பல ஆண்களுக்கு உப்புமா என்றால் அலர்ஜி. பல பெண்களுக்கு உப்புமா (செய்வது) வரப்பிரசாதம் மாதிரி. சின்ன கேப் கிடைத்தாலும் சுலபமாகச் செய்து, தலையில் கட்டிவிடுவார்கள். மரத்தடியில் ஷைலஜா உப்புமா என்றதும் ‘கூப்டீங்களா?’ என்று ஓடோடி வருவார். பொறாமையாக இருக்கும்.

என்னைப் பொருத்த வரை உப்புமா ஒரு தெய்வம். அல்லது அதற்கும் மேலே. ஏனா? தெய்வத்தைவிட அதிகமாகவே என் வாழ்க்கையை சோதித்த உப்புமாவை வேறு எப்படிச் சொல்வது? மிகவும் அடிபட்டுப் (ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை) போனேன். தொலைப்பேசி என்பதே அரிதாக இருந்த காலத்தில், கஷ்டப்பட்டு அம்மாவைப் பிடித்து ‘என்ன தப்புன்னே தெரியலை, சரியாவே வரலைம்மா’ என்றால், ‘இதைச் சொல்ல வெக்கமா இல்லையா?’ என்று மேம்போக்காகக் கேட்டுவிட்டு வேறு கதை பேச ஆரம்பித்துவிடுவார். கடைசி வரை எனக்கு வெட்கமும் வரவில்லை; அம்மாவிடமிருந்து விடையும் வரவில்லை. 

ரவை சரியில்லையா இருக்கும்  என்றெல்லாம் சொல்லிப் பார்த்து, ப்ராண்ட் மாற்றி ப்ராண்ட் உபயோகித்தும் சரிவராமல், வாணலி சரியில்லை என்று விதவிதமாக மாற்றிப் பார்த்தும் சரிவராமல்– அதற்காக மனைவியையா மாற்ற முடியும்?– உன்னோட ‘வாழறதுக்காக சாகற அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது’ என்ற சொல்லிக்கொண்டு கணவரே சுய நினைவுடன் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்பாவை சமையலறையில் பார்த்தாலே, ‘இன்னிக்கி உப்புமாவா?’ என்று பெண் கிண்டலடிக்கும் அல்லது சலித்துக்கொள்ளும் அல்லது என்னை முறைக்கும் அளவுக்குப் பிரசித்தம்.

எப்பொழுதாவது சில சமயம் எனக்கும் மிகப் பிரமாதமாக வந்து ஆட்டத்தில் அதிர்ச்சி வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் விருந்தினர் யாராவது இருந்தால், எந்த அவசரத்திலும் கூட இந்த முயற்சி எல்லாம் எடுப்பதே இல்லை. ‘சீ, சீ அதெல்லாம் ஒரு டிபனா? நீங்க வராதவங்க வந்திருக்கீங்க!’ என்று கெத்தாகப் பேசி நழுவிவிடுவேன். இப்பொழுதும் உப்புமாவை மட்டும் ஒரு புதுப்பெண் மாதிரி பயத்துடனேயே தயாரிக்கிறேன். :(((

தேவையான பொருள்கள்:

பம்பாய் ரவை – 1 கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிது
எண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 அல்லது 2 1/4 கப்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு (விரும்பினால்), பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.
  • 10 முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • ரவையைச் சேர்த்து மேலும் 2,3 நிமிடங்கள் வறுக்கவும்.
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.
  • அடுப்பை சிம்’மில் வைத்து, வாணலியில் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து, கட்டிசேராமல் கிளறி மூடி வைக்கவும்.
  • உப்புமா வெந்து தண்ணீரில்லாமல் வற்றியதும், நெய்யை விட்டுக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு கலந்து, மல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* இந்த உப்புமாவை வாணலியில் செய்வதை விட பிரஷர் பேனில் செய்வது சுலபம். வாணலிக்குப் பதில் பிரஷர் பேனிலேயே நேரடியாகத் தாளித்து, வறுத்த ரவையில் தண்ணீர் சேர்த்து பிரஷர் பேனை மூடிவைத்து, வெயிட் போட்டு, 5 அல்லது 6 நிமிடங்கள் அடுப்பை சிம்’மில் வைத்தால், உப்புமா தயாராகி இருக்கும். குக்கரைத் திறந்து நெய், எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து பரிமாறலாம். சும்மா கிளறிக் கொண்டே இருக்க வேண்டாம். எண்ணை சிறிது குறைத்தும் உபயோகிக்க முடியும்.

* கடைசியில் எலுமிச்சை சாறு சேர்ப்பதற்குப் பதில் உப்புமாவில் தண்ணீர் சேர்க்கும்போதே இரண்டு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிரும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் செய்யலாம். இது மிகுந்த சுவையாகவும், நிறமாகவும் இருக்கும். அல்லது வெங்காயம் வதங்கியது இரண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

* நெய்யை, தாளிக்கும்போதே எண்ணையுடன் சேர்ப்பதை விட, இறுதியில் சேர்த்துக் கிளறி, பரிமாறினால் நெய் வாசம் மிகுந்து கிடைக்கும். எண்ணை குறைவாக விட்டாலும் வெளித் தெரியாது.

* எல்லாவற்றிற்கும் தேங்காயைத் துருவிப் போட்டுவிடுவேன்; இதற்கும். நன்றாகவே இருந்தது.

* சம்பா கோதுமை ரவை உப்புமாவிற்கு ஏன் குறிப்பு சொல்லவில்லை, என்று சிலர் கேட்கலாம்; அல்லது இனிமேல் சொல்வேனோ என்று சிலர் எதிர்பார்க்கலாம். சம்பா கோதுவை ரவையில் உப்புமா செய்து சாப்பிடுவதை விட சன்யாசம் வாங்கிக்கொண்டு போகலாம் என்பது பெரும்பாலானவர்களின் கோட்பாடாக இருப்பதால் நானும் சாய்ஸில் விடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் ரவை உப்புமா செய்வது போலவே இதையும் தண்ணீர் மட்டும் ஒன்றுக்கு மூன்று (1:3) என்ற விகிதத்தில் சேர்த்து, செய்து பார்த்துக் கொள்ளவும்.  வாழ்க!

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சர்க்கரை :), ஊறுகாய் :)), தேங்காய்ச் சட்னி, தக்காளி கொத்சு, கத்திரிக்காய் கொத்சு.