சப்ஜி(சப்பாத்தி)


தேவையான பொருள்கள்:

வெந்தயக் கீரை – 2 கப்
வெங்காயம் – 1
பயத்தம் பருப்பு – 3/4 கப் *
தக்காளி – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
உப்பு
மஞ்சள் தூள்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

Methi_daal Missi_roti_(punjab)2

செய்முறை:

  • வெந்தயக் கீரையை தனித் தனி இலையாக உதிர்த்து, தண்ணீரில் அலசி, நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
  • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளிக்கவும்.
  • அலசிய கீரையைச் சேர்த்து வதக்கினால் ஒரே நிமிடத்தில் சுண்டிவிடும்.
  • நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • உப்பு, மஞ்சள்தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, நிதானமான தீயில் வேக வைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், வேக வைத்த பயத்தம் பருப்பு, கரம் மசாலா, அரை கப் தண்ணீர் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
  • சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து சூடாகப் பரிமாறலாம்.

* பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது இரண்டும் சம அளவில் கலந்தும் உபயோகிக்கலாம்.

* எலுமிச்சைச் சாறுக்குப் பதில் வதக்கியதும் சிறிது புளித்தண்ணீர் சேர்த்தும் கொதிக்கவிடலாம் அல்லது 2 டீஸ்பூன் மாங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், சப்பாத்தி வகைகள்..

தேவையான பொருள்கள்:


காலிஃப்ளவர் – அரைக்கிலோ
உருளைக் கிழங்கு – 2 (பெரியது)
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி (விரும்பினால்)
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 4 பல்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கசுரி மேத்தி – 1 டீஸ்பூன் (कसुरी मेथी, Kasuri Methi –விரும்பினால்)
எலுமிச்சைச் சாறு – சில துளிகள் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

Aloo Gobhi (dry)

செய்முறை:

  • உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காலிஃப்ளவரை சற்றே பெரிய துண்டுகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து, பொன்னிறமானதும், தக்காளி, காலிஃப்ளவர் துண்டுகள், வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கவும்.
  • மேலே தனியாத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.
  • காலிஃப்ளவர் வெந்து நீர் வற்றும்வரை அவ்வப்போது திறந்து, கிளறிவிடவும்.
  • விரும்பினால் இறக்குமுன் கரம்மசாலா, கசுரி மேத்தி(कसुरी मेथी, Kasuri Methi) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை நறுக்கிக் கலந்து பரிமாறவும்.

* கரம் மசாலா சேர்க்க விரும்பாதவர்கள் அதற்குப் பதில் மிளகாய் அல்லது மிளகாய்த் தூள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய் சாதம், சீரக சாதம் போன்ற சாதம் வகைகளுக்கு உபயோகிக்கலாம்.

சப்பாத்தி வகைகளுக்கு மிகவும் பொருந்தும்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு  – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் –  1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்
கொத்தமல்லித் தழை 

Moong dal (sprouted)
 

அரைக்க:
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
தனியா = 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

தாளிக்க: எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை.

moong masala (dry)

செய்முறை:

  • பச்சைப் பயறை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், தனியா, சீரகத்தை நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கலந்துகொள்ளவும்.
  • மேலே, அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைப் பயறு என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து மூடிவைத்து நிதானமான தீயில் வேவைக்கவும்.
  • அடிக்கடி திறந்து கிளறிவிட்டு, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்க்கலாம்.
  • நீர் வற்றி, பயறு நன்கு வெந்து ஆனால் உடைந்து/மசிந்து விடாமல் இருக்க வேண்டும்.
  • தக்காளி சேர்த்திருப்பதால் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் தூவிப் பரிமாறலாம்.

* முளைகட்டிய பயறாக இருந்தால் நலம். நான் அதில்தான் செய்திருக்கிறேன்.

* கரம் மசாலா சுவை விரும்பாதவர்கள், காரத்திற்கு மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகமாக உபயோகித்துக் கொள்ளலாம்.

* பயறை மட்டும் தனியாக குக்கரில் வேகவிட்டு வைத்துக்கொண்டும், நீரை வடித்து, இதில் சேர்த்து வதக்கலாம்.

* இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடி இருந்தாலும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடிப்பதில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி, ரொட்டி வகைகள், நெய் சாதம்…

தேவையான பொருள்கள்:

பச்சைப் பட்டாணி – 200 கிராம் (அல்லது முக்கால் கப் காய்ந்த பட்டாணி)
பனீர் – 200 கிராம் (அல்லது ஒரு லிட்டர் பால்)
வெங்காயம் – 3 (பெரியது)
தக்காளி – 3 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
முந்திரிப்பருப்பு – 6, 7
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நெய் அல்லது வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்

muttar paneer

செய்முறை:

  • பச்சைப் பட்டாணியை (காய்ந்த பச்சைப் பட்டாணியாக இருந்தால் 10 மணிநேரம் நீரில் ஊறவைத்து), குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு லிட்டர் பாலில் பனீர் தயாரித்துக் கொள்ளவும். (அல்லது கடைகளில் வாங்கலாம்.)
  • 2 வெங்காயம்(மட்டும்), தக்காளியை பெரிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்.
  • இஞ்சி, உரித்த பூண்டு, முந்திரிப் பருப்பு, தனியா, 1 டீஸ்பூன் மட்டும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  • வெங்காயம் நன்கு பொன்னிறமாகும்வரை வதக்கியவுடன், பனீர் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் தக்காளி விழுது இரண்டும் சேர்த்து மேலும் 2, 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • மேலே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பட்டாணியும் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.
  • சேர்ந்தாற்போல் வரும் சமயம் இறக்கி, வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். (ஹோட்டல்களில் சேர்க்கும் அளவு தாளிக்கும் சமயம் வெண்ணெய், எண்ணெய் சேர்க்காமல் ஆனால் மணமாக இருக்க, கடைசியில் இதைச் சேர்க்கிறோம்.)
  • பரிமாறும் சமயம் சில துளிகள் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்துகொள்ளவும். (ஹோட்டல்களில் உண்ணும்போதும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்வது, புதிதாகச் செய்த உணர்வையும் சுவையையும் தரும்; அப்படி அல்ல என்பது நமக்குத் தெரியும் என்றாலும். :)]

* இஞ்சி பூண்டு விழுது, தனியாத் தூள், சீரகத் தூள் என்று தயாராக இருந்தால் அதையே உபயோகிக்கலாம். பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். (ஆனால் பொதுவாக, அவ்வப்போது பொருள்களைச் சேர்த்து அரைப்பது அதிக மணத்தைத் தரும்.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி, பரோட்டா, நான் வகைகள்…

kooththanoor saraswathy amman

வெள்ளைக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
பச்சை மிளகாய் – 8 (அல்லது காய்ந்த மிளகாய்)
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 
 

தாளிக்க: எண்ணெய், கடுகு, 1 காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vellai koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.

-0-

கருப்புக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
காய்ந்த மிளகாய் – 7, 8
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
மல்லிவிதை – 1/4 கப்
தேங்காய் – 1

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

karuppu koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 12லிருந்து 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். சின்னக் கொத்துக்கடலையாக இருந்தால் 12 மணி நேரத்தில் நிச்சயம் ஊறியிருக்கும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, எள்ளை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், மல்லிவிதை, தேங்காய், காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* சுண்டல் மிஞ்சினால் கூட்டு, குழம்பில்(இந்த வகைக்  கொத்துக்  கடலை  புளிநீரில் சுவை சேர்க்கும்.) சேர்க்கலாம். அதிகம் மிஞ்சினால், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து ஆனால் உலர் கறியாக, சப்பாத்தி வகைகளுக்கு பக்க உணவாக உபயோகிக்கலாம்..

-0-

* கொத்துக்கடலை பட்டாணிக்கு குக்கரில் வேகவைக்கும் வரை உப்பு சேர்த்துவிடக் கூடாது. தோல் தனியாக கழண்டுவிடும்.

* சிலர் சீக்கிரம் வேக, கொத்துக்கடலையுடன் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் நன்றாக ஊறவைத்தாலே, நன்றாக வெந்துவிடும். சமையல் சோடா சேர்க்கவே தேவை இல்லை. நான் சேர்ப்பதில்லை. ஆனால் அப்படிச் சேர்ப்பவர்கள், ஊறவைக்கும்போதே சோடா உப்பைச் சேர்த்து, நீரை வடித்துவிட்டு வேக வைக்கலாம். இதனால் சீக்கிரம் வேகும்; சத்தும் வீணாகாது.

*  நவராத்திரி பிரசாதமாக இல்லாமல் சாட் உணவாகச் செய்யும் நாள்களில் இவற்றில் கொஞ்சம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு சன்னா மசாலா சேர்க்கலாம். 

* மேலே உள்ள இரு முறைகளிலும் பட்டாணிச் சுண்டலும் செய்யலாம்.

நவராத்திரி: ஆடலுடன் பாடலைக் கேட்டு… – சின்னக் கண்ணன்.

நாங்கள் கிராமத்திற்குப் போகும்போது பஸ் ஸ்டாண்ட்(டில் காத்திருக்கும் நேரத்தில்) புளியமரத்திலிருந்து கொழுந்தைப் பறித்துவந்து குழம்பு, துவையல், ரசம், பச்சடி எல்லாமே செய்திருக்கிறோம். இந்த ஆந்திரச் சுண்டல் புதுமையாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 3, 4
புளியங்கொழுந்து – 1 கப்
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை

செய்முறை:

  • பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரை வேக்காடாக சுண்டல் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, காயம், உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், புளியங்கொழுந்து சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

வறுத்து அரைக்காமல் கொஞ்சம் சுலபமாகச் செய்யக் கூடிய முறை.

தேவையான பொருள்கள்:

தட்டப் பயறு – 1 கிலோ
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 1 மூடி
சாம்பார்ப் பொடி – 3, 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

thatta payaru sundal

செய்முறை:

  • தட்டப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • புளி நீர், வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறவும். நீர் வற்றி, புளி வாசனை போக வேண்டும்.
  • இறக்கும் முன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.

* இந்த முறையில் மொச்சைப் பயறு, பச்சைப் பயறிலும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அடுத்த வேளை கறியில், கூட்டில் அல்லது குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். இதிலும் புளி, உப்பு, காரம் சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* 2 தக்காளி, இஞ்சி, கரம் மசாலா, நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சப்பாத்தி வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

நவராத்திரி நாயகி: ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (மலேசியா) – ரங்கமீனா

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4, 5
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு
 

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய் – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
 

uluththam paruppu dhal fry

செய்முறை:

  • உடைந்த உளுத்தம் பருப்பை நன்கு கழுவி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து குழைந்துவிடாமல் முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பருப்பும் உப்பும் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
  • மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

* உடைந்த உளுத்தம் பருப்பை மட்டுமே உபயோகிப்பது நல்லது. முழு உளுத்தம் பருப்பில் வழவழத் தன்மை அதிகம் இருக்கும். உளுந்தை நன்கு நாலைந்து முறை கழுவிவிடுவதும் வழவழப்பைக் குறைக்க உதவும்.

* உளுத்தம் பருப்பு பலருக்கு வாயுத் தொல்லை தரும். அவசியம் இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டும்.

* விரும்புபவர்கள் தக்காளியும் சேர்க்கலாம். நான் இதில் மேலதிக முயற்சிகளே செய்ததில்லை. செய்வதாகவும் இல்லை.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி வகைகளுக்கு மட்டும்.

சாதத்தோடும் சாப்பிடலாம் என்று பலர் சொல்வார்கள். ஆனால் நம் சாதத்திற்கு நமக்கு ஏற்கனவே சாம்பார், ரசம், கறி, கூட்டு, தயிர் என்று பட்டையைக் கிளப்பும் ரகங்கள் இருக்க இந்த உளுத்தம் பருப்பு தால் ஃப்ரையை உபயோகிக்க வேண்டாம். இதனை சப்பாத்தியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து. வட இந்தியர்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. என் வீட்டில் யாருக்குமே இது பிடிப்பதில்லை. 😦 (வழவழப்பைத் தரும் உளுந்து ஃப்ரை, ராஜ்மா மசாலா, காளான் மூன்றும் பாஸாகவில்லை.) உளுந்து பெண்களின் கருப்பைக்கு வலிமையைத் தரும். ஆனால் இட்லி தோசையிலேயே நாம் அதிகம் உபயோகித்து விடுவதால் இந்த வகையில் சேர்க்கவில்லையே என்று நான் கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் செய்து பார்த்து, பிடித்தால் சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 3, 4
வெங்காய இலை – 1 கட்டு (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3,4 பல்
மஞ்சள் தூள்
சாம்பார்ப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
 

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய் – 1
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
 

payaththam paruppu dhal fry 2

செய்முறை:

  • பயத்தம் பருப்பை, சாம்பார்ப் பொடி. மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வெங்காய இலையைச் சேர்த்து ஒரு நிமிடம் (சுண்டும் வரை) வதக்கவும்.
  • பொடியாக அரிந்த தக்காளியை உப்புடன் சேர்த்து வதக்கவும். 
  • வேகவைத்த பருப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
  • மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* இஞ்சி, பூண்டை மட்டும் அரைத்தும் சேர்க்கலாம்.

* சாம்பார்ப் பொடி இல்லாதவர்கள் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் சாம்பார்ப் பொடி அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் சாம்பார்ப் பொடியை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும். தக்காளி சேர்ப்பதால் நிறம் மாறும். அது அழகான மாற்றம், பரவாயில்லை.  🙂

* விரும்புபவர்கள் இஞ்சி பூண்டு அரைக்கும்போது சின்ன வெங்காயம் ஐந்தாறு சேர்த்து அரைத்துவிடலாம். மணமாக இருக்கும். 

* எந்த வெங்காயமுமே இல்லாமலும் இதைத் தயாரிக்கலாம்.

* ஆறியதும் அதிகமாக இறுகும்.

                                                                                                                                                                                                             .
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
கிராம்பு – 3, 4
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
  

payaththam paruppu dhal fry 1

செய்முறை:

  • பயத்தம் பருப்பை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், கிராம்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பருப்பும் உப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
  • மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* அநேகமாக ஹோட்டல்களில் பரிமாறப்படும் ‘தால்’ இந்த முறையிலேயே தான் இருக்கும். விரும்பினால் சில துளிகள் எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளலாம்.

* கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் மிளகாய்த் தூளை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…

தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய் – 1/2 கிலோ
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 5, 6
பச்சை மிளகாய் – 2
காரத் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி –  1 டீஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை
உப்பு.

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

vendaikkaai

செய்முறை:

  • வெண்டைக்காயை நீளவாக்கில் குறுக்காக நறுக்கிக் கொள்ளவும். (இந்த முறையில், பூச்சிகள் இருந்தால் நிச்சயம் தப்பவே முடியாது.)
  • தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை மிக்ஸியில் நைசாக தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், காரத் தூள், தனியாத் தூள், ஆம்சூர்ப் பொடி(நான் சேர்ப்பதில்லை.) சேர்த்து, நன்கு சுருளக் கிளறவும்.
  • வெண்டைக்காயையும் சேர்த்து அடுப்பை சிறிய தீயில் வைத்து மூடி வைக்கவும்.
  • அரைப் பதம் வேகும் வரை அவ்வப்போது திறந்து பிரட்டி விடவும்.
  • திறந்துவைத்து கருகிவிடாமல் முக்கால் பதம் வேகும்வரை அடிக்கடி மென்மையாகத் திருப்பிவிடவும்.
  • கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

vendaikkaai thakkaali sabji

* வெண்டைக்காய் நறுக்கும்போது இடையில் ஒன்றிரண்டு முற்றிய காய்கள் இருந்தால் நிச்சயமாகத் தூர எறிந்துவிடவும். அவை மொத்த உணவையே சாப்பிடமுடியாமல் கெடுத்துவிடும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதாச் சப்பாத்தி வகைகளுக்கு ஏற்றது.
 

தேவையான பொருள்கள்:

தக்காளி –  4 (பெரியது)
பயத்தம் பருப்பு – 1/2 கப் (வேகவைத்தது)
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் –  2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கார்ன்ஃப்ளோர் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க –  கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

thakkali kothsu

செய்முறை:

  • பயத்தம் பருப்பை லேசாக வேகவைத்துக் கொள்ளவும். முழுக்க மசிந்தாற் போல் இல்லாமல் இலை இலையாகத் தனியாகத் தெரிய வேண்டும்.
  • ஒரு தக்காளியை அரிந்து அத்துடன் ஒரு பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லித் தழை, தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து அத்துடன் மீதித் தக்காளிகளை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
  • இறுதியில் வேகவைத்த பயத்தம் பருப்பு, தண்ணீர் சேர்த்து சற்று தளர இருக்குமாறு கொதிக்கவைத்து இறக்கவும்.
  • கொத்சு, சேர்ந்தாற்போல் இருப்பதற்கு கடலைமாவிற்குப் பதில் கார்ன்ஃப்ளோர் 1/2 டீஸ்பூன் கரைத்துவிட்டால் சுவை மாறாமல் இருக்கும்.
  • இன்னும் சிறிது நறுக்கிய பச்சை கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, சப்பாத்தி, ரவை உப்புமா, அரிசி உப்புமா…