பெண்களுக்கு மல்லிகைப் பூவோடு ஏன் அல்வாவைப் பிடிக்கும் என்று முடிவெடுத்தார்கள், தெரியவில்லை. இது தமிழ் கலாசாரத்தில் (அதாங்க தமிழ் சினிமாவில்!) மட்டும் தானா அல்லது இந்தியாவுக்கே பொதுவானதா என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழில் பட்டை, நாமம் என்பதற்கெல்லாம் அர்த்தமே மாறிப்போனது போல் அல்வாவுக்கும் அர்த்தம் மாறிப்போனது தமிழில் மட்டும் தான், அது நிச்சயம். எப்படி இருந்தாலும் கோதுமை அல்வா இனிப்புகளில் ராணி என்றால் மிகை இல்லை.
தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை – 250 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 350 கிராம்
ஏலப்பொடி
முந்திரி
கேசரிப் பவுடர்
பால் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
செய்முறை:
- சம்பா கோதுமையை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்.
- அடுப்பில் அடிகனமான வாணலியில் சர்க்கரையை, கம்பிப் பதமாகப் பாகு வைக்கவும்.
- பாகில் ஒரு டீஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.
- இப்போது கோதுமைப் பாலின் தெளிவை இறுத்துவிட்டு, கெட்டிப் பாலை மட்டும் பாகில் விடவும்.
- அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, கேசரிப் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
- இப்போது சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் அல்வா அடிப்பிடிக்காமல் வேகமாகப் பந்து மாதிரி கிளம்பி சீக்கிரம் கெட்டியான பதத்திற்கு வரும். (சாறு சேர்க்காமலும் செய்யலாம்.)
- கலவை கொதித்து கெட்டியாக வர ஆரம்பிக்கும்போது கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
- இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக் கொள்ளவும்.
- ஆறாவது கப் வெந்நீரும், மிச்சமிருக்கும் நெய்யையும் சேர்த்த பின் வருவதே சரியான பதம். கிளறிக்கொண்டே இருந்தால் வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
- மேலே சீவிய முந்திரி அல்லது முழு முந்திரிப் பருப்பால் அலங்கரிக்கவும்.
* பொதுவாக அல்வாக்களுக்கு முந்திரியை விட வெள்ளரி விதைகளை வறுத்துச் சேர்ப்பதே சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.
* ஒருவேளை தவறுதலாக கலவை இறுகி, பாறை மாதிரி ஆகிவிட்டால், ஒரு தேங்காயை அரைத்துப் பாலெடுத்து, அதை அல்வாவில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அல்வா நெகிழ்ந்து சரியான பதத்திற்கு வந்துவிடும். சுவை மாறுபட்டாலும் பொருள் பாழாகாது.
* சம்பா கோதுமை ரவையிலும் இந்த அல்வாவைச் செய்யலாம்.
* சம்பா கோதுமை கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ரெடி மிக்ஸ் வாங்கியும் செய்யலாம். ரெடி மிக்ஸில் செய்தால் மொழுக்கென்று இருக்கும், நன்றாக இருக்காது என்பது தவறான அபிப்ராயம். அந்த பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் சும்மா 15 நிமிடங்கள் மட்டும் கிளறி இறக்காமல் பொறுமையாகச் செய்தால் ஓரளவு சுவையாக வரும்.
- எந்தக் கம்பெனியாக இருந்தாலும், பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் பொருள்களைச் சேர்த்து அடுப்பில் வாணலியில் வைக்கவும்.
- மேலே சொல்லியிருப்பது போல் ஒருமுறை கெட்டியானதும் இறக்கி விடாமல் கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
- இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து முடிக்கவும்.
- இறுதியில் கெட்டியாகி, வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, உடனே இறக்கி விடாமல் மேலும் சில நிமிடங்கள் இழுத்துக் கிளறி, பின் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.
சனி, நவம்பர் 3, 2007 at 7:11 பிப
// வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது //
அம்மணி, நெய் சேர்த்த மாதிரியே தெரியலையே, அப்புறம் எப்படி அல்வா நெய்யைக் கக்கும் ? 🙂
சனி, நவம்பர் 3, 2007 at 9:19 பிப
அது, வெட்டியா உட்கார்ந்து காலைல படம் பாத்துட்டு, திட்டமிடாம அவசரமா செஞ்சு, அவசர அவசரமா ஏத்தி, அதி அவசரமா வெளில ஓடிட்டேனா, அப்படி ஆயிடுச்சு. நன்றி ஜெயஸ்ரீ. 🙂 ஆனா, படத்துல எவ்ளோ கக்கியிருக்கு பாருங்க.
ஞாயிறு, நவம்பர் 4, 2007 at 1:23 பிப
அவசர அவரசரமா செஞ்சதே இவ்வளவு அற்புதமா வந்திருக்கே? இந்தத் தடவை கோதுமை அல்வாதான் எல்லொருக்கும் தீபாவளிக்குக் கொடுக்கப்பொகிறேன்!
(அல்வா கொடுக்கத் தீர்மானம் பண்ணிட்டேன்)
உங்கள் எல்லோருக்கும் எனது அன்பு தீபாவளி வாழ்த்துக்கள்.
திங்கள், நவம்பர் 5, 2007 at 5:17 பிப
kalyanakamala, 🙂 தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும்.
செவ்வாய், நவம்பர் 6, 2007 at 8:32 பிப
do u really have to use samba wheat only? can we do it with any other type wheat?
புதன், நவம்பர் 7, 2007 at 9:24 பிப
thiyagarajan,
கோதுமை, கோதுமை மாவு வெச்செல்லாம் கூட அல்வா செய்யலாம். பாம்பே அல்வா மைதா மாவுலயே செய்வாங்க. அதெல்லாம் அப்றம் சொல்றேன். ஆனா ஒரிஜினல் (திருநெல்வேலி)அல்வா, சம்பா கோதுமையை அரைச்சு பாலெடுத்து செய்யறதுதான்.
புதன், திசெம்பர் 26, 2007 at 7:07 முப
Jsri: I need a favor in getting the proportions… wheat milk to sugar. Since i have to buy the things in bulk it is difficult to get the exact weight measurements specially in small quantity of halwa.
After extracting and decanting the milk from wheat, how much sugar has to be added based 1 cup of thick wheat milk. pl lemme know the guess_estimate. thanks
thiyagarajan
வியாழன், திசெம்பர் 27, 2007 at 8:08 பிப
thiyagarajan,
இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது தற்சமயம் எனக்கு கடினம். இதற்குமுன் செய்தபோதெல்லாம் இதை அளவை வைத்துதான் செய்திருக்கிறேன். இந்த வலைப்பதிவு ஆரம்பித்த முதல்நாள் வரை பதிவெல்லாம் எழுதும் எண்ணம் எதுவும் இல்லாததால் குறித்துவைத்துக் கொள்ளவில்லை. மறுபடியும் எனக்கு சம்பாகோதுமை கிடைத்தால் தான் இதை நான் சொல்ல முடியும். அநேகமாக ஒரு கிலோவுக்கு 6 கப் கோதுமை இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். அப்படி, எடுத்துக் கொள்ளும் கோதுமையை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். பாலை அல்ல. (உங்களுக்கு கிடைச்சுடுச்சா? அக்கிரமமாக இருக்கே.)
வெள்ளி, திசெம்பர் 28, 2007 at 2:10 முப
JS: hmm., i wonder why samba wheat is not available in Mumbai?? (or you transferred some where else?).
My wife just returned from India with samba wheat…[ i must have told her at least 20 times over phone to get it . she didn’t know the measurement].
Last time we (I) messed up the halwa completely..i think we added too much sugar. what i get here is beet root sugar not the sugar cane sugar+ wheat is not samba. Beet sugar is slightly less sweet and hence we added more sugar in the first place. it was tasting like sugar candy made in Kannada marriages!.
Luckily i didn’t use all the wheat milk; the seond time i tried with slightly less sugar and it tasted better. It was your blog that (unfortunately) raised my halwa appetite.
I really need the proportion this way (milk: sugar volumetric basis or at least wheat:sugar in volumetric basis (cup)) since i don’t want to screw up my samba wheat!! may be i’ll try assuming 6 cups for 1kg.
thanks for yr message.Happy new year to you and family.
வெள்ளி, திசெம்பர் 28, 2007 at 9:25 பிப
thiyagarajan,
உங்க அல்வா முயற்சி நிஜமாவே எனக்கு புல்லரிப்பா இருக்கு. சம்பா கோதுமை தமிழ் கடைகள்லதான் கேட்டேன். ஹிந்தில அதுக்கு என்னன்னு தெரியலை. சம்பாரவையை காண்பிச்சுக் கேட்டாலும் அதுதான் இருக்கு, முழு கோதுமை இல்லைன்னே பதில் வருது. மாதுங்கா போனா கிடைக்குமாம். போகும்போது இந்த மூடு இருக்கணும். எங்களுக்கு எங்க ஏரியால திருநெல்வேலி அல்வாவே அண்ணாச்சி கடைகள்ல(அவங்களெல்லாம் அங்கேருந்து வந்தவங்கதான்) இப்பல்லாம் நேரடியா கிடைக்கறதால நான் அதிகம் அலட்டிக்கலை. நீங்க செஞ்சுபார்த்துட்டு சொல்லுங்க.
புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும். (உங்களுக்குத் தான் முதல்ல சொல்றேன்.) 🙂
திங்கள், நவம்பர் 1, 2010 at 12:05 பிப
[…] ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே […]