முன்குறிப்பு
தாமதமான பதிவு
சொந்தக் கதை
கொஞ்சம் அதிகமாய் (எனக்கே) போரடிக்கும்
2011 ஜூலை மாதக் கடும் மழைநாளில் (மும்பையாக்கும்) எலக்ட்ரிக் ட்ரெயினில் ‘குர்லா’வில் இறங்கி ‘க்ளக் ப்ளக்’ சாலையில் கல்லூரி என்று குறிப்பிடப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு இரண்டாவது முறையாகப் போனேன். இது எத்தகைய மெனக்கெடல் என்று மும்பைவாசிகளுக்குத்தான் புரியும். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸ் சேர விபரங்கள் கேட்டபோது TC இல்லாத காரணத்தால் ஏற்கனவே இந்த ஸ்டடிசெண்டரில் மறுத்திருந்தார்கள். “இதுக்குமேல இந்தப் பொண்ணு படிக்கமாட்டா” என்று எப்பொழுதோ சொன்ன ஜோசியக்காரனின் வாக்கை வியந்துகொண்டு திரும்பிவிட்டேன். சிறிதுநாளில் ஐஐடியில் படித்தவர்களுக்கு டிசி கிடையாது என்றாலும் சேர்ந்திருந்ததைப் படித்துவிட்டு மீண்டும் கிளம்பினேன். எதற்கும் இந்த முறை தீர்மானமாகப் பேசவேண்டும் என்று ரயிலில் செல்லும்போதே 3, 4 தடவை இந்தியிலும் சொல்லிப் பார்த்துவைத்திருந்தேன். ஆனால் அங்கே இருந்தவர், “அதெல்லாம் நேரடியாகச் சேர்பவர்களுக்குச் சரியாக வரும்; இங்கிருந்து நாங்கள் தபாலில் அனுப்பினால் டிசி இல்லையென்றால் எதையுமே பார்க்காமல் அட்மிஷன் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதுவும் 6 மாதம் கழித்துதான் திரும்பவரும். செலவான பணத்துக்கு நிர்வாகம் பொறுப்பல்ல” என்று நல்ல தமிழிலேயே தெளிவாகச் சொல்லித் திருப்பியனுப்பினார். மீண்டும் ஜோசியனின் வாக்கை வியந்துகொண்டு..
ஆனால் அப்படியே விட குடும்பம் விடவில்லை. மறுநாளே தட்கலில் டிக்கெட் புக்செய்து, கையில் திணித்து சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்திருந்த அப்பா “எதையாவது கிளப்பிவிட்டுண்டேயிரு!” என்று சிரித்துக்கொண்டே ஸ்டேஷனிலிருந்து அழைத்துப் போனார். என்னுடைய கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் டிசியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏதோ கம்ப்யூட்டர் ப்ரொகிராமிங் கோர்ஸுக்காகக் கொடுத்து சேர்ந்து, சிதம்பரத்தில் தம்பியோடு ஒருவாரம் தங்கி அலப்பறை செய்து எழுதிய தேர்வுக்கு ரிசல்ட் வந்து, “நீதான் முதல் மார்க்காம்” என்று அப்பா ஃபோன் செய்தபோது நான் கல்யாணம் ஆகி மாமியார்வீட்டில் இருந்தேன். மார்க் ஷீட் மட்டும் அப்பாவிடம் இருக்கிறது. டிசி என்ற ஒன்றை அவர்கள் தரவில்லை போலிருக்கிறது. யாரும் இத்தனை வருடங்களில் அதை யோசிக்கவுமில்லை.
குளித்துக் கிளம்பினோம். சென்னைப் பல்கலை அலுவலத்தில் ‘ஒற்றைச் சாளர முறை’ இடத்தில் இருந்தவர் தீர்மானமாக “டிசி இல்லாமல் சேரமுடியாது, (எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் படித்த) அண்ணாமலை பல்கலையில் “தொலைந்துவிட்டது” என்று எழுதிக்கொடுத்து டூப்ளிகேட் டிசி வாங்கிவந்தால்தான் உண்டு” என்று அடித்துப் பேசினார். அவரைவிட அதிகமாக– (பிகேஎஸ் மாதிரி ஃபேன் தலையில்தான் விழவில்லை)– சேர்த்தே ஆகவேண்டும் என்று நானும் அடித்துப் பேசினேன். எதற்கும் ஐஐடி-காரர் பதிவை கையில் பிரிண்ட் எடுத்துப் போயிருந்தேன். ஒன்று நமக்கு அட்மிஷன், இல்லை அவர்களுக்கு கேன்சலேஷன் என்று முடிவோடு அடுத்தடுத்து பெரிய தலைகளைப் பார்க்கத் தயாரானேன். அதற்குள், வந்த முதல் கிராக்கியே வாய்ச்சண்டை என்ற சலிப்பு அவர் முகத்தில் தெரிந்தாலும் திடீரென்று குரலைத் தாழ்த்தி, சரி, பூர்த்திசெய்து தாருங்கள் என்று சொன்னார். நம்பவே முடியாமல் MA என்று டிக் செய்து, subject இடத்தில் வைணவம் என்று (ஏன் இப்படி எழுதினேன் என்று இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.) எழுதினேன். அப்பா கூர்ந்து பார்த்துவிட்டு ஒருநொடி ஆச்சரியப்பட்டு அமைதியானார். மற்றவர்களை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்த ஒ.சா.மு. அலுவலர் (உண்மையிலேயே அபார சுறுசுறுப்பு) வைணவம் என்பதைப் பார்த்து, எங்கிருந்து வரீங்க என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் உடனடியாக எங்களுக்கு உட்கார இடம்கொடுத்து, மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தனது பலப்பல அலுவல்களுக்கிடையேயும் வதவதவென்றிருந்த அப்ளிகேஷனை 5 நிமிடத்தில் நிரப்ப உதவி (அவர் ஒவ்வொருமுறை அருகில் வந்து ஏதாவது சொல்லும்போதும் ‘அம்மா மின்னலு’ என்று அப்பா காதில் ஓட்டிக்கொண்டேயிருந்தார்.), வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் இவங்க எம்.ஏ வைணவம் படிக்கப் போறாங்க என்று சொல்லி பார்வைப் பொருளாக்கி (டென்ஷனாகிவிட்டேன்), வங்கியில் வரிசையில் நிற்கவேண்டியிராமல் அவரே பக்கவாட்டில் கொடுத்து வாங்கி, அடுத்தப் பத்து நிமிடங்களில் புத்தகங்களும் ஐடியும் கைக்குக் கிடைத்தன. புத்தகங்களை நான் வாங்குவதற்குள் அப்பா கவுண்டருக்குள் கைவிட்டு வாங்கிவிட்டார். “கரஸ்னா எல்லாரும் பாஸ் பண்ணினா போதும்னு நினைப்பாங்க. அப்படியில்லாம நல்லாப் படிச்சு நெறைய மார்க் வாங்கு” என்று சொல்லிக் கொடுத்தார். இதில் முக்கியமானது SSLC புத்தகத்தில் அப்பா பெயர்தான் இனிஷியல் என்பதால், இப்பொழுதும் அதையே உபயோகிக்கவேண்டும் என்று ஒ.சா.மு அலுவலர் சொன்னதில் அப்பாவிடம் ஒரு மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமின்றி இத்தனை வருடப் பழக்கத்தில் மாற்றி எழுதுவிடுவேன் என்பதால் ஒவ்வொரு தேர்விற்கு உள்ளே நுழையும் கடைசிநொடியிலும் அதை நினைவுப்படுத்தி அனுப்பிக்கொண்டிருந்தார்.
தேர்வு மையங்கள்
ஆனால் படித்துமுடித்தும் (அந்தக் கதை பின்னால்) நினைத்த மாதிரி முதலாண்டுத் தேர்வு எழுதுவது சாத்தியமாகவில்லை. 2012 ஜூன்- 9,10,16,17,22 என 5 தாள்கள். முந்தைய மாதமே கோவிந்த் வடோதரா மாற்றலாகி வந்துவிட, நான் மட்டும் பெண்ணின் பத்தாம் வகுப்பு ரிசல்டுக்காக மும்பையில். எப்படியும் முதல்வருடத்தை அங்கேயே முடித்துவிடலாம் என்று ரிவர்ஸில் கடைசிப் பரிட்சையிலிருந்து படித்துக்கொண்டிருக்க, இடையில் தடைபட்டு ரிசல்ட் வந்து, வடோதரா போய் ஸ்கூல் அட்மிஷன், வீடு பார்த்துத் திரும்பும்போது, ஜூன் 18-ஆம் தேதியே பள்ளி திறக்கிறார்கள் என்பதால் மும்பையைவிட்டு அவசரமாகக் கிளம்பவேண்டியதாயிற்று. இந்தமுறை தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தேர்வு என்ற ஒன்றை உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்பதில் இருந்த த்ரில் இப்படி பொசுக்’ என அணைந்ததில் கடுப்பாகி, ஊரில் இருக்கும்வரை முதலிரண்டு தாள்களையாவது எப்படியாவது சத்தமில்லாமல் தள்ளிவிடலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கனவே முதலில் கடைசிப் பரிட்சையிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அவை இப்பொழுதைக்குப் பிரயோசனமில்லாமல் போய்விட, உடனடியாக ஏறக்கட்டிவிட்டு வீடு மாற்றும் வேலைகளைக்கூட பார்க்காமல், பெண்ணை தாஜா செய்து சமையல் செய்யவைத்து, 4 நாள்களில் முதல் இரண்டாவது தாள்களில் கவனம் வைத்துப் படித்து, கஷ்டப்பட்டு செண்டரைத் தேடிப்போய்… கோவிந்த் இருந்திருந்தால் முதல் நாளே செண்டரை நேரில்போய் பார்த்துவைத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அழைத்துப்போகப்பட்டிருப்பேனே என்ற நினைத்த மனதை மிரட்டி அடக்கி– குர்லாவில் இறங்கினால் ஆட்டோக்காரர்கள் உள்பட யாருக்கும் தெரியவில்லை. கொட்டுகிற மழையில் விசாரித்துக்கொண்டே– ஒரு ஆட்டோக்காரரிடம் ஏற்கனவே கேட்டதுதெரியாமல் இரண்டாம் தடவையும் கேட்டுவிட, அடிக்கவே வந்துவிட்டார்- பதறிக்கொண்டே நேர்க்கோடாய்ப் போய் பஸ்ஸ்டாண்ட் க்ரில்லில் உட்கார்ந்திருந்த ஒரு காதலர் ஜோடியைப் பிடித்தேன். இவர்கள் தான் இன்றைய தேதியில் ஊருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள். நினைத்தமாதிரியே கைகாட்டினார்கள். அட, அட்மிஷனுக்கு விசாரிக்க வந்த கல்லூரியேதான், இப்பொழுது பெயர் மாற்றியிருக்கிறார்கள். உள்ளேபோய் ஹால்டிக்கெட் வாங்கி எண் பார்த்து, இடம் தேடிப்பிடித்து உட்கார்ந்தபோது பெருமையாய் இருந்தது. மூன்றுமணிநேரம் ஓரிடத்தில் அமர்ந்து உலகை மறந்து தேர்வை எழுதிவிட்டு மீண்டும் ட்ரெயின்பிடித்து வீடு திரும்பி பெண் தந்த காபியை அனுபவித்துக் குடித்து முடிப்பதற்குள்… இடையில் ஹைதையில் ட்ரெய்னிங் முடிந்து எதிர்பாராமல் மும்பை வந்த கோவிந்த். 😦 “வீரம் என்பது தைரியம் இல்லை, பயப்படாத மாதிரி நடிப்பது” என்று ஒருமுறை மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டேன்.
“ப்ரொகிராம் போட்டமாதிரி காஸ், ஃபோன், இண்டர்நெட் ஒன்னுமே சரண்டர் பண்ணலையா?”
“உட்கார்ந்த இடத்துலேருந்து நல்லாப் பேசுங்க. எல்லாத்தையும் உங்க பேருல வெச்சுண்டா நான் எப்படி சரண்டர் பண்ணமுடியும்? நீங்க எழுதிக்கொடுத்தாதான் முடியும்னு சொல்லிட்டாங்க..”
“சாமான் எல்லாம் ஒழிக்கலை. எல்லாம் லாஃப்ட்லயே இருக்கு. வீட்டுல எதுவுமே மாறலை.. ரெண்டுநாள்ல லாரி வந்துடும் சாமான் ஏத்த. என்ன பண்ணிண்டிருந்தீங்க ரெண்டுபேரும் ஒருவாரமா?”
“அதுக்காக எல்லாத்தையும் இறக்கி வெச்சா, காலை எங்க வைக்கறது. எல்லாம் ஒழிச்சுதான் திரும்ப மேல வெச்சிருக்கு. அப்படியே வண்டில ஏத்தவேண்டியதுதான்” பொண்ணு கமுக்கமாய் இருந்தாலும் எப்பொழுதுவேண்டுமானாலும் சிரித்துக் காட்டிக்கொடுத்துவிடுவேன் மாதிரி மூஞ்சியை வைத்திருந்தது. வேலை சொல்லி உள்ளே அனுப்பினேன்.
“பாங்க் லாக்கர் நகையை எங்க வெச்சிருக்க?”
Oops! சுத்தமாக மறந்திருந்தேன். To do list-லேயே இது இல்லை. இதன் ஆபரேஷன் முழுப்பொறுப்பும் என்னிடமே என்பதால் எதிராளியைச் சாடமுடியாது. காலில் விழவேண்டியதுதான்…
“விளையாடறீங்களா… அப்பப்ப போய் கொஞ்சம் நகை வெச்சு எடுக்கறதுமாதிரியா? எல்லாத்தையும் எடுத்துண்டு நான் தனியா எப்படி வரமுடியும்? பயமா இருந்தது. எப்படியும் உங்க ஸ்டாஃபெல்லாம் பார்க்க நீ பாங்க் போகும்போது, நானும் வந்து இதை முடிக்கலாம்னுதான்….” பாம்பை அடித்துவிட்டு அதன்மீது நின்றுகொண்டு பாத்ரூமில் கரப்புக்கு பயம் என்று பெண் சொன்னாலும் நம்பும் ஆண்சமூகம்– இதையும் நம்பியது.
இரண்டாவது தாளுக்கு ஒருமுறைகூட பாடங்களைத் திருப்பிப் பார்க்காமல் மறுநாள் பெண்ணின் ட்யூஷன் செண்டரில் பரிசளிப்பு விழாவுக்கு அப்பாவும் பெண்ணும் கிளம்பியபின் மதியம் சமையலையும் முடித்துவைத்துவிட்டு இரண்டாவது தேர்வுக்கு ஓடினேன். முந்தைய நாள் போல் 12 மணிக்கே கிளம்பி, ரயிலில் புரட்டலாம் என்று நினைத்திருந்தைச் செய்ய முடியாமல் ஒரு மணிநேரத்திற்குமேல் (ஞாயிறென்பதால்) வண்டியே வராமல் பதறித் தவித்து– அந்த டென்ஷனிலும் ஸ்டேஷன் புழுக்கத்திலும் கடும் தலைவலி எட்டிப்பார்க்க… மும்பையில் ரயிலைவிட வேகமாக எந்த வழியிலும் ஓர் இடத்திற்குச் செல்ல வாய்ப்பேயில்லை. இனி போய்ப் பிரயோசனமில்லை, வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஒரு வண்டி வந்தது. பிதுங்கும் கூட்டத்தில் ஏறி ஒரு வழியாக குர்லாவில் கீழே தள்ளப்பட்டு, மழைபெய்த ரோட்டில் வீடு தீப்பிடித்ததுபோல் தலை(வலி)தெறிக்க ஓடினேன். போய் அமர்ந்தபோது இதயம் வாய்வழியாக வெளியே வந்துவிடுமோ என்பதுபோல் இறைத்தது. படித்த எதுவுமே நினைவில்லை. இன்னொருமுறை எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தே கேள்வித்தாளை வாங்கினேன். நான் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த பரிபாடல் எல்லாம் காலைவாரிவிட, புருஷசூக்தமும் ஈஸாவாச்யோபநிஷத்தும் கஞ்சத்தனம் இல்லாமல் கைவழியே கரைந்துகொண்டிருந்தன. கடைசி 35 நிமிடங்கள் ஈஸா-விற்கு என்று நேரம் குறித்துகொண்டு எழுத ஆரம்பித்தும், எழுத எழுத சூழ்நிலை மறந்து உபநிஷத்தில் கரைந்து இறுதிப் பாடல்களில் உடல் நடுங்க ஆரம்பித்தது. நல்லவேளையாக ஜாவா குமார், அரவிந்தன் நீலகண்டன், பழைய சண்டை எல்லாம் நினைவு வந்து மீண்டும் தேர்வு அறைக்கு மனம் திரும்பிவிட்டது. 😉 நடுவில் தலைவலி எப்போது எப்படி சரியானது என்றே தெரியவில்லை. வீடுவந்து ராவோடு ராவாக வீட்டுவேலைகளையும், ஒரே பகலில் வெளிவேலைகளையும் அசுரசாதனையாக முடித்து மறுநாள் லாரியில் சாமானை ஏற்றியாகிவிட்டது. #சலாம்மும்பை
இடைத் தேர்வு ஜனவரி 2013-இல். பல்கலை அலுவலகத்துக்கு தொடர்ந்து ஃபோன் செய்து அவர்கள் வெளியிடும் முன்பே தேதிகளைக் கேட்டு வாங்கினேன். விடுபட்ட 3 தாள்களை– குஜராத்தில் தேர்வுமையம் எந்த ஊர் என்று தீர்மானமாகத் தெரியாததால், தமிழ்நாட்டில் (ஸ்ரீரங்கத்தில் படித்து உருப்படமுடியாது) சேலம் என்று முடிவுசெய்து வாங்கிய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் 7. RAC கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பினேன் ரயிலில் உட்கார்ந்து படித்துக்கொண்டே போய்விடலாம் என்று மாலை 6 மணி வண்டிக்கு சாப்பாடு தயாரித்துக்கொண்டு கிளம்ப இருக்கையில் மதியம் 1 மணிக்கு தயாரிக்கப்பட்ட சார்ட்டில் WL-1லியே என் நிலை நின்றுவிட்டது. முன்னேற்பாடாக கோவிந்த் ஏற்பாடு செய்திருந்தபடி மறுநாள் அஹமதாபாத் சென்று விமானத்தில் சென்னை- விமானத்திலிருந்து குதித்தோடி முக்கால் மணிநேரத்தில் இரவு 10:25-க்கு தாம்பரத்தில் சேலம் வண்டியைப் பிடிக்கவேண்டிய நெருக்கடியில் சென்னையில் உதவிக்கு அந்நேரத்துக்கு யாரை அழைப்பது என்ற குழப்பி முடிப்பதற்குள்… அப்பா ஶ்ரீரங்கத்திலிருந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆட்டோ பறந்தது என்கிற க்ளிஷே வாக்கியத்திற்கு அன்றுதான் பொருள் தெரிந்தது. அப்பா தேர்வுகளுக்கு முன்னரே தேர்வுமையக் கல்லூரிக்குப் போய் தேர்வெழுதுமிடம், கழிவறை வசதி வரை செக் செய்துவிட்டு வந்தார். எங்கே யார் உட்கார வேண்டுமென்பதையே அரை மணி நேரம் முன்னர் தான் நோட்டீஸில் ஒட்டி, கால் மணி நேரம் முன்னதாகவே கேள்வித்தாள், விபரங்கள் நிரப்ப பதில் தாள் எல்லாவற்றையும் கொடுத்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள். ஒவ்வொரு நாளும் உட்காரும் இடத்தை மாற்றும் ஸ்ட்ரிக்ட் ஆப்பீசர்களாய் இருந்தார்கள். மும்பையில் வயதானவர்கள் உள்பட எல்லோரும் சூபர்வைஸரிடம் வந்து கேள்வித்தாளை வாங்க, எனக்கு மட்டும் தானே அருகில்வந்து கொடுத்தார்கள். “ஐயோ படிக்கறதுதான் வைணவம்; ஆனா நான் பெரிய பொறுக்கி!” என்று மனசு அலறியது. உண்மையிலேயே கூச்சமாக இருந்தது. நல்லவேளையாக பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக என் அருகில் அமர்ந்த ஒருவரை ஹால்டிக்கெட் முதற்கொண்டு தாங்களே கொண்டுவந்து கொடுத்து ஒவ்வொருவராய் வந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கிற பரிட்சை டென்ஷனிலும் சூர்யாவிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் சூர்யா நினைவு வருகிறது என்று மண்டைக்குடைச்சலாய் இருந்தது. திருமங்கையாழ்வாரை எழுதிக்கொண்டிருக்கையில் ரொம்பநேரம் குடையவிடாமல் நல்லவேளையாய் ஒரு காவல்துறையாளர் வந்து சல்யூட் அடித்ததில் புரிந்துவிட்டது. ஹாஹ் அந்த போலீஸ் ஹேர்கட்! மதியம் சரியாக 2 மணிக்கு எழுத ஆரம்பிக்கும்போது கரண்ட் போய்விடும் என்றாலும் வியர்க்காத அளவுக்கு அந்தக் காலக் கட்டடம் மிக வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. என்றாலும் இந்தக் கல்லூரியின் கழிவறை வசதி குறித்து அவசியம் பின்னர் எழுதவேண்டும். குடும்ப நினைவே இல்லாமல் சௌகரியமாய் அம்மா சமைத்துபோட அண்ணன், அப்பா என்று அருமையான 15 நாள்களும் 3 தேர்வுகளும்…. ஆனால் அப்படியே நிம்மதியாக இருந்துவிடமுடியவில்லை. முதல் தடவை அட்மிஷனுக்காகச் சென்னை சென்றிருந்தபோது, எல்லா விதங்களிலும் பெண்ணை பார்த்துக்கொள்ள முடிந்த கோவிந்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது பெண்ணின் நீளமான தலைமுடி. மும்பையின் காலை 6 மணி அவசரத்தில் எதிர்வீட்டு ‘ஆண்ட்டி’யிடம் போய்த்தான் பின்னிக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த முறை முடிக்குறைப்பு செய்துவிட்டதால் அந்தப் பிரச்சினையும் இல்லை என்று இருந்த நிம்மதியில் பெரிய கல்லாய், ட்ரெயினிங் என்று கோவிந்த் மும்பை கிளம்பவேண்டியிருக்க, இரண்டு நாள்களுக்குப் பெண்ணை அவசரமாக நண்பர் வீட்டில் விடவேண்டியிருந்தது. எங்கள் வாழ்நாளில் நாங்கள் இப்படிச் செய்வோம் என நினைத்ததில்லை. :((
அதனால் ஜூன் 2013-இல் நடக்கவிருந்த இரண்டாம் வருடத் தேர்வுகளை தேர்வுமையம் எந்த ஊரில் இருந்தாலும் குஜாராத்திலேயே எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த ஒருவருடப் பழக்கத்தில் சென்னை பல்கலைக்கழகம் எந்த மாதம் எந்தக் கிழமைகளில் ஆரம்பித்து முடிப்பார்கள் என்று முன்னதாகவே ஊகிக்க முடிந்ததால் எங்கு நடந்தாலும் இருந்து தங்கி எழுத உதவியாக அப்பா முன்கூட்டியே வந்துவிட்டார். தேர்வுநாள் காலை வரை காபி, டிபன், வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழித்துபோடுவது என்று வேலைகளைக் கட்டியழாமல் முன்னதாக ஒரு நாள் இரவாவது பாடங்களைத் திருப்பிப் பார்க்க நேரம் வேண்டும் என்று முடிவுசெய்து ஒவ்வொரு வாரமும் முதல்நாளே பர்தோலி (Bardoli) சென்று அறையெடுத்துத் தங்கி அடுத்தடுத்த இரண்டு வார சனி, ஞாயிறு தேர்வுகளையும், கடைசியில் இருந்த ஒரேயொரு தேர்வை மட்டும் அன்று அதிகாலையில் கிளம்பிப் போயும் எழுதினேன். கடைசிநாள் சனிக்கிழமை காலை 6 மணிக்குக் கிளம்பி 7:30 மணிக்குள் 160 கிலோமீட்டரைக் கடந்து டிரைவர் சாதனை படைத்தார். இந்தப் பள்ளிக்கும் முதல்வாரமே குடும்பத்தோடு பார்த்துவரச் சென்றிருந்தோம். அந்த ஊர் பாங்க் மேனேஜர் தவறுதலாக எங்களை முற்றிலும் பிரம்மாண்டமான ஒரு இஸ்லாமிய மதராஸாவுக்குக் கூட்டிப்போய்விட்டார். பழக்கமில்லாத அந்தச் சூழ்நிலையே அச்சமூட்டுவதாக இருந்தது. ஸ்கூல் பெயர்ப் பொருத்தம் சரியில்லை, இதுவாயிருக்காது என்று மல்லுக்கட்டி, ஒருவாறு வெளியே விசாரித்து, சற்றுத் தள்ளி அதே பகுதியில் இருந்த MA Memon என்கிற சிறிய இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தைச் சரியாகப் பிடித்து விசாரித்தோம். நிர்வகிப்பவர் எங்களை வரவேற்றுப் பேசினாலும் அஹமதாபாத்தில் இல்லாமல் இங்கே இருப்பதற்கு எங்கள் அதிருப்தியைச் சொன்னபோது அவர் சற்றே வெகுண்டார். மிக விரும்பி சென்னைப் பல்கலையிடமிருந்து இந்த வாய்ப்பைப் பெற்றுச் செய்துவருவதாகக் கூறினார். அன்றுதான் மதியம் ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிட்டிருக்க அன்றே மாலையே நான் அதை எடுத்துவந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியபட்டார். எப்பொழுதுமே இணையத்தில்தான் குடித்தனம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். கையில் வாங்கிப் பார்த்தவர், என் பிரிவு வைணவம் என்பதில் முகம் சுருங்கினார். இன்னொருவரிடம் தீவிரமாக குஜராத்தியில் உரையாடினார். “ஐயோ நான் காஃபிராகிவிட்டேனா” என்று ஏற்கனவே மதராஸாவுக்குள் நுழைந்து வந்த அதிர்ச்சியில் மனதுக்குள் அலறிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்தது என்னவென்றால், ஒவ்வொரு நாளும் என்னை முதல் பென்ச்சில் உட்காரவைத்து, முதலில் எனக்குக் கேள்வி, விடை மற்றும் நிரப்பவேண்டிய மற்ற தாள்களைக் கையில் தந்து, பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதே தாள் சுலபமாக இருக்கிறதா என்று அக்கறையாக விசாரித்து, கூட வந்திருந்த என் அப்பாவை (இவர் அன்றாடம் காலையில் இட்டுக்கொண்ட ஸ்ரீசூர்ணம் கூட கலைக்காமல் வருவார்) வரவேற்று மூன்று மணிநேரமும் லைப்ரரியில் அமரவைத்து, கடைசிநாள் வரை உபசாரம் செய்தார்கள். பொதுவாக எல்லோருக்குமே நல்ல வரவேற்பும் தேர்வு நடத்துவதில் சிறந்த கண்காணிப்பும் இருந்தது. முன்பு தில்லியில் தேர்வுகள் எழுதியிருந்த ஒருவர் மொபைல் ஃபோன்களைக் கூட இங்கே அனுமதிக்காததைத் திட்டிக்கொண்டேயிருந்தார். மற்ற செண்டர்களில் எழுதும்போது குறிப்புகளை மொபைலில் எழுதிக்கொண்டுவந்துதான் தேர்வு எழுதுவார்களாம். மிக அதிகமான எண்ணிக்கையில் எம்பிஏ மாணவர்களே இருந்தனர். அதற்கு அடுத்ததாக சைக்காலஜி. தவிர மற்ற பிரிவினர். அத்தனை பேரிலும் நான் தாமதமாக உள்ளே நுழைந்தாலும் மற்றவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, என்னுடய தாள்களை முதலில் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்தார்கள். உபசரிப்பில் சந்தேகப்பட்ட சிலர் தனியாக என்னிடம் நான் யார் என்றும் விசாரித்தார்கள். பொறம்போக்கு என்பதற்கு ஹிந்தியில் வார்த்தை தெரியாததால், ஜெயஶ்ரீ என்றுமட்டும் சொல்லிவைத்தேன். ஏன் முதல் அறிமுகத்தில் முகம் சுருங்கினார் என்று கடைசிநாளில் தெரிந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் தேர்வுமையங்களுக்கு கேள்வித்தாள்கள் தபாலில் வந்து தேர்வுநேரத்தில் சீல் உடைத்துத் தருவதுபோல் இல்லாமல் இங்கே தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பாக பல்கலையிலிருந்து ஈமெயிலில் கேள்வித்தாள்களை அனுப்புகிறார்கள். இவர்கள் அவற்றை தேவையான எண்ணிக்கையில் ப்ரிண்ட் எடுத்து சரியாக தேர்வு நேரத்தில் விநியோகிக்கிறார்கள். என் கேள்வித்தாள் மட்டும் அவர்கள் அறியாத தமிழில் இருப்பதால் சரியாகப் போகவேண்டுமே என்று யோசித்ததாகச் சொன்னார்கள்.
இப்படியாக சுண்டைக்காய் கால்பணம்… கதையென குடும்ப இஸ்திரியான என் தேர்வு எழுது படலங்கள் நிறைவடைந்தன. ஆனால் இந்தத் தேர்வுகளுக்குப் படித்துத் தயார் செய்வதற்குள்…
(அதெல்லாம் அப்புறம்தான்…)
==
டிஸ்டிங்ஷன் மார்க் வாங்கியும் முதலாண்டுத் தேர்வை மாற்றல் காரணமாக மும்பையில் மே மாதம் எழுத முடியாமல் வடோதரா போய் அக்டோபர் மாதம் எழுதியதால் “முதல் வகுப்பு” என்று மட்டுமே போட்டிருக்கிறார்களாம். விசாரித்தால், தேர்வு மனுவிலேயே அடியில் குட்டியாக இதுபற்றிக் குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஹூம், நாம் எப்போது அதையெல்லாம் படித்திருக்கிறோம், படித்திருந்தால் மட்டும் என்ன மாறியிருக்கப் போகிறது? 😦
ஞாயிறு, பிப்ரவரி 16, 2014 at 10:03 பிப
Inspiration J! Now I wanna go back to school- ethayavathu padiche aganum 🙂
ஞாயிறு, பிப்ரவரி 16, 2014 at 11:06 பிப
உள்ளேன் அம்மா 🙂
திங்கள், பிப்ரவரி 17, 2014 at 7:43 முப
பிரதமர், ஜனாதிபதி பயணங்களுக்கெல்லாம்கூட இவ்வளவு முன்னேற்படுகள் நடந்திருக்குமா என்று யோசிக்கும்படி இருக்கிறது! ஆனாலும் என்ன, வைணவம் தழைக்கச் செய்ய வந்த மாமணியாய் புறப்பட்டிருக்கிறீர்கள்! வெல்வீராக!
திங்கள், பிப்ரவரி 17, 2014 at 10:09 முப
ஜெயஸ்ரீயக்கா is back.
திங்கள், பிப்ரவரி 17, 2014 at 11:16 முப
எப்பொழுதுமே இணையத்தில்தான் குடித்தனம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.//அதானே பெரிய பலம்!
திங்கள், பிப்ரவரி 17, 2014 at 5:04 பிப
” ஒன்று நமக்கு அட்மிஷன், இல்லை அவர்களுக்கு கேன்சலேஷன் என்று முடிவோடு அடுத்தடுத்து பெரிய தலைகளைப் பார்க்கத் தயாரானேன் ” – இதுதான் அசல் போரட்டகுணம் ஒண்ணு நமக்கு இல்லன்னா யாருக்கும் இல்ல
திங்கள், பிப்ரவரி 17, 2014 at 10:01 பிப
விடாமுயற்சி என்றால் என்ன எனபதை இந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளலாம்.கொஞ்சம் எடிட் செய்து விட்டால் பாடமாகவே வைக்கலாம்.You Rock Jayashree! உங்கள் பன்முக திறமை என்னை வியக்க வைக்கிறது.
செவ்வாய், பிப்ரவரி 18, 2014 at 1:26 முப
🙂 உங்க அப்பாவை நெனச்சுப்பார்த்தா.. உங்களைக்கண்டு பொறாமையா இருக்கு 🙂
வியாழன், மே 22, 2014 at 2:50 பிப
Happa, oru vazhiya thirumbi vandheengale. Great! Periya adventure story maadhiri iruku. melum padika aasai. Appuram indha Vainavam degreela upanishad ellaam sylabusa? romba interestinga iruku…mela sollungha
வியாழன், மே 22, 2014 at 2:51 பிப
Adhu sari, yaarindha kutti payyans? romba cute and bubbly!
சனி, ஓகஸ்ட் 23, 2014 at 7:05 பிப
வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு விசிட். நீங்கள் உயிரோடிருக்கின்றீர்களா என்று பார்த்தேன். உயிரும், உயிரோட்டமும் நிறைந்த பதிவைப் படித்தததில் பெரு மகிழ்ச்சி. 🙂
ஞாயிறு, செப்ரெம்பர் 14, 2014 at 12:03 பிப
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
திங்கள், செப்ரெம்பர் 29, 2014 at 10:19 பிப
யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
http://wp.me/pTOfc-bj
செவ்வாய், செப்ரெம்பர் 20, 2016 at 1:57 பிப
நல்ல நகைச்சுவை கலந்த நடை. இயல்பாகவே வருகிறது. பதிவுலகத்திலிருந்து பத்திரிக்கையுலகத்துக்கு நீங்கள் நகன்றால் பல்லாயிரம்பேர் படித்து மகிழ்வார்கள். நுங்கள் முககநூலில் அடிக்கடி தெரியும் வைணவ மத சிறப்பு மற்றும் நுணுக்கங்களுக்குக் காரணம் இந்த பட்டப்படிப்பில் பெற்ற அறிவும் காரணம் போலும். என் வைணவம் தொடர்பான பின்னூட்டங்களைத் துளசி தளத்தில் படிக்கலாம். நீங்கள் ஏன் அங்கு பின்னூட்டமிடுவதில்லை. அவர் வைணவக்கோயில் உலா சென்று கொண்டிருக்கிறார்.
Thanks JG, keep up the tempo!