அனைவருக்கும் சர்வஜித் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! 

தமிழ்ப் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் சேர்ந்த உணவாக மாங்காய்ப் பச்சடி செய்வார்கள்.

1. இனிப்புப் பச்சடி

தேவையான பொருள்கள்:

புளிப்பில்லாத மாங்காய் – 1 (சிறியது)
வெல்லம் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்
ஏலப்பொடி – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
வேப்பம்பூ – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க- எண்ணை, கடுகு, பச்சை மிளகாய்.
 

maangaai pachchadi 1

செய்முறை:

  • மாங்காயை பஜ்ஜிக்குச் சீவுவதுபோல் மெலிதான செதில்களாகச் சீவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய், உப்பு, கால் கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
  • பத்து நிமிடங்களில் மாங்காய் வெந்ததும் (transparentஆகத் தெரியும்) ஒரு கப் மாங்காய்த் துருவலுக்கு ஒரு கப் என்ற அளவில் வெல்லம் சேர்க்கவும்.
  • வெல்லம் கரைந்ததும் தண்ணீர் அல்லது பாலில் கார்ன்ஃப்ளோர் கரைத்துவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
  • நெய்யில் வேப்பம்பூவைப் பொன்னிறமாக வறுத்து, அடுப்பிலிருந்து இறக்கி, அந்த வாணலி சூட்டிற்கே ஓரளவு கருப்பாகும் வரை வைத்திருந்து பிறகு பச்சடியின் மேலே தூவவும்.

maangaai pachchadi 2

* புளிப்பான மாங்காயாக இருந்தாலும் நன்றாக இருக்கும். வெல்லம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே.

* பொதுவாக, அரிசி மாவுதான் கரைத்து விடுவார்கள். ஆனால் கார்ன்ஃப்ளோர் பதார்த்தத்திற்கு கண்ணாடி மாதிரி ஒரு மினுமினுப்பை மேலே தரும்.

* சிலர் வேப்பம்பூவை வறுத்தபின், பொடித்தும் சேர்ப்பார்கள்.

-0-

2. ஒரேயடியாக இனிப்பு பிடிக்காதவர்கள் இதை முயற்சிக்கலாம். இதிலும் அறுசுவையும் இருக்கும்.  ஆனாலும் பண்டிகை என்பதால் அநேகம் பேர் முதலாவதையே தேர்ந்தெடுப்பார்கள். 

தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1 (புளிப்பும் இனிப்பும் கலந்த சிறியது)
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
அரிசி – 1 டீஸ்பூன்
வெல்லம் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிக்க- தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ.

செய்முறை:

  • மாங்காயை பஜ்ஜிக்குச் சீவுவதுபோல் மெலிதான செதில்களாகச் சீவிக் கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், அரிசியை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாங்காய்த் துண்டுகள், கரைத்த புளிநீர், மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து அடுப்பில் வாணலியில் நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • மாங்காய் வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
  • எண்ணையில் கடுகை வெடிக்கவிட்டு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ சேர்த்து பொன்னிறத்திற்கு சற்று அதிகமாக வதங்கியதும் பச்சடியில் கலக்கவும்.

* பொதுவாக மாங்காய்த் துண்டுகளை வேகவைத்து, வெல்லம், சுக்கு, ஏலப்பொடி சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டால் பெருங்குடலுக்கு மிகவும் நல்லது. குடல் புற்றுநோயைப் பெருமளவு வராமல் தடுக்கிறது.

* ஒரு பண்டம் ஒன்று, தித்தித்தேன் என்று இனிப்பாக இருக்க வேண்டும் அல்லது நாவிற்கு சுகமாக காரமாகவாவது இருக்க வேண்டும். இரண்டுமாக இல்லாமல் அல்லது இரண்டும் கெட்டானாக இது போன்ற உணவுவகைகள் எனக்குப் பிடிப்பதில்லை, ஆனாலும் வருடப் பிறப்பு ஒரு நாளாவது வீட்டில் இருப்பவர்களுக்கும் பிடித்ததைச் செய்துவிட்டுப் போகலாமே என்று செய்வேன்.