தென்மாநிலங்களைத் தாண்டி இருக்கும் பலருக்கு நமது ஸ்பெஷல் உணவாக இட்லி, தோசை தெரியும் அளவுக்கு அடை பற்றித் தெரிவதில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கும். (அவர்களாகவே நம் ஊர்ப் பக்கம் வரும்போது ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டாலும், அங்கே அவ்வளவு சுவையான மொறுமொறுப்பான அடைகள் கிடைப்பதில்லை என்பது என் எண்ணம்.) தயாரிக்கும்போது எடுக்கும் அதீத நேரம் காரணமாக அதை நாம் பலர் அவர்களுக்கு அறிமுகப் படுத்தவே இல்லையோ என்று நினைப்பேன். 4 பேர் வந்திருக்கிறார்கள் என்கிற பொழுது அவர்களை உட்காரவைத்து நிதானமாக அடை செய்துகொண்டிருப்பது கொஞ்சம் அபத்தமாக இருக்கும். பெரிய விருந்துகளில் அடைக்கு இடமே இல்லை. ஆனால் என் தனிப்பட்ட நாள்களில் அடை என் விருப்பமான தேர்வாகவே என்றும் இருந்திருக்கிறது. டிஃபனுக்கு என்ன செய்வது என்று யோசிக்கவே போரடிக்கும் நேரங்களிலோ, தொடர்ந்து வேறுவேலைகள் இருக்கும்போதோ, ஐந்தே நிமிடத்தில் அடைக்கு ஊறவைத்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போகலாம். தயாரிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னால் மிக்ஸியில் அரைத்தால் போதும். பெரிய முன்னேற்பாடுகளோ, தயாரிப்பில் பெரிய நுட்பங்களோ, தவறுகளுக்கோ இடமே இல்லாதது. அடுப்பில் கல்லில் வேகக் காத்திருக்கும் நேரத்தில் கையில் புத்தகத்தோடு இருக்கலாம்; இடை இடையே சமையலறையில் வேறு சின்னச் சின்ன வேலைகளை கவனிக்கலாம்; அலட்டிக்கொள்ளாமல் டிவி பார்க்கலாம், நிதானமாக சண்டை போடலாம்… லாம்.. லாம்..

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1 கப்
பச்சை அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – சிறிது
உப்பு, எண்ணை – தேவையான அளவு
 

விரும்பினால்..
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
கொத்தமல்லிக் கட்டு – 1
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது
 

adai1.JPG

செய்முறை:

  • அரிசி, பருப்புகளை தனித்தனியாக ஊறவைக்கவும்.
  • அரிசியோடு மிளகாய், காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக ரவை பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பருப்புகளை ரவை பதத்தை விடப் பெரிதாகவே இருக்குமாறு அரைத்து, அரிசிக் கலவையோடு கலந்துகொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், மெலிதாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து, மெதுவாக அழுத்தாமல் கலந்துகொள்ளவும். (பொதுவாக காய்கறிகளை, ஏதாவது கலவைகளில் சேர்க்கும்போது கையாலோ, கரண்டியாலோ அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. நறுக்கப்பட்ட காய்களிலிருந்து அதன் சாறு வெளியேறி, மாவில் கலந்து சுவையைப் பெருமளவில் கெடுத்துவிடும்.)
  • கெட்டியாக அரைத்த மாவைக் கையால் உருட்டி, அடுப்பில், தோசைக் கல்லில் தட்டவேண்டும்.
  • சுற்றிலும் எண்ணை விட்டு, நடுவிலும் துளை செய்து எண்ணை விடவேண்டும்.
  • நிதானமான சூட்டில், நன்கு சிவப்பாக வேகும்வரை காத்திருந்து திருப்பிப் போடவும்.
  • மீண்டும் சுற்றிலும், நடுவிலும் எண்ணை விட்டு இந்தப் பக்கமும் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
  • பின் மொறுமொறுப்பாக மாற இரண்டு பக்கமும் இன்னும் ஒரு முறை திருப்பிப் போட்டு சுடவைத்து எடுக்கவும்.

* அரிசிக்கு புழுங்கலரிசி நனைத்தால் மெத்தென்று இருக்கும். பச்சரிசியில் மொறுமொறுவென்று வரும். எது தேவையோ அந்த அரிசியை அதிகம் சேர்க்கவும்.

* அடை கரகரப்பாக இருக்க துவரம்பருப்பு அதிகமாகவும், விள்ளல் விள்ளலாக இருக்க கடலைப் பருப்பு அதிகமாகவும், மென்மையாக இருக்க உளுத்தம் பருப்பு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளவும்.

* ரிஃபைண்ட் ஆயில், நெய், தேங்காய் எண்ணை சம அளவில் கலந்துகொண்டு அடைக்கு உபயோகிப்பது, வேறு உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும்.

* அடையை நான்- ஸ்டிக்கில் செய்வதோ, எண்னை குறைவாக விடுவதோ, அடைக்கும், அது பயணிக்கும் நாவிற்கும் நான் செய்யும் உச்சபட்சத் துரோகம். அப்படி எல்லாம் 4 அடை சாப்பிடுவதை விட, ஒரே அடை உருப்படியாக சாப்பிட்டுவிட்டு அந்த திருப்தியிலேயே கொஞ்சம் பட்டினி இருக்கலாம் என்பது என் கோட்பாடு. (அதற்காக ஒரே அடையோடு எழுந்திருக்க முடியுமா? 🙂 சும்மா ஒரு வேகத்துக்காக வசனம் பேசறதுதான்.)

* அடை மாவை சற்று மசிய, தளர அரைத்தும் கரண்டியால் நடுவில் வைத்து சுற்றிலும் இழுத்து சுலபமாக வார்க்கலாம்.

* அரை கப் தேங்காய்ப்பாலோ, 4 டீஸ்பூன் நல்லெண்ணணயோ மாவில் சேர்த்துப் பார்க்கவும். 

* எப்பொழுதும் இரண்டு கேரட் சேர்த்து அரைத்துவிடுவேன். நல்ல நிறத்தையும் சுவையையும் கொடுக்கும். (ஆனாலும் கேரட்டின் வாசனை வராது.)

* இளம் முளைக் கீரை அல்லது பாலக், கோஸ், உருளை, சௌசௌ இருந்தால் மெலிதாக அரிந்து சேர்க்கலாம். ஆனால் காய்கறிகள் சேர்ப்பது கொஞ்சம் மொறுமொறுப்பிற்கான சாத்தியங்களைக் குறைக்கும்.

* வாழைப்பூவின் உள்பகுதியோ, முருங்கைக் கீரையோ கிடைத்தால் உடனே அவசியம் அடைக்கு ஊறவைக்கவும்.

adai2.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அடைக்கு அவியல் என்று கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. அதுவாகவே அமைந்தால் ஒழிய நான் அப்படி மெனக்கெட்டதில்லை. அதன் பங்காளிகளான மோர்க்குழம்பு ஃபாமிலி கூட ஓக்கேதான்.

குழம்பு, சட்னி வகைகளை ஒரு பழக்கதோஷத்தில் சும்மா சொல்லிக் கொள்ளலாம்.

என்னைக் கேட்டால் எதுவும் தொட்டுக்கொள்ளாமலே சாப்பிடலாம் அல்லது மிளகாய்ப் பொடி.

கடைசி அடையின்போது அதன்மேல் தயிரும் விட்டு சாப்பிடலாம்; அதை அடுத்து ஒரு காப்பி சாப்பிடப் போவதில்லை என்ற நிலை இருந்தால்.

என் மாமனார் அடையில் ரச மண்டியை விட்டுச் சாப்பிடுவாராம். என் பெண்ணும் இப்போது அப்படியே ஊறவைத்து சாப்பிடுகிறாள். இதெல்லாம் கூடவா ஜீனிலிருந்து வரும்?? 😦

“சே, இப்படி தயிரும் ரச மண்டியும் விட்டுச் சாப்பிடுவீங்கன்னா நான் ஏன் மெனக்கெட்டு அடையை மொறுமொறுப்பாக எடுக்கணும்? பேருக்கு வேகவைச்சுப் போடறேன்!” என்று முனகிக் கொண்டே ஆனால் அடுத்த அடையை அதைவிட சூப்பர் மொறுமொறுப்பாக எடுத்துப் போடுவேன். 🙂