பயத்தம் பருப்பு/ கடலைப் பருப்பு சுண்டலை இந்த முறையிலும் செய்யலாம். ஆனால் இப்போது சொல்வது, செய்வதற்கும் உண்பதற்கும் எளிமையான சுண்டல். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலே செய்துவிடலாம்.
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு(அல்லது கடலைப் பருப்பு) – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1/4 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
உப்பு
தாளிக்க: எண்ணெய், கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை.
செய்முறை:
- பருப்பை நன்கு கழுவி, ஒன்றரைப் பங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் 5 நிமிடம் வெயிட் போடாமல் வேகவிடவும்.
- திறந்து பார்த்து, பருப்பு அரைப்பதம் மட்டும் வெந்ததும் (கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும், அவ்வளவே.) நீரை வடித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில், எண்ணெய் வைத்து கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- வேகவைத்த பருப்பைக் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
- தேங்காய்த் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து உபயோகிக்கலாம்.
* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழைந்துவிடும் என்று அஞ்சுபவர்கள்:
ஒன்றிரண்டு மணி நேரங்கள் பருப்பைத் தன்ணீரில் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து, பருப்பையும் அதில் கொட்டி, அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சரியான பதத்தில் இருக்கும். கடலைப் பருப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். மிச்ச நீரை வடித்து விடவும்.
அல்லது
தண்ணீரில் ஊறவைக்காமல், குக்கரிலும் வைக்காமல், நேரடியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரைப் பங்கு தண்ணீர் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், சிம்மில் வைத்து, அதில் பருப்புடன் உப்புச் சேர்த்து வேகவிடவும். அடிக்கடி திறந்து பார்த்து, அரைப்பதம் வெந்ததும், (பத்தே நிமிடங்களில் ஆகிவிடும்.) இறக்கி நீரை வடியவிடவும். நம் கை மீறி எதுவும் நடக்காது.
சரி, எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மட்டுமல்ல, தட்டப் பயறு, பச்சைப் பயறு போன்ற மென்மையான பயறுகள் கூட குக்கரில் வைத்ததில் லேசாகக் குழைந்து விட்டது. இனிமேலும் வாணலியில் போட்டு வதக்கினால் மேலும் நிலைமை மோசமாகும் என்றால் என்ன செய்வது? சிம்ப்பிள்! இறக்கிய உடனே, வெந்த பயறிலிருந்து நீரை வடித்துவிட்டு நேராக குளிர்ந்த நீர்க் குழாயடியில் நீட்டவும் அல்லது குளிர்ந்த நீரை நிறைய சேர்த்து வடிகட்டவும். பயறு ஒன்றோடென்று ஒட்டாமல் கொஞ்சம் கடினத் தன்மை அடையும். பின்னர் சமாளிப்பது சுலபம். எதற்கும் பயறுகளை குக்கர் அடங்கியதும் உடனே திறந்துபார்த்துவிடுவது நல்லது.
-0-
வெல்லச் சுண்டல்:
* பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்து, தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கிளறி, நீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
* ஒரு கப் பயத்தம் பருப்போடு ஒரு கப் கேரட் துருவலும் சேர்த்துச் செய்தால் ஒன்றரை கப் வெல்லம் போட்டுக் கிளறலாம்.
* கால் கிலோ கடலைப் பருப்பை வாணலியில் வறுத்து, நீர் விட்டு முக்கால் பதம் வேகவைத்து, 200 கிராம் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறுகியதும் ஏலப்பொடி, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.
திங்கள், மார்ச் 23, 2009 at 6:29 பிப
[…] https://mykitchenpitch.wordpress.com/2007/10/17/payaththam-paruppu-kadalai-paruppu-sundal-navaraathth… […]