ஜனவரி 2007
Monthly Archive
திங்கள், ஜனவரி 29, 2007
தேவையான பொருள்கள்:
உருளைக் கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் (பெரியது) – 4
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
- உருளைக் கிழங்கை வேகவைத்து, உரித்து, உதிர்த்தோ, சிறு துண்டுகளாக நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டை பொடியாகவும் பச்சை மிளகாயை குறுக்கே நீளவாக்கிலும் அரிந்துகொள்ளவும்.
- வெங்காயத்தைப் பொடியாக, ஆனால் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.
- வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- தொடர்ந்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும். நிறம் மாறக் கூடாது.
- வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- கொஞ்சம் தளர்வான கூட்டாக, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.
* ஒட்டாமல் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிலர் கடலைமாவு கரைத்து விடுவார்கள். சுவையைக் கெடுக்கும். கொஞ்சம் அதிலிருக்கும் உருளைக் கிழங்கையே எடுத்து மசித்து விட்டுக் கொதிக்க விடலாம். சூடாக இருப்பதை விடவும், ஆறியதும் கூட்டு அதிகமாக இறுகும் என்பதை நினைவில் வைக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சப்பாத்தி, பூரி, தோசை
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஜனவரி 29, 2007
தேவையான பொருள்கள்:
புதினா – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 4 (விரும்பினால்)
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணை – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- புதினாவை, இலைகளை மட்டும் ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும்.
- இஞ்சி, புதினாவைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
- மிக்ஸியில் வதக்கிய கலவை, உப்பு, புளி, உரிந்த சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து கெட்டியாக அரைத்து உபயோகிக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இட்லி, தோசை, சமோசா, போண்டா, வடா பாவ்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஜனவரி 29, 2007
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 3 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
கொத்தமல்லிச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி அல்லது புதினாச் சட்னி
உருளைக் கிழங்கு மசாலா.

செய்முறை:
- அரிசிகளைத் தண்ணீரில் ஊறவைக்கவும். உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தைத் தனியாக ஊறவைக்கவும்.
- நான்கு மணி நேரம் ஊறியபின் அரிசி பருப்புகளை தனித் தனியாக மிக மென்மையாக நுரை ததும்ப அரைத்து எடுக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துவைத்து, முழு இரவும் பொங்க விடவும்.
- தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை நடுவில் ஊற்றி, மெல்லிதாக வட்டமாகப் பரத்தவும்.
- தோசையைச் சுற்றியும் நடுவிலும் எண்ணை விட்டு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
- நன்றாக முறுகலாக வெந்ததும், திருப்பிப் போடவும்.
- இந்தப் பக்கத்தை சில நொடிகள் மட்டும் வேகவைத்து மீண்டும் திருப்பிவிடவும்.
- நடுவில் மேலே குறிப்பிட்டுள்ள சட்னிகளில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் எடுத்து வட்டமாகப் தேய்த்து, அதன்மேல் உருளைக் கிழங்கு மசாலா ஒரு கரண்டி வைத்து மூடிப் பரிமாறவும்.

* சப்பாத்தி, பூரி, தோசைக்கு தனியாகத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது சற்று தளர்வாக இருக்கவேண்டும். இந்தக் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் தோசையின் உள்ளே வைப்பதென்றால் மிகவும் இறுக்கமாக, தண்ணீர்ப் பசை இல்லாதவாறு மசாலா இருக்குமாறு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஜனவரி 29, 2007
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மைதா – 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை, டால்டா/நெய் – தேவையான அளவு
செய்முறை:
- அரிசிகள் இரண்டையும் தண்ணீரில் 3 மணிநேரம் ஊற வைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து, தனியாக ஊறவைக்கவும்.
- அரிசி, பருப்பை தனித் தனியாக நைசாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மைதாவையும் கலந்து 6,7 மணி நேரம் எடுத்துவைக்கவும்.
- பொங்கியிருக்கும் மாவில் மேலும் நீர் சேர்த்து தளர இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
- தோசைக் கல் காய்ந்ததும் மாவை நடுவில் விட்டு, மிக மெல்லிய தோசைகளாகப் பரத்தவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
- எண்ணையோடு டால்டா/நெய் கலந்து, தோசையைச் சுற்றிலும், நடுவிலும் விடவும்.
- ஒரு மூடியால் மூடிவிடவும். (இப்போது தோசைக்கு மூடி கடைகளில் கிடைக்கின்றன.)
- நன்கு ரோஸ்ட் ஆக வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். திருப்பிப் போடத் தேவை இல்லை. கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
* ஒவ்வொரு தோசைக்கு மாவு விடும் முன்பும் சிறிது நீர் தெளித்தோ அல்லது ஈரத் துணியால் கல்லைத் துடைத்துவிட்டுச் செய்தால் சரியாக வரும்.
* இந்த முறைக்கு தோசைக் கல் கனமானதாக இருக்க வேண்டும். இரும்புக் கல்லில் செய்தால் சுவையாக இருக்கும். நான்-ஸ்டிக் பரவாயில்லை.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இங்கே
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஜனவரி 29, 2007
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
பச்சரிசி – 1 1/2 கப்
முழு உளுத்தம் பருப்பு – 1 கப் (தோல் நீக்கியது)
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
செய்முறை:
- அரிசிகள், வெந்தயம், பருப்பை ஒன்றாக 4 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- கிரைண்டரில் அவ்வப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிக மிக மென்மையாக, மாவில் கொப்புளங்கள் வரும்வரை அரைக்க வேண்டும்.
- அரவை முடிக்கும்போது உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிடவும்.
- மாவை கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- இந்த மாவில் அடுத்த அரைமணி நேரத்தில் தோசை செய்யலாம். அல்லது ஒரு 6,7 மணி நேரங்கள் வெளியே வைத்து, மாவைப் பொங்கவைத்தும் செய்யலாம்.
- தோசைக் கல்லை சூடாக்கி, மாவை நடுவில் விட்டு, சுற்றி மெல்லிய வட்டமாகப் பரத்த வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
- சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, சிவந்ததும் திருப்பிப் போட வேண்டும். சுலபமாகத் திருப்ப முடியும்.
- அடுத்தப் பக்கம் அதிக நேரம் வேகத் தேவை இல்லை. இதற்கு, கல்தோசை என்று பெயர். கொஞ்சம் மொறுமொறுப்பாக வரும்.
* மொறுமொறுப்பில்லாமல் கொஞ்சம் சாஃப்டான தோசை தேவை என்றால் பச்சரிசியை அதிகரித்து புழுங்கலரிசியைக் குறைத்தோ (2:1) அல்லது முற்றிலும் பச்சரிசி மட்டுமே உபயோகித்தோ செய்யலாம். இதற்கு மெதுதோசை என்று பெயர். பச்சரிசி தோசை ஸ்பான்ச் மாதிரி இருக்கும்.
* தோசைக்கான அந்தச் சிவந்த நிறத்தை, வெந்தயம் தருகிறது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, புதினாச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார், தக்காளிக் கொத்சு, இட்லி(தோசை) மிளகாய்ப் பொடி, உருளைக் கிழங்கு மசாலா.
“எல்லாவற்றுள்ளும் இனிய பேரனுபவும் ஒன்று இருப்பதை உணர்ந்தவருக்கு ஒரு நாள் என்பது ஒரு பரிசு. உணவில் அவருக்கு வெறி இல்லை, ஆனால் சாப்பிடும்போது ரசித்துச் சாப்பிடுவார். தோசை அவருக்கு மிகமிகப் பிடித்தமானது. தோசைக்கு கீரை மசியலும் கெட்டித் தயிரும் தொட்டுக்கொள்வதைத் தான் என்னால் கடைசிவரை ஏற்கவே முடியவில்லை.”
இந்த மேட்ச் ஃபிக்சிங் குறிப்பு, யார், யாரைப் பற்றி, எங்கே சொன்னது? :))
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
ஞாயிறு, ஜனவரி 28, 2007

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…
# என்னை மாதிரி தொலைக்காட்சி சீரியல் பார்க்காம, ப்லாக் படிச்சுட்டு மட்டும் தூங்கப் போனா ஒன்னும் தப்பில்லையே? 🙂 சுருக்கமா சொல்லியிருந்தாலும் சரியாச் சொல்லியிருக்காரு.
# நிர்மலா, உஷாவின் கேள்விகளுக்கு இங்கே ஒருவேளை பதில் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்தப் பதிவும் கல்வெட்டின் பின்னூட்டமும் ஒருமுறை கவனிக்கப் பட வேண்டியவை. நன்றி இருவருக்கும்.
# தேள் கொட்டினாலும் கவலையில்லை; தேனீ கொட்டினாலும் கவலையில்லை! வெங்காயம்!!
# காலை எழுந்தவுடன்….
# மினீம்ம்மா! அந்தப் பாத்திரம் தேய்க்கற ப்ரஷ்ஷை ஒருக்கா மைக்ரோவேவ் அவன்ல வெச்சு எடுத்துட்டு, தேய்ப்பியாம்! 🙂
# …… being real and considerate and reciprocal, by not leaving empty (fake) comments, or letting statistics be my goal, by not over-participating or spending TOO much time on my blog but taking good care of my family instead, by being honest and discreet, by not posting pointless posts but providing good information, I want to be a good witness to those who find me here….
Bloggingல 13 விஷயம் சொல்றேன், கேட்டுக்கோன்னு விட்டு சுழட்டியிருக்காங்களே… இவ்ளோ யோசிக்க வேண்டியிருக்கா? போன மாசம் இந்த நாளைக்கு சமத்தா ஃப்ரீயாத்தானே இருந்தேன், ஆழம் தெரியாம காலை விட்டுட்டனா? :(( போதும் இந்த வாரத்துக்கு; நிறுத்திக்கறேன்.!!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஜனவரி 23, 2007

இன்று பஞ்சமி திதி. இதை வங்காளிகள் வசந்த பஞ்சமி அல்லது ஸ்ரீபஞ்சமி என்று சொல்லி, சரஸ்வதிக்கு பூஜை செய்கிறார்கள். எங்கள் வளாகத்தில் எல்லா வங்காளிகளும் பேசிவைத்துக் கொண்டு ஒரே இடத்தில் பிரம்மாண்டமாகக் கொண்டாடினார்கள்; கொண்டாடுகிறார்கள்.
வளாகத்தில் இருக்கும் அத்தனை குழந்தைகளும் வந்து சரஸ்வதியை வணங்கிவிட்டுப் போகிறார்கள். நம்மைப் போல் அவரவர் வீட்டுக்குள் செய்துகொள்வதைவிட இது அருமையாக இருக்கிறது.
இன்று எனக்குப் பிடித்த ஒரு பெங்காலி ஸ்வீட்..
தேவையான பொருள்கள்:
பசும்பால் – 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 1/2
சர்க்கரை – 400 கிராம்
கோவா – 50 கிராம்
மைதா – 25 கிராம்
செய்முறை:
- ஒரு லிட்டர் பாலில் பனீர் தயாரித்து, உதிர்த்துக் கொள்ளவும்.
- இந்த உதிர்ந்த பனீருடன் மைதா மாவைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரே அளவாக 15 உருண்டைகளாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு உருண்டையையும் சுமார் 4 செ.மீ நீளமகாவும், 1 1/2 செ.மீ அகலமாகவும் உருட்டி வைத்துக் கொள்ளவும். (கடைகளில் இதன் வடிவத்தைப் பார்த்திருப்போம்.)
- சர்க்கரையுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, கொதிக்கும்பொழுது 2 டேபிள்ஸ்பூன் பாலை விடவும். இதனால் சர்க்கரையில் இருக்கும் அழுக்குகள் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அவற்றை நீக்கிவிடவும். (எப்பொழுதும் சர்க்கரையை சுத்தப்படுத்த இதுவே வழி.)
- இப்போது கொதிக்கிற பாகில் ஒவ்வொரு உருண்டைகளாக, மெதுவாகப் போட்டு மேலும் அரை மணி நேரம் கொதிக்க விடவும்.
- கீழே இறக்கியபின் ரோஸ் எசன்ஸ் சேர்த்து, ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைத்திருக்கவும்.
- கோவாவை கேரட் துருவியில் துருவி எடுத்துக் கொள்ளவும்.
- ஃப்ரிட்ஜிலிருந்து சம்சம்’மை வெளியே எடுத்து, பாகிலிருந்து ஒவ்வொரு சம்சம்’மாக எடுத்து கோவாத் துருவலில் புரட்டி, ஒரு தட்டில் அடுக்கிவைக்க வேண்டும்.
- மீண்டும் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஜனவரி 23, 2007
பனீர் தயாரிக்கும் முறை
தேவையான பொருள்கள்:
பால் – தேவையான அளவு
எலுமிச்சை – 1
(அல்லது)
வினிகர் – 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:
- தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தில் காய்ச்சவும்.
- பால் பொங்கிவரும்போது வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து மேலும் ஒரு நிமிடம் கிளறவும்.
- பால் திரிந்து கட்டியும் தண்ணீருமாகப் பிரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ஒரு தூய்மையான மஸ்லின் துணியில் அல்லது பனீர் ஸ்ட்ரெய்னரில் கலவையைக் கொட்டி, வாயைக் கட்டி, வடிகட்டுவது போல் தொங்கவிட வேண்டும்.
- இரண்டு மூன்று மணிநேரத்தில் மொத்த நீரும் வடிந்து, உள்ளே இருக்கும் திடப்பொருளே பனீர். தேவைப்பட்டால், கையால் அழுத்திப் பிழிந்தால் மிச்சமிருக்கும் நீரும் வெளியேறிவிடும்.
- பனீர் உதிரியாக உபயோகிக்கவிருக்கும் இடங்களில் இப்படியே உபயோகிக்கலாம்.
- துண்டுகளாகப் பொரிக்க வேண்டிய உணவுப் பொருள்களுக்கு, வடிக்கப்பட்ட பனீரை மேலும் ஒரு மணி நேரம் கனமான பாத்திரத்திற்கு அடியில் வைத்திருந்து எடுக்கவேண்டும். [குக்கரில் நீர் நிரப்பி அதை பனீர் சுற்றியிருக்கும் துணியின் மேல் அழுத்தி வைப்பது சுலபமான முறை. :)]
- இந்த இறுகிய பனீரை தேவையான அளவில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம்.
* பனீர் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.
* வடிகட்டிய நீரை கடலைமாவுடன் சேர்த்து ஃபேசியலாக உபயோகிக்கலாம் என்பது இந்தப் பதிவுக்கோ எனக்கோ சம்பந்தமில்லாத ‘அழகு’க் குறிப்பு. 🙂
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஜனவரி 22, 2007
Lonavala என்ற மலைவாசஸ்தலம் மும்பையிலிருந்து சுமார் 100 கிமீ தூரத்தில், இருக்கிறது.
அது எவ்வளவு பெருமை பெற்றதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். நமக்குத் தேவையானதை(தின்பண்டம் தான்; வேறென்ன?) மட்டும் நாம் பார்ப்போம். கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு பெயர் பெற்றதுபோல் இந்த மலைவாசஸ்தலம் சிக்கி(Chikki)க்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. ஊர் முழுவதும் சிக்கி கடைகள் தான். ஒரிஜினல் வேர்க்கடலை சிக்கி தவிரவும் விதவிதமான வகைகளில்- Coconut chikki, Til Chikki, Kaju Chikki என்று சிக்கி’கள் கிடைக்கின்றன.
இனி…

தேவையான பொருள்கள்:
வேர்க்கடலை – 4 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 3 கப்
அரிசிமாவு – சிறிது
செய்முறை:
- வேர்க்கடலையை வறுத்து, தோல்நீக்கி, ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
- ஒரு சுத்தமான பலகை அல்லது சமதளத்தை, அரிசிமாவு தூவித் தயாராக வைக்கவும்.
- ஒரு வாணலியில், உடைத்த வேர்க்கடலை எவ்வளவு இருக்கிறதோ, அந்த அளவு சர்க்கரையைப் போட்டு சூடாக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.
- அடுப்பை மிக நிதானமாக எரியவிட வேண்டும். சர்க்கரை கருகாமல் பார்த்துக் கொள்ளவும்.
- அடுப்பில் இருக்கும் சர்க்கரையை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
- சர்க்கரை மெதுவாகத் தளர்ந்து, கட்டிக் கட்டியாகி, பின் உருக ஆரம்பிக்கும்போது நெய்யை விடவும்.
- சர்க்கரை முழுவதும் நன்றாக உருகியதும் உடைத்த கடலையைப் போட்டு, ஒரு கிளறு கிளறி உடனே அடுப்பை அணைத்து, கையோடு மாவு தூவிய பலகையில் கொட்டவும்.
- அப்பளக் குழவியில் சுற்றிலும் சிறிது நெய் தடவிக் கொண்டு, துரிதமாக அப்பளம் மாதிரி இட்டு, முடிந்தவரை பரத்த வேண்டும்.
- இனி பரத்த முடியாது என்ற நிலையில், சூட்டோடு கத்தியால் கோடுகள் போட்டு, ஆறியதும் வில்லைகளாக எடுத்துவைக்கவும்.
* சர்க்கரையை உருகவைக்கும் நேரத்தில் மிக நிதானமாக செயல்பட வேண்டும். அடுப்பை சிம்’மில் வைத்து மட்டுமே செய்வது நல்லது. சர்க்கரை கருகினால் கசந்துவிடும்.
* சர்க்கரை உருக ஆரம்பித்ததிலிருந்து, மிகத் துரிதமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கியைப் பரத்துவதோ, வில்லைகள் போடுவதோ இயலாமல் சிக்கி கடினப்பட்டுப் போய்விடும்.
-0-
“எனக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்கும்; அதோட விலைதான் பிடிக்காது” என்று எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைக் கொண்டு போய் மஹாபலேஷ்வரில் நிறுத்தினால்.
ஊரெங்கும் Strawberry Farms…

ஊரில் இறங்கியதுமே பழமாக வாங்கிவைத்துக் கொண்டது போதாது என்று, Ice-Cream, Milkshake, Juice, Crushes என்று கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளியது போதாது என்று நம்ப Mapro Foods ஃபாக்டரியை ஒட்டி பெரிய விற்பனைத் தளம் வைத்திருக்கிறார்கள். ஊரிலேயே கிடைக்குமென்றாலும் வந்த பெருமைக்கு ஒரு Jamஆவது வாங்கலாம் என்று போனால், We accept Credit Cards என்று போர்டு போட்டுக் கொண்டு விற்றுத் தள்ளுகிறார்கள். அவ்வளவுக்கெல்லாம் இங்கு வாங்க என்ன இருக்கப் போகிறது என்று யோசித்தால், மக்கள் கார்டை தேயோ தேய் என்று தேய்க்கிறார்கள். எனக்கு இந்த இனிப்பு சமாசாரம் எல்லாம் பிடிக்காதென்பதால் நம்மாள் கார்டுக்கு ஒன்றும் பழுதில்லை. 🙂 ஆனாலும் என்னவோ ஊரிலிருந்து வந்தபின்னும் ஒரு வாரத்துக்கு “ஸ்ட்ராபெரி வீடேஏஏ…” என்று வீடே மணத்துக் கொண்டிருந்தது.

இது என்னவா? அம்மா அப்பா தவிர எல்லாமே ஸ்ட்ராபெரி ஃப்ளேவர்ல கிடைக்கற ஊர்ல… ஸ்ட்ராபெரி சிக்கிதான்.:))))
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
திங்கள், ஜனவரி 22, 2007

அது என்ன, சமையல் குறிப்புகள் பதிவில் சுஜாதா பற்றி என்று கேட்கலாம். இலக்கியம்(தான்) காலத்தின் கண்ணாடியாமே. சாப்பாடெல்லாம் இல்லையாமே! 🙂 அதனால் எந்தக் காலத்தில் இந்தக் குறிப்புகளை எல்லாம் எழுதினேன் என்று தெரிந்துகொள்வதற்காக அல்லது இதை எல்லாம் எழுதிய காலத்தில் என்னவெல்லாம் இலக்கிய உலகில் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவ்வப்போது இதுபோன்ற சுட்டிகள் தருவதாக எண்ணம். சொந்தமாக எதுவும் எழுதப்போவதில்லை என்பதால் இலக்கியவாதிகள் அஞ்சேல்!!
என்றாலும் இலக்கிய(த்தரமான) சுட்டிகளைக் கொண்டுள்ளதால் என் வலைப்பதிவும் ஒரு இலக்கியப் பதிவே என்ற அங்கீகாரத்தைத் தருமாறு இலக்கியவாதிகளை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 🙂
சாதாத் தமிழன் குமுதத்தில் படித்துவிட்டு அப்படியே குடும்பக் கவலைகளில் மறந்துபோகப் போகிற ஒரு சாதாரண கதையை எப்படி வலைப்பதிவுத் தமிழர்கள் சுற்றிச் சுழற்றி அடிக்கிறார்கள் என்று என் வலைப்பதிவு சாராத(‘பால்மணம் மாறாத…’ என்று படித்தாலும் சரியே!) நண்பர்களுக்கு எடுத்துச் சொல்ல–
சொன்னாலும், ‘அப்படியா? amazing! unbelievable!! sounds absurd!! அது ஒரு சாதா கதையாச்சே, என்ன கதை, நானும்கூட படிச்சேன் மறந்திடுச்சு.. அவுட்லைன் சொல்லு.. உன் பொழுது இப்படித்தான் வெட்டியா போகுதா?” என்று நம்பாமல் ஆங்கில வார்த்தைகளை எடுத்துப் போட்டு, அதிகமாக அலட்டித் தோள்குலுக்கும் அரசியல் தெரியாத/ புரியாத அப்பாவிகளுக்கு–
“பொதுவா அங்க என்னதான் பேசுவீ(வா)ங்க, எனக்கும் aggregators link (திரட்டி, சுட்டின்னெல்லாம் அவங்க சொல்ல இன்னும் காலம் ஆகும்.) குடேன்!” என்று ஆர்வமுடன் கேட்பவர்களுக்கு/ இனியும் கேட்கப் போகிறவர்களுக்கு ஒரு curtain raiser ஆக–
இந்தப் பதிவு சமர்ப்பணம். _/\_
இனி சுட்டிகள் வேட்டை…
Original Sujatha story:
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-01-03/pg23.php
or
http://kuilbala.googlepages.com/sujatha
11/01/2007
http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_11.html
http://kuzhali.blogspot.com/2007/01/blog-post_116857732000747315.html
12/01/2007
http://adhvaithi.blogspot.com/2007/01/blog-post_12.html
13/01/2007
http://karaiyoram.blogspot.com/2007/01/blog-post.html
14/01/2007
http://potteakadai.blogspot.com/2007/01/blog-post_14.html
15/01/2007
http://snakebed.blogspot.com/2007/01/blog-post.html
http://govikannan.blogspot.com/2007/01/blog-post_16.html
http://sivacalgary.blogspot.com/2007/01/blog-post_14.html
http://sivacalgary.blogspot.com/2007/01/blog-post_15.html
http://saathveegan.blogspot.com/2007/01/3007.html
http://mugamoodi.blogspot.com/2007/01/blog-post.html
16/01/2007
http://madippakkam.blogspot.com/2007/01/blog-post_16.html
http://poar-parai.blogspot.com/2007/01/blog-post_16.html
http://penathal.blogspot.com/2007/01/blog-post.html
http://chinnavan.blogspot.com/2007/01/blog-post.html
17/01/2007
http://valai.blogspirit.com/archive/2007/01/17/sujatha.html
http://nunippul.blogspot.com/2007/01/blog-post_16.html
http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_17.html
http://vinmathi.blogspot.com/2007/01/blog-post_17.html
http://ullal.blogspot.com/2007/01/blog-post_17.html
18/01/2007
http://naagariika-naadoodi.blogspot.com/2007/01/blog-post_18.html
22/01/2007
http://theyn.blogspot.com/2007/01/blog-post_22.html
https://mykitchenpitch.wordpress.com/2007/01/22/sujatha-vaaththiyaar/ 🙂
16/02/2007
http://saral.wordpress.com/2007/02/16/சுஜாதாவின்-சுயசாதிப்-பற்/
சு.ரா வின் கதைக்கு வந்த எதிர்வினைகளை எல்லாம் ஒரு புத்தகமாக்கி இருக்கிறார்களாமே, அந்த வகையில் சுஜாதாவின் கதைக்கு வந்த எதிர்வினைகளின் தொகுப்பு என்பதால் இந்தப் பதிவு ஒரு மின்னூல். 🙂
எல்லோரும் வாத்தியார் வாத்தியார் என்று சொல்லிக் கொண்டிருந்த போதெல்லாம், ‘யார் வாத்தியா? யாருக்கு வாத்தியார்? அவரால முடிஞ்சா என்னை ஒரு கதை எழுதவைக்க முடியுதான்னு பாக்கட்டுமே!” என்று சவடால் பேசியிருக்கிறேன். ஆனாலும் என்னுடைய சமையல் குறிப்புப் பதிவுக்கு இலக்கிய அந்தஸ்து தந்தவரே… ஒரு சாதாக் கதையை அதுவும் குமுதத்துக்கு எழுதி, இத்தனை பேரை எசக்கதை எழுத வைத்த சுஜாதா சாரே! நான் ஒத்துக் கொள்கிறேன்… நீரே வாத்தியார்!!!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வெள்ளி, ஜனவரி 19, 2007
தேவையான பொருள்கள்:
அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், தடியங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, புடலை, சேனை, முருங்கை, வாழை, காராமணிக் காய், உருளைக் கிழங்கு….
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காயெண்னை, கடுகு, கறிவேப்பிலை
மசாலா அரைக்க:
தேங்காய்த் துருவல் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை:
- மேலே கூறியுள்ள காய்களில் குறைந்தது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வகைக் காய்களை உபயோகிக்கலாம்.
- காய்களைக் கழுவி, 2 இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
- மசாலா சாமான்களை நெய்யில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, வெந்த காயில் கொட்டிக் கொதிக்கவிடவும்.
- புளி வாசனை அடங்கியதும் அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து சிறு தீயில் அடிப் பிடிக்காமல் குழம்பு, கூட்டு போல் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
- தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் கலந்த சாதம், மஞ்சள் பொங்கல்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வெள்ளி, ஜனவரி 19, 2007
1)

தேவையான பொருள்கள்:
பெரிய கத்திரிக்காய் – 1 (250 கிராம்)
புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 4,5
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க:
காய்ந்த மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- உள்ளே பூச்சி இல்லாத கத்திரிக்காயை எடுத்துக் கொள்ளவும்.
- சுற்றிலும் நன்றாக நல்லெண்ணையைத் தடவிக் கொள்ளவும்.
- அடுப்பை சிம்’மில் வைத்துக் கொண்டு மெதுவாக கத்திரிக்காயை பர்னர் மேலேயே வைத்து வாட்டவும்
- காம்பைப் பிடித்து ஒவ்வொரு பகுதியாகத் திருப்பி திருப்பி, கத்திரிக்காய் முழுவதும் காய்ந்து, தோல் கருகும் அளவுக்கு மெதுவாகச் சுட வேண்டும். (கத்திரிக்காயைச் சுடுவது, கரிபோட்டு எரிக்கும் கும்முட்டி அடுப்பில் இன்னும் சரியாகவும் சுவையாகவும் வரும்…. ஹூம்!)
- சுட்டு முடித்ததும் ஆறவைத்து, மெதுவாக மேல்த் தோலை உரிக்கவும். சுலபமாகக் கழண்டுவிடும்.
- தோலுரித்த கத்திரிக்காயை மேலாக, மென்மையாக, காம்பைப் பிடித்துக் கொண்டு, தண்ணீரில் கழுவவும். ஒட்டிக் கொண்டிருக்கும் கருத்த தோல்பாகங்கள், கருப்புத் துகள்கள் இருந்தாலும் இந்த முறையில் நீக்கிவிட வேண்டும்.
- இப்போது கத்திரிக்காயின் காம்புப் பகுதியையும் வெட்டி நீக்கிவிடவும்.
- ஒரு பாத்திரத்தில், சுட்ட கத்திரிக்காய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயைப் போட்டு கையால் நன்கு பிசையவும். [பின்னால் லேசாகக் கை எரியும். தேங்காயெண்ணை துடைத்தால் சரியாகி விடும். :)]
- புளியை மிகக் கெட்டியான பதத்தில் கரைத்துக் கொண்டு, உப்பு, கத்திரிக்காயுடன் பச்சையாகச் சேர்க்கவும்.
- எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
- மல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.
-0-
(2)

தேவையான பொருள்கள்:
பெரிய கத்திரிக்காய் – 1
அல்லது
சிறிய கத்திரிக்காய் – 100 கிராம்
பரங்கிக்காய் – சிறிய துண்டு
தக்காளி – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 15
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 2
பொட்டுக் கடலை – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 6
மல்லித் தழை – சிறிய கட்டு
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
- பெரிய கத்திரிக்காயாக இருந்தால் மேலே இருக்கும் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் சுட்டு, உரித்து மசித்துக் கொண்டு, பரங்கிக்காயை மட்டும் நறுக்கிக் கொள்ளலாம்.
- சிறிய கத்திரிக்காயாக இருந்தால், கத்திரிக்காய், பரங்கி இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- மிளகாய் மிளகு இரண்டையும் வறுத்து பொட்டுக் கடலை, புளி, கொத்தமல்லி சேர்த்து அரைத்துவைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணை சுடவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கி வைத்துள்ள காய்களை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- வெந்து கொதி வந்தபின், அரைத்து வைத்துள்ள மசாலாவும் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு, இறக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் கலந்த சாதம், இட்லி, பொங்கல் வகைகள்- முக்கியமாக மஞ்ச(ள்)ப் பொங்கல், உப்புமா வகைகள்- முக்கியமாக அரிசி உப்புமா.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வெள்ளி, ஜனவரி 19, 2007
ஆடி வெள்ளிக் கிழமை, தை வெள்ளிக் கிழமை, போகிப் பண்டிகை ஆகிய நாள்களில் இந்த மிக மிக எளிமையான மஞ்சள் பொங்கல் செய்வார்கள். வடை பாயசம் என்று விஸ்தாரமாக சமைக்க முடியாத பண்டிகை நாள்களில் கூட இதை மட்டும் செய்தால் போதும், மங்களகரமானது என்பதால், ‘கல்யாணப் பொங்கல்’ என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சிலர் குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வந்ததும் முதல் உணவாக தாய்மாமன் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு இந்தப் பொங்கலை செய்துகொடுப்பார்கள் என்பதால் ‘அம்மான் பொங்கல்’ என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை/நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- அரிசி பருப்பைக் கழுவிக் களைந்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர் வைத்துக் குழைய வேக விடவும்.
- தேங்காய் எண்ணை அல்லது நெய் கலந்து பரிமாறலாம்.
* இந்தக் குறிப்பைப் படிக்கும்போது, சாதரண சாத்ததில் நெய், பருப்பு சேர்த்து சாப்பிடுவதற்கும் இதற்கும் என்ன் வித்தியாசம் என்று நினைக்கலாம். நானும் நினைத்திருக்கிறேன். சுவை அளவில் பெரும் வித்தியாசம் இருப்பது செய்து பார்த்தால் தான் தெரியும்.
* நெய் கலந்து குழைந்த பொங்கல் சுவையாக இருக்கும். ஆனால் அதைவிட தேங்காய் எண்ணை சேர்த்த உதிரியான பொங்கல் மிகுந்த சுவையாக இருக்கும். பொங்கல் உதிரியாக இருந்தாலும் நன்றாக மென்மையாக வெந்திருக்க வேண்டும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
கத்திரிக்காய் புளிக் கொத்சு, தாளகக் குழம்பு.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
வெள்ளி, ஜனவரி 19, 2007
தை வெள்ளிக் கிழமை என்பதால் முதலில் ஒரு எளிய பாயசம்.. 🙂
தேவையான பொருள்கள்:
கெட்டியான பால் – 1 1/2லிட்டர்
அரிசி – 100 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் – 4
பிஸ்தா – 6
பாதாம் – 4
கிஸ்மிஸ் – 20
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
- பாதாம், பிஸ்தாவை பொடிசெய்து கொள்ளவும்.
- ஏலக்காயை உரித்து, விதைகளைப் பொடி செய்யாமல், சிறிது பாலில் ஊறவைக்கவும்.
- அரிசியைக் கழுவி அரைமணி நேரம் பாலிலேயே ஊறவைத்து அதன்பின் குக்கரில் வேகவைக்கவும். பாலுடன் அரிசி வெந்து சற்றே கெட்டியான பதமாக இருக்க வேண்டும்.
- அதனுடன் மிச்சமுள்ள பால், சர்க்கரை, ஊறவைத்துள்ள ஏலக்காய், பொடித்து வைத்துள்ள பொடிகளைக் கலக்கி 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- நெய்யில் கிஸ்மிஸ் பொரித்துச் சேர்த்து, பரிமாறவும்.
* வட இந்தியப் பெண்கள் ‘வைபவ லெஷ்மி விரதம்’ என்று ஒன்று செய்கிறார்கள். முடிவுறும் வாரத்தில் பெண்களை அழைத்து விருந்து வைக்கிறார்கள். அப்போது ஆரம்பத்தில் எனக்குத் தெரிந்து அநேகம்பேர் இந்த கீர் தான் பிரசாதமாகச் செய்து கொடுக்கிறார்கள்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
செவ்வாய், ஜனவரி 16, 2007
போகிப் பண்டிகை, பொங்கல், கனுப் பொங்கல் நாள்களில் கிட்டத்தட்ட அனைத்துவிதமான நாட்டுக் காய்கறிகள், பச்சைப் பயறுகளையும் சமையலில் உபயோகித்துவிடுவோம். இப்போது காய்கறிக் கடைகளிலேயே எல்லாவற்றையும் நறுக்கிக் கலந்து தயாராகவும் கிடைக்கிறது. ஆனால் தனித் தனியாக வாங்கிச் செய்தால் நம் விருப்பப்படி தேவையான அளவுகளில் தேவையான நீளத்தில் நறுக்கிச் செய்யலாம்.
இது கனுப்பொங்கல் நாளில் செய்யப்படும் எளிமையான கனுக் கூட்டு..
தேவையான பொருள்கள்:
அவரைக்காய், கொத்தவரங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, வெண்டைக்காய், புடலை, சேனை, வாழை, காராமணிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை பட்டாணி, பச்சை மொச்சை, பச்சைக் காராமணி…
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க:
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 6-8
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- காய்கறிகளை மிகப் பெரிதாக இல்லாமல் சுமாரான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
- கடினமான பயறு, காய்கறிகளை தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, தாளிக்க மேலே சொல்லியிருக்கும் பொருள்களை அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வரவும்.
- பின்னர் கத்திரி, வெண்டை போன்ற மென்மையான காய்கறிகளைச் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
- உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்களை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- அத்துடன் குக்கரில் வெந்த காய்கறிகளையும், கரைத்து வைத்திருக்கும் புளியையும் கொட்டி, தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- பச்சை வாசனை போய், காய்கறிகளும் சேர்ந்தாற்போல் வெந்ததும், தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
- அரிசிமாவு அல்லது கார்ன்ஃப்ளோர் கரைத்துவிட்டு, கூட்டுப் பதத்தில் இறக்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
* இதில் எந்த மசாலா சாமான்களோ, மசாலாப் பொடிகளோ சேராமல் காய்கறி, பயறுகளின் சுயமான சுவையே மேலோங்கி இருக்கும் என்பதே இதன் சிறப்பு. முழுக்க நாட்டுக் காய்கறிகளாலேயே நிறைந்திருக்கும் இதில் அதிகமாக, பச்சை மொச்சை மற்றும் பச்சை மிளகாயின் வாசனையே தூக்கலாக இருக்கும்/இருக்க வேண்டும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய், பருப்புடன் கலந்த சாதம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
அடுத்த பக்கம் »