தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4, 5
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு
 

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய் – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
 

uluththam paruppu dhal fry

செய்முறை:

  • உடைந்த உளுத்தம் பருப்பை நன்கு கழுவி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து குழைந்துவிடாமல் முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பருப்பும் உப்பும் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
  • மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

* உடைந்த உளுத்தம் பருப்பை மட்டுமே உபயோகிப்பது நல்லது. முழு உளுத்தம் பருப்பில் வழவழத் தன்மை அதிகம் இருக்கும். உளுந்தை நன்கு நாலைந்து முறை கழுவிவிடுவதும் வழவழப்பைக் குறைக்க உதவும்.

* உளுத்தம் பருப்பு பலருக்கு வாயுத் தொல்லை தரும். அவசியம் இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டும்.

* விரும்புபவர்கள் தக்காளியும் சேர்க்கலாம். நான் இதில் மேலதிக முயற்சிகளே செய்ததில்லை. செய்வதாகவும் இல்லை.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி வகைகளுக்கு மட்டும்.

சாதத்தோடும் சாப்பிடலாம் என்று பலர் சொல்வார்கள். ஆனால் நம் சாதத்திற்கு நமக்கு ஏற்கனவே சாம்பார், ரசம், கறி, கூட்டு, தயிர் என்று பட்டையைக் கிளப்பும் ரகங்கள் இருக்க இந்த உளுத்தம் பருப்பு தால் ஃப்ரையை உபயோகிக்க வேண்டாம். இதனை சப்பாத்தியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து. வட இந்தியர்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. என் வீட்டில் யாருக்குமே இது பிடிப்பதில்லை. 😦 (வழவழப்பைத் தரும் உளுந்து ஃப்ரை, ராஜ்மா மசாலா, காளான் மூன்றும் பாஸாகவில்லை.) உளுந்து பெண்களின் கருப்பைக்கு வலிமையைத் தரும். ஆனால் இட்லி தோசையிலேயே நாம் அதிகம் உபயோகித்து விடுவதால் இந்த வகையில் சேர்க்கவில்லையே என்று நான் கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் செய்து பார்த்து, பிடித்தால் சாப்பிடலாம்.