திசெம்பர் 2007


குழம்பு வகைகளில் முதலில் இதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். விட்டுப் போய்விட்டது. 🙂 சாம்பார்ப் பொடி தயாராக இருந்தால் போதும். அரைச்சல்ஸ் வேலைகள் இல்லாமல் விரைவில் தயாரித்துவிடலாம். அதிகம் மசாலா இல்லாததால் பிரச்சினை இல்லாதது. நாட்டுக் காய்கறிகளில் செய்யவும், தினசரி சமையலுக்கும் மிகவும் ஏற்றது. வீட்டுச் சாப்பாடு என்பதற்கான முக்கியக் குறியீடு பருப்புக் குழம்பு.  

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
வாழைத் தண்டு – ஒரு சாண் நீளம்
துவரம் பருப்பு – 3/4 கப்
சாம்பார்ப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், உளுத்தம் பருப்பு, வெந்தயம் (விரும்பினால்), சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazhaiththandu kuzhambu

செய்முறை:

 • துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
 • வாழைத் தண்டை நார் நீக்கி, வட்டவட்ட துண்டுகளாகவோ, சற்றே அகலமாக இருந்தால் அரைவட்ட துண்டுகளாகவோ நறுக்கி, (கருக்காமல் இருக்க) மோர் கலந்த நீரில் போட்டுக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • மோர்நீரை வடித்து, நறுக்கிய வாழைத் தண்டு துண்டங்கள், உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மூடி வேக வைக்கவும்.
 • அந்த நேரத்திற்குள் புளியை வெந்நீரில் ஊறவைத்து, நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
 • அரைப்பதம் வெந்த காயுடன், புளி, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
 • பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
 • நறுக்கிய மல்லித் தழை தூவி உபயோகிக்கவும்.

* இந்த முறையில் பூசணி, கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பரங்கி, அவரை, முருங்கை என்று நாட்டுக் காய்கறிகள் எல்லாவற்றிலும் செய்யலாம். அனைத்துக் குழம்பும் எந்தக் காயை உபயோகிக்கிறோமோ, அதற்கான பிரத்யேகமான சுவையோடும் மணத்தோடும் இருக்கும்.

* கத்தரி வெண்டை போன்ற காய்களை முதல் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கத் தேவை இல்லை. தாளித்ததும் சிறிது வதக்கி, நேரடியாக புளிநீரைச் சேர்க்கலாம்.

* அவரை போன்ற காய்களுக்குப் பொருத்தமாக பச்சை மொச்சை போன்ற பயறுகளும் சேர்ப்பதால் அதிக மணத்தைக் கொடுக்கும்.

* காய்களுக்குப் பதில் கீரை வகைகளையும் பொடியாக நறுக்கி, வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா (முக்கியமாக ரவை, அரிசி உப்புமா),…..

குழம்பில் இருக்கும் காய் தயிர்/மோர் சாதத்திற்கு மிகவும் பொருத்தமானது. குழம்பு ரசம் சாதங்களுக்கு வேறு கறி/கூட்டு உபயோகித்து தயிருக்கு ஊறுகாயை நாடும் வேளையில் ஊறுகாயை ஓரம்கட்ட/ ஒழிக்க குழம்பின் தான்(காய்) மிக முக்கியமானது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தவை வாழைத் தண்டு, பூசணி, அவரை, கீரைத் தண்டு.

[மீனாட்சி தண்டு என்று மரம் மாதிரி ஒரு கீரைத் தண்டு கிடைக்கும். அதன் கீரை வேலைக்காகாது. தண்டை வட்டமான வில்லைகளாக நறுக்கி கூட்டு செய்வதும் இந்தக் குழம்பில் போடுவதும் எனக்குப் பிடிக்கும்.]

தேவையான பொருள்கள்:

பச்சைப் பட்டாணி – 200 கிராம் (அல்லது முக்கால் கப் காய்ந்த பட்டாணி)
பனீர் – 200 கிராம் (அல்லது ஒரு லிட்டர் பால்)
வெங்காயம் – 3 (பெரியது)
தக்காளி – 3 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
முந்திரிப்பருப்பு – 6, 7
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நெய் அல்லது வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்

muttar paneer

செய்முறை:

 • பச்சைப் பட்டாணியை (காய்ந்த பச்சைப் பட்டாணியாக இருந்தால் 10 மணிநேரம் நீரில் ஊறவைத்து), குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
 • ஒரு லிட்டர் பாலில் பனீர் தயாரித்துக் கொள்ளவும். (அல்லது கடைகளில் வாங்கலாம்.)
 • 2 வெங்காயம்(மட்டும்), தக்காளியை பெரிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்.
 • இஞ்சி, உரித்த பூண்டு, முந்திரிப் பருப்பு, தனியா, 1 டீஸ்பூன் மட்டும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்க்கவும்.
 • வெங்காயம் நன்கு பொன்னிறமாகும்வரை வதக்கியவுடன், பனீர் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
 • அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் தக்காளி விழுது இரண்டும் சேர்த்து மேலும் 2, 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
 • மேலே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
 • கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பட்டாணியும் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.
 • சேர்ந்தாற்போல் வரும் சமயம் இறக்கி, வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். (ஹோட்டல்களில் சேர்க்கும் அளவு தாளிக்கும் சமயம் வெண்ணெய், எண்ணெய் சேர்க்காமல் ஆனால் மணமாக இருக்க, கடைசியில் இதைச் சேர்க்கிறோம்.)
 • பரிமாறும் சமயம் சில துளிகள் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்துகொள்ளவும். (ஹோட்டல்களில் உண்ணும்போதும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்வது, புதிதாகச் செய்த உணர்வையும் சுவையையும் தரும்; அப்படி அல்ல என்பது நமக்குத் தெரியும் என்றாலும். :)]

* இஞ்சி பூண்டு விழுது, தனியாத் தூள், சீரகத் தூள் என்று தயாராக இருந்தால் அதையே உபயோகிக்கலாம். பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். (ஆனால் பொதுவாக, அவ்வப்போது பொருள்களைச் சேர்த்து அரைப்பது அதிக மணத்தைத் தரும்.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி, பரோட்டா, நான் வகைகள்…

வலைப்பதிவுகள் தாண்டிய நண்பர் ஒருவர், இந்தக் குறிப்பில்   தேடு வசதி, பதிவின் பக்கவாட்டில் இருப்பதாக நான் எழுதியபின், முதன்முறையாக அதை அப்போதுதான் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு, தமிழில் தட்டத் தெரியாததால் அங்கே இங்கே என்று எழுத்துகளைப் பிடித்து ஒட்டுப்போட்டு ‘நெல்லிக்காய்’ என்ற ஒரு வார்த்தையை உருவாக்கி (தமிழில் வேறு வார்த்தையே கிடைக்கவில்லையா? அல்லது தமிழ்நாட்டில் நெல்லிக்காய் இப்போது சீசனா?) என் பதிவில் தேடியதில் சடசடவென 20 பதிவுகள் வந்ததாகவும், ஆர்வமாக உள்ளே ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தால் (வாழ்க நின் பொறுமை!), ஒரு குறிப்பு கூட நெல்லிக்காயில் செய்தது இல்லை என்ற பேருண்மை புரிந்து வருத்தப்பட்டார். (உண்மைல கொலைவெறியானார். நாந்தான் கொஞ்சம் நாசுக்காச் சொல்லியிருக்கேன்.)  ஆனால், ‘தேவையான பொருள்களி’ல் புளி – நெல்லிக்காய் அளவு என்று எல்லாப் பதிவிலும் எழுதியிருந்தால் அவை வராமல் என்ன செய்யும்? இப்படி எல்லாம் பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்காத என் பேதைமை நான் கேட்காமலே மன்னிக்கப்பட்டு விட்டாலும் பரிகாரமாக  சடசடவென்று  இரண்டு  நெல்லிக்காய் குறிப்புகள். நெல்லிக்காயைத்  தேடி  வாங்குவது தான் கஷ்டமான காரியமாக இருந்தது. [நெல்லிக்காய் நெருக்கியதில் வாழைத் தண்டு ஊறுகாயை இரண்டு வாரம் கழித்து செய்ய ஒத்திப் போட்டுவிட்டேன்.] 

குறிப்பு (தெரியாதவர்களுக்கு மட்டும்): தேடுபவர்கள் ஆங்கிலத்தில் அதே வார்த்தையைத் தட்டித் தேடினால் (nellikkaai) இந்தப் பிரச்சினை அதிகம் வராது. அந்தப் பொருளை அந்த உணவில் முக்கியமாக உபயோகித்திருந்தால்  மட்டுமே அது பதிவின் தலைப்பில்,  சுட்டியில்  இருக்கும். (இதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியுது. ஆனாலும் என்ன செய்ய?)

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் – 8 (பெரியது)
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
காயம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

nellikkaai thokku

செய்முறை:

 • நெல்லிக்காய்களை குக்கரில் 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து, உதிர்த்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும்.
 • மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும். அல்லது துருவியும் உபயோகிக்கலாம்.
 • அடுப்பில் வாணலியில் நண்லெண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
 • நெல்லிக்காயை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும்.
 • தொக்கு மாதிரி சேர்ந்து வரும்போது மிளகாய்த் தூள், வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும்.

* நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். குறைந்த அளவு செய்வதால் எண்ணெய் அதிகம் தேவை இல்லை.

* தனியாக வெந்தயப்பொடி, மிளகாய்த் தூள் சேர்க்காமல், ஊறுகாய்ப் பொடி உபயோகித்தும் செய்யலாம். நான் அப்படித் தான் செய்திருக்கிறேன்.

* அருநெல்லிக்காயிலும் இந்தத் தொக்கு சுவையாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தயிர்சாதம் தவிர, நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

அதிகம் போரடித்தால் சப்பாத்தி, தோசை, உப்புமா வகைகளுக்கும் உபயோகிக்கலாம். 

நெல்லிக்காய் எல்லாவிதச் சத்துகளும் நிறைந்தது. ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சையாகவோ, தேனில் ஊறவைத்தோ சாப்பிடுவது அதைவிட நல்லது. இரும்புச் சத்து, எக்கச்சக்கமாக வைட்டமின் C, அதோடு வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. தலைமுடி, நகம் இவற்றுக்கு வலுவூட்டும். உடலுக்கு, முக்கியமாக கண்களுக்குக் குளிர்ச்சி, இன்னும்……

மேற்கூறிய காரணங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் புளிப்பாய் ஒரு காய் கையில் கிடைத்தால் தமிழன் அதை ஊறுகாய் போடாமல் விட முடியுமா?

சரி, முக்கியமாய் அவசரமாய் நெல்லிகாயை பற்றி நான் பேசக் காரணம், 😦  (இதெல்லாம் ஒரு காரணமா என்று யாரும் அடிக்க வராமல் இருக்கவேண்டும்.), நாளை சொல்கிறேன்….

nellikkaai urugaai

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் – 8 (பெரியது)
ஊறுகாய்ப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
பெருங்காயம்

செய்முறை:

 • நெல்லிக்காய்களை கொதிக்கிற வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிக்கவும். (ஊறுகாய் சீக்கிரம் ஊற இது உதவும்.)
 • நறுக்க நறுக்க, கொட்டையை ஒட்டி வில்லைகளாக, தானே சுலபமாகக் கழண்டு வரும். அப்படியே துண்டுகளாக எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
 • உப்பு, மஞ்சள் தூள், ஊறுகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
 • நல்லெண்ணையில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி, கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.

* மறுநாளிலிருந்தே உபயோகிக்கலாம். ஒரு வாரத்துக்கு மேலும் வைத்திருந்து உபயோகிப்பதாயிருந்தால் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

* நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும்.

* பொதுவாக அதிக அளவில்(கிலோ கணக்கில்) நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும்போது நறுக்கிய காயின் அளவு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் மிளகாய்த் தூளும், உப்பும், காரத்தின் அளவுக்கு முக்கால் பாகம் அல்லது அதற்கு மேலும்கூட எண்ணெயும் தேவை. 

* அருநெல்லிக்காயிலும் இந்த ஊறுகாயைத் தயாரிக்கலாம்.

திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களில் பரிமாறப்படும் ஊறுகாய்கள் சுவையாக இருக்கும். ஆனால் அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது. அதிகம் அடுப்பில் கொதிக்க வைக்காமல், அதிகம் எண்ணெய் விடாமல் தயாரிப்பதால் சீக்கிரம் கெட்டுவிடலாம். ஆனால் மொத்தமாகச் செய்து அதிக நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்போது சேர்க்க வேண்டிய அதிக எண்ணெய், அதன்பொருட்டு நாம் சேர்க்கும் அதிக உப்பு, காரம் இவை இல்லாததாலேயே உடலுக்கு இவை அவ்வளவு மோசமில்லை. 🙂 புதிதாகத் தயாரித்ததைத் தான் உபயோகிக்கிறோம் என்ற மனத் திருப்தி.

ஆவக்காய், வடுமாங்காய் போன்ற வருடாந்திரத்துக்கான பிரத்யேகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். மாற்றாக இன்னொரு ஊறுகாயை  அதுபோல் நாமும் அவ்வப்போது ஒருவாரம் பத்து நாள்களுக்கு மட்டும் வருமளவு கொஞ்சமாகத் தயாரித்து உபயோகிப்பது நல்லது. இரண்டே இரண்டு எலுமிச்சம் பழம் இருந்தால்கூட அதை உடனடி ஊறுகாய் போடுகிற வகை நான். இதனால் அடிப்படைக் காயை விதவிதமாக மாற்றி, போரடிக்காமல் செய்யலாம். விரும்புபவர்கள் இந்தப் பொடியை தயாரித்துவைத்துக் கொண்டால், ஐந்து நிமிடத்தில் எந்த ஊறுகாயும் செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 100 கிராம்
கடுகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்

செய்முறை:

 • காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை நன்கு வெயிலில் காயவைத்து அல்லது அப்படிச் செய்ய வசதியில்லாதவர்கள் லேசாக வாணலியில் வறுத்து, நைசாகப் பொடித்துவைத்துக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தும் தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம்.

*விரும்பினால் விரளி மஞ்சளையும் இதனுடனேயே சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் – 1/2 கிலோ
பயறு – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3, 4
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

kaththarikkai koottu

செய்முறை:

 • துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
 • விரும்பினால் தட்டப்பயறை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். (கத்தரிக்காய்க்கு கொத்துக்கடலையும் நன்றாக இருக்கும். பயறு வகை எதுவும் சேர்க்காமலும் செய்யலாம்.)
 • கத்திரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • நறுக்கிய கத்தரிக்காயை தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
 • முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது, வேகவைத்த பயறு சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு கொதிவிடவும்.
 • வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
 • நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரங்காய், அவரைக்காய், புடலங்காய் போன்றவற்றிலும் விரும்பினால் காய்க்குப் பொருத்தமான பயறு சேர்த்தோ, சேர்க்காமலோ செய்யலாம்.

kolam

* நண்பர் ஸ்ரீகாந்த் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடல்கள் குறித்து எழுத இருக்கிறார் என்று தெரிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று படிக்கலாம். http://bhakthi.wordpress.com/

* நண்பர் மதுரபாரதி திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று படிக்கலாம்.  http://mozhi.blogspot.com/

-0- 

எழுத்தாளர் மாலதி சதாரா— ஏராளமான எழுத்துத் தகுதிகளுக்கும் அப்பால் முக்கியமாக “திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா” என்று சொல்லிக்கொண்டவர் இரண்டு வருடங்கள் முன்பு ராயர் காப்பி கிளப்பில் தொடர்ந்து 30 நாள்களும் திருப்பாவைப் பாடல்களுக்கான அக, புற ஆழ்ந்த அர்த்தங்களை எளிமையான நடையில் அழகாக எடுத்துவைத்தார். இரா.முருகன் அவர்களால் குழுமத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அம்மடல்கள் குழுமத்துக்குள்ளேயே கண்டுபிடிக்க முடியாமல் போய்விடக் கூடாதென்பதற்காக தனியாக எடுத்துவைத்துக் கொள்ள நினைத்தேன். அவற்றை இங்கேயும் கொடுத்திருக்கிறேன். ஆர்வம் இருப்பவர்கள், நேரமும் இல்லாவிட்டாலும் முடிந்தபோதோ அல்லது தேவையான பொழுதோ சுலபமாக சுட்டியைப் பிடித்து, படித்துக்கொள்ள வசதியாக பாடலும் சுட்டிகளும் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

நன்றி: மாலதி, ராகாகி.

எழுத்தாளர் இரா.முருகன் அறிமுகத்தோடு
முன்னுரை (1)–> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10407
முன்னுரை (2) –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10408

01. மார்கழித் திங்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10409
02. வையத்து வாழ்வீர்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10410
03. ஓங்கி யுலகளந்த –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10411
04. ஆழிமழைக் கண்ணா –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10413
05. மாயனை மன்னு –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10415
06. புள்ளும் சிலம்பின –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10425
07. கீசுகீசென் றெங்கும் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10433
08. கீழ்வானம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10436
09. தூமணி மாடத்துச் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10439
10. நோற்றுச் சுவர்க்கம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10443
11. கற்றுக்கறவை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10449
12. கனைத்திளங் கற்று –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10471
13. புள்ளின்வாய் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10485
14. உங்கள் புழைக்கடை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10489
15. எல்லே! இளங்கிளியே! –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10509
16. நாயகனாய் நின்ற –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10523
17. அம்பரமே தண்ணீரே –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10536
18, உந்துமதகளிற்றன் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10549
19. குத்துவிளக்கெரிய –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10559
20. முப்பத்து மூவர் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10567
21. ஏற்றக்கலங்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10575
22. அங்கண்மா ஞாலத்து –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10577
23. மாரிமலை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10578
24. அன்றுஇவ் வுலகம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10587
25. ஒருத்திமகனாய் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10600
26. மாலே! மணிவண்ணா! –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10628
27. கூடாரைவெல்லும் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10638
28. கறவைகள் பின்சென்று –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10643
29, சிற்றஞ்சிறுகாலே  –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10661
30. வங்கக்கடல் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10661

நன்றி: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன்.

”அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்….சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”

அரைக்கீரை குறித்து இங்கே சொல்லியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து அரைக்கீரை மதுரை அளவு அதிகமாகவும் விலை மலிவாகவும் ஸ்ரீரங்கத்தில் கூட பார்த்ததில்லை. நினைவுதெரிந்து சின்ன வயதில் விடுமுறைக்கு மதுரைக்குப் போகும்போது, ஜெய்ஹிந்துபுரம் முதல் மெயின் தெருவில் 10 பைசாவுக்கு ஒரு பெரிய பை நிறைய அடைத்துக் கொடுப்பார்கள்.

முளைக்கீரை மாதிரி இதில் வேர் இருந்து படுத்தாது என்றாலும் கொஞ்சம் கட்டை எல்லாம் நீக்க வேண்டியிருக்கும். அநேகமாக பெருமளவு தண்டுப்பகுதியை நான் சேர்த்துக் கொண்டுவிடுவேன். வெறும் இலைப்பகுதியைவிட தண்டும் சேர்ந்தால்தான் கறி/கூட்டு சுவையாக இருக்கும். அதற்கும் தடிமனான தண்டுப்பகுதியையும் தனியாக எடுத்து குழப்பில் போட்டுவிடுவேன். நான் தூக்கி எறியும் பகுதி மிகமிகக் குறைவாகத் தான் இருக்கும்.

இது ஒரு பத்திய உணவு என்று தெரிகிறது. நாஞ்சில் நாடன் ஐயா, இன்னமொரு நூற்றாண்டிரும்!

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை
பூண்டு
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

 • அரைக்கீரையை பெரிய தண்டுப்பகுதிகளை நீக்கி, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த பூண்டு தாளிக்கவும்.
 • நறுக்கிய அரைக்கீரையைச் சேர்த்து நீர் விடாமல், பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
 • சுண்டியதும் இறக்கி உபயோகிக்கலாம்.

* ஒரு காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம் 4 உரித்துச் சேர்த்து வதக்கினாலும் சுவையாக இருக்கும். உடலுக்கு நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், ரசம் சாதம்.
 

தலை”மை“ப் பண்புக்கு அஞ்சுபவர்கள் அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டிய துவையல். ஆனால் எழுத்துலகின் ‘பிதாமகன்‘ வேடத்திற்குப் பொருந்துவதாக நினைப்பவர்கள், தனக்கும் எழுத்தெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் கெட்டப் மட்டுமாவது வரட்டும் என்று விரும்புபவர்கள், இதைத் தவிர்த்தல் நலம். [பெண்கள் இலக்கியவாதிகளே ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடமாட்டார்கள் என்று நம்புவோம். :)] வயிற்றில் பிரச்சினை, அல்லது உடல்நலமில்லாதிருந்து மீளும்போது பசியை அதிகரிக்கச் செய்யும் அருமருந்து கறிவேப்பிலை.

தேவையான பொருள்கள்:

கறிவேப்பிலை – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு

karuveppilai thuvaiyal

செய்முறை:

 • அதிகம் முற்றலில்லாத கறிவேப்பிலையாக உதிர்த்து 2 கப் எடுத்து, நீரில் அலசி வடித்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் என்ற வரிசையில் சிவக்க வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 • மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு, புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை லேசாக மட்டும் வதக்கிக் கொள்ளவும்.
 • மிக்ஸியில் கறிவேப்பிலைக் கலவையை தேங்காய்த் துருவல், தேவையான உப்பு, கொத்தமல்லி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
 • எடுப்பதற்கு முன் வறுத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய், பருப்புகளைச் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி(ஒன்றிரண்டாக உடைபட்டால் போதும்) எடுத்து வைக்கவும்.

* தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள் ஒரு கேரட் சேர்த்துக் கொள்ளலாம். கேரட்டில் உள்ள கேரட்டின் சத்து லேசாக வதக்குவதாலேயே வெளிப்படுகிறது என்பதாலும் லேசாக பச்சை வாசனை போகவும், அதையும் கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்கிவிட்டு அரைப்பது நல்லது. நான் அதிகம் துவையல், அடை மாதிரி உணவுகளில் தேங்காய்க்குப் பதில் கேரட் (அல்லது இரண்டும் பாதிப் பாதி அளவு சேர்த்து) தான் உபயோகிக்கிறேன். தேங்காய் சேர்ப்பதைவிட சுவையாக இருக்கும்.

* தேங்காய் சேர்க்காமல் நன்றாக கறிவேப்பிலையை வதக்கி அரைத்துக்கொண்டால், பிரயாணங்களுக்கு தயிர்சாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பருப்பு சேர்த்த, அதிகம் மசாலா சேர்க்காத கூட்டு வகைகள் தொட்டுக்கொண்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

தயிர் சாதத்துடன் சேரும்.

வாழைத்தண்டை பாட்டியோ அம்மாவோ நறுக்குவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்காது. வட்ட வட்டமாக நறுக்கி, ஒவ்வொருமுறையும் அரிவாள்மணையில் இழுத்துக்கொண்டு வரும் நாரை ஆள்காட்டிவிரலில் சுற்றிக் கொண்டே, அடுத்த வட்டம், அடுத்த நார்ச் சுற்று…. என்று ஓரளவு வந்ததும், கையில் இருக்கும் நாரை நீக்கிவிட்டு தொடர்ந்து…. வட்டங்களை ஐந்தாறாக அடுக்கிக்கொண்டு, சரக் சரக்கென்று குறுக்காக பொடிப்பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீர் உள்ள குண்டானில் போட்டுக்கொண்டே… வாழைத்தண்டு நாரை விளக்குக்கு திரி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

அரிவாள்மணையே தேவை இல்லாமல் கத்தியையே நம்பியிருக்கும் எனக்கும் ஒருநாள் அதன் தேவை வருகிறது என்றால் அது வாழைத்தண்டு நறுக்கத்தான். இல்லாததால் கஷ்டப்பட்டு கத்தியிலேயே நறுக்கினேன். ஒன்றும் சுகமில்லை.

தேவையான பொருள்கள்:

வாழைத்தண்டு
பயத்தம் பருப்பு – 1/4 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazhaiththandu curry

செய்முறை:

 • பயத்தம் பருப்பை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
 • வாழைத்தண்டை, வெளிப்பக்கம் இன்னும் பட்டை இருந்தால் நீக்கிவிட்டு, வட்டவட்டமாக நறுக்கி, இடையில் வரும் நாரை எல்லாம் நீக்கி, பின் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • நறுக்கிய காயை சிறிதளவு மோர் கலந்த நீரில் நனைத்துவைக்கவும். (கருக்காமல் இருக்க இது உதவும்.)
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • மோர்நீரிலிருக்கும் நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்க்கவும்.
 • ஊறவைத்த பயத்தம்பருப்பை நீரை வடித்துச் சேர்க்கவும்.
 • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீர் தெளித்து மூடிவைத்து, அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
 • வாழைத்தண்டு வெந்து, நீர் ஒட்ட சுண்டியதும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி உபயோகிக்கலாம்.

* இவ்வளவு எளிமையாக சமைத்தும் ஒரு காய் இவ்வளவு சுவையாக இருக்கமுடியுமா என்று ஆச்சரியப்படுத்துவதில் வாழைத்தண்டை அடித்துக்கொள்ள வேறு காயில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

என்னைக் கேட்டால் ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சும்மா சாப்பிடலாம் என்றுதான் சொல்வேன். 🙂

நெய்சாதத்தில் பிடித்துச் சாப்பிடலாம்.

ரசத்திற்கு சுமாராகச் சேரும்.

ஆனால் மோர் சாதத்துடன் (தயிர்சாதம் இல்லை) சேர்க்கும்போது பிறந்த பயனை அடையும்.

-0-

“வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ஆகிவிடும் அபாயம் உண்டு.”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.

நன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா.

பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம்.

பிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக் குறிப்பைப் படித்து :), சரியாகவே இருப்பதாகச் சொல்லிவிட்டாலும்– எழுத்தாளர் உஷா, தன்னுடைய சிறப்புக் குறிப்பை இன்னும் அனுப்பவில்லை என்பதை இந்த வேளையிலே நினைவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 🙂
 

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

thakkaalikkai thuvaiyal chutney

செய்முறை:

 • தக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
 • அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
 • வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.

பின்னால் சேர்த்த முன்குறிப்புசாட்

_______________________________________________________________________________

me: ஹாய் கவிஞர், There?
haranprasanna is online.

haranprasanna: (வந்துட்டாங்கப்பா. இன்விசிபிள் மோட் இல்லாத ஜிசாட் ஒழிக!) வணக்கம் ஜெயஸ்ரீ.

me: என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க? 🙂

haranprasanna: வண்டி துடைத்துக்கொண்டிருக்கிறேன், பார்த்தால் தெரியவில்லையா? கணினி முன்னால் அமர்ந்து ஒரு கவிஞன் என்னசெய்துகொண்டிருப்பான்? இதெல்லாம் ஒரு கேள்வியா? இன்னும் சமுதாயத்தில் எழுப்பவேண்டிய  கேள்விகளும்,  தீர்க்கவேண்டிய  பிரச்சினைகளும்  எவ்வளவோ இருக்க, இப்படிப்பட்ட கேடுகெட்ட கேள்விகளால் தான் தமிழன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறான். (இன்னும் சாப்பாட்டுக் கூடைக்காரரு வராம அவனவன் பசில தள்ளாடறான்.)

me: கோபமா இருக்கீங்க போலருக்கு? சாப்பிடப் போகலையா? நான் அப்றம் வரேன்.

haranprasanna: நான் என்றைக்கு சாப்பிட்டிருக்கிறேன்? கவிதைகளை சுவாசித்து கவிதைகளையே உண்டு செரிப்பவன் நான். சாப்பிடச் செல்பவர்கள் சாதாரணர்கள். நான் கவிஞன்.

me: (ஏலே, நீ மட்டும் அடுத்தவன் செரிக்கவே முடியாத கவிதையா எழுதித் தள்றியே இதையெல்லாம் கேக்க ஆளில்லையா?) அப்ப எந்நேரமும் கணினி முன்னால உக்காந்து சாப்பிட்டுகிட்டே இருக்கீங்கன்னு சொல்லுங்க. :))

haranprasanna: சமைக்கவே கருக்கலில் கண்விழித்து, சாப்பாட்டுக் குறிப்புகளுக்காக வலைப்பதிந்து, சாப்பிட்டுத் தூங்கும் உங்களுக்கு இவை புரியப் போவதில்லை. (சாப்பிடாம எனக்கு கண் இருட்டுது.)

me: எவ்வளவு பசிச்சாலும் உங்க கவிதை வேண்டாம்னு பிகேஎஸ் சொல்லியிருக்காரே, ஏன்? 🙂

haranprasanna: ஒரு வாசகராக அவர் பரந்துபட்டவராக இருக்கலாம். ஆனால் ரசிகராக அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. இலக்கியவாதியின் கடமை சிறந்த இலக்கியங்களைப் படைப்பதோடேயே நின்றுபோகிறது. ரசிகன்தான் நாளும் வளர்பவனாக இருக்கவேண்டும். உண்மையான பசியும் உண்மையான தேடலும் வரும்போது அவருக்கு அது சாத்தியமாகலாம். காத்திருக்க வேண்டியதுதான்.

me: ஏன் இப்படி உரைநடைத் தமிழ்ல பேசறீங்க? சகஜமா என்னை மாதிரி பேசினா எனக்கும் பேச இயல்பா இருக்குமில்ல?

haranprasanna: (மவளே, உங்கிட்டேயிருந்து வெட்டிக்க இந்தத் தமிழைத்தானே நம்பியிருக்கேன். உன் உளுத்துப் போன ஸ்ரீரங்கம் தமிழ்ல என் பரணித் தமிழ் தாமிரபரணியைப் போல மாசுபடாம இருக்கவே தமிழன்னைக்கு தினம் நான் அர்ச்சனை செய்றேன்.) என் இயல்பான நடையே அப்படி இருக்க, என்னால் சாதாரணர்களைப் போல் மாற்றிப் பேச இயலாதே. அவரவர் அவரவர் இயல்பிலேயே பேசுவோம். இன்றைக்கு உங்கள் பதிவில் புதிதாக குறிப்பு எதுவும் எழுதவில்லை போலிருக்கிறதே.

me: ஆமாம். 😦 என் பதிவெல்லாம் கூட பார்ப்பீங்களா என்ன? 😉

haranprasanna: தவறாகச் சுட்டியதில் உங்கள் பக்கம் திறந்துவிட்டது. ஒரே நொடியில் மூடிவிட்டேன். நான் அங்கெல்லாம் வந்ததுமில்லை, வரப்போவதுமில்லை.

me: (ம்க்கும். இந்த பந்தால குறைச்சலில்லை.) ரொம்ப போரடிக்குது. இன்னிக்கி உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. அதையே குறிப்பா போட்டுடலாம்.

haranprasanna: எனக்கு மார்த்தாண்டன், சேரன், கல்யாண்ஜி,…

me: ஐயோ நான் சமையல்ல கேக்கறேன். நீங்க சாப்பிடறதுல கேக்கலை.

haranprasanna: எனில் கவிதை சமையுங்கள் ஜெயஸ்ரீ.

me: அதெல்லாம் கடுமையான ஜுரம் வந்தாத்தான் என்னால முடியும். விளையாடாதீங்க.

haranprasanna: எத்தனை நாள் தான் இந்தப் பாழும்பெண்கள் சமையலறையைக் கட்டிக் கொண்டு அழப்போகிறார்களோ. (இவ வேற வீட்டுல இன்னிக்கு சமைச்சாளா இல்லையான்னே தெரியலையே. கார்த்தால கோபத்தை அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணி பழிவாங்கிட்டாளோ?! இன்னிக்கு மதியச் சாப்பாடு வருமா வராதா?)

me: சமையல் செஞ்சா தப்பா? வீட்டுவேலையை யாராவது ஒருத்தர் செஞ்சுதானே ஆகணும்.

haranprasanna: தாராளமாகச் செய்யலாம். ஆனால் எனக்கு அவர்களிடமோ அவர்கள் பதிவுகளிலோ சொல்ல ஒன்றுமில்லை. அவ்வளவுதான். அப்புறம் நானே சொல்ல நினனத்தேன், உங்கள் பதிவில் குறிப்புகளின் பெயர்களையும் வலதுபக்கம் வரிசையாகக் கொடுக்கலாமே. தேர்ந்தெடுக்க எனக்கு வசதியாக இருக்கும்.

me: என்னென்ன கேடகரில குறிப்புகள் இருக்குன்னு, சைட்ல இருக்கே.

haranprasanna: நான் இன்னும் ஆழமான தேடலைச் சொன்னேன். புளிசேரியின் குறிப்பு எழுதிவிட்டீர்களா என்று பார்த்தேன். இல்லையே.

me: ஓ அதுவா. கறி/கூட்டு இடத்துல க்ளிக்கினா அதுல இருந்தா வரும்.

haranprasanna: இத்தனை தொழில்நுட்பத்தையும்கூட பெண்கள் கேடுகெட்ட சமையல்குறிப்புக்கு உபயோகித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? உங்கள் பக்கத்தில் “தேடு” வசதியும் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்குமே.

me: இருக்கே. Search பெட்டில வேணுங்கற பெயரைத் தட்டி க்ளிக்கினா, இருந்தா வந்துடும். இல்லைன்னா இன்னும் எழுதலைன்னு அர்த்தம். 🙂

haranprasanna: எத்தனை யுகங்கள் ஆனாலும் நீங்களெல்லாம் எழுதித் தீர்க்கப் போவதில்லை.

me: குறிப்பு எழுதினா கேவலமா? எனக்குத் தெரிஞ்சதைத் தானே நான் செய்யமுடியும்.

haranprasanna: தெரிந்ததற்காக அதையே செய்வதும், அதிலிருந்து மீள நினைக்காமல் இருப்பதும் பேதைமை இல்லாமல் வேறு என்ன? உப்பேரிக்கும் புளிசேரிக்கும் கூட குறிப்புகள் எழுதுங்கள். (கேவலமாப் போனாலும் பரவாயில்லைன்னு காலைல கிளம்பும்போதே இனிமே வீட்டுல சண்டையைத் தீர்த்துட்டு தான் கிளம்பணும்.)

me: நீங்க இப்பத்தான் சமையல் குறிப்பு எழுதறேன்னு திட்டறீங்க. நீங்களே இன்னும் சில குறிப்புகளை எழுதச் சொல்றீங்க. என்ன சொல்லவரீங்கன்னே சரியாப் புரியலை.

haranprasanna: என் பேச்சே கவிதை மாதிரி இருப்பதாகச் சொல்கிறீர்களா? :)) 

me: (இது வேறயா? நெனப்புதான பொழப்பக் கெடுக்குது.) உங்களுக்கு நகைச்சுவை நன்னாவே வரது.  

haranprasanna: ஒரு இலக்கியவாதியாக நீங்கள் இலக்கியங்களைப் படைக்கவேண்டும் என்று கூறுகிறேன். ஒரு நண்பனாக நீங்கள் எழுதும் (துப்புக்கெட்ட) பதிவாவது முழுமையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான்.

me: சமையல்குறிப்பு எழுதறவளை இலக்கியம் படைன்னா எப்படி முடியும்?

haranprasanna: அக்கார அடிசிலுக்குக் கூட குறிப்பு எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. காலையில்தான் படித்தேன். யுகயுகமாய் பெண்களுக்கான பாட்டை அந்தப் பெண் கவிஞர் சொல்கிறார்.

me: அப்டியா? எனக்கும் அனுப்புங்களேன். உங்கள் ஆதர்ச கவிஞர்கள் பேர்ல ஒன்னுகூட பெண்பெயரே இல்லையே. உங்களுக்கு பெண்கவிஞர்களைப் பிடிக்காதோன்னு நினைச்சுட்டேன்.

haranprasanna: பெண்கள் விடுதலை என்ற பெயரில் உடல்மொழி தவிர பிற விஷயங்களைத் தொடுவதில்லை என்ற சலிப்பு எனக்கு இருப்பது உண்மைதான். (ஒரு ஜெயமோகன பில்டப்புக்கு இது உதவும்.) ஆனால் சேமித்து வைத்திருக்கும் கவிதையின் கருப்பொருள் என்னை பிறவெதுவும் யோசிக்கவொட்டாமல் செய்கிறது. (அதைப் படிச்சதிலிருந்து இன்னும் பசியைக் கிளப்பிவிட்டுடுச்சு. இன்னும் சாப்பாட்டைக் காணோமே. பேசாம வீட்டுக்கு ஃபோன் பண்ணி ஒரு சரண்டர் சிக்னல் கொடுத்துடலாமா?)

me: சரி அனுப்புங்க. எனக்கும் புரியுதான்னு பாக்கறேன்.

haranprasanna: சமையல் குறிப்புதானே; அதனால் புரியும். ஆனால் அது சொல்லவரும் விஷயம் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தேடி அனுப்புகிறேன். கொஞ்சம் பொறுங்கள். (வயிறு பொறுக்குதில்லையே. அம்மா காலைல பாகற்காய் நறுக்கிண்டிருந்தாளே, பிட்லையா இருக்குமோ?)
Sent at 13:55 PM on Tuesday

=================

தேவையான பொருள்கள்:

தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

======================

me: ஐயய்ய, இது என் பதிவிலிருந்து எடுத்த தக்காளிக்காய் கூட்டு இல்லையோ.  ஒண்ணுக்குக் கீழ ஒண்ணா இருக்கவும் கவிதைன்னு நினைச்சுட்டேளா? :))))

haranprasanna: (அடச்சே. பசில இந்தத் தப்பை வேற செஞ்சுட்டேனா! இவ இதைச் சொல்லியே பலநாளுக்கு ஓட்டிக் கொல்வாளே!) சகிக்கவில்லை உங்கள் ஜோக். ஏதோ தவறாகிவிட்டது. சரியாகத் தருகிறேன். காத்திருங்கள். (அந்தக் கூடைக்காரர் இப்படி காக்கவெச்சுட்டாரே. மட்டம் போட்டு கழுத்தறுத்துட்டாரா? வீட்லேருந்து அதை போன் செஞ்சாவது சொல்லலாமில்ல.)
Sent at 14:01 PM on Tuesday

==================
அக்கார அடிசில் கவிதை

ஒருகப் அரிசியுடன்
கால்கப் பயத்தம்பருப்பையும் களைந்து
நீரைவடித்து
நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

இரண்டு லிட்டர்
கூழான கெட்டிப் பாலில்
குழைவாக வேகவைக்கவும்.

இரண்டும் இன்னும் அரைகப்புமாய் வெல்லத்தை
வாணலியில் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி
வேகவைத்த அரிசிக்கலவையும்
இரண்டு லிட்டர் பாலும்
இரண்டு லிட்டர் நெய்யும்
ஏலக்காய்ப் பொடியும்
இரு சிட்டிகை பச்சைக் கற்பூரமும்
சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள்

இப்போது நீங்கள்
அக்கார அடிசில் தயாரிப்பதில்
நிபுணராகி இருக்கிறீர்கள்

வாணலியில் கொதிக்கும் பண்டத்தில்
நெய்யும் பாலும் மேலெடுக்கும் வாசத்தில்
மாமியாரின் சர்க்கரை வியாதி
மாமனாரின் இரத்த அழுத்தம்
கணவன் அவ்வப்போது சொல்லும் நெஞ்சுவலி
மகனுக்கு இந்த வயதிலேயே வைக்கும் தொப்பை
மளிகைக்காரனின் நாலுமாதக் கடன்பாக்கியென
பிரச்சினைகளில் நீங்கள் உங்களைத் தொலைக்காதிருந்தால்
வருத்தப்பட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் தேர்ந்த சமையல்காரர்.
========================
Sent at 14:05 PM on Tuesday

haranprasanna: என்ன பேச்சையே காணம்?

me: படிச்சுகிட்டிருக்கேன்..

haranprasanna: எப்படி கவிதை? பெண்கள் இன்றைக்கு எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் பார்த்தீர்களா?

me: ம்

haranprasanna: எத்தனை கவிதை படித்தால் தான் நீங்களெல்லாம் திருந்தப் போகிறீர்கள்?

me: எதுக்கு என்னைத் திட்டறீங்க? நான் யோசிச்சுகிட்டிருக்கேன்.

haranprasanna: தேர்ந்த சமையல்காரர் என்றால் பெருமைதானே படவேண்டும், நாம் வெட்டியாய் படுசுமாராய் சமைப்பதற்கே பெருமையாய் பதிவெல்லாம் வைத்திருக்கிறோமே, ஏன் கவிதையில் வருத்தப்படச் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? 

me: இல்லை…. 

haranprasanna: வீட்டில் இருக்கிறவர்களுக்கெல்லாம் உடல்நிலை சரியில்லை, கடன்பாக்கிக்காக வெல்லாம் வருத்தப்படச் சொல்லியிருப்பார்களோ என்று யோசிக்கிறீர்களா?

me: இல்லை…

haranprasanna: உங்களைப் போன்ற பேதைகளுக்கு அப்படியெல்லாம்தான் யோசனை போகும். உண்மையில் கவிதையின் முடிச்சு அங்குதான் இருக்கிறது.

me: ஹை, ப்ரசன்னா, I got it! இந்தக் கவிதை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?

haranprasanna: தான் வாழும் வாழ்க்கையில் ஒரு பெருமையான அங்கீகாரம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண்ணிற்கு மேலே இருக்கும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் கவனத்தில் வந்திருக்கவேண்டும்…

me: இது யார் எழுதினதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்…

haranprasanna: சாமானை அள்ளிக்கொட்டி சமையல்காரராக மட்டும் இருக்கிறார் என்பது அந்தக் குடும்பத்தில் அவளது பிடிப்பு விட்டுப்போன மனநிலைக்கான குறியீடு. வாழ்ந்து உணர்ந்து, அதை வார்த்தைகளிலும் சொல்லத் தெரிவதால்தான் அது வன்மையான கவிதையாக வந்திருக்கிறது.

me: ஐயய்ய, சும்மா கீழ குனிஞ்சு தட்டிகிட்டு நீங்க சொல்றதையே சொல்லிகிட்டிருக்காம, கொஞ்சம் நான் தட்டறதையும் படிங்க..

haranprasanna: சுஜாதா சொல்வது சரி. கவிதைக்கு கோபமும் சோகமும் தேவை.

me: (அடடா அடங்கமாட்டாங்க போல இருக்கே…)

haranprasanna: உங்களைப் போல் திமிராகவும் வெட்டியாகவும் நேரத்தைத் தேய்ப்பவர்களுக்கு கவிதையும் வேறெந்த இலக்கியமும் கூட கைவராது.

me: ப்ரசன்னாஆஆஅ…. இது நிஜமாவே நேரத்தை தேய்க்கறவங்க எழுதின கவிதைதான். 🙂

haranprasanna: அப்படியா? எப்படித் தெரியும்? யார் எழுதியது? (வரவர என்னைவிட இவளெல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விரல்நுனில வெச்சிருக்காளே… இவளை நம்பக் கூடாது… உதாரை ஏத்த வேண்டியதுதான்.) மேலும் ஜெயஸ்ரீ, நீங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதைவிட கவிஞர் என்று அழைப்பதையே விரும்புகிறேன்.

me: நாசமாப் போச்சு. தான் எழுதின கவிதையும் அதன் வடிவமும் மறந்து போனவங்களெல்லாம் கவிஞரா? (யோவ், பீடத்துலேருந்து இறங்கவே மாட்டியாலே நீ?)

haranprasanna: புரியவில்லை!!

me: இந்த கெத்துல எல்லாம் குறைச்சலில்லை. மேட்டர்ல கோட்டை விட்டுட்டீங்க. இந்த அக்கார அடிசில் கவிதை நான் எழுதினது. உங்க கவிதையை ஃபார்மட்டா வெச்சு.

haranprasanna: என் கவிதையின் வடிவமா? எப்போது எழுதினேன்? (இவ்ளோ மோசமா எழுதித் தொலைச்சிருக்கேனா?)

me: உங்க CuSO4 கவிதை.

haranprasanna: தலைப்பே சகிக்கவில்லையே. என்னுடையதாக இருக்க முடியாது. (இவகிட்ட என் பழைய ட்ரங்க்பெட்டில போட்ட கவிதை எல்லாம் இருக்கு. எதையெதை எப்ப எடுத்து வெளில விடுவாளோ!)

me: நீங்க பூர்வாசிரமத்துல துப்பாய்ல கெமிஸ்டா வேலைபாத்து குப்பை கொட்டின காலத்துல எழுதினது. இருங்க நானும் எடுத்துத் தரேன்.
Sent at 14:16 PM on Tuesday

======================
CuSO4 கவிதை

தாதுகள் நீக்கப்பட்ட
மீத்தூய் நீரால் நன்கு கழுவி
நன்கு உலர்த்தப்பட்ட
ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்

10 கிராம் தாமிரசல்பேட்டை
துல்லியமாக நிறையிட்டு
குடுவைக்குள் இடுங்கள்.

1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து
தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்

இப்போது நீங்கள்
1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்
நிபுணனாகி இருக்கிறீர்கள்

ஊடுருவிச் செல்லும் ஒளியில்
நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்
குடுவைக்குள் செயற்கை கடல்
துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி
நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்
தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென
பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்
பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…
நீங்கள் வேதியியல் உலகக்காரர்
========================
Sent at 14:19 PM on Tuesday

என்ன அந்தப் பக்கமும் பேச்சையே காணோம்? 🙂

haranprasanna: (கீழ சைக்கிள் மணிச்சத்தம் கேக்குதே. நம்பாள் தானோ? அதானே பாத்தேன். எவ்ளோ சண்டைன்னாலும் வீட்டுல நமக்கு சாப்பாடெல்லாம் குறை வெச்சதில்லையே. நல்லவேளை கிறுக்குத்தனமா அவசரப்பட்டு ·போன்பண்ணி மன்னிப்பெல்லாம் கேட்காம இருந்தேன். இனி இந்தக் கழுத்தறுப்பைக் கழட்டிவிட வேண்டியதுதான் பாக்கி.) உங்களுக்கு வீட்டில் வேலையே இருக்காதா? இங்கே உட்கார்ந்து என்னுடன் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்களே, பாவம்.

me: நான் சமைச்சு முடிச்சிட்டேன். வேலைகளை முடிச்சுட்டு வெட்டி நேரத்தைத் தான் உங்களோட செலவழிக்கறது.

haranprasanna: என்ன சமையல்? சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் தக்காளிக்காய் கூட்டை எங்கள் வீட்டில் தக்காளிப் பழத்தில் செய்வார்கள். உண்மையாகவே சுவையாக இருக்கும். அந்தப் பதிவில் ramakannan என்பவர் கேட்டிருக்கும் சந்தேகம் சரியே.

me: ஆ, என் வலைப்பதிவை ஒரே ஒரு நொடி மட்டும் திறந்துபார்த்து¢ட்டு நீங்க அள்ளிவிடற விஷயங்கள், கேட்கற சந்தேகங்கள் எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்றது. (மணிக்கணக்கா பதிவை பிரிச்சு மேய்ஞ்சுட்டு பீலாவா விடற?)

haranprasanna: இலக்கியவாதியும் கவிஞனுமானவன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை சில நொடித் துளிகளில் துல்லியமாக அவதானித்து, கிரகித்து, தேவையான நேரத்தில் சரியான கோணத்தில் எடுத்துவைக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். (ஆஹா, இன்னிக்கு நாம நினைச்சமாதிரியே பாகற்காய் பிட்லைதான்.)

me: ஆனா தக்காளிப்பழத்துல கூட்டு செஞ்சா அது தக்காளி கொத்சு, இல்லை டால் ஃப்ரை மாதிரி தானே? 

haranprasanna: எது சொன்னாலும் எதிர்த்து எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதை நிறுத்துங்கள் ஜெயஸ்ரீ. உங்களுக்கு இலக்கியத்தில் ஒன்றரையணா பரிச்சயம் இருப்பது போல் எனக்கு சமையலிலும் அனுபவம் உண்டு. துபாயில் நான் கவிதை உண்டு வாழ்ந்த காலத்தும் என் அறைத் தோழனாக இருந்த ஒரு அஞ்ஞானிக்கு மட்டும் சமைத்துப் போட்டிருக்கிறேன். நீங்கள் தக்காளிக்காய் சேர்த்து செய்த அதே உணவுக்குறிப்பை தக்காளிப் பழம் உபயோகித்துச் செய்துபாருங்கள். பயத்தம்பருப்பு இலையிலையாக முக்கால் பதம் மட்டும் வெந்து குழையாமல் இருக்கவேண்டும் என்பதை மட்டும் நினைவுவைத்துக் கொள்ளுங்கள்.

me: உங்கண்ணி கூட நல்லா சமைப்பாங்கன்னு சொல்வீங்களே. இதெல்லாம் அவங்ககிட்ட கத்துகிட்டீங்களா?

haranprasanna: அதெல்லாம் முன்காலத்தில். என் கல்யாணத்திற்குப் பிறகு அண்ணி சுமாராகத் தான் சமைக்கிறார்.

me: ப்ரசன்னா, நிஜமாவே நான் எழுதியிருக்கற கவிதை நல்லாவா இருக்கு? சும்மா தோணித்து. கிறுக்கினேன்.

haranprasanna: (இவ எழுதினதுன்னு தெரியாம புகழ்ந்து தொலைச்சுட்டேன். சே, பசி எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு!) கவிதை வெகுசுமார் தான். கவிதையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அத்தைப்பாட்டித்தனம் தான் எழுத்தில் இருக்கிறது. அதன் (என் கவிதையின்) வடிவத்தால் மட்டுமே வன்மை பெறுகிறது.

me: (அதானே பாத்தேன். இந்தத் திமிர் இல்லைன்னா எப்படி?) துபாயிலும் கவிதை உண்டே வாழ்ந்தேன்னு நீங்க சொன்னதும் நியாபகம் வருது. காலைல ஒரு அருமையான கவிதை படிச்சேன். படிச்சபோதே உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்……..

haranprasanna: (சாப்பாட்டுக் கூடையே ட்ராஃபிக் ஜாம்ல மாட்டி இப்பத்தான் ஒருவழியா வந்திருக்கு. தின்ன முடியுதா பார் நிம்மதியா.) பிறகு பேசலாம் ஜெயஸ்ரீ. ஒரு கஸ்டமர் வந்திருக்கிறார். எனக்கு கடமை கவிதையைவிட முக்கியம் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவசியம் தக்காளிப்பழக் கூட்டு செய்துபார்த்துச் சொல்லுங்கள். வணக்கம்.
Sent at 14:36 PM on Tuesday

haranprasanna is offline. You can still send this person messages and they will receive them the next time they are online.
_____________________________________________________________

செய்துபார்த்து தனியில் சொல்வதற்குப் பதில், நன்றாக இருப்பதாக வீட்டினர் சொன்னதில் உணர்ச்சிவசப்பட்டும், பழக்க தோஷத்திலும் பதிவில் போட்டுவிட்டேன். இதனால் கவிஞர் இமேஜிற்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமா? 😦 இப்போது என்ன செய்வது, எடுக்கவா, இருக்கவா?

நன்றி: கவிஞர் ஹரன்பிரசன்னா.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaali koottu

செய்முறை:

 • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
 • தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
 • முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
 • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…

தேவையான பொருள்கள்:

புடலங்காய்க் குடல் – 2 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

pudalangaai kudal

செய்முறை:

 • புடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
 • தனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால், லேசாகச் சுண்டி, தண்ணீர் விட்டிருக்கும்.
 • வறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
 • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.

* இதே மாதிரி பரங்கிக்காய்க் குடல், பொடியாக நறுக்கிய சௌசௌ தோல், இளம் பீர்க்கங்காய் தோல், போன்றவற்றிலும் தனித்தனியாகவோ, இவைகளில் இரண்டு மூன்றை சேர்த்தோ செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், தேங்காய் சாதம். தயிர்சாதம்…..

புளி சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தால், சட்னி மாதிரி பொங்கல், உப்புமா, சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

முதலில் இந்தச் சாதாரண கூட்டுகளை எழுத வேண்டுமா என்று நினைத்து கொஞ்சம் சோம்பேறித்தனத்தால் எழுதாமல் இருந்தேன். திடீரென்று எதையுமே விடாமல் எழுதித் தள்ளிவிடவேண்டும் என்று தீவிரம் வந்திருப்பதால் :)) இதுவும்…

இனி இதைவிட சப்பைக் குறிப்புகளும் வரலாம்.

இது அதிக மசாலா சேர்க்காத கூட்டு.

kos koottu

தேவையான பொருள்கள்:

புடலங்காய் – 1/2 கிலோ 
பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
உப்பு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1/2 மூடி

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை

pudalangaai koottu

செய்முறை:

 • புடலங்காயை உள்ளே விதை முற்றலாக இருந்தால் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, விரும்பினால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் தாளிக்கவும்.
 • நறுக்கிய புடலங்காயை, தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடிவைத்து வேகவைக்கவும்.
 • நன்றாக வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு சேர்ந்தாற்ப்போல் இருக்குமாறு இறக்கவும்.
 • நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* இதே முறையில் கோஸ், பீன்ஸ், பீட்ரூட், கொத்தவரங்காய், அவரைக்காய் போன்ற காய்களிலும் செய்யலாம். எல்லாவற்றையும் விட கீரையில் செய்தால்(எந்தக் கீரையும்) மிகுந்த சுவையாக இருக்கும்.

thakkaalikkaai

தேவையான பொருள்கள்:

தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaalikkaai koottu

செய்முறை:

 • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
 • தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
 • முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
 • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…