காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் ஸ்ரீவத்சாங்கர். (இவர் தான் பிற்காலத்தில் கூரத்தாழ்வார் என்ற பெயரில் இராமானுஜரின் பிரதம சிஷ்யரானவர்.) காலை சூரிய உதயம் முதல் மாலை வரை ஒரு பெரிய வெள்ளி அண்டாவில் வெள்ளி நாணயங்களை வைத்துக் கொண்டு தானம் செய்து வருபவர்.
ஒருநாள் அவர் தானம் முடித்து வீட்டின் கதவை சாத்தும் ஒலி காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜர் சன்னதி வரை கேட்க, பெருந்தேவித் தாயார், வரதராஜரிடம், “நம் சன்னதி இன்று அதற்குள் நடை சாத்திவிட்டார்களா?” என்று வினவுகிறார். வரதராஜரும் புரியாமல் குழம்ப, அப்போது கோயிலில் சால் கைங்கர்யம் செய்துவரும் திருக்கச்சி நம்பி, அவர்களிடம்,, ‘இது நமது கோயில் கதவின் சத்தம் அல்ல. கூரத்தில் ஸ்ரீவத்சாங்கர் தானம் கொடுத்து முடித்து, திருமாளிகை கதவடைக்கும் ஒலி” என்று சொல்கிறார்.
இந்தச் செய்தி அறிந்த ஸ்ரீவத்சாங்கர், காஞ்சி வரதரின் கோயில் கதவின் சத்தத்தையே மிஞ்சுவதாக தன் மாளிகைக் கதவின் வலிமையும் சத்தமும் இருந்ததற்காக மனம் கலங்குகிறார். தன் அத்தனை சொத்தையும் காஞ்சிக் கோயிலுக்கு எழுதிவைத்து விட்டு வீசிய கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு திருவரங்கத்திற்கு இராமானுஜருக்குக் கைங்கர்யம் செய்யக் கிளம்புகிறார்.
இருவரும் திருவரங்கம் வரும் வழியில் அடர்ந்த கானகம் வழியாக வருகிறார்கள். அப்போது அவர் மனைவி ஆண்டாளம்மா, “வழியில் ஏதும் பயமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார். ஸ்ரீவத்சாங்கர், ‘மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்? மடியில் ஏதாவது வைத்திருக்கிறாயா?’ என்று திருப்பிக் கேட்கிறார். ‘எதுவும் இல்லை. நீங்கள் அமுது செய்ய மட்டும் ஒரு தங்க வட்டில் கொண்டுவந்திருக்கிறேன்!’ என்று சொல்ல அதை வாங்கித் தூர எறிகிறார். இருவரும் தொடர்ந்து திருவரங்கத்தை அடைந்து ஒரு வீட்டில் தங்குகிறார்கள். (அதுவே தற்பொழுது கீழச் சித்திரை வீதியில் தேருக்கு எதிராக முதலியாண்டான் திருமாளிகை அருகே இருக்கும் கூரத்தாழ்வார் திருமாளிகை).
இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது. ஆண்டாளம்மா, அரங்கனிடம் ‘நீ இந்நேரம் அரவணை அமுது செய்துகொண்டிருப்பாய். என் கணவர் பட்டினியாக இருக்கிறாரே!’ என்று மனதிற்குள் விசனப்படுகிறார். சிறிது நேரத்தில் அரங்கன் அனுப்பியதாகச் சொல்லி பரிசாரகர் ஒருவர் கோயில் பிரசாதமான அரவணையை எடுத்துவந்து ஆழ்வாரிடம் தருகிறார். ‘நீ ஏதும் மனதில் நினைத்தாயா?’ என்று அவர் மனைவியைக் கண்களாலேயே கேட்க, பயத்தில் ‘ஆம்’ என்ற பதில் மனைவியிடமிருந்து கிடைக்கிறது.
அரவணையில் மனைவியிடம் இரண்டு கவளம் கொடுத்துவிட்டு, பிரசாதம் என்பதற்காக தான் ஒரு கவளம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை பரிசாரகரிடமே திரும்பக் கொடுத்தனுப்புகிறார். அந்தப் பிரசாதத்தின் பயனாகப் பிறந்த குழந்தைகள் தான் வேதவியாசர் மற்றும் பராசர பட்டர்.
-0-
வேதவியாச பட்டர் மற்றும் பராசர பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் (பட்டரய்யங்கார் என்று சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் அவர் ‘பத்ரி அப்பா’ தான் :)][கைசிக ஏகாதசி அன்று இரவு அரங்கனுக்கு ‘போர்வை சார்த்தும் வைபவம்’ முடிந்தபின் கைசிக புராணம் படிப்பார்கள். இவரை மறுநாள் ‘பிரும்ம ரதம்’ என்று சொல்லப்படும் பல்லக்கில் சர்வ மரியாதையுடன் உத்தர வீதி வலமாக இவர்கள் வீட்டிற்கு அழைத்துவருவார்கள். [பல்லக்கில் இவர் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிரிக்காமல் இருக்கிறார் என்பது என் குழந்தைக் கால ஆச்சரியம். இப்போதும் தான். நானாக இருந்தால் கண்ணை லேசாகத் திறந்து இடுக்கு வழியாக என்னை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று பார்ப்பேன் என்று சொல்லி வீட்டில் திட்டு வாங்குவேன். :))]
வேதவியாச பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் தினமும் காலையில் விசுவரூபம் முடிந்து ‘பஞ்சாங்கம்‘ படிக்கிறார்கள்.
-0-
மார்கழித் திருநாளில் பெருமாள் முன் எல்லா ஆழ்வார்களும் ஏளியிருக்க,
‘சக்கரத்தாழ்வர் ஏன் வரலை பாட்டி? அவர் ஆழ்வார் இல்லையா?’
“இல்லை. பாசுரம் பாடினவா மட்டும் தான்..’
“அப்ப கூரத்தாழ்வார் மட்டும் என்ன பாடியிருக்கார்?”
“நாலாயிரத்துல ஒன்னும் இல்லை”
“பின்ன ஏன் இங்க சேர்க்கணும்?”
“அப்புறம் சொல்றேன்”
“இப்பவே சொல்லு பாட்டி!”
“அதெல்லாம் சம்ஸ்கிருதத்துல வேணது பாடியிருக்கார்!” சொல்லிட்டா மட்டும்… என்ற அலட்சியம் அந்தப் பதிலில் இருக்கும்.
“ஆனா ஆண்டாள் பாடியிருக்காளே, அவங்க ஏன் வரலை”
“அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது” (பொம்மனாட்டிகளை பொதுவுல உக்கார வைக்க மாட்டாங்கன்னு சொன்னா அப்ப நீ, நானெல்லாம் பொம்மனாட்டி இல்லையான்னு கேட்பேன்னு தெரியுமே.. :)]
“புரியும் சொல்லு!”
“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”
“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”
கூட்டத்தில் கால்களைத் தரையில் அழுந்த ஊன்றிக் கொண்டு நகர மறுத்த என்னை போலிஸ்காரர் தூக்கிக் கொண்டு போய் ஆரியபடாள் வாசலுக்கு அந்தப் பக்கம் போட்டார்.
குழந்தை என்னாயிற்று என்று கிஞ்சித்தும் கவலைப்படாமல் பாட்டி சாவகாசமாக அரையர் சேவை முடித்து, கருடன் சன்னதி வாசலில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த என்னை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார்.
[இப்போதெல்லாம் சாதாரண நாள்களிலேயே கோயில் ஏன் இவ்வளவு ஆரவாரமாக இருக்கிறது? அந்த நாளும் வந்திடாதா?? :(((( ]
கூரத்தாழ்வார் சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்ச ஸ்தவம்’ முதல் பல ஸ்லோகங்கள் இயற்றியவர்; இராமானுஜரின் பிரதம சீடர். அவருக்காக சோழமன்னரிடம் கண்களையே இழந்தவர் போன்ற விபரங்கள் பின்னாளில் அறிந்துகொண்டது.
-0-
அரவணை – அரவு + அணை – பாம்பணை
ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டுமே அரங்கனுக்கும் அவனது அணையான ஆதிசேஷனுக்கும் அமுதுசெய்யப் படும் பிரத்யேக உணவு.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 1/2 கப்
நெய் – 1 1/4 கப்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்.
செய்முறை:
- முதலில் அரிசியை நன்கு உதிர வேகவைத்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை தண்ணீரில் கரையாத, மிகவும் கெட்டியான(உருட்டும்) பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
- சாதத்தைப் பாகில் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
- கிளறிக் கொண்டிருக்கும்போதே நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து முடித்துவிட வேண்டும். (கோயிலில் அரவணை மண்பாண்டத்தில் செய்வதால் நெய்யை கிறுகிறுவென்று இழுக்குமாம்.)
- நன்கு கிளறி ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
* இரவு ஒன்பது மணிக்கு இந்த அரவணையோடு, நாட்டுச் சர்க்கரை, குங்குமப்பூ கலந்து சுண்டக் காய்ச்சிய பாலும் அமுதுசெய்தபின் கோயில் நடை சாத்தப்படும்.
* அரங்கன் கோயில் பிரசாதத்தில் சர்க்கரை, முந்திரிப் பருப்பு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவை சேர்க்கப் படுவதில்லை. நெய் தவிர வேறு எண்ணை வகைகள் எதுவும் அரங்கனுக்கு எதற்குமே சேர்ப்பதில்லை. பிரசாதங்கள் என்றில்லை, அவருக்குக் காட்டுகிற தீபம், உலா வரும் போது காட்டுகிற தீவட்டி(தீவர்த்தி) வரை டின் டின்னாக நெய் மட்டுமே உபயோகிக்கப் படும்.
* படத்தில் இருக்கும் அரவணை என் விருப்பத்தின் பொருட்டு சென்ற வாரம் எங்கள் வீட்டு விசேஷத்திற்காக மண்டபத்தில் பரிசாரகர் ஒருவர் தயாரிப்பது. சுவையாக இருந்தாலும் அந்த ‘அரங்கன் டச்’ மிஸ்ஸிங் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அரங்கன் பிரசாதங்களுக்கு மட்டும் இருக்கும் அந்த வாசனை மற்றும் ருசிக்கான காரணத்தை யாராவது ரூம்போட்டுத் தான் யோசிக்க வேண்டும். யாராவது எங்காவது ஸ்டாலில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அந்த மாதிரி இல்லையே என்றால் அவர்களுக்கு இரக்கப்பட்டுச் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது – “போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!” 🙂
* காலையில் பொங்கல், ரொட்டி, வெண்ணண. மதியம் ‘பெரிய வஸ்திரம்’ என்ற பெயரில் சாதம், பருப்பு, கறியமுது அல்லது நெகிழ்கறியமுது, குழம்பு, சாற்றமுது, திருக்கண்ணலமுது. மாலை ஷீரான்னம்(உப்பு, வெல்லம் இரண்டுமே கலந்தது), கருப்பு உளுந்தில் செய்த திருமால் வடை, தேன்குழல், புட்டு, அதிரஸம். இரவு அரவணையோடு பால்.
வெள்ளிக்கிழமை மட்டுமே மிளகு சேர்த்த புளியோதரை, தோசை செய்வார்கள். அதற்கு ‘புளுகாப்புப் புளியோதரை’, ‘புளுகாப்பு தோசை’ என்று பெயர்.
ஏகாதசி, அமாவாசை ரேவதி நட்சத்திரம் ஆகிய நாள்களில் புறப்பாடு, திருமஞ்சனம் மற்றும் மேற்சொன்னவையோடு தோசையும் அரிசி வடையும் ஸ்பெஷல்.
ஆனால் இவை இல்லாமல் ஸ்டால்களில் எல்லா நாளும் அநேகமாக விதவிதமாக எல்லா உணவுப் பண்டங்களும் கிடைக்கும். எனவே ஸ்டாலில் வாங்குபவை எல்லாம் அரங்கன் பிரசாதம் அல்ல என்று மட்டும் அறியவும். இது தகவலுக்கு மட்டுமே. (பக்கத்தில் இருக்கும் ஸ்ரீபண்டாரத்தில் அவ்வப்போது சில பிரசாதங்கள் கிடைக்கும். அவற்றை நம்பி வாங்கலாம்.)
* அரங்கன் “வெள்ளி பூணார்; வெண்கலம் ஆளார்”. அதாவது தங்கம் தவிர வெள்ளியாலான நகைகளை எல்லாம் அணிய மாட்டார். பித்தளை, வெண்கலம் போன்ற பாத்திரங்கள் தளிகைக்கு உபயோகிக்க மாட்டார்கள். ‘ஸ்வர்ண பாத்திரம்’ என்று சொல்லப்படும் மண்பானைகளையே (அன்றாடம் புதிய புதிய பானைகள்) தளிகைக்கு உபயோகிப்பார்கள். மண் பானையில் செய்வதால் அக்கார அடிசில் முதல் பல பிரசாதங்கள் லேசாக அடிப்பிடித்த வாசனை வரும். முக்கியமாக இந்தக் காய்ச்சிய பால். மேலே படத்தில் இருக்கும் அரங்கன் பால் பிரத்யேகமாக அன்றைய பட்டர், மணியக்காரர் போன்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனக்கு பட்டர் வீட்டிலிருந்து வந்தது.
வியாழன், ஜூன் 28, 2007 at 11:28 பிப
ஜெ!,
உங்க ஊருக்குப்போயிட்டு வந்தமாதிரி இருந்தது.
ஒரு கேள்வி. திட்டக்கூடாது. 😀
//‘ஸ்வர்ண பாத்திரம்’ என்று சொல்லப்படும் மண்பானைகளையே (அன்றாடம் புதிய புதிய பானைகள்) தளிகைக்கு உபயோகிப்பார்கள்.//
பழைய பானைகளை என்ன செய்வாங்க?
-மதி
பி.கு: ஊர்ல வேற எந்த போட்டோவும் எடுக்கலையா? ஊர்போட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போடலாமே..
ஞாயிறு, திசெம்பர் 18, 2011 at 10:34 முப
daily they will use different panai’s………… they will broke the panai which being used in that day
வெள்ளி, ஜூன் 29, 2007 at 6:13 முப
// கிளறிக் கொண்டிருக்கும்போதே நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து முடித்துவிட வேண்டும். (கோயிலில் அரவணை மண்பாண்டத்தில் செய்வதால் நெய்யை கிறுகிறுவென்று இழுக்குமாம்.) //
படிக்கும்போதே சீனி வாசனை மூக்கைத் துளைத்து வாயில் ஊற்று பொங்க வைக்கிறதே 🙂
அரவணையைச் சர்க்கரைப்பொங்கலின் இளைத்த தம்பி என்று அழைக்கலாமா ? (இல்லையெனில் தயவு செய்து ஆறு வி(த்தி)யாசங்களை எழுதவும்)
வெள்ளி, ஜூன் 29, 2007 at 6:37 முப
//* காலையில் பொங்கல், சப்பாத்தி. மதியம் ‘பெரிய வஸ்திரம்’ என்ற பெயரில் சாதம், பருப்பு, கறியமுது அல்லது நெகிழ்கறியமுது, குழம்பு, சாற்றமுது, திருக்கண்ணலமுது. மாலை ஷீரான்னம்(உப்பு, வெல்லம் இரண்டுமே கலந்தது), கருப்பு உளுந்தில் செய்த திருமால் வடை, தேன்குழல், புட்டு, அதிரஸம். இரவு அரவணையோடு பால்.
வெள்ளிக்கிழமை மட்டுமே மிளகு சேர்த்த புளியோதரை, தோசை செய்வார்கள். அதற்கு ‘புளுகாப்புப் புளியோதரை’, ‘புளுகாப்பு தோசை’ என்று பெயர்.
ஏகாதசி, அமாவாசை ரேவதி நட்சத்திரம் ஆகிய நாள்களில் புறப்பாடு, திருமஞ்சனம் மற்றும் மேற்சொன்னவையோடு தோசையும் அரிசி வடையும் ஸ்பெஷல். //
திருவரங்கம் கோயிலில் ஆப்பிஸர் போஸ்ட் காலியாக இருக்கிறதா ? 🙂
வெள்ளி, ஜூன் 29, 2007 at 7:41 முப
hey super news. i know kurathu alwar story but ur nitty gritty details are awesome. thanks for the info.
-A
வெள்ளி, ஜூன் 29, 2007 at 8:21 முப
//காலையில் பொங்கல், சப்பாத்தி.
சப்பாத்தியா ? உண்மையாவேவா ? சப்பாத்தியெல்லாம் வடநாட்டு ஐட்டம்னுல்ல நெனச்சிக்கிட்டுருந்தேன்.
வெள்ளி, ஜூன் 29, 2007 at 12:03 பிப
மதி,
இந்த மண்பாண்டங்களை செய்து தருவதற்கென்றே வம்சாவளியாக ஒரு குடும்பத்தார் இருக்கிறார்கள் என்று கேள்வி. மண் பாத்திரம் என்று விதவிதமாக எதுவும் இருக்காது. எல்லாமே ‘கூன்’ என்று சொல்லும் பானை வடிவில் ஆனால் விதவிதமான அளவில் இருக்கும். அநேகமாக எல்லா நாள்களிலுமே யாராவது உபயதாரர்கள் இருப்பார்கள். அதுதவிர மணியக்காரர், அன்றைய முறை பட்டர், சில விசேஷ ஊழியர்களுக்கு மட்டும் பிரசாதத்தில் பங்கு உண்டு. அப்படி அவர்களுக்குக் கொடுக்கும்போது இந்தக் கூனோடு கொடுத்தனுப்பி விடுவார்கள். எல்லாரும் தூக்கி தூரத் தான் எறிவார்கள். ஏனென்றால் இதனால் ஒரு உபயோகமும் இல்லை. இவைகளை, அடுப்பைத் தவிர கீழே பிரிமணை இல்லாமல் உட்கார வைக்கக் கூட முடியாது. அதிகபட்சமாக வருடாந்திரத்துக்குப் புளி வாங்கி அடைத்துவைக்கலாம். 🙂
ஸ்ரீரங்கம் படங்கள் என்று தனியாக எதுவும் எடுக்கவில்லை. எல்லாம் உறவினர்களோடு சேர்த்து எடுத்துக் கொண்டவைதான். 🙂 ஒன்றே ஒன்று மட்டும் இங்கே சேர்த்திருக்கிறேன். குட்டீஸ் எடுத்தது. 🙂
வெள்ளி, ஜூன் 29, 2007 at 12:10 பிப
பாலராஜன் கீதா,
அரவணை, சர்க்கரைப் பொங்கலுக்கு தம்பி என்பது சரி;. ஆனால் என்னங்க இது, ‘இளைத்த தம்பி’ன்னு சொல்றீங்க. ‘மூத்தது மோளை, இளையது காளை’ என்று சொல்வது மாதிரி, ‘நெய் பெருத்த’ தம்பி சார் இந்த அரவணை. 🙂
சர்க்கரைப் பொங்கலுக்கும் அரவணைக்கும் ஆறு வித்தியாசமா? (மனசே ஆறலைங்க இந்தக் கேள்வில..)
பயத்தம் பருப்போ மற்ற பருப்புகளோ கூட்டணி கிடையாது. அரிசி மட்டுமே.
குழைய வேக வைக்கக் கூடாது. மிகவும் உதிர்உதிராக இருக்க வேண்டும்.
பாகு நன்கு முற்றியதாக வைக்க வேண்டும்.
முந்திரி, கிஸ்மிஸ் சமாசாரங்கள் கிடையாது.
மிக அதிக அளவிளான நெய். எவ்வளவு விட்டாலும் வாங்கிக் கொண்டு ‘அப்புறம்?’ என்று ஒரு பார்வை பார்க்கும்.
திருவரங்கம் அரங்கனுக்கு மட்டுமே பிரத்யேகமானது மற்றும் அவருடைய எல்லா பிரசாதங்களிலும் ஸ்பெஷலானது. 😉
போதுமா? 🙂
அப்பீஸர் வீட்டுக்கு அடுத்த வீட்டிலாவது செட்டிலாக வாழ்த்துகள்!! :))
வெள்ளி, ஜூன் 29, 2007 at 12:15 பிப
கூம்ஸ்,
ரொம்ப சரி. வடநாட்டு ஐட்டமே தான். டில்லி சுல்தான் பெண்ணிற்காக அமுது செய்வது.
அரங்கனுக்கு துலுக்க நாச்சியாரை மணந்த காரணமாக அன்றாடம் காலையில் ரொட்டி, வெண்ணை. இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக(மிக லேசாக) வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். [அடுத்த தடவை போகும்போது உங்களுக்கும் படம் காட்டறேன். :)] தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள். மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாள்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க?) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது. ‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு. எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது. ‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.
வெள்ளி, ஜூன் 29, 2007 at 12:28 பிப
Adiya, welcome.
கோயிலில் நுழைந்ததுமே வலதுபக்கம் இருக்கும் முதல் சன்னதிதான் இவருடையது. கண் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளுக்கும் இவரிடம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்கள் காட்டழகிய சிங்கர் கோயில் போர்டும் விளக்குகளும் சென்ற வாரம் நான் போயிருந்த போதும் பார்த்தேன். :))நம்ப மக்கள் தொடர்ந்து கலக்கறாங்க. 🙂
வெள்ளி, ஜூன் 29, 2007 at 12:54 பிப
[…] ஓசை’ யின் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் அரவணை ஒரு […]
வெள்ளி, ஜூன் 29, 2007 at 1:23 பிப
// குழந்தை என்னாயிற்று என்று கிஞ்சித்தும் கவலைப்படாமல் பாட்டி சாவகாசமாக அரையர் சேவை முடித்து, கருடன் சன்னதி வாசலில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த என்னை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார். //
காட்சியை கற்பனை செய்து விழுந்து விழுந்து சிரித்தேன். 🙂
உங்கள் வர்ணனையும், எழுத்து நடையும்… தனி அலாதி. மேற்கோள் கண்பிக்க வேண்டுமென்றல் முழு பதிவையும் இங்கே வெட்டி ஒட்ட வேண்டியிருக்கும். 🙂
வெள்ளி, ஜூன் 29, 2007 at 1:42 பிப
//ஸ்ரீரங்கம் படங்கள் என்று தனியாக எதுவும் எடுக்கவில்லை. எல்லாம் உறவினர்களோடு சேர்த்து எடுத்துக் கொண்டவைதான். ஒன்றே ஒன்று மட்டும் இங்கே சேர்த்திருக்கிறேன். குட்டீஸ் எடுத்தது. //
Cool! பிரசன்னா, அந்தப் படத்தை பார்த்தியா? அதுல வாழைக்காய் தோல் இல்லை. கத்தரிக்காய் தோல்தான் இருக்கு. வாழைக்காய் தோல் இருந்திருந்தா நீ கோபப்படலாம், So, coolma!
வெள்ளி, ஜூன் 29, 2007 at 2:10 பிப
இது தெரியாமப் போச்சே. உங்ககிட்ட பதில் வர தாமதமானதும், நீங்க தான் “சப்பாத்தி”னு தப்பாப் போட்டுட்டீங்கனு நெனச்சேன்.
கதை தெரியாதவர்களுக்காக இந்தச் சுட்டிகள்.,
http://madhavipanthal.blogspot.com/2007/04/blog-post.html
http://madhavipanthal.blogspot.com/2007/04/2_22.html
வெள்ளி, ஜூன் 29, 2007 at 5:01 பிப
கதம்ப மாலை, visitor நன்றி.
பிரசன்னா, 🙂 கூலோ கூல். நான் பதிவுல என்ன சொல்லியிருக்கேன்? அன்றாடக் காய்கறிக் குப்பையை ஆட்டுக் குட்டிக்குப் போடுவேன்னு தானே சொல்லியிருக்கேன். அன்னிக்கு கத்திரிக்காய். குட்டீஸ் அதை ஆட்டுக்குப் போட்டு அதை ஃபோட்டோவும் எடுத்திருக்காங்க. என்ன செய்ய, அவங்களுக்கு ஆடு, பன்னி எல்லாம் அதிசயமா இருக்கு. பாவம், இடத்தை சுத்தம் பண்ணலைன்னு ஒரு மொத்தும் வாங்கினாங்க. இருந்தாலும் கொஞ்சம் சரியா வருதேன்னு படத்தை போட்டிருக்கேன். அடுத்த ஸ்ரீரங்கம் விசிட்ல வாழைக்காய்த் தோல் சாப்பிடற ஆட்டுக்குட்டியை படம் காட்டியே தீருவேன். இது நம்ப நட்பு(?!)மேல சத்தியம்.
இன்னும் பிறக்காத அந்தக் குட்டிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
வெள்ளி, ஜூன் 29, 2007 at 5:06 பிப
கூம்ஸ், எல்லா உணவுப் பொருள்களும் கோயில் வழக்கிலேயே சொன்னேன். ரொட்டி தான் தப்பாயிடுச்சு. சப்பாத்தி இல்லை. ரொட்டி தான். :)(ஆனா ரொட்டி மாதிரி கடுமையா இல்லாம சப்பாத்தி மாதிரி மென்மையா நெய்யெல்லாம் விட்டுத் தான் இருக்கும்.) திருத்திட்டேன். நன்றி.
நீங்கள் கதைக்குக் கொடுத்த சுட்டிகள் படித்தேன். இன்னும் பின்னூட்டங்கள் படிக்கவில்லை. எங்களுக்கெல்லாம் கோயிலொழுகு சொல்வதுதான் சரி. அதனால் அவர் டில்லி சுல்தான் மகள் ஸுரதானிதான். 🙂
கோயிலொழுகிலிருந்து கொஞ்சம் குறிப்புகள்…
=================
மற்றைநாள் விடிவோறே டில்லீசுவரன் பெண் எழுந்திருந்து, பக்கத்திலே பெருமாளைக் காணாமல் திருக்கென்று விஸநாக்ராந்தையாய் அந்த:புரமெல்லாம் தேடிக் காணாமல், உக்ராணம் முதலான வெளிகளிலும் காணாமல், விரஹத்தினாலேது:க்கிதையாய், ப்ராணஸ்ம்ஸயம் வந்த வளவிலே; தத்பிதாவான டில்லீசுவரன் இந்தச் சேதியறிந்து, தன் பட்டணத்திலே அந்தப் பரிஜநங்களை விசாரிக்குமளவில்; அவர்கள் முதல்நாள் ராத்திரியே புறப்பட்டுப் போனார்கள் என்கிற சேதியும் கேட்டு, “அவர்கள் கொண்டுபோகிற விக்ரஹத்தை அழைப்பிக்கிற, பர்யந்தம் பென் தரிக்க மாட்டாள்” என்று அறிந்து பெண்ணைத் தானே பயணமாக ஸேநைகளையும் கூடக் கூட்டி, வழியிலே கண்டவிடத்திலே விக்ரஹத்தைக் கொண்டுவரச் சொல்லியனுப்ப…
……. அங்கே பெருமாள் எழுந்தருளாத சேதியையும் கேட்டு, கோயில் திருவாசல் கல்திரையிட்டிருக்கிறபடியும் கண்டவுடனே, டில்லீசுவரன் புத்ரியான ஸுரதாணி சிந்தயத்தியைப் போல விரஹாதிசயத்தாலே சரீரத்தை விட்டாள்.
================
கூம்ஸ், அந்தப் பதிவிலே நான் படித்தவரை கண்ட இன்னொரு திருத்தம், கைலி வஸ்திரம் திருமஞ்சனத்தின் போது மட்டுமே அரங்கன் அணிவது. மற்ற கோயில்களுக்கு இல்லாத சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். (இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.) இடையில் 4,5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். <em>’ஈரவாடைத் தீர்த்தம்’ </em>என்று பெயர்.
முன்பு காணமல் போன அரங்கன் சிலையை, அது அரங்கன் தான் என்று நிரூபித்துச் சொல்ல யாருமில்லாதபோது கோயிலில் வண்ணான் கைங்கர்யம் செய்துவந்த ஒரு 93 வயது கண்பார்வை அற்றவரை அழைத்து வருகிறார்கள். அவர் விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் செய்து பெற்ற ஈரவாடை தீர்த்தம் அருந்தியே சரியான அழகிய மணவாளனைக் கண்டுபிடித்து, ‘இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்” என்று ஆர்ப்பரிக்கிறார். அதனாலேயே நம்பெருமாள் என்ற பெயரும் அவருக்கு வந்தது.
கோயிலொழுகிலிருந்து கைலி குறித்து இந்த இடம்……
===============
அந்த வண்ணானும், தனக்கு த்ருஷ்டி தெரியாதபடியினாலே கண்டறியக் கூடாது, ஆனால், தான் பஹுகாலமாக அழகியமணவாளப்பெருமாள் சாத்தியருளின கைலியில் ஈரவாடை தீர்த்தம் ஸாப்பிட்டுக் கைங்கர்யமும் பண்ணிப் பழகியிருக்கிறபடியாலே……….. பெருமாளுக்கும், நாய்ச்சியாருக்கும் திருமஞ்சனம் பண்ணி ஈரவாடை கைலியைக் கொண்டுவந்து தனக்குத் தீர்த்தம் ஸாதிக்கச் சொல்ல; அந்தப்படியே இருவரையும் திருமஞ்சனம் பண்ணி ஈரவாடை தீர்த்தம் ஸாதிக்க; அந்த வண்ணானும், அழகிய மணவாளப் பெருமாள் ஈரவாடை தீர்த்தத்தை சாப்பிட்டு, “இவரே நம்முடைய ஆண்டவன் அழகிய மணவாளப் பெருமாள்!” என்று கண்ணும் கண்ணீருமாக மோகித்திருந்து, அநேகம் போதைக்கப்புறம் மோகம் தெளிந்தது கண்டு சோழன் முதலான பேர்கள்….
===============
KRS சொல்லியிருப்பது போல் அவளுடைய சன்னதிக்கு கைலி வஸ்திரத்தில் வருவதில்லை. பகல்பத்தில் கைலி அணிய மாட்டார். சரியாகச் சொன்னால் பகல்பத்தில், வைகுண்ட ஏகாதசி அன்றுகூட திருமஞ்சனமே கிடையாது. பகல்பத்தில் செமத்தியான பீதாம்பரமும், எக்கச்சக்கமான தங்க வைர வைடூரிய ஆபரணங்களுமாக ஜொலிப்பார் கூம்ஸ். பின்ன, அரையர் ‘ஆபரணங்களுக்கு அழகுசெய்யும் பெருமாள்’னு சொல்வார்னு சொன்னேனே. 🙂
[மும்பைல மழை தொடங்கியாச்சு. இனி நெட் வரும்; போகும். அதனால பதில் ஆராம்சே தான் வரும். :)]
புதன், ஜூலை 11, 2007 at 10:32 பிப
பஹுகாலங்கழித்து சற்றைக்கும் பொழுது செல்லாதபடியாலே இற்றைக்கு வந்து நோக்குங்கால் கூரத்தாழ்வான் சரித்ரம் மெத்தவெழுதி கூடவே அரங்கன் அரவணைப்பதமும் செய்யும் விதமும் காட்டியவாறு இதுபோலே இன்னும் நிறைய சாதிக்க வேணுமென்று கேட்டுக்கொண்டு சீக்ரமே அடியேன் ஸ்ரீரங்கம் பயணத்துக்கு மோகித்திருக்கிறேன் 🙂
செவ்வாய், ஜூலை 17, 2007 at 8:54 பிப
amma.. namma makkal namma makkal. srirangam srirangam dhaan. 🙂
i am learning lot from ur site. 🙂
வெள்ளி, ஜூலை 20, 2007 at 10:35 முப
ஸ்ரீகாந்த், கோயில் சரி. ஆனால் நிர்வாகம் ஏமாற்றமளித்தால் நான் பொறுப்பில்லை. எப்பொழுதும்போல் இந்த முறையும் சண்டை போட்டுவிட்டு வந்தேன். பிபி இறங்கிவிட்டால், ‘நீ வேணா கோயிலுக்கு போயிட்டு வாயேன், சரியாயிடும்’ என்று என் வீட்டினர் கிண்டல் செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. 😦
Adiya,
//namma makkal namma makkal. srirangam srirangam dhaan.//
இல்லையா பின்ன? 🙂 Thanks.
செவ்வாய், ஜூலை 24, 2007 at 11:58 முப
எழுத்துக்கள் சரியாக தெரியவில்லையே? ஏன்?
செவ்வாய், ஜூலை 24, 2007 at 2:04 பிப
அம்மணி,
மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். வேதவியாஸர் என்று புராணங்களில் சொல்லப்படுபவரும், நீங்கள் குறிப்பிடும் இந்த வேதவியாஸரும் வேறு வேறு என்று நினைக்கிறேன்.
மிகவும் அற்புதமான அரவணை குறிப்புகள் அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள். நன்றி!
புதன், ஜூலை 25, 2007 at 8:05 முப
தூயா, இப்ப சரியாத் தெரியுதா? பதிலுக்கு நானும் ஒரு கேள்வி. உங்க சமையல்கட்டுல அடிக்கடி ஏன் பதிய மாட்டேங்கறீங்க? 😦
ஜயராமன் ஐயா [ஐயா- அம்மணிக்கு பதில் மரியாதை. 🙂 ஜெயஸ்ரீ என்றே கூப்பிடலாம்.]
மஹாபாரத வேத வியாசர் வேறு. அவர் பெயரை கூரத்தாழ்வார் இவருக்கு வைத்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். வேதவியாச பட்டர், பராசர பட்டர் என்று சொல்வார்கள். இவர்கள் இராமானுஜர் காலத்தவர்கள். பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 6:41 பிப
hi!
Though I haven’t yet tried out any of your recipes, I login to your blog quite often for updates. I really envy your writing skills. God has gifted you a lot of skills..guess all my share has also gone to u :). I have given this aravanai recipe to my MIL who was very keen in knowing how they prepare it in temples. My in-laws belong to Srirangam and I guess my hubby must have studied in the school just next to yours in SRGM. Btw I am planning to try Azhagar dosai quite soon as my husband is very fond of that. The place where I stay, I dont get raw rice. If I can arrange for that, the first thing I am going to try out is the dosai. sorry for the long comment… do keep posting such interesting stuffs always. My mom loves your blog a lot and appreciates you very much…
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 8:40 முப
ramya, உங்க உற்சாகம் தரும் வார்த்தைகளைக்கு நன்றி. எல்லாம் செஞ்சு பார்த்து சொல்லுங்க. ஆனா பச்சரிசி கிடைக்காத ஊரு, நாடு கூட இருககா? நம்ப மக்கள் எல்லா இடத்துலயும் கடை போட்டிருக்காங்கன்னில்ல நினைச்சுகிட்டிருக்கேன். உங்க அம்மாவுக்கு என் வந்தனங்கள்.
ஞாயிறு, ஒக்ரோபர் 28, 2007 at 2:06 முப
அன்புள்ள ஜெயஸ்ரீ ,
முதலில் உங்க பேர எழுதவே தகினத்ந்தின.
ரொம்ப நாட்காளாக அரவணை try பண்ணியதால் சில கேள்விகள்:
1. சுட சுட வெந்த அரிசியை வெல்ல பாகில் கலந்தால் அரிசி கடினாமாக போகிறதெ?
2. மேலும் எங்க ஆத்து அரவணைக்கும் சக்கரை பொஙலுக்கும் வித்யாசம் தெரியவில்லை
3. உங்க அரவணை recipee il சில reference தந்தால் உதவியாயிருக்கும்.
உதாரணத்துக்கு: நான் பன்ணின முறுக்கு உங்க படத்தில் கட்டியது போல் பொன்னிறம் வந்தாலும்,
“taste கமர்கெட் (ஒரு உவமைக்கு) போல இருந்தால், ரொம்ப ஒமம் கொட்டிடென் என்று அர்த்தம். அதனால ஒமத்தை குறைக்கவும்”.
இப்படி குறிப்பு காட்டி சொன்னல் ரொம்ப உதவியை இருக்கும்.
அரங்ங்கனின் அரவணை சாப்பிட குடுப்பினை வாய்க்கவில்லை. அதனால் தான் இந்த கஷ்டம்.
இன்னும் ஒன்று:
போன ஜுலை மாதம், கோயிலில் விச்வரூப தரிசிக்க வந்தொம். ஆனால், திருபள்ளிஎழுச்சி கேட்கவே இல்லை. பட்டர் 6:15 வந்தார். 6:30 அரங்கன் திருகோலம். ஆனாலும் மறை கேட்கமுடியவில்லை. ஏன்?
திருப்பதி போல், சுப்ரபாத சேவை இல்லையா?
Thanks,
Krishna
புதன், ஒக்ரோபர் 31, 2007 at 2:47 பிப
Krishna,
அரவணை உதிராகத் தான் இருக்கும். ஆனால் சர்க்கரைப் பொங்கல் பருப்பெல்லாம் சேர்த்து கொஞ்சம் குழைவாக அல்லவா இருக்கும்? உதிராக இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் கடினமாக இருக்காதே. அரிசியை உதிராக ஆனால் நன்றாக வேகவைத்துக் கொள்ள வேண்டும். வெல்லப் பாகும் சூடாக இருப்பதால் உதிர்ந்தாலும் கடினமாக ஆக வாய்ப்பில்லையே.
ஸ்ரீரங்கம் கோயிலில் காலை தரிசனத்தை சுப்ரபாத சேவை என்று சொல்ல மாட்டார்கள். விசுவரூப தரிசனம் என்று பெயர். அப்போது யாரும் சுப்ரபாதம் பாடுவதும் கிடையாது. அரங்கனுக்கு நிதமும் வீணை வாத்திய இசைதான். இதற்காகவே பரம்பரையாக ஒரு குடும்பத்தவர்கள் இருந்து வருகிறார்கள். இப்போது இருப்பவர் வீணை ரெங்கராஜன் என்பவரும் அவரது மகன்களும். இவர்கள் தமிழ் பாசுரங்களை வீணையில் வாசிப்பார்கள். மெதுவாகப் பாடவும் செய்வார்கள். ஆனால் யார் காதிலுல் விழாத அளவு மக்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். 🙂 அப்புறம் யானை காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்ததும் இவர் வாசிப்பதை நிறுத்திவிட்டு அதை அங்கேயே இருக்கும் ஒரு வீணைப் பெட்டியில் வைத்துவிடுவார்கள். கோயில் யானை தினமும் வெள்ளிக் குடத்தில் கொள்ளிடத்திலிருந்தும், ஐப்பசி மாதம் (இந்த மாதம் தான்) மட்டும் தங்கக் குடத்தில் அம்மா மண்டபத்திலிருந்தும் நீர் எடுத்துவரும். அப்புறம் சன்னதி திறக்கும்போது யானையும் பசுமாடும் எதிரெதிராக நிற்கவைக்கப் பட்டிருக்கும். (அரங்கனுக்கு யானை முகமும், பசுவின் பின்பாகமும் தெரிவது போல்.) புதிதாக குதிரையும் வந்திருக்கிறது, ஆனால் யானை அதை உள்ளே விடுவதில்லை. கோயிலுக்கு ஒட்டகம் கொண்டுவரும் எண்ணமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் இந்தத் தரிசனத்தை சில ஊர் பிஸ்தாக்கள் அடுத்தவரை தரிசிக்க விடாமல் செய்துவிடுவதில் கில்லாடிகள். “மஞ்சப் புடவை ___ தான் யாரையும் சேவிக்க விடாம குடையாலயே தடுத்துடுவாளே” என்று இதுவரை ஒரு 10 பேராவது என்னிடம் சொல்லியிருப்பார்கள். 🙂 வருடத்திற்கு 1500 ரூபாய் கட்டினால் ஒருவர் இந்தத் தரிசனத்துடன் எல்லா சன்னதியிலும் எப்பொழுதும் வரிசையில் நிற்காமல் தரிசிக்கலாம் என்று இருந்ததை இரண்டு வருடம் முன்பு நிர்வாகம் நிறுத்தப் பார்த்து (பெரிய அரசியல். பதிவில் சொல்லி முடியாது. ஊர்க்காரர்கள் சொல்லி என் தந்தை இந்த ஃபைலை அம்மா ஆட்சியில் கோட்டை வரை எடுத்துப் போனார்.) அப்புறம் 6000 ரூபாய் என்று படிந்துவந்தது. இந்த வருடம் 10000 ரூபாய் கட்டினாலும் விசுவரூப தரிசனம் கிடையாது, மற்ற நேரங்களில் எப்பொழுதும் போல் வரிசையில் நிற்காமல் தரிசிக்கலாம் என்று இருக்கிறது. மற்றபடி விரும்புபவர்கள் யாரும் தினமும் 50 ரூபாய் கட்டணத்தில் இந்த தரிசனம் செய்ய முடியும். நீங்கள் அதைத் தான் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி என்று எதுவும் இல்லை.
புதன், ஒக்ரோபர் 31, 2007 at 7:00 பிப
Dear Jayashri,
I sincerely thank you for the detailed reply on Viswaroopa darshan. Many of the these things (tidbits) are not available for non -SriRanga vasees like us. Hence Kodi punyam ungalukku for sharing the details (in this mail as well as in other postings of yours). Please do not stop this great kainkaryam.
Reg. Aravanai, we do just as you outlined. But the individual rice grains become hard on mixing with vellam (pagu). My only concern is that what we are offering as aravanai to Rangan (koilazhwar) is atleast some % like the original. Only few know the actual taste while the rest of us can only assume (that’s why comparison with chakkarai pongal was made; I agree with you that in the absence of dhal, aravanai should stand out distinctly from chakkara pongal. Practically, the excess vellam and ghee mask the absence of dhal and make the aravanai (our home’s) taske like chakkara pongal).
Thanks for your time and help.
best,
Krishna
PS Typing this from office to quickly acknowledge your mail. Tamil typing is done at home leisurely during weekends. Still learning Tamil typing…
புதன், ஜனவரி 7, 2009 at 3:50 பிப
[…] இந்தப் பதிவிற்காக இந்தப் பின்னூட்டத்தில் […]
திங்கள், மே 11, 2009 at 3:40 பிப
Dear Madam Iwant the Receipe for the Original Iyangar Pulliyodharai
திங்கள், ஜூன் 8, 2009 at 7:12 முப
உங்களுக்கு அம்ருத கலசம் Recipe தெரியுமா ? இது கருடன் , தன்வந்திரிக்கு பிரிதி .
சனி, நவம்பர் 20, 2010 at 2:35 பிப
[…] […]
சனி, ஜூலை 16, 2011 at 7:54 பிப
இது போன்ற பிரசாதங்கள் எல்லாம் பாமர மக்களுக்கு
எட்டாக்கனி
அவர்களை அரங்கன் தான் காக்க வேண்டும்
வெள்ளி, ஜூலை 6, 2012 at 12:35 முப
Dear Jayashree
Brilliant description of aravanai and other interesting items. Tad disappointed that my favourite, Selvarappam, does’nt find a mention. Teeth-breaking alright but dont you think it tastes heavenly?
Thank you so much for sharing so much about our SriRangam temple.
Srinivasan.
வெள்ளி, ஜூலை 6, 2012 at 12:37 முப
BTW…”mattaruthalukkaga ungal marumozhi kidappilirukkirathu” is as much teeth-breaking as Selvarappam!
Srinivasan