ஐந்தே நிமிடங்களில் மாவு தயாரித்து, புதிதாய் சமைப்பவர்கள் கூட சுலபமாக செய்துவிடக் கூடிய எளிய தோசை.
தேவையான பொருள்கள்:
மைதா மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய்.
செய்முறை:
-
மைதா, ரவை, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சாதாரண தோசைமாவை விட நீர்க்க, கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (மைதா, ரவையை 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கட்டிகளில்லாமல் கரைப்பது மிகச் சுலபம்.)
-
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.
-
பொடியகா நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
-
அடுப்பில் தோசைக் கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் வைக்கவும்.
-
மாவை ஒரு கரண்டியால் எடுத்து கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து உள்வரை வட்டமாக ஊற்றிக்கொண்டே வரவும். (சாதாரணமாக தோசை வார்ப்பதுபோல் நடுவில் மாவை விட்டு கல்லில் வட்டமாக இந்த மாவைப் பரத்த முடியாது.)
-
சுற்றி சில துளிகள் மட்டும் எண்ணெய் விடவும். அதிக எண்ணெய் விட்டால் சொதசொதவென்று இந்த மாவு எண்ணெயைக் கக்கிவிடும்.
-
அரை நிமிடத்திலேயே அடிப்பாகம் வெந்து மேலெழுந்துவிடும். புதிதாக தோசை செய்பவர்கள்கூட சுலபமாக முழுதாகத் திருப்பிவிடலாம்.
-
அடுத்தப் பக்கமும் அரை நிமிடம் வேகவைக்கவும்.
-
மேலும் மொரமொரப்பாகத் தேவைப்பட்டால் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, இன்னும் சில நொடிகள் வைத்திருந்து எடுக்கலாம்.
* தோசை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே மாவு கெட்டியாகிவிட்டால் அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்க இருந்தால்தான் மெலிதாக சுவையாக வரும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இட்லி (தோசை) மிளகாய்ப் பொடி, தக்காளிச் சட்னி, சாம்பார், வெந்தயக் குழம்பு போன்ற குழம்பு வகைகள்…
திங்கள், பிப்ரவரி 4, 2008 at 6:09 பிப
01. மைதா தோசைக்கும் ரவா தோசைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
02. இந்த தோசைக்கு ஏன் கொத்தமல்லி சட்னி சேர்த்துக்கொள்ளக்கூடாது?
03.
//அடுத்தப் பக்கமும் அரை நிமிடம் வேகவைக்கவும்.
மேலும் மொரமொரப்பாகத் தேவைப்பட்டால் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, இன்னும் சில நொடிகள் வைத்திருந்து எடுக்கலாம்.//
எப்படி இப்படியெல்லாம்?
செவ்வாய், பிப்ரவரி 5, 2008 at 1:15 முப
ஜெயஸ்ரீ,
நான் மைதா தோசைக்கு ரவைக்கு பதில் சில சமயம் அரிசி மாவும் சேர்த்துக் கொள்வேன். உங்க புலுசு ரெசிபி டிரை பண்ணி பார்த்தேன். என் கணவருக்கு செய்யும் கோதுமை சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.புலுசுக்கு அரைக்கும் பொடியை முன்பே அரைத்து வைத்துக் கொள்ளலாமா. செய்யும் போதுதான் அரைக்க வேண்டுமா.(நான் கொஞ்சம் சோம்பேறி)
செவ்வாய், பிப்ரவரி 5, 2008 at 10:33 முப
///நான் மைதா தோசைக்கு ரவைக்கு பதில் சில சமயம் அரிசி மாவும் சேர்த்துக் கொள்வேன்.//
பொதுவா கொஞ்சம் கரகரப்புக்கு ரவைதான் சுவையா வரும். பச்சரிசிமாவு கொஞ்சம் கடுக்’னு ஆயிடுன். ஆனா இதுல எல்லாம் அரிசிமாவு சேர்ப்பது குறித்து வேற பதிவும் வரும். 🙂
//புலுசுக்கு அரைக்கும் பொடியை முன்பே அரைத்து வைத்துக் கொள்ளலாமா.//
கொஞ்சம் முழுப்பதிவையும் படிச்சுப் பாருங்க. 🙂
அதைவிட, இந்தப் பொடிதான் அநேகமா நான் சொல்லியிருக்கற ஊறுகாய்ப் பொடியும். அதனால இரண்டுக்குமே உபயோகிக்கலாம்.
செவ்வாய், பிப்ரவரி 5, 2008 at 12:43 பிப
கோதுமை தோசைதான் இது வரை சாப்பிட்டிருக்கிறேன். அவசர துரித சிற்றுண்டி அது. மைதா டிரை பண்ணியதில்லை. முயன்று பார்க்கிறேன். ரவா தோசையை எப்படி ஹோட்டலில் செய்வது போல முறுவலாக செய்வது என்ற ரகசியத்தையும் அப்படியே சொல்லி விடவும் :)) ஒரு வருட பிறந்த நாளைக்கு என் காலம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ச.திருமலை
புதன், பிப்ரவரி 6, 2008 at 9:28 பிப
Hello Jash,
Very nice to see mitha dosa. So Jash no need to add rice flore. This is different one so i ill try. Very gud jash right more. Keepitup. Byr ur friend MysoreRK
வியாழன், பிப்ரவரி 7, 2008 at 9:48 பிப
ப்ரசன்னா,
01. 🙂
02. 🙂
03. 🙂 பொறாமையா இருக்கா?
உண்மையா கொஞ்சம் மென்மையா தேவைன்னா தோசையை உடனே எடுத்துடலாம். மேல்பாகம் கொஞ்சம் கரகரப்பா வேணும்னா இன்னும் கொஞ்சம் வெச்சிருந்து எடுக்கலாம். செஞ்சு பார்த்து அனுபவிச்சாதான் தெரியும். இலக்கியவாதிகள் மேம்போக்கா படைப்புகளைப் படிச்சுமட்டும் பார்த்து விமர்சனம் சொல்றமாதிரி சொல்லாம சமையல் குறிப்பெல்லாம் செய்முறைக்கப்புறம் தான் விமர்சனம் வைக்கணும். புரிஞ்சுதா? 🙂 நன்றி.
வியாழன், பிப்ரவரி 7, 2008 at 9:53 பிப
Rajan,
கோதுமை தோசை உடலுக்கு நல்லது. மைதா தோசை நாக்குக்கு மட்டும் நல்லது. வாழ்த்துக்கு நன்றி. ரவை தோசை வரும்.
Ramakannan, என் உலகமே விரோதிகளால நிறைஞ்சிருக்கறப்ப 🙂 நீங்க கடிதத்துக்கு கடிதம் ur friend னு எழுதறது ஒரே புல்லரிப்புதான் போங்க. என் எல்லா பதிவுக்கும் ஏதாவது மறுமொழி எழுதணும்னு வேண்டுதலா? ஆமாம், உங்களை யாரோ வேற ஊர்ல பாத்ததா சொல்றாங்க… 🙂