக்க ஆரம்பிச்சு முதல்முதல்ல செஞ்ச ரசம் இதுதான். ஐயோ, முதல்லயே கஷ்டமானதா எதுக்கு செஞ்ச? சிம்பிளா எதாவது வறுக்காம அரைக்காம செய்யற சாத்துமதா செஞ்சிருக்கலாமேன்னு அம்மா பயந்தாங்க. இது கஷ்டம், இது சுலபம்னெல்லாம் கண்டுபிடிக்கற அளவுக்குக் கூட சமையல் அறிவு இல்லாதவ, எதைச் செஞ்சாலும் டைரியைப் படிச்சுதான் செய்யணுங்கற நிலைமைல இருக்கறவளுக்கு கஷ்டம் என்ன, சுலபம் என்ன? நல்லா இருந்ததும்மான்னு வேற தன்னடக்கத்தோட சொல்லிப் பார்த்தேன். இது யார் செஞ்சாலும் நல்லாத் தான் இருக்கும்னு சொல்லிட்டாங்க. (Grrr…)
தேவையான பொருள்கள்:
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2, 3
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (வேகவைத்து மசித்தது)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 3
மல்லி விதை – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்
கொப்பரைத் தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்(துருவியது)
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், , கறிவேப்பிலை.

செய்முறை:
- புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, மல்லி விதை, சீரகம், பெருங்காயம், கொப்பரைத் தேங்காய்த் துருவல் என்ற வரிசையில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
- புளி நீரில் தக்காளியை கையால் நன்றாக நசுக்கிவிட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
- புளி வாசனை அடங்கியதும், வேக வைத்த துவரம் பருப்பும் அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு மேலும் கொதிக்க விடவும்.
- தேவையான தண்ணீர் சேர்த்து விளாவி, நிதானமான தீயில், பொங்கி வரும் சமயம் இறக்கவும்.
- எண்ணெயில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.
* அடியில் வண்டலாக இருக்கும். மேலாக நன்றாகக் கலக்கிப் பரிமாறினால் தான் சுவையாக இருக்கும். அப்படியும் வண்டல் மிஞ்சியிருந்தால் அதை அடுத்த வேளைக்குச் செய்யும் கூட்டில் அல்லது குழம்பில் விடலாம். : ) சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஓகஸ்ட் 28, 2007
அதிகம் மசாலா சேர்க்காமல், எளிமையான கூட்டு. அநேகமாக எல்லாக் காய்களிலும் இதைச் செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
காய் – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறி மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:
- பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- பருப்புகளுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிம்மில் வைத்து மூடி வைத்து பாதியளவு வேக வைக்கவும்.
- இந்த நேரத்தில் காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் காயையும் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும். காய் வெந்திருக்கும் நேரத்தில் பருப்பு இலைப் பதமாக வெந்திருக்கும்.
- கறி மசாலாப் பொடி அல்லது ரசப் பொடி சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவைத்து தளர்வான பதத்தில் இறக்கவும். (ஆறியதும் அதிகம் இறுகும்.)
- மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* பருப்பை குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வெந்தால் கூட்டோடு சேர்க்கும்போது மாவாகக் கரைந்துவிடும். மேலும் வாணலியில் தனியாக வேகவைக்கும்போது மணமும், சுவையும் நிச்சயம் அதிகமாக இருக்கும்.
* பயத்தம் பருப்போடு தான் கடலைப் பருப்பையும் சேர்க்க வேண்டுமென்பதில்லை. நான் தாளிக்கும் போதே அத்தனை கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்துவிடுவேன். நன்றாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
ரசம் சாதம், தயிர் சாதம், துவையல் சாதம், பொடி கலந்த சாதம், பருப்பு சேர்க்காத குழம்பு((மருந்துக் குழம்புகள், மோர்க் குழம்பு தவிர்த்து) சாதங்களுடன் சேரும்.
துவையல் சாதம் தவிர மற்றவற்றிற்குச் செய்யும்போது, இறக்குவதற்கு முன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஓகஸ்ட் 28, 2007
தேவையான பொருள்கள்:
தேங்காய்த் துருவல் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3, 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
புளி – சுண்டைக்காய் அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
- வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- அத்துடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.
- ஆறியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (அம்மியில் அரைத்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.)

* தேங்காயின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் லேசாக வறுத்துக் கொள்ளலாம்.
* துவரம் பருப்பு 1 டீஸ்பூன் சேர்த்து வறுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். பலருக்குப் பிடித்திருக்கிறது.
* எனக்கு திவசத்தன்று செய்யும் தேங்காய்த் துவையல் பிடிக்கும். அம்மியில் அரைப்பது மட்டுமின்றி அத்துடன் 1 டீஸ்பூன் எள் சேர்ப்பதும் தான் சுவைக்குக் காரணம் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும். இதற்கே முதல் இடம்.
தயிர் சாதம், உப்புமா, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீண்ட பயணங்களுக்குத் தயாரிக்கும்போது, தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளலாம். கெடாமல் இருக்கும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஓகஸ்ட் 27, 2007
எனக்குத் தெரிந்து மற்ற குழம்பு வகைகள் இல்லாவிட்டாலும், இந்த மோர்க் குழம்பு மட்டும் எல்லா மாநிலங்களுக்குமென்று பிரத்யேகமாக ஒரு வகை இருக்கிறது. இன்று காளன். மற்றவை அப்புறம்.
தேவையான பொருள்கள்:
கெட்டியான தயிர் – 1 1/2 கப்
காய் – 15, 20 துண்டுகள் (பெரிது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 6, 7
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு (விரும்பினால்)
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தேங்காயெண்ணை
கொத்தமல்லித் தழை.
தாளிக்க: தேங்காயெண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை:
- மிக லேசாகப் புளித்த, கெட்டியான (கொஞ்சம் க்ரீமியாகவும் இருந்தால் சுவையாக இருக்கும்) தயிரை தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும்.
- ஏதாவது காயை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- முற்றிய தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்த் துருவல், (ஆனால் கொப்பரை மாதிரி காயாயதாக அல்லது துருவல் ஃப்ரிட்ஜில் வைத்ததாக இல்லாமல், புதிதாக உடைத்த தேங்காயாக இருந்தால் சரியாக இருக்கும்.) பச்சை மிளகாய், சீரகம், இஞ்சியை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், வேகவைத்த காய், அரைத்த விழுது சேர்த்து அடுப்பில் நிதானமான தீயில் வைக்கவும்.
- மெதுவாகச் சூடேறி, பொங்கி வரும்போது பச்சைத் தேங்காயெண்ணை 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
- வாணலியில் எண்ணையில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.
* வெண்டை, கத்தரி, முருங்கை, வாழை, சேனை, சேப்பங்கிழங்கு என்று நாட்டுக் காயான எதையும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடித்தது பூசணிக்காய்.
* இன்னும் காரம் தேவை என்று தோன்றினால் தாளிக்கும்போது ஒரு காய்ந்த மிளகாய் அல்லது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நான் செய்வதில்லை.
* வாழை சேனை மட்டும் சேர்த்துச் செய்தால் தான் காளன். இது மோர்க் காளன் என்று சிலர் சொல்கிறார்கள். எப்படியும் இது மோர்க் குழம்பில் ஒரு வகை. அவ்வளவே. அப்புறம் நான் எப்பொழுதும் மோர்க் குழம்பு செய்வதும் இந்த முறையே.
* அடுப்பில் வைக்காமலே மஞ்சள் தூள், உப்பு, காய், அரைத்த விழுது எல்லாம் சேர்த்து பச்சை மோர்க் குழம்பும் செய்கிறார்கள்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் பருப்பு கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எந்தக் காரக் கறி அல்லது பருப்பு உசிலியுடனும் சேரும். குழம்பிலிருக்கும் காய் தயிர்சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
அடை, இடியாப்பம், ஆப்பம் வகைகளுக்கும் இந்தக் குழம்பை தொட்டுக் கொள்ளலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஓகஸ்ட் 27, 2007
தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் – 1/2 கிலோ
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 5, 6
பச்சை மிளகாய் – 2
காரத் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு.
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:
- வெண்டைக்காயை நீளவாக்கில் குறுக்காக நறுக்கிக் கொள்ளவும். (இந்த முறையில், பூச்சிகள் இருந்தால் நிச்சயம் தப்பவே முடியாது.)
- தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை மிக்ஸியில் நைசாக தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், காரத் தூள், தனியாத் தூள், ஆம்சூர்ப் பொடி(நான் சேர்ப்பதில்லை.) சேர்த்து, நன்கு சுருளக் கிளறவும்.
- வெண்டைக்காயையும் சேர்த்து அடுப்பை சிறிய தீயில் வைத்து மூடி வைக்கவும்.
- அரைப் பதம் வேகும் வரை அவ்வப்போது திறந்து பிரட்டி விடவும்.
- திறந்துவைத்து கருகிவிடாமல் முக்கால் பதம் வேகும்வரை அடிக்கடி மென்மையாகத் திருப்பிவிடவும்.
- கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* வெண்டைக்காய் நறுக்கும்போது இடையில் ஒன்றிரண்டு முற்றிய காய்கள் இருந்தால் நிச்சயமாகத் தூர எறிந்துவிடவும். அவை மொத்த உணவையே சாப்பிடமுடியாமல் கெடுத்துவிடும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாதாச் சப்பாத்தி வகைகளுக்கு ஏற்றது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஓகஸ்ட் 27, 2007
தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் – 1/2 கிலோ
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:
- வெண்டைக்காயைக் கழுவி, நன்றாக மேல் ஈரம் காயவிட்டு, சிறிய வட்டங்களாகவோ அல்லது நீளமாக குறுக்கிலோ நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெண்டைக்காயைச் சேர்க்கவும்.
- உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் சேர்த்துப் பிரட்டிவிட்டு, சிம்மில் வைத்து மூடிவைக்கவும்.
- அவ்வப்போது திறந்து கிளறிவிட்டு மீண்டும் மூடவும்.
- அரைப் பதம் வெந்ததும், கடலை மாவு தூவி, திறந்துவைத்தே வேகவைக்கவும்.
- அடிப்பிடிக்காமல் மெதுவாக அவ்வப்போது திருப்பிவிட்டு, முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும்.
* வெண்டைக்காய் நறுக்கும்போது இடையில் ஒன்றிரண்டு முற்றிய காய்கள் இருந்தால் நிச்சயமாகத் தூர எறிந்துவிடவும். அவை மொத்த உணவையே சாப்பிடமுடியாமல் கெடுத்துவிடும்.
* விரும்புபவர்கள் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
* தயிருக்குப் பதிலாக புளிநீரும், காரப்பொடிக்கு பதில் ரசப்பொடி அல்லது கறிப்பொடியும் சேர்க்கலாம்.
* மிளகாய்த் தூளைக் குறைத்துக் கொண்டு, காலையில் செய்த தேங்காய்ச் சட்னி மீந்திருந்தால் அதையும் சேர்த்துக் கிளறியிருக்கிறேன். நன்றாக இருக்கும். (பச்சை மிளகாய், பொட்டுக்கடலை தேங்காய் அரைத்துச் சேர்ப்பது ஆந்திரா ஸ்டைல்)
* வெண்டைக்காயுடன், தக்காளி, தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மட்டும் அரைத்துவிட்டு தேங்காய் எண்ணையில் கடுகு தாளிக்கலாம். (கேரளா ஸ்டைல்)
* வெண்டைக்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி, அரை மூடி தேங்காய், 4, 5 காய்ந்த மிளகாய், 1/2 டீஸ்பூன் சீரகம், உப்பு சேர்த்து அரைத்து காயில் பிசிறி 20 நிமிடம் வைத்து, வாணலியில் எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வதக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சும்மாவே சாப்பிடலாம்.
குழம்பு, ரசம் என்று எல்லா சாதத்துடனும், முக்கியமாக தயிர் சாதத்துக்கு மிகவும் பொருந்தும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஓகஸ்ட் 27, 2007
தேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
பால் – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நெய்
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்

செய்முறை:
- வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.
- இலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து நிதானமான தீயில் வைக்கவும்.
- வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், பால் சேர்க்கவும்.
- 2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
* குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாயசம், பருப்பு கீர் மாதிரி ஆகிவிடலாம்.
* அதிகம் பால் விட்டாலும் சுவையாக இருக்கும். ஆனால் பால் அதிகம் சேர்க்காமல் பருப்பின் சுவையும் மணமும் மேலோங்கி இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.
* கொஞ்சம் நீர்க்க செய்து டம்ளரில் குடிக்கலாம். அல்லது ஓரளவு கெட்டியாக சேர்ந்தாற்போல் செய்து ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். நம் விருப்பம் தான்.
* ஆறியதும் அதிகமாக இறுகும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007
Posted by Jayashree Govindarajan under
தமிழ்ப்பதிவுகள்,
பொதுவானவை
[11] Comments
சுவாரசியங்களுக்காக தெருவுல இறங்கி நான் நோட்டீசெல்லாம் பார்க்கணுங்கறதில்லை… எங்க நோட்டீஸ் போர்டே நிறைய சொல்லும். 🙂

Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1/2 கப்
பெருங்காயம்
எண்ணை – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1 (விரும்பினால்)
தேங்காய் – 1 டீஸ்பூன்(மட்டும்)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
- அடுப்பில் வாணலியில் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து நிதானமான தீயில் பச்சை வாசனை போக, கருகிவிடாமல் நன்கு கிளறிவிட்டுக் கொண்டே, சிவக்க வறுக்கவும்.
- ஆறியதும் மிக்ஸியில் போட்டு, உப்பு, தேங்காய் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மிகவும் நைசாக அரைக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சூடாக, தளரக் கலந்த வத்தக் குழம்பு, மிளகுக் குழம்பு அல்லது எந்தக் காரக் குழம்பு சாதத்திற்கு ஏற்றது. மிளகு ரசம் சாதத்துடனும் அருமையாகச் சேரும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1 பத்தை
நல்லெண்ணெய்
வறுக்க:
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை.

செய்முறை:
- புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு டீஸ்பூன் எண்ணையில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்த பொருள்களுடன் தேங்காயை வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- புளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
- அரைத்த விழுதையும் சேர்த்து மேலும் கொதிக்க வைத்து இறக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
கெட்டியான குழம்பை நெய் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.
குழம்பை நீர்க்க தயாரித்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசியைக் குழைந்த சாதமாக வடித்து, அதில் நெய், நல்லெண்ணை, குழம்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். சுடச் சுட, பருப்புத் துவையலுடன் சாப்பிட ஏற்றது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வீட்டினருடன் இந்த சாதம் (மட்டும்) சாப்பிட்டு விடுமுறை நாளில் ஒரு பகல் தூக்கம் போடுவது உத்தமமாக இருக்கும். : ) நேற்று தூக்கம் போட வைத்த பார்ஸிகளுக்கு (தாமதமான) புத்தாண்டு வாழ்த்துகள்! : )
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை:
- புளியை நார், கொட்டை இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, உளுத்தம் பருப்பு, மிளகு, புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயம் என்ற வரிசையில் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- வறுத்ததை சிறிது நீர் சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெயில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு, இந்த விழுதைப் போட்டு கொதிக்கவிட்டு இறுகி வந்ததும் இறக்கவும்.
* இந்த விழுதை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு வாரத்திற்குள் எப்பொழுது வேண்டுமோ அப்போது சுலபமாக இந்தக் குழம்பை தயாரித்து விடலாம்.
* விரும்பினால் தாளிக்கும்போது 4 பல் பூண்டு சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்
தாளிக்க – எண்ணெய், 3 அல்லது 4 காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
- புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
- மிளகு, துவரம் பருப்பை நன்கு வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை தாளித்து, புளி நீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், பூண்டுப் பல், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
* விரும்பினால் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007
நன்றி: பிரேமலதா. (இடையில கலர்ஃபுல்லா பேசியிருக்கறதெல்லாம் நானே.)
[யெக்கா, உப்புச்சார்ல கருவாடு போடணும். உங்களுக்கு ஒத்துவராது. ஒருவேளை மருவிய உப்புச்சார் கருவாடு இல்லாம வலம் வருதோ என்னமோ. கிடைச்சா அனுபவிங்க. சாகறதுக்கு முன்னாடி அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரெம்பநாள் வெஜிடேரியனிசம் கடைபிடிச்ச காலங்கள்ல கூட கருவாட்டை எடுத்துப்போட்டுட்டு உப்புச்சாரை மொக்கு மொக்குன்னு மொக்கிருக்கேன். கருவாடு இல்லாட்டி உப்புச்சார் உப்புச்சாரே கிடையாது. (உங்களுக்கு கொடுத்துவைச்சது அவ்வளவுதான்) இருந்தாலும் மருவிய உப்புச்சார் கிடைச்சா கண்டிப்பா விடாதீங்க.]
மருவிய உப்புச்சார்: (கருவாடு மைனஸ்) 🙂
1.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை
தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்
செய்முறை:
- புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
- சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (ஒரு பேப்பரில் வைத்து மைக்ரோவேவ் அவனில் ஒரு 20 அல்லது 30 விநாடிகள்(மட்டும்) வைத்து எடுத்தால் கையோடு தோல் வந்துவிடும். தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்தும் சுலபமாக உரிக்கலாம். ஆனால் சுவை சற்றே வேறுபடும். எப்படி இருந்தாலும் ரங்கமணியை இதற்கு எதிர்பார்ப்பதில்லை என்பதே மேட்டர்.)
- பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [இன்னும் கை எரியுது. 😦 தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை துடைத்துக் கொள்ளவும்.]
- அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து புளிக் கரைசலைச் சேர்க்கவும். [பிரேமலதா, நீங்களோ திருமலையோ கடுகு எல்லாம் தாளிக்கவே சொல்லலையே. இதுக்கு அதெல்லாம் கிடையாதா? ஆனா நான் செஞ்சேன்.]
- மேலும் 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
-0-
2.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
கொண்டைக் கடலை – 1/2 கப்(காய்ந்தது)
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
கத்தரிக்காய் – 4, 5 (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்.)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை.
தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்.

செய்முறை:
- புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
- சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (மேலே சொல்லியுள்ளபடி செய்யலாம்.)
- பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [மேலே உள்ள குறிப்பைப் பார்க்கவும்.]
- கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். இதிலேயே ஓரளவு நன்றாக வெந்துவிடும்.
- அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் பயறு, புளிக்கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும். வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை.) [நான் கொஞ்சம் நம்பிக்கை இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு கொண்டைக்கடலையை ஒரு விசில் குக்கர்ல வெச்சுட்டேன். சாரி!]
- தேவையான அளவு உப்பு போட்டு, மேலும் சிறிது எண்ணையை ஊற்றவும்.
- பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாகக் காய்ந்ததும் இறக்கிவிடவும்.
* மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.
* கத்திரிக்காய்க்குப் பதில் தனியாக வெண்டைக்காய் மட்டும் போட்டும் செய்யலாம்.
மேட்ச் ஃபிக்ஸிங் கார்னர்:
சாதம், கிண்டிய உருண்டைச் சோறு, சோளச் சோறு, கேப்பைக்களி (சோளச் சோறுக்கும் கேப்பைக் களிக்கும் செய்வதானால் அரிசிமாவைக் கரைத்து புளிக் கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது மிளகாயும் புளியும் அதிகமாயிருக்க வேண்டும், to compensate for the dulling effect caused by அரிசிமாவு.)
சின்னவயதில் அம்மா செய்ததையும் அக்கம் பக்கத்தில் செய்ததையும் காது வழி ஞானத்தையும் வைத்து மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு சோளச் சோறும் கேப்பக் களியும் சரியா வராது. அதனால் எங்கள் வீட்டில் சாதம் தான் பெரும்பாலும். அக்கம் பக்கத்தில் சோளச் சோறும் உப்புச்சாரும் என்றால் எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வரும். அங்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவேன். கேப்பைக் களிக்கு மகிழிக் கீரைதான் சரியான மேட்ச் என்பதால், கேப்பைக் களியுடன் உப்புச்சார் வைக்கும்போது என்னை ஸ்பெஷலாக அழைக்க மாட்டார்கள், நானாகக் கண்டுபிடித்தால் மட்டுமே கிடைக்கும். இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது யாராவது சோளச் சோறு (கேப்பைக் களியெல்லாம் கிடைக்குமென்ற நம்பிக்கையேயில்லை) செய்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தேன். இல்லையென்று பதில் வந்துவிட்டது. சோளச்சோறு இல்லையென்றால் உப்புச்சாரும் அதிகமாக நடமாடாது. I will be surprised if anyone still makes it anymore in our street in our village. மத்த தெருக்களைப் பற்றி எனக்குத் தெரியாது. (பிரேமலதா நல்லா இருந்தது. அதே முக்கியமான மேட்டர்.)
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
புதன், ஓகஸ்ட் 15, 2007
திருவாடிப் பூரத்தை முன்னிட்டு…
தேவையான பொருள்கள்:
கெட்டியான பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 4, 5
பச்சைக் கற்பூரம்.

செய்முறை:
- காலையில் கறந்த பாலை மாலையில், அல்லது மாலையில் கறந்த பாலை மறுநாள் காலையோ (பாக்கெட் பாலை அப்படியே உபயோகிக்கலாம்.) செய்யலாம். கெட்டியான பாலை அடி கனமான வாணலியில் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச ஆரம்பிக்கவும்.
- காய்ந்ததும் பொங்கி வழிய விடாமல், அடிப் பிடிக்காமல், நிதானமான தீயில் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பால் இறுகி வற்ற ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்’மில் வைத்து, அடிப்பிடிக்காமல் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- நன்கு வற்றியதும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரையும் கரைந்து சேரும்வரை கிளறவும்.
- சிறிதளவு மட்டுமே ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* பாக்கெட் பாலாக இல்லாமல் கறந்த பாலாக இருந்தாலே மிகவும் ருசியாக இருக்கும்.
* கொஞ்சம் மேலே சொன்னபடி பழைய பாலாக இருந்தால் கிளறும்போது தானாகவே திரிதிரியாக வரும். புதிய பாலாக இருந்து, திரியாவிட்டால் சில சொட்டுகள் தயிர்விட்டால் சற்று திரிந்த மாதிரி வரும்.
* நல்ல க்ரீம் உள்ள பாலில் செய்தால், கிளறியதும் தானே நெய்யை கக்கும். அப்படி இல்லாமல் கையால் எடுத்துப் பார்த்து, கொஞ்சம் ஒட்டினால், மேலும் 2 அல்லது 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.
* அடிப்பிடிக்காமலோ அதிகம் பொங்காமலோ இருக்க ஒரு நாணயத்தை அல்லது கோலிக் குண்டைப் போடலாம் என்று சொல்கிறார்கள். நான் போடவில்லை. நான்-ஸ்டிக்கில் செய்தேன்.
* பால்கோவா இறக்கும்போது சற்று தளர்வாக இருப்பது போல் பார்த்து இறக்கினால், ஆறியதும் இன்னும் இறுகி சரியான பதத்தில் இருக்கும். இறக்கும்போதே சரியான பதத்தில் இருந்தால், ஆறியதும் மிகவும் கெட்டியாகி உதிர ஆரம்பித்துவிடும். புகைப்படத்தில் இருப்பது இப்பொழுதுதான்அரை மணி நேரம் முன்னால், இறக்கியதும் எடுத்தது. [இந்த கோவாவை மட்டும் வைத்துக் கொண்டே இன்னும் சில இனிப்பு வகைகள் செய்யலாம். அவை அப்புறம்…]
* பொதுவாகவே இந்த மாதிரி பாலில் செய்யும் இனிப்புகளை சீக்கிரம் தீர்த்துவிடுவது அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது நல்லது.
* சர்க்கரைக்குப் பதில் வெல்லம் போட்டுக் கிளறலாம். திரட்டுப் பால் என்று பெயர். உண்மையில் இதுவே ஸ்ரீவில்லிபுத்தூரில் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எங்கள் வீட்டுத் திருமணங்களில் அதிகம் உபயோகிப்பார்கள். எவ்வளவு வெல்லம் என்று முதலிலேயே சரியாகச் சொல்ல வரவில்லை. பால் இறுகியதும் விழுது எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வெல்லாம் போட்டால் சரியாக இருக்கும் என்று அங்கே சொன்னார்கள். இருக்கிறது.
[இதில் தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். தேங்காய்த் திரட்டுப் பால் என்று பெயர். அதுவும் அப்புறம்..]
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
அடுத்த பக்கம் »