தேவையான பொருள்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை 

தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம்.

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 5
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
கறிவேப்பிலை –  சிறிது.

thirunelveli kuzambu

செய்முறை:

  • புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரே ஒரு டீஸ்பூன் மட்டும் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், எள், பச்சரிசி என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • அந்தச் சூட்டிலேயே தேங்காய்த் துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்துப் புரட்டவும்.
  • ஆறியதும் நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
  • மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் அடுப்பில் நிதானமான தீயில் வைத்து இறக்கவும்.
  • விரும்பினால் கொத்தமல்லி நறுக்கித் தூவலாம்.

* விரும்பினால் ஏதாவது காய் சேர்த்துக் கொள்ளலாம். (நான் கொத்தவரங்காய் சேர்த்தேன். எல்லாம் அடில போயிடுச்சு!)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புக் கூட்டு வகை.

தயிர் சாதம், உப்புமா, பொங்கல் வகைகளுக்கு ஓஹோ.

போரடித்த ஒரு நாளில் சப்பாத்திக்கே உபயோகித்தேன். அட!

ஒருமுறை குழம்பு அதிகம் மீந்து போனதில் ஒரு கப் துவரம் பருப்பு வேகவைத்து, குழைந்த சாதத்தில் நெய், எண்ணெய் விட்டு, வேக வைத்த பருப்பு, இந்தக் குழம்பு சேர்த்து வாணலியில் சூடாகச் சாதம் கலந்ததில்… இப்போதெல்லாம் அடிக்கடி மீந்து போவதுபோல் இந்தக் குழம்பைச் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.