தேவையான பொருள்கள்:
ரவை – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மைதா – 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு
சீரகம்
முந்திரிப் பருப்பு
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
நெய்
செய்முறை:
- ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (வழக்கமாகச் சொல்வதுதான் – மாவுக் கலவையை அரை நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுலபமாகக் கலக்கலாம்.)
- சிறிது நெய்யில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு துண்டுகள், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை என்ற வரிசையில் சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து அப்படியே ஒருமணிநேரம் வைத்திருக்கவும்.
- தோசை வார்க்க ஆரம்பிக்கும் முன் மேலும் தேவையிருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நீர்க்க இருத்தல் அவசியம்.
- அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒருகரண்டியால் மாவை ஓரத்திலிருந்து சுற்றிவிட்டு, நடுவிலும் விட வேண்டும். (மாவை இழுத்து, காலி இடத்தை நிரப்பப் பார்ப்பது, வட்டவடிவமாக வார்க்க ஆசைப்படுவது எல்லாம் தேவை இல்லை.)
- சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து நன்கு வெந்து அடிப்பாகம் மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து திருப்பவும்.
- அடுத்தப் பக்கமும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
- சுடச்சுட மட்டுமே பரிமாறவும். ஆறினால் கட்டைமாதிரி ஆகிவிடும்.
* நான்-ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் சுவையான மொறுமொறுப்பான தோசைகள் வரும். முதலிரண்டு தோசைகள் சரியாகவராமல் படுத்தலாம். [அவற்றை ‘மாமியார் தோசை’ என்பது குழூஉக்குறி. :)] தொடர்ந்து சரியாக வரும்.
* என்னைப் பொருத்தவரை மாவு கரைத்ததுமேகூட வார்க்கலாம். சரியாக வரும்.
* முந்திரிப் பருப்பு, மிளகு, தேங்காய்த் துண்டுகள், எங்கேயோ கொஞ்சமாக வரும் நெய்வாசனை, இவையே ரவா தோசைக்கான அடிப்படை அலங்காரப் பொருள்கள். இவை நான்கின் கூட்டணிச் சுவைதான் ரவா தோசை என்ற அங்கீகாரத்தைத் தரும். (அதிகம் நெய்விடக் கூடாது. நெய், தோசையை மென்மையாக்கிவிடும்.)
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நடுவில் தூவினால் ஆனியன் ரவா.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்…
திங்கள், பிப்ரவரி 18, 2008 at 1:42 பிப
உங்கள் படங்களுடன் கூடிய குறிப்புகள் செய்து பார்த்துச் சுவைக்கத் தூண்டுகின்றன..இதையும் செய்து பார்த்து விடுகிறேன்..நன்றி.
திங்கள், பிப்ரவரி 18, 2008 at 9:00 பிப
ம்ம்ம். உடனே சாப்பிட ஆசையாக இருக்கிறது.
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 9:57 முப
டியர் ஜெய்
மிக்சியில எல்லா மாவையும் போட்டு ஒரு ஓட்டு ஓட்டுனா நல்லா சீரா கலந்திடும். இல்லாட்டி “வைப்பர்” பட்டன் ஒரு தட்டு தட்டினாலும் ஒரே மாதிரி வரும்.
ஸ்ரீலதா
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 11:32 முப
பாச மலர், ரேவதி நரசிம்மன், நன்றி.
srilatha, மைக்ரோவேவ் வரதுக்கு முன்னால “வைப்பர்” பட்டன்ல ஓட்டித்தான் செஞ்சுகிட்டிருந்தேன். செய்யலாம். ஆனா இந்த மிக்ஸில அரைக்கறது, அப்றம் மிக்ஸியைக் கழுவி, துடைச்சு, வெயில்ல வெச்சு… இதெல்லாம் இல்லாம இருக்கத்தானே கரைச்ச தோசையே. (நான் கொஞ்சம் சோம்பேறி!)
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 12:01 பிப
ஒரு சிறு குறிப்பு : தோசை கல் சூடானவுடன் ஒரு சிறு வெங்காயத்தை தோசை கல்லில் தேய்த்து விட்டு பின் வார்த்தால், மாமியார் தோசை நன்றாக வரும் .
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 12:05 பிப
Lakshman, :))
உங்க குறிப்புக்கு நன்றி.
தோசைக்கல் சூடானதும் எண்ணெயும் சிறிது உப்பும் தடவி தேய்ச்சு, ஒரு துணியால துடைச்சுட்டு வார்த்தாலும் தோசை நல்லா வரும். ஆனா பேரைத்தான் மாத்தணும். 🙂
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 4:31 பிப
டியர் ஜெய்
மாவை அரச்சு முடிச்சப்பறம் மிக்சி ஜார்ல தண்ணி விட்டு (பாதி அளவு) திரும்பவும் “வைப்பர்” ஒரு தட்டு. எப்படி நம்ம ஈஸி கிளினிங்க்??
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 5:48 பிப
பெரும்பாலும் உங்க குறிப்புகள பார்த்துதான் செய்யறேன்…உங்க எழுத்து நடை வித்தியாசமா கலக்கலா இருக்கு..எனக்கு ஒரே ஒரு டவுட்,படத்துல உங்க பொண்ணு என்ன சாப்பிடராங்க??..
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 9:16 பிப
srilatha, இது ஈஸி கிளினிங்கா? சரிதான்.
dtambiga, நன்றி. என் பொண்ணு ஏதோ சூப் மாதிரி சாப்பிடறாங்கன்னு நியாபகம். சரியா அவங்க வாய்கிட்ட கொண்டுபோறது, சாலட் கீரை. அதை சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். ஹாங்காங்ல எடுத்தது. இங்க அதெல்லாம் கிடைக்கறதில்லை.
புதன், பிப்ரவரி 20, 2008 at 4:17 முப
என் மகளுக்கும் ரவாதோசை பிடிக்கும். அவ வரேன்னு சொன்னா உடனே கலந்து வச்சுருவேன் இனிமேல்:-)
வேற ஒரு செய்முறைக்கு இங்கே பதில் சொல்லிக்கவா ப்ளீஸ்…….
நெல்லிக்காய் தொக்கு சூப்பரா வந்துருக்கு. அப்படின்னு கோபால் சொல்லிக்கிட்டே முழுங்கறார்.
எனக்குக் காரம் ஆகறதில்லை. அதனால் வாய் பார்க்கறதோடச் சரி(-:
புதன், பிப்ரவரி 20, 2008 at 5:17 முப
Hi Jai,
Wonderful photos and woderful recipe…
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 11:34 முப
துளசி, நெல்லிக்காய்த் தொக்கு, ஆச்சரியமில்லை. இங்க சொந்தவீட்டுலயே ஒருத்தங்க திருடி சாப்பிடறாங்க. காரம், எண்ணெய் எல்லாம் குறைவா போட்டு செய்யலாமே. ரவா தோசை உங்க பொண்ணுக்கு செஞ்சுபோட்டு இன்னும் ஏதாவது ஆலோசனை இருந்தா வாங்குங்க.
Amutha, thanks.
சனி, பிப்ரவரி 23, 2008 at 2:27 பிப
ரொம்ப நன்றி, மொறு மொறு என்று நன்றாக வந்தது. பெடெக்ஸில் கூட அனுப்பி வைக்கலாமா என்று யோசித்தேன் :))
அன்புடன்
ச.திருமலை
ஞாயிறு, பிப்ரவரி 24, 2008 at 12:44 முப
thanks.
சனி, ஜூன் 27, 2009 at 10:59 பிப
இன்றைக்கு ரவாதோசை எங்கள் வீட்டில்.. அருமையாய் இருந்தது.. ரவாதோசையில் முந்திரிப் பருப்பெல்லாம் போட்டு ரொம்ப ராயலா இருந்தது.. இப்பல்லாம் வித்தியாசமா சமையேன்னு சொன்னா என்னோட வீட்டுக்காரம்மா ஓடுறது உங்க வலைமனைதான்.. ஜெயக்குமார்