மார்ச் 2008


சேவை என்பது ப்ரும்மப் பிரயத்னமாக இருந்த காலத்திற்குப்பின் இன்ஸ்டண்ட் சேவை வந்து வாழ்க்கையை சுலபமாக்கியது. இது ஒரிஜினலுக்கு ஈடே ஆகாது என்றாலும் நிச்சயம் புறக்கணிக்கக் கூடியதும் அல்ல. எப்பொழுதும் Concord சேவை(200 கிராம் 20 ரூபாய்) உபயோகித்துக் கொண்டிருந்தேன்.

MTR Rice Sevai

இப்போது புதிதாக MTR நிறுவனத்தினர்  With Low Glycemic Index என்கிற லேபிளோடு புதிதாக ஒரு இன்ஸ்டண்ட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 200 கிராம் பாக்கெட் 18 ரூபாய். Glycemic Index தொடர்புடைய ஒரு பதிவு.

Concord நன்கு கொதித்த நீரில் ஐந்தாறு நிமிடங்கள் மூடிவைத்து, பின் நீரை வடிக்க வேண்டும், இதில் 5 நிமிடங்கள் அடுப்பிலேயே கொதிக்கவைத்து நீரை வடிக்கவேண்டும் என்பது தவிர இரண்டுக்கும் தயாரிப்பில் அதிகம் வித்தியாசம் இல்லை.

எந்த சேவையாக இருந்தாலும், சேவை தயாரித்தபின் நமக்கு விருப்பமான வகையில் தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, தயிர் சேவை போன்றவைகளைத் தயாரித்துக் கொள்ளலாம். எல்லாம் தயாராக இருந்தால் ஒரே பாக்கெட்டில் அரை மணி நேரத்தில் நான்கு வகை சேவைகளை குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க செய்துவிடலாம்.

arisi sevai (plain)puLi sevai

elumichchai sevaithEngaai sevai

எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தது, சேவையை எதனோடும் கலக்காமல் அப்படியே சுடச் சுட இருக்கும்போது ஒரு டீஸ்பூன் பச்சைத் தேங்காயெண்ணெய் மட்டும் கலந்து மோர்க் குழம்பு அல்லது காரம் சேர்த்த தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடுவது.

தேவையான பொருள்கள்:

வாழைத் தண்டு – 3 கப் (நறுக்கியது)
தேங்காய் – 1 மூடி
பச்சை மிளகாய் – 5, 6
கெட்டியான மோர் – 1 கப் (புளிக்காதது)
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு
பெருங்காயம்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

vaazhiththaNdu (cut)vaazhaiththaNdu mOr koottu

செய்முறை:

  • வாழைத் தண்டை பட்டை, நார் நீக்கி, (கருக்காமல் இருக்க)மோர் கலந்த நீரில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் மோர் நீரிலிருந்து பிழிந்த வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் (சீக்கீரம் வெந்துவிடும்.) அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • இறுதியில் கடைந்த மோர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மல்லித் தழை சேர்த்து உபயோகிக்கலாம். (அல்லது சிறிது சாதா எண்ணெயில் தாளித்துவிட்டு, மேலாக பச்சைத் தேங்காயெண்ணெய் சேர்க்கலாம்.)

* இதே போல் சௌசௌ, பூசணி, கோஸ் போன்ற காய்களிலும் தனித் தனியாகச் செய்யலாம். ஆனால் வாழைத் தண்டில் செய்யக் கூடிய மிகக் குறைந்த வகை தயாரிப்புகளில் இது முக்கியமானது.
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், எள் சாதம்…

எள் சாதம் தனியாகச் செய்திருக்கிறேன். வாழைத் தண்டு மோர்க் கூட்டும் தனியாகச் செய்திருக்கிறேன். எள் சாதத்திற்கு வாழைத்தண்டு மோர்க் கூட்டு என்பது எனக்குச் செய்தி. இந்த மேட்ச் ஃபிக்சிங் kallyanakamala அவர்கள் சொன்னது. இன்று செய்துபார்த்தேன். நன்றாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 1/4 கிலோ
கத்தரிக்காய் – 1/4 கிலோ
நிலக்கடலை – ஒரு கைப்பிடி 
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
பால் (அல்லது தேங்காய்ப் பால்) – அரை கப்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை 

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4, 5
தனியா – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaalikkaai kaththarikkaai koottuthakkaalikkaai paagarkkaai koottu

செய்முறை:

  • துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
  • நிலக்கடலையை ஒரு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது துவரம் பருப்போடு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • தக்காளிக் காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நறுக்கிய தக்காளிக் காய், ஊறவைத்த நிலக்கடலையைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • கத்தரிக்காய், தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
  • கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால், தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.
  • வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், போன்ற காய்களிலும், பீன்ஸ், சௌசௌ, கோஸ் போன்ற காய்களிலும் விரும்பினால் பொருத்தமான பயறுகள் சேர்த்துச் செய்யலாம்.

* நிலக்கடலை தவிர வேறு பயறுகளாக இருந்தால் எட்டுமணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்போடு வேகவைத்துச் சேர்க்க வேண்டும். இந்த முறையில், அரைத்துவிடும் பொருள்களில் 7, 8 பச்சை நிலக்கடலையும் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.

* ஊறவைத்த பயறு தயாராக இல்லாதபொழுது ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையே நேரடியாக காயோடு வேகவைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
பட்டாணி மாவு – 1 கப் *
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பெரியது)
பசலைக் கீரை – 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
நெய் அல்லது வெண்ணெய்

Missi Roti 1(Gujarat) batter मिस्सी रोटीMissi Roti 1.1(Gujarat) मिस्सी रोटी

செய்முறை:

  • கழுவிய பசலைக் கீரை, வெங்காயத்தை மிகமிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.\
  • பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவு, மைதா, பட்டாணி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, அரைத்த மிளகாய் விழுது, நறுக்கிய கீரை, வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்றாக அழுத்திப் பிசையவும்.
  • தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் விட்டு (கீரை, வெங்காயம் சேர்ப்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது.) மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சுமாராகப் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை துணியில் சுற்றி அல்லது ஈரமான மூடிபோட்ட உலர்ந்த பாத்திரத்தில் அரைமணியிலிருந்து ஒருமணி நேரம் வரை வைத்திருக்கவும். மாவு சிறிது தளர்வாகியிருந்தால் ப்ரிட்ஜிலும் வைக்கலாம்.
  • ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
  • மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
  • அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
  • மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம் அல்லது நேராக அடுப்பில் காட்டி வாட்டலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.

Missi Roti 1.2(Gujarat) मिस्सी रोटी

* பட்டாணி மாவு கிடைக்காதவர்கள், அரை கப் மஞ்சள் பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கலந்துகொள்ளலாம். நான் அப்படித்தான் செய்திருக்கிறேன்.

* மடித்து இட நேரமில்லாதவர்கள் ஒரே முறை மட்டும் வட்டமாக இட்டும் செய்யலாம். இந்த முறையிலும் நன்கு உப்பி கொப்புளங்கள் வரும்; மென்மையாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தக்காளித் தொக்கு, ஊறுகாய், தயிர்ப் பச்சடி, சப்ஜி வகைகள்….

தேவையான பொருள்கள்:

கேரட் –  1/2 கிலோ (துருவல் – 4 கப்)
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 முதல் 4 கப்
நெய் – 1/2 கப்
கோவா – 100 கிராம் (விரும்பினால்)
ஏலப்பொடி
குங்குமப்பூ
வெள்ளரி விதை
முந்திரிப் பருப்பு

Delhi carrotCarrot thuruval

செய்முறை:

  • அல்வா செய்ய, சிவப்பாக இருக்கும் டில்லி கேரட் மிகவும் ஏற்றது. கேரட்டை நன்கு கழுவி, சிறிய அளவுத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் (நான்-ஸ்டிக் விரைவாகவும் சுலபமாகவும் வரும்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் கேரட்டை லேசாக வதக்கி, பால் சேர்த்து நிதானமான சூட்டில் கொதிக்கவிடவும். அடிக்கடி கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
  • பால் சேர்ந்துவரும்போது, சர்க்கரை சேர்த்துக் கிளற ஆரம்பிக்கவும். மேலும் இளகி, மீண்டும் இறுக ஆரம்பிக்கும்.
  • விரும்பினால் இந்தப் பதத்தில் கோவா சேர்த்துக் கொள்ளவும்.
  • இறுதியில் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து இறக்கவும்.
  • வெள்ளரி விதை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு இரண்டில் ஒன்றோ இரண்டுமோ சேர்க்கலாம்.

Carrot halwa

* முழுவதும் பால் உபயோகிக்காமல் கன்டென்ஸ்ட் மில்க் உபயோகிக்கலாம். அரை கப் பால் விட்டு முதலில் கேரட்டை நன்கு பச்சைவாசனை போக வேகவைத்துக் கொண்டு கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கிளற ஆரம்பிக்கலாம். அதில் சர்க்கரை சேர்த்திருந்தால் நாம் பாதி சர்க்கரை அல்லது அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் போதும்.

* சிலர் குக்கரில் பாலுடன் கேரட்டை வேகவைக்கிறார்கள். சுலபம். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. துருவிய கேரட் வாணலியிலேயே சீக்கிரம் வெந்துவிடும்.

* கேரட்டைத் துருவது ஒரு பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலர் அதற்காக மிக்ஸியில் அரைத்துச் செய்கிறார்கள். எனக்கு அதன் இறுதிவடிவம் பிடிக்கவில்லை. அதற்குப் பதில் நல்ல இசையைக் கேட்டுக்கொண்டு கொஞ்சம் மெனக்கெட்டு துருவி விடலாம்.

* ஆரஞ்சு கலர் கேரட்டிலும் செய்யலாம். சுவை சுமார் தான். சர்க்கரை சிறிது அதிகம் சேர்க்கவேண்டும். விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களில் பரிசாரகர்கள் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவையும் நெய்யில் வறுத்து, சேர்த்துக் கிளறுகிறார்கள். இது கேரட்டை பெரிய அளவில் துருவினாலும், அல்வா சேர்ந்தாற்போல் வருவதற்கும், அளவு அதிகம் காண்பதற்கும் உதவும்.

* ஒரு விசேஷத்தில் முந்திரியுடன் கிஸ்மிஸ் பொரித்துச் சேர்த்திருந்தார்கள். அல்வா என்று சொல்லிவிட்டு அதில் கிஸ்மிஸ் சேர்த்து அதை கேசரி லெவலுக்கு இறக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேவையான பொருள்கள்:

பாகற்காய் – 1/4 கிலோ
கொத்துக்கடலை – ஒரு கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறு கட்டி (விரும்பினால்)  

வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

paakaRkaai pitlai

செய்முறை:

  • வெள்ளைக் கொத்துக்கடலை அல்லது சிறிய அளவு கருப்புக் கொத்துக்கடலை உபயோகிக்கலாம். ஊறவைத்த கொத்துக்கடலை, துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பாகற்காயை முற்றலாக இருக்கும் குடல் பகுதிகளை நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • 2 டீஸ்பூன் எண்ணெயில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகு, தனியா என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய பாகற்காயுடன் வேகவைத்த கொத்துக்கடலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிதானமான சூட்டில் புளிநீரில் வேகவைக்கவும்.
  • காய் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
  • விரும்பினால் வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள்  வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
  • இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய்(நல்லெண்ணெய்), பருப்பு சாதம்…
 

இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது.

தேவையான பொருள்கள்:

பூசணிக்காய் – 1/2 கிலோ
மஞ்சள் பட்டாணி – 1/4 கப்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 3, 4
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1/2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

poosaNikkaai  puLi(kalyaana) koottu

செய்முறை:

  • ஊறவைத்த பட்டாணியையும், துவரம் பருப்பையும் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • பூசணிக்காயை, தோல், குடல் பகுதி நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியாவை பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த பட்டாணி, நறுக்கிய பூசணிக்காயைச் சேர்க்கவும்.
  • புளி நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நிதானமான தீயில் வேகவைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறிவிடவும். 
  • காய் வெந்ததும், அரைத்த விழுது, துவரம் பருப்பு சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு, சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.

* கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற நாட்டுக் காய்களிலும் இந்தக் கூட்டை செய்யலாம்.

* இதில் பட்டாணி இல்லாமல் வெள்ளைக் கொத்துக்கடலை, தட்டைப் பயறு வகைகளும் அந்தந்த காய்களுக்கு ஏற்றமாதிரி உபயோகிக்கலாம். எந்தப் பயறுமே ஊறவைத்து தயாராக இல்லையென்றாலும் கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, காயோடு சேர்த்து வேகவிடலாம்.

* புளி மிகக் குறைவாகவே சேர்க்கவேண்டும். குழம்பு ரசத்திற்கு கரைத்து வைத்திருப்பதில் தெளிந்து மேலாக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டாலும் மெனக்கெடத் தேவை இல்லை. பக்கத்தில் செய்துவைத்திருக்கும் ரசத்தின் தெளிவை மேலாக இரண்டு கரண்டி எடுத்துவிட்டுக் கொள்ளலாம். இது உண்மையிலேயே சுவையாக இருக்கும். யாராவது, “எப்டி இப்படி நீர்ப்புளியா விட்டு திட்டமா செஞ்சிருக்க?” என்று கேட்டால், ரகசியத்தைச் சொல்லாமல், ‘நானெல்லாம் பொறவிலயே அப்படித்தான்’ மாதிரி கெத்தாக இருந்துவிடவேண்டியது. 🙂
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் பருப்பு சாதம், ரசம், தயிர், பொடி, துவையல் சாதம்…

கருணைக்கிழங்கு பழைய கிழங்காக இருந்தால் அரிக்காமல் இருக்கும். மேல்த் தோலை கீறிப் பார்த்து, உள்ளே சிவப்பாக இருந்தால் புதிது. அப்படி இருந்தாலும் வாங்கி வீட்டில்வைத்து, 20 அல்லது 25 நாள்களுக்குப் பிறகுஓரளவு உள்பகுதி வெள்ளையானதும் உபயோகிக்கலாம். அதற்கு மேலும் காரல், அரிப்பு இல்லாமல் இருக்க, எப்பொழுதும் கருணைக்கிழங்கை அரிசிகளைந்த நீரிலேயே வேகவைக்க வேண்டும். மூலநோய்க்கு மிகவும் நம்பிக்கையான மருந்து என்று சொல்கிறார்கள்.

karuNai kizhangukaruNai kizhangu masiyal

தேவையான பொருள்கள்:

கருணைக் கிழங்கு – 1/4 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

  • கிழங்கைக் கழுவி அப்படியே முழுதாக அரிசி களைந்த நீரில் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மேல் தோலை நீக்கி, கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
  • மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நிதானமான தீயில் சேர்ந்தாற்போல் வரும்வரை கொதிக்கவிடவும்.
  • குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும்.
  • கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு கலந்த சாதம், தயிர் சாதம், உப்புமா, பொங்கல் வகைகள்…

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
ரசப் பொடி – 1/2 டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த நீர் – 2 கப்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: நெய் (எண்ணெய்), கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

elumichchai rasam

செய்முறை:

  • துவரம் பருப்பு வேகவைத்த நீர் இரண்டு கப் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து தக்காளிகளை முழுதாகப் போட்டு, 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும்.
  • தக்காளிகளை மேல்தோலை நீக்கி, அந்தத் தண்ணீரிலேயே கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மேலும் ஒரு கப் தண்ணீர், துண்டாக நறுக்கிய(அல்லது நசுக்கிய) இஞ்சி, குறுக்கே கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்கவும்.
  • தக்காளி பச்சை வாசனை போனதும் ரசப் பொடி சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்கவைத்து பருப்பு நீரையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • ரசம் நுரைக்கக் கொதித்து, பொங்கி மேலே வரும்போது கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து, அடுப்பை அணைக்கவும்.
  • கொத்தமல்லித் தழை சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். .
  • பரிமாறும் நேரம் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

* இந்த ரசம் வண்டல் இல்லாமல் அடிவரை கலந்து பரிமாறலாம். வீணாக்காமல் முழுமையாக உபயோகிக்கலாம்.

* பச்சை மிளகாய், எலுமிச்சை, பருப்பு நீரின் மணம் அதிகமாக இருந்தால் சுவைக்கும். நன்கு வேகவைத்த துவரம்பருப்பையும் சிறிது எடுத்து, நன்றாக மசித்து, கொதிக்கும் ரசத்தில் கலந்துகொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த ரசம் சாதத்திற்கு, சாதா கறி வகைகள், அப்பளம், வடாம் தவிர உருளை, வாழை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற ஏதாவது ஒன்றில் செய்த பொடிமாஸ் அல்லது ரோஸ்ட் கறி வகைகள் நன்றாக இருக்கும்.