ஏனோ தக்காளி ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம் என்றெல்லாம் சொல்வதுபோல் மோர் ரசம் என்று சொல்ல வரவில்லை. அதனால் மோர்ச் சாத்தமுது என்றே இருக்கட்டும்.
தேவையான பொருள்கள்:
தயிர் – 1 கப் (அதிகம் புளிக்காதது)
தண்ணீர் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1
மிளகு – 10
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க – எண்ணை, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம்.
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை.
செய்முறை:
- தயிரை தண்ணீருடன் கலந்து நன்கு கடைந்து, [அட, மோர் தாங்க! :)] தேவையான உப்பு சேர்க்கவும்.
- வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து, மோரில் கலக்கவும்.
- எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.
* விரும்பினால், பரிமாறும் சமயத்தில் எண்ணையில் 1 டீஸ்பூன் வேப்பம்பூவை வறுத்துச் சேர்க்கலாம். முன்னாலேயே சேர்த்தால் கசந்துவிடும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொரித்த அப்பளம், வடாம், கறிகள் (கூட்டு அல்ல).
என்னைப் பொருத்த வரை எதோடு சமைப்பது என்பதைவிட எந்த நாளில் சமைப்பது என்பதுதான் முக்கியம். பெண்ணுக்குப் பிடிக்கும் என்பதால் அநேகமாக விரத நாளில் செய்துகொடுப்பேன். விரத நாள் – எனக்குப் பிடிக்காத மெனு. 🙂 சிம்ப்பிள்!
வியாழன், ஜூலை 26, 2007 at 3:10 பிப
//விரத நாள் – எனக்குப் பிடிக்காத மெனு. சிம்ப்பிள்!// நல்ல ஐடியாவா இருக்கே… பொதுவாவே உங்க சமையல் குறிப்புகளை விட அதை நீங்கள் எழுதும் விதம் அருமை. அதுக்காக உங்க சமையலை குறைத்து சொல்வதாய் எண்ண வேண்டாம், உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு எழுதியிருந்த லீவ் லெட்டர்… I dont know how to appreciate.. simply superb… 🙂
வியாழன், ஜூலை 26, 2007 at 11:03 பிப
ஜெயஸ்ரீ
தமிழ் உலகத்தில் உள்ள மற்ற பதிவுகளைப் படிப்பதை விட உங்களது இந்த ப்ளாக் மன நிம்மதியையும் நாக்குக்கு சுவையும் அளிப்பவை, ஆகவே இனி ரெகுலராக விசிட் செய்வதாக உள்ளேன், மேலும் தற்சமயம் பல விதமான பதார்த்தங்களையும் பரிசோசனை வேறு செய்து கொண்டிருப்பதால், இனி இந்த பளாக் நான் அடிக்கடி விஜயம் செய்யும் ஒன்றாக இருக்கும். இவ்வளவு சுவையான பதார்த்தங்களின் செய்முறைகளை அதைவிட சுவையான விவரணைகளுடன் எழுதும் விதம் மேலும் சுவை.
மேலே நீங்கள் சொன்ன மோர் சாத்தமுதின் லுக் அலைக் ஒன்று இருக்கிறது மோர் உப்புச்சாறு என்று பெயர். இதில் இன்னொரு வெர்ஷன் மோரும் புளியும் சேர்ந்த குழம்பு. அதாவது இதில் புளிக் கரைசைலையும் சேர்க்க வேண்டும். சற்று வித்தியாசமாக டபுள் புளிப்புடன் இருக்கும். இதில் வெண்டைக்காயைய்ப் பொரித்தும் போடலாம். கொஞ்சம் வழா வழாவென இருக்கும்.
எனது பிற ரிசீப்பீக்களை கூடிய விரைவில் அனுப்புகிறேன். ஏற்கனவே நீங்கள் அவற்றைப் பற்றி எழுதியிருக்காவிடில் எழுதுதலாம். பெயர் அவசியம் இல்லை. யார் செய்து விட்டு திட்ட நினைத்தால் பரவாயில்லை, கேஸ் போட்டு விட்டால் என்ன செய்வது :)))
அன்புடன்
ச.திருமலை
வியாழன், ஜூலை 26, 2007 at 11:25 பிப
ரெசிபி ரஸமாக இருந்தது
வெள்ளி, ஜூலை 27, 2007 at 10:03 முப
//ரெசிபி ரஸமாக இருந்தது//
உள்குத்து எதுவும் இல்லையே?
வெள்ளி, ஜூலை 27, 2007 at 11:16 முப
Jsri,
பார்க்கவும்:
http://idlyvadai.blogspot.com/2007/07/blog-post_26.html
நூறு அடித்து விட்டீர்களாமே, வாழ்த்துக்கள் !
உங்கள் குறிப்புகளிலிருந்து, சில அயிட்டங்களை (வார விடுமுறையில்!) ட்ரை பண்ணும்படி இல்லாளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
எ.அ.பாலா
திங்கள், ஜூலை 30, 2007 at 3:04 பிப
திருமலை, உப்புச் சார் என்ற பெயரை ‘புலிநகக் கொன்றை’யில் படித்திருக்கிறேன். வேறு எங்கும் கேட்டதில்லை. ஏதாவது திருநெல்வேலி ரசமா? ஆனால் அதில் பருப்பு, உப்புச் சார், தக்காளி சாத்தமுது(கொத்தமல்லி நிறைய போட்டு)…. என்று பொன்னா செய்யும் சமையலை வரிசைப் படுத்தியிருப்பார். அப்ப உப்புச் சார் என்பது குழம்பு வகை என்று நினைத்திருந்தேன். நீங்கள் அதற்கெல்லாம் ரெசிபி அனுப்புங்களேன். செஞ்சே பாத்துடலாம்.
இணையத்தில் கேஸ் போடுவதெல்லாம் அரசியல் தலைவர்கள் மேல போடுகிற கேஸ் அளவு கூடக் கிடையாது. கோர்ட்டே ஏறாது. சொல்லிய யாரும் செய்ததில்லை. 🙂
திங்கள், ஜூலை 30, 2007 at 3:07 பிப
Lakshmi, Bala manian நன்றி.
ப்ரசன்னா என்ன உள்குத்து? எனக்கு ஒன்னும் தெரியலையே. சிலருக்கு நிஜமாவே இந்த ரசம் பிடிச்சிருக்கு. எங்க வீட்டுல ஒரு கூட்டமே இருக்காங்க இந்த ரசத்துக்கு.
எ.அ.பாலா, இட்லிவடை மொக்கை எல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா? ரெசிபி ஏதாவது தேறித்தா?
திங்கள், ஜூலை 30, 2007 at 4:18 பிப
ஜெயஸ்ரீ, உங்கள் ஊகம் சரியே. உப்புச்சாறு என்பது ஒரு வகை குழம்புவகைதான் – மிளகு குழம்பு வகையறா – பெரும்பாலும் பிஞ்சு கத்திரிக்காய் போட்டுச் செய்வது. அம்மா செஞ்சு சாப்பிட்டிருக்கேன். ஆனா ரெசிப்பியெல்லாம் தெரியாது. 🙂 திருமலை அவர்கள் சொல்லும் மோர் உப்புச்சாறு இதன் ஒன்னு விட்ட சகோதரி/ரன் போலிருக்கிறது.
செவ்வாய், ஜூலை 31, 2007 at 1:40 முப
//உப்புச் சார் என்ற பெயரை ‘புலிநகக் கொன்றை’யில் படித்திருக்கிறேன்//
யெக்கா, உப்புச்சார்ல கருவாடு போடணும். உங்களுக்கு ஒத்துவராது. 🙂
ஒருவேளை மருவிய உப்புச்சார் கருவாடு இல்லாம வலம் வருதோ என்னமோ. கிடைச்சா அனுபவிங்க. சாகறதுக்கு முன்னாடி அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரெம்பநாள் வெஜிடேரியனிசம் கடைபிடிச்ச காலங்கள்ல கூட கருவாட்டை எடுத்துப்போட்டுட்டு உப்புச்சாரை மொக்கு மொக்குன்னு மொக்கிருக்கேன். கருவாடு இல்லாட்டி உப்புச்சார் உப்புச்சாரே கிடையாது. (உங்களுக்கு கொடுத்துவைச்சது அவ்வளாவுதான்) இருந்தாலும் மருவிய உப்புச்சார் கிடைச்சா கண்டிப்பா விடாதீங்க.
செவ்வாய், ஜூலை 31, 2007 at 4:51 பிப
சொல்ல மறந்துட்டேனே, இதே போல எங்கம்மா மோர் வெடிக்கவிடல் பண்ணுவாங்க. ஓமத்தை எண்ணெயில (எவ்வளவு கொஞ்சமா முடியுமோ அவ்வளவு கொஞ்சமா எண்ணெய்) வெடிக்கவிட்டு(கூட கறிவேப்பிலையும் போடலாம்), ஒரு காஞ்சமிளகாய கிள்ளிப்போட்டு அடுப்பை அணைச்சுட்டு மோர் கடைஞ்சு வச்சிருக்கறதைய் அதுல கொட்டிடலாம். பாத்திர சூடே போதும். அவசரத்துக்கு எதுனா பொடி சாதம்தான்னா இந்த வெடிக்கவிடல் கண்டிப்பா இருக்கும் எங்க வீட்டுல.
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 11:03 முப
Lakshmi,இவ்ளோ ஆர்வத்தைத் தூண்டறீங்க. அந்த ரெசிபியை நீங்களோ பிரேமலதாவோ வீட்டுல கேட்டாவது சொன்னா என்ன? திருமலை வராரான்னு தான் பாக்கணும் இனிமே. உப்புமா மாதிரி இல்லாம ‘உப்புச் சார்’ங்கற பேரே நல்லா இருக்கு.
//ரெம்பநாள் வெஜிடேரியனிசம் கடைபிடிச்ச காலங்கள்ல கூட கருவாட்டை எடுத்துப்போட்டுட்டு உப்புச்சாரை மொக்கு மொக்குன்னு..//
:)))))) பயங்கர கில்லாடியா இருப்பீங்க போல இருக்கு. வெங்காயம் தானே ஜெயஸ்ரீக்குப் பிடிக்காது. அவ சாம்பார் விட்டுண்டா என்னன்னு என் அண்ணன் சண்டை போடுவான். அதுதான் நியாபகம் வருது. :))
///உங்களுக்கு கொடுத்துவைச்சது அவ்வளாவுதான்///
நீங்க 1003வது ஆள் இப்படிச் சொல்றது. :))
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 11:05 முப
Lakshmi, வெடிக்கவிடல், நான் செஞ்சு பாக்கறேன். பொடிகள்(சாதத்தோடு சாப்பிட) மானாவாரியா வெச்சிருக்கேன். அவசரம் எதுவும் இல்லைன்னாலும் சோம்பேறித்தனம் மிதமிஞ்சி இருக்கு. 🙂
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 1:20 பிப
வெங்காயம் (ஈராங்கா) வேற சாப்பிட மாட்டீங்களா. கிளிஞ்சுது. அப்புறம் உப்புச்சார்ல என்னாதான் இருக்கு?
உப்புச்சாருக்கெல்லாம் என்னத்துக்கு ரெசிப்பிலாம். இதோபிடி:
1.
தேவையான பொருட்கள் (கருவாடு மைனஸ்)
சின்ன வெங்காயம் (ஈராங்கா) (அளவு சொல்லத்தெரியாது. அதனால் குத்து மதிப்புதான் எல்லாம்): ஒரு கை நிறய
பச்சைமிளகாய்: ஆறு அல்லது ஏழு (உங்கள் நாக்கைப் பொறுத்து)
புளி:சின்ன எலுமிச்சை அளவு
உப்பு: தேவையான அளவு
கடலை எண்ணை
செய்முறை:
புளியை ஊறப்போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து புளித்தண்ணியில் போடவும்.
பச்சைமிளகாயை காம்பு கிள்ளிவிட்டு புளித்தண்ணியில் போடவும்.
கையால் வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் நொறுங்க பிசையவும்.
உப்புப் போட்டு அடுப்பில் வைக்கவும்.
எண்ணையை மேலாக் ஊற்றவும்.
காய்ந்ததும் இறக்கிவிடவும்.
2.
தேவையான பொருட்கள் (கருவாடு மைனஸ்)
கொண்டைக்டலைப் பயறு காய்ந்தது: ஒரு கை நிறய.
கத்தரிக்காய் (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்) – நாலு அல்லது ஐந்து.
சின்ன வெங்காயம் (ஈராங்கா) (அளவு சொல்லத்தெரியாது. அதனால் குத்து மதிப்புதான் எல்லாம்): ஒரு கை நிறய
பச்சைமிளகாய்: ஆறு அல்லது ஏழு (உங்கள் நாக்கைப் பொறுத்து)
புளி:சின்ன எலுமிச்சை அளவு
உப்பு: தேவையான அளவு
கடலை எண்ணை
செய்முறை:
புளியை ஊறப்போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து புளித்தண்ணியில் போடவும்.
பச்சைமிளகாயை காம்பு கிள்ளிவிட்டு புளித்தண்ணியில் போடவும்.
கையால் வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் நொறுங்க பிசையவும்.
கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். ஓரளவு பயறு வெந்தவுடன் கொஞ்சம் சின்னவெங்காயமும் போட்டு, சிறிது எண்ணைவிட்டு வறுக்கவும். பயறு நன்றாக வெந்தவுடன் புளிக்கலவையை ஊற்றி அடுப்பில் வைக்கவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும்). தேவையான அளவு உப்பு போடவும். எண்ணையை மேலாக ஊற்றவும். (வறுத்த பயருடனே தாளிக்கவும் செய்யலாம். புளிக்கலவையைச்சேர்ப்பதற்கு முன் தாளித்துவிட்டு, கலவையைச் சேர்க்கவும். ஆனாலும் சிறிது எண்ணையை ஊற்றவும்).
பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாக காய்ந்ததும் இறக்கிவிடவும்.
டிப்ஸ்: மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.
மேட்ச் பிக்ஸிங்க் கார்னர்: சாதம், கிண்டிய உருண்டைச்சோறு, சோளச்சோறு, கேப்பைக்களி (சோளச்சோறுக்கும் கேப்பைக்களிக்கும் செய்வதானால் அரிசிமாவைக் கரைத்து புளிக்கலவையில் சேர்க்கவேண்டும். சிறிது மிளகாயும் புளியும் அதிகமாயிருக்கவேண்டும், to compensate for the dulling effect caused by அரிசிமாவு.)
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 1:52 பிப
உண்மை கார்னர்: நான் செய்ததேயில்லை!
சின்னவயதில் அம்மா செய்ததையும் அக்கம்பக்கத்தில் செய்ததையும் காதுவழி ஞானத்தையும் வைத்து மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு சோளச்சோறும் கேப்பக்களியும் சரியாவராது. அதனால் எங்கள் வீட்டில் சாதம்தான் பெரும்பாலும். அக்கம்பக்கத்தில் சோளச்சோறும் உப்புச்சாரும் என்றால் எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வரும். அங்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவேன். கேப்பைக்களிக்கு மகிழிக்கீரைதான் சரியான மேட்ச் என்பதால், கேப்பைக்களியுடன் உப்புச்சார் வைக்கும்போது என்னை ஸ்பெஷலாக அழைக்க மாட்டார்கள், நானாக கண்டுபிடித்தால் மட்டுமே கிடைக்கும்.
இந்தமுறை ஊருக்குப்போயிருந்தபோது யாராவது சோளச்சோறு (கேப்பைக்களியெல்லாம் கிடைக்குமென்ற நம்பிக்கையேயில்லை) செய்கிறார்களா என்று கேட்டுப்பார்த்தேன். இல்லையென்று பதில் வந்துவிட்டது. சோளச்சோறு இல்லையென்றால் உப்புச்சாரும் அதிகமாக நடமாடாது. I will be surprised if anyone still makes it anymore in our street in our village. மத்த தெருக்களைப்பற்றி எனக்குத் தெரியாது.
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 1:53 பிப
//கத்தரிக்காய் (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்) – நாலு அல்லது ஐந்து//
பச்சைக்கலர்
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 3:16 பிப
பிரேமலதா அசத்திட்டீங்க. செஞ்சு இங்கயும் போட்டுட வேண்டியதுதான். நன்னி.
//வெங்காயம் (ஈராங்கா) வேற சாப்பிட மாட்டீங்களா. கிளிஞ்சுது. அப்புறம் உப்புச்சார்ல என்னாதான் இருக்கு?//
ஐயய்ய, அதெல்லாம் அப்போஓ…
நான் இப்ப திருந்திட்டேன். இங்க சொல்லியிருக்கேனே. தாவரவகை, காளான் தவிர்த்து எல்லாம் சாப்பிடுவேன். வெங்காயம், பூண்டு இல்லாம சமைக்கவே தெரியாது. 😦
சந்தேகக் கார்னர்:
1. பொன்னா வெங்காயம் போடாம என்ன உப்புச் சார் வெச்சான்னு தான் ஒரே குடைச்சலா இருக்கு. ஒருவேளை திருமலைக்கு தெரிஞ்சிருக்கலாம்.
2. காய்ந்த கொண்டைக் கடலை வறுத்தாலே அல்லது புளித்தண்ணீர்ல எவ்வளவு நேரம்/எப்படி வேகும்? குக்கர்ல வைக்க வேண்டாமா?
ரங்கமணி முறைச்சாலும் மண்சட்டி ஒன்னு வாங்கிப் போட்டா பல வேலைகளுக்கு ஆகும்னு தான் தோன்றது. ஆனா அதைக் கொஞ்சநாள் ‘பழக்க’னும்னு சொல்வாங்க. 😦 பார்க்கலாம்.
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 3:47 பிப
//2. காய்ந்த கொண்டைக் கடலை வறுத்தாலே அல்லது புளித்தண்ணீர்ல எவ்வளவு நேரம்/எப்படி வேகும்? குக்கர்ல வைக்க வேண்டாமா?//
வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கர் தேவையில்லை.
//தாவரவகை, காளான் தவிர்த்து//
தாவரவகைன்னா? கீரையா?
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 5:14 பிப
பொன்னா நாங்குநேரி இல்லையா ? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.
காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு , கொஞ்சம் வெந்தயம் எல்லாம் எண்ணையில் பொன்னிறமாய் வறுத்து தேங்காய்த் துருவலும் சீரகமும் சேர்த்து அரைத்து மோரில் சேர்த்து ஒரு கொதி வருவதற்கு முன் இறக்கி விட வேண்டும். கடுகு , கறிவேப்பிலை தாளித்து அதே எண்ணையில் அப்பக் கொடியையும் (இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள area க்களில் கிடைக்கும் ஒரு கொடி வகை) நன்கு வறுத்து சேர்க்க வேண்டும். அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மனத்தக்காளி வற்றல் வறுத்து சேர்க்கலாம்.
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 10:05 பிப
ஜெயஸ்ரீ
ப்ரேமலதா சொல்றது வேற உப்புச்சார். எங்கள் வீட்டில் செய்யும் முறையை இன்று அனுப்பி வைக்கிறேன். இதே போன்று பொரிச்ச குழம்பு என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வகையாக இருக்கும், பெயர்தான் ஒன்று. எனக்கு உப்புச்சார் அவ்வளவாகப் பிடிக்காது இருப்பினும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதால் அனுப்புகிறேன்.
அன்புடன்
ச.திருமலை
வெள்ளி, ஓகஸ்ட் 3, 2007 at 4:20 பிப
பிரேமலதா, ரொம்பப் படுத்தல். :(( தாவர வகைன்னா, மரக்கறின்னு அர்த்தம். சைவ உணவு. அதுல காளான் மட்டும் தொண்டைக்குக் கீழ இறங்க மாட்டேங்குது. 😦
ஜெயஸ்ரீ, நன்றி. திருமலையும் அனுப்பியிருக்கார். நாம லேட். கிட்டத் தட்ட நீங்க சொன்ன மாதிரியே அன்புத்தோழி போன மாசமே இங்க சொல்லியிருக்காங்க.
http://anbuthozhi.blogspot.com/2007/07/uppuchaar.html
எல்லா வகையும் செஞ்சு பார்த்து இங்க சொல்றேன். நன்றி எல்லாருக்கும்.
வெள்ளி, ஓகஸ்ட் 3, 2007 at 5:23 பிப
அன்புத்தோழியோட சுட்டிக்கு நன்றி. அவங்க சொன்ன அதளக்காய் வற்றல் னா என்னன்னு தெரியலையே. ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் அப்பக்கொடி கொண்டு வருவேன். எனக்கு புகுந்த ஊர் நெல்லை. அங்கயே உப்புச்சாரோட பல version கேள்விப்பட்டிருக்கேன். சிலர் இருபுளிக்குழம்பையும் உப்புச்சார் னு சொல்றாங்க.
வெள்ளி, ஓகஸ்ட் 3, 2007 at 5:42 பிப
oh saarry. 🙂
இப்போத்தான் கவனிச்சேன், அந்த வருக்கிறதில இருக்கிற ருவை றுவா மாத்திடுங்க ப்ளீஸ். ப்ளாக்குக்கு முன்னாடி தமிழ் மறந்து போயிருந்துச்சு. so, excuse me please. 🙂
அதோட உங்க ஈமெயில் ஐடி கிடைக்குமா? தனியா வேறயாருக்கும்தெரியாம படுத்தலாம்னுதான். 🙂
(என்னோடது premalatha underscore balan at yahoo dot co dot uk)
சனி, ஓகஸ்ட் 4, 2007 at 9:40 பிப
ஜெயஸ்ரீ, அந்த ரெண்டுமே நான் கேட்டதே இல்லை. ஆனா நான் நாங்குநேரி வர எண்ணம் இருக்கு. அப்ப விசாரிச்சு தெரிஞ்சுப்பேன். அதுவரைக்கும் மணத்தக்காளி வத்தலை வெச்சுக்க வேண்டியதுதான்.
பிரேமலதா நல்லா வறுக்கறதுக்கு பதில் லேசா வருத்துட்டீங்க. அவ்ளோதான். 🙂
என் ஈமெயில் ஐடி
jsrigovind at yahoo dot com
அல்லது
jsriblogs at gmail dot com
படுத்தலாம். 🙂