தமிழ்நாட்டில் சப்பாத்தி முன்னர் எப்பொழுதாவது ரொடேஷனில் செய்யப்படும் சிற்றுண்டியாகவே இருந்துவந்தது. இப்பொழுதும் இட்லியும் தோசையும் அதன் மவுசை இழக்கவில்லை என்றாலும் பெரும்பாலானவர்கள் அன்றாடம் அல்லது அடிக்கடி சப்பாத்தியையும் பெரும் அளவில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 2 கப்
உப்பு, எண்ணை – தேவையான அளவு
செய்முறை:
- கோதுமை மாவு, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
- நன்கு ஒன்றுசேர்ந்து கெட்டியான பதத்தில் வரும்போது, 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து கையில் ஒட்டாமல் நன்றாக அடித்துப் பிசையவும்.
- இந்த மாவை அப்படியே குறைந்தது 4 மணிநேரம் வைத்துவிட வேண்டும். நாளை காலையில் செய்ய முதல் நாள் இரவே பிசைந்து வைக்கலாம்.
- சப்பாத்தி தயாரிக்க ஆரம்பிக்கும்போது மீண்டும் ஒருமுறை அடித்துப் பிசையவும்.
- ஒவ்வொரு சிறு உருண்டையாக(பெரிய எலுமிச்சை அளவு) எடுத்து, கோதுமை அல்லது மைதா மாவு தோய்த்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
- சப்பாத்தி இட்டபின் உடனே அடுப்பில் மிதமான சூட்டில் காய்ந்த, சப்பாத்திக் கல்லில் போடவும்.
- ஒருபக்கம் லேசாகக் காய்ந்ததும்(10 நொடிகளில்), திருப்பிப் போடவும். இந்தப் பக்கமும் காய்ந்ததும் மீண்டும் திருப்பவும்.
இப்போது 1/4 டீஸ்பூன் அல்லது அதைவிடக் குறைவான எண்ணையை சப்பாத்தியைச் சுற்றி மெதுவாக விடவும். சப்பாத்தி பொங்கி மேலெழும்பும். - அடுத்தப் பக்கம் திருப்பி மேலும் சிறிது எண்ணை விட, மொத்தமாக மேலெழும்பும்.
- இரண்டு பக்கமும் மேலும் ஒரு 10 நொடிகள் கரண்டியால் கல்லில் பிரட்டி, பின் எடுத்துப் பரிமாறவும்.
* பிசைந்த சப்பாத்திமாவை ஈரத்துணியில் சுற்றி வைக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மூடி உள்பக்கம் தண்ணீரால் துடைத்து ஈரமாக்கி பின்னர் மூடிவைக்கலாம்.
* மாவு நன்கு ஊறியிருப்பது, அடித்துப் பிசைந்திருப்பது, கல்லில் சப்பாத்தியை இருபுறமும் முதலில் காயவைத்து பின்னரே எண்ணை விடுவது போன்ற காரணங்களாலேயே சப்பாத்தி பொங்கி மேலே வருகிறது. சப்பாத்தியைக் கல்லில் போட்டதுமே, தோசைக்கு விடுவதுபோல் எண்ணை விடக் கூடாது.
* எப்பொழுதாவது பலகையில் சப்பாத்தியை இடும்போது தவறாக அல்லது அதிகமாக ஒரு இடத்தில் அழுத்திவிடுவதாலோ, அல்லது கல்லில் திருப்பும்போது கரண்டியால் எங்காவது குத்துப் பட்டிருந்தாலோ, சப்பாத்தி சரியாக முழுவதும் பொங்கி எழும்பாமல் அரைகுறையாக இருந்துவிடலாம். இதற்கெல்லாம் கவலைப்படாமல், நமக்கு நாமே பொதுமன்னிப்பு கொடுத்துக் கொண்டு- வேறு யார் கொடுக்க வேண்டும்?- தொடர்ந்து செய்யலாம். பொங்காமல் போனாலும் மாவின் தன்மை காரணமாக சப்பாத்தி சாப்பிட மெதுவாகவும், சுவையகாவுமே இருக்கும்.
* கோதுமை மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் சோயா மாவு கலந்து செய்யலாம்.
* கடைகளில் தயாரித்த கோதுமை மாவை உபயோகிப்பதை விட கோதுமை வாங்கி நன்றாகச் சுத்தம் செய்து மிஷினில் அரைத்து, உபயோகிப்பது, சிக்கனம், சுவை, ஆரோக்கியம். விரும்பினால் 5 கப் கோதுமைக்கு ஒரு பங்கு வறுத்த சோயா பீன்ஸ், 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பும் சேர்த்து அரைக்கக் கொடுக்கலாம். முதலிலேயே சுத்தம் செய்துவிட வேண்டும். அரைத்த பின் சலிக்கக் கூடாது. அல்லது அரைத்த மாவில் அவ்வப்போது சோயா மாவு கலந்தும் செய்யலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் கலந்த சர்க்கரை, தோசை மிளகாய்ப் பொடி, சட்னி வகைகள், காய்கறிக் குருமா, உருளைக் கிழங்கு மசாலா, கடப்பா, மற்றும் சில சப்ஜி வகைகள்..
வியாழன், பிப்ரவரி 15, 2007 at 10:58 பிப
எல்லாம் சரிதான், புளியோதரை எங்கே?
வியாழன், பிப்ரவரி 15, 2007 at 11:03 பிப
செஞ்சுட்டாப் போச்சு! 🙂
செவ்வாய், பிப்ரவரி 20, 2007 at 3:28 முப
Thanks for high lighting the use of soya. lot of people don’t like the tase of soys but it is beneficial!
You can add soys upto 15% to “atta” without any change to the taste! (we have been doing it for almost 2 years). we do add soya powder even to other fluors when we make items like ‘murukku’ etc., we also grind soysbeans with other lentils when we make “adai” also. when we make curd you can add little bit of soya milk.(too much of sosy will kill the taste.
essentially it is a healthy food and needs to be added in our diabetic country!
செவ்வாய், பிப்ரவரி 20, 2007 at 7:43 முப
தியாகராஜன், உங்கள் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. ஆமாம், நானும் முடிந்தவரை எல்லாவற்றிலும் சேர்த்து வருகிறேன். அதிக சோயா சிலருக்கு செரிக்காது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சேர்க்க முடியும். முதலில் குடும்பம் கொஞ்சம் முகம் சுளித்ததும் உண்மை. (இதை எல்லாம் சொல்லாமலே செய்யவேண்டும்.)