இதை அநேகமாக எங்கள் வீட்டில் குழந்தை பிறந்து தொட்டிலிட்டு, பெயர்வைக்கும் நாளிலும் முதல் ஆண்டுநிறைவன்று காதுகுத்தும் நாளிலும் செய்வார்கள்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
பொட்டுக் கடலை – 200 கிராம்
நிலக்கடலை – 200 கிராம்
வெள்ளை எள் – 50 கிராம்
கொப்பரைத் தேங்காய்
ஏலப்பொடி
நெய்
செய்முறை:
- குருணை இல்லாத, முனை முறியாத பச்சரிசியை கால் மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, நிழலில் உலர்த்திக் கொள்ளவும். (ஆற நேரமில்லை என்றால் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம்.)
- வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
- கொப்பரைத் தேங்காயை சின்னஞ்சிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
- எள், கொப்பரைத் துண்டுகளை சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை முற்றிய பாகாக வைத்து முதலில் முக்கால் பதம் உலர்ந்த அரிசியைச் சேர்க்கவும். பாகின் சூட்டிலேயே அரிசி பொரியும்,
- பின், ஏலப்பொடி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள், தேங்காய்த் துண்டுகளைக் கலந்து கிளறி இறக்கவும்.
- காப்பரிசி முதலில் இறுக்கமாக இருக்கும். ஆனால் ஆறியதும் உதிர்ந்துகொள்ளும்.
* பண்டிகைக்காக இல்லாமல் சாதா நாளில் செய்தால் சீரக மிட்டாய்களை அழகுக்காகக் கலந்து கொள்ளலாம்.
* சிலர் அரிசியை நன்றாக வறுத்தே, பின் பாகில் சேர்ப்பார்கள். அரிசி முனை முறிந்தோ உடைந்தோ விடலாம் என்பதால் நான் செய்வதில்லை.
திங்கள், செப்ரெம்பர் 3, 2007 at 7:23 பிப
காப்பரிசி என்கிற பெயரைப் பார்த்தவுடன் என் அப்பாவின் நினைவு வருகிறது. பெயர் வைக்கும் விழாவிற்குச் சென்றுவிட்டு கையில் காப்பரிசியுடன் வந்த அப்பா, என் அம்மாவிடம், “அவங்க வீட்ல வாய்க்கரிசி கொடுத்தாங்க” என்று சொல்லியிருக்கிறார். என் அப்பா இறக்கும் வரையிலும் என் அம்மா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். காப்பரிசிக்கும் வாய்க்கரிசிக்கும் வித்தியாசம் தெரியாத பிராமணா என்பது என் அம்மாவின் கிண்டல் பிரயோகம்.
காப்பரிசியை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டில் அதைச் சிதறி அடிக்க வேண்டும் என்பது நம்பிக்கை. இது பற்றித் தெரியுமா? என் அத்தை (6 பிள்ளைகள் பெற்ற பின்பும்) காப்பரிசியை முந்தானையில் வாங்கிவந்து வீட்டில் சிதறிடிப்பார். மாமா கோவப்பட்டதாலோ என்னவோ 7வது ஒன்றும் பிறக்கவில்லை!!!
புதன், செப்ரெம்பர் 5, 2007 at 3:32 பிப
அரிசியை சிதறி அடிக்கற பழக்கம் எங்க வீட்டுல இல்லை. அப்படி செஞ்சா குழந்தை பிறக்குமா? நம்பிக்கைக்காக சிதறினாலும், அதை யார் அப்புறம் பொறுக்குவாங்க? நான் சினிமாலயே யாராவது சாப்பாட்டுத் தட்டைத் தூக்கி எறிஞ்சா, சாமானைக் கீழபோட்டு உடைச்சா, அப்புறம் யார் சுத்தம் செய்வாங்கன்னு கவலைப்படுவேன். 😦
//மாமா கோவப்பட்டதாலோ என்னவோ 7வது ஒன்றும் பிறக்கவில்லை!!!//
லொள்ளு தான். :)) ஆனா எனக்குத் தெரிஞ்சு அந்தக் காலத்துல அதிகம் சண்டை போடற தம்பதிகளுக்குத் தான் அதிகம் குழந்தைகளும் இருந்திருக்காங்க.
புதன், செப்ரெம்பர் 5, 2007 at 5:50 பிப
சண்டை போட்டாத்தான் கோச்சுக்கிட்ட மனைவியைச் சரிபண்றதுக்காக 😉
வெள்ளி, செப்ரெம்பர் 7, 2007 at 9:56 முப
பிரேமலதா, மனைவி கோவிச்சுகிட்டு கணவன் சமாதானம் செஞ்சாத் தான் பரவாயில்லையே. நான் சொல்றது பகல்ல கணவன் காச்மூச்னு கத்துவாங்க, மனைவியை மதிக்க மாட்டாங்க. ஆனா இந்த மனைவிகள் சமத்தா கஷ்டப்பட்டு இந்தாளுக்கு எப்படி இவ்ளோ குழந்தைகள் பெத்து அதை வளர்க்க வேற வாழ்நாள் முழுக்க இவ்ளோ கஷ்டப்படறாங்கன்னு ஆச்சரியமா இருக்கும்.
வெள்ளி, செப்ரெம்பர் 7, 2007 at 3:10 பிப
ஜெயஸ்ரீ, கணவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் பிள்ளை பெத்துக்கறதை பத்தியெல்லாம் பொண்ணுங்க ஒன்னும் முடிவு பண்ணிட முடியாதில்லையா? அதுனால பெத்துப்பாங்களாயிருக்கும். ஆனா கஷ்டப்பட்டு ஏன் சமத்தா வளக்கறாங்கன்னு கேட்டீங்க இல்லையா, அது மட்டும் கொஞ்சம் சுயநலத்தோடுதான். பிள்ளையோ பெண்ணோவாவது தனக்கு ஆதரவா இருக்காதான்ற நம்பிக்கைதான் நமக்கு முந்தைய தலைமுறைய சேர்ந்த பெரும்பாலான பெண்களை உயிரோடவே வச்சிருக்கு….
வெள்ளி, செப்ரெம்பர் 7, 2007 at 3:35 பிப
லஷ்மி, அப்பொழுதெல்லாம் பிள்ளை பெற்றுக் கொள்வதை பெண்கள் முடிவு செய்ய முடியாது என்று நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆச்சரியமெல்லாம் அதிகமாகச் சண்டை இடுபவர்கள் தான் அதிகம் பிள்ளை பெற்றிருக்கிறார்கள் என்பது தான். இதற்கு புள்ளிவிபரம் எல்லாம் கொடுக்க முடியாது. விதிவிலக்குகளும் இருக்கலாம். ஆனால் அநேகமாக நான் பார்த்தவரை இது சரியாகவே இருந்திருக்கிறது. 🙂
திங்கள், செப்ரெம்பர் 10, 2007 at 7:38 முப
காப்பரிசிக்கு அதன் படம் போடாமல், தவழ்ந்த கண்ணன் படம் போட்ட எண்ணமே கவிதை மாதிரி அழகாக இருக்கிறது. பொம்மை அதை விட அழகு. சொந்தப் படமா(பொம்மையா), சுட்டதா?
எனக்கு காப்பரிசி பிடிக்காது. 🙂
திங்கள், செப்ரெம்பர் 10, 2007 at 12:37 பிப
Vijayram,
கண்போடதீங்க! அட்டுப் பய, குளிச்சு, அலங்காரம் செஞ்சுக்கறதுக்கு முன்னால எடுத்த புகைப்படம். அள்ளிக்கலாம் போல இருக்கில்ல?
“பூணித்தொழுவினில்புக்கு புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்”
ன்னு ஆழ்வார் பாடினதைச் சொல்லும்போதே கருகருன்னு ஒரு குண்டுக் குழந்தை கண்ணுக்குத் தெரியும். அப்புறம் நேர்லயும் கிடைச்சது.
பெங்களூரிலிருந்து மைசூர் போற வழில தொட்டமளூர்-ங்கற இடம். அப்ரமேய ஸ்வாமி கோயில். பெருமாள் அப்ரமேய ஸ்வாமி. ஆனால் கோயிலுக்குள்ளயே சைட்ல இந்தக் கிருஷ்ணர் கோயிலும் இருக்கு. மளூர் கிருஷ்ணர்னு சொல்றாங்க. முழுக்க சாளிக்கிராமத்துலயே ஆன கிருஷ்ணராம்.சிலை திருட்டுக்கு இபிகோ-ல தண்டனையாமே. அதனால அப்படியே வந்துட்டேன். வெளில அதோட மினியேச்சர் விக்கறாங்க. உடனே வாங்கிட்டேன்.
என் பொண்ணு அந்த சன்னதி வாசல்ல உட்கார்ந்து “குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா”ன்னு மழலையா ரெண்டு வருஷம் முன்னால பாடினா. படம் எடுக்க அனுமதி இல்லை. அப்ப கன்னடர் ஒருத்தர் வந்து திரும்ப பாடச் சொல்லிட்டு, புரந்தரதாசர் இந்தச் சன்னதி முன்னால உட்கார்ந்து தான் “ஜகதோ தாரண” பாடினார் அப்படீங்கற தகவலும் சொல்லிட்டுப் போனார்.
புதன், நவம்பர் 7, 2007 at 9:51 முப
குழந்தை பிறந்து பதினோறாம் நாள் பெயர் வைக்கும் விழா நடத்துவார்கள். அன்று மாலை குழந்தையைத் தொட்டிலில் இட்டு உறவினர் அக்கம் பக்கத்துக்காரர்களைக் கூப்பிட்டு குழந்தைக்கு தாலாட்டு பாடி,குழந்தையின் தாய் மாமனோ அல்லது சில வீட்டு பழக்கப்படி அம்மாவேகூட தொட்டிலின் கீழே பரப்பியுள்ள நெல்லில் குழந்தையின் பெயரை எழுதுவார்கள். அப்போது எல்லோருக்கும் இந்த (விவாததுக்குரிய)காப்பரிசி வழங்கப்படும்.
ஆனால் கலையில் புண்ணியாகவசனம் என்னும் தீட்டு கழிப்பு விழா நடக்கும்போதுதான் தகப்பன் பிள்ளையார் பூசை செய்து, நெல் அல்லது தானியங்கள் தானமாகக் கொடுப்பார்கள். அதைத்தான் மடியில் வங்கிக்கொள்வார்கள் வாங்குபவர்கள்.இவ்வாறு நெல் தானம் செய்தால் குழந்தைக்கு ஆயுள் நிறைய இருக்கும் என்று நம்பிக்கை.இதை விரைதானம் (விதை) என்பார்கள்.இதைத்தான் உங்கள் அப்பா மடியில் வாங்கி வந்திருப்பார்.ஒரு வேளை அவர்கள் வீட்டில் நெல் வாங்காமல் அரிசி கொடுத்தார்களோ என்னவோ?
அந்த மடியரிசியையும் காப்பரிசியையும் நீங்கள் குழப்பிக் கொள்வதாகத்தெரிகிறது.
புதன், நவம்பர் 7, 2007 at 10:14 முப
இந்த சண்டை போட்டுக்கொள்ளும் தமபதியர் பற்றிய சர்ச்சையை இப்போதுதான் நான் பார்த்தேன். எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். சண்டை என்பது கணவன் மனைவிக்கு இடையில் மிகவும் சகஜமான ஒன்று. இருவர் இருவேறு மனங்களைக் கொன்டவர்கள், இரு வேறு உடல்களைக் கொன்டவர்கள், இருவேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் எல்லாவற்றையும் பறிமாரிக்கொன்டு ஒன்றாக வாழ்வது என்பது ஒரு பெரிய PROCESS.(THE TWO PSYCOLOGICALY AND PHYSICOLOGICALY DIFFERENT PERSONS FROM DIFFERENT FAMILY BACKROஊண்ட்)
அப்பயடி குடும்பம் மற்றும் குழந்தைகள் நலத்தையும் ,குடும்ப நலத்தையும் முன்னிறுத்தி
பொறுமையுடன் வாழும்போது, சில சமயங்களில் நம்மை வெளிப்படுத்தும் கட்டாயத்துக்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போது சண்டை வரத்தான் செய்யும்.சண்டை வந்தால் வெளிப்படுத்தி விடுகிறார்கள் அல்லவா? பிறகு சமாதானமாகி விடுகிறார்கள்.சண்டை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு சாதனம்.புரிந்து கொன்டவர்கள் காதலர்களாவது சகஜம்தானே?
சண்டை வந்தால் போலீஸ் ஸ்டேஷன் போவது இப்போது வழக்கமாகி விட்டது. போலீஸ் என்ன உன் அப்பாவா உன் நன்மையில் அக்கரை காட்ட? அவரும் மனிதர்தானே?
நமக்கு நம் குடும்பத்தின் மேல் இல்லாத அக்கரை வேறு யாருக்கும் வராது என்று தீர்மானமக இருக்கவேன்டும். இதில் யாருடனும் போட்டி போடக்கூடது.
வியாழன், ஏப்ரல் 5, 2012 at 5:30 பிப
கணவன் மனைவி பற்றி அற்புதமாக எழுதியுளீர்கள்.
போலீஸ் என்ன உன் அப்பாவா? – சாட்டையடி!!!