பிப்ரவரி 2007


veena1.JPG

இந்த வீணைக்குத் தெரியாது…

 

veena2.JPG

இதைச் செய்தவன் யாரென்று…

 

veena3.JPG

இந்த வீணைக்கு…

 

naga-jolokiar.jpg

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…

# :))

# நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. இதை எல்லாம் செய்ய எனக்கு ஒரு முழு மாசம் நெட் பிச்சுக்கணும். (சிஃபி அண்ணங்க காதுல விழுந்துடப் போகுது!  நல்ல நாள்லயே கேக்க வேணாம்; ஆஹான்னு கிளம்பிடுவாங்க!) ஆனா அதெல்லாம் நெட் கனெக்ஷன் போனா சரி; எங்களை மாதிரி நாளைக்கு 5 மணிநேரம் மின்சாரமே போனா?!?!?! — “நவி மும்பை”வாசி.

#
===
அந்நியன்: “சப்பாத்தி கேக்கறது ஒரு தப்பா?”

ஷங்கர்: “தப்பு ஒண்ணும் இல்லீங்க!”

அந்நியன்: “மும்பையை ஜாலியா சுத்திப் பாக்க வந்தவங்க கிட்ட சப்பாத்தி கேக்கறது தப்பா?”

ஷங்கர்: “தப்பு மாதிரி தாங்க தெரியுது!”

அந்நியன்: “ஒரு வேளைக்கே 3000 சப்பாத்தி கேக்கறது?”

ஷங்கர்: “பெரிய தப்பு தாங்க!”

அந்நியன்: “அப்றம் ஏன்டா…”

இல்லை“ங்கறாங்க ஜெயந்தி. Well done Jayanthi!!

===

# முயற்சி பண்ணிப் பாருங்களேன்.. 🙂
 

# போய் டீ குடிச்சிட்டு வாங்க… அதுக்கு முன்னாடி கடைசி பத்தியையும் தெளிவா படிச்சு உள்வாங்கிக்குங்க! :))

# இந்தக் குறிப்பு நம்ப ரெகுலர் வாசகி ஜெயஸ்ரீக்கு.. 🙂 என்னை மாதிரியே சமையல் குறிப்பு தலைப்பை மட்டும் தெளிவா வெச்சுட்டு, உள்ள தேவையான பொருள்கள், செய்முறை எல்லாம் சரியா சொல்லாம விட்டுட்டாரே, நீங்க அங்கெல்லாம் போய் கேக்கமாட்டீங்களா ஜெயஸ்ரீ? :அப்பாவி:

# ம்ம்ம்…”this posting is just fun posting” ன்னு சொல்லிட்டாரு கடைசில. ஆனாலும் கட்டாயம் படிக்கணும்.

# “ராஜ மிளகாய்“னு பேரைக் கேட்டதும் ஏதோ வைரமுத்து கள்ளிக்காட்டுல போட்ட செடியாக்கும்னு நினைச்சுட்டேன். பார்த்தா இந்த இனிப்பான செய்தி! 

# கடைசியா, ஆரம்பமே ஒரு இனிப்போடவாம்!… ஒரு கூட்டமாத்தேன் கிளம்பியிருக்காய்ங்க!

“எனக்கு சாப்பாட்டில் கட்டாயம் சாத்தமுது இருந்தாகணும்…”
— கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

 “எனக்கு சாத்தமுது மட்டும் இருந்தாலே போதும்; முழுச் சாப்பாடாய் நினைத்து திருப்தியடைவேன்.”
— நாந்தான். 🙂
 

thakkaali rasam

தேவையான பொருள்கள்:

புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2 பெரிது
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
ரசப் பொடி – 1  1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க –  எண்ணை அல்லது நெய், கடுகு, சீரகம்.

 

செய்முறை:

  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளிகளை நான்காக நறுக்கி, நன்கு கையால் மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கரைத்துவைத்துள்ள புளி, மசித்த தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு கொதிக்க விடவும்.
  • தக்காளித் துணுக்குகள் வெந்து, புளி பச்சை வாசனை போனபின், ரசப் பொடி சேர்க்கவும்.
  • மேலும் 2 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு, பருப்புத் தண்ணீர் சேர்க்கவும்.
  • பருப்புத் தண்ணீர் குறைவாக இருந்தால் தேவைப் படும் அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • இப்போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நுரை சேர்ந்து ரசம் கொதிக்க மேலே பொங்கி வரும்.
  • இந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
  • அதன்மேல் சிறிது எண்ணை அல்லது நெய்யில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் தாளித்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

* எந்த ரசத்திற்கும் நாட்டுத் தக்காளியாக இருந்தால் நலம். புளியைக் குறைத்து உபயோகிக்கலாம். கிடைக்காவிட்டால் மட்டுமே சீமைத் தக்காளி உபயோகிக்கவும்.

* தக்காளியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் இருந்தால் துண்டங்களாகப் போடலாம். அல்லாதவர்கள் வீட்டில் மசித்து விட்டால் ரசம் முழுவதும் தக்காளி நிரவி இருக்கும். வீணாகாது. சுவையும் இந்த முறையில் தான் நன்றாக இருக்கும்.

* ரசப் பொடி சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. இதனால் ரச மண்டி உருவாகி விடும். ஓரிரு நிமிடங்களிலேயே கொதிக்க விடாமல் பருப்புத் தண்ணீர் சேர்த்து விட்டால், அடிவரை ரசத்தைக் கலந்தே முழுவதும் உபயோகிக்கலாம்.

* பருப்புத் தண்ணீர் சேர்த்ததும், அடுப்பை மிகக் குறைந்த தீயிலேயே வைக்க வேண்டும். அவசரம் என்று சீக்கிரம் கொதிக்க வைத்தால், நுரை உருவாகாமல் சுவை கெட்டுவிடும்.

* ரசம் பொங்கி மேலே வரும்போது வழிந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ரசத்தின் சுவையே அந்த மேல்ப்பகுதியில் தான் இருக்கிறது. 🙂

* எல்லாவகை ரசத்திற்கும் பெருங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையின் வாசம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

* பொதுவாக ரசம் ஈயப் பாத்திரத்தில் செய்தால் சுவையாக இருக்கும். ஆனால்….

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அப்படியே சூப் மாதிரி குடிக்கலாம். சாதத்தில் கலந்து சாப்பிடுவதே வழமையான பாணி; இன்னும்….

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் –  200 கிராம்
தனியா – 4 கப்
துவரம் பருப்பு – 1  1/2கப்
கடலைப் பருப்பு –  1/4 கப்
மிளகு – 1 1/2 கப்
சீரகம் – 1/2 கப்
வெந்தயம் –  1 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் –  50 கிராம் கட்டி
விரளி மஞ்சள் – 10

rasam podi

செய்முறை:

  • விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
  • தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.

“என்ன சமைச்சடா இன்னிக்கி?”

“என்ன சமைச்சன்னு கேக்காதம்மா. எவ்ளோ சமைச்சன்னு கேளு. ரசம் செஞ்சா அதுபாட்டுக்கு 3 நாளைக்கு வரது!”

“கொஞ்சமா செய்யணும். ரெண்டு பேருக்கு எவ்ளோடா வேண்டியிருக்கும். சீ! ரசத்தை யாராவது 3 நாளைக்கு சேர்த்து செய்வாளா?”

“நீ எழுதியிருக்கற மாதிரி ஈயச் சொம்புலதான் செய்றேன். அதுல செஞ்சா ஏம்மா அவ்ளோ இருக்கு!”

“ஐயய்ய, அதுல செய்னு தான் எழுதியிருக்கேன். அது நிறைய செய்னா எழுதியிருக்கேன். 4 பேர் வந்தாலும் இருக்கட்டும்னு பெருசா வாங்கிக் கொடுத்திருக்கேன். அதுல பாதிக்கும் கீழ செய், போதும் உங்க ரெண்டு பேருக்கு!”

“தப்பு உன்பேர்லதான். பாவம் குழந்தை. ‘ஈயச் சொம்புல செய்’னு எழுதினயே, ‘அன்னன்னிக்கு தேவையான அளவு மட்டும் செய்!’ அப்படீன்னு தெளிவா எழுதினியா?” – அப்பா

“உன் பொண்ணுக்கு கம்ப்யூட்டர் மூளைன்னு நீ அடிக்கடி சொல்லும் போதே நினைச்சேன், பாரு என்ன instruction இருக்கோ, அதை மட்டும் தான் செய்யத் தெரியும். சொந்தமா மூளைன்னு ஒன்னு கிடையாது! என்னம்மா பொண்ணு வளர்த்திருக்க?” – அண்ணா.

“மூனு நாளைக்கு ஒரே ரசமா? உவ்வே..!” – தம்பி.

“நீ சும்மா இருடா, க்ராஸ் டாக்! அம்மா, அப்றம் நீ வாங்கிக் கொடுத்த ஈயப் பாத்திரம் ரொம்ப மெலிசா இருக்கும்மா. அதுக்குள்ள நசுங்கிப் போச்சு! இன்னும் கனமா ஒன்னு வாங்கி வை. அடுத்த தடவை எடுத்துண்டு வரேன், இல்லை யாராவது வந்தா கொடுத்து விடு!”

“அதுக்குள்ள நசுங்கிடுத்தா? கீழ போட்டுட்டியா?”

“நான் ஒன்னும் கீழ போடலை. ஆனா கன்னாபின்னான்னு திடீர்னு நசுங்கியிருக்கு. என்னன்னே தெரியலை. அதுக்கு தான் முக்கியமா ஃபோன் பண்றேன் இப்ப..”

“நல்ல கும்பகோணம் பாத்திரம்டா கண்ணா. அங்கயே போய் ஸ்பெஷலா சொல்லி செஞ்சது. நல்ல கனமா இருந்ததே!”

“அப்ப நான் பொய் சொல்றேனா?”

“பரவாயில்லை விடு, வேற வாங்கிக்கலாம். நசுங்கித் தானே போச்சு. உருகிடலையே? வெறும் பாத்திரத்தை அடுப்புல வெச்சுடாத. உருகிடும். பர்னர் மேல உருகி விழுந்துட்டா, அப்றம அடுப்பும் கெட்டுப் போயிடும்.”

[மேற்படி வசனம் கல்யாணம் ஆகி சமைக்க(?!) ஆரம்பித்து ஒரே மாசத்தில் புலம்பியது. அடுத்தடுத்து மிக மோசமாக இண்டு இடுக்கு விடாமல் எல்லாப் பக்கமும் சொம்பு நசுங்கியது. அடுத்த தடவை அம்மா நேரில் வந்தபோது காரணம் தெரிந்தது.]

eeyam1.JPG

“ஐயய்யோ, ஈயச் சொம்பை கிடுக்கியால எடுப்பியா? துணி use பண்ண மாட்டியா?”

“ஏன்? எனக்கு கிடுக்கி தான் வசதி. இல்லைன்னா கீழ போட்டுடுவேன்.”

“அதான் இப்படி நசுங்கியிருக்கு! ஏம்மா, அடுப்புலேருந்து சூட்டோட எறக்கும்போது ஈயம் இளகியிருக்காதா? நீ கிடுக்கியால பிடிச்சு இறக்கி இறக்கி, அதோட தடம் பதிஞ்சு இப்படி நசுங்கியிருக்கு எல்லாப் பக்கமும், டிசைன் போட்டாப்ல.”

“இதெல்லாம் நீ முதல்லயே தெளிவா சொல்றதில்லையா?”

“ஆமாம் எல்லாம் சொல்லுவா உனக்கு. படிச்ச பொண்ணுக்கு இது தெரியாது?”

“ஆவூன்னா இது ஒன்னு சொல்லிடுங்க. நான் பாடத்துல படிச்ச திருக்குறள், English Grammer- noun, pronoun, Indus Valley Civilization, Akbar Empire, Geography of India, Law of Returns, Bank Reconcilation Statement, Real Analysis ஹிந்தி சாகித்ய கா இதிகாஸ் வரைக்கும் எதுலயும் பொண்ணுங்க ஈயத்தை அடுப்புலேருந்து கிடுக்கியால இறக்கக் கூடாதுன்னு போட்டிருக்கலை.”

“அதுல எல்லாம் போட்டிருக்கலைங்கறதை நானும் ஒத்துக்கறேன். ஆனா அதெல்லாம் நீ படிச்சிருக்கேங்கறயே அதான் என்னால செரிக்கவேஏஏ முடியலை.” – அண்ணன்.

“நீ வாயை மூடு! எங்க, அந்த அடுப்பை சிம்’ல வெச்சுட்டு வா, தெரியுதான்னு உன் தகுதியையும் பாத்துடுவோம்!”

“சரி நிறுத்துங்க போரை! இப்ப வாங்கிண்டு வந்திருக்கறதையாவது பத்ரமா வெச்சுக்கோ. இடுக்கியால பிடிக்காத!”

“ம் பாக்கலாம், ஆனா எனக்கு துணியால இறக்கி பழக்கமில்லையே.. கையைச் சுடாதா?”

“நல்லா இருக்குடீ மாய்மாலம். எங்க காலத்துல மாமியாருக்கு நேர துணியால வெங்கலப் பானையையோ, தோசைக் கல்லையோ பிடிச்சு இறக்கினாலே சிரிப்பா! ஆள் பக்கத்துல இருக்கான்னா, வெறும் கையாலயே சட்டுனு இறக்கிடுவோம். எங்க கையெல்லாம் வெந்தா போச்சு? மன உறுதி கிடையாது இந்தக் காலத்து பொண்ணுகளுக்கு. அம்மாவும் சப்போர்ட்.” – பாட்டி

“ஐயோ, முதல்லயே தெரிஞ்சிருந்தா அந்தக் குடும்பத்துலயே ஒரு பையனுக்கு இவளைத் தள்ளிவிட்டிருக்கலாமே பாட்டி. இவ்ளோ லேட்டா சொல்றியே! உலை வெங்கலப் பானையை வெறும் கையால இவ இறக்கணுமா? கேக்கவே நல்லா இருக்கே. சொக்கா! சொக்கா!! நான் பாக்க கொடுத்து வைக்கலை…” – தம்பி

[அதற்குப்பின் பொன்னைப் போல் பூவைப் போல பாதுகாக்கப் பட்டது புது ஈயச் சொம்பு. கனமான டர்க்கி துண்டால் சுற்றி அரவணைக்கப் பட்டே இறக்கப்பட்டது. ஆனாலும்….]

“…..”

“……”

“வந்திருந்த விருந்தாளிகள் எல்லாம் போயாச்சா?”

“போயாச்சு! நல்லாத்தான் இருந்தது நாலு நாள். நான் தான் கொஞ்சம் டென்ஷனா பேசிட்டேன்.”

“ஐயய்யோ ஏன்டா?”

“என்னம்மா பின்ன, நான் பத்திரமா பாத்துண்டாலும் வரவங்க எல்லாம் ஹெல்ப் பண்றேன்னு ஆளாளுக்கு ரசப் பாத்திரத்தை கிடுக்கியால எடுத்து இதுவும் டிசைனா போச்சு!”

“அதுக்காக வார்த்தையைக் கொட்டுவயா? நல்லா கவனிச்சுட்டு, கடைசில ஒரு வார்த்தை சொன்னதுதான் நிக்கும்! உனக்கும் கொஞ்சம் பொறுமை கிடையாது.”

“விட்டா சர்டிஃபிகேட் கொடுக்க ஆரம்பிப்பியா? நான் ஒன்னும் வார்த்தையை எல்லாம் கொட்டலை. வர விருந்தாளிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு தடம் வெச்சுட்டுப் போறாங்க என் ரசப் பாத்திரத்துல”ன்னு சிரிச்சுகிட்டே தான் சொன்னேன்.

“ஆங், இது போதுமே. மோப்பக் குழையும் அனிச்சம்…” – தம்பி

“ஆஹா வந்துட்டாரு வள்ளுவரு. எங்க தில் இருந்தா முழுக்குறளும் விடு, பார்ப்போம் உன் தமிழ் அறிவை!”

“சரி விடு. இன்னும் அவனோட சரிக்குச் சரி சண்டை. நசுங்கினா என்ன வேற வாங்கிக்கக் கூடாதா? மங்கள் மெட்டல்லயாவது கூலி சேதாரம் உண்டு. நம்ப காரைக்குடியான் கடைல எடைக்கு எடை அப்படியே ஈயம் தரான். கொண்டுவா, அடுத்த தடவை மாத்திக்கலாம். அன்னிக்கி கூட பாப்பா நல்லா இருக்கான்னு விசாரிச்சான்.”

“‘பாப்பாவால தான் நான் நல்லா இருக்கேன்’னும் சொன்னான். Btw, இது எத்தனாவது ஈயச் சொம்போ?!” –  தம்பி.

-0-

“……”

“……”

“சொல்லவந்ததை முக்கியமா சொல்லிடறேன். ஈயப் பாத்திரம் சமையலுக்கு உபயோகிச்சா ரொம்பக் கெடுதலாம். இனிமே செய்யாத!”

“மங்கையர் மலரா?”

“எதுல வந்தா என்ன, சொன்னா சரின்னு கேளேன்! அப்பாவாட்டம் மங்கையர் மலர்னா மட்டம்னு நினைக்காத!”

“நான் அப்படி எல்லாம் நினைக்கலை.  ஆனா அதுக்காக மாத்தி மாத்தி புக்ல போடறதை எல்லாம் படிச்சுட்டு நம்பளை மாத்திகிட்டே இருக்க முடியாது.”

“அதுக்கில்லைமா..”

“அறுக்காம வேற பேசலாம்!”

“……”

“……”

-0-

“…..”

“ஈயப் பாத்திரத்துல செஞ்சா எவ்வளவோ கெடுதல்னு சொல்றாங்க. வேற try பண்ணேன்டா”

“அப்பா, யூ டூ?!”

“இல்லை, நீயே ஒரு தடவை அதைப் படிச்சுட்டாவது செய்றதை நிறுத்தலாமே…”

“காஃபி கெடுதல்னு எல்லா புக்லயும் போடறான். என்னிக்காவது நிறுத்தியிருக்கோமா? காலைல நாலரை மணிக்கு என்னை எழுப்பி ஸ்பெஷல் காஃபி கிடைக்கும்னு ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வாக்கிங் கூட்டுகிட்டுப் போய் வாங்கித் தரீங்க. மாமியாராத்துல பொண்ணுக்கு காலைல ரெண்டாவது காஃபி கொடுக்கறாளான்னு கவலைப்பட்டு இங்க நீங்க சாப்பிடாம இருக்கீங்கன்னு வீட்டுல எல்லாரும் கிண்டல் பண்றாங்க. நல்லதாப் போச்சுன்னு விட வேண்டியது தானே? அன்றாட வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா!”

“சரி, பார்த்துக்க, உனக்குத் தெரியாதது இல்ல”

-0-

“எப்படி இருக்க?”

“உன்போல அண்ணன் ஒரு கோயில் இருக்க, நான் பரம சௌக்கியம் வழக்கம் போல.”

“உன் ரசச் சொம்பும் சௌக்கியமா?”

“என் சொம்பு… :))) அது எப்பவுமே விருந்தினர் வருகைப் பதிவேடு தான், வழக்கம் போல!”

“:)))))))))))”

“:)))))))))))”

“அப்ப இந்த தடவையும் மாத்திடுவன்னு சொல்லு!”

“பின்ன?”

“பாவம் அம்மா தான் பொலம்பிண்டே இருக்கா. நீ நிறுத்தினா என்ன? இல்லை அதுல செய்யறதில்லைன்னு பொய்யாவது சொல்லேன்.”

“உனக்கு விஷயமே தெரியாதா? எனக்கெல்லாம் சரி சரின்னு அடங்கிப் போனா வாழ்க்கை ரொம்ப போரடிக்கும். சும்மாவானும் யாரையாவது எதிர்த்துகிட்டோ அடங்காமலோ இருக்கணும்.”

“:))))… திருந்த மாட்ட நீ!”

-0-

“….”

“Again அம்மா, இந்த வாரப் பத்திரிகைல வர மேட்டருக்கெல்லாம் அதிர்ச்சியாகி, என்னால என்னை தடால் தடால்னு மாத்திக்க முடியாது!”

“ஏன் முடியாது?”

“ஏம்மா, எனக்கு நினைவு தெரிஞ்சே கடலை எண்ணைல சமைச்சுகிட்டிருந்தீங்க. அதுபாட்டுக்கு எண்ணை பொங்கும். பாட்டி வாழை மட்டையை எல்லாம் போட்டு அடக்குவா. அப்றம் பாமாயில் தான் நல்லதுன்னு போட்டிருக்குன்னு அதுல சமைச்சுப் போட்டு கொன்னீங்க. அப்றம் எவனோ சொன்னான்னு ரிஃபைண்ட் சன் ஃப்ளவர். இப்ப இதயம் நல்லெண்ணை. லேட்டஸ்டா, எண்ணையை விதம் விதமா மாத்தி மாத்தி உபயோகிக்கணுமாம். ஒரே எண்னையை தொடர்ந்து உபயோகிக்கக் கூடாதாம். அப்ப இதுக்கு முன்னாடி உங்க லாஜிக்படி தப்பா சாப்டவங்கள்ல்லாம் செத்தா போயிட்டாங்க?”

“விதண்டாவாதம் செஞ்சா பதிலே இல்லை”

“சரி விடு. பாட்டி எல்லாம்  முழுக்க முழுக்க ஈயப் பாத்திரம் அல்லது உள்ள ஈயம் பூசின பித்தளைப் பாத்திரத்துல தானே செஞ்சா? கடைசி வரைக்கும் கண்ணாடி கூட போடாம, பல்லு விழாம பட்டையக் கிளப்பலை? ஒரு ஜூரம் காய்ச்சல்னு வந்திருக்குமா? இதை இத்தோட விடு!”

“அதான் தெரியுமே, நான் சொன்ன பேச்சு நீ என்னிக்கி கேட்டிருக்க?”

“நான் கேப்பேன். ஆனா என் நாக்கு கேக்காது. வேற பாத்திரத்துல ரசம் செஞ்சா எனக்குப் பிடிக்கலை. புளித் தண்ணியாட்டாம் இருக்கு. புரிஞ்சுக்க. மேட்டர் ஓவர்.”

“….”

“இதுக்கெல்லாம் பேசாம இருந்தா எப்படி தாயீ? கொஞ்சம் சிரிங்க… இப்ப Smoking is injurious to healthன்னு பிரிண்ட் போட்ட பாக்கெட்டையே மக்கள் பிரிச்சு ஊதறதில்லையா? அந்த மாதிரி தான். வேணும்னா அடுத்த பாத்திரம் வாங்கும்போது பேர் வெட்டற மாதிரி நீயும் Poisonousனு பாத்திரத்துல வெட்டிக் கொடுத்துடு. நான் அதை வெச்சு சமைச்சுக்கறேன்.”

“செய்ய மாட்டயான்ன நீ? எப்படியோ போ! பாலாஜி மெட்டல்ஸ்ல நிறைய புது ஸ்டாக் ஈயப் பாத்திரம் வந்திருக்காம். பார்த்து வெச்சிருக்கேன். இருக்கட்டும்; பொண்ணே வந்து அவளுக்கு வேணுங்கற டிசைன், அளவுல வாங்கிக்கட்டும்னு சொல்லிவெச்சிருக்கேன். எல்லாமே புதுப்புது டிசைனா வரவழைச்சிருக்கான். நன்னா இருக்கு, வெள்ளிப் பாத்திரமாட்டம்!”

“ச்சோ ச்வீட். இப்பத்தான் ஒரு பொறுப்புள்ள அம்மாவா behave பண்ற.. :))”

“….”
 
 

-0-

“ஊருக்கு வர டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சா? குழந்தையை எப்ப பார்போம்னு இருக்கு”

“எனக்கு எப்படா யார் தலைலயாவது கட்டிட்டு இருப்போம்னு இருக்கு”

“ஏன் பாவம் அப்படி சொல்ற? கொண்டுவந்து விடு. நாங்க வெச்சுக்கறோம். உன்னையெல்லாமே நாங்க சமாளிச்சிருக்கோம். ஆண்ட்றவுக்கு(ஆண்டு நிறைவு) பட்டுப் பாவாடை வாங்கியாச்சு. நீங்க வந்ததும் தான் குழந்தையை அளவெடுத்து தைக்கணும்.”

“சரி”

“அதைவிட உனக்கு சந்தோஷமான ந்யூஸ். மங்கள் மெட்டல்ல இப்ப புதுசா, ஈயப் பாத்திரம் வாங்கினா அடில காப்பர் பாட்டம் போட்டுத் தரான்… சூடு வேகமா பரவுமாம்… மறந்து அடுப்புல வெச்சாலும் சூட்டை எல்லாம் காப்பர் வாங்கிக்குமாம்… பாத்திரம் உருகாதாம்… நீ வந்ததும் போய் பாக்கலாம்…”

“ஐயோ, நானே சொல்ல நினைச்சேன். என் பாத்திரங்களையும் நீயே எடுத்துக்க. நான் இப்பல்லாம் அதுல சமைக்கறதில்ல”

“ஏன்???!!!!”

eeyam2.JPG

“டாக்டர், குழந்தைக்கு ஒரு வயசு ஆகப் போறது. சாதம் எல்லாம் கொடுக்க ஆரம்பிக்கலாம்னு சொல்லியிருக்கார். 4 நாளா ரசம் சாதம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன் என் பொண்ணுக்கு. எல்லா ரசப் பாத்திரத்தையும் கொண்டுவந்து உங்கிட்ட போட்டுடப் போறென். எனக்கு வீட்டுலயே வேண்டாம் இனிமே இந்தப் பாத்திரமெல்லாம்!!”

[இதுக்கெல்லாம் ‘சிறுகதை’னு லேபிள் ஒட்டினா, சிறுகதை இலக்கிய உம்மாச்சி கண்ணைக் குத்திடுமா? :(]

Health Effects | Lead Poisoning

முன்னால் சொல்லவிட்டுப் போன பின்குறிப்பு: ஆமாங்கய்யா, ஆமாம், இது அக்மார்க் உள்குத்துப் பதிவு! (சே, ஒரு பொறவி இலக்கியவாதியை இப்படி கேவலப்படுத்தறாய்ங்களே!..)

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கிலோ
சின்ன கொத்துக்கடலை – 50 கிராம்
தேங்காய் – சிறிது

வறுத்துப் பொடிக்க
எண்ணை – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2 கப்
கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
முழு கருப்பு உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கோதுமை – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

தாளிக்க
எண்ணை, கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை:

  • வறுத்துப் பொடிக்கச் சொல்லியுள்ள அனைத்துச் சாமான்களையும் எண்ணையில் சிவக்க வறுத்து, நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். மிளகாய் கமறாமல் இருக்க சிட்டிகை உப்பு சேர்த்து வறுக்கவும்.
  • புளியை, கெட்டியாகக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.
  • சாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் பரத்தி, 2 டீஸ்பூன் நல்லெண்ணை விடவும். சாதம் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
  • வாணலியில் எண்ணை விட்டு நன்கு காய்ந்ததும், அதில் கொத்துக்கடலையைப் போடவும். படபடவென பொரியும்.
  • பொடிப்பொடியாகக் கீறிய தேங்காய்த் துண்டுகளையும் அதனுடன் போட்டு, சிவக்க வறுத்து, சாதத்தில் கொட்டவும்.
  • கொஞ்சம் எண்ணையில் கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதையும் சாதத்தோடு சேர்க்கவும்.
  • இப்போது புளிக்காய்ச்சலையும் சாதத்தில் சேர்த்து, தேவையான அரைத்த பொடி, நல்லெண்ணை விட்டு நன்றாகக் கிளறி பரிமாறவும்.

* மிகுந்த மணத்தோடு வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். சாப்பிடும்போது, சின்ன கொத்துக்கடலையும் தேங்காய்த் துண்டுகளும் சுவாரசியமான இடையூறு.

* இது மேல்கோட்டையில் செய்வதாக இருந்தாலும் கன்னட மக்கள் வழக்கமாக எல்லாவற்றிலும் சேர்க்கும் வெல்லத்தை(கொடுமைங்க!) இதில் சேர்க்காமல் இருப்பதே இதன் கூடுதல் சிறப்பு.  🙂

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகை, தயிர்ப் பச்சடி வகைகள்.

 “தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.”

 — ரா.கி.ரங்கராஜன் (நாலு மூலை)

ஒருமுறை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆசை அடங்காமல் மீண்டும் கோயில் உள்வரை போய் வாங்கிச் சாப்பிட்டேன். பிரசாதம் எல்லாம் கொஞ்சமாகத் தான் சாப்பிடவேண்டும் என்று பக்கத்திலிருந்தவர்கள் செய்த நக்கலை எல்லாம் அலட்சியம் செய்து எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்று செயல்பட்டேன். விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றியதும் உண்மை. மேலே உள்ள வரிகளைப் படித்தபோது நான் தனியாள் இல்லை என்று ஒரு பெருமை.

கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி!

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்

செய்முறை:

  • புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
  • புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
  • எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
  • 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்’மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
  • மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.

தேவையான பொருள்கள்:

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 150 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கல் உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணை – 1/2 கப்

புளியோதரைப் பொடி தயாரிக்க
காய்ந்த மிளகாய் – 15லிருந்து 20
தனியா – 3 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு

புளியோதரை கலக்க
உதிராக வடித்த சாதம்
புளிக்காய்ச்சல்
புளியோதரைப் பொடி
மஞ்சள் பொடி
நல்லெண்ணை
பச்சைக் கருவேப்பிலை
நிலக்கடலை
வெந்தயம்
கடலைப் பருப்பு
உளுத்தம் பருப்பு
முந்திரிப் பருப்பு
வெள்ளை எள்

iyengar puliyotharai

 

செய்முறை:

புளிக்காய்ச்சல்:

  • முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து, உப்பு சேர்த்துக் கரைத்து, வடிகட்டவும்.
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முழு மிளகாய் வற்றலை நன்கு வறுத்து, பின், கடுகு, சீரகம் பொரித்து புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து, நிதானமாகக் கொதிக்கவிட்டு, நன்கு கிளறிவிட வேண்டும்.
  • பாதி கொதிக்கும்போது பச்சை வெந்தயத்தையும் சேர்க்கவும்.
  • தளதளவென சப்தத்துடன் கொதித்து இறுகி, எண்ணை மேலே வரும் சமயம் புளிக்காய்ச்சல் தயார். அடுப்பை அணைத்து, நன்கு ஆறியவுடன், பாட்டிலில்* எடுத்துவைக்கவும்.

புளியோதரைப் பொடி:

  • அடுப்பை சிம்’மில் வைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணை விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.
  • அதிலேயே காய்ந்தமிளகாய், தனியாவை நன்கு வறுத்து எடுக்கவும்.
  • ஆறியதும், எல்லாச் சாமான்களையும் மிக்ஸியில் நைசாகப் பொடித்து எடுத்துவைக்கவும்.

புளியோதரை கலக்கும் விதம்:

  • ஒரு பெரிய தாம்பாளத்தில் நன்கு சூடான, உதிர் உதிராக வடிக்கப்பட்ட சாதத்தை பரவலாகக் கரண்டியால் எடுத்துப் போடவும்.
  • அதன்மீது மஞ்சள் பொடி, பச்சைக் கறிவேப்பிலையைப் பரவலாகத் தூவி, நல்லெண்ணையையும் பரவலாகச் சேர்த்து அப்படியே நன்கு ஆறவிடவும்.
  • பின், தேவையான புளிக்காய்ச்சலை சாதத்தில் போட்டு, சாதம் குழையாமல் உடையாமல் மெதுவாகக் கரண்டியால் அல்லது கைவிரல்களால் (கையால் அல்ல) கலக்கவும்.
  • எண்ணையில் நிலக்கடலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், முந்திரிப்பருப்பு, எள் வறுத்து புளியோதரையில் சேர்க்கவும்.
  • கடைசியில் திட்டமான அளவு, புளியோதரைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • எள், தாளிக்கும்போது சேர்க்காமல், வறுத்து, பொடித்தும் கடைசியில் சேர்த்தால் மிகுந்த வாசனையோடு சுவையாக இருக்கும்.
  • உப்பு, சர்க்கரை, ஊறுகாய் மற்றும் உப்போ சர்க்கரையோ சேர்த்த மசலாக்களை பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பாக்களில் வைப்பது உடலுக்குத் தீங்கானது. இவைகளை எப்பொழுதும் கண்ணாடி பாட்டில்களிலேயே வைக்கவும். உள்ளேயே ஸ்பூன் போட்டு வைப்பதாக இருந்தால் மர ஸ்பூன் மட்டுமே உபயோகிக்கவும்.

 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகைகள், மெலிதாகத் தட்டப்பட்ட உளுந்து வடை (ஆஞ்சநேயர் கோயில் வடைமாலை), …

நேயர் விருப்பம். 🙂 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கிலோ
நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 25 (விரும்பினால்)
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
 

வறுத்துப் பொடிக்க
நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம் அல்லது ஒரு கிரிக்கெட் பந்து அளவு. 🙂
நல்லெண்ணை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 8
உளுத்தம் பருப்பு –  1 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை – 50 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  • புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நல்லெண்ணை விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, கொத்தமல்லி விரை, வெந்தயம், பெருங்காயம் என்ற வரிசையில் சேர்த்து நன்கு சிவப்பாக வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, மூன்று நான்காய் கிள்ளிப் போட்ட காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, வெந்தயம், வெள்ளை எள், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் சிவக்க வறுத்து, பின் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிக நிதானமான தீயில் வதக்கவும்.
  • புளிக்கரைசல் இறுகி, எண்ணை பிரிந்து வரும்வரை வதக்கி, எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • சாதத்தை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான பாத்திரம் அல்லது தாம்பாளத்தில் கொட்டி ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிடவும். இப்படிச் செய்வதால் சாதம் மேலும் ஒட்டாமல் தவிர்க்கலாம்.
  • மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணையைச் சூடாக்கி, கடுகு, முந்திரிப்பருப்பு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் சேர்க்கவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக, புளிக் காய்ச்சலையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் மாற்றி மாற்றிச் சேர்த்துக் கலக்கவும்.

* எப்பொழுதும் புளிக்காய்ச்சல் தயாரிக்க, மிகப் பெரிய வாணலியாக எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும்போது நிறைய வெளியே தெறிக்காமல் இருக்க இது அவசியம். அடுப்பும்  அடுப்பு சார்ந்த இடமும் சுத்தப்படுத்துவது மிகப் படுத்தலான வேலை. 

* புளிக்காய்ச்சலை சாதத்தோடு கலக்கும் இந்தச் சமயத்தில், ஒருவேளை உப்பு குறைவாக இருந்தால் மேலும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

* புளியோதரை தயாரிக்கும் போது அதன் காரம், சாப்பிட்டுப் பார்த்தால் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தற்பொழுது மேலே உரைக்கும் காரம் சாதத்தில் இறங்கி, சாப்பிடும் நேரத்தில் சரியாக இருக்கும். 

* பொதுவாகவே அனைத்து வகைப் புளியோதரைகளும், கலந்து ஒரு 4 மணிநேரமாவது வைத்திருந்து, பிறகு சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும். மறுநாள் என்றால் அற்புதமான சுவையோடு இருக்கும்.

* இந்த முறையில் எவ்வளவு சாதத்திற்கு, எவ்வளவு பொடி அல்லது புளிக்காய்ச்சல் தேவை இருக்கும் என்று எப்பொழுதுமே சரியான ஒரு அளவைச் சொல்ல முடியாது. அவரவர் ருசிக்குத் தக்க முன்னேபின்னே தான் தேவை இருக்கும். ஒருவேளை வறுத்துப் பொடித்த பொடி குறைவாக இருந்தால் கவலை இல்லை. இட்லி மிளகாய்ப் பொடி தூவி சமாளிக்கலாம். (அதிலும் உப்பு சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.) ஆனால் புளிக் காய்ச்சல் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே செய்துவைத்துக் கொண்டு கலக்க ஆரம்பிப்பது தான் சரி. 

-0-

பாலக்காடு:

மேலே கூறியவற்றிலிருந்து அதிக வித்தியாசம் இல்லை.

* வறுத்துப் பொடிக்கும் பொருள்களில் மாற்றம்
கொத்தமல்லி விரை – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்

* புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கும் சமயம் புளிக் கரைசலை விடுவதற்கு முன், மற்ற சாமான்களோடு பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய இஞ்சியும் சிறிது சேர்த்து வதக்க வேண்டும். விரும்பினால் புளிக்காய்ச்சலுக்கு மட்டும் ரிஃபைண்ட் ஆயில் உபயோகித்துக் கொள்ளலாம். (நல்லவேளை, சேச்சி தேங்காயெண்ணை என்று சொல்லவில்லை.)

* இஞ்சி, பச்சை மிளகாய் சேர்ப்பதாலோ என்னவோ, இந்தப் புளியோதரை இன்னும் அதிக ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் எனக்கு ஓர் உணர்வு. கொத்தமல்லி விரை, கடலைப்பருப்பு அதிகம் சேர்ப்பதால் கொஞ்சம் சுவையும் மணமும் தூக்கலாகவே இருக்கும்.

-0-

ஆந்திரா: (புளிஹோரா அன்னமு)

பச்சரிசி – 1/2 கிலோ
நெய் அல்லது வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
 

வறுத்துப் பொடிக்க
நல்லெண்ணை – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 12
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிது

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிக்க
நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு –  2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை –  50 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 (விரும்பினால்)
வெந்தயம் – 2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

  • மேலே ‘வறுத்துப் பொடிக்க’க் குறிப்பிட்டுள்ள பொருள்களை வறுத்து, நன்றாகப் பொடிசெய்து கொள்ளவும்.
  • வாணலியில், தாளிக்கக் குறித்திருக்கும் பொருள்களை தாளித்து, அத்துடன் கெட்டியாகக் கரைத்த புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
  • உப்பு மஞ்சள் தூளுடன், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும்.
  • உதிர் உதிராக சமைத்த சாதம், சூடாக இருக்கும்போதே வெண்ணை அல்லது நெய் சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் சேர்க்கவும்.
  • சாதம் ஆறியதும், புளிக்காய்ச்சலையும் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும்.

* இதில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, அங்கங்கே காய்ந்த மிளகாய் அகப்பட்டுப் படுத்தாமல், எல்லாமே அரைபட்டிருப்பதால், கொஞ்சம் வேடிக்கை பார்த்துக் கொண்டோ, விஸ்தாரமாகப் பேசிக்கொண்டோ அலட்சியமாகச் சாப்பிடலாம். சுவையில் பெரிய மாறுதல் இல்லாமல், கொஞ்சம் நெய் வாசனையோடு நன்றாகவே இருந்தது.

-0-

ரெடி மிக்ஸ்:

ரெடி மிக்ஸ் புளியோதரைப் பொடி வாங்கிச் செய்பவர்களும் சுவையான புளியோதரை செய்யலாம்.

MTR Puliogareல் வழமையான கன்னட உணவுகளைப் போல சர்க்கரையும் வெல்லமும் சேர்த்திருப்பார்கள். 😦 தேங்காய் கூட(ரொம்பத்தான்!). அந்தச் சுவை பிடிக்காதவர்கள் அதைத் தவிர்த்துவிடலாம்.

வேறு எந்த ப்ராண்டாக இருந்தாலும், சாதத்தில் ரெடி மிக்ஸ் கலப்பதோடு, நம் பங்குக்கு, 2 டீஸ்பூன் நல்லெண்ணையில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், நிலக்கடலை, வெள்ளை எள், முந்திரி(விரும்பினால்), கறிவேப்பிலை தாளித்துக் கலந்தால் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்கும். 

-0-

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த வடாம், அப்பளம், சிப்ஸ் வகைகள்…

காரம் என்றால் காத தூரம் ஓடுபவர்களுக்கு, தயிர்ப் பச்சடி வகை.

தமிழ்நாட்டில் சப்பாத்தி முன்னர் எப்பொழுதாவது ரொடேஷனில் செய்யப்படும் சிற்றுண்டியாகவே இருந்துவந்தது. இப்பொழுதும் இட்லியும் தோசையும் அதன் மவுசை இழக்கவில்லை என்றாலும் பெரும்பாலானவர்கள் அன்றாடம் அல்லது அடிக்கடி சப்பாத்தியையும் பெரும் அளவில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. 

chappaaththi1.JPG

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 2 கப்
உப்பு, எண்ணை – தேவையான அளவு

chappaathi2.JPG

செய்முறை:

  • கோதுமை மாவு, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
  • நன்கு ஒன்றுசேர்ந்து கெட்டியான பதத்தில் வரும்போது, 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து கையில் ஒட்டாமல் நன்றாக அடித்துப் பிசையவும்.
  • இந்த மாவை அப்படியே குறைந்தது 4 மணிநேரம் வைத்துவிட வேண்டும். நாளை காலையில் செய்ய முதல் நாள் இரவே பிசைந்து வைக்கலாம்.
  • சப்பாத்தி தயாரிக்க ஆரம்பிக்கும்போது மீண்டும் ஒருமுறை அடித்துப் பிசையவும்.
  • ஒவ்வொரு சிறு உருண்டையாக(பெரிய எலுமிச்சை அளவு) எடுத்து, கோதுமை அல்லது மைதா மாவு தோய்த்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
  • சப்பாத்தி இட்டபின் உடனே அடுப்பில் மிதமான சூட்டில் காய்ந்த, சப்பாத்திக் கல்லில் போடவும்.
  • ஒருபக்கம் லேசாகக் காய்ந்ததும்(10 நொடிகளில்), திருப்பிப் போடவும். இந்தப் பக்கமும் காய்ந்ததும் மீண்டும் திருப்பவும்.
    இப்போது 1/4 டீஸ்பூன் அல்லது அதைவிடக் குறைவான எண்ணையை சப்பாத்தியைச் சுற்றி மெதுவாக விடவும். சப்பாத்தி பொங்கி மேலெழும்பும்.
  • அடுத்தப் பக்கம் திருப்பி மேலும் சிறிது எண்ணை விட, மொத்தமாக மேலெழும்பும்.
  • இரண்டு பக்கமும் மேலும் ஒரு 10 நொடிகள் கரண்டியால் கல்லில் பிரட்டி, பின் எடுத்துப் பரிமாறவும்.

chappaaththi3.JPG

 * பிசைந்த சப்பாத்திமாவை ஈரத்துணியில் சுற்றி வைக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மூடி உள்பக்கம் தண்ணீரால் துடைத்து ஈரமாக்கி பின்னர் மூடிவைக்கலாம்.

* மாவு நன்கு ஊறியிருப்பது, அடித்துப் பிசைந்திருப்பது, கல்லில் சப்பாத்தியை இருபுறமும் முதலில் காயவைத்து பின்னரே எண்ணை விடுவது போன்ற காரணங்களாலேயே சப்பாத்தி பொங்கி மேலே வருகிறது. சப்பாத்தியைக் கல்லில் போட்டதுமே, தோசைக்கு விடுவதுபோல் எண்ணை விடக் கூடாது.

* எப்பொழுதாவது பலகையில் சப்பாத்தியை இடும்போது தவறாக அல்லது அதிகமாக ஒரு இடத்தில் அழுத்திவிடுவதாலோ, அல்லது கல்லில் திருப்பும்போது கரண்டியால் எங்காவது குத்துப் பட்டிருந்தாலோ, சப்பாத்தி சரியாக முழுவதும் பொங்கி எழும்பாமல் அரைகுறையாக இருந்துவிடலாம். இதற்கெல்லாம் கவலைப்படாமல், நமக்கு நாமே பொதுமன்னிப்பு கொடுத்துக் கொண்டு- வேறு யார் கொடுக்க வேண்டும்?- தொடர்ந்து செய்யலாம். பொங்காமல் போனாலும் மாவின் தன்மை காரணமாக சப்பாத்தி சாப்பிட மெதுவாகவும், சுவையகாவுமே இருக்கும்.

* கோதுமை மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் சோயா மாவு கலந்து செய்யலாம்.

* கடைகளில் தயாரித்த கோதுமை மாவை உபயோகிப்பதை விட கோதுமை வாங்கி நன்றாகச் சுத்தம் செய்து மிஷினில் அரைத்து, உபயோகிப்பது, சிக்கனம், சுவை, ஆரோக்கியம். விரும்பினால் 5 கப் கோதுமைக்கு ஒரு பங்கு வறுத்த சோயா பீன்ஸ், 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பும் சேர்த்து அரைக்கக் கொடுக்கலாம். முதலிலேயே சுத்தம் செய்துவிட வேண்டும். அரைத்த பின் சலிக்கக் கூடாது.  அல்லது அரைத்த மாவில் அவ்வப்போது சோயா மாவு கலந்தும் செய்யலாம். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் கலந்த சர்க்கரை, தோசை மிளகாய்ப் பொடி, சட்னி வகைகள், காய்கறிக் குருமா, உருளைக் கிழங்கு மசாலாகடப்பா, மற்றும் சில சப்ஜி வகைகள்..

“எனக்கு பூரி பிடிக்காது!” என்று சொல்பவரை இனிமேல் தான் நான் சந்திக்க வேண்டும்.

puri.JPG

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 2 கப்
மெல்லிய ரவை – 4 டீஸ்பூன்
உப்பு, எண்ணை – பொரிப்பதற்கு (தேவையான அளவு)

செய்முறை:

  • கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாகக் கலந்துகொண்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.
  • இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்தால் தான் திரட்ட முடியும் என்ற பதத்திலேயே இரண்டு டீஸ்பூன் எண்ணை சேர்த்து, ஒட்டாமல் கெட்டியாகப் பிசையவும்.
  • சிறுசிறு உருண்டைகளாக (சிறிய எலுமிச்சை அளவு) உருட்டித் தயாராக வைத்துக் கொண்டு, உருண்டைகள் இருக்கும் பாத்திரத்தை மூடியே வைத்திருக்கவும்.
  • வாணலியில் எண்ணையை மிதமான சூட்டில் காயவைக்கவும்.
  • பூரி உருண்டையை எண்ணையில் தொட்டுக் கொண்டு சின்னச் சின்னதாக இடவும்.
  • இட்டு முடித்ததுமே எண்ணையில் பொரிக்கவும். ஒருபக்கம் வேகும்போதே, கரண்டியால் எண்ணையை மேல்பக்கமும் விட்டால் உப்பி பெரிதாகும். லேசாக எண்ணையில் அழுத்தி பொரியவைக்கவும்.
  • மெதுவாக அடுத்தபக்கமும் திருப்பி, பொன்னிறமாகச் சிவந்ததும், முற்றிலும் எண்ணையை வடித்து எடுக்கவும்.

பூரி சுவையாகவும் சரியாகவும் அமைய:

* சப்பாத்தி மாதிரி இல்லாமல் பூரிக்கு மாவு பிசைந்ததும், உடனே செய்ய ஆரம்பிக்க வேண்டும். பூரிக்கான சப்ஜியையும் தயார் செய்துவிட்டே மாவு பிசைய ஆரம்பிப்பது நல்லது.

* சப்பாத்தியைவிட பூரி மாவு அதிகத் தண்ணீர் பசை இல்லாமல் கெட்டியாக இருக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி இருந்தால் அதிகம் எண்ணை குடித்து சொதசொதவென்று ஆகிவிடும். 😦

* ஹோட்டலின் சுவைக்காகவும் மொறுமொறுப்பிற்காகவும் ரவை சேர்க்கிறோம்.

* விரும்புபவர்கள் சோயாமாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலர் 5 அல்லது 10 பூரிகளை மொத்தமாகச் செய்துவைத்துக் கொண்டு பொரிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி எல்லாம் காயவிடாமல்
உடனேயே பொரிக்க வேண்டும். அப்போது தான் பூரி உப்பி அழகாக வரும்.

* நான் பார்த்தவரை அநேகம் பேர் செய்யும் பிழை, பூரிகளையும் சப்பாத்தி மாதிரி மெல்லியதாக இட்டுவிடுவது. சற்று தடிமனாக இட்டு இருந்தால் தான் பெரிதாகப் பொரிந்து சுவையாக இருக்கும்.

* அடுப்பை மிகக் குறைந்த தீயில் வைத்தால் கட்டை மாதிரி ஆகிவிடும். மிக அதிகத் தீயில் வைத்தால் மேல்பக்கம் கருகி, உள்ளே சரியாக வேகாமல் இருந்துவிடும். தொடர்ந்து மிதமான சூட்டில் மட்டுமே எண்ணை காய வேண்டும்.

* பூரி இடும்போது சப்பாத்திக்குச் செய்வது போல் மாவு தோய்த்து இடக்கூடாது. இப்படிச் செய்வதால் பொரிக்கும் எண்ணையில், இந்த மாவு பிரிந்துபோய் கருப்பு வண்டலாக அடியில் தங்கிவிடும். அந்த எண்ணையிலேயே அடுத்தடுத்த பூரிகளைப் பொரிக்கும்போது வண்டல் அவற்றின்மேல் ஒட்டிக்கொண்டு, உடல் ஆரோக்யத்திற்குப் பெரும் கேடு. உருண்டைகளை எண்ணை தோய்த்து மட்டுமே இடவும். இதனால், பூரி பொரித்த எண்ணை கடைசிவரை கலங்காமல் இருப்பதை நாமே உணரலாம்.

* பொரித்த எண்ணையை மீண்டும் பொரிக்க உபயோகிக்காமல் இருப்பது நல்லது. அதனால் எண்ணை வைக்கும்போதே, குறைந்த மற்றும் தேவையான அளவு மட்டுமே வாணலியில் எண்ணை வைக்கவும். இதை நான் நேரில் பலரிடமும் வலியுறுத்துவது தான் என்றாலும் இங்கேயும் அப்படியே  இங்கேயும் ஒருமுறை  படிக்கவும்.
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அநேகமாக தமிழ்நாட்டில் பூரி என்றாலே தேங்காய்ச் சட்னி,  உருளைக் கிழங்கு மசாலா அல்லது ச்செனா(channa) தான். இப்போது நிலைமை மாறிவருகிறது. இன்னும் சில சப்ஜிவகைகளும் இனி, சொல்ல நினைக்கிறேன்.

இப்பொழுது சப்பாத்தி, தோசை, இட்லி, டோக்ளா, கஞ்சிமாவு இவைகள் தயாரிக்கும்போது சோயா மாவையும் குறிப்பிட்ட அளவு(மட்டும்) உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்துகிறார்கள். காரணம் அதன் தன்மை.

ஏழரைச் சனி சும்மா போகாது என்பது போல ஒருவனுக்கு நீரழிவு வியாதி வந்தால், கூடவே இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களையும் கூட்டி வந்து விடும். இதில் யாரும் விதி விலக்காக இருக்க முடியாது. நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் ஆபத்து எப்போதும் மிக அருகிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாள் ஆக ஆக பாதிப்புகள் கூடுமே தவிர நிச்சயம் குறையாது. 

இந்நிலையில் டைப்-2 வகை நீரழிவு நோயாளிகளுக்கு சோயா சிறப்பான அளவுக்கு கைகொடுக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. இல்லீனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீரழிவு நோய் பாதித்த சிலருக்கு சோயா புரோட்டீன் சத்தும், மற்றவர்களுக்கு மிருக புரோட்டீன் சத்தும் தரப்பட்டன. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இவர்களை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சோயா புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு சிறுநீரில்ல் காணப்படும் புரோட்டீன் 10 சதவீதம் குறைந்து போய் இருந்தது. ஆனால் மிருக புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு புரோட்டீன் அளவு உயர்ந்து கொண்டே போனது. இந்த இடத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சோயாவானது, சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கும் வேலையைச் செய்யாமல் அதை நிலைநிறுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது.

சோயா மறைமுகமாக 2 வகைகளில் நன்மை செய்கிறது. அதாவது ஒன்று சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் கொழுப்பான எச்டிஎல் கொழுப்பை 4 சதவீதம் கூடுதலாக உண்டாக்குகிறது. மற்றெhன்று நல்ல கொழுப்பான எச்டி.எல்; அளவு அதிகாpத்தால் இது இதயத்துக்கும் நல்லதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இது விஷயத்தில் மேற்கொண்டு தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

— நன்றி: தினகரன். 

இளமையை மீட்கும் அதிசய உணவாக சோயா உள்ளது. பெண்களுக்கு உண்டான ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை நீக்க சோயா நல்ல உணவாகும்.

சோயா குறித்து பக்கம்1| பக்கம்2| இணையத் தளம்

சோயா வாங்கி வறுத்து அரைத்துக் கொள்ளலாம் அல்லது சோயா மாவு வாங்கிக் கலந்து கொள்ளலாம் அல்லது தரமான கம்பெனிகள் தயாரித்துத் தரும் வேறு கலவை மாவை வாங்கியும் உபயோகிக்கலாம்.

atta-mix.JPG

எனக்குத் தெரிந்து Saffola Atta Mix கடைகளில் கிடைக்கிறது. With the Goodness of Oats, Barley, Fiber and Soya Protein என்ற taglineல் வரும் இதில் ஒருவரது ஒரு நாளைய தேவை 2 டேபிள்ஸ்பூன் என்று சொல்கிறார்கள். சுவையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

sim4.jpg

காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் நீரின் சலனம்..
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்..
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்..
 

இந்தக் காதல் எனக்குப் புரிவதில்லை. 🙂 ஆனால் சமீபத்தியப் பாடல்களில் பாடல், இசை, படமாக்கம், புதிய குரல்கள், முக்கியமாக பாவனா என்று பலவிஷயங்களால் இந்தப் பாடல் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவும் திரும்பத் திரும்ப முணுமுணுக்கவும் வைப்பதும் உண்மை. இன்று ஏனோ ப்ரியாவைப் பற்றியும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ப்ரியா– மரத்தடியின் உபதலைவி என்ற பதவி வகித்திருக்கிறார் என்றாலும் “காதல் பிசாசு” என்றே அறியப்படுபவர். அவர் கவிதை தட்டக் கணினியைத் தொடும்நொடியிலேயே, மரத்தடியில் கைத்தட்டவும் விசிலடிக்கவும் ஆரம்பித்திருக்கிறது ஒரு கூட்டம். 🙂

உபதலைவி பிரியா உம் பாட்டு – இந்த
உலகமெல்லாம் மகிழுதம்மா கேட்டு
மரத்தடில ஒந்தெறமக் காட்டு
தங்காச்சி பாட்டு – பசங்க
பிகிலு வுட்டாப் போட்டுடுவேன் பூட்டு
நண்டுப்புடி போட்டு!

என்று இவருக்காக கானா எடுத்துவிட்டு தைரியம் கொடுத்திருக்கிறார் ஆசாத் அண்ணன்.

ப்ரியாவின் உற்சாக பதில் கானாதான் முதன்முதலில் நான் படித்த இவரது முதல் கடிதம்.

மரத்தடில கூடுது பார் கூட்டம் – இங்க
மணிக்கணக்கா தமிழுக்காவ நாட்டம்
மனசுக்குள்ள போட்டு வச்சோம் தோட்டம்
நண்பர் மலர்த் தோட்டம்
நம்ம எழுத்துக்கில்ல என்னக்குமே வாட்டம்
இனிமே வாட்டம்!

சரி, கானா எல்லாம் எழுதுபவர் போலிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன். சந்தம், மெட்டு, தத்தகாரம்- எப்படியும் அழையுங்கள்- இவைகளுக்குக் கட்டுப்பட்டு எழுதுவதெல்லாம் இவருக்கு தண்ணி பட்ட பாடு என்று பிறகுதான் தெரிந்தது. வார்த்தைகள் உணர்வுகளுக்காகவோ, உணர்வுகள் வார்த்தைகளுக்காகவோ சமரசம் செய்து கொண்டதே இல்லை. அப்படியே அடித்துச் செதுக்கியது போல் கவிதைகள் வரும்.

இவரது கவிதைகள் இன்று பேசப்படுகிற பெண்ணியம் என்கிற கட்டுப்பாடுகளுக்குள் எல்லாம் அடங்காத, ஈகோவை எல்லாம் துடைத்துப் போட்ட முழுச் சரணாகதிதான்.

sim2.jpg

ஒரு காதலர் தினத்திற்காக எழுதிய வெண்பாக்கள்… 

புல்லின் பனித்துளியாய்ப் படரும் நுதற்றுளிகள்
நில்லா துருளுமடா நின்றன் நெடுமார்பில்
வெல்லத் திறமுமற்றேன் வெட்கச் சமரிதிலே
மெல்லத் திரும்பியெனை மெல்.

கவிஞர் தாமரைக்கெல்லாம் கொஞ்சமும் குறைவில்லாத அல்லது என்னைப் பொருத்த வரை, வாய்ப்புக் கிடைத்தால் அவரைவிடவே சிறக்கக் கூடிய கவிதாயினி என்பது என் எண்ணம். எதுவுமே எழுதாமல் சும்மா நாளைக் கடத்தியவரை சாட்’டில் கடிந்துகொண்ட ஹரியண்ணா (ஹரிகிருஷ்ணன்), ‘சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!’ என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுதிவரச் சொன்னார். என்னிடம், ‘”சோம்பேறி’க்குச் சரியான எதுகை கிடைப்பது கடினம், பாவம் ப்ரியா, பார்க்கலாம் என்ன செய்றான்னு” என்றும் சொல்லிவைத்திருந்தார். எனக்கு நம்பிக்கை இருந்தது. 🙂

sim141.jpg

நேற்றும் நினைத்திருந்தேன் நாளை முடித்திடுவேன்
ஆற்றாக் கருமங்கள் என்பவளே – காற்றிலையேல்
காம்பேறிப் பூத்துவிடக் கண்சுணங்கு மோமலர்கள்
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு.

முற்றெதுகை.:) அதுதான் ப்ரியா.

[இதற்கு சற்றும் சளைக்காத எதுகையோடு ஆசாத் அண்ணனும் அப்போது எழுதியிருந்தார்.

அச்சுதன் தாள்போற்றி அஞ்சாமற் சொல்லெடுத்து
மெச்சும் கவிவீணை மீட்டிடுநீ – நச்சுமிழும்
பாம்பேறி நின்ற பரந்தாமன் பார்த்திருப்பான்;
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!
]

sim5.jpg

ஒரு சராசரிப் பெண் தாய்வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை, அதன்மேல் வைக்கும் காதலை மெல்லிய நினைவுக்கூட்டலாய்ச் சொல்ல நினைத்து நம்மையும் நம் அப்பா அம்மாவின் மடி வரை அழைத்துப் போய்ச் சிணுங்குகிறார்.. 

பன்னிரண்டாம் வகுப்பினிலே தேறாமல் போயிருந்தால்
வடிப்பதற்குப் பதில் வாழ்ந்திருக்கலாம் கவிதையை!

சமையல் குறிப்பு வலைப்பதிவு என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி உவமை சொல்லலாம். நம்ப ‘ஆச்சி மசாலா’ சண்டே சமையல் மாதிரி, ஃபைவ் ஸ்டார் சமையல், கிராமத்துச் சமையல், ஆரோக்யச் சமையல், மைக்ரோவேவ் சமையல் வரை, எல்லா விதக் காதல் கவிதைகளும் இவரே அநாயாசமாக எழுதியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? அதனால் கீழே..

 #
சென்மத்துக்கும் ஆசயய்யா…

sim3.jpg

சல்பேட்டா காச்சகொள்ளோ சலசலன்னு சிலுக்குதுய்யா
கல்கோனா முட்டாயாட்டம் கண்ணு ரெண்டும் மினுக்குதுய்யா
என்னாத்துக்கோ ஏம் மன்ஸு எனங்கெட்டு எளகுதுய்யா
சொன்னா கூடோ பிரியாத சொகம்மா வலிக்குதுய்யா!

பேட்டக்கெல்லா பேதி தர்ர பேமானியா இர்ந்த என்ன
சேட்டயெல்லா காட்டாமேயே சொக்க வச்சிப் பாக்குறய்யா
நெத நெதமும் நெகுந்து போயி நெஞ்சுக்குள்ள குளுந்து போயி
கத கதயா கனவுக்குள்ள கலரு படம் காட்டுறய்யா!

வெத வெதமா சீல கட்டி வெக்கம் மட்டும் ஓரங்கட்டி
கதவடச்சிக் கதபேச கெனாக்காண வக்கிறய்யா!
“கய்தே ஏங்கண்ணம்மா காப்பித் தண்ணி கொண்டாம்மே!”
காதுக்குள்ளோ கேக்க ஒரு தேதி பாத்து சொல்லுய்யா!
மெய்யாலும் சொல்லிப்போட்டேன் மாமா நீ கேட்டுப்புடு
பொய்யி இல்ல பொட்டப்புள்ள லவ்வு மட்டும் பாத்துக்கிடு!

ஒனக்காவ ஒல கொதிக்க ஒம்புள்ள மடியிருக்க
மாமா ஒம் மன்ஸுக்குள்ளோ மணக்க வச்ச மீன்கொயம்பா
சோக்கா நா குடியிருக்க சென்மத்துக்கும் ஆசயய்யா!!
 

#
அன்பான, வெற்றிபெற்ற காதல் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆர்ப்பட்டமில்லாத அமைதியான நடையில் ஒரு முயற்சி..

sim6.jpg

தத்தளித்துப் போராடும் தாவிப் பறந்தோடும்
தத்தைமொழி தோற்றுவிடத் தீந்தமிழில் தேடியுனை
நத்தும் மனக்கதவம் தட்டித் திறவாயோ
தத்தம் உனக்கே உயிர்.

#
நகரத்து நடுத்தரவர்க்கப் பெண்ணின் சராசரி வாழ்க்கையில் காதலை உணரும் தருணத்தைக் கண்முன் கொண்டுவரும் முத்தக் கவிதை

sim7.jpg

ஒருநூறு தோழமை நம்
உடனிருந்து உரையாட
அவரெவரும் அறியாமல்
அணைகடக்கும் அனல் முத்தம்!

இடை குறுக்கிக் காலடக்கி
மணவறையில் அமர்கையிலே
செவிமடலில் நீ சுவைத்த
சின்னதொரு சுக முத்தம்!!

#
எப்போ வருவீக?
[சும்மா பறவை முனியம்மா ரேஞ்சுக்கு… :)]

sim13.jpg

மஞ்சக் குளிக்கையிலும் மாராப்பு இழுக்கையிலும்
மார் மேல வெரல் படவும் மருகுனேன் எதுக்காக
மாமா நீ தீண்டுமுன்ன மருதமல்லி தொட்டாலும்
மாஞ்சுருவேன் மனமொடஞ்சி தெரியாதோ மன்னவனே!

கம்மா வறண்டதுபோல் கண்ணும் வறண்டுருச்சி
சும்மா இருக்குறதும் சொணமுள்ளப் போலாச்சி
அம்மா பொலம்புறா “பாதகத்தி படுபாவி
எம்மா நாளுடி நீ ஏங்கி வளிபாப்ப?”

நாளா பொழுதா நா நஞ்சித்தா நூலானேன்
தாளாமத் தாந்தெனமும் தகவலுக்கு ஏங்கி நின்னேன்
பாளாப் போன இந்த நாயித்துக் கெளமையில
ஆலாப் பறந்து நின்னேன் அரச் சொல்லு கடுதாசிக்கி

செவ்வாக் கெளமையில சேதி சொல்ல வந்துருவிய
புதங் கெளமைக்கித்தான் புதுச் சேல தந்துருவிய
வியாளக் கெளமயில வெரசாக் கைபுடிச்சு
வெள்ளிக் கெளமைக்கு வெக்கத்தத் தொரத்துவிய

சத்தம் போடாம அத்தக்கித் தெரியாம
சனிக் கெளமைக்கு சந்தைக்குக் கூட்டிப்போயி
முத்து வளவியும் மூணு மொளம் முல்லப் பூவும்
மீசக்குள்ள சிரிச்சிக்கிட்டே முளுசாத் தருவீக

வாரம் முச்சூடும் வளிமறந்து தொலச்சிப் புட்டு
வேதனையில் வெளக்கேத்திப் பொழுத ஓட்டிப் புட்டேன்
வேதனயத் தெரியுமா வெட்டிப் பய வாரத்துக்கு
வந்துருச்சு மறுபடியும் நாயித்துக் கெளமை மட்டும்!

[மேற்படி ‘எப்போ வருவீக?!” கவிதைக்கு ‘வெரசா வந்துடுவேன்’ என்று எசப்பாட்டு படித்தவர் மரத்தடி ஓனர் குமரேசன்.

வளிபாக்கும் ராசாத்தி மனசொடிஞ்சி போகாத
ஆத்தா பொலம்புறா’ன்னு தெனந்தோறும் வேகாத
வெரசா நான் வந்துடுவேன், வேதனையத் தீர்த்துடுவேன்
உம்மடிமேல படுத்து மீசைக்குள்ள தான் சிரிப்பேன்..

மார்மேல படுத்ததை நெனச்சி ராவெல்லாம் போயாச்சி
மறுபடியும் எப்ப நடக்குமின்னு மனசெல்லாம் கனவாச்சி..
இந்த ஏக்கம் சீக்கிரமா தீர்ந்திடுமே-வெட்டி பய
வாரம் முழுசும் வெள்ளிக்கெழமையா ஆயிடுமே..

எல்லாக் கிழமைகளையும் கவிதாயினி குறிப்பிட்டாலும் கவிஞர் வசதியாக வெட்கம் தொலைத்த வெள்ளிக்கிழமையை மட்டுமே வாரம் முழுவதும் வேண்டுமென்கிற குசும்பை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அதுசரி! ஆனால் அன்னார் 29 ஜனவரி 2007 அன்று தான் திருமணம் செய்திருக்கிறார். [இவ்வளவு வெரசாவா?:)))] வாழ்த்துகள் கும்ஸ்!]

#
பற்றிக் கொள்ளவேணும்
 
புதுக்கவிதையில்

sim8.jpg

மிகநீண்ட பொருளற்ற ஊடல்களின் முத்தாய்ப்பாய்
கோபங்கூத்தாடக் குரல் கமறும் போதுகளிலும்
கருவங்குறையாமலே
காதலையமிழ்த்தித் தேய்ந்து மறையும்
நலவிசாரிப்புகள்

ப்ரியா மரத்தடி தாண்டி அறியப்படவில்லை அல்லது மரத்தடியிலேயே கூட புதிதாக வந்த பலர் அறியாதவராகவும், தொடர்ந்து எழுதாதவராகவும் இருப்பதில் எனக்கு அதிக வருத்தம்.

கடைசியாக, புதுக்கவிதையில் கழிவிரக்கமா இல்லையா என்று இனம்பிரிக்க முடியாத யதார்த்தக் கவிதையுடன், ஒரு பெருமூச்சையும் விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம்; அல்லது நாமும் இந்த  எழவெடுத்த சுழலில் சிக்கிக் கொள்ளலாம். 😦

#
சுழல்

sim92.jpg

கண்ணோரச் சாடைகளும்
இறுக்கிப் பிணைத்த விரல்களும்
தெரிவிக்க முயன்ற
அருகாமைக்கான விழைவுகளை
உணராமலே போன நாட்களில்
உயிர்விட்டது
நுண்ணிய வெளிப்பாடுகளுக்கான முனைப்பு

எதிர்பார்ப்பும் காதலும்
குழைத்துப் புனைந்த எனது சொற்கள்
கேளாது நிராகரித்த
உன் செவிச்சுவர் மோதித்
தெறித்த ஒவ்வொரு முறையும்
ஏமாற்றத்தின் நிறமாய்ச் சாம்பி
சுயவெறுப்பு பூசிக் கொண்டது என் நேசம்

எஞ்சியிருப்பது சக பயணியென்ற
தோழமை மட்டுமேயென
ஆசுவாசித்து விலகி நின்றிட

எங்கிருந்தோ வழிதவறிய மேகம்
பொழிந்த நிமிட மழையாய்
வெளிப்படும் உன் பிரியம்
அதற்கேயான கவர்ச்சிகளோடும் நிச்சயமின்மையோடும்
ஈர்க்கிறது எனை மீண்டும்
உயிர்வாதை நிரம்பிய நாட்களின் சுழலுக்குள்

காதலர்தின 🙂 வாழ்த்துகள் ப்ரியா!!!

அப்புறம் சொல்ல நினைப்பது… :))

sim10.jpgsim.jpg

uththappam1.JPG

தேவையான பொருள்கள்:

இட்லி மாவு – 2 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடமிளகாய் – 2
தக்காளி – 2
பச்சைப் பட்டாணி – 1/4 கப்(உரித்தது)
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன்
சீஸ் – துருவியது (விரும்பினால்)

தாளிக்க – நெய் அல்லது எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

இவற்றோடு பொறுமை, பொறுமை, பொறுமை.

uthappam2.JPG

செய்முறை:

  • அதிகம் புளிக்காத இட்லி மாவில் உப்பு, ரவையைக் கலந்துகொள்ளவும். ரவை மொறுமொறுப்பைக் கொடுக்கும்.
  • வெங்காயம், குடமிளகாய், தக்காளியை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை பெரிய அளவில் துருவிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்க அஞ்சுபவர்கள் இரண்டாக மட்டும் கீறிக் கொள்ளவும். ஊத்தப்பம் இடையில் கண்ணில் பட்டால் தூர எறிந்துவிடலாம்.
  • வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.
  • நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, கொத்தமல்லித் தழையை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  • தோசைக் கல்லில் மாவை கனமாகப் பரத்தி, அதன்மேல் காய்கறிக் கலவையில் சிறிது தூவி சுற்றி நிறைய எண்ணை விட்டு, மூடிவைக்கவும்.
  • குறைந்த சூட்டில் வெகு நிதானமாக வேக வேண்டும். மூடிவைப்பதால் மேல்பகுதி காய்கறிகளும் பாதி வெந்து மாவோடு ஒட்டியிருக்கும். திருப்பும்போது பிரச்சினை தராது.
  • 3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு, மீண்டும் சுற்றி எண்ணை விடவும்.
  • இந்தப் பக்கத்தையும் 3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் மூடி வேகவைத்து, திருப்பிப் போட்டு, மூடியில்லாமல் ஒரு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

uththappam4.JPG

* அதீதப் பொறுமையும், பொழுதைப் போக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் சமாளிக்கலாம். அநேகமாக காலை 4.30 மணிக்கு கூள மாதாரி படித்து இலக்கியம் வளர்த்தது நானாகத் தான் இருக்கும்.

* மேலே அங்கங்கே தக்காளி கெட்சப் போட்டு, துருவிய சீஸ், மிளகுத் தூள் (அல்லது பீட்ஸா மசாலா)தூவினால் பீட்ஸாவிற்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் இருக்கும்.

* காய்கறிகளை மொத்தமாக மாவில் கலந்தும் செய்யலாம். இது செய்வது சுலபம். 

* முதலில் செய்பவர்கள் கொஞ்சம் சிறிய சைஸ் ஊத்தப்பங்களாக முயற்சி செய்யலாம்.

* அதிகம் எண்ணைவிட்ட அந்த மொறுமொறுப்பான ஊத்தப்பம் கனமான இரும்பு தோசைக் கல்லிலேயே சாத்தியம்.

uththappam5.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார்.

மேலே தோசை மிளகாய்ப் பொடி தூவிச் செய்தால், தனியாக தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. அல்லது தயிர் தொட்டுக் கொள்ளலாம். ஃப்ளேவர் பிரமாதமாக இருக்கும்.

uththappam6

அடுப்பில், பணியாரக் குழியில் சிறிது எண்ணை விட்டு, மிஞ்சிய 2 கரண்டி காய்கறி-ஊத்தப்பக் கலவையில் பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள் கலந்து குழிகளில் விட்டுச் செய்தது இன்னும் சுவையாக இருந்தது.

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…  

# நமது வெளித் தோற்றத்துக்கு மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, ஒரு பிரச்சினை என்று வருகிறவரை உள்ளே என்னென்ன ரகளை நடக்கிறதென்றே தெரியாமல் இருந்து விடுகிறோம். உள் உறுப்புகள் வேலை செய்வதைப் பற்றி படிக்கும்போதெல்லாம், ‘அப்ப இதெல்லாம் நமக்குள்ளயும் சரியா நடக்குதா அன்றாடம்?!’ என்று [மூளையும் சேர்த்து தான் :)]மலைப்பாக இருக்கும். கூடவே கடவுளுக்கு நன்றி சொல்லவும் மறப்பதில்லை. சும்மா சமையல் குறிப்பாக எழுதித் தள்ளி, சமைத்து உள்ளே தள்ளினாலும், இந்த வயித்தெரிச்சலைப் பற்றி நினைத்தே பார்த்ததில்லை. பசங்க பரவாயில்லை, கலக்கறாங்க பதிவில். மொத்தமாகவே நல்ல வலைப்பதிவும் கூட.

#

All of those numbers are up 20-30% from last month, so we’re really excited about how things are going.

நான் வலைபதிய ஆரம்பிச்ச ஒரே காரணத்தால தான் இந்த மாசம் இப்படி ஆகிப்போச்சா? ரொம்பப் புகழாதீங்க Matt. எனக்கு ஜல்ப்பாயிடும்.

# நான் கூட ஏதோ நவீன கவிதையோ என்று நினைத்து தான் படிக்க ஆரம்பித்தேன். பார்த்தால் அதிகம் இல்லை ஜெண்டில்மேன், சின்ன விருந்துதான் என்று சொல்லி வியர்க்க வைக்கறார். படம் போட்டால்தான் ஒத்துக்கொள்வோம் என்று ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் போட்டால் என்ன?

# “முதுகுல மச்சம் இருக்கா, ரொம்ப அதிர்ஷ்டமா இருப்ப!”, “அவிட்ட நட்சத்திரம்; தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்!”, “அப்பா ஜாடையா இருந்தா அதிர்ஷ்டம்தான்!” இப்படி எல்லாம் சும்மா மற்றவர்கள் நம்மைத் தட்டிவிட்டால் அதைக் கேட்டு எப்படி நமக்கு நாமே புளகாங்கிதம்(?!) அடைய முடியுமோ- அடையத் தேவை இல்லையோ- அந்த மாதிரிதான் இதற்கும். நம் முதுகை நாமே அவ்வப்போது தட்டிக்கொள்ள வேண்டியதுதான். அதற்காக இப்படியா? ரொம்ப ஓவர்.

வீட்டு மூலிகை தோட்டக் கையேடு– பாரதம் ஆரோக்கியமான தேசமாக உருவாக இந்தக் கையேடு பயனளிக்கும் என நம்பலாம் என்று சொல்கிறார். நல்ல யோசனைதான். எங்கள் ஒன்றுவிட்ட பெரியம்மா ஒருவர் மாதுளை மரத்தை ஊன் இருக்க உயிரை எடுத்துவிடுவார். அத்தனையும் மருந்து என்று சொல்வார். உண்மைதான் போலிருக்கிறது. எத்தனை மரங்கள் நடுகிறோம் என்பதோடு என்னென்ன மரம், செடிகள் நடுகிறோம் என்பதற்கும் கூட ஒரு செக் வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த பக்கம் »