“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?”“பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.”— புலிநகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்)
பொன்னா நாங்குநேரி இல்லையா? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர்ச் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.– நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.
—
தேவையான பொருள்கள்:
தயிர் – 1 கப்
அப்பக்கொடி (அல்லது அதளக்காய் வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல்)
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.
செய்முறை:
- தயிரை நன்கு தண்ணீர் விடாமல் கடைந்து கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் சீரகத்தை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
- கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலாக்களைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பொங்கிவரும்போது இறக்கவும்.
- எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அப்பக்கொடியையும் கருக வறுத்துச் சேர்க்கவும்.
* அப்பக் கொடி – இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் ஒரு கொடி வகை. அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மணத்தக்காளி வற்றல் வறுத்துச் சேர்க்கலாம்.
ஜெயஸ்ரீ, மிகவும் சுவையாக இருந்தது. அன்புத் தோழி வெந்தயம் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வெந்தயம் தான் மேலும் சுவை சேர்த்தது. விழுங்கியதும் நாக்கினடியில் அதன் மணமும் கசப்பும் அருமை. மணத்தக்காளி வற்றல், வற்றல் குழம்பை விட இதில் தான் சுவையாக இருந்தது.
என் பக்கத்து இரண்டு கேள்விகள்:
இதில் காய் சேர்க்கக் கூடாதா? (என் பெண்)
தாமரைக் கொடி வற்றலைத் தான் அப்பக்கொடின்னு சொல்லுதாங்களோ? (எங்க கடைக்கார அண்ணாச்சி)
தொடர்புடைய இன்னொரு சுட்டி: அன்புத்தோழி
திங்கள், செப்ரெம்பர் 10, 2007 at 5:19 பிப
நன்று.
அப்பக்கொடியை பார்க்க வேண்டும். அது ஏதோ சுண்டைக்காய் மாதிரி அல்லவா இருக்கிறது. மெட்றாஸில் கிடைக்குமா என்று தெரியவில்லை. கடையில் விசாரித்துப்பார்க்கிறேன். வித்தியாசமான ருசியாக இருக்கும் போல இருக்கிறது. மோர்க்குழம்பு போல தான்கள் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ தெரியவில்லை. இதை எதனுடன்சாப்பிட வேண்டும் என்றும் சொல்லுங்கள்.
நன்றி
திங்கள், செப்ரெம்பர் 10, 2007 at 7:23 பிப
ஜயராமன், நான் அப்பக்கொடியை என்னத்தை கண்டேன்? மணத்தக்காளி வற்றல் தான் தாளிச்சேன். எதனுடன் சாப்பிடலாம்னா, மோர்க்குழம்பு செய்யும்போது செய்ற எதோடயும் சாப்பிடலாம்னு நினைக்கிறேன். அல்லது பொன்னா செஞ்சிருக்கற வாழைக்காய் கறி கூட செய்யலாம். அவியல் எல்லாம் இதுக்கு ஓவர். நான் அன்னிக்கி சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செஞ்சிருந்தேன். அதையும் கையோட இங்க போடற ‘மூட்’ இல்லை காலைல. 😦
திங்கள், செப்ரெம்பர் 10, 2007 at 9:38 பிப
அம்மணி,
அழகான விளக்கத்துக்கு நன்றி.
இன்னும் ஒரு சின்ன சந்தேகம்.
தயிர் எப்படி இருக்க வேண்டும். நன்றாக புளித்தா இல்லை புளிக்காமலா?
தயிர் தண்ணீர் இல்லாமல் ரொம்பவுமே கெட்டியாக இருக்காதா? ஏதோ துகையல் மாதிரி ஆகாமல் இருந்தால் சரி! என்ன consistancy ல் இருக்க வேண்டும்?
பிகு : நான் முந்தி கேட்ட மட்டர் சூடா ரெசிபி இன்று ஹார்மனி பத்திரிக்கையில் வந்திருக்கிறது. ரொம்பவும் நல்லது. ரொம்ப நாட்களுக்கு முன்னால் பாம்பேயில் என் அக்காள் கையால் சாப்பிட்டது. இந்த வாரம் செய்து பார்க்க போகிறேன். நன்றி
புதன், செப்ரெம்பர் 12, 2007 at 9:23 முப
ஜயராமன், நான் தண்ணீர் சேர்க்காமத் தான் செஞ்சேன். ஆனா மிக்ஸில அரைச்சதும் அதுல அரைக்கால் கப் தண்ணி விட்டுக் கழுவி அதையெல்லாம் வீணாக்காம குழம்புல சேர்ப்பேன். அதை சொல்லியிருக்கணுமோ? துவையல் மாதிரி எல்லாம் இல்லாம குழம்பு மாதிரி திடத்துல தான் இருந்தது.
அதிகம் புளிப்பில்லாத தயிர் தான் உபயோகிச்சேன். மேல் விபரத்துக்கு பொன்னாவோ பிஏகிருஷ்ணனோ தான் வரணும். 🙂
சாரி, நீங்க சொன்னதெல்லாமும் கொஞ்சம் டயம் எடுத்துப் போடறேன். மட்டர் சூடான்னா என்ன? chiwdaன்னு ஒன்னு மஹாராஷ்டிராக்காரங்க செய்வாங்க இங்க, அதுவா? முடிஞ்சா சுட்டியோ, குறிப்போ எனக்கும் அனுப்புங்களேன்.
புதன், செப்ரெம்பர் 12, 2007 at 9:47 முப
அம்மணி,
நன்று. செஞ்சு பார்க்கும்போது இதுமாதிரி பல சின்ன சந்தேகங்கள் வர்றது. விளக்கத்துக்கு நன்றி.
மட்டர் சூடா ரெசிபியை அந்த பத்திரிக்கையிலிருந்து ஸ்கேன் பண்ணி அனுப்புகிறேன். ரொம்ப நன்றாக இருக்கும். இது பச்சை பட்டாணி, அவல் அடிப்படையில் பல இனிப்பு, மசாலா சேர்த்து இருக்கும். ஸ்னாக் தான். சைட் டிஷ் அல்ல.
புதன், செப்ரெம்பர் 19, 2007 at 9:44 முப
ஜெயஸ்ரீ
உப்புச்சார் பற்றி சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கத்தில் ஏப்பிரல் 1998ல் எழுதியது:
அதுபோல் உப்புச்சாறு என்பது சுவாரசியமான ஒரு வார்த்தை. கடல் பொதுவாக உப்பாகையால் பாற்கடலில் கிடைத்த அமுதத்தை உப்புச்சாறு என்று பரிகாசமாகச் சொல்கிறது. தேவர்கள் சாவமைக்கு மருந்தாக அமிர்தம் திருடினார்களேயன்றி தெய்வத்தை அடைய அல்ல. அமுதம் கடைந்தெடுத்த சர்வேஸ்வரனைக் கண்டு சத்கதி பெறுவதை விட்டு விட்டு அவன் கொடுக்கும் அமிர்தமே வேண்டும் என்று நம்பினார்கள். அதனால் உப்புச்சாறு குடித்த தேவர்கள் என்று வைணவர்கள் பரிகாசமாக எழுதுவார்கள்.
அன்புடன்
ச.திருமலை
சனி, செப்ரெம்பர் 22, 2007 at 1:33 பிப
திருமலை,
என்கிட்ட ஒரு பழைய கணையாழியின் கடைசிப் பக்கங்கள் தான் இருக்கு.
//..அமுதம் கடைந்தெடுத்த சர்வேஸ்வரனைக் கண்டு சத்கதி பெறுவதை விட்டு விட்டு அவன் கொடுக்கும் அமிர்தமே வேண்டும் என்று நம்பினார்கள்…//
பாயிண்ட்! :))
புதன், செப்ரெம்பர் 26, 2007 at 6:07 முப
பழைய பதிப்பு என்றால் அதில் இந்தக் கட்டுரை இருக்காது. இது சுஜாதா கணையாழியில் கடைசியாக எழுதிய கடைசிப் பக்கம் என்று நினைக்கிறேன், இந்தக் கட்டுரையின் தலைப்பே உப்புச்சாறு என்பதுதான். ஸ்ரீரெங்கம் கோவில் ஒழுகில் இருந்து எடுத்த தமிழ் வார்த்தைகள் பலவற்றையும் லிஸ்ட் செய்திருக்கிறார். இதே பக்கத்தில்
தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகேந்தினாள்
கெண்டை கெண்டை என்று கரையேறினாள்
கெண்டை காண்கினள் நின்று தயங்கினள்
என்ற அழகிய கவிதையை அழகிய நார்சிசக் கவிதை என்று சொல்லி முடித்திருப்பார் (கவிதை வரிகள் எனக்கு நினைவில் இல்லை, குத்து மதிப்பாக எழுதியுள்ளேன்).
ஏப்ரல் 98க்குப் பிறகு கணையாழியில் கடைசிப் பக்கங்கள் எழுதுவதை நிறுத்தி விட்டார் என்று நினைக்கிறேன். பின்னால் அதையே க பெ என்று விகடனில் தொடர்ந்தார். இப்பொழுது அதற்கும் லீவு போட்டிருக்கிறார் ஒரு வேளை ரோபோ செய்வதில் பிசியாக இருக்கிறார் போலும்
அன்புடன்
ச.திருமலை
வெள்ளி, செப்ரெம்பர் 28, 2007 at 5:40 பிப
🙂 உடம்பு சரியில்லையோ என்று நான் நினைத்தேன்.
வியாழன், ஒக்ரோபர் 11, 2007 at 6:57 பிப
உங்களுக்குப் பிடிச்சிருந்ததில ரொம்ப மகிழ்ச்சி. பொண்ணுக்குப் பிடிச்சதா ? காய் சேர்த்தும் செய்யலாம். சில சமயம் நான் பூசணிக்காய் அல்லது வெண்டைக்காய் சேர்ப்பேன்.
அதளக்காய் வற்றல் நானும் பார்த்ததில்லை. ஆனால் அது தாமரைக்கொடி வற்றல் இல்லை. அப்பக்கொடி மட்டும்தான் பாத்திருக்கேன். கிடைச்சா படம் பிடிச்சு அனுப்பறேன்.
அப்புறம் ஊருக்குத் தொலைபேசி கொஞ்சம் R&D வேலை செய்ததுல கிடைச்ச தகவல்…
திருமலை அவர்கள் சொல்லியிருக்கும் உப்புச்சார்தான் (புளி சேர்த்தது) பொன்னா செய்ததாக இருக்க வாய்ப்பு அதிகமாம்.
‘புலிநகக்கொன்றை” ல இந்த மெனுவைப் படிச்சப்போவே நினைச்சேன். அவியலும் உப்புச்சாரும் combination சரியாவே இல்லையே ன்னு. இரண்டுக்குமே தயிர் base இல்லையா ?
//காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்துக் கொள்ளவும் //
இதை அரைக்கணுமா இல்லையா சொல்லவே இல்லையே 🙂
வெள்ளி, ஒக்ரோபர் 12, 2007 at 10:34 முப
ரொம்ப நல்லா இருந்ததுன்னாலே, எல்லாருக்கும் பிடிச்சிருந்ததுன்னு தான் அர்த்தம். பொதுவாவே பொண்ணுக்கு மோர்க்குழம்பு, துவையல், பொடிகள்னு தமிழ்நாட்டு உணவு எல்லாம் ரொம்பப் பிடிக்கும். இது நல்லாவே இருந்தது.
திருமலை ராஜன், கேட்டீங்களா, உங்களோடதே பொன்னா உப்புச்சார். ஜெயஸ்ரீ தகவலுக்கு நன்றி.
வறுத்ததை அரைச்சுட்டேன். 🙂
புதன், பிப்ரவரி 27, 2008 at 7:22 பிப
adadaa,
thirunelveli ingee
nIRaiya varuthee.
intha appakkodi ennanu naanum
visarikkiREn.
செவ்வாய், மார்ச் 11, 2008 at 9:10 பிப
ரேவதிநரசிம்மன், ஆக நீங்களும் இதுக்கு முன்னாடி அப்பக்கொடி பத்தி கேள்விப்பட்டதில்லை. அதை சத்தமா சொல்லுங்க சில மக்களுக்கு. நன்றி. 🙂
புதன், ஓகஸ்ட் 19, 2015 at 11:09 பிப
My uppuchaar curdled when I put it on the stove even on low heat. It looked curdled but the taste was good. It did not look smooth like regular mor kuzhambu. Why?