கவிஞரும் எழுத்தாளருமான தற்போது பெங்களூரில் வசித்து வந்த சதாரா மாலதி நேற்று இரவு இயற்கை எய்தினார்.
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரா.கா.கிளப்பில் அருமையாக திருப்பாவைக்கு விளக்கம் எழுதியவர். இரா.முருகனால் எனக்கு தனிப்பட அறிமுகப்படுத்தப் பட்டவர்.
===
Murugan told me you had lots of interest in Thiruppaavai. I am very happy about that.Because very few take interest in it. My face is different as far as modern literature is concerned.I am much rational but Thiruppaavai enchanted me like a magic.Pl let me know your criticisms also It is not that I am always sensitive to attacks. I hate only illogical attacks with pre decided ideas.
Ys Malathi.
====
மாலதி சதாரா என்ற பெயரில் மரத்தடிக்கு வந்து போட்டிக் கதை, கவிதை எழுதி கவிதையில் இரண்டாம் பரிசு பெற்றவர். பெண் கவிஞர்கள் பற்றிய விமர்சனம் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென ஒரு புயல் மாதிரி வந்து தன் கவிதைகளையும் கருத்துகளையும் கனல் மாதிரி கொட்டிவிட்டுக் காணாமல் போனவர்.
===================
ஆபாச வார்த்தைகளைக் கவிதையில் போடும் பெண் கவிஞர்களைப் பற்றி அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர்கள் பிறர் கவனம் பெற அப்படி எழுதுவதாகவும் அவர்கள் அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுவதாகவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். கவனம் பெறவென்று எழுதுகிறார்கள். சரி. அந்த கவனத்தை ஏன் கொடுக்கிறார்கள்? அக்கறையினால் அல்ல. பேசப்பட்ட விஷயத்தின் கனத்தால் பாதிக்கப்பட்டு அல்ல. விளம்பரத்துக்காக. பரபரப்புக்காக. உண்மை தானே? சில சுயலாபங்களுக்காக சில பத்திரிகைகளும் சில குழுக்களும் சேர்ந்து சில பெண் கவிஞர்களை மட்டும் உலக மகா கவிஞர்களாக எடுத்துச்செல்கிறார்கள். [முன் எப்போதும் பெண்கள் எழுதியதே யில்லை என்பது போன்ற பாவனைகளுடன். தஸ்லீமா நஸ்ரீன், கிஸ்வர் நஹ்ஹீத் போன்ற பிறமொழிக் கவிஞர்கள் தாம் வழிகாட்டிகள் என்பது அப்பட்டமாகத் தெரிந்திருந்தும்] அந்தப் பெண் கவிஞர்களும் அவர்களுக்காகவே இயங்கிவரும் அந்தப் பத்திரிகைகளில் எல்லாரையும் தூக்கியெறிந்து தாம் எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று பேசிவருகிறார்கள். கவனமாக உள்ளூர்க் கவிஞர் பட்டியலைத் தவிர்க்கிறார்கள். ஆண் கவிஞர்கள் எதுவுமே எழுதவில்லை என்று சொல்வதுடன் பிடித்த பெண் கவிஞர்களாக பிறமொழிப் பேர்களையே எடுத்து வைக்கிறார்கள். அது, ஒத்த முனைப்புள்ள போட்டி வணிகர்களுக்குப் பிடிக்காத போது ஆபாச வார்த்தைகளைக் கண்டுபிடித்து அவற்றுக்காக அவர்களைக் கடிந்து தூற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மேலான குறுகிய காலத்து அதீத கவனத்தைத் தாங்க முடியாமல் தான் இந்த எதிர்ப்பு அலையே ஏற்பட்டிருக்கிறது.. ஆக மொத்தம் எல்லாமே விளம்பர சாகஸம் தான். அதிகக் கவனமும் மேலதிகமான எதிர்க்கவனமும் சம்பந்தப் பட்டவர்களை இன்னமும் நிலை தவறச் செய்கிறது. எதிர்ப்பு செய்தே கவனம் பெற இன்னும் ஒரு கோஷ்டி தயாராகிவிட்டது தேவையில்லாத வாத விவாதங்களுடன். இது ஒரு புறம்.
அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்துல் ரஹ்மான் சொன்னார். அவர்கள் எழுதுவது ‘அழைப்பதை’ப் போல் இருக்கிறது என்பதாக. என்னைப் பொறுத்தவரை ஆபாச வார்த்தையோ ஆபாச விஷயமோ என்று முத்திரை குத்திக்கொண்டு எதுவும் உட்கார்ந்திருக்கவில்லை. உண்மைகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லவரும்போது சிலருக்கு தர்ம சங்கடமாயிருக்கலாம். ஆனால் உண்மை உண்மை தானே? கூடத்தில் குளிக்க முடியுமா என்று கேட்பவர்கள் குற்றாலத்துக்கு ஏன் போகிறார்கள்? குளிப்பது ஆபாசமா?
இந்தியா டுடே வாசகி ஒருத்தி எழுதியிருந்தார்’ ஆடை அணியாமல் நாம் போகிறபோது மட்டுமே இந்த வகையான கவிதைகளை நாம் உரத்துப் படிக்கவும் பகிரவும் முடியும்’என்று. உண்மை தான். சந்தேகமேயில்லை. ஆனால் இந்த வகை எழுத்து இயங்குவது சிறு பத்திரிகைகளில். அது nudist colony. அங்கு ஆடை தான் ஆபாசம். யாரும் யாருடைய நிர்வாணத்தையும் அரிப்புடன் பார்ப்பதில்லை. நிர்வாணம் சிற்பத்தில் அழகு. ஓவியத்தில் அழகு. கவிதையில் மட்டும் அசிங்கமா? சினிமாவில் கட்டிப்புரள்வது போன்றதா?
மாலதி போராடிக் காப்பாற்றும் நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் இல்லை என்றாலும் இது தான் சாக்கு என்று மேலும் மேலும் எதிர்த்துப் பேசுபவர்களுக்கு அவர்களுடைய நோக்கத்தில் இருக்கும் பெரிய தவற்றைச் சுட்டிக் காட்டவே இதை எழுதுகிறேன். எந்தக் கருத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தணிக்கை என்பதே அடக்குமுறையின் வடிவம். இதில் மிக நுட்பமான பெண் எதிர்ப்பும் ‘சும்மா பேனாவை ஒடித்துப் போட்டு உள்ளே கிட’ என்ற அச்சுறுத்தலும் இருக்கிற விஷயம் மேலோட்டமாகத் தெரிந்து விடாது. குற்றம் சாட்டப்பட்ட கவிதைகளும் மிக நல்ல கவிதைகள் அவைகளை முன்னுதாரணமாகக்கொண்டு மேலெழுந்த அடுத்த வரிசைப் போலிக் கவிதைகளைத் தவிர. மீண்டும் சாய்வின்றி படித்துப் பாருங்கள். பிடிக்காவிட்டால் புறக்கணித்துப் போய்க்கொண்டே இருங்கள்.
நான் ஏற்கனவே [ஒரு பேட்டியில்] குறிப்பிட்டது போல மரணமும் காதலும் அவரவருக்குப் பிரத்யேக அனுபவம். அப்படியே கவிதையும். ஒருவர் கவிதையை இன்னொருவர் எழுத முடியாது. இன்னொரு உதாரணமும் எழுதியிருந்தேன். வெவ்வேறு பெண்ணுக்குப் பிரத்யேகமாக வரும் தீட்டு போல என்றும். கவிதையை இந்த வார்த்தையைப் போட்டு எழுது என்றோ போடாமல் விடு என்றோ யாரும் யாருக்கும் ஆணையிடமுடியாது. ஏனெனில் கவிதை நாளத்திலிருந்து வருவது. விரல்களிலிருந்து அல்ல.
அக்கறையுள்ள படைப்பாளிகளே புரிதலில்லாமல் மேலோட்டமாக ஒழுக்கவியல் ஆண்டைகள் போலப் பேசி வருவது மிகவும் வருத்தம் தருகிறது. மீதி எத்தனையோ விஷயங்களிருக்க இது ஏன் என்று குறிப்பிடுவது தவறு. சமூகக் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று பாலியம் சம்பந்தமான பாசாங்குகள்.
இப்போது நான் மிக ஆபாசமான ஒரு இணைப்பைத் தரப் போகிறேன். என் கவிதைகள் சில. இவை ஒரு நாளும் உங்களை வந்து சேரப்போவதில்லை. ஏனெனில் ஒரு புத்தகம் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்னொரு பதிப்பை என் வாழ்நாளில் போடும் உத்தேசமில்லை. அடுத்து இரு தொகுப்புகளை நான் யாருக்கும் கொண்டு சேர்க்கவில்லை. கொண்டு சேர்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பு தான். இப்போது நான் சொன்ன ஆபாசம் நான் இணைத்துள்ள கவிதைகளில் இல்லை. நான் இவற்றை முன் வைக்க வேண்டி வந்த முனைப்பில் மிகப் பெரிய ஆபாசம் இருப்பதாக சத்தியமாக நம்புகிறேன். [தன்னைத் தான் முன்னெடுப்பதைவிடக் கொடுமையான விஷயம் உலகில் இல்லை.என்ன தான் விளம்பர யுகம் என்றாலும்] பூச்சிமருந்து தெளிக்க விரும்பவில்லை என் பூத்த பூக்களுக்கு.
திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்க்கிறேன். கவிதை எழுத வேண்டும் என்று தோன்றுவதே என்னைப் பொறுத்தவரை அடாத செயல் தான்.தாங்க முடியாமல் போன போது தான் எழுத வேண்டி உந்தல் பிடரியைப்பிடித்துத் தள்ளுகிறது.
உதாரணமாக இத்துடன் இணைத்திருக்கும் ‘சாபம்’ என்ற கவிதை பெங்களூர் சுப்ரமண்யநகர் வீட்டு மூன்றாம் கட்டடத்துப் பெண் தீயில் கருகின வலது பக்கத்துடன் பிறந்தவீடு வந்தாள் என்ற செய்தி கேட்டதும் எழுதப்பட்டது. அது அசிங்கமாக வந்திருக்கிறது. குடிசைப் பையன் கையாலாகாத நிலையில் பெருந்தனக்காரன் அடக்குமுறைக்கு வரும்போது சீற்றத்துடன் ‘…த்தா’ என்று உரத்து சப்தமிடுவது போல.
பெண் வெளிப்பாட்டில் ஒரே ஒரு பெண் இல்லை. பல பெண்களுக்காக ஒரு குரல் மெல்ல ஒலிக்கிறது. ஒலிக்கிற பெண் குரல் முக்காலும் வேசியின் குரலாகவே அடையாளப்படுகிறது. ஏனெனில் பெண் கிழவியாகவோ பைத்தியமாகவோ அறியாச் சிறுமியாகவோ இருக்கும்போது மட்டும் தான் குரலெழுப்ப முடிகிறது. அந்த மூன்று நிலைகளுக்குட் படாமலே ஒரு பெண் பேசி விட்டால் அவள் வேசியாகத் தானிருக்க வேண்டுமென்ற சமூக விதி எழுதப் படாமல் இயங்குகிறது.
யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும்.
அன்புடன்
மாலதி
பி.கு.
உண்மைகளைத் தெரிந்தவரை எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கமே ஒழிய சக கவிஞர்கள் மேல் காழ்ப்போ அல்லது சுய பரிதாபமோ என்னில் ஒலிப்பதாக இட்டுக் கட்டி நினைக்கவேண்டாம். எனக்கு ஆதாயம் தருகிற நல்ல [முதலீடில்லாத]சில தொழில்கள் கைவசம் உள்ளன. கணக்கெழுதுவது, சமையல் செய்வது,பற்று தேய்ப்பது, முதியோர் பராமரிப்பு இன்னும் பல. இவைகளைச் செய்து சாப்பிடுவேன்.
===
திண்ணையை மறந்து விட்டேன். திண்ணையில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதும் அடியேன் தான். நாச்சியார் திருமொழி, மறுவாசிப்பில் திருப்புகழ், பிரும்மராஜன் கவிதைகள் [திறனாய்வு], அ.முத்துலிங்கம் கதைகள் [திறனாய்வு], அம்மா வந்தாள் பற்றி தி. ஜானகிராமனின் பெண்கள் ஆண்கள் கிழவர்கள் [முழு ரிவ்யூ]மற்றும் சில. கால்வினோ கதைகள் பதினைந்தை அறிமுகம் செய்திருக்கிறேன் என் புரிதலின் படி.[பிரும்மராஜன் வழி].
அப்புறம் எதாவது ஞாபகம் வந்தால் சொல்கிறேன். மங்கையர் மலர் கட்டுரைகளில் முக்கியமாக நிறைய மனிதவள மேம்பாடு, பிறகு நகைச்சுவை அப்புறம் சில முக்கிய பெண்ணிய கட்டுரைகள் இப்படி. சேலம் பெங்களூர் ரயில் பாதை, மாவின்குருவே[பெண் கரு அழிப்பு பற்றி நக்கலோடு உக்கிரமாகச் சொல்லப்பட்ட கதை. தலைப்பு மறந்து விட்டேன்.] ஆண்களைப் பற்றின நகைச்சுவைக் கட்டுரை அதெல்லாம் யாருக்காவது ஞாபகம் வரலாம். அப்புறம் நீத்தார் வழிபாடு குறித்து திருநாவாய் பற்றி கட்டுரை எழுதினேன். திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகவதி கோயில் கண்ணகி சம்பந்தப்பட்டது என்பதை எழுதினேன். மன்னிக்கவும் இனிமேல் எழுத நிறைய இருக்கிறது. இனிமேல் தான் எழுத வேண்டும்.
பி.கு. கருத்தரங்கக்கட்டுரைகளும் சில உண்டு.
கு.ப.ரா. பற்றி சேலத்தில் காலச்சுவடு நடத்திய கருத்தரங்கில்.
பெண் காதல் கற்பு… பாண்டிச்சேரி கருத்தரங்கில்
மற்றும் சில.
உபரித் தகவல். நான் தான் கடைசி நபர் இலக்கிய வட்டாரத்தில். காரணம் எல்லாரும் வெறுக்கக் கூடிய எல்லா அடையாளங்களும் என்னிடம் உண்டு. நான் BSNLநிறுவனத்தின் Chief Accounts Officerம் கூட. சாப்பாடு போடுவது கணக்கெழுதும் உத்தியோகம் தான். மீதியில் எல்லாம் பொருள் இழக்கிறேன். அப்படியே எனக்கு சின்னத்திரை ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விட இலக்கியப் பத்திரிகைகளில் பைத்தியம் அதிகம். யாரும் கவனிக்காவிட்டாலும் அதில் தான் உயிர் தீவிரம் பெறுகிறது. அதில் திருப்தி வருகிறது. அவற்றில் எழுதுவதே ஆனந்தம். பன்முகம், புதிய கோடாங்கி, கனவு, கணையாழி, விருட்சம் இதிலெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன். ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் விரைவில் எழுத வேண்டும். நான் தான் சோம்பேறியாக இருக்கிறேன். அவர்கள் மறுப்பதில்லை. ‘பெண்ணே நீ’ யில் சில கட்டுரைகள் எழுதினேன். [தினமணி.காம்-ல் கிடைக்கும்.]
அப்பா! எனக்கே போரடித்து விட்டது. இன்னும் ஒரு வருடத்துக்கு என்னைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன்.
அன்புள்ள மாலதி.
மறந்தே போச், திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா.
=====
சாபம்
எரிந்து எரிந்து
சாம்பலானான்
ஒரே ஒரு ஆண்.
அவன் சொன்னான்
நான் போதும்
ஆண் இனத்துக்கே
இனி எரிவது எப்போதும்
பெண்ணாகவே இருக்கட்டும்.
சொன்னவன் மன்மதன்.
இவளுக்கோ
ஒரு நேர உபயோகத்துக்கு
வகுத்த அவயவங்கள்
ஆயுள் தண்டனை.
சில மாதத் தேவைக்காக
சிலுவையாய்ச் சுமக்கின்ற
வசீகரப் பால் பண்ணை.
எரிந்து எரிந்து வாழ்வாள்.
வகிடிட்ட இணைமேட்டில்
மடிப்பிட்ட உள் துடையில்
உணர்வெரிக்கும்.
விடுபடல் இல்லாமல்
இடுக்குகள் சிக்கலிடும்.
இன்னமும் போதாமல்
சாபம்.
பின் எப்போதும்
தீவிபத்து எல்லாமே
பெண்ணுக்கே நேர்வானேன்?
— வரிக்குதிரை[1999]
0
சிறகு முளைத்த சுமைதாங்கிகள்
காரியாலயம் போகும்
காரிகையர் நாங்கள்
கரியர் விமன்கஞ்சிக்கும் துணிக்கும்
கணவனை எதிர்பார்க்காத
கவிதைப்பெண்கள்காப்பு கட்டளை கப்பம்
கணவன் வீட்டில்
கண்டவர்க்கும் சீர்
கடன் வாங்கிச்செய்வோம்
நார்நாராய்க்கிழிக்கும்
நார்களுண்டு எங்களுக்கு
மாமனார் நாத்தனார் மனம் குன்றி மக்கள்
பிறந்ததுண்டு எங்களுக்கு
எங்களுக்கும் சுகர் வரும்
பி.பி. வரும் நோய்கள் வரும்
கரியர் விமன் என்று
எது விட்டது எங்களை?பையன் பெயிலானால்
டிப்ரஷன் எங்களுக்கு.
பெண் புறம் போனால்
டிப்ரஷன் எங்களுக்கு
கரியர் மென்னுக்கு
அதெல்லாம் கிடையாது.
ஒரு வாக்கியம் சொல்லி
விட்டு விடலாம்
‘நீ வீட்டில் இருக்கலாமே!’
என்று. கரியர் விமன் என்றால்
கைப்பை கண்ணில் ஒளி
கைவீசும் சுதந்திரம்
அவற்றின் விலை?காதல் உண்டா வீட்டுக்குள்
என்றா கேட்டீர்கள்?
காதலா? அது என்ன?
ஓ! அந்தக் கசங்கலா?
கால்களிடைப் பிசுக்கா?
உண்டு.
அது கொண்டு தரும்
கடல் போல வேதனை
கண் கீழ் கருவளையம்
கை கால் நடுக்கம்
கர்ப்பம் கலைப்பு
தன்னைத் தொலைத்துக்கொண்ட
அவமானம்
அத்தனையும் உண்டு.
காதலென்று ஏதோ
நெஞ்சில் விழுமாமே!
அது எங்களுக்குத்
தெரியாது.அன்றாடம் எங்கள் தேவை
கால் கப் காப்பி
கடும்பசிக்குக் கவளம் சாதம்
சரியான நேரத்தில், சூட்டில்.
கிடைக்காதே!
அத்தனையும் மீறிப்
பளிச்சிட்டால்
தேடிவரும் பட்டங்கள்
‘ஒருமாதிரி’யாய்.
புத்திசாலி என்ற பேர்
எந்நாளும் கிடைக்காது.
அதற்கு நாங்கள்
ஆணாய்ப் பிறக்கவில்லை.
புத்திரர்க்கு எங்கள் மேல்
கொள்ளை ஆசை
புதினாத் துவையல்
அம்மா கைப்பாகம்
பிரம்மாதம் என்பார்கள்.
பெண்களுக்கோ எங்கள்
நகை மேல் மோகம்
இந்த மூக்குத்தியில்
அம்மா! நீ எத்தனை அழகு
என்பார்கள்.
கடைசிச்செலவுக்கும்
எங்கள் கைப்பையில்
காசிருக்கும்.
கைப்பை கிடைக்காமல்
கண நேரம் போனாலும்
கடுகி வருவாள் கைகொடுக்க
ஒரு தோழி அவளும்
ஒரு கரியர் உமன்.
ஒன்று மட்டும் நடக்காது.
காரியம் செய்ய வரும்
கணவனின் கைக்கொள்ளி
பிடுங்கி
செத்தபிறகாவது
இவளைச்சுடாதே
என்று சொல்ல
தோழிக்கு முடியாது
முடியவே முடியாது.
— வரிக்குதிரை[1999]
0
மெல்லியது
துடைக்கிடை துளைத்த
தோட்டாவும்
அடைபட்ட பேருந்து பயணத்தில்
மேவாடை மறுக்கின்ற
உள்நசிவின் முடிச்சிறுக்கின்
ஊவாமுள் பூனைக்காஞ்சி உறுத்தலும்
உள்மீட்டும் நெருக்க வாசமும்
பள்ளம் பொளியும் எண்ணச்சிற்றுளியும்
கண்விரிய எழுதிவிட்ட
கவிதைக்கிறக்கமும்
எல்லாமுமாகி வருத்துது.
மலரினும் மெல்லியது.
— தணல் கொடிப்பூக்கள்[2001]
0
நிலம் என்னும் பொல்லாள்
யோநி குண்டம் பிளந்துவைத்தாள்
பாவியாள் பார்க்கத்தரமல்லாள்.
காலக்கணவன் அவளைக்
கால் மாற்றி உதைத்தான்.
கர்ப்பிணியை வதைத்தான்
கன்று பிரித்தான்.
கான்கிரீட் கனத்தாலே
கடுப்புற்றாள் பால் காம்பில்.
கர்ப்பப்பைப் புற்றாலே
நித்தியமாய் இரத்தவிடாய்.
ஊசியால் விந்தேற்றி அவளில்
உலர்ந்த கருத்தரிப்பு.
பேணுதல்களில்லாமல்
பேறுகள் பலகோடி
உடல் மரத்துப்போகவிட்டான்
உற்றதுணவன் அவளை.
முலைவருடாமல் முகவாய் பிடிக்காமல்
இதழ் சுவைக்காமல்
உடல் மரத்துப்போகவிட்டான்.
ஈரத்தினவுக்கு ஈடு கிடைக்காமல்
சோரத்தில் நின்றுவிட்டாள்.
பகிரங்க வேசியாய்
பால்மாறி நின்றாள்.
பெண்மை மறந்தாள்.
கணவன் மேல் கோபமென்றால்
குழந்தைகள் மேல் குற்றங்கள்.
ஆடையணியட்டும் அவள்.
ஆசை மறக்கட்டும்.
பெண்காமம் பெரிதென்று
காட்டிவிட்டாள். மாற்றட்டும்.
கோள்கள் மேல் ஏறிக்கொண்டு
கொக்கரித்தான் அவள் கணவன்.
புத்தி வரப்போவதில்லை
பதிகளுக்கு எந்நாளும்.
பித்தாட்டம் பத்தினிக்குப்
போதும் நிறுத்தட்டும்.
— தணல் கொடிப்பூக்கள் 2001
இந்தக் கவிதை எழுதியபின்பு கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். இதில் பத்தினி
வேசி என்று பெண்நிலைப் பாட்டுக்கு விரோதமான சொற்களை உபயோகப்படுத்தி விட்டேன் தெரியாமல். ஆனாலும் பண்ணிய தப்பை மறைக்க விரும்பவில்லை.
0
உறுப்பிலக்கணம்
பெண் போலணிந்த உடை
இரு பாலிலி நான்.
கைவழிப்புணர்ச்சி தான்
கட்டிவரும் எனக்கு.
உடல்மொழி தெரியாது
மதம் உதற வராது.
அன்புண்டு ஆண்டவன் தானில்லையென
அநியாயப்புளுகுக்குப் பயிற்சியெடுக்கவில்லை.
ஒன்றிரண்டு மூன்றுமில்லைநான்காவது
ஐந்தாவது மதங்கள் தேவலாம்
என்று சிறுபான்மையில் ஒளிய
நாட்டம் எதுவுமில்லை.
சட்டமும் சத்தியமும்
சம்பளமும் பேணும்
சாணாத்தி பிழைப்பெனக்கு.
சாதி எதிலுமில்லைஎன்
பிறப்புக்கு, ஏழைப்பிராய
இளமை தந்த சொத்தது.
படிகளில் ஏறிவிட
வடிகால் அமைத்துத்தர
சேக்காளி குழு துருப்புச்சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக்கவிதை.
— மரமல்லிகைகள்[2003]
0
கூர்வாளைப் படித்தபோது கருத்தில் ஒத்துப்போன இன்னொரு கவிதை ஞாபகம் வந்தது.
என் பிசாசு
ரகசியமாய் ஒரு பிசாசு
சைகை செய்தும் கழுத்தை இறுக்கியும்
என்னை பயமுறுத்துகிறது.
எப்போதும் பிறர் மேல் பார்வை
அதற்கு. எவரும்
கூசிப்போகும்படி கெட்ட
நடவடிக்கை அதற்கு.
என்னை அதிர வைக்கிறது.
திருடத்தூண்டுகிறது.
யாரிடமும் சொல்லிவிட்டால்
அவ்வளவுதான்! என்று
அச்சுறுத்துகிறது.
இதனிடம் தப்பித்து
வெளிவரவே முடிவதில்லை.
பிசாசு இருப்பதை
வெளியே சொல்லிக்கொள்வது
அவ்வளவு சுலபமில்லை.
பிசாசும் நானும் வேறு வேறு
என்பதை நிரூபித்தாக
வேண்டியிருக்கிறது சமயங்களில்.
பிசாசைப்போல சிலநேரம்
நானும் ஆகி வருவது
அந்தரங்க சந்தோஷமாகவும்
அதிர்ச்சிக்குரிய உண்மையாகவும்
ஆகிவிடுகிறது.
நான் தான் பிசாசு என்று
சிலர் குற்றம் சாட்டும்போது
கோபம் பொத்துக்கொண்டு
வருகிறது.
நானாகச் சொல்லிக்கொள்ளும்போது
பிசாசும் நானும் சேர்ந்து
இளித்துக்கொள்ளுகிறோம்.
14.4.2003 கவிதைக் கணத்தில் வாசிக்கப்பட்டது. மரமல்லிகைகள் தொகுப்பில் இருக்கிறது.
0
கருத்தளவில் ஒத்துப்போனது மேற்சொன்னது என்றால் சொல் அளவில் ஒத்ததாக இதைப் போடுகிறேன்.
வீம்பு
கத்தியைத் தூக்கிப்போட்டு
கவனமாய் நுழைந்தாய் நீ
என் ஊர்களில்
நான் காத்திருந்த விண்ணாகி
நிலவைப் பரிசளித்தேன்.
என்றும் குறையாத நிலவை.
இடைவெளியில்
என் பூவனங்கள் காயாமல்
நினைவுகளின் பாசனம்.
ஓரிருமுறை என்னை
மீட்டிச்சென்ற உன்
நினைவுகள்.
எல்லாம் இன்று சரியானது.
திருப்தி தான்
ஆனாலும் ஒரு கேள்வி.
இருபது வருடங்களுக்குக்
கத்தியை ஏன் சுமந்தாய்?
இந்தக் கவிதை குறித்து அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள் என்ற தொகுப்பில் க. மோகனரங்கன் சிலாகித்திருந்தார் அது மாலதிமைத்ரியால் எழுதப்பட்டது என்று நினைத்து. அது என்னுடைய தணல்கொடிப்பூக்கள் தொகுப்பில்[2001] உள்ளது.
0
நிஜமாகவே இது சானிட்டரி நாப்கின் கவிதை.
காதோடு வந்த ரகசியம்
கரும்பாலே ஒரு நியமனம்.
வலிமின்னல் வாட்டங்களில்
தான் பெரியவள் என்ற பலம்
தனக்குத்தானே
ஒரு ஹோலி
பிரத்யேகமாக ஒட்டும்
வண்ணப்பண்டிகை
கள்ளமில்லாமலே கறை
ஒளிக்கின்ற
பிள்ளைத்தனத்தில் துவளல்.
அவசிய அதிகப்படி
தற்காப்பில் கவன மழை.
இடைநாபி ஒசிந்து
உள்வாங்கும் மயில் நளினம்.
ஆசைப்பேரருவி கொட்டல்
நாடி நரம்பு தமனிகளில்
நசையேற்றித்
தாமிறங்கும்
சிவப்பு இரத்தப் பொட்டலங்கள்.
மேனியிலே வந்து
ஈஷிக்கொள்ளும் காமம்
சதிர் ஆட்டுவிக்கும்
மோகம் மயக்கம்
காதலனைப் பூசிக்கொள்ளப்
பேருவகை
அத்தனையும் அந்த நாளில்.
காட்டாற்று வெள்ளம் நின்று
மடு வெளிறி கூந்தலாற்றி
நிற்கிற
ஐந்தாவது நாள்
அழகு! ஐயோ!அற்புதம்
அசௌகரியம் அங்கு ஏது?
கவிஞர் சுகுமாரன் ஷவர சுகம் குறித்து எழுதிய inspiration இது. வரிக்குதிரை தொகுப்பில் உள்ளது. இன்னமும் கருத்திலேயே வில்லங்கம் வைத்த கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். இப்போதைக்கு இது போதாது?
===========================================
எங்களுக்குள் மிகச் சில கடிதத் தொடர்புகளுக்குப் பிறகு தன் பெண்ணைப் பார்க்க US செல்வதாக ஒரு கடிதம் எழுதியதோடு எங்கள் தொடர்பு நின்றிருக்கிறது. 😦 மீண்டும் இன்று திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
மாலதி கவிதைகள் குறித்த கட்டுரை திண்ணையில்..
வியாழன், மார்ச் 29, 2007 at 10:45 முப
அதிர்ச்சியாக இருக்கிறது ஜெ!
மரத்தடியிலும் ராயர்காப்பிகிளப்பிலும் இவர் பகிர்ந்துகொண்ட மடல்கள் நினைவுக்கு வருகின்றன.
அவர் எழுதியவற்றில் முக்கியமானதை இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஜெ. சதாரா மாலதி அவர்களுக்கு நல்லதொரு அஞ்சலி இவ்விடுகை.
-மதி
வியாழன், மார்ச் 29, 2007 at 12:08 பிப
அன்னாரின் குடும்த்தினருக்கும் வாசக வட்டத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
வியாழன், மார்ச் 29, 2007 at 2:52 பிப
மாலதியுடன் தனிப்பட்ட முறையில் தொடர்ப்பு இல்லை என்றாலும், அவருடைய திண்ணை திருப்பாவை கட்டுரைகளை விரும்பி படித்தேன். ம்ம் சின்ன வயசுதான் இல்லையா? செய்தி படித்ததும்
வருத்தமாய் இருக்கிறது.
வியாழன், மார்ச் 29, 2007 at 3:54 பிப
குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இழப்பு அதிகம்
பிறருக்கு ஒருநாள் செய்தி இது:-(
அநுதாப வார்த்தைகள் மேலேயே அநுதாபம் வருகிறது
சதாரா மாலாதிக்கான அஞ்சலிதான் நாம் செய்ய இயலும் ஜெயஸ்ரீ
வெள்ளி, மார்ச் 30, 2007 at 12:33 முப
[…] மாலதி சதாராவின் படைப்புலகத்திற்கு இட்டுச் செல்கிறார். […]
வெள்ளி, மார்ச் 30, 2007 at 2:08 பிப
Its very shocking! We exchanged couple of mails regarding her controversial poems. I remember once she had a very bad criticism came for her poem in marathadi and she left the group.
she is very sensitive at the same time she is more than frank honest human being.
we will pray for her.