தேவையான பொருள்கள்:
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
டால்டா – பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 20
டைமண்ட் கல்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு
ஏலக்காய் – 4
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
மஞ்சள் கலர்
செய்முறை:
- கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு சலித்துக்கொள்ளவும்.
- சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் டால்டாவைக் (அல்லது நெய்யைக்) காயவைக்கவும்.
- பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (விடும்போது டால்டா நன்கு காய்ந்து, தீ மிதமான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடோ, தீயோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.)
- வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி விழுந்ததும் நிறுத்திவிட்டு, திருப்பிவிட்டு வேகவிடவும்.
- காராபூந்திக்குச் செய்வதுபோல் மிகவும் கரகரப்பாக ஆகும்வரை காத்திருக்காமல், வெந்ததும் சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில் எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும்.
- ஒரு கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பாகுப் பதத்திற்கு சிறிது கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும். இறக்குமுன், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.
- பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலந்து, கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.
* காய் (கூம்பு) பிடிக்க நினப்பவர்கள் இங்கே சொல்லியிருப்பதைப் போல் இந்தக் கலவையிலும் காய் பிடித்துக்கொள்ளலாம்.
* ரிஃபைண்ட் எண்ணெயிலும் பூந்தியைப் பொரிக்கலாம். ஆனால் இனிப்புகளுக்கு நெய் அல்லது டால்டாவே சுவையைக் கூட்டிக் கொடுக்கும். நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். டால்டாவில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.
* பச்சைக் கற்பூரம் சேர்ப்பதுதான் வீட்டுத் தயாரிப்பு என்பதன் முக்கிய அடையாளம். கொஞ்சம் உம்மாச்சி வாசனையும்.
* கிராம்பு பிடிக்காதவர்கள், ஒற்றைக் கிராம்பை உச்சியில் செருகிவிட்டால் விரும்புபவர்கள் மட்டும் சாப்பிடலாம்; மற்றவர்கள் தவிர்க்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை கிராம்பு தவிர்க்கக் கூடாத, லட்டிற்கு மட்டுமே பிரத்யேகமான முக்கியச் சுவை/வாசனை.
சனி, ஒக்ரோபர் 30, 2010 at 5:16 பிப
//ரிஃபைண்ட் எண்ணெயிலும் பூந்தியைப் பொரிக்கலாம். //
பூந்திதான் வந்துட்டே, அப்புறம் ஏன் பொரிக்கணும். பொரிக்கிறதுக்கு முன்னாடியும் அது பூந்திதானா? இது வரலாற்றுப் பிழை. திருத்தவும்.
திங்கள், நவம்பர் 1, 2010 at 12:29 பிப
பூந்தியும் வரலாறும் எப்படியோ ஒழியட்டும்; எனக்கு அதைவிட முக்கிய சந்தேகம்- இந்த கவிஞர்கள் எல்லாம் கவிதை எழுதினப்பறம் கவிஞர் ஆறாங்களா, கவிஞர் ஆனதால கவிதை எழுதிக் கொல்றாங்களா?
புதன், நவம்பர் 3, 2010 at 10:13 முப
:)))))
அலுவலகமே அதிர்ந்துபோகும் அளவுக்கு சிரித்துக்கொண்டிருக்கிறேன். லட்டைப் பற்றி ஒரு பொன்மொழி உண்டு. லட்டுகள் மோதிக்கொண்டாலும் பூந்தியாகத்தான் விழும்.
இனிமையோடு இனிமை மோதினாலும் இனிமையாகவே முடியும். இணையத்தின் திகட்டாத லட்டு மோதல் உங்கள் சண்டை. தொடரட்டும். எப்பொழுதாவது நேரில் சந்தித்திருக்கிறீர்களா? 🙂
சனி, ஒக்ரோபர் 30, 2010 at 5:30 பிப
தீபாவளி வாழ்த்துக்கள் 🙂
திங்கள், நவம்பர் 1, 2010 at 12:31 பிப
நன்றி. நல்ல பேர் வெச்சிருக்கீங்க.
ஞாயிறு, ஒக்ரோபர் 31, 2010 at 12:12 பிப
இது மஹா அல்லது மகா கொடுமை. 😦
தீபாவளி வாழ்த்துக்கள் 🙂
திங்கள், நவம்பர் 1, 2010 at 12:37 பிப
என்னை மாதிரியே உங்களுக்கு இனிப்புவகை பிடிக்காதா? நல்லது.
‘வாழ்த்துகள்’-க்கு ‘க்’க்காதடீ செல்லம்னு வாழும் காலம் முழுக்க சொல்லிகிட்டேயிருந்தாரு வாத்தியார்.நாகர்கோயிலுக்கு அந்தப்பக்கம் இருக்கறவங்க எல்லாரும் வேண்டாத இடத்துல ஒற்றுப்போடறதும் வேண்டும் இடத்துல விடறதும்… சரி, அதுவா முக்கியம், வாழ்த்துச் சொல்றதே முக்கியம். வாழ்த்துகள். 🙂
திங்கள், நவம்பர் 1, 2010 at 11:35 முப
‘கடலை மாவு – 1 கப், சர்க்கரை – 1 கப்’ காம்பினேஷனுக்கு படத்தில் இருப்பதுபோல் 7 குஞ்சாலாடு வருமா அல்லது அதெல்லாம் சும்மா ஒரு கிராஃபிக்ஸ் உட்டாலக்கடியா?!
தீபாவளி வாழ்த்துகள்!
திங்கள், நவம்பர் 1, 2010 at 12:42 பிப
எல்லே ராம்,ஷங்கர் டைரக்ஷன்ல நீங்க நடிச்சதுக்காக உலகத்துல எல்லாமே கிராஃபிக்ஸ்னு நினைப்பீங்களா? பெண் பிறந்தநாளுக்கு செஞ்சது; மொத்தம் 16 லட்டு வந்தது. “பதினாறும் பெற்று…” அப்படீன்னெல்லாம் வாழ்த்திக் கொடுக்கறதுக்கு முன்னாலயே நல்லதா இருந்ததை எல்லாம் ஸ்கூல் தீபாவளி பார்ட்டிக்கு எடுத்துட்டு ஓடினதுபோக மிச்சம்தான் படத்துல. 😦