மரத்தடி குளிர்காலப் போட்டி – 2004 ற்காக எழுதியது.

பி.ச. குப்புசாமி அவர்களின் பொய் பொய் பொய் கவிதை இதை எழுத முக்கியத்  தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். (பி.ச.குப்புசாமி அவர்களின் மகன்தான் பி.கே.சிவகுமார் என்பதையும் சொல்லவேண்டுமா?)

 

ன்னமும்
முகம் பார்க்கையிலெல்லாம்
கண்ணாடி–
உன் காதல்ரசம் பிரதிபலிக்கும்
என் அழகிற்கான அங்கீகாரம் என்ற
அனிச்சையான என் தலையசைத்தலும்

என் விருப்பத் தேர்வின்
வரிசையிலெல்லாம்
என்றோ எவரெவரிடமோ
கேட்டறிந்துகொண்ட
உன் விருப்பங்களையும்

என் எண்ணங்களுக்காய்
எழுப்பப்படும் கேள்விகளிலெல்லாம்
என்னவாகவிருக்குமென்ற
உன் எண்ணங்களையும்

எட்டிப்பார்க்கும் தொட்டிலிலெல்லாம்
நம் ஆன்மத்துடிப்பிற்கான
அன்பின் முகவரியையும்

இப்படி
இருந்துகொண்டேயிருக்கின்றன
எதிர்ப்படுமெல்லாமிலும்
உனக்கான யோசித்தல்களும்
எல்லாம் வல்லவனிடம்
உன் நல்வாழ்விற்கான
என் யாசித்தல்களும்.

எட்டிய வெற்றியிலெல்லாம்
எதையும் பெரிதாய்ப் பெற்றுவிடவில்லையென்றும்
எழுந்திருக்க முடியா சோகங்களிலெல்லாம்
எதையும் பெரிதாய் இழந்துவிடவில்லையென்றும்
ஏற்ற இறக்கமில்லாச் சமவெளியிலேயே
நடத்திச் செல்கிறது
உன் இழப்பு…

வண்ண விளக்குகளால்
வாழ்க்கை ஒளிரஆரம்பித்தும்
என்றோ ஏற்றிய அகல்விளக்கின்
எண்ணெய் தீர்ந்திருக்குமோவெனெ
பதறியோடி வருகையில்

முன் வந்து, திரிதூண்டி, அங்கே
தீபம் காக்கக் கையணைத்திருக்கும்
உன் தீவிரவாதத்தில்
என் மொழியழிந்து போகிறது.

அரையிருட்டில் படபடக்கும்
ஐந்தாம் வேதத்தின் ஆகமப் பக்கங்களைப்
பார்த்ததிலேயே படித்ததாய்
பரவசப்பட்டுத் திரும்புகிறோம்
அவரவர் ஆசாரங்களுக்குள்.

காதலித்துக் கைப்பிடித்த
கதைகளைச் சொல்லி
காதலென்னும் கதகதப்பை
கடந்தகாலத்திற்குள் கழற்றி எறியாமல்

நீயை விடவும்
உன் நினைவு போர்த்தும்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
விரிந்து விரவும் மோகஉடையும்

உன் முத்தஎச்சில் தொட்டழியா
என் வெட்கப் பூச்சும்

சூடாததால் வாடாத
கைமலர்க் கண்ணியும்

தொடாததால் கெடாத
மனக்கன்னிமையும்

இருப்பை நம்பியும்
இறுதிவரை தேடிக்கொண்டே இருக்கும்
ஆத்திகனின் தேடலும்

இல்லையென்று சொல்லிக்கொண்டே
இருப்பிற்கானதாயிருக்கும்
நாத்திகனின் நடுக்கமும்

பெண்மையும் அதன் மென்மையும்
அது தாங்குமிந்த உண்மையும்

உள்ளவரையிலும் உள்ளில்
இரகசியமாய் உறங்கியிருக்குமென்றால்
இறக்கும் இறுதி நொடியிலும்
புதிதாய் விழித்திருக்குமென்றால்

கூறாமல் போனேனென்று
கோபிக்கும் உனக்கும்,
அதனால் (கை)கூடாமற்போன நம் காதலுக்கும்
கோடி நமஸ்காரம்!

[மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 ற்கு எழுதி முதல் பரிசு வென்ற கதை]

 

 ‘அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.
(– கம்பராமாயணம்.)

 

ரு நிறைந்த மனநிலையில் அந்தக் கவிதைத் தொகுப்பைப் பிரிக்க ஆரம்பித்தேன். கவிதைகளின்மேல் ஆர்வம் போய்விட்டாலும், பரிசாக வந்த புத்தகம் என்பதும், அப்பா வருகிறேன் என்று ஃபோன் செய்திருப்பதால் மதியம் தூக்கம் வராமல் இருப்பதும் புத்தகத்தைப் புரட்டக் காரணங்கள். நடுவாக ஏதோ ஒரு பக்கத்துக் கவிதையில் படிக்க ஆரம்பித்து, அங்கேயே கண் நின்றது. மேலே படிக்க ஓடாமல் ‘சீதா’ என்ற பெயரைப் பார்த்ததும் என் வாழ்வில் வந்த அசோக மரத்தின் நினவுகளை வரிசையாக என்று இல்லாமல் முன்னும் பின்னுமாய்ப் புரட்டிப் போட ஆரம்பித்தது.

====

“மஞ்சு, லாயர்ன்னு அப்ப நீ சொல்லிக்கவே முடியாதா? நீ என்ன வேலை செஞ்சிருக்கன்னு உனக்கே புரியுதா? உனக்கென்ன பைத்தியமா?” ஆதங்கத்துடன் கடைசியாகக் கேட்ட உஷாவும், “ஆனா முடிவு ஐம்பது சதம் ஏனோ எனக்குப் பிடிச்சிருக்குப்பா” சொன்ன ராஜரத்னமும் என்னிடம் புன்னகையை பதிலாக வாங்கிப் போய்விட்டார்கள். கேள்வி மட்டும் இன்னும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. அப்பாவிடம் இன்று ஒருநாள் வகுப்பில் இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு, வகுப்புக்குப் போகாமல் கல்லூரியின் அந்த நீள காரிடரின் கைப்பிடிச்சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னவோ கொஞ்சம் சந்தோஷமும் துக்கமுமாய் கலவையான உணர்ச்சியாக இருந்தது. ஸ்ரீதரன் (எனக்கு மட்டும் ஸ்ரீதர்) படிப்பு முடியும் வரையில் இருவரும் அங்குதான், கிடைக்கும் நேரமெல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். பக்கத்தில் லைப்ரரிக்கு நுழையும் அனைவருக்கும் அது ஒரு பழகிய காட்சிதான். எப்பொழுதிலிருந்து ஸ்ரீதர் வாழ்க்கையில் நுழைந்தான் என்று எத்தனையோ ஆயிரமாவது தடவையாக மீண்டும் யோசிக்க ஆரம்பித்தேன். அலுத்ததே இல்லை. கை அனிச்சையாய், கீழே விழுந்திருந்த அசோகமரக் குச்சியைத் தரையில் கீறிக் கொண்டிருந்தது.

-o-

ந்துருவிடம் அட்ரஸ் வாங்கிக்கொண்டு திருவானைக்காவலில் அந்த வீட்டின் மணியடித்தோம். உள்ளிருந்து குக்கர் சத்தமும், தொடர்ந்து அரிசியும் பருப்பும் வேகும் கலவையான வாசமும் அதையும் தொடர்ந்து துண்டில் கையைத் துடைத்துக் கொண்டே ஸ்ரீதரனும் வந்தார்கள். காலையில் புதுநபர்கள் யாராக இருக்கும் என்ற ஆச்சரியத்தை மாட்டிக்கொண்டு வந்தவன், சராசரி உயரமாய், பிராமணச் சிவப்பாய் (ஆண்கள் சிவப்பாக இருந்தால் எனக்குப் பிடிக்காது), பூசிய கன்னமாய் ஆரோக்யமாக இருந்தான். அம்மா கொடுப்பதை எல்லாம் படுத்தாமல் சாப்பிட்டுவிடுவான் போலும். அவன் புறங்கையில் ஒட்டியிருந்த கீரைத் துணுக்கு, சமையலில் உதவியாய் இருந்தான் என்பதைச் சொல்லியது. அக்ரமத்துக்குச் சமத்தாய் இருக்கிறானே என்று எரிச்சலாக நான் அந்தத் துணுக்கையே வெறிக்க, ‘அதனால் என்ன’ என்பதுபோல் எந்த அலட்டலும் இல்லாமல் அதைச் சுண்டினான். ‘நீ என்னைபற்றி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்’ என்பதுபோல் இருந்த அலட்சியம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மனதுக்குள் எதுவோ நழுவுவது போல் உணர்ந்தேன்.

‘யார்டா ஸ்ரீதர்’, எங்கோ உள்ளிருந்து மென்மையாக வந்த பெண்ணின்(அவன் அம்மா?) குரலுக்கு அதைவிட மென்மையாக ‘தெரியலை’ என்றான். எப்படி அவர்களுக்குள் பேசுவது காதில்விழுகிறது என்று தெரியவில்லை. எங்கள் வீட்டில் ரகசியமே எல்லோரும் சத்தமாகத்தான் பேசுவோம். ‘யார் வேணும்?’ என்றான் அப்பாவிடம். கேள்வியில், ‘சீக்கிரம் சொல்லுங்கள், குளித்து சந்தி செய்து சாப்பிட்டுவிட்டு காலேஜுக்குக் கிளம்பவேண்டும்’ என்பதுபோல் ஒரு கடமை அவசரம் இருந்தது.

“ஐ’யம் ரெங்கராஜன். பிஏ டு கலெக்டர். இவ என் டாட்டர். +2 முடிச்சுட்டா. லா தான் பண்ணனும்னு ஆசைப்படறா, சீட் கிடைச்சுடுத்து..” அப்பா பேச ஆரம்பித்தார். லா என்ற ஒற்றை வார்த்தைக்கு மட்டும் ஒரு பார்வையை என்மேல் வீசிவிட்டு முகத்தை மீண்டும் அப்பாவின்மேல் பொருத்தினான். எனக்கு அதற்குமேல் எதுவுமே சுவாரசியமாகக் காதில் விழவில்லை. இந்தச் சந்திப்பே தேவையில்லாத ஒன்று. உள்ளூரிலேயே இருக்கும் ஒரு சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க, அதன் ஒரு சீனியர் மாணவனிடம் சென்று விசாரிக்க என்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை. அபத்தமாக உணர்ந்தேன். முதலிலேயே மறுத்தும் அப்பா கேட்கவில்லை. நான் சாதுவோ பயந்தவளோ இல்லை. எந்தப் பிரச்சனையையும் என்ன என்பதுபோல் நிமிர்ந்து பார்க்கக் கூடியவள். இரண்டு அண்ணன்களுக்குப் பின் ஒரே பெண். கொஞ்சம் மென்மையான மனதுடன் ஆனால் எக்கச்சக்க தைரியசாலி.

சின்னவயதில் ஓர் ஆதரவற்ற பாட்டியை தெருவிலிருந்து வீட்டிற்குக் கூட்டிவந்து அப்பாவிடம் சொல்லி அரசாங்கத்துக்கு மனுப்போட்டு அநாதைப் பென்ஷன் வாங்கிக் கொடுக்க வைத்தேன். ஒரு பைத்தியக்காரியை விடலைகள் கிண்டல்செய்ய, பொறுக்கமுடியாமல் வீட்டிற்கு வந்து அண்ணன்களைக் கூட்டிப்போய் சண்டை போடவைத்தேன். இப்படிப் பல நிகழ்வுகள் அப்பாவிற்கு என்னை எப்படி உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருந்தது. சட்டப்படிப்பும் அதில் ஒன்று. என் இயல்பான தைரியமும் எண்ணிப்பார்க்க முடியாத சுதந்திரமும்.. அதுவே கூட அப்பாவிற்குக் கொஞ்சம் பயமாக இருந்ததோ என்னவோ. மற்றபடி ஸ்ரீதர் மாதிரி இன்னும் 4 பேரை நானே பார்த்துக் கொள்ள முடியும் என்பதை அவர் அறிவார்.

[மதியம் மெயின்காட்கேட்டில் இருக்கும் சட்டக் கல்லூரியின் ஒரு மலையாள ஆசிரியையும் பார்த்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனக்கோ இதெல்லாம் கேவலமாக இருந்தது. சொல்லிப் பயனில்லை.]

பேசிமுடித்து அப்பா கிளம்புகிறோம் என்று சொன்னபோது அப்பாடா என்று இருந்தது. நான் எதற்காக வந்தேன் என்றே தெரியாமல் எழுந்தேன். ஸ்ரீதரன் மாதிரி பழங்களை என்னால் தாங்கமுடிவதில்லை. காட்டாற்றின் வேகம் நான். என் நண்பர்களிடம் முக்கியமாக சந்துருவிடம் சொல்லி ஒருமுறை இவனைக் கலாய்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “அம்மா குளிக்கறா. அங்க ஷெல்ஃப்ல குங்குமம் இருக்கு. எடுத்துக்குங்க”, நான் எழுந்ததைப் பார்த்து மிகச் சாதாரணமாகச் சொன்னவனைப் பார்த்துத் தூக்கிவாரிப் போட்டது. குங்குமமா? நவராத்திரிக்குத்தான் நானே யாருக்காவது அதுவும் அம்மா சொன்னால் மட்டும் கொடுத்திருக்கிறேன். இதெல்லாம் மிகவும் அதிகமாகவே பட்டது எனக்கு. இவன் மாதிரி சமர்த்துகள் எல்லாம் என் அம்மா கண்ணில் படாமல் இருந்தால் காலத்துக்கும் நல்லது. பாவம் வயிறெரிந்தே செத்துவிடுவாள். என் அண்ணன்களோ நண்பர்களோ எந்தக் காலத்திலும் இந்த அலைவரிசையில் வரமாட்டோம். அப்பாவை முறைத்துவிட்டு, ‘வளர்த்திருக்கா பாரு ஆத்தாக்காரி!’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே விதியே என்று ஷெல்ஃபை நெருங்கி குங்குமச்சொப்பைச் சிரமப்பட்டுத் திறந்தேன். ‘மை ஃபாதர் இஸ் நோ மோர்’ என்று பேச்சுக்கு இடையில் அவன் அப்பாவிடம் சொன்னது ஏனோ லேசாய் நினைவுக்கு வந்தது.

கிளம்பும் போது மீண்டும் ஒரு பார்வை கொடுத்து மீண்டோம். “ஃபர்ஸ்ட் இயர், ந்யூ அட்மிஷனுக்கெல்லாம் என்னிக்கி ரி-ஓப்பன்” என்று அவன் (எதையாவது கேட்டுத் தொலைப்போம் என்ற தொனியில்) என்னிடம் கேட்ட ஒரே கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்தேன். இவனுக்குத் தேதி தெரியாமலா இருக்கும்? ‘எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை’ என்று மனதிற்குள் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேன். அவனுக்கும் அப்படியே என்று தெரிந்தது. முதல்வருடப் படிப்பிற்குக் கல்லூரி திறப்பதை எப்படி ‘ரீ-ஓப்பன்’ என்று சொல்லமுடியும் என்று அவன் வார்த்தைகளை ஃப்ரேம் போட்டு அர்த்தம் பார்க்க ஆரம்பித்தேன். டூவீலரை ஸ்டார்ட் செய்து அப்பா ஏறிக்கொண்டதும் அவனுக்கு ஒருமுறை கையசைத்தார். இடது கண்ணோரம், அவன் வாசலிலேயே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கவேண்டும் என்ற என் ஆவலைக் கஷ்டப்பட்டு அடக்க வேண்டியிருந்தது. வண்டியை நோக்கி நடந்து வந்தபோது என் கொலுசின் சப்தம் கொஞ்சம் தயங்கித் தயங்கி மென்மையாக சிணுங்கியபடியே ஒலித்ததாக எனக்குத் தோன்றியது. வந்தபோது இருந்த ஜல்ஜல் திமிர் நிச்சயம் அதில் காணாமல் போயிருந்தது.

-o-

Festember, இன்டர்காலேஜ் காம்படீஷன், கர்நாடக சங்கீதத்தில் முதல் பரிசு, மெல்லிசையில் இரண்டாம் பரிசு. கல்லூரியே பாராட்டி முடித்திருந்தது. இது ஆரம்பத்தில் எல்லா கல்வி நிறுவனமும் எனக்குச் செய்வதுதான். பின், தொடர்ந்து நான் வாங்கி வரும் கோப்பைகளையும் பரிசுகளையும் இதிலென்ன அதிசயம் என்று சகஜமாக எடுத்துக்கொள்வார்கள். வீடே அப்படித்தான் ஆகிவிட்டது. நான்குவயதில் மாறுவேடப் போட்டியில் ஜெயித்ததற்கு ஊருக்கெல்லாம் லெட்டர்போட்டாள் அம்மா என்று அண்ணன்கள் சொல்வார்கள். அப்புறம் மேலே மேலே பரிசுகள் வரும்போது வீடு கண்டுகொள்வதில்லை அதிகம். ‘பெருமாள் சன்னதில வெச்சு எடுடி’ என்று பாட்டி இருந்தவரை சொல்லிக்கொண்டிருந்தாள். அதன்பின் வாங்கும் மெடலை, வீட்டுக்கு வந்ததும் புத்தகப் பையிலிருந்து டிஃபன் பாக்ஸ் எடுப்பதுபோல் இயல்பாக வெளியே எடுத்து வைக்க முடிகிறது. பெரிய கொக்கி ஆணியில் ஏன் எதற்கு என்று புரியாத பதக்கச் சரங்கள். ‘மஞ்சுளா ரெங்கராஜன்’ என்ற பெயரை பரிசுகளை அறிவிக்கும்போதெல்லாம் மைக்’குகள் உள்வாங்கி வெளிவிட்டுக் கொண்டிருந்தன.

முதல்வர் அறைக்கு வெளியே எல்லோரும் சுற்றிநின்றிருக்கும்போது அந்தப் பக்கம் போன ஸ்ரீதரன் “கங்கிராட்ஸ்!” என்றான். சொல்லவே வந்தானா, வந்தபோது சொல்கிறானா என்பதையும் சொல்லிவிட்டால் தேவலாம். “தேங்ஸ், எப்படி இருக்கீங்க?”, கேட்டு வைத்தேன். உள்ளே மீண்டும் என்னவோ நழுவிக் கொண்டிருந்தது. உடன் நின்றவர்களைப் பார்த்துவிட்டு, “எனக்கு க்ளாஸ் இருக்கு. அப்பறம் பார்க்கலாம்”, இரக்கமேயில்லாமல் சொல்லிவிட்டுப் போனான். அவன் போன முதல் ஐந்து நிமிடங்களுக்கு, சரியாக மற்றவர்களோடு கலக்க முடியாத தடுமாற்றமாக இருந்தது. சே!

கல்லூரி வாஷ்ரூம் கண்ணாடியில்- ‘அப்பறம் பார்க்கலாம்’ என்று அவனைப்போல் சொல்லிப் பார்த்தேன். ‘எப்போடா?’ என்று அவனைத் திருப்பிக் கேட்டேன். ‘உனக்குக் கிறுக்குதான் பிடிச்சிருக்கு’ என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். கொஞ்சம் அழகாகத்தான் இருக்கிறேன் என்று தோன்றியது. வகுப்பிற்கு வந்து, முதல்வருக்குக் காண்பிக்க எடுத்து வந்த பரிசுகளை ஆசையாகக் கட்டிக் கொண்டேன். இதற்குமேல் ஏகத்துக்கு வாங்கியாயிற்று. இதெல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ரொம்ப ஸ்பெஷலாகத் தோன்றியது.

நினைத்த அளவுக்குப் படுத்தாமல் அந்த ‘அப்பறம்’ அன்றைக்கே லைப்ரரி வாசலில் வந்தது. வெளியே வந்தவனும், அந்தவழியாகப் போன நானும் ஒரு தயக்கப் பார்வை பார்த்துக் கொண்டோம்.

“வந்ததுமே காலேஜக் கலக்கறீங்க”, மௌனம் பேசியது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. கர்நாடிக் என்னிக்கும் எனக்குப் பிரச்சனையில்லை. என் குரலே ஜட்ஜஸ்க்கு பிடிச்சுடும். சினிமாப் பாட்டுதான்- என் குரலுக்கு சித்ரா பாட்டை எடுத்தது தப்பு. கேட்டுப் பழகினவங்களுக்கு என் குரல் மாற்றா இருந்திருக்கும். ம்யூசிக் மாடுலேஷன் எல்லாம் வேற சொதப்பி, செகண்ட் ப்ரைஸ் ஆயிடுத்து. நான் கொஞ்சம் யோசிச்சி வேற யாரோட ஸோலோவாவது பாடியிருக்கலாம். ப்ச்!”

அவன் கவனித்த மாதிரியோ கவலைப்பட்ட மாதிரியோ தெரியவில்லை. எனக்கு இதெல்லாம் ஒன்றும் புரிவதில்லை; தேவையுமில்லை என்பதுபோல் இருந்தான். கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேனோ என்று அவமானமாக இருந்தது. ஒரு வார்த்தைக்கு ஒன்பது வார்த்தை ஏன் ஒளறினேன் என்று தெரியவில்லை. நான் வாயைத்திறக்கும் முன் என்னைப் பாராட்டும் கூட்டத்தைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இவன் எனக்குப் புதுசு; அல்லது அவனுக்கு நான். அப்படியென்றால் நான் கலக்குகிறேன் என்று சொன்னது கிண்டலா?

அதற்குள் கல்லூரி முடிந்து நிறையபேர் லைப்ரரிக்குள் வருவதும் போவதுமாக இருக்க, ‘குறுக்கே நிற்கவேண்டாம்; அங்கே உட்காரலாம்’ என்பதுபோல் அந்தக் காரிடரின் கைப்பிடிச்சுவரைக் காண்பித்தான். என் வாழ்க்கையையே திருப்பிப் போடப் போகிற அந்தச் சுவரை நோக்கி நடந்தேன்.

நடக்கும்போது, நாய்க்குட்டிபோல் அவன் சொன்னபேச்சு கேட்கிறேனோ என்று தோன்றியது. ‘வேலை இருக்கிறது; போகவேண்டும்’ என்று சொல்லிக் கிளம்பியிருக்கலாம். [என் திமிரே, எங்கே போய்த் தொலைத்தாய்? இந்தப் பருப்புசாதத்திடமிருந்து என்னைக் காப்பாற்று!]

“அப்புறம் படிப்பு எப்படி இருக்கு?..” நேராக படிப்பைப் பற்றி ஆரம்பித்த பேச்சு வேறு எங்குமே தடம் புரளவில்லை. பேசினான்; பேசினான்; பேசிக்கொண்டே போனான். இவ்வளவு பேசுவானா என்றே எனக்கு மலைப்பாக இருந்தது. அடித்துவைத்த சித்திரம்போல் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். முதல்பார்வையில் அவனை எடைபோட்ட என் தவறை நானே மன்னிக்க முடியாது. மருத்துவத்தில் சேர்ந்த மாணவர்கள் கொஞ்சநாள்களுக்கு முதலில் எங்கு போனாலும் ஸ்டெத்தைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல, சட்டக்கல்லூரிகள் எடுத்துப் போக எதுவுமில்லையென்றாலும் சாதாரண வார்த்தைகளுக்கெல்லாம்கூட ‘ஆன் வாட் லோகஸ்டான்டி..’ என்று பேச்சில் சட்டப் பிரயோகங்களை உபயோகிக்க ஆரம்பிக்கும். அப்படி எல்லா இயல்புகளையும் உடைத்துக்கொண்டு சுற்றி இருக்கும் சாதரணங்களுக்கு நடுவில் எளிமையான தோற்றம் வைத்துக்கொண்டு மிக மிக அசாதரணமானவாகத் தெரிந்தான். உள்ளுக்குள் எல்லாவற்றிலும் தீர்மானமாக இருக்கும் இவனைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேனோவென்று தோன்றியது.

சட்டம் அறிதலில் இருக்கும் தணியா ஆசையைச் சொன்னேன். கோழைகளைப் பார்த்தால் எரிச்சல் வருவதைச் சொன்னேன். கொடுமைகளுக்குக் கைகட்ட முடியாத ஆற்றாமையைச் சொன்னேன். கம்யூனிஸ்ட் தலைவர் பாப்பா உமாநாத் பெண் நிர்மலா உமாநாத்- சிதம்பரம் பத்மினி வழக்கில் ஆஜரானவர் இங்குதான் படித்தார் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லிக்கொண்டே போனேன். முதன்முறையாக எதிராளிக்குச் சமமாக என்னால் பேசமுடியவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அப்படி அவனுக்குமுன் அறிவு குறைவாய் இருப்பதே சுகமாய் இருந்தது. இருக்கும் கொஞ்ச அறிவையும் அழித்து எல்லாவற்றையும் புதிதாக அவனிடம் கற்கவேண்டும் என்ற ஆசை வந்தது.

முக்கால்மணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். சிலர் விநோதமாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். பேச்சை மெதுவாக பெர்சனலுக்குத் திருப்ப எண்ணி, “அப்பா இல்லையா? அம்மா என்ன செய்றாங்க?” என்றேன். கொஞ்சம் ஆங்கிலம் குறைந்து பிராமணத் தமிழில் சகஜமானோம்.

“அன்னிக்கே உங்கப்பாகிட்ட சொன்னேனே எல்லாம்.”

திடுக்கிட்டேன். “சாரி, நான் அன்னிக்கி கவனிக்கலை”.

“ஆமா, எங்க பேச்சை கவனிக்காம சுவத்துல மாட்டியிருந்த என் குட்டிப்பாப்பா ஃபோட்டோவே பார்த்துண்டிருந்தீங்க”, (முதல் முறையாக) சிரித்துக்கொண்டே சொன்னான். அடித்து ஆடுவது என்பது இதுதானா? அவமானத்தில் தலைகுப்புற விழுந்தேன். எனக்கே அன்று என்ன செய்திருக்கிறேன் என்று தெரியவில்லை. ‘அப்படியா!’ என்று கேட்டால் நம்புவானா? ‘உனக்கு எப்படி அது தெரியும்? என்னையே பாத்துண்டிருந்தியா?’, திருப்பிக் கேட்டு, கேவலப்படுத்தவேண்டும் போல் மனசு தவித்தது.

தான் 2 வயதுக் குழந்தை, அக்காவிற்கு நான்கு வயது இருக்கும்போது சிமெண்ட் ஃபாக்டரியில் வேலைபார்த்த அப்பா இறந்தது, பள்ளியிறுதி மட்டுமே படித்திருந்த அம்மாவிற்கு கம்பெனி, கடைநிலை ஊழியர் வேலை கொடுத்தது, ஆனாலும் அம்மா தளராமல் மேலே டைப்ரைட்டிங் எல்லாம் படித்து க்ளார்க் ஆகி குவார்ட்டர்ஸில் தங்கி தங்களை வளர்த்தது, அத்தை பையன் புண்ணியத்துக்கு அக்காவைக் கல்யாணம் செய்துகொண்டு காம்ரூன் போனது, அம்மா சுகரில் உடல்நிலை மோசமாகி வாலண்டரி ரிடையர்மெண்டில் வந்த பணத்தில் சமாளித்து படித்துக் கொண்டிருப்பது, அப்பா, அம்மா மேல் இருந்த நன்மதிப்பில் கம்பெனி இவன் படிப்பு முடிந்ததும் வேலை தருவதாகச் சொல்லியிருப்பது, அதிக பணச்செலவு இல்லாதததும், லேபர் வெல்ஃபேர் ஆஃபீஸர் ஆக வேண்டும் என்ற கனவிற்காகவும் சட்டம் படிப்பது, ஒரு புத்தகம் வாங்காமல் லைப்ரரியையும், ஆசிரியர்களும் உதவுவது வரை.. எல்லாம் என் அப்பாவிற்கு சொன்னதுபோல் இல்லாமல் உணர்வுபூர்வமாக, விஸ்தாரமாகச் சொல்லி முடித்தான். அம்மா பாசம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

“இந்தப் பாட்டு, கூத்து ப்ரைஸ் வாங்கறதெல்லாம் ஸ்கூல்லைஃப் ஃபாண்டஸியா இருக்கணும். காலேஜ்ல, அதுவும் சட்டம் மாதிரி படிப்புக்கெல்லாம் நிறைய டெடிகேஷன் வேணும். நீங்க சொல்ற லட்சியங்கள் எல்லாம் உண்மையாவே உங்களுக்கு இருந்தா மத்த எல்லாத்தையும் நிறுத்தி, அந்த நேரத்துலயும் சப்ஜெக்ட் நாலெட்ஜ் இம்ப்ரூவ் பண்ணப்பாருங்க.”

“இல்லை, நான் நல்லா படிப்பேன்!” எல்கேஜி பெண்ணைப் போல் கூவினேன். அவனைப் போல சன்னமாகப் பேசப் பழகவேண்டும் என்று நாக்கைக் கடித்தேன். என் படிப்பையும் ஆர்வத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டானே என்ற எரிச்சல் எட்டிப் பார்த்தது. Extra curricular activities வைத்திருக்கிறவர்கள் மதிப்பெண் வாங்கமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை ஒழியாதா?

“படிப்புன்னா இனிமே ஸ்கூல் மாதிரி எவ்வளவு மார்க் வாங்கறீங்கன்னு இல்லை. எடுத்த சப்ஜெக்ட்ல எவ்வளவு நாலெட்ஜ் acquire பண்றீங்கங்கறதுதான். மத்த ஆக்டிவிடிஸ் குறைஞ்சா இதுல சாதிக்கலாம். காலைல கூட்டத்தோட உங்களைப் பார்த்ததுலேருந்து சொல்லணும்னு நினைச்சேன். இப்ப சொல்லிட்டேன்.” எழுந்தான். இதைச் சொல்லத்தான் என்னோடு இவ்வளவு நேரம் பேசினானா? [பின், போட்டிக்குப் பாடியதைப் பாடச்சொல்லிக் கேட்பான் என்றா எதிர்பார்க்க முடியும்?]

அட்வைஸ்! வேறு யாராவது சொல்லியிருந்தால் எப்படி எதிர்வினை செய்திருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்னது தாங்கமுடியாததாக இருந்தது. எதிர்ப்பாக இன்னும் நிறைய எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று வீரசபதம் செய்துகொண்டே வீட்டுக்கு போனேன். மாறாக அன்றைக்கே எல்லாவற்றிற்கும் மங்களம்பாடினேன். பாட்டு வாத்தியார், ஸ்கூல் தமிழ் டீச்சர், அம்மா என்று ஆளாளுக்கு காரணம் புரியாமல் அவ்வப்போது ஷிஃப்ட் போட்டுப் புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.

அதன்பின் நடந்தவை அதிரடி மாற்றங்கள். யாரோடும் ஐந்து நிமிடத்திற்குமேல் பேச ஒன்றுமில்லைபோல் தாங்கமுடியாத கொடுமையாக இருந்து, எல்லோரையும் தவிர்த்தேன். கொஞ்சம் விட்டு விட்டு சந்தித்துப் பேசிய நாங்கள் பின்னர் ஏதோ புரிந்தாற்போல தினமும் கைப்பிடிச்சுவரில் கூடினோம்.

புதுவருடத்திற்கு நானே சொந்தமாக ஒரு வாழ்த்து வரைந்தேன். எப்பொழுதும், வரையும் ஓவியத்தோடு கலந்த உணர்வில் வண்ணங்களைக் குழைப்பவள், முதல்முறையாக வரைபவனுக்கான எண்ணங்களில் குழைந்து வரைந்திருந்தேன். முடிவில், ‘வேறு வேலையில்லையா?’ என்று திட்டுவானோ என்று பயந்து மறைத்துவிட்டு கடையில் வாங்கிக் கொடுத்தேன். அப்படியும் விதி விரட்டிய ஒருநாளில் அவன் நல்ல மூடில் இருக்கும் போது மிகவும் தயங்கித் தயங்கி ஹாண்ட்பேகிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காண்பித்தேன்.

தனிமை நீக்கித்
தனிமை திணித்தாய்

என்று எழுதியிருந்தது. “என்ன இது?” என்று ஆவலாகக் கேட்டான். “ஸ்கூல் படிக்கும் போது நிறைய கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டின்னு பரிசு வாங்கியிருக்கேன். தமிழ் டீச்சருக்கு நான் செல்லம். இப்பல்லாம் எழுதறதில்லை. புக்ஸ் படிக்கறதோட சரி. இது, உங்களைப் பத்தி செகண்ட் ஹவர்ல பாதி க்ளாஸ்ல நினைச்சுப் பார்த்தேன். ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா உடனே தோணினத எழுதணும்னு நினைச்சு எழுதினேன். இது முழுக்கவிதை இல்லை. சும்மா ரெண்டே லைன். நல்லா இருக்கா?” உருகப் போகிறான், உலக இலக்கியம் இதுதான் என்று சொல்வான் என்றெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

‘புரியலையே!’ என்று கட்டைவிரல் நகத்தால் நெற்றியைக் கீறிக்கொண்டான். காற்றுப் போன பலூனாகிப் போனேன். “I meant..” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து, அவன் கண்களைப் பார்க்க முடியாமல் கொஞ்சம் பயமும் வெட்கமுமாகி, தமிழுக்கு மாறி.. “நீங்க வந்ததிலேருந்தே I never felt alone..”

கொஞ்சம் பொறுமை இழந்திருந்தான். முகம் இறுகியிருந்தது. “ம்!” என்ற அவன் ஒற்றை எழுத்து உச்சரிப்பில் ஒட்டுமொத்த ஆண்மையையும் உணர்ந்து மிரண்டேன்.

மேலே சொல்லவராமல் உலக மொழிகள் எல்லாம் ஒத்துழைக்காமல் துரோகம் செய்வதாகப் பட்டது. என்ன எழவுக்கு இந்தப் பேச்சை ஆரம்பித்தேன் என்று என்னையே நொந்தேன். இனி பாதியில் இவனிடமிருந்து தப்ப முடியாது. கொஞ்சம் நிறுத்தி, தயங்கி, தலையைக் குனிந்துகொண்டே, “ஆனா என்கூட இருந்த மத்த எல்லாரையும் நீங்க வந்ததும் தவிர்த்து ரொம்பத் தனியாயிட்டேன். அதான் சொல்ல நினைச்சேன்.” ஒருவழியாக மெல்லிய குரலில் சொல்லி முடித்து வியர்த்தபோது நாக்கு மேலன்னத்தில் ஒட்டியிருந்தது. அவன் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு மொத்த இரத்தமும் சூடாகி நெற்றிக்குப் பாய்ந்திருந்தது. எங்களுக்கிடையில் இருந்த அந்த அரை நிமிட மௌனம் தாங்கமுடியாத கொடுமை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. எந்த நிமிடமும் என் இயல்புக்கு மாறாக அழுதுவிடுவேனோ? அழும்போது வரும்கண்ணீரை எப்படித் துடைத்துக் கொள்வது என்று யாராவது சொல்லிக் கொடுக்கவேண்டும். எனக்கு அனுபவமில்லாதது. கொஞ்சம் கோபம் குறைந்து தணிந்த குரலில், “இதை எதுக்கு இப்படி புரியாம சுத்திவளைச்சு சொல்லணும்? இந்தக் கவிதை கண்றாவி எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் absurd-ஆ தெரியலை? இதை எழுத எவ்வளவு நேரம் யோசிச்சீங்க?..”

நான் வாங்கிய பரிசுகளும் பாரதியும் ஷெல்டனும் கைகொட்டிச் சிரித்தார்கள். எனக்குச் சம்மதமில்லாமலேயே என் நிலையிலிருந்து நான் இப்படியெல்லாம் இறங்கிக் கொண்டிருந்த காரணம் புரியவில்லை. கடகடவென்று கண்களிலிருந்து நீர்பெருகி கையில் டொக்கென்று விழுந்தது. பதறிப்போனான். “இப்ப எதுக்கு அழறீங்க? See மஞ்சு, எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புரியறதில்லை. அவ்ளோதான். மத்தபடி இது கவிதைதானோ என்னவோ; எனக்குத் தெரியலை. ஆனா என்கிட்ட ஏதாவது பேசணும்னா நேராவே சொன்னாதான் எனக்குப் புரியும்.” சும்மா மேலுக்கு என்னைச் சமாதானம் செய்கிறான் என்று அடுத்த இரண்டு நிமிட மௌனத்திற்குப்பின் அவன் பேசியதில் புரிந்தது.

“இந்தக் கவிதை, கதை, பட்டிமன்றம், வழக்காடுமன்றம், இலக்கியம், லேகியம் இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. புரியறதுமில்லை. சட்டத்துக்கு ஆங்கில அறிவு எவ்வளவு வேணும்னு உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ட்ராஃப்டிங்லயே உங்க திறமை தெரியணும். அப்படி உங்க இங்லீஷ் டெவலப் செஞ்சுண்டீங்கன்னா ஐ’ வில் பீ ஹாப்பி.”

நல்லவேளையாக ‘..against nature, you transformed a butterfly into larva..’ என்றெல்லாம் நான் ஆங்கிலத்தில் அவனைப்பற்றி ஒளறியிருந்த முழுநீள (அ)கவிதைகளைக் காண்பிக்கவில்லை என்று நிம்மதியானேன். அப்புறம் இந்தச் சந்திப்பை மட்டும் எப்போது நினைத்தாலும் சிரிக்காமல் இருந்ததுமில்லை. ஆனாலும் நான் எப்படி இருந்தால் அவனுக்கு சந்தோஷம் என்று சொல்லி எடுத்துக்கொண்ட உரிமையில் பூரித்தேன். ‘உன்னை சந்தோஷப்படுத்துவதைவிட வேறு என்ன வேலை’ என்று சொல்லிக்கொண்டேன். உண்மையிலேயே இதெல்லாம் அபத்தம்தான் என்று தோன்றியது. நல்ல பேச்சை ஒளறியே கெடுத்தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, நான் கொடுத்த பேப்பர் தன் சட்டைப்பையில் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொண்டு கிளம்பினான்.

இப்படியாக என் மற்றபிற இயக்கங்கள் எல்லாம் நின்றுபோய் வாழ்க்கையே சட்டமும் சட்டம் சார்ந்த திணையுமாய் ஆக அந்த 2 வருடங்கள் ஓடிப்போய் ஸ்ரீதர் படித்துமுடித்து சிமெண்ட் ஃபாக்டரியில் அப்போதைக்குக் காலியாக இருந்த பெர்சனல் ஆஃபீஸராய்ச் சேர்ந்து மீண்டும் குவார்ட்டர்ஸ் மாறி இருந்தான். ஒரு நாள் புதிதாக வாங்கிய கைனடிக்கில் என்னைத்தான் முதல் ரவுண்ட் அழைத்துப்போக வேண்டும் என்று(அதைச் சொல்லமாட்டான்; அழுத்தம்) மூன்றாவது வருடம் காலேஜுக்கு வந்தான். மேலே labour welfare ஸ்பெஷலைஸ் செய்வதைச் சொன்னான். கொஞ்சம் பிரிந்து சந்தித்ததில் அதிக நெருக்கமாக உணர்ந்தோம். சட்டம், படிப்பு என்று இல்லாமல் எல்லா விஷயமும் அவசர அவசரமாக, தடையே இல்லாமல் பகிர்ந்துகொண்டோம். எப்பொழுதும்போல் படிப்பைப் பற்றியே பேசாமல் கொஞ்சம் வேறு தேடலோடும் என்னோடு பேசுகிறான் என்று தோன்றியது. வேலைபார்ப்பதில் புருஷ லட்சணம் கூடி இருந்தான். நான் இன்னும் இன்னும் என்னை இழந்துகொண்டிருந்தேன்.

அதன்பின் வாரம் ஒரு ஃபோன், மாதம் ஒருமுறை விசிட் என்று கருணை காண்பித்தான். சந்திப்பைவிட அதற்காகக் காத்திருப்பது சுகமாக இருந்தது. “எப்படி இப்படி கண்ட்ரோலா இருக்கீங்க? இண்டெலக்சுவல் லவ்வா?” என்று உஷா என்னிடம் கேட்டதற்கு, ராஜரத்னம், “காதல்ல படிக்காத பட்டிக்காட்டான், இண்டெலக்சுவல் காதல்னெல்லாம் கிடையாது. எல்லாமே மூட்டைலேருந்து மொத்தமா கொட்டின கத்திரிக்கா காதல்தான். என்ன, நம்பள மாதிரி இல்லாம ஒருத்தருக்கொருத்தர் சாதிச்சுக்காட்டணும் ஓடறாங்க போல இருக்கு” என்று உஷாவிடம் தத்துவம் உதிர்த்துவிட்டு என்னிடம் நக்கலாக, “மஞ்சுளா, அடுத்ததடவை சொல்லிவை பையன்கிட்ட, ரொம்ப நடிக்கவேணாம், தரை இறங்கச் சொன்னேன்னு”. கொஞ்சம் ரசங்குறைந்த பேச்சாக இருந்தாலும் அதன்பின்னே இருந்த உண்மை என்னை நடுக்கியது. ஏன் இப்படி இருக்கிறோம் எல்லோரையும்போல் இல்லாமல். உடனே பார்க்கவேண்டும் போல் இருந்தது. அவனுக்கும் அப்படி இருக்குமா? அதைச் சொல்லமுடியாமல் எது தடுக்கிறது?

-o-

மூன்றாம் வருடம் முடிந்து நான்காம் வருடம் ஆரம்பித்த ஒரு மாதத்தில்தான் அப்படி, தனியாக அப்பாவை அனுப்பிவிட்டு அரையடிச்சுவரில் அசோகமரக் குச்சியால் கீறிக்கொண்டிருந்தேன். எதிர்பாராத நிமிடத்தில் ஸ்ரீதர் வந்துகொண்டிருந்தான். அதுவரை எல்லோருக்கும் புன்னகையைப் பதிலாக்க முடிந்த என்னால் அவனைப் பார்த்ததும் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. இப்போது முடிவு வந்துவிட்டது எங்கள் எல்லா மௌனத்துக்கும். முழுப் பெண்ணாய் உணர்ந்தேன் அவன்முன். வேகமாக என்னருகில் வண்டியை நிறுத்தியவன், “நீயும் என் உயிரை வாங்கறதுன்னு முடிவுபண்ணிட்டியா?,” திட்டியபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தான். அதிகம் களைப்பாக இருந்தான். அவனை அறியாமலே முதல்முறையாக என்னை ஒருமையில் அழைக்கிறான். எனக்குள் ஏகத்துக்குக் நொறுங்கி சிதைந்து கலைந்து பின் சேர்ந்தேன். அத்தனை துக்கமும் விலகியதுபோல் இருந்தது அவன் எடுத்துக்கொண்ட உரிமை. பதில் சொல்லாமல் ‘எப்படி இருக்காங்க அம்மா?’ என்றேன். இப்போது அவனிடம் எனக்கு தைரியம் வந்திருந்தது.

ஏழெட்டு நாள்கள் முன்பு வழுக்கிவிழுந்த அவன் அம்மா தலையில் அடிபட்டு, சுகரும் அதிகரிக்க பின், டாக்டரால் பதில்சொல்லமுடியாத பக்கவாதத்திற்குப் போயிருந்தாள். ஸ்ரீதர் வாழ்க்கையே ஒருமுறை நின்று மீண்டும் புரியாமல் இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆவதை எனக்குச் சொல்ல வீட்டுக்கு ஃபோன் செய்தால் அப்பா எடுத்து என் அழிச்சாட்டியத்தையும் நான் இங்கு இருப்பதையும் சொல்லி கோபத்தில் ஃபோனை வைத்திருக்கிறார். அடித்துப் பிடித்து ஓடிவந்திருக்கிறான். “உங்கம்மாவைப் பாத்துக்க உதவிக்கு அந்த சொந்தக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு உங்கக்கா ஃபோன்ல கேட்டாங்கன்னு சொன்னீங்களே, செஞ்சுப்பீங்களா?”

கோப உச்சிக்குப் போனான். “அறிவு இருக்கா உனக்கு? கல்யாண வயசா எனக்கு? என்னை ஒரு வார்த்தை கேக்காம படிப்ப டிஸ்கன்டின்யூ செய்வியா? உன்னை மாதிரி உணர்ச்சிவசப்படற கூட்டம் வாழ்க்கைக்கு லாயக்கில்லை.”

இத்தனை நாள் எனக்கு அவனிடம் இருந்த பயமெல்லாம் காணாமல் போயிருந்தது. தலைக்குமேல் வெள்ளம் போல் தைரியமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் கோபித்துக் காரியம் ஆகாது என்று புரிந்து குரலை இறக்கி, தானும் இறங்கி வந்தான். “எவ்ளோ ஆசை வெச்சிருந்த படிப்புல. எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப. நானே உன்னைப் பத்தி எவ்ளோ கனவு கண்டேன்! ஏன் இப்படி செஞ்ச என்னக் கூட ஒரு வார்த்தை கேக்காம?”

“உனது கண்களில் எனது கனவினைக் காணப்போகிறேன்..” மெல்ல அடிக்குரலில் உள்ளுக்குள் மகிழ்ச்சியும் வெளியே திமிருமாகப் பாட ஆரம்பித்தேன். ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்.. எல்லாம் சொல்லவே ஓர்நாள் போதுமா..’ வேறொரு சமயமாக இருந்தால் சினிமா பாட்டிற்கே சாத்தியிருப்பான். எனக்கே இப்படிப் பாடுவது செயற்கையாக இருந்திருக்கும். இன்று ஒன்றும் சொல்லாமல் அவன் இதற்குமுன் பார்த்திராத என் தைரியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு அடங்கிக் கொண்டிருந்தான். “உங்கப்பா முகத்துலயே நான் முழிக்க முடியாம செஞ்சிருக்க மஞ்சு. என்ன செய்யப் போறேன்னு தெரியலை.” தன்மையாகப் பேசினான். அவன் என்னை ஒருமையில் பேசப்பேச நான் செத்துக் கொண்டிருந்தேன். அப்பா ஆசையையெல்லாம் நிறைவேற்றி ஆனால் இவன் கிடைக்கவில்லையென்றால் அப்புறம் என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. வேறு யாருடனாவது நான் என்னை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? ஏன் புரியாத மாதிரி நடிக்கிறான்?

“எனக்கு அதெல்லாம் வேணாம்; நீங்கதான் வேணும்.” கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். இதுவரை காதலிக்கிறேன் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக்கொள்ளத் தேவை இருந்தது கிடையாது. திருமணம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுபோன்ற புரிதல் இருவருக்கும் இருந்தது. சரியான பருவத்தில் திருமணம் என்றால் எங்களுக்குள் ஜாதியில் இருந்த உட்பிரிவு வேறுபாட்டிற்கே என் வீடும் ஊரும் ஓர் ஆட்டம் போட்டிருக்கும். இப்போது என்னுடையது இடி விழுந்த வீடாக இருந்தது. செய்தி கிடைத்து நான் மருத்துவமனைக்கு அவன் அம்மாவைப் பார்க்க என் அப்பாவோடு போயிருந்தபோது 4 நாள் தாடியோடு இருந்தான்; எல்லாம் சொன்னான். அவனை அச்சில் எடுத்தாற்போன்ற அவன் அம்மாவைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனேன். எது நடந்தாலும் தைரியத்தையும் ஸ்ரீதரையும் இழந்துவிடக் கூடாது; உலகம் எப்படியோ நாசமாகப் போகட்டும், நாமென்ன புரட்டிவிடப் போகிறோம் என்று மட்டும்தான் தோன்றியது.

“சரி, அம்மாவ ரெண்டுநாள்ல டிஸ்சார்ஜ் செஞ்சுடுவாங்க. அப்பறம் யார் பாத்துக்குவாங்க.. அம்மா நிலைமை, லீவு, பணப்பிரச்சனைன்னு எல்லாம் என்னை அழுத்துது. எங்க அத்தைதான் இப்ப இருக்காங்க. அக்காவுக்கு ஃப்ளைட் கிடைக்கலை. இன்னும் ரெண்டுநாள்ல வருவா. அப்புறம் இதைப் பத்தி பேசலாம். புரிஞ்சுக்க. இப்ப என்னால ஒண்ணும் யோசிக்கக் கூட முடியல மஞ்சு. பிரின்சிபால பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டுக் கிளம்பலாம்”, முதல்முறையாக தன் இடக்கையால் என் கைப்பிடித்து (வாட்ச் கூட கட்டாமல் வந்திருந்தான்.) நடந்தான். எனக்கென்னவோ அதில் நிம்மதியை உணர்கிறான் என்றுதான் தோன்றியது. பேசாமல் நடந்தோம். எனக்கு இதயமே நின்றிருந்தது. மாடிப்படித் திருப்பத்தில், “நல்லாப் பாடற.. எனக்குத்தான் இதுக்கெல்லாம் தகுதி இருக்கான்னு தெரியலை” கிசுகிசுப்பாய்ச் சொன்னான்.

மகிழ்ச்சி மீறுதே.. வானைத் தாண்டுதே.. சாகத் தோன்றுதே..

-o-

ரிசப்ஷனில் ஆளே அடையாளம் தெரியாமல் மேக்அப் போட்டுக்கொண்டு, உன்னிகிருஷ்ணனுக்கு ஒரிஜினில் நகுமோவுக்குச் சீட்டுக் கொடுத்து பாடச் சொல்லி, புதுப்புருஷன் பக்கத்தில் மாலையும் கழுத்துமாய் நின்றுகொண்டே உன்னியை சைட் அடிக்க வேண்டும் என்ற கல்யாணக் கனவுகள் எல்லாம் தகர்ந்து அடுத்த இருபதாம் நாளில் அவர்கள் குலதெய்வம் சங்கரன் கோவிலில் 15 பேர் சாட்சியாக திருமணம் என்று ஒன்று நடந்தது. இந்த இருபது நாளைக்குள் இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி வரலாற்றையே மிஞ்சக் கூடிய தாலி செண்டிமென்டில் என்னையே நம்பமுடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம் ஒரு வருடம் ஓட்டமாய் ஓடியது. அப்பா ஒருமுறை அதிர்ச்சியில் படுத்து எழுந்தார். என்னைப் போல் அம்மா தைரியம் என்பதால் (அல்லது அம்மாவைப் போல் நான்?) சமாளித்தாள். அண்ணன்கள் சிறு அதிர்வில் அடங்கினார்கள். எல்லோரையும் ஸ்ரீதரின் நல்ல குணம் கட்டிப் போட்டது. உறவுகளுக்கு பதில் சொல்லவே அதிகம் பயந்தார்கள் என்று தோன்றியது. இரண்டு மாதம் முன்பு மாமியார் இறந்தார். இறந்ததற்கு வந்த நாத்தனர் தன் மாமியார் (ஸ்ரீதரின் அத்தை) எங்களுடன் இருப்பார் என்று சொன்னாள். பணம் காசுக்குக் குறைவில்லை. ஆனால் பிள்ளை வெளிநாட்டில் இருப்பதால் தனியாய் இருக்க பயந்து எங்களுடன் இருக்கிறேன் என்று வந்தார்; மிகவும் உதவியாக இருந்து வருகிறார். வரிசையாக, புதிதுபுதிதான கடமைகளும் பழக்கமில்லாத வேலைகளும் அழுத்தினாலும் உணரமுடியாத மாதிரி எல்லாவற்றையும் ஸ்ரீதரின் காதல் மூழ்கடித்தது.

மேல்படிப்பு முடித்து லேபர் வெல்ஃபேர் ஆஃபீஸரானபின் முழுமூச்சாக வேலையில் இறங்கினான். வேலை தாண்டியும் எப்பொழுதும் தொழிலாளர்களின் மேல் இருந்த அக்கறை மற்ற எல்லாவற்றையும் முந்த, அரசியல் கட்சிகளாகப் பிரிந்து இருந்த தொழிலாளிகளும் கட்சிகளும் கூட இவனிடம் ஒரேமாதிரி தான் பழகினார்கள். ஊரிலிருந்த கட்சித் தலைமைகள் நேர்மைக்கு முன் வாயடைத்தன.

சரஸ்வதிபூஜையன்று அலுவலகத்துக்கு, பூஜைக்குக் கூட்டிப்போன இடத்தில் எல்லோரையும் பாடச் சொன்னார்கள். மேலதிகாரியின் பெங்காலி பெண்டாட்டி பொருந்தா மேக்கப்புடனும், சில கிக்கிபிக்கி சிரிப்புக்கு நடுவிலும் எதையோ பாட, சில தொழிலாளிகளின் மனைவிகளும் வெட்கத்தோடு பாடுவார்கள் என்ற சூழ்நிலை இருந்தது. பக்கத்தில் மிஸஸ் ரெட்டியுடன் பேசிக்கொண்டே, இந்தக் கூட்டத்திற்கு எந்த மாதிரிப் பாடல் எடுபடும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஸ்ரீதர் அருகில்வந்து ‘பாடவேண்டாம்’ என்று எனக்கு மட்டும் கேட்கிறார்போல் சொன்னான். ‘முன்னால பாடின சர்க்கார் வைஃபுக்கு embarassing-ஆ இருக்கும்; இனி பாடப்போறவங்களும் தயங்கலாம். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்” சொல்லிவிட்டு தூரத்தில் நண்பர்களுடன் பாண்ட்பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவனைப் பெருமையுடன் பார்த்தேன். எப்படியெல்லாம் மற்றவர்களுக்காகச் சிந்திக்கிறான்.

நேற்று தன் பிறந்தநாள் என்று தெரிந்தும் ஓர் இறந்த தொழிலாளியை காடுவரை சென்று எரியூட்டியபின் லேட்டாக வந்தான். வந்தும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். எனக்குக் கவலையாக இருந்தது. எதையாவது சொல்லி முதலில் பேசவைக்க வேண்டும். “கலாப்ரியாவோட கவிதை ஒண்ணு.. ‘உயிர்த்தெழுதல்’னு..” ஆரம்பித்த அடுத்த நொடி “வெளில போ!” ஆத்திரம் அத்தனையும் அடுக்கடுக்காய் அழுந்த மடித்த கனத்தோடு அவனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன. அதிர்ந்தேன். அவமானமாக இருந்தது. பர்வதம் அத்தை சாப்பிட்டுப் படுத்துவிட்டிருந்தாள். பெட்ரூமுக்குப் போய், ‘அம்மா ஊரில் இல்லை நான் மட்டுமாவது வந்து மாப்பிள்ளையைப் பார்க்கிறேன்’ என்று சொல்லியிருந்த அப்பாவை வரவேண்டாம் என்று ஃபோன் செய்தேன். பேசாமல் படுத்துக் கொண்டேன். அழத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். எனக்குத் தெரியவில்லை.

அரைமணிநேரம் கழித்து அறைக்குள் வந்தவன், மன்னிப்புக் கேட்பதற்கோ, தன்னிலை விளக்கமாகவோ பேச ஆரம்பித்தான். “அந்தக் குடும்பத்தைப் பாத்ததும் எனக்கு எங்கம்மாவும் இப்படித்தானே நின்னிருப்பான்னு தோணிடுத்து. என்னால தாங்கவே முடியலை மஞ்சு. ஏற்கனவே சிமெண்டு ஃபேக்டரி தூசு; அதுல குடிப்பான் போல இருக்கு, குடல் நுரையீரல் எல்லாம் போய்.. காப்பாத்த முடியலை. சின்னச் சின்னதா மூணு குழந்தைங்க. என்னால மத்தவங்க மாதிரி வேலை வேற, குடும்பம் வேறன்னு பிரிக்க முடியலை. நாட்டுக்கு ராஜா பத்துலேருந்து அஞ்சு மணி வரைக்கும் மட்டுமா ராஜா? ராணுவக்காரன் மாதிரி எப்பவும் அலர்ட்டாதான் என்னால இருக்கமுடியும். அதே எண்ணத்தோட வளர்ந்துட்டேன். இந்த மாதிரி கவிதை எழுதி இரங்கற்பா படிக்கறதவிட நீ புருஷன் போன அந்தப் பொண்ணப்பார்த்து பேசி ஏதாவது வேலை சம்பந்தமா என்ன தெரியும்னு கேட்டு உதவினா நல்லாயிருக்கும். ஆணா நான் செய்யறதவிட நீ அதிகம் செய்யமுடியும் இந்தமாதிரி குடும்பங்களுக்கு.”

அவ்வளவுதான். பாய்ந்து கட்டிப்பிடித்து இழுத்துக் கொண்டேன். எவ்வளவு பெரியவன் இவன்; எப்படிப்பட்டவனைப் பிடித்திருக்கிறேன். காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து.. காலையிலிருந்து துளிர்விட்ட எண்ணம் மேலெழுந்தது. காலையில் ஸ்ரீதர் க்ளாஸ்மேட் ப்ரதீப் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தான். குடும்பமே வயசுக்கு வந்ததும் வக்கீலாகிவிடும் பரம்பரை. வாய் ஒயாத பேச்சுக்கிடையில் “மஞ்சுளா, இப்படியே உக்கார்ந்திருந்தா நீ குண்டடிச்சுடுவ. சோஷியல் சர்வீசா ஃப்ரீ லா கன்சல்டன்சி செஞ்சு தரோம் எங்க ஃபேமிலி. பெண்கள் பிரிவுக்கு டெம்பரரியா பொறுப்பு எடுத்துக்க முடியுமா? சில பேப்பர் உனக்கு excemption கிடைக்கும். போஸ்டல்ல லா கிராஜுவேஷன் முடிச்சா முழுக்க நீயே பார்த்துக்கலாம். உன் ஆர்வமும் பேப்பர் முடிக்காட்டாலும் உன் திறமையும் டெடிகேஷனும் தெரிஞ்சே இதை எங்கப்பாகிட்ட சொல்லிட்டு உனக்குத் தரேன்.” பழைய ஆசைகள் கிளப்பப்பட்டதுபோல் உணர்ந்தேன். நாளையிலிருந்து புதிதாக பழையதையெல்லாம் ஆரம்பிக்கலாம். அத்தை உதவிக்கு இருக்கிறாள். ஸ்ரீதரிடம் சொல்ல நேரம் அமைந்தது என்று சந்தோஷப்பட்டேன்.

“ப்ச், நான் உன் ஆசையெல்லாம் தெரிஞ்சுதான் ஆரம்பத்துலேருந்து உன்னைவிட்டு விலகியே இருக்கணும்னு நினைச்சேன். ஆனா ஒரு மோசமான சூழ்நிலைல நீ முடிவெடுத்து நாம் சேர்ந்துட்டோம். ஏற்கனவே ஒரு வருஷம் என்ன வாழ்ந்தோம்னே தெரியாம ஓடிப் போயிடுச்சு. எல்லாத்தையும் ஓரமா வை. எவ்வளவு வேணுமோ வீட்டிலேருந்தே படி. இங்கயே என்னல்லாம் செய்யமுடியுமோ செய். முதல்ல ஒரு குழந்தை பெத்துக்கலாம். இரண்டு வருஷத்துல இன்னொன்னு தத்து எடுத்துக்கலாம். எங்கயும் வேலைக்குன்னு வெளில கமிட் பண்ணிக்காத. நீ வீட்டுல இருக்கேன்னா என்னால முழு நானா என் வேலைகளைச் செய்யமுடியும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் எப்பவும் நீ வேணும். சின்னவயசுல எங்கம்மா வேலைக்குப் போய் நாங்க இழந்ததுதான் அதிகம். நம்ப குழந்தைகளுக்கு அது தேவையில்லை. என்ன சொல்ற..” நெருக்கினான்.

குழந்தை என்ற வார்த்தையில் சொக்கிப்போனேன். முதல்சந்திப்பில் ஸ்ரீதர் வீட்டில் அவன் ஃபோட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவனையே வாங்கிச் சுமந்து, ‘இந்தா!’ என்று அவனுக்கே கொடுக்கப் போகிறேன். அப்புறம் தெரியும் நான் யாரென்று. யுக யுகமாய் அவ்வளவு உயிரினங்களும் செய்துகொண்டு வரும் சாதாரண விஷயம்தான் பெற்றுப் போடுவது என்றெல்லாம் தோணவேயில்லை. நான் மட்டும் ஏதோ பெரிய சாதனை செய்யப் போகிறேன் போல் தோன்றியது. “பாப்பா யார் மாதிரி இருக்குமோ?.. நாளைக்கு நீ சும்மா லீவு போடணும் எனக்காக, சரியா?.. ப்ரதீப் திரும்ப கேட்டா, ‘போடா, நான் பாப்பா பண்ணப்போறேன், வரலை’ன்னு சொல்லிடுவேன்.. உன் பர்த் டே நாளைக்கு செலிப்ரேட் பண்ணிக்கலாம்.. போனாப் போறது, நாளைக்கு ஒருநாள் உன்னைப் பாப்பாவா வெச்சுக்கறேன்.. டெலிவரி வரைக்கும் உன்கூடவே இந்த வீட்டுலதான் இருப்பேன்” முத்தங்களுக்கு நடுவில் பிதற்ற ஆரம்பித்தேன். இவ்வளவு நாள்களாக ஒவ்வொன்றாய் உள்ளே நழுவிக்கொண்டிருந்தது போக, குழந்தை எண்ணம் ஒட்டுமொத்தமாக என்னை உருவிப்போட்டது. மாமியாரின் இறப்பிற்குப்பின் சிறிது நீண்ட இடைவேளைக்குப்பின் முதல்முறையாய் மீண்டும் ஒருவரிடம் ஒருவரை இழந்துகொண்டிருந்தோம்.

மறுநாள் லீவுபோட்டு, முதல்வாரமே வாங்கிவைத்திருந்த கவிதைத் தொகுப்பைக் கொடுத்தான். “யார் எழுதியிருக்காங்கன்னெல்லாம் தெரியாது. சாலிடா நிறைய கவிதை இருந்தது இந்த புக்ல. வாங்கிட்டேன். உனக்குப் பிடிக்குமான்னு தெரியாது.” தயங்கிக் கொண்டே கொடுத்தான். ரசனை ஒத்துப் போகாமல் கணவன் மனைவி வாழமுடியாது என்று எந்த முட்டாள் சொன்னது? என் ரசனையை ஒத்த எந்த இலக்கியவாதியையும்விட, புரியாவிட்டாலும் என் ரசனையை மதிக்கும் இவன் உயர்ந்தவன் என்றே தோன்றியது. அப்பாவிற்கு ஃபோன் செய்து, நேற்று பார்க்கமுடியாததற்கு சாரி சொல்லி இன்று மதியம் வரச்சொன்னான். அத்தை வற்புறுத்தியதால் கோவில், அப்புறம் ஷாப்பிங் என்று சுற்றிவிட்டு வந்து சாப்பிட்டு நிம்மதியாக மதியம் தூங்குகிறான். நான் தான் தூக்கம் வராமல் பக்கத்து நாற்காலியில் புத்தகத்தை எடுத்துப் பிரித்துவைத்துக் கொண்டு படிக்காமல் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்துக்கொண்டிருப்பது உள்ளுணர்வில் உணர்ந்தோ என்னவோ விழிப்பு வந்து திரும்பிப்படுக்கிறான். சமீபத்தில் அம்மாவுக்குக் ‘காரியங்கள்’ செய்ததில் கொஞ்சம் இளைத்திருக்கிறான். கண்கள் சிவந்து ஒரு திருப்தியான தூக்கத்திற்குப் பின்னான தெளிவில் இருந்தவனின் கண்களைப் பார்த்து மயங்கித் தடுமாறித்தான் போனேன்.

“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டஅப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே”

திருப்பாணாழ்வார் வந்து, ‘கொஞ்சிக்கோ!‘ என்று அடியெடுத்துக் கொடுத்துப் போனார். என் மனதைப் படித்தவன்போல் சிரித்துக் கொண்டே இடதுகையால் தனக்குப் பக்கத்தில் படுக்கையில் தட்டி ‘வந்து படு’ என்று சைகை செய்தான். பொய்க்கோபமாக டேபிள் மேலிருந்த பென்சிலைத் தூக்கி அவன்மேல் எறிந்தேன். வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.

ஜன்னல் வழியாக, படுத்துக்கொண்டே தலையைத் தூக்கிப் பார்த்த ஸ்ரீதர், அப்பா வருவது தெரிய, ‘மாமாவப் பாத்தே நாளாச்சு’, மரியாதையும் பாசமுமாக ஒரு தற்காலிகப் படபடப்போடு எழுந்து லுங்கியைச் சரிசெய்துகொண்டே வாசலுக்கு நடக்கையில்…

அதற்கும் முன்பாகப் பர்வதம் அத்தை ‘வாங்கோ, இருக்கா ரெண்டுபேரும்’ என்று தேவைக்கதிகமாக சிரித்துகொண்டே கதவைத் திறந்துவிட நெருங்குகையில்…

மிச்சப்பணத்தை வாங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பிவிட்டு, கைநிறைய பரிசுப் பைகளோடு வாசலிலிலிருந்தே அப்பாவின் பார்வை மட்டும் அனைவரையும் தாண்டிக்கொண்டு தன் பெண்ணைக் காண, துடிப்போடு வீட்டின் உள்துழாவும் போது…

உற்சாகமாகவும் சந்தோஷமுமாகவும் எழுந்த நான் புத்தகத்தில் படித்துக்கொண்டிருந்த பக்கத்தில் அடையாளம் வைக்கும்முன், கவிதையின்மேல் ஒருமுறை அவசரப் பார்வையை ஓட்டினேன்..

===
“சீதா கல்யாண வைபோகமே
ராமா கல்யாண வைபோகமே

சிவதனுசு நகர்த்திப்
பந்தெடுத்த சீதையை–
பின் எப்பொழுதுமே
பார்க்க முடிந்ததில்லை
ஜனகனால்.”
===

முற்றும்.

 

எத்தனைபேருக்கு Google Knol குறித்துத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இத்தனை நாள் கழித்தாவது அதுகுறித்துச் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

கூகிள் எத்தனையோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தினாலும், மாநில மொழிகளைத் தட்ட ஒன்றை அறிமுகப்படுத்தும்போது அது சமையல்குறிப்புப் போட்டியைத் தேர்ந்தெடுத்ததுதான் என்னையும் திரும்பிப்பார்க்கவைத்தது என்று சொன்னால் அது மிகையான பொய். அப்படி ஒரு நிகழ்வையே எனக்கு அறிமுகப்படுத்திய பெருமை பிரகாஷைச் சேரும். வழமைபோலவே ஒருமுறை திறந்துபார்த்து இதெல்லாம் போரடிக்கும்வேலை என்று ஒதுக்கிவிட்டாலும் சஞ்சவ் கபூர் என்ற பெயர் கொஞ்சம் உறுத்திக்கொண்டே இருந்ததும் உண்மை.

திடீரென்று 19-ஆம் தேதி மாலை ஞானோதயம் வந்து (மாதக் கடைசிநாளான 30-ஆம் தேதி தான் பொதுவாக போட்டிகள் முடியும் என்ற பொதுப்புத்தியில்) இன்னும் 10 நாளைக்குள் ஏதாவது தட்டி அனுப்பிவைக்கலாம் என்று திறந்துபார்த்தால் 20-ஆம் தேதியே கடைசி. :(( இன்னும் ஒரு நாளைக்குள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கமுடியாதவாறு அன்று மும்பையில் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி. சஞ்சீவ் கபூரை பாமுகி வென்றார்.

மறுநாள் கச்சேரி hangover முடிந்து பெட்டி திறக்கும்போது பத்துமணிநேரத்துக்குள் எதுவும் செய்யக்கூடுமாறு உடலும் மூளையும் ஒத்துழைக்கவில்லை. தடக்கென்று ஒரு யோசனை. என் புகைப்படங்கள் கோப்பை திறந்து பல நாள்களாக எழுதவேண்டும் என்று எடுத்துவைத்து, எழுதாமலே விட்டுப்போயிருந்த காமாசோமா ஐட்டங்களை எல்லாம்– google knol பக்கமே தமிழில் தட்டத்தான் என்றாலும் (நமக்கெதற்கு அதெல்லாம்?)– கலப்பையில் தட்டித் தட்டி வெட்டி ஒட்டித் தள்ளினேன். படம் எடுக்காமல் வெறுமே குறிப்பு மட்டுமே தட்டி வைத்திருந்தவைகளையும் சேர்த்துக்கொண்டேன். ஒரு போட்டி என்று தெரிந்தும் மிகச் சாதாரணமான குறிப்புகளை அனுப்பி ஜட்ஜை கேவலப்படுத்துவதற்காக ஒரு மானசீக மன்னிப்பும், “ஆமா, இதெல்லாம் அவங்க இங்லீஷ்லயோ ஹிந்திலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சா பார்க்கப் போறாங்க? வேற யாராவது இதெல்லாம் தேர்ந்தெடுப்பாங்களா இருக்கும்,” என்று மனதுக்குச் சமாதானமும் சொல்லிகொண்டேன்.

கூகிளிடமிருந்து, போட்டியில் பங்கேற்றதற்காக நான் மேற்கொண்ட சிரமங்களுக்கு (பின்ன?) பாராட்டும் நன்றியும், எனக்குப் பரிசு கிடைக்காததற்கு வருத்தமும்(ஓ!) தெரிவித்த உணர்ச்சிக்கலவையான கடிதக் காவியம் கிடைத்தது. பரிசுகிடைத்த குறிப்பை நான் செய்துபார்த்தே தீரவேண்டும் என்று ஓடோடிப் போய் பார்த்ததில் அது ‘மதுரை கோழி சூப்’. ஆஹா, தோற்றது நாமானாலும் ஜெயித்தது நமது மதுரை மண் என்று புளகித்துப் போனேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே வீட்டில் மறைத்தும் மறந்தும் சந்தோஷமாக இருந்துவந்தேன். அப்படியே இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு நல்லநாளில், குடும்பமே விடுமுறையை அனுபவித்து குஷியாக கும்மாளமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளில் ஒன்றாக என் ஒரு குறிப்பும் (அது எது என்று கடைசிவரை கூகிள் சொல்லவில்லை.) இருப்பதாகச் சொல்லி ஒரு டீஷர்ட்டை பார்சல் அனுப்பிவைத்திருந்தார்கள். பரிசே கிடைக்காததைவிட கொடிது ஆறுதல் பரிசு பெறுவது என்பது என் சித்தாந்தமானாலும் அன்றுதான் அதன் பலனை நேரில் கண்டு நொந்தேன். அதுவரை சஞ்சீவ் கபூர் என்ற பெயர் ஆகாத ஒன்றாக இருந்ததுமாறி கோவிந்துக்கு அந்தப் பெயர் ஒரு புத்திசாலியினுடையதாகவும், எதையும் சரியாக எடைபோடத் தெரிந்தவருடையதாகவும் போனதில் வியப்பெதுவுமில்லை.

ஆனால் நானே அதையெல்லாம் புறக்கணித்து, என் தோல்வியை(மட்டும்) பிரகாஷுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, இந்த டீஷர்ட்டை எந்தப் பேண்டுக்கு மேட்ச் ஃபிக்சிங் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்ததை, தோல்விக்கான வருத்தமான போஸ் என்று நினைத்து, வழமையாக இதுபோன்ற தருணங்களில் அப்பாவுடன் சேர்ந்து கன்னாபின்னாவென்று காலைவாரும் பெண், “நீ தோக்கலைம்மா.., உன் ரெசிப்ப்பி தோத்துப் போச்சு!…” என்று என்னைத் தேற்றி ஆற்றுப்படுத்தியதற்கும், அடுத்தநிமிடமே நான் நிமிர்ந்துபார்த்தபோது அந்த டீஷர்ட் அவளுடைய வார்ட்ரோபிற்குள் போய்விட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை.

அடுத்த பத்துநாளில் என் மெயில்பெட்டிக்கு ஒரு செய்தி. “உங்கள் குறிப்புகள் பத்தாயிரத்துக்குமேல் பார்வையிடப்பட்டு இருக்கிறது. நீங்கள் எந்த மொழியில் எழுதுகிறீர்கள்?” என்று மொழியே தெரியாதவரிடமிருந்து ஒரே ஒரு மறுமொழி. “அடக்கொடுமையே இன்னுமா இந்தச் சமுதாயம் சமையல்குறிப்பு படிச்சு சீரழிஞ்சுகிட்டிருக்கு?!” என்று பெரிய இலக்கியவாதி, முற்போக்கு மாதிரி விசனப்பட்டுத் திறந்துபார்த்தால் எல்லாப் பதிவுகளும் 200, 300 என்று வட்டமான எண்களையே ஹிட் எண்ணிக்கையாகக் காண்பித்தன. மொத்தம் 11 ஆயிரத்துச் சொச்சம் ஹிட் என்று சாத்தியமில்லாத ஒன்றைக் காட்டிக்கொண்டிருந்தது. [சமையல் குறிப்பை அடியோடு வெறுத்த (சுஜாதா)சாரிடம் ஐயங்கார் புளியோதரைக்கு 10000 ஹிட் ஆனதும் சொல்லிக் கடுப்படிக்க நினைத்தேன். நடக்கவில்லை. :(( அன்றாடம் உச்சத்திலேயே இருக்கும் ஐயங்கார் புளியோதரையின் ஹிட்டே இந்த 3 வருடங்களில் 17 ஆயிரத்துச் சொச்சத்தில்தான் இருக்கிறது என்ற முரணையும் சொல்லவேண்டியிருக்கிறது.) இதுகுறித்து பலமுறை நினைத்தும் எழுதமுடியாமல் போய்விட்டது.

அது ஆயிற்று கிட்டத்தட்ட 10 மாதங்கள். இன்று ஒருவர் ‘திரளி அடை’ குறித்துத் தேடி என் வலைப்பதிவை வந்தடைந்த மறுமொழி கேட்டு நானே நினைவுவந்து அங்கே போய்ப் பார்த்தால் மொத்த ஹிட் 72016 என்றும் தனிப்பட்ட முறையில் பதிவுகளுக்கான ஹிட் எல்லாம் 1000, 2000, 3000… என்று போகிறது. ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் மாதிரி கூகிளைத் தெரிஞ்சுகிட்டேன்.

நீதி: அலட்டிக்கொள்ளாமல் ஹிட் அதிகம் காட்ட, அணுகவேண்டிய முகவரி, Google Knol.

பி.கு: ஊருக்குப் போய்விட்டு வந்தபின் என் அந்தச் சமையல் குறிப்புகளை இங்கே போடுவேன்.

ஆன்மிகவாதிகள் கூட நாத்திகவாதிகளாகும் பொழுது இதுதான். உலகில் எப்போது கொடுமை நடந்தாலும் அவதரிப்பதாகச் சொன்ன கடவுள்களை எங்கே காணோம்?

ஐயகோ!
தமிழன்னையின்
முள்கிரீடத்தில்
இன்னுமொரு
நெருஞ்சிப்
பூவா?

[– கவிப் பகைவன் ஆசிப் மீரான், நிழல்கள் புத்தக வெளியீட்டில்….]

அன்புள்ள ஹரன் பிரசன்னா,

புத்தகங்கள் எப்போதும் மகிழ்ச்சியளிப்பவைதான் என்றாலும் நாம் அறிந்தவர் எழுதிய புத்தகங்கள் இன்னும் பிரத்யேகமான மகிழ்ச்சியைக் கொண்டுவருபவை. அப்படி எழுதியிருப்பவர் எனக்குத் தெரிந்து பத்திருபது பேர் இணையம் முழுவதும் இருக்கலாம் என்றாலும் அதனினும் பிரத்யேகமானது இந்த நூல் வெளியீடு என்பதைச் சொல்லத் தேவை இல்லை. 

அந்த விதத்தில் உங்கள் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்த நொடியே காணாமல்போனேன் என்று சொல்லவிரும்பாவிடினும்  புல்லரித்தேன் என்பதில் பொய்யில்லை. பக்கங்களைப் புரட்டும்போதுதான் அந்த அனுபவத்திற்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. கடைசியிலிருந்து ஆரம்ப நாள்களை நோக்கி நகர்ந்த– புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப– கவிதைகளை வாசிக்க வாசிக்க- மெதுவாகப் புரிந்துகொண்டேன், நான் திருப்பிக் கொண்டிருப்பது பக்கங்களையோ கவிதைகளையோ  மட்டுமல்ல– என் கடந்த வருடங்களின் ஈடிணையில்லா இணைய நாள்களையும் சேர்த்தேதான் என்பதை.

எப்படிப்பட்ட அனுபவம் என்பதை வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை. இனி, இந்த உணர்விலிருந்து வெளிவந்து வெறும் வாசகனாக முடிவெடுத்து, திரும்பவும் பலமுறை கவிதைகளினூடாக நடைபயில ஆரம்பித்தாலும், நாலுகால் பாய்ச்சலில் நினைவுகள் பின்னோக்கி ஓடுவதைத் தடுக்கவே முடியவில்லை.

எல்லாக் கவிதைகளின் ஜனனத்திலும் இணையேற்றத்திலும்கூட உடனிருந்தவள் என்ற தகுதியே, என்னை இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு விமர்சனமோ(!) திறனாய்வோ(?!)  எழுதும் தகுதியை இழக்கச் செய்கிறது. அப்படி எழுதுவது, எழுதிய கவிஞனே விளக்க உரை எழுதக்கூடிய அபத்தத்திற்கு இணையானதாகும் என்பதையும் அறிந்தே இருக்கிறேன் என்பதும் அதை இங்கே பதிவுசெய்வதுகூட இப்பொழுதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பதை நீங்கள் சொல்ல நினைப்பதை அறிந்தும் சொல்லிவைக்கிறேன்.

என்றாலும், இந்த நெகிழ்ச்சியான நேரத்தில் உங்களை வாழ்த்திச் சொல்லவும் வேண்டிக் கேட்கவும் ஒன்று உண்டு என்றால் அது–  அந்தத் தகுதியின்மை எனக்கு எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; இனி வரும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதை, புதினங்கள் எல்லாவற்றினூடாக நீங்கள் இனியும் நிகழ்த்தப் போகும் இலக்கியப் பயணம் அனைத்திலும்கூட நட்பின் நாதமாக நானும் உடன் வந்தவளாகவே இருக்கவேண்டும் என்பதுதான்.

நலம் ஒன்றே நாடும் நட்புடனும் வாழ்த்துகளுடனும்,
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

இப்படி எல்லாம் நான் எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்க என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. நிழல்கள் புத்தகத்தை இங்க வாங்கிகிட்டு அப்படியே எஸ்’ ஆயிடுங்க.  நம்ப ரெண்டுபேருக்குமே அதுதான் நல்லது.

0

சே சே ஜெயஸ்ரீ அந்த மாதிரி ஆள் இல்லைன்னு என்னை சரியாப் புரிஞ்சுண்டு, மேல இருந்த எதையும் படிச்சு நேரத்தை வீணாக்காம, நேர ஸ்கிரீன் ஸ்க்ரோல் செஞ்சு பதிவோட இந்த இடத்துக்கே வந்தவங்க… வாங்க. என்னைப் புரிஞ்சுகிட்ட உங்களை நான் ஏமாத்தப் போறதில்லை.

நான் சொல்ல வந்தது இதுதான்:

அந்தக் கவிதைத் தொகுப்பு முழுமையானதில்ல. அது புத்தகத்தோட தலைப்புக்கு ஏத்தமாதிரி கவிஞரோட சில நிழல் பிம்பங்களைத்தான் காண்பிச்சிருக்கு. தானும் ஒரு பின் நவீனத்துவ பெருச்சாளிக் கவிஞர்னு பேர் எடுக்க, கூட்டப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நீள அகலத்தோடான பிம்பங்கள் அவை. எல்லாத்துலயும் ஒரு பின் நவீனத்துவ கருமை படர்ந்து பாதாள பைரவியா நமக்கெல்லாம் புரியாம இருக்கலாம்.

கவிதைகள் குழப்பலாம்; ஆனா தன் பிம்பத்துல குழப்பம் எதுவும் வரக்கூடாதுன்னு கவிஞர் முன்ஜாக்கிரதையா தன் பழைய கவிதைகளை அப்படியே மறைச்சு ட்ரங்க்பெட்டிக்குள்ள போட்டு  பரண்மேல ஏத்திட்டாரு. நாமளும் அதை அப்படியே விட்டுடமுடியுமா?

 அதனால நிழல்களை நம்பாம நிஜங்களைத் தேடறவங்க– பின் நவீனத்துவத்துவக்கு முன்னான- அரிதாரங்கள் இல்லாத– ஒரு (காதல்) கவிஞர் உதயமான உண்மை முகத்தை, அதோட வர்ணங்கள், சமன்பாடுகளோட பார்க்க நினைக்கறவங்களுக்கு இங்க கொஞ்சம் கவிதை(!!)களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்…..  (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு! வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதால தமிழுக்கு நான் செய்ற தொண்டா இதை எல்லாம் தோண்டி எடுத்து…..) 

 

மெத்தைக்குக் கீழே
கத்தை கத்தையாய்
காற்றே சுவாசிக்காத
கவிதைகள் நிறைந்த
காகிதங்கள் கிறுக்கல்களாய்.
……
…..

அட அது நான் ஓட்றது இல்லைங்க. அவரோட ‘காதல் சுகமானது?’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்!) கவிதைலயே தன்னைப்பத்தி அம்மணிக்கு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.
 
 

வெற்றுக் காகிதத்தின்
வரட்டு வார்த்தைகள்
முத்த பதிலினால்
முளைவிடுமாதலால்
மரப்பாச்சி பொம்மையையும்
மனிதனாக்கும்
அக்காதல் வித்தையை
காற்றில் அனுப்பு
காத்திருக்கிறேன் நான்.
…..

— “காதலுமது”

தோடாஆஆ…
 

 

கடலை போடறது கேட்டிருப்பீங்க. கவிஞர் கடலை தட்றாக.

காதல் கடலை
தானாய் வெடித்தால்
சுகப்பிரசவம்
அல்லாதுபோனால்
அதை உடைக்கத்
தடி எதற்கு?
தட்டல் போதும்

— “சடுகுடு”

 

பிரிவில் உணர்கிறேனடி
பாசத்தின் பரிணாம வளர்ச்சி
காதலாகிப்போனதை

அடீ புடீன்னெல்லாம் கூப்பிட்டு ஒளறலைன்னா அது காதல்கவிதையே இல்லை போல. கொடுமை! (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு!)

பூவரசம் பெண்ணே
காற்றில் என் காதல் அனுப்புகிறேன்
மேகத்தின் வழி உன் மோகம் அனுப்பு

என்னா டீலிங்கு! என்னா டீலிங்கு!!

பிரிவின் வெம்மையில் கவிதை சொல்கிறேன்
கட்டி அணைத்து என் கவிதை நிறுத்து

வந்துட்டாங்கய்யா பால்வெளிக் கவிஞர் வைரமுத்துவுக்கே போட்டியா…

— “காதல்”

 

காதல் விதை விதைக்கப்பட்டிருந்தால்
தவிர்த்திருந்திருக்கலாம்
காதல் மரமே நடப்பட்டபோது
நெஞ்சம் கொஞ்சம்
மிரண்டுதான் போனது!
அ·றிணைகளுக்கு
உயர்திணைகளின்
அவஸ்தை புரியாதோ?

— “குற்றச்சாட்டுகள்”

நெஜமாவெ முடியலடே…

 

இருபதில் இதழ் சுவைத்தபோது
இதயத்துள் மோகம் இருந்தது
முப்பதில் முயங்கியபோது…
நாற்பதின் நகக்கீறல்களில்…
ஐம்பதில் ஆசைகொண்டபோது…
அறுபதில்…

அப்பல்லாம் என்னாச்சுன்னு தெரியணுமா? அதுக்கு “அந்தி” கவிதை படிக்கணும். ஃஃஃஃ

 

காமம் தொலைத்தலினும்
எளிதும்
இனிதும்
உயிர்தொலைத்தல்

— “காமம்”

டீலா நோ டீலா…
 

 

எந்தவித முகாந்தரமுமில்லாமல்
காரணங்களைத் தேடிச் சொல்லி
விலகிய நாளிலும்
உள்ளங்கையில் உடல்வாசம் இருந்தது

— ‘மீண்டுமொரு கனத்த இரவு”

இப்பல்லாம் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கற பெர்ஃப்யூமே அரைமணி நேரத்துக்கு மேல தாண்ட மாட்டேங்குது!

 

 

கடுகினுள்ளே
மோகத்தின் முத்தம் முடிந்து
காமத்தின் யுத்தம் கழிந்து
ஞான வெடிப்பு
கருத்து விளைச்சல்

— “ஞானம்”

பழம் நீயப்பா!….

 

 

செய்வினைக்கே தகர்ந்தேனெனில்
செய்யப்பாட்டு வினையில்..?

— “முத்தம்” 

கடைசியா சொல்ல விரும்பிக்கறேன். நம்ப பால்வெளிக் கவிஞர் வைரமுத்து, ஜீன்ஸ் படத்துக்கு பாட்டு எழுதவிட்டுத்தான் தமிழ்கூறும் நல்லுலகுக்கே “இரட்டைக்கிளவி” இலக்கணக் குறிப்பு புரிஞ்சதாம். அதுமாதிரி செய்வினை, செய்யப்பாட்டு வினை எல்லாம் தெரிஞ்சுக்க விரும்பினா, (மரத்தடி மக்கள் எல்லாம் ஏற்கனவே படிச்சு பாஸாயிட்டங்க!) “முத்தம்” கவிதையைப் படிச்சே ஆகணும்.

 

இன்னும், பாத்ரூம் கண்ணாடில வெந்நீர்பட்டு ஆவிபடிஞ்சா என்ன செய்யணும்? லேருந்து,

“புணரும் நாயை பொழுதுபோகாத சிறுவன் இன்னிக்கு மட்டும் ஏன் கல்லால அடிக்கலை?” …

“மூக்கு நுனில ஈ எப்ப எங்க என்னிக்கி வந்து உக்கார்ந்துச்சு; அப்றம் என்னாச்சு” … வரைக்கும் பல விஷயங்களுக்கு பதில்தெரிய நீங்க செய்யவேண்டியதெல்லாம் இதுதான்!

  • A. காதல் வந்ததும் இவிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதக் கிளம்பிடறாய்ங்களா
  • B. கவிதை எழுதக் கிளம்பினதும் இப்படி காதல் காஜல்னு ஒளற ஆரம்பிக்கறாங்களா

 

உங்க சரியான பதிலை [trunkbox (ஸ்பேஸ்) A(அல்லது B) (ஸ்பேஸ்)உங்கள் பெயர்] எழுதி haranprasanna at gmail dot com க்கு அனுப்புங்க அல்லது sms பண்ணுங்க.சரியான விடை எழுதறவங்கள்ல 10 பேருக்கு குலுக்கல் முறைல இவரோட “ட்ரங்க்பெட்டி கவிதைகள்” மின்னூலை அனுப்பிவைப்பாங்க.

குலுக்கல்ல தேர்ந்தெடுக்கப்படாத 99990 பேர் கவலைப்படாதீங்க. Vasan Eye Care மாதிரி, “நாங்க இருக்கோம்.” (மெயில், Buzz, facebook, orkut, twitter எல்லா வண்டிலயும் ஏத்தி அனுப்பிடமாட்டமா?)

இப்படிக்கு,
கவித்தொலைவி
மார்க்கெடிங் டேமேஜர் ஆஃப் மார்க்கெடிங் மேனேஜர்.

Jeyamohan

[வீடு மறுசீரமைப்புப் பணிகள் துரிதமாக நடப்பதால் கணினியில், இணையத்தில் இயங்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இந்தப் பதிவு பின்னர் மீளேற்றப்படலாம். :)]

உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

தேவையான பொருள்கள்:

கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு

kollu podi (kaanaa podi)

செய்முறை:

  • துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.

பொடிகள் அளவு அவசரத்துக்கு ஆபத்பாந்தவன் யாருமில்லை. அதிகம் எண்ணெய், காரம், மசாலா இல்லாத எளிமையான உணவும். கூட. நமக்குத் தேவையான மருத்துவ குணங்களுடைய பொருள்களையும் மானாவாரியாக இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை. இனி, அவ்வப்போது சில பொடிவகைகளும் செய்துபார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு

paruppu podi 1

செய்முறை:

  • துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். கூட்டு, அப்பள, வடாம் வகைகள் சேரும்.

புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்

வறுத்து அரைக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

தாளிக்க:  எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

poriththa rasam

செய்முறை:

  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.

மிஷினில் அரைக்கும் வசதி இல்லாதவர்களும் சுலபமாக இந்த முறையில் அரிசி வடாம் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 10
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு

arisi vadaam 3

செய்முறை:

  • முதல்நாள் இரவே அரிசி, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம், இரண்டு பங்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • அத்துடன் மேலும் ஒரு பங்கு தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மிக மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தில் மேலும் 3 பங்கு தண்ணீர் வைத்து, சுட ஆரம்பித்ததும், அரைத்த அரிசிக் கலவையைக் கொட்டி, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
  • கட்டிகளாகச் சேர்ந்து வரும். பயப்படத் தேவையில்லை. மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் நன்கு வெந்து நிறம் மாறி சேர்ந்தாற்போல் கெட்டியாக வந்தபின் மூடிவைத்து, அடுப்பை அணைக்கவும்.
  • மறுநாள் காலை எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீரில் மோர் கலந்து தொட்டுக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தேவைப்படும் வடாம்களைப் பிழிந்துகொள்ளவும்.
  • நன்கு காயவைத்து எடுத்துவைத்து தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவும்.

 * மிச்சமுள்ள நீர்மோரைக் கலந்தே கலவையை லேசாக மட்டும் நெகிழ்த்தி, ஒரு ஸ்பூனால் வில்லைகளாகவும் செய்துகொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 4
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு

செய்முறை:

  • பச்சரிசியைத் தண்ணீரில் களைந்து நிழலில் உலர்த்தி, முக்கால் பதம் காய்ந்ததும் (பிடித்தால் பிடிக்கவரும், உதிர்த்தால் உதிர்க்க வரும்) ஜவ்வரிசியைச் சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவில் ஒரு கப் மாவிற்கு 6 கப் தண்ணீர் என்ற அளவில் அடிகனமான பாத்திரத்தில் போட்டு கட்டிகளில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதையும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் நன்றாக மாவு வெந்து நிறம் மாறி, குழம்பாகச் சேர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
  • விரும்பினால் எள் அல்லது சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இறக்கியபின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒவ்வொரு கரண்டியாக மாவை வைத்து அப்பளம்போல் பெரிய வட்டங்களாக இழுத்துக் கொள்ளவும்.
  • வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துப் பொரிக்கவும்.
  • அரிசி அப்பளம் போல் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 8
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சம் பழம் – 2

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து, கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • நிதானமான சூட்டில் அல்லது சிம்மிலேயே எரியவிட்டு, ஒரு கொதி வந்ததும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்க்கவும்.
  • தண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஜவ்வரிசி பாதி வெந்ததும், மேல் பாகம் கண்ணாடிபோல் ஆகி, உள்ளே சிறிதுமட்டும் வெள்ளை தெரியும்போது மூடிவைத்து, அடுப்பை அணைத்துவிடவும்.
  • உள் சூட்டிலேயே இன்னும் சிறிது வெந்து கலவை ஆறியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்து சுவைத்துப் பார்த்து திருத்தலாம்.
  • கெட்டியான விழுதாக இருக்கும் இந்தக் கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு, கையால் பெரிதாக அப்பளமாகத் தட்டவும்.
  • இரண்டு பக்கமும் வெயிலில் காய்ந்ததும் எடுத்துவைத்து விரும்பும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.

* இந்த வகை அப்பளத்திற்கு ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வெந்து, கரையாமல் முத்து முத்தாக இருக்கும்.

தக்காளி ஜவ்வரிசி அப்பளம்:

கால்கிலோ ஜவ்வரிசிக்கு கால் கிலோ தக்காளி சேர்த்துக் கொள்ளவேண்டும். தக்காளியை லேசாக வெந்நீரில் கொதிக்கவிட்டு தோலை நீக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொண்டு, மேலே சொன்னபடி தயாரிக்கலாம். கொதிக்கும் ஜவ்வரிசிக் கலவையில் பச்சைமிளகாய் விழுதைச் சேர்க்கும்போது தக்காளி விழுதையும் சேர்க்கவேண்டும். எலுமிச்சைச் சாறு இதற்குத் தேவை இல்லை.

தேவையான பொருள்கள்: 

ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
உப்பு
பெருங்காயம்

javvarisi appalam 1
 

செய்முறை:

  • ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • குக்கரில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.
  • மறுநாள் காலை வெந்த ஜவ்வரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • எலுமிச்சைச் சாறு, சீரகம் சேர்த்து சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு பெரிய கரண்டி மாவை விட்டு வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும்.
  • மறுநாள் அடுத்தப் பக்கமும் திருப்பிப் போட்டு, இருபுறமும் காய்ந்ததும் எடுத்து வைத்து தேவைப்படும்போது பொரிக்கலாம்.

javvarisi appalam  1(fried)

* இது எக்ஸிபிஷன் அப்பளம் போன்ற சுவையுடன் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட அளவில் செய்துகொள்ளலாம்.

* வடாம்களுக்குச் சேர்ப்பது போல் அப்பள வகைகளுக்கு புளிப்பு காரம் அதிகம் சேர்க்கத் தேவை இல்லை.

* பொதுவாக வடாம் அப்பளம் வகைகளுக்கு நைலான் ஜவ்வரிசியாக இல்லாமல் மாவு ஜவ்வரிசியாக இருந்தால் நல்லது.

* பொதுவாக ஜவ்வரிசி வடாம் அப்பளம் வகைகளில் அதிகமாக நீர் விட்டால் லேசாக இருக்கும். பொரித்தால் சிவந்து போவதுடன் பல்லிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் நன்கு வேகவைத்து கனமாக இழுப்பதே சரியான முறை.

-0-

மைதா ஜவ்வரிசி அப்பளம்:

முதல்நாள் இரவே ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து, ஐந்து கப்புக்கு ஒரு கப் அளவு மைதாவை நீரில் கரைத்துச் சேர்த்துக்கிளறி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை மேற்சொன்ன முறையில் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கலாம்.

 

ஓமம் ஜவ்வரிசி அப்பளம் (குட்டீஸ் ஸ்பெஷல்):

பச்சை மிளகாயே சேர்க்காமல், சிறிது தயிர், உப்பு, ஓமம், சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 1கப்
தண்ணீர் – 3 கப்
பச்சை மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 சிட்டிகை
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1

javvarisi vadaam 1

செய்முறை:

  • இரவில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் உள்பாத்திரத்தில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்து சூடாக்கவும்.
  • தண்ணீர் காய்ந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை(அதன் தண்ணீருடன்) சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி, வெயிட் போட்டு மிதமான சூட்டில் மேலும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • மறுநாள் காலையில் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துச் சேர்க்கவும்.
  • எலுமிச்சைச் சாறு கலந்து சுவையைச் சரிபார்க்கவும். இந்தப் பக்குவத்தில் சிறிது மாவை சாப்பிட்டுப் பார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து வரிசையாக விடவும். (வட்டமாக இருக்கத் தேவையில்லை. குழந்தைகள்கூட செய்யலாம்.)
  • வெயிலில் நன்கு காயவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.
  • சாதாரண ஜவ்வரிசி வடாத்திற்கு சிறிது தயிர் சேர்த்துச் செய்தால் வெள்ளை வெளேரென்று இருக்கும்.

-0-

இந்த ஜவ்வரிசி வடாத்தை பலவிதமான உபரிமசாலாக்களுடன் செய்யலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன்.

வெங்காய ஜவ்வரிசி வடாம்:

மேற்சொன்ன முறையிலேயே பச்சை மிளகாய் அரைக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தையும், அதற்கு ஈடாக அதிகம் ஒரு பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்க்கவேண்டும்.

தக்காளி ஜவ்வரிசி வடாம்:

ஒரு கப்புக்கு இரண்டு பெரிய தக்காளி என்ற விகிதத்தில் பச்சை மிளகாயுடன் அரைத்துக் கலக்கலாம். அல்லது தக்காளியை தனியாக அரைத்து சாறை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். சாறு சேர்ப்பதால் தண்ணீரைக் குறைத்து உபயோகிக்கவும். இந்த வகைக்கு, எலுமிச்சை சில துளிகள் சேர்த்தால் போதும்.

பூண்டு ஜவ்வரிசி வடாம்:

10 லிருந்து 15 பூண்டுப் பற்களை பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவேண்டும்.

பிரண்டை ஜவ்வரிசி வடாம்:

பிஞ்சு பிரண்டையாக எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வேப்பம்பூ ஜவ்வரிசி வடாம்:

வேப்பம் பூக்களை மரத்திலிருந்து நேரடியாகப் பறித்து அரைக்காமல் அப்படியே கூழோடு கலந்துகொள்ளலாம்.

புதினா கொத்தமல்லி ஜவ்வரிசி வடாம்:

கொத்தமல்லி முக்கால் பங்கும் புதினா கால் பங்கும் இருக்குமாறு கால் கப் எடுத்து பச்சை மிளகாயோடு அரைத்துச் சேர்க்க வேண்டும்.

  •  மிக்ஸியில் இவைகளை விழுதாக அரைக்கமுடியவில்லை என்றால், அவற்றோடு 2 டீஸ்பூன் கூழையே சேர்த்து ஒரு ஓட்டு ஓடவிட்டால் விழுது நைசாக அரைந்துவிடும்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

ammani kozhukkattai
 

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
  • மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
  • கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.

* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

என் சின்ன வயதில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் வந்தாலே வீட்டுக்கென்று சில நடவடிக்கைகள், வாசனைகள், பிரச்சினைகள் என்று களைகட்டும். 

அன்றாடம் மாவடு, வேப்பம் பூ, கஸ்தூரி மஞ்சள், வற்றல் வடாம், வடகம், அப்பளம் இவற்றில் ஏதாவது ஒன்றாவது வீட்டில் பெரியவர்களுக்கு வேலை எடுக்கும். இதோடு வருஷசாமான் என்று அப்பொழுதெல்லாம்– புளி, துவரம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் என்று மொத்தமாக ஒரு வருடத்திற்கான சாமான்களை வாங்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். ஒரு துணியைக் கீழே விரித்து, பலகையை மடியில் சாய்த்துவைத்துக் கொண்டு கடுகை கொஞ்சம் கொஞ்சமாக சரியவிட்டு சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். முழுஆண்டுத் தேர்வு, [இதைத்தான் பிரச்சினை என்று சொன்னேன். :)], மொட்டை மாடி அரசாட்சி, புளியங்கொட்டை கலக்ஷன், லீவுக்கு ஊருக்குப் போவது என்று ஒரே களேபரமான மாதங்கள் இவை இரண்டும்.

இப்பொழுதெல்லாம் வெளியே சாமான்களை காயவைக்கக் கூடிய அளவுக்கு சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா என்றே பயமாக இருக்கிறது. சாம்பார் பொடி, ரசப்பொடி சாமான்களைக் கூட நான் வெயிலில் வைப்பதில்லை. வாணலியில் லேசாக வறுத்து அரைத்துவிடுகிறேன்.

வடாத்திற்கு மாவு கிளறியதும் சுடச் சுட மாவை வாயில் போட்டால் லேசாக ஒட்டிக்கொண்டு விர்ரென்று காரம் காதில் ஏறும். மாவு ஆறினாலும் சுகம் தான். பிழிந்த பிறகு ஓஹோ. “வடாம் பிழிஞ்சதை சாப்பிடாத. மாவாவே எவ்வளவு வேணுமோ சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணு; எங்களுக்குப் பிழியற வேலையாவது மிச்சமாகும்” என்று அம்மா திட்டி (பாட்டி அதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.) தட்டுநிறைய பச்சை மாவை நீட்டினாலும், அது ஓரளவுக்கு மேல இறங்குவதில்லை. பிழிந்தவடிவம் வேறு சுவை என்பதால் இதற்கெல்லாம் அடிபணிய அவசியமுமில்லை. எனக்கென்னவோ அதே மாவில் பிழிந்தாலும் ரிப்பனும், ஓமப்பொடியும், முள்ளு முறுக்கும் தனித்தனிச் சுவையாக இருப்பதாகத் தோன்றும்.

பெரியவர்கள் இரண்டுபேரும் பாலுக்கு பூனையை காவல் வைத்துவிட்டு காலி அண்டா குண்டா உழக்கு எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கீழே போய்விடுவார்கள். அப்புறம்தான் நம் வேலையே(பரிட்சைக்குப் படிப்பதுதான்) ஆரம்பிக்கும். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல காய்ந்தும் காயாத கால் காய்ச்சல், அரைக் காய்ச்சல் வடாம், முக்கால் காய்ச்சல் வடாம்களை அந்த நாளில் இழந்துவிட்டால் இனி அடுத்த வருடம் உச்சிவெயிலில்தான் கிடைக்கும். சும்மா நச் நச் என்று லாகிரியாக இருக்கும். இதில் நம்வீட்டு வடாத்தைவிட அக்கம்பக்க மொட்டைமாடி வடாம்கள்தான் மேலும் சுவையாக இருப்பதோடு அந்த சீசன் முழுமைக்கும் குறையாமல் கிடைக்க அதுவே வழி. திருட்டு வடாம்தான் என்றாலும் அந்தந்த வீட்டு வாரிசோடு சேர்ந்து எடுக்கும்போது அதில் இருக்கும் திருட்டுக் கறை அழிந்து அது ஒரு உடன்படிக்கை என்ற அளவில் ஆகிவிடும். 🙂

இப்பொழுதெல்லாம் இந்த வடாம் மாவு, அப்பள மாவு, இலைவடாம் இவையெல்லாம் தயாரிக்க இல்லாவிட்டாலும் பச்சையாக சாப்பிடவாவது செய்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. காயவைக்கப் போவதில்லை என்றால் சீசனே தேவையில்லை. கொட்டும் மழையிலும் செய்துகொள்ளலாம்.

-0-

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கிலோ
ஜவ்வரிசி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)
உப்பு – தேவையான அளவு (சுமார் ஒரு கைப்பிடி)
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

 arisi vadaam 1
 

செய்முறை:

  • பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்து வாங்கவும்.
  • அடி கனமான குண்டான் அல்லது பிரஷர் குக்கரில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாகக் கொட்டி, கைவிடாமல் கிளறவேண்டும்.
  • சுமார் பத்து நிமிடங்களுக்குள் மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.
  • காம்பில்லாத பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
  • மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும். [இந்த நிலையில் சுவையை சோதித்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.]
  • சுத்தமான(?!) மொட்டைமாடித் தளத்தில் துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரை விரித்து காற்றில் பறக்காமலிருக்க நான்கு பக்கமும் கற்களை வைக்கவும்.
  • கை ஒட்டாமலிருக்க, ஒரு பாத்திரத்தில் மோர்கலந்த தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உழக்கில் மாவை அடைத்து, ஓமப்பொடி, ரிப்பன், முள்ளுமுறுக்கு என்று விரும்பிய வடிவத்தில் வடகம் இடலாம்.
  • வெயிலில் 3, 4 நாள் காயவைத்து (ஒடித்தால் டக்கென்று ஒடியவேண்டும்.) காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும்.
  • தேவைப்படும்போது எண்ணெயை நன்கு சுடவைத்து, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  • 2 டீஸ்பூன் கசகசாவையும் பொடித்துக் கலந்துகொண்டால் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.
  • எல்லா மாவையும் உப்பும் காரமும் கலந்து செய்யாமல் குழந்தைகளுக்காக கொஞ்சம் மாவில் சர்க்கரை, பழ எசன்ஸ், கலர் சேர்த்துச் செய்யலாம்.

* பொதுவாக மாவை முதல்நாள் இரவின் கடைசிவேலையாக கிளறிவைத்துவிட்டு, மறுநாள் அதிகாலையில், பச்சைமிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறைக் கலந்து வெயில் ஏறுவதற்கு முன்பே பிழிந்துவிடுவது சரியானது. இந்த முறையில் வடாம் சீக்கிரம் காய்ந்து பிரிக்கவரும். காலையிலே எழுந்துதான் கிளறினால் வேலையும் அதிகம். சூட்டில் பிழிவதும் சிரமம்; பிளாஸ்டிக் பேப்பரில் சூடோடு பிழிவது நல்லதுமில்லை.

 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கலவை சாதங்கள், சாம்பார்/குழம்பு சாதம், ரசம் சாதம், புலவு, பிரியாணி வகைகள்… இப்படி எல்லாம் அடுக்கத் தேவையில்லை. சும்மாவே சாப்பிடலாம். 🙂