kooththanoor saraswathy amman

வெள்ளைக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
பச்சை மிளகாய் – 8 (அல்லது காய்ந்த மிளகாய்)
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 
 

தாளிக்க: எண்ணெய், கடுகு, 1 காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vellai koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.

-0-

கருப்புக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
காய்ந்த மிளகாய் – 7, 8
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
மல்லிவிதை – 1/4 கப்
தேங்காய் – 1

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

karuppu koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 12லிருந்து 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். சின்னக் கொத்துக்கடலையாக இருந்தால் 12 மணி நேரத்தில் நிச்சயம் ஊறியிருக்கும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, எள்ளை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், மல்லிவிதை, தேங்காய், காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* சுண்டல் மிஞ்சினால் கூட்டு, குழம்பில்(இந்த வகைக்  கொத்துக்  கடலை  புளிநீரில் சுவை சேர்க்கும்.) சேர்க்கலாம். அதிகம் மிஞ்சினால், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து ஆனால் உலர் கறியாக, சப்பாத்தி வகைகளுக்கு பக்க உணவாக உபயோகிக்கலாம்..

-0-

* கொத்துக்கடலை பட்டாணிக்கு குக்கரில் வேகவைக்கும் வரை உப்பு சேர்த்துவிடக் கூடாது. தோல் தனியாக கழண்டுவிடும்.

* சிலர் சீக்கிரம் வேக, கொத்துக்கடலையுடன் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் நன்றாக ஊறவைத்தாலே, நன்றாக வெந்துவிடும். சமையல் சோடா சேர்க்கவே தேவை இல்லை. நான் சேர்ப்பதில்லை. ஆனால் அப்படிச் சேர்ப்பவர்கள், ஊறவைக்கும்போதே சோடா உப்பைச் சேர்த்து, நீரை வடித்துவிட்டு வேக வைக்கலாம். இதனால் சீக்கிரம் வேகும்; சத்தும் வீணாகாது.

*  நவராத்திரி பிரசாதமாக இல்லாமல் சாட் உணவாகச் செய்யும் நாள்களில் இவற்றில் கொஞ்சம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு சன்னா மசாலா சேர்க்கலாம். 

* மேலே உள்ள இரு முறைகளிலும் பட்டாணிச் சுண்டலும் செய்யலாம்.

நவராத்திரி: ஆடலுடன் பாடலைக் கேட்டு… – சின்னக் கண்ணன்.

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 1/2 கப்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை.

nilakkadalai sundal

செய்முறை:

  • நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.
  • எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)
  • இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.
  • இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* மற்ற சுண்டல்களை விட நிலக்கடலை அதிகப் பித்தம் சேர்க்கும். இஞ்சி சேர்ப்பது நல்லது.

* எளிமையாக எதுவுமே அரைத்துவிடாமல், காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த் துருவல் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட  கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

பட்டாணி – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 8
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மாங்காய்த் துருவல் – 1/2 கப்
கேரட் துருவல் – 1/2 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

pattaani sundal

செய்முறை:

  • பட்டாணியை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து மீண்டும் கழுவவும்.
  • புதிதாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
  • கசகசாவை மூழ்கும் அளவு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • தேங்காய், 6 பச்சை மிளகாய், ஊறவைத்த கசகசா, உப்பு இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அல்லது கசகசா ஊறியதில் மிஞ்சியிருக்கும் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், இரண்டு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து நீர்ப்பசை இல்லாமல் வதக்கவும்.
  • கேரட், மாங்காயை சன்னமாகத் துருவி வைத்துக் கொண்டு, பரிமாறும் போது மட்டுமே சிறிது சிறிதாகக் கலந்து தரவும். 

* எக்காரணம் கொண்டும் சுண்டல்களுக்கு, முக்கியமாக பட்டாணி, கொத்துக் கடலைக்கு உப்பைச் சேர்த்து வேக வைக்கக் கூடாது. தோல் தனியாகக் கழண்டு விடும்.

* கேரட், மாங்காயை முன்னமே சுண்டலில் கலந்து வைத்தால் உப்புடன் சேர்த்து நொசநொசவென்று ஆகிவிடும். அவ்வப்போது கொஞ்சமாக சேர்த்துக் கொள்வதே நல்லது. புளிப்பான மாங்காயாக இருந்தால் மிகக் குறைவாக உபயோகிக்கவும்.

* தேங்காயையும் துருவலாக இல்லாமல் பொடிப் பொடியாகக் கீறிவைத்துக் கொண்டு கலக்கலாம். பீச் சுண்டல் எஃபக்ட் கிடைக்கும்.
 
* அரைத்த விழுதை, பட்டாணியில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்தும், தாளித்துச் செய்யலாம். 

* இந்த முறையில் பச்சைப் பயறு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் சுண்டல் செய்யலாம்.

நாங்கள் கிராமத்திற்குப் போகும்போது பஸ் ஸ்டாண்ட்(டில் காத்திருக்கும் நேரத்தில்) புளியமரத்திலிருந்து கொழுந்தைப் பறித்துவந்து குழம்பு, துவையல், ரசம், பச்சடி எல்லாமே செய்திருக்கிறோம். இந்த ஆந்திரச் சுண்டல் புதுமையாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 3, 4
புளியங்கொழுந்து – 1 கப்
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை

செய்முறை:

  • பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரை வேக்காடாக சுண்டல் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, காயம், உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், புளியங்கொழுந்து சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பயத்தம் பருப்பு/ கடலைப் பருப்பு சுண்டலை இந்த முறையிலும் செய்யலாம். ஆனால் இப்போது சொல்வது, செய்வதற்கும் உண்பதற்கும் எளிமையான சுண்டல். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலே செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு(அல்லது கடலைப் பருப்பு) – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1/4 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு,  இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

payaththam paruppu sundal

செய்முறை:

  • பருப்பை நன்கு கழுவி, ஒன்றரைப் பங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் 5 நிமிடம் வெயிட் போடாமல் வேகவிடவும்.
  • திறந்து பார்த்து, பருப்பு அரைப்பதம் மட்டும் வெந்ததும் (கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும், அவ்வளவே.) நீரை வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் வைத்து கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பருப்பைக் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து உபயோகிக்கலாம்.

kadalai paruppu sundal

* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழைந்துவிடும் என்று அஞ்சுபவர்கள்:

ஒன்றிரண்டு மணி நேரங்கள் பருப்பைத் தன்ணீரில் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து, பருப்பையும் அதில் கொட்டி, அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சரியான பதத்தில் இருக்கும். கடலைப் பருப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். மிச்ச நீரை வடித்து விடவும்.

அல்லது

தண்ணீரில் ஊறவைக்காமல், குக்கரிலும் வைக்காமல், நேரடியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரைப் பங்கு தண்ணீர் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், சிம்மில் வைத்து, அதில் பருப்புடன் உப்புச் சேர்த்து வேகவிடவும். அடிக்கடி திறந்து பார்த்து, அரைப்பதம் வெந்ததும், (பத்தே நிமிடங்களில் ஆகிவிடும்.) இறக்கி நீரை வடியவிடவும். நம் கை மீறி எதுவும் நடக்காது.

சரி, எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மட்டுமல்ல, தட்டப் பயறு, பச்சைப் பயறு போன்ற மென்மையான பயறுகள் கூட குக்கரில் வைத்ததில் லேசாகக் குழைந்து விட்டது. இனிமேலும் வாணலியில் போட்டு வதக்கினால் மேலும் நிலைமை மோசமாகும் என்றால் என்ன செய்வது? சிம்ப்பிள்! இறக்கிய உடனே, வெந்த பயறிலிருந்து நீரை வடித்துவிட்டு  நேராக குளிர்ந்த நீர்க் குழாயடியில் நீட்டவும் அல்லது குளிர்ந்த நீரை நிறைய சேர்த்து வடிகட்டவும். பயறு ஒன்றோடென்று ஒட்டாமல் கொஞ்சம் கடினத் தன்மை அடையும். பின்னர் சமாளிப்பது சுலபம். எதற்கும் பயறுகளை குக்கர் அடங்கியதும் உடனே திறந்துபார்த்துவிடுவது நல்லது.

-0-

வெல்லச் சுண்டல்:

* பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்து, தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கிளறி, நீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* ஒரு கப் பயத்தம் பருப்போடு ஒரு கப் கேரட் துருவலும் சேர்த்துச் செய்தால் ஒன்றரை கப் வெல்லம் போட்டுக் கிளறலாம்.

* கால் கிலோ கடலைப் பருப்பை வாணலியில் வறுத்து, நீர் விட்டு முக்கால் பதம் வேகவைத்து, 200 கிராம் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறுகியதும் ஏலப்பொடி, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு – 1 கிலோ
பச்சை மிளகாய் – 6, 7
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
 
தாளிக்க: எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

pachchai payaru sundal

செய்முறை:

  • பச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
  • தேங்காய், 4 பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிச்சமிருக்கும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.

* இந்த முறையில் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் செய்யலாம்.

* அரைத்த விழுதை, பயறில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்து, தாளித்தும் செய்யலாம். இதில் நன்றாக சுவை உள்ளே ஊறியிருக்கும். சீக்கிரம் வதக்கி இறக்கிவிடலாம்.

-0-

வெல்லச் சுண்டல்:

பச்சைப் பயறை வறட்டு வாணலியில் வறுத்து, குக்கரில் நன்றாக வேகவைக்கவும். கால் கிலோ பருப்பிற்கு 300 கிராம் வெல்லம் கெட்டிப் பாகாக வைத்து, வேக வைத்த பயறு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, இறுகியதும் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

தட்டப் பயறு இரண்டு மூன்று அளவுகளில் கிடைக்கும். நான் அநேகமாக பெரிய அளவான பயறில் காரச் சுண்டலும், சிறிய அளவிலான பயறில் இனிப்பு சுண்டலும் செய்கிறேன். எந்த அளவிலும் மற்ற சாமான்கள் சேர்க்க வேண்டிய அளவு ஒன்றுதான்.

thatta payaru

தேவையான பொருள்கள்:

தட்டப் பயறு – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 மூடி
ஏலப்பொடி
நெய் – 2 டீஸ்பூன்

thatta payaru vella sundal

செய்முறை:

  • தட்டப் பயறை 12 மணி நேரம் நன்கு ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை சிறிது நீர் விட்டு முற்றிய பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • பாகு தயாரானதும், வெந்த பயறு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும்.
  • இறக்கும் முன் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டல் சீக்கிரம் கெடாது. இரண்டு நாள்களுக்கு வைத்திருக்கலாம்.

* எல்லா வெல்லச் சுண்டல்களுக்கும் இறுதியில் சிறிது நெய் சேர்த்துக் கிளறுவது அதிக மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

நவராத்திரி: துர்கா பூஜா (கல்கத்தா) – நிர்மலா
 

வறுத்து அரைக்காமல் கொஞ்சம் சுலபமாகச் செய்யக் கூடிய முறை.

தேவையான பொருள்கள்:

தட்டப் பயறு – 1 கிலோ
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 1 மூடி
சாம்பார்ப் பொடி – 3, 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

thatta payaru sundal

செய்முறை:

  • தட்டப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • புளி நீர், வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறவும். நீர் வற்றி, புளி வாசனை போக வேண்டும்.
  • இறக்கும் முன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.

* இந்த முறையில் மொச்சைப் பயறு, பச்சைப் பயறிலும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அடுத்த வேளை கறியில், கூட்டில் அல்லது குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். இதிலும் புளி, உப்பு, காரம் சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* 2 தக்காளி, இஞ்சி, கரம் மசாலா, நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சப்பாத்தி வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

நவராத்திரி நாயகி: ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (மலேசியா) – ரங்கமீனா

சுண்டல் புராணம் – என்.சுவாமிநாதன்

தேவையான பொருள்கள்:

மொச்சைப் பயறு – 1 கிலோ
தேங்காய் – 1 மூடி
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:
மல்லி விதை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 15
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

mochchai payaru sundal

செய்முறை:

  • மொச்சைப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிதளவு எண்ணெயில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மல்லி விதையை வறுத்து நைசாகப் பொடிக்கவும்.
  • வாணலியில் எண்ணையில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, அரைத்த பொடி சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு கிளறி இறக்கி உபயோகிக்கவும்.

பெண்களே! கீழே இருக்கும் ஆணிய (அழுகைக்) கட்டுரைத் தொடரை அவசியம் படியுங்கள். நவராத்திரியைக் கொண்டாடுங்கள்!!

 நவராத்திரி சிறப்பு நகைச்சுவைக் கட்டுரை: அவ(¡)ளோட ராவுகள்
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.