குழம்பு


தேவையான பொருள்கள்:

புளிக்காத தயிர் – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை

onion pakodas (for kadi)
செய்முறை:

  • கடலை மாவில், தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் கலந்து பஜ்ஜிமாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளவும். விரல்களால் நன்கு குழைந்துபோகுமாறு கலக்கவேண்டும்.
  • வெங்காயத்தை சற்றே அகல நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.
  • மிச்சமுள்ள கடலைமாவை(4 டீஸ்பூன் கரைத்த மாவு இருந்தால் போதுமானது.) தயிரில் சேர்க்கவும். கரைத்த மாவு தீர்ந்திருந்தால் தனியாக இரண்டு டீஸ்பூன் கடலை மாவை தயிரில்ல் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும்.
  • தயிர்க் கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். மிகவும் இறுகிவிட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கடலைமாவு வெந்து குழம்பு சேர்ந்தாற்போல் வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாவைச் சேர்த்து சிம்மில் மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், 4, 5 காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

kadi pakoda (punjab)

 

* மிக அதிக அளவில் ஆறியதும் இறுகும்; பகோடாவும் குழம்பின் நீரை இழுத்துக்கொள்ளும் என்பதால் தயாரிக்கும்போதே சிறிது நீர்க்க இருந்தால் நல்லது.

* வாணலியில் முதலில் தாளித்து, அதில் தயிர்கலவையைச் சேர்த்தும் குழம்பைக் கொதிக்கவைக்கலாம்.

* வெங்காயத்துடன் விரும்பினால் உருளை போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* மசாலா வாசனை விரும்பினால் கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன் பகோடா மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், புலவு, தேங்காய்ச் சாதம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி….

தேவையான பொருள்கள்:

கெட்டித் தயிர் – 2 கப் (லேசாகப் புளித்தது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5, 6
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை

காய்கறி: முருங்கை, பூசணி, வெண்டை, சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய்…. இவற்றில் ஏதாவது ஒன்று.

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

mOr kuzhambu [3]

செய்முறை:

  • துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • எடுத்துக் கொண்டிருக்கும் காயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.
  • பொங்கி வரும்போது தாமதிக்காமல் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித் தழை சேர்க்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், அரிசி சேவை…

கருணைக்கிழங்கு பழைய கிழங்காக இருந்தால் அரிக்காமல் இருக்கும். மேல்த் தோலை கீறிப் பார்த்து, உள்ளே சிவப்பாக இருந்தால் புதிது. அப்படி இருந்தாலும் வாங்கி வீட்டில்வைத்து, 20 அல்லது 25 நாள்களுக்குப் பிறகுஓரளவு உள்பகுதி வெள்ளையானதும் உபயோகிக்கலாம். அதற்கு மேலும் காரல், அரிப்பு இல்லாமல் இருக்க, எப்பொழுதும் கருணைக்கிழங்கை அரிசிகளைந்த நீரிலேயே வேகவைக்க வேண்டும். மூலநோய்க்கு மிகவும் நம்பிக்கையான மருந்து என்று சொல்கிறார்கள்.

karuNai kizhangukaruNai kizhangu masiyal

தேவையான பொருள்கள்:

கருணைக் கிழங்கு – 1/4 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

  • கிழங்கைக் கழுவி அப்படியே முழுதாக அரிசி களைந்த நீரில் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மேல் தோலை நீக்கி, கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
  • மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நிதானமான தீயில் சேர்ந்தாற்போல் வரும்வரை கொதிக்கவிடவும்.
  • குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும்.
  • கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு கலந்த சாதம், தயிர் சாதம், உப்புமா, பொங்கல் வகைகள்…

நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன் 
 

தேவையான பொருள்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் – 2
வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க: (வெறும் வாணலியில்)
காய்ந்த மிளகாய் – 6, 7
வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
அரிசி – 1/2 டீபூன்

தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை.

menthi pulusu 1

செய்முறை:

  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில், வாணலியில் நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
  • புளிநீர் ஒரு கொதி வந்ததும் அரைத்துவைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • மெலிதாக அரிந்துவைத்துள்ள வெங்காயத்தில் பாதியைப் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • மீதியிருக்கும் வெங்காயம், வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பாத்திரத்தை மூடிவிட வேண்டும். [ 😦 எப்ப திறக்கலாம்னு ஜெயஸ்ரீ சொன்னதும்தான் திறக்க முடியும்.]
  • பத்து நிமிடங்கள் சூடான குழம்பில் வெங்காயம் ஊறியபின் திறந்து பரிமாறலாம். [டடண்டடண்டடாங்… திறந்தாச்சு! :)]

menthi pulusu

* வெங்காயத்தைப் பச்சையாகச் சேர்ப்பதுதான் இதில் சிறப்பு.

* வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டும். [வெல்ல டப்பா எங்கவெச்சேன்னு வழக்கம்போல மறந்துபோச்சு! :)]

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொங்கல், மற்றும் அரிசி உப்புமாவுக்கு நல்ல ஜோடி.

நீங்க சொன்னப்புறம் வலையில் மெந்திப் புலுசு ன்னு தேடி பாத்தேன். மீன் சேர்த்து செய்வதுதான் ஒரிஜினல் மெந்திப் புலுசு போல இருக்கு. இத நான் ஒரு potluck dinnerல பார்த்து, நல்லா இருந்ததால செய்முறை கேட்டு வாங்கினேன். இதோட பேர் வேற எதாவதாவும் இருக்கலாம்.

[அப்படி எல்லாம் விட்டுட முடியுமா ஜெயஸ்ரீ? உப்புச்சாரே, ‘கருவாடு மைனஸ்’ செஞ்சு அசத்தியிருக்கோம். இதுவும் மெந்தி புலுசு (மீன் மைனஸ்)ன்னு போர்டு வெச்சுடலாம். :)]

முக்கல புலுசு போலவே இந்த உணவும் நம் ஊர் பருப்புக் குழம்பின்  ஆந்திர  வெர்ஷன் தான். 

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 3/4 கப்
காய்கறி – 2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெல்லம் – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

pappu pulusu

செய்முறை:

  • புளியைக் கரைத்து நன்கு வடித்துக் கொள்ளவும்.
  • காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயத்தை வரிசையாகச் சேர்த்து வறுத்து, ஆறியதும் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியபின் நறுக்கிய காய்கறி, தக்காளி சேர்த்து மேலும் சிறிது லேசாக வதக்கவும்.
  • சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேகவைக்கவும்.
  • காய்கறி பாதி வெந்ததும் புளிநீர், வறுத்து அரைத்த பொடி சேர்த்து மேலும் 4, 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
  • காய்கறிகள் வெந்து, புளி பச்சை வாசனை போனதும், வேகவைத்த துவரம்பருப்பு, வெல்லம் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.

* இதில் எல்லாவிதமான காய்களும் சேர்த்துக் கொள்ளலாம். நான் முள்ளங்கி, வெங்காய்த்தாள், தக்காளி சேர்த்து செய்திருக்கிறேன்.

* வேக அதிக நேரமெடுக்கும் காய்களை குக்கரிலேயே தண்ணீர் விடாமல் வேகவைத்து எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

* வறுத்து அரைக்காமல், நேரடியாக மிளகாய்த் தூள், கடுதுத் தூள், வெந்தயத் தூள் இருந்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம். வழமையாகச் செய்பவர்கள், பொதுவாக இந்தப் பொடியையும் நம் சாம்பார்ப் பொடி போல் முதலிலேயே மொத்தமாக தயாரித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கிறார்கள்.

* துவரம் பருப்பிற்கு பதில் பயத்தம் பருப்பும் உபயோகிக்கலாம். பலர் அதுதான் உபயோகிக்கிறார்கள். பருப்பு சேர்ப்பதால் கடலைமாவு சேர்த்து கரைத்துவிடத் தேவை இல்லை.

* முக்கல புலசு மாதிரி இல்லாமல் வெல்லம் சிறிதளவு சேர்த்தால் போதும். சேர்க்காமலும் செய்யலாம். 🙂

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் கலந்த சாதத்துடன் பரிமாறலாம்.

இந்த உணவு நம் ஊர் சாம்பாரின் ஆந்திர வெர்ஷன். மற்ற நாள்களிலும் இதை தயாரித்தாலும் முக்கியமாக நாம் வருடப் பிறப்பிற்கு அறுசுவையில் மாங்காய்ப் பச்சடி செய்வதுபோல் அவர்கள் இதை அறுசுவை உணவாக தெலுங்குவருடப் பிறப்பன்று(உகாதித் திருநாள்) செய்கிறார்கள்; மற்றும் முக்கியமான பண்டிகை நாள்களிலும் செய்கிறார்கள். ஆனாலும் புலம்பெயர்ந்த பல ஆந்திரப் பெண்களுக்கு இது குறித்து தெரியவில்லை. அல்லது தெலுங்கு பிராமணர்கள் மட்டுமே அதிகம் இதை செய்கிறார்கள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. எனக்கு சரியாகத் தெரியவில்லை.

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

காய்கறிகள்: சுரைக்காய், பரங்கிக்காய், முருங்கை.

mukkala pulusu 1

செய்முறை:

  • புளியை நன்கு கரைத்து வடித்துக் கொள்ளவும்.
  • காய்களை 2″ நீள அல்லது சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயத்தை வரிசையாகச் சேர்த்து வறுத்து, ஆறியதும் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நறுக்கிய காய்களைச் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக வதக்கவும்.
  • சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேகவைக்கவும்.
  • காய்கறி பாதி வெந்ததும் புளிநீர் சேர்க்கவும்.
  • புளிநீர் கொதித்து பச்சை வாசனை போனதும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து மேலும் 4, 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
  • இறக்குவதற்கு நீரில் கரைத்த கடலை மாவு, பொடித்த வெல்லம் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.

mukkala pulusu

* பொதுவாக புடலை, வெண்டை போன்ற காய்களிலும் செய்து அந்தந்த காய்கறிகளின் பெயரோடு இந்த புலுசை அழைத்தாலும் மொத்தமாக ‘முக்கல புலுசு’ என்று கலவையான காய்களோடு செய்யும்போதே குறிப்பிடப் படுகிறது. அவற்றிலும் மேலே சொல்லியிருக்கும் மூன்று காய்கள் மட்டுமே முக்கியமானவை.

* வெங்காயம், பூண்டு, சேர்ப்பதில்லை.புலுசு தயாரித்தபின் கடைசியிலும் தாளிக்கலாம்.

* வறுத்து அரைக்காமல், நேரடியாக மிளகாய்த் தூள், கடுதுத் தூள், வெந்தயத் தூள் இருந்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம். வழமையாகச் செய்பவர்கள், பொதுவாக இந்தப் பொடியையும் நம் சாம்பார்ப் பொடி போல் முதலிலேயே மொத்தமாக தயாரித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கிறார்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு கலந்த சாதத்துடன் பரிமாறலாம்.

குழம்பு வகைகளில் முதலில் இதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். விட்டுப் போய்விட்டது. 🙂 சாம்பார்ப் பொடி தயாராக இருந்தால் போதும். அரைச்சல்ஸ் வேலைகள் இல்லாமல் விரைவில் தயாரித்துவிடலாம். அதிகம் மசாலா இல்லாததால் பிரச்சினை இல்லாதது. நாட்டுக் காய்கறிகளில் செய்யவும், தினசரி சமையலுக்கும் மிகவும் ஏற்றது. வீட்டுச் சாப்பாடு என்பதற்கான முக்கியக் குறியீடு பருப்புக் குழம்பு.  

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
வாழைத் தண்டு – ஒரு சாண் நீளம்
துவரம் பருப்பு – 3/4 கப்
சாம்பார்ப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், உளுத்தம் பருப்பு, வெந்தயம் (விரும்பினால்), சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazhaiththandu kuzhambu

செய்முறை:

  • துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
  • வாழைத் தண்டை நார் நீக்கி, வட்டவட்ட துண்டுகளாகவோ, சற்றே அகலமாக இருந்தால் அரைவட்ட துண்டுகளாகவோ நறுக்கி, (கருக்காமல் இருக்க) மோர் கலந்த நீரில் போட்டுக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • மோர்நீரை வடித்து, நறுக்கிய வாழைத் தண்டு துண்டங்கள், உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மூடி வேக வைக்கவும்.
  • அந்த நேரத்திற்குள் புளியை வெந்நீரில் ஊறவைத்து, நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • அரைப்பதம் வெந்த காயுடன், புளி, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
  • நறுக்கிய மல்லித் தழை தூவி உபயோகிக்கவும்.

* இந்த முறையில் பூசணி, கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பரங்கி, அவரை, முருங்கை என்று நாட்டுக் காய்கறிகள் எல்லாவற்றிலும் செய்யலாம். அனைத்துக் குழம்பும் எந்தக் காயை உபயோகிக்கிறோமோ, அதற்கான பிரத்யேகமான சுவையோடும் மணத்தோடும் இருக்கும்.

* கத்தரி வெண்டை போன்ற காய்களை முதல் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கத் தேவை இல்லை. தாளித்ததும் சிறிது வதக்கி, நேரடியாக புளிநீரைச் சேர்க்கலாம்.

* அவரை போன்ற காய்களுக்குப் பொருத்தமாக பச்சை மொச்சை போன்ற பயறுகளும் சேர்ப்பதால் அதிக மணத்தைக் கொடுக்கும்.

* காய்களுக்குப் பதில் கீரை வகைகளையும் பொடியாக நறுக்கி, வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா (முக்கியமாக ரவை, அரிசி உப்புமா),…..

குழம்பில் இருக்கும் காய் தயிர்/மோர் சாதத்திற்கு மிகவும் பொருத்தமானது. குழம்பு ரசம் சாதங்களுக்கு வேறு கறி/கூட்டு உபயோகித்து தயிருக்கு ஊறுகாயை நாடும் வேளையில் ஊறுகாயை ஓரம்கட்ட/ ஒழிக்க குழம்பின் தான்(காய்) மிக முக்கியமானது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தவை வாழைத் தண்டு, பூசணி, அவரை, கீரைத் தண்டு.

[மீனாட்சி தண்டு என்று மரம் மாதிரி ஒரு கீரைத் தண்டு கிடைக்கும். அதன் கீரை வேலைக்காகாது. தண்டை வட்டமான வில்லைகளாக நறுக்கி கூட்டு செய்வதும் இந்தக் குழம்பில் போடுவதும் எனக்குப் பிடிக்கும்.]

“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?”“பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.”— புலிநகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்)

பொன்னா நாங்குநேரி இல்லையா? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர்ச் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.– நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.

 

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
அப்பக்கொடி (அல்லது அதளக்காய் வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல்)

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.

uppuchchaar 3 - mOr kuzambu [2]

செய்முறை:

  • தயிரை நன்கு தண்ணீர் விடாமல் கடைந்து கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் சீரகத்தை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலாக்களைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பொங்கிவரும்போது இறக்கவும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அப்பக்கொடியையும் கருக வறுத்துச் சேர்க்கவும்.

* அப்பக் கொடி – இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் ஒரு கொடி வகை. அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மணத்தக்காளி வற்றல் வறுத்துச் சேர்க்கலாம்.

ஜெயஸ்ரீ, மிகவும் சுவையாக இருந்தது. அன்புத் தோழி வெந்தயம் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வெந்தயம் தான் மேலும் சுவை சேர்த்தது. விழுங்கியதும் நாக்கினடியில் அதன் மணமும் கசப்பும் அருமை. மணத்தக்காளி வற்றல், வற்றல் குழம்பை விட இதில் தான் சுவையாக இருந்தது.

என் பக்கத்து இரண்டு கேள்விகள்:

இதில் காய் சேர்க்கக் கூடாதா? (என் பெண்)

தாமரைக் கொடி வற்றலைத் தான் அப்பக்கொடின்னு சொல்லுதாங்களோ? (எங்க கடைக்கார அண்ணாச்சி)

தொடர்புடைய இன்னொரு சுட்டி: அன்புத்தோழி

இதுவும் ஒரு திருநெல்வேலி பக்கக் குழம்பு. நன்றி: ச.திருமலை

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1 டீஸ்பூன்.

அரைக்க:
தேங்காய் – 1/4 மூடி
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம்.
 

thengaai seeraga kuzambu

செய்முறை:

  • புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய் மிளகை சிறிது எண்ணையில் வறுத்து, பொடிக்கவும்.
  • தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகத்தை அப்படியே விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காயை சேர்த்து வதக்கவும்.
  • அதில் சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள், அரைத்த பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  • சிறிது கொதித்ததும், புளித் தண்ணீர் சேர்க்கவும்,
  • புளி கொதித்ததும், அரைத்த விழுதையும் போட்டு, மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறிது அரிசி மாவை கரைத்துச் சேர்க்கலாம்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தக் குழம்புடன் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

மோர் சாதத்துக்கு இந்தக் குழம்பு அமிர்தமாக இருக்கும். [இருந்தது. :)]

எனக்குத் தெரிந்து மற்ற குழம்பு வகைகள் இல்லாவிட்டாலும், இந்த மோர்க் குழம்பு மட்டும் எல்லா மாநிலங்களுக்குமென்று பிரத்யேகமாக ஒரு வகை இருக்கிறது. இன்று காளன். மற்றவை அப்புறம்.

தேவையான பொருள்கள்:

கெட்டியான தயிர் – 1 1/2 கப்
காய் – 15, 20 துண்டுகள் (பெரிது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 6, 7
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு (விரும்பினால்)
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தேங்காயெண்ணை
கொத்தமல்லித் தழை.

தாளிக்க: தேங்காயெண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

kaaLan - mOr kuzhambu 1 (kerala)

செய்முறை:

  • மிக லேசாகப் புளித்த, கெட்டியான (கொஞ்சம் க்ரீமியாகவும் இருந்தால் சுவையாக இருக்கும்) தயிரை தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும்.
  • ஏதாவது காயை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • முற்றிய தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்த் துருவல், (ஆனால் கொப்பரை மாதிரி காயாயதாக அல்லது துருவல் ஃப்ரிட்ஜில் வைத்ததாக இல்லாமல், புதிதாக உடைத்த தேங்காயாக இருந்தால் சரியாக இருக்கும்.) பச்சை மிளகாய், சீரகம், இஞ்சியை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், வேகவைத்த காய், அரைத்த விழுது சேர்த்து அடுப்பில் நிதானமான தீயில் வைக்கவும்.
  • மெதுவாகச் சூடேறி, பொங்கி வரும்போது பச்சைத் தேங்காயெண்ணை 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
  • வாணலியில் எண்ணையில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* வெண்டை, கத்தரி, முருங்கை, வாழை, சேனை, சேப்பங்கிழங்கு என்று நாட்டுக் காயான எதையும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடித்தது பூசணிக்காய்.

* இன்னும் காரம் தேவை என்று தோன்றினால் தாளிக்கும்போது ஒரு காய்ந்த மிளகாய் அல்லது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நான் செய்வதில்லை.

* வாழை சேனை மட்டும் சேர்த்துச் செய்தால் தான் காளன். இது மோர்க் காளன் என்று சிலர் சொல்கிறார்கள். எப்படியும் இது மோர்க் குழம்பில் ஒரு வகை. அவ்வளவே. அப்புறம் நான் எப்பொழுதும் மோர்க் குழம்பு செய்வதும் இந்த முறையே. 

* அடுப்பில் வைக்காமலே மஞ்சள் தூள், உப்பு, காய், அரைத்த விழுது எல்லாம் சேர்த்து பச்சை மோர்க் குழம்பும் செய்கிறார்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் பருப்பு கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எந்தக் காரக் கறி அல்லது பருப்பு உசிலியுடனும் சேரும். குழம்பிலிருக்கும் காய் தயிர்சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

அடை, இடியாப்பம், ஆப்பம் வகைகளுக்கும் இந்தக் குழம்பை தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1 பத்தை
நல்லெண்ணெய்

வறுக்க:
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை.

milagu kuzambu

செய்முறை:

  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணையில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருள்களுடன் தேங்காயை வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • புளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
  • அரைத்த விழுதையும் சேர்த்து மேலும் கொதிக்க வைத்து இறக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கெட்டியான குழம்பை நெய் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.

குழம்பை நீர்க்க தயாரித்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசியைக் குழைந்த சாதமாக வடித்து, அதில் நெய், நல்லெண்ணை, குழம்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். சுடச் சுட, பருப்புத் துவையலுடன் சாப்பிட ஏற்றது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வீட்டினருடன் இந்த சாதம் (மட்டும்) சாப்பிட்டு விடுமுறை நாளில் ஒரு பகல் தூக்கம் போடுவது உத்தமமாக இருக்கும். : ) நேற்று தூக்கம் போட வைத்த பார்ஸிகளுக்கு (தாமதமான) புத்தாண்டு வாழ்த்துகள்! : )

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

  •  புளியை நார், கொட்டை இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, உளுத்தம் பருப்பு, மிளகு, புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயம் என்ற வரிசையில் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  • வறுத்ததை சிறிது நீர் சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெயில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு, இந்த விழுதைப் போட்டு கொதிக்கவிட்டு இறுகி வந்ததும் இறக்கவும்.

* இந்த விழுதை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு வாரத்திற்குள் எப்பொழுது வேண்டுமோ அப்போது சுலபமாக இந்தக் குழம்பை தயாரித்து விடலாம்.

* விரும்பினால் தாளிக்கும்போது 4 பல் பூண்டு சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்

தாளிக்க – எண்ணெய், 3 அல்லது 4 காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • மிளகு, துவரம் பருப்பை நன்கு வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை தாளித்து, புளி நீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், பூண்டுப் பல், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

* விரும்பினால் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். 

நன்றி: பிரேமலதா. (இடையில கலர்ஃபுல்லா பேசியிருக்கறதெல்லாம் நானே.)

[யெக்கா, உப்புச்சார்ல கருவாடு போடணும். உங்களுக்கு ஒத்துவராது. ஒருவேளை மருவிய உப்புச்சார் கருவாடு இல்லாம வலம் வருதோ என்னமோ. கிடைச்சா அனுபவிங்க. சாகறதுக்கு முன்னாடி அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரெம்பநாள் வெஜிடேரியனிசம் கடைபிடிச்ச காலங்கள்ல கூட கருவாட்டை எடுத்துப்போட்டுட்டு உப்புச்சாரை மொக்கு மொக்குன்னு மொக்கிருக்கேன். கருவாடு இல்லாட்டி உப்புச்சார் உப்புச்சாரே கிடையாது. (உங்களுக்கு கொடுத்துவைச்சது அவ்வளவுதான்) இருந்தாலும் மருவிய உப்புச்சார் கிடைச்சா கண்டிப்பா விடாதீங்க.]

மருவிய உப்புச்சார்: (கருவாடு மைனஸ்)  🙂

1.
தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்

செய்முறை:

  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (ஒரு பேப்பரில் வைத்து மைக்ரோவேவ் அவனில் ஒரு 20 அல்லது 30 விநாடிகள்(மட்டும்) வைத்து எடுத்தால் கையோடு தோல் வந்துவிடும். தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்தும் சுலபமாக உரிக்கலாம். ஆனால் சுவை சற்றே வேறுபடும். எப்படி இருந்தாலும் ரங்கமணியை இதற்கு எதிர்பார்ப்பதில்லை என்பதே மேட்டர்.)
  • பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [இன்னும் கை எரியுது. 😦 தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை துடைத்துக் கொள்ளவும்.]
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து புளிக் கரைசலைச் சேர்க்கவும். [பிரேமலதா, நீங்களோ திருமலையோ கடுகு எல்லாம் தாளிக்கவே சொல்லலையே. இதுக்கு அதெல்லாம் கிடையாதா? ஆனா நான் செஞ்சேன்.]
  • மேலும் 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.

-0-

2.
தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
கொண்டைக் கடலை – 1/2 கப்(காய்ந்தது)
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
கத்தரிக்காய் – 4, 5  (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்.)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை.

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்.

uppuchchaar 2

செய்முறை:

  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (மேலே சொல்லியுள்ளபடி செய்யலாம்.)
  • பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [மேலே உள்ள குறிப்பைப் பார்க்கவும்.]
  • கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். இதிலேயே ஓரளவு நன்றாக வெந்துவிடும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் பயறு, புளிக்கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும். வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை.) [நான் கொஞ்சம் நம்பிக்கை இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு கொண்டைக்கடலையை ஒரு விசில் குக்கர்ல வெச்சுட்டேன். சாரி!]
  • தேவையான அளவு உப்பு போட்டு, மேலும் சிறிது எண்ணையை ஊற்றவும்.
  • பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாகக் காய்ந்ததும் இறக்கிவிடவும்.

* மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.

* கத்திரிக்காய்க்குப் பதில் தனியாக வெண்டைக்காய் மட்டும் போட்டும் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்ஸிங் கார்னர்:

சாதம், கிண்டிய உருண்டைச் சோறு, சோளச் சோறு, கேப்பைக்களி (சோளச் சோறுக்கும் கேப்பைக் களிக்கும் செய்வதானால் அரிசிமாவைக் கரைத்து புளிக் கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது மிளகாயும் புளியும் அதிகமாயிருக்க வேண்டும், to compensate for the dulling effect caused by அரிசிமாவு.)

சின்னவயதில் அம்மா செய்ததையும் அக்கம் பக்கத்தில் செய்ததையும் காது வழி ஞானத்தையும் வைத்து மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு சோளச் சோறும் கேப்பக் களியும் சரியா வராது. அதனால் எங்கள் வீட்டில் சாதம் தான் பெரும்பாலும். அக்கம் பக்கத்தில் சோளச் சோறும் உப்புச்சாரும் என்றால் எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வரும். அங்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவேன். கேப்பைக் களிக்கு மகிழிக் கீரைதான் சரியான மேட்ச் என்பதால், கேப்பைக் களியுடன் உப்புச்சார் வைக்கும்போது என்னை ஸ்பெஷலாக அழைக்க மாட்டார்கள், நானாகக் கண்டுபிடித்தால் மட்டுமே கிடைக்கும். இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது யாராவது சோளச் சோறு (கேப்பைக் களியெல்லாம் கிடைக்குமென்ற நம்பிக்கையேயில்லை) செய்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தேன். இல்லையென்று பதில் வந்துவிட்டது. சோளச்சோறு இல்லையென்றால் உப்புச்சாரும் அதிகமாக நடமாடாது. I will be surprised if anyone still makes it anymore in our street in our village. மத்த தெருக்களைப் பற்றி எனக்குத் தெரியாது. (பிரேமலதா நல்லா இருந்தது. அதே முக்கியமான மேட்டர்.) 

தேவையான பொருள்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை 

தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம்.

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 5
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
கறிவேப்பிலை –  சிறிது.

thirunelveli kuzambu

செய்முறை:

  • புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரே ஒரு டீஸ்பூன் மட்டும் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், எள், பச்சரிசி என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • அந்தச் சூட்டிலேயே தேங்காய்த் துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்துப் புரட்டவும்.
  • ஆறியதும் நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
  • மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் அடுப்பில் நிதானமான தீயில் வைத்து இறக்கவும்.
  • விரும்பினால் கொத்தமல்லி நறுக்கித் தூவலாம்.

* விரும்பினால் ஏதாவது காய் சேர்த்துக் கொள்ளலாம். (நான் கொத்தவரங்காய் சேர்த்தேன். எல்லாம் அடில போயிடுச்சு!)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புக் கூட்டு வகை.

தயிர் சாதம், உப்புமா, பொங்கல் வகைகளுக்கு ஓஹோ.

போரடித்த ஒரு நாளில் சப்பாத்திக்கே உபயோகித்தேன். அட!

ஒருமுறை குழம்பு அதிகம் மீந்து போனதில் ஒரு கப் துவரம் பருப்பு வேகவைத்து, குழைந்த சாதத்தில் நெய், எண்ணெய் விட்டு, வேக வைத்த பருப்பு, இந்தக் குழம்பு சேர்த்து வாணலியில் சூடாகச் சாதம் கலந்ததில்… இப்போதெல்லாம் அடிக்கடி மீந்து போவதுபோல் இந்தக் குழம்பைச் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

அடுத்த பக்கம் »