நன்றி: பிரேமலதா. (இடையில கலர்ஃபுல்லா பேசியிருக்கறதெல்லாம் நானே.)

[யெக்கா, உப்புச்சார்ல கருவாடு போடணும். உங்களுக்கு ஒத்துவராது. ஒருவேளை மருவிய உப்புச்சார் கருவாடு இல்லாம வலம் வருதோ என்னமோ. கிடைச்சா அனுபவிங்க. சாகறதுக்கு முன்னாடி அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரெம்பநாள் வெஜிடேரியனிசம் கடைபிடிச்ச காலங்கள்ல கூட கருவாட்டை எடுத்துப்போட்டுட்டு உப்புச்சாரை மொக்கு மொக்குன்னு மொக்கிருக்கேன். கருவாடு இல்லாட்டி உப்புச்சார் உப்புச்சாரே கிடையாது. (உங்களுக்கு கொடுத்துவைச்சது அவ்வளவுதான்) இருந்தாலும் மருவிய உப்புச்சார் கிடைச்சா கண்டிப்பா விடாதீங்க.]

மருவிய உப்புச்சார்: (கருவாடு மைனஸ்)  🙂

1.
தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்

செய்முறை:

 • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
 • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (ஒரு பேப்பரில் வைத்து மைக்ரோவேவ் அவனில் ஒரு 20 அல்லது 30 விநாடிகள்(மட்டும்) வைத்து எடுத்தால் கையோடு தோல் வந்துவிடும். தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்தும் சுலபமாக உரிக்கலாம். ஆனால் சுவை சற்றே வேறுபடும். எப்படி இருந்தாலும் ரங்கமணியை இதற்கு எதிர்பார்ப்பதில்லை என்பதே மேட்டர்.)
 • பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [இன்னும் கை எரியுது. 😦 தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை துடைத்துக் கொள்ளவும்.]
 • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து புளிக் கரைசலைச் சேர்க்கவும். [பிரேமலதா, நீங்களோ திருமலையோ கடுகு எல்லாம் தாளிக்கவே சொல்லலையே. இதுக்கு அதெல்லாம் கிடையாதா? ஆனா நான் செஞ்சேன்.]
 • மேலும் 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.

-0-

2.
தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
கொண்டைக் கடலை – 1/2 கப்(காய்ந்தது)
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
கத்தரிக்காய் – 4, 5  (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்.)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை.

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்.

uppuchchaar 2

செய்முறை:

 • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
 • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (மேலே சொல்லியுள்ளபடி செய்யலாம்.)
 • பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [மேலே உள்ள குறிப்பைப் பார்க்கவும்.]
 • கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 • கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். இதிலேயே ஓரளவு நன்றாக வெந்துவிடும்.
 • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
 • அத்துடன் பயறு, புளிக்கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும். வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை.) [நான் கொஞ்சம் நம்பிக்கை இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு கொண்டைக்கடலையை ஒரு விசில் குக்கர்ல வெச்சுட்டேன். சாரி!]
 • தேவையான அளவு உப்பு போட்டு, மேலும் சிறிது எண்ணையை ஊற்றவும்.
 • பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாகக் காய்ந்ததும் இறக்கிவிடவும்.

* மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.

* கத்திரிக்காய்க்குப் பதில் தனியாக வெண்டைக்காய் மட்டும் போட்டும் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்ஸிங் கார்னர்:

சாதம், கிண்டிய உருண்டைச் சோறு, சோளச் சோறு, கேப்பைக்களி (சோளச் சோறுக்கும் கேப்பைக் களிக்கும் செய்வதானால் அரிசிமாவைக் கரைத்து புளிக் கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது மிளகாயும் புளியும் அதிகமாயிருக்க வேண்டும், to compensate for the dulling effect caused by அரிசிமாவு.)

சின்னவயதில் அம்மா செய்ததையும் அக்கம் பக்கத்தில் செய்ததையும் காது வழி ஞானத்தையும் வைத்து மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு சோளச் சோறும் கேப்பக் களியும் சரியா வராது. அதனால் எங்கள் வீட்டில் சாதம் தான் பெரும்பாலும். அக்கம் பக்கத்தில் சோளச் சோறும் உப்புச்சாரும் என்றால் எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வரும். அங்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவேன். கேப்பைக் களிக்கு மகிழிக் கீரைதான் சரியான மேட்ச் என்பதால், கேப்பைக் களியுடன் உப்புச்சார் வைக்கும்போது என்னை ஸ்பெஷலாக அழைக்க மாட்டார்கள், நானாகக் கண்டுபிடித்தால் மட்டுமே கிடைக்கும். இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது யாராவது சோளச் சோறு (கேப்பைக் களியெல்லாம் கிடைக்குமென்ற நம்பிக்கையேயில்லை) செய்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தேன். இல்லையென்று பதில் வந்துவிட்டது. சோளச்சோறு இல்லையென்றால் உப்புச்சாரும் அதிகமாக நடமாடாது. I will be surprised if anyone still makes it anymore in our street in our village. மத்த தெருக்களைப் பற்றி எனக்குத் தெரியாது. (பிரேமலதா நல்லா இருந்தது. அதே முக்கியமான மேட்டர்.)