நம்பெருமாள்:
ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு(அப்போது தில்லி சுல்தான்) பயந்து ஒளித்து எடுத்துப்போன அரங்கன் சிலையை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு அரங்கனை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன.
ஆனால் யாருமே காணமல் போன அரங்கனை அறிந்தவர்கள் உயிருடன் அப்போது இல்லாமல் போக, மீட்கப்பட்ட விக்கிரகத்தை சந்தேகத்தின் பேரில் கோவிலுக்குள் அனுமதிக்காமல் ஆரியபடாள் வாசலிலேயே (மூன்றாம் பிரகாரம்) வைத்துவிடுகிறார்கள். அப்பொழுதுதான் வில்வமரத்தினடியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த தாயார் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். [இதனால ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் இரண்டு மூலவர்கள்.]
இதைக் கேள்விப்பட்ட மக்களுக்கு ஒருவேளை மீட்கப்பட்டது ஒரிஜினல் அரங்கன்தானோ, அதனால் தான் காணாமல் போனதும் மறைந்த தாயார், திரும்ப பெருமாள் வந்ததும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டாளோ என்று சந்தேகம் வந்து அதை அப்போதைய மன்னனிடம் தெரிவிக்கிறார்கள்.
நடந்த அனைத்தையும் கேட்ட மன்னன் அந்தக் காலத்தவர் யாரேனும் இருக்கிறார்களா என தேடச்சொல்ல, அரங்கனின் ஆடைகளை சலவைசெய்து கோவில் கைங்கர்யம் செய்துவந்த ஒரு 93 வயது வண்ணான், கண்பார்வை இழந்தவராக இருப்பது தெரிகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய அங்க அடையாளங்கள் ஒத்துப் போகிறது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, இரண்டு தெய்வங்களுக்குமான அபிஷேக தீர்த்தம் அவருக்கு அளிக்கப் படுகிறது. மீட்கப்பட்ட அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய சலவை செய்பவர், ‘ இவரே நம் பெருமாள்!’, இவரே நம் பெருமாள்’ என மகிழ்ச்சியில் கத்த, அவரே அசல் அரங்கன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் அதனாலேயே இன்று அவர் பெயரை ‘நம்பெருமாள்’ என்று சொல்கிறோம்.
=0=
நம்பெருமாளுக்கு “பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்..” என்று அரையர் பாடுவதைப் போல் நாயகியர் பன்னிருவர். எனக்குத் தெரிந்தவரை…
1. மஹாலஷ்மி:
கோயில் மூலவரின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மி. இவர் அரங்கனுக்கு கழுத்தில் சங்கிலியுடன் கூடிய ஒரு தங்க டாலர் மாதிரி தரிசிப்பவர்களுக்குத் தெரியலாம். ஆனால் உண்மையிலேயே உள்ளே அரங்கனின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மிக்குத் தான் அந்தக் கவசம். இவருக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பட்டரால் ஏகாந்த திருமஞ்சனம் செய்யப் படுகிறது. அப்போது கோயில் ஜீயர், பட்டருக்கு சாமரம் வீசுவது இன்றும் நடந்து வருகிறது.
2, 3 உபயநாச்சிமார்- ஸ்ரீதேவி, பூதேவி:
இவர்கள் உற்சவ மூர்த்திகள். தை மாதப் புறப்பாடுகளில் வீதி பெருமாளுடன் வீதி உலாவும் வருவார்கள். ஸ்ரீரங்கத்தில் மட்டுமே உபயநாச்சிமாரிலிருந்து ஆண்டாள் வரை பன்னிரெண்டு தாயாரும் அமர்ந்த திருக்கோலம்.
4. கருவூல நாச்சியார்:
பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சன்னதி. கருவூலம், நகைகள் பண்ட பாத்திரங்கள் மற்றும் கணக்கு வழக்குகளைக் காவல் காக்கும் நாயகி. திருக்கார்த்திகை அன்று எங்கள் பக்கத்துவீட்டு உத்தமநம்பி பெரிய சன்னதியிலிருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.
5. சேரகுலவல்லித் தாயார்:
அர்ச்சுன மண்டபத்தில் (பகல் பத்து உற்சவ மண்டபம்) துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சன்னதி. இவர் குலசேகரத்தாழ்வாரின் பெண். ஸ்ரீராமநவமி அன்று இவருடன் பெருமாளுக்குத் திருமண உற்சவம் நடக்கும்.
6. துலுக்கநாச்சியார்: (ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன், என்றாலும் இங்கும்…)
ஆட்சி பல கைகளுக்கு மாறி முகலாயர்களுக்குப் போனபின், டில்லிப் பேரரசரின் மகள் சுரதாணியிடம் அரங்கன் சிலை இருக்கிறது. அரங்கன்மேல் காதலால் அவள் தன் அறையில் தன்னுடனேயே வைத்திருக்கிறாள்.
அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.
ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையுடன் அவளை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.
தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். (பார்க்க, இந்தக் கட்டுரையின் முதல் பத்தி)
ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு அங்கேயே மயக்கமடைந்து இறந்தும் போகிறாள் இளவரசி. அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபடுகிறார்கள்(கிறோம்.) அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.
மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். (மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும். இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.) வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள். மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாள்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க?) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது. ‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு. எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது. ‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.
7. செங்கமலவல்லித் தாயார் (தான்யலஷ்மி):
ஆர்யபடாள் வாயில் வழியாக வெளிவந்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சன்னதி. இந்தத் தாயார் தான்யங்கள், கோயில் மாடு, யானை, கால்நடைகளுக்குக் காவல் நாயகி. கோயிலின் தான்யக் கிடங்கு இங்குதான் இருக்கிறது.
8. ஸ்ரீரங்க நாச்சியார்:
ஸ்ரீரங்கநாதரின் அதிகாரபூர்வ பட்டமகிஷி. கோயில் வாயில் தாண்டாதவர். பங்குனி உத்திரம் அன்று திருமண உற்சவமும் சேர்த்தி சேவையும். எதிரில் இருக்கும் கம்ப மண்டபத்தில் தான் கம்பராமாயணம் அரங்கேறியது.
9. ஆண்டாள்:
நம்பெருமாள் சம்மதம் சொல்ல பெரியாழ்வார் ஆண்டாளை அழைத்துக் கொண்டு வந்து தங்கியிருந்த இடம் தான் இன்றைய வெளி ஆண்டாள் சன்னதி. அதன் வாயிலே அப்போதெல்லாம் காவிரிக் கரையாக இருந்திருக்கிறது. பின்னர் திருட்டு பயம் காரணமாக உற்சவர் மட்டும் ரெங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சன்னதிக்கு மாற்றப்பட அது இப்போது உள்ஆண்டாள் சன்னதி என்றழைக்கப்படுகிறது.
10. உறையூர் கமலவல்லி:
அரங்கநாயகி தவிர்த்தும், உறையூரில் கமலவல்லி என்பவரையும் அரங்கன் மணக்கிறார். உறையூர் செங்கமலவல்லி அல்லது வாசவல்லித் தாயார் என்பவர் உறையூரை ஆண்ட சோழனின் மகள். குழந்தையில்லாத நந்த சோழனுக்கு ஒரு தாமரைத் தடாகத்தில் கிடைத்த குழந்தையை எடுத்து ‘கமலவல்லி’ என்று பெயரிட்டு வளர்த்துவந்தான். விளையாடும் போது குதிரையில் சென்ற அரங்கனைக் கண்டு கமலவல்லி காதல்கொள்கிறாள். அவளிடம் காணப்படும் வருந்தத்தக்க(?!) மாற்றங்களை அறிந்த மன்னன், விசாரித்து அறிந்து, பிறகு விமரிசையாகத் திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் பின்னர் அவள் அரங்கனின் சன்னதியில் கலந்து மறைந்துவிட, மனம் மாறிய மன்னன் தன் செல்வம் அனைத்தையும் கொண்டு அவ்விருவருக்கும் உறையூரில் ஒரு கோவிலைக் கட்டினான்.
ஆனால் அரங்கன் சிலை அங்கு கிடையாது. பங்குனி உத்திரத்திற்கு முன்னால் ஆறாம் திருநாள் ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் உறையூர் சென்று அங்கு திருமணம் நடக்கும். அங்கு மோதிரத்தைக் கமலவல்லிக்குக் கொடுத்துவிட்டு வந்து, இங்கு தொலைந்துவிட்டதாக ரெங்கநாயகியிடம் பொய்சொல்லி, காவிரிக்கரையில் தீவட்டிகளைக் கொண்டு (அன்று ஒருநாள் மட்டும் தீவட்டிகள்(தீவர்த்திகள்) தலைகீழாக பூமியை நோக்கிக் காண்பித்தவாறு எடுத்துச் செல்லப்படும்.) தேடுவதுபோல் பாசாங்கு செய்வது வருடா வருடம் இன்னமும் நடக்கிறது. 🙂
உறையூரிலிருந்து திரும்பி வரும் வழியில் வெளிஆண்டாள் சன்னதியில் ஆண்டாளுடன் மாலை மாற்றும் வைபவம் மட்டும் நடைபெறும். திருமண உற்சவம் இவருக்குக் கிடையாது.
11. காவிரித் தாயார்:
சொல்லத் தேவையே இல்லை. ஆடிப் பெருக்கு(இது சில வருடங்களில் ஆடி 18ம் தேதியும் சில வருடங்களில் ஆடி 28ம் தேதியும் வரும்.) அன்று அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவது விசேஷம்.
12. பராங்குச நாயகி (நம்மாழ்வார்):
தன்னை பராங்குச நாயகியாக பாவித்து பெருமாளை நாயகனாகப் பாவித்து,
‘கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்..” [ரொம்பத்தான்!..:)]
என்று தாய்ப் பாசுரமாக அரங்கனைப் பாடிய நம்மாழ்வார்; மார்கழி 7ம் திருநாள் பராங்குச நாயகியாக பெண்வேடத்தில் வரும் நம்மாழ்வாரை கைத்தல சேவையில் ஆட்கொள்ளும் ஆழ்வார் மோட்சம் காரணமாக இவரும் நாயகியாகிறார்.
உலகில் அனைத்து உயிருமே ஜீவாத்மா (நாயகி), இறைவன் மட்டுமே பரமாத்மா (நாயகன்) என்பதன் குறியீடு பராங்குச நாயகி. இதை நம்புபவர்கள் எந்த நிலையிலும் விதவைக் கோலம் பூணத் தேவை இல்லை(மாட்டார்கள்.) இதை நம்புபவர்கள் பெண்களில் வித்தியாசம் காண மாட்டார்கள். பெண்கள் முதலில் இப்படி பேதம் பார்க்காமல் இருக்க ஆரம்பிக்கவேண்டும், முக்கியமாக இது போன்ற பண்டிகை நாள்களில்.
சனி, ஒக்ரோபர் 20, 2007 at 10:07 பிப
ஜெயஸ்ரீ பாரதியார் கட்டுரையில் ஆரம்பித்து பராங்குச நாயகியில் முடித்திருப்பதும் அந்தக் கடைசி பத்தியும் அருமை! களைய வேண்டியதைக் களைந்து ஆனால் கலாசாரத்தைக் காப்பது- பாரதியார் கூட புதுமைப் பெண் என்று இப்படித்தான் எதிர்பார்த்திருப்பாரோ?
மொத்தம் 22 கட்டுரைகள் நவராத்திரிக்கு. நான் சரியாக எண்ணியிருக்கிறேனா? 🙂 பெரிய சாதனைதான். அதற்காக எங்களோடெல்லாம் பேசாமல் எங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க வேண்டுமா என்ன? :))
சனி, ஒக்ரோபர் 20, 2007 at 10:51 பிப
dear JM,
read every bit of information about all the THAYARS and preserved it.
Naam mattra thayargalai oppukondalum, Sriranganayagi thayar aettrukolvalo?
thanks a lot.
sundaram
ஞாயிறு, ஒக்ரோபர் 21, 2007 at 5:55 முப
jeyahsree, i got very emortional to read all that you have written ,particularly what nammazvar says. or your opinion of what he says..
wonderfull
kathkalakshepam kadailyila ellarukkkum punniyam kidaikkumnnu solvangalam .adhumadhirithaan ithuvum. enakku kovil kalachara anubavam edhuvume illayadhalal idhayellam padikka romba nanraga irukku.
திங்கள், ஒக்ரோபர் 22, 2007 at 12:46 முப
மிகவும் நீரோட்டமான நடையில், திருவரங்கத் தாயார்களின் வைபவம் மிகவும் இனிது!
அரங்க நகரின் துலுக்கநாச்சியார் கதை வேறு,
இராமானுசர் மீட்டெடுத்த செல்வப் பிள்ளையின் துலுக்க நாச்சியார் வேறு. மேலக்கோட்டையின் கதை இங்கே! http://madhavipanthal.blogspot.com/2007/04/2_22.html
//எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது. ‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.//
கர்ப்பூரப் படியேற்ற சேவை பற்றியும், அரையர்கள் தீந்தமிழால் சொல்லாடும் நிகழ்வுகள் பற்றியும் தனியாக ஒரு பதிவிடுங்களேன் ஜெயஸ்ரீ!
//இதை நம்புபவர்கள் எந்த நிலையிலும் விதவைக் கோலம் பூணத் தேவை இல்லை(மாட்டார்கள்.) இதை நம்புபவர்கள் பெண்களில் வித்தியாசம் காண மாட்டார்கள். பெண்கள் முதலில் இப்படி பேதம் பார்க்காமல் இருக்க ஆரம்பிக்கவேண்டும், முக்கியமாக இது போன்ற பண்டிகை நாள்களில்//
Well Said! நன்று சொன்னீர்கள்!
தம்மை அலங்கரித்துக் கொள்வது அரங்கனுக்காகவே என்று எண்ணிய அடியார்கள் வாழ்ந்த இடம். சபரியின் கோலம் கண்டு அஞ்சவும் ஒதுங்கவும் செய்வாரோ பெரிய பெருமாள்?…பெண்களைப் பெண்களே பேதம் பார்ப்பதை முதலில் தவிர்த்தாலே போதும். சீராகி விடும்!
செவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 8:54 முப
Asatherelle .Good Job
செவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 11:46 முப
seetha, Rama Rajagopalan, நன்றி.
Sundaram sir, பெரிய முன்யோசனை இல்லாமல் எழுதினேன். மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் சேர்க்க/ மாற்றவேண்டும்.
KRS, இது குறித்து ஏற்கனவே கூமூட்டை சொல்லி, இங்கே பேசியிருக்கிறோம். https://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/
மேல்கோட்டை துலுக்க நாச்சியாரும், ஸ்ரீரங்கம் துலுக்கநாச்சியாரும் வேறு என்பது எனக்குச் செய்தி. இந்த வருடம் விடுமுறையில் மேல்க்கோட்டையில் செய்த தரிசனமும், கோயில் நாதஸ்வரமும், கோயில் அர்ச்சகர் அவரே கூப்பிட்டுக் கொடுத்த சாப்பாடும்(‘அதெப்படி உனக்கு மட்டும் எல்லாக் கோவில்லயும்..’ என்று வீட்டினர் வியந்தோதாமல் இருப்பதில்லை.) மறக்க முடியாதது. கற்பூரப்பொடி சேவை, அரையர் சேவை போன்ற கூட்ட நாள்களில் கோயிலுக்குப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.
செவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 11:50 முப
Vijayram,
நீங்கள் பதிவுலகில் இருக்கிறீர்களா என்று முன்பே கேட்டிருக்கிறேன். நீங்கள் பதில் சொன்னதில்லை. உரிமை எடுத்து உங்கள் பின்னூட்டத்தில் ஒரு வாக்கியத்தை எடிட் செய்துவிட்டேன்.
//மொத்தம் 22 கட்டுரைகள் நவராத்திரிக்கு. நான் சரியாக எண்ணியிருக்கிறேனா? பெரிய சாதனைதான். அதற்காக எங்களோடெல்லாம் பேசாமல் எங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க வேண்டுமா என்ன? :))//
எத்தனை கட்டுரைகள் என்று எண்ணவில்லை. பதில் சொல்லக் கூடாதென்பதெல்லாம் எதுவுமில்லை. பத்து நாள்களாக உடல் நலமில்லாமல் இருந்தேன். வலையில் மேயவில்லை. ஏற்கனவே கட்டுரைகள் ஏற்றியிருந்தேன். நடுவே சில நிமிடங்கள் வந்து பின்னூட்டங்களை மட்டும் அனுமதித்து, படங்களை ஏற்றினேன். மன்னிக்கவும்.
புதன், ஒக்ரோபர் 24, 2007 at 6:01 பிப
பத்து நாள்களாக உடல் நலமில்லாமல் இருந்தேன். வலையில் மேயவில்லை
டியர் ஜெய்
இப்போது எப்படி இருக்கிறீர்கள்? தீபாவளிக்குள் நன்றாகிவிட ப்ராத்திக்கிறேன். (வேற எதுக்கு பட்சணம் பண்ணத்தான்)))). அதானல உண்மையாகவே உங்க்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்.
வியாழன், ஒக்ரோபர் 25, 2007 at 8:48 பிப
//பத்து நாள்களாக உடல் நலமில்லாமல் இருந்தேன்.//
take care of your health.
வெள்ளி, ஒக்ரோபர் 26, 2007 at 4:04 முப
//பத்து நாள்களாக உடல் நலமில்லாமல் இருந்தேன். வலையில் மேயவில்லை
//
இப்போ பரவாயில்லையா ?
Get well and cheer up 🙂 🙂
வெள்ளி, ஒக்ரோபர் 26, 2007 at 8:39 முப
ஜெயஸ்ரீ, நான் பதிவு எதுவும் எழுதுவதில்லை. அதனால் தான் பதில் சொல்லவில்லை. தேசிகன் பக்கம் வழியாக எந்த ஆர்வமும் இல்லாமல்தான் இங்கே படிக்க வந்தேன். உங்கள் குறிப்புகளைவிட அதைச் சொல்லும் விதமும்,உங்கள் வேறு பல எண்ணங்களும் பிடித்துப் போனதால் கஷ்டப்பட்டு தமிழிலும் அடிக்கக் கற்றுக் கொண்டு உங்களுக்கு அவ்வப்போது பின்னூட்டம் மட்டும் அடிக்கிறேன்.
நான்கூட உங்கள் மெயில் ஐடி தரமுடியுமா என்று முன்பு ஏதோ ஒரு பதிவில் கேட்ட ஞாபகம். நீங்கள் தரவில்லை. 🙂 உங்கள் மரத்தடி, பதிவுலகம் தாண்டியும் நல்ல நண்பர்கள் இருக்கலாம் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. 🙂
கொலு வைப்பதில்லையா? 😦 பின் எப்படி இவ்வளவு நினைவலைகள் கட்டுரைகள்? ஏன் தினமும் இவ்வளவு உணவு வகைகள் செய்தீர்கள்? ஒன்றும் புரியவில்லை. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும். பதிவுகளுக்கும் பதில்களுக்கும் எந்த அவசரமில்லை.
செவ்வாய், ஒக்ரோபர் 30, 2007 at 12:47 முப
//மரத்தடி, பதிவுலகம் தாண்டியும் நல்ல நண்பர்கள் இருக்கலாம் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை.//
விஜய்ராம் ஏன் கேட்கவில்லை? அவசியம் கேளுங்கள். அதற்குமுன் நீங்கள் குறிப்பிடும் அம்மணியின் நண்பர்கள் யார் யார் எப்படிப் பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மரத்தடியில் பிகேசிவகுமார். இவர் ஆர் எஸ் எஸ்ஸிற்கும் அதன் சார்பாளர்கள் அரவிந்தன் நீலகண்டன் முதல் அனைத்து இந்துத்துவவாதிகளையும் எதிர்த்து சாடி பதிவெழுதி முற்போக்கு சிந்தனை பில்டப் கொடுத்துக் கொள்வார். ஆனால் ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் துதி பாடுவார். விற்கிறதோ இல்லையோ, இந்துத்துவ புத்தகங்களை மட்டும்தான் எனிஇந்தியனில் வெளியிடுவார். வேறு எந்த மதசார்புப் புத்தகங்களும் பார்த்த நினைவில்லை.
கிழக்குப் பதிப்பகம் பத்ரி. (அண்ணனுக்கு அக்காவைச் சொன்னாலோ அதைவிட அக்காவுக்கு அண்ணனைச் சொன்னாலோ கோபம் வந்துவிடும்.) இணையத்தில் தலித்துகளும் பெரியாரிஸ்டுகளும் மார்க்ஸிய பின்நவீனத்துவ பிராண்டல்களுமே பிச்சை வாங்கவேண்டிய அளவு அண்ணன் எழுத்தில் முற்போக்கு. ஆனால் பதிப்பிக்கிற புத்தகங்கள் எல்லாம் ஊரிலிருக்கும் அம்மன்களும் சாமிகளுமாக இவரிடம் வரம் வாங்கி வருகின்றன. அதிலும் ஞாநி விஷயத்தில் பார்ப்பனரைச் சாடியதும் அண்ணனிடமிருந்து வந்த ஒலிபரப்பையும் ஒப்பாரியையும் பார்த்திருப்பீர்கள். இப்போதெல்லாம் ஞாநி வேஷம் மட்டுமா கலைகிறது? 🙂
ரோஸாவசந்த் பெரியார் குறித்து என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் அம்மணி ஏற்றுக் கொள்வார். பெரியாரே வந்தாலும் தன் கருத்தை ரோஸாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தால் தான் அம்மணி ஏறெடுத்துப் பார்ப்பார்.
உஷாவும் அம்மணியும் மரத்தடியில் வேற்றுமைப்பட்டவர்கள்தான். ஆனால் ஜெயஸ்ரீக்கு ஒன்றென்றால் முதலில் ஓடிவருபவர் உஷாதான். காரணத்தை யாரும் ரூம்போட்டு யோசிக்க வேண்டியதில்லை.
ஹரன்பிரசன்னா, சுந்தர் வகையறா பின் தொடரும் நிழலின் குரல்கள்.
ச.திருமலை, ஜயராமன், எ.அ.பாலா, வெங்கட் என்று தீவிர இந்துத்துவ உபநண்பர்களும் முக்கியமானவர்கள்.
கடைசியாக ஓசை செல்லா வந்துபோயிருக்கிறார். அநேகமாக விரைவில் அவரும் பூணூல் போட்டு அபிவாதயே சொல்லலாம்.
//கொலு வைப்பதில்லையா? பின் எப்படி இவ்வளவு நினைவலைகள் கட்டுரைகள்? ஏன் தினமும் இவ்வளவு உணவு வகைகள் செய்தீர்கள்?//
இவ்வளவு அறியாமையிலா இருக்கிறீர்கள். சாமி இல்லை, சடங்கு இல்லை என்று பொதுவில் சொல்லிக் கொள்ள வேண்டும். தொழிலில் வரம் வரமாய் சே! சரம் சரமாய் புத்தகங்கள் வெளியிட வேண்டும், கதாகாலாட்சேபம் செய்யவேண்டும் என்று நண்பர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அம்மணியும் அதே வழி.
ஜெயஸ்ரீக்கு பிள்ளையார் சதுர்த்தி கிடையாது. ஆவணி அவிட்டம் கிடையாது. மாமா பூணூல் மாற்றவில்லையா என்று கேட்டேன். இன்னும் பதிலில்லை. நவராத்திரி கொலு வைக்க மாட்டார். முற்போக்கய்யா முற்போக்கு. ஆனால் பாரதியாரிலிருந்து பராங்குசநாயகி வரை 22ஓ 23ஓ(இந்தக் கணக்குகள் எல்லாம் உங்களுக்குத் தான் தெரியும்.) இடுகைகள் வரும். விதவிதமாய் உணவுக் குறிப்புகள் சொல்வார்.
எனிவே, சும்மா தேசிகன் மாதிரி அப்பிராணிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வராமல், மேற்படி தீவிர வகைகளில் ஏதாவது ஒன்றில் அடங்கினால் நீங்களும் நண்பராகலாம். எனக்குக்குத்தான் கொடுப்பினை இல்லை. மெயில் முகவரி about பக்கத்தில் இருக்கிறது. All the best!
ஜெயஸ்ரீக்கு பி.கு: உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் ஜெயஸ்ரீ. Above all, I too care for you. 😦
புதன், ஒக்ரோபர் 31, 2007 at 5:18 பிப
srilatha, சொக்காயி, ஜெயஸ்ரீ, பின்னூட்டத்தின் இடையில் வரும் ஒரு வரியைக் கூட இவ்வளவு கவனமாகப் படிப்பீர்கள் என்பது எனக்குச் செய்தி. நன்றி.
vijayram, மரத்தடி, பதிவுலகம், நண்பர்கள் blah blahவில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. முன்பு மரத்தடியில் மட்டுநராகவும், டாட் காம் வேலையும் செய்ததால் சிலருடனாவது தொடர்பு வைத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது எல்லாருடனும் பதிவு மூலமான தொடர்பு மட்டும் தான். இந்தியா வந்தபின் என் priorities மாறிவிட்டது என்பது முக்கியமான காரணம். என் பெண்ணோடு மட்டுமே அதிக நேரம் செலவழிக்க நினைக்கிறேன். எப்போதுமே ஆன்லைன் வருவதில்லை. சாட் செய்வதில்லை. அதிகம் யாருக்கும் தனிமடல் எழுதுவதில்லை. இந்த வலைப்பதிவுக்காக எழுதி வைத்துள்ள பல ரெசிபிகளுக்கு இன்னும் சமைத்து படம் எடுக்க நேரமில்லை; எடுத்து வைத்துள்ள பல படங்களுக்கு இன்னும் ரெசிபி எழுத நேரமில்லை; அதனால் பதிவு அவ்வப்போது நின்று போகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஏற்கனவே அறிமுகமான நண்பர்கள் தவிர மற்ற ஐடிகளில், சுட்டிகளில் ஒரு தயக்கம் வைக்க வேண்டிய அளவில் இப்போது இணையம் இருப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். காரணம் அதுமட்டும் தான்.
என் மெயில் ஐடி, about பக்கத்தில் சொல்லியிருக்கிறேன்.
நீங்கள் தேசிகன் பக்கம் வழியாக வந்தது குறித்து மகிழ்ச்சி. அவர் என் இனிய நண்பர். எங்களுக்குள்(மட்டும் தான்) அநியாயத்துக்கு சண்டையே வந்ததில்லை. 🙂
புதன், ஒக்ரோபர் 31, 2007 at 9:48 பிப
// ஆனால் ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் துதி பாடுவார். விற்கிறதோ இல்லையோ, இந்துத்துவ புத்தகங்களை மட்டும்தான் எனிஇந்தியனில் வெளியிடுவார். வேறு எந்த மதசார்புப் புத்தகங்களும் பார்த்த நினைவில்லை.
//
ஆஹா… ஆரம்பிச்சிட்டாங்கய்யா… ஆரம்பிச்சிட்டாங்க. 🙂 ஜெயகாந்தனைத் துதி பாடுகிறேன் என்று சொன்னாலாவது, சரி என்று சொல்வேன். ஜெயமோகன் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர். அவரை எங்கே துதி பாடினேன். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட அதே நேரத்தில் முரண்படுகிற பல விஷயங்கள் எனக்குண்டு. ஜெயமோகனைத் துதிபாடுகிற என்று நண்பர் ஹரன் பிரசன்னாவைச் சொல்லியிருந்தாலாவது அவர் பதிலுக்கு உங்களை ஏதும் சீண்டியிருப்பார் 🙂 சான்ஸைத் தவறவிட்டு விட்டீர்களே… :-))
எனிஇந்தியனின் இந்துத்துவப் புத்தகங்களை மட்டும்தான் வெளியிடுகிறோமா? எந்தப் புத்தகம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? நீங்கள் தமாசுக்குத்தான் எழுதியிருப்பீர்கள். ஆனால் நகைச்சுவையுணர்வு இல்லாதவர்கள், ஜெயஸ்ரீ பதிவிலேயே சொல்லிவிட்டார் என்று நாளைக்கு அலையலாம். அவர்களை அலையவிடாமல் தடுக்க இந்தப் பதில். இதுவரை வெளியான எனிஇந்தியன் நூல்கள் http://www.anyindian.com/index.php?manufacturers_id=104 என்ற முகவரியில் இருக்கின்றன.
அப்புறம் வருகிற புத்தகக் கண்காட்சிக்கு, ஆபிதீன், வாஸந்தி, பாவண்ணன் உள்ளிட்டோ ரின் புத்தகங்கள் வருகின்றன. அவர்களுக்கு “நீங்கள் அனைவரும் இந்துத்துவாவா? சொல்லவேயில்லையே. இல்லையென்றால் உங்கள் புத்தகங்களை எப்படி வெளியிடத் தீர்மானித்திருப்போம்” என்று ஜெயஸ்ரீயின் பின்னூட்டத்திலேயே தட்டி விடுகிறேன். :-))
மற்றபடிக்கு, எனக்கு மட்டுமில்லாமல், எனிஇந்தியனுக்கும் கொடுக்கிற விளம்பரத்திற்கும் நட்பிற்கும் நன்றி. எனிஇந்தியன் இந்துத்துவப் புத்தகங்களை வெளியிடுகிறது என்று சொன்னாலும்கூட இந்துத்துவவாதிகள் எவரும் எனிஇந்தியன் புத்தகம் பக்கம் போக மாட்டார்கள். வாங்க மாட்டார்கள். வாங்கினாலும் திட்டுவார்கள். :-)) ஏனென்றால், அவர்கள் இன்னும் வேதம், கீதை, மனுதர்மம் குறித்த ஒற்றைப் பரிணாமப் பார்வையிலிருந்தே வெளிவரவில்லை :-))
அப்புறம், இந்துத்துவாவிற்கு எதிரான ஒரு ஆங்கிலப் புத்தகம் இருக்கிறது. மொழியாக்கம் செய்துதர நீங்கள் தயாரா? இது சீரியஸான கேள்வி.
அன்புடன், பி.கே. சிவகுமார்
வியாழன், நவம்பர் 1, 2007 at 12:56 பிப
//ஹரன்பிரசன்னா, சுந்தர் வகையறா பின் தொடரும் நிழலின் குரல்கள்.//
🙂
மேலே உள்ள உங்கள் வரியை ரசித்தேன், என்றாலும்…
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? எல்லாவற்றிற்கும் காரணம் ஹிந்துத்துவமும் பிராமணீயமும் என்றா? அதற்கு ஏன் இவ்வளவு சுத்தி வளைப்பும் விளக்கமும்? காலம் காலமாக பலரும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக சொல்லிக்கொண்டிருப்பவற்றை நீங்களும் ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போகலாம். ‘நேரம் மிச்சம் பாருங்கோ.’ ஜெயமோகனும் ஜெயகாந்தனும் ஹிந்து அடிவருடிகளாகிவிடுகிறபோது ஹரன்பிரசன்னாவும் சுந்தரும் என்ன செய்துவிடமுடியும்?
பார்ப்பனராகப் பிறந்தவர் என்று தெரிந்தவுடன் யாரைத்தான் நீங்கள் ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்? ரோஸா வசந்திலிருந்து தொடங்கி பத்ரி தொட்டு, ஒரு சண்டையில் கோபத்தில் ‘என் சட்டைக்குள் பூணூல் இருக்குதான்னு பாரு’ என்று பனியனை கழட்டிக் காண்பித்த இ.பா. வரையில், பிராமணியத்தையும் ஹிந்த்துவாவையும் எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட ஞாநி முடித்து, யார் என்ன கருத்து சொன்னாலும், ‘என்ன இருந்தாலும் நீ பாப்பாந்தானே’ என்று நீங்கள் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்லாமல் போனால்தான் எனக்கு தலை சுற்றும். இதையே பிராமணர் அல்லாதவர் ஒரு கருத்து சொல்லும்போது, ‘வேறு சாதிக்காரன் நீ அப்படித்தான் சொல்லுவ’ என்று நீங்கள் சொல்வீர்களா என்று கேட்டால், அது காலம் காலமாக கத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கத்தலாகிவிடும். அதுமட்டுமின்றி, பிராமணரல்லாதவர் மனதில் பட்டதைப் பேசினால் கூட இருக்கவே இருக்கிறது ‘பிராமணீயம், ஹிந்துத்துவம்’ என்கிற விலைபோகும் ஜல்லிகள். எடுத்துக்காட்டுக்கு இருக்கவே இருக்கிறார், உங்களால் ஹிந்துத்துவா என்று விளிக்கப்படும் பிகே சிவகுமார்.
சாதியத்தினுள் விழ விரும்பாத அனைவரையும் நீங்கள் தள்ளிவிட்டுத்தான் ஓய்வீர்கள் என்பது தெரிந்ததுதான்.
வெள்ளி, ஏப்ரல் 16, 2010 at 8:54 முப
திருமதி ஜெயஸ்ரீ க்கு,
வணக்கம். உங்களது பதிவுக்கு சமீபத்தில் தான் வரும் வாய்ப்பு கிடைத்தது.
உங்களது ஸ்ரீரங்கம் பற்றிய பதிவுகள் எனக்கு நெகிழ்சியா/மகிழ்ச்சியா என்று விவரிக்க முடியாத ஒரு உணர்வை தருகிறது.
நாங்கள் காஞ்சிபுரதுக்காரர்கள் என்றாலும் எனக்கு ஸ்ரீரங்கதுடனும், ரங்கநாதருடனும் ஒரு பந்தம் இருப்பதாகவே உணர்கிறேன்.
ரங்கநாதரை பார்க்கப் பார்க்க பாசமா, பக்தியா, பயமா, அன்பா, காதலா என்ற அறியாமல் ஒரு வித தவிப்பு வருவதை உணர்ந்திருக்கிறேன்.
மேலும், நான் பார்த்தே இராத கீழ சித்திரை வீதி, அடையவளஞ்சான் வீதி, தேரடி முதலிய இடங்களும், மாஞ்சு, ரா.வி. ரா., வரதன், பத்தணா அய்யங்கார், ரங்கு முதலிய நண்பர்களும் சுவாசத்தில் கலந்து விட்டது போன்ற ஒரு உணர்வு.
நன்றி: திரு. சுஜாதா அவர்கள்.
உங்கள் ஸ்ரீரங்கத்து பதிவுகள் படிக்கும் போது மீண்டும் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தை பார்த்த உணர்வு!
முன்பெல்லாம், யாரவது உன் வாழ் நாள் ஆசை என்னவென்று கேட்டால், திரு. சுஜாதா அவர்களோடு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று வருவது என்று கூறுவேன்.
அந்த என் ஆசை நிறைவேறாமலே சென்றுவிட்டது.
இப்போது, மனதில் தோன்றும் ஆசை: ஒரு முறையேனும் உங்களுடன் சுஜாதாவின் அந்த ஸ்ரீரங்கத்தை சுற்றி வர வேண்டும் என்பதே!
மனதில் தோன்றியவற்றை முழுவதுமாக எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
மனது சற்று நிதானத்திற்கு வந்த பிறகு மீண்டும் எழுதுகிறேன்.
நன்றி!
விஜி கல்யாண்