தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் (அல்லது தேங்காயெண்ணெய்)

பூரணம் செய்ய:
உளுத்தம் பருப்பு – 1 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு

செய்முறை:

சொப்பு:

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்.)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து, காயவிடக் கூடாது.

பூரணம்:

uppu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவற்றைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • காய்ந்தமிளகாய், இஞ்சி, காயம், உப்பு சேர்த்து அதிகம் நீர் விடாமல் கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் வைத்து வெயிட் போடாமல் இட்லிகளாக (பருப்பு உசிலிக்குச் செய்வதுபோல்) 12லிருந்து 15 நிமிடங்களுக்கு குக்கரில் வேகவைத்து இறக்கவும்.
  • வெளியே எடுத்து, இட்லிகள் ஆறியதும் லேசாக உதிர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, பொடித்துக் கொள்ளவும். (மிக்ஸியில் சுற்றுவதற்கு முன் நன்றாக ஆறியிருக்க வேண்டும் என்பது முக்கியம்.)
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது வதக்கி உதிர்த்த பூரணத்தில் சேர்க்கவும். (பச்சை மிளகாய் வாயில் அகப்படக் கூடாதென நினைப்பவர்கள் ஒரு பச்சை மிளகாயை, மாவு அரைக்கும்போதே சேர்த்து அரைத்துச் கொள்ளலாம். ஆனால் அகப்பட்டால் சுவையாக இருக்கும்.)

கொழுக்கட்டை:

uppu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சிறிது நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு, பலகையில் கையால் உள்ளங்கை அளவு வட்டங்களாகச் செய்யவும்.
  • 2 டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களைக் கையால் அழுத்தி ஒட்டவும். இனிப்புக் கொழுக்கட்டையில் பிளந்தால், பாகு உருகி வெளியே வந்துவிடுவது போல் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்பதால் இதில் அதிகம் மெனக்கெடத் தேவை இல்லை.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது அதிகம் பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

uppu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக,

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள் :), அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த பஜ்ஜிமாவில் தோய்த்து, போண்டோ மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

இனிப்புக் கொழுக்கட்டை