தோசை


தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மைதா – 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு
சீரகம்
முந்திரிப் பருப்பு
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
நெய்

ravaa dosai 1ravaa dosai

செய்முறை:

  • ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (வழக்கமாகச் சொல்வதுதான் – மாவுக் கலவையை அரை நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுலபமாகக் கலக்கலாம்.)
  • சிறிது நெய்யில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு துண்டுகள், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை என்ற வரிசையில் சேர்த்து தாளிக்கவும்.
  • தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து அப்படியே ஒருமணிநேரம் வைத்திருக்கவும்.
  • தோசை வார்க்க ஆரம்பிக்கும் முன் மேலும் தேவையிருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நீர்க்க இருத்தல் அவசியம்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒருகரண்டியால் மாவை ஓரத்திலிருந்து சுற்றிவிட்டு, நடுவிலும் விட வேண்டும். (மாவை இழுத்து, காலி இடத்தை நிரப்பப் பார்ப்பது, வட்டவடிவமாக வார்க்க ஆசைப்படுவது எல்லாம் தேவை இல்லை.)
  • சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து நன்கு வெந்து அடிப்பாகம் மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து திருப்பவும்.
  • அடுத்தப் பக்கமும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
  • சுடச்சுட மட்டுமே பரிமாறவும். ஆறினால் கட்டைமாதிரி ஆகிவிடும்.

* நான்-ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் சுவையான மொறுமொறுப்பான தோசைகள் வரும். முதலிரண்டு தோசைகள் சரியாகவராமல் படுத்தலாம். [அவற்றை ‘மாமியார் தோசை’ என்பது குழூஉக்குறி. :)] தொடர்ந்து சரியாக வரும்.

* என்னைப் பொருத்தவரை மாவு கரைத்ததுமேகூட வார்க்கலாம். சரியாக வரும்.

* முந்திரிப் பருப்பு, மிளகு, தேங்காய்த் துண்டுகள், எங்கேயோ கொஞ்சமாக வரும் நெய்வாசனை, இவையே ரவா தோசைக்கான அடிப்படை அலங்காரப் பொருள்கள். இவை நான்கின் கூட்டணிச் சுவைதான் ரவா தோசை என்ற அங்கீகாரத்தைத் தரும். (அதிகம் நெய்விடக் கூடாது. நெய், தோசையை மென்மையாக்கிவிடும்.)

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நடுவில் தூவினால் ஆனியன் ரவா.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்…

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு  – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் – 1 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

காய்கறி: வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை.

masala pesarattu

செய்முறை:

  • பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
  • மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், லேசாய் நசுக்கிய பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
  • மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
  • சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
  • திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.

* காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.

masala pesarattu (with uppumaa)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நாம் மசால்தோசைக்கு உருளைக்கிழங்கு மசாலா நடுவில் வைத்துச் செய்வதுபோல இந்தத் தோசைக்கு நடுவில் கால் டீஸ்பூன் இஞ்சிச் சட்னியைத் தடவி, அதன்மேல் ஒரு சிறு கரண்டி ரவை உப்புமாவை வைத்து மடித்துப் பரிமாறவும். ரவை உப்புமா சன்ன ரவையில் செய்ததாகவும், சற்று தளர்வாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய ரவையாக இருந்தாலும் பரவாயில்லை.

தேங்காய்ச் சட்னி, சாம்பார் பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு  – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

pesarattu  2 batterpesarattu 2

                                      pesarattu-uppumaa-inji chutney

செய்முறை:

  • பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
  • சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
  • திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தத் தோசையை ரவை உப்புமா, இஞ்சிச் சட்னி யுடன் பரிமாறுவது வழக்கம்.

ரவை உப்புமா, பொதுவாக சன்ன ரவையில் தயாரித்து, சற்று தளர்வாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய ரவையாக இருந்தாலும் பரவாயில்லை.

இஞ்சிச் சட்னி

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

pesarattu 1

செய்முறை:

  • பயத்தம் பருப்பை 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு ஆனால் மிக மிக நைசாக அரைத்து அத்துடன் ரவையையும் கலந்து கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
  • சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
  • திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.

* எவ்வளவு மெலிதாக வேண்டுமானாலும் இந்த மாவை இழுத்து வார்க்க முடியும். சுலபமாகத் திருப்ப முடியும்.

* பொதுவாக பச்சரிசி 2 டீஸ்பூன் சேர்த்து அரைத்து செய்வார்கள். அதைவிட ரவை சேர்ப்பது மொறுமொறுப்பாக வரும்.

* எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அதிக எண்ணெயை ஏற்காது.

* ரவை, பச்சரிசி எதுவுமே சேர்க்காமலும் மிக மிக மென்மையான ஸ்பான்ச் தோசைகள் வார்க்கலாம்.

* பச்சை மிளகாயைத் தவிர்த்துவிட்டு இரண்டு முந்திரிப்பருப்பை சேர்த்து அரைத்து தோசை செய்தால் சின்னக் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம். உண்ணவும், செரிக்கவும் எளிதானது. மிக மிக லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும். (ஒரு டேபிள்ஸ்பூன் பருப்பு மட்டும் நனைத்து மிக்ஸியின் சட்னி jar லியே அரைத்து என் பெண்ணிற்கு ஒரு வயதுக்கு மேல் ஆனதும் செய்து கொடுத்திருக்கிறேன்.)

* முடிந்தவரை இதுபோல் எண்ணெய் அதிகம் தேவைப்படாமலே சுலபமாக திருப்பக் கூடிய தோசைகளை மட்டுமாவது இரும்பு தோசைக்கல்லிலேயே தயாரிக்கலாம் என்பது என் கருத்து. இரும்பு வாணலியை உபயோகிப்பது முற்றிலும் நின்றுபோய்விட்ட இந்தக் காலத்தில் தோசைக் கல் மட்டுமாவது உபயோகத்தில் இருப்பது நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தக்காளிச் சட்னி, இஞ்சிச் சட்னி
 

ஐந்தே நிமிடங்களில் மாவு தயாரித்து,  புதிதாய்  சமைப்பவர்கள்  கூட சுலபமாக செய்துவிடக் கூடிய எளிய தோசை.
 
தேவையான பொருள்கள்:

மைதா மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு –  தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய்.

maida dosai 1maida dosai

செய்முறை:

  • மைதா, ரவை, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சாதாரண தோசைமாவை விட நீர்க்க, கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (மைதா, ரவையை 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கட்டிகளில்லாமல் கரைப்பது மிகச் சுலபம்.)
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.
  • பொடியகா நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
  • அடுப்பில் தோசைக் கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • மாவை ஒரு கரண்டியால் எடுத்து கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து உள்வரை வட்டமாக ஊற்றிக்கொண்டே வரவும். (சாதாரணமாக தோசை வார்ப்பதுபோல் நடுவில் மாவை விட்டு கல்லில் வட்டமாக இந்த மாவைப் பரத்த முடியாது.)
  • சுற்றி சில துளிகள் மட்டும் எண்ணெய் விடவும். அதிக எண்ணெய் விட்டால் சொதசொதவென்று இந்த மாவு எண்ணெயைக் கக்கிவிடும்.
  • அரை நிமிடத்திலேயே அடிப்பாகம் வெந்து மேலெழுந்துவிடும். புதிதாக தோசை செய்பவர்கள்கூட சுலபமாக முழுதாகத் திருப்பிவிடலாம்.
  • அடுத்தப் பக்கமும் அரை நிமிடம் வேகவைக்கவும்.
  • மேலும் மொரமொரப்பாகத் தேவைப்பட்டால் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, இன்னும் சில நொடிகள் வைத்திருந்து எடுக்கலாம்.

* தோசை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே மாவு கெட்டியாகிவிட்டால் அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்க இருந்தால்தான் மெலிதாக சுவையாக வரும். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி (தோசை) மிளகாய்ப் பொடி, தக்காளிச் சட்னி, சாம்பார், வெந்தயக் குழம்பு போன்ற குழம்பு வகைகள்…
 

ஸ்ரீரங்கத்திற்கு அடுத்ததாக மனதில் மிக அதிகமாகப் பதிந்த கோயில் மதுரை கள்ளழகர் கோயில். காரணம், அங்கே இருக்கும் பதினெட்டாம் படியான் மற்றும் கள்ளழகர் (சுந்தரராஜப் பெருமாள்) எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் காளி பட ஷூட்டிங்கிற்காக வந்திருந்த ரஜினியை மிக அருகில், கூட்டமே இல்லாமல்- மொத்தமே பக்கத்தில் 5,6 பேர் மட்டும் தான் இருந்தார்கள்- பார்த்தது அந்த வயதிற்கான த்ரில். எப்பொழுதும் குரங்குகள் த்ரில். பிரகாரத்தை வலம் வரும்போது, இடதுபக்க ஓரமாக இருக்கும் ஷேத்ர பாலர் சன்னதி முன்பு வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் (அம்மா வழிப்) பாட்டி தன் மாமனாரை நினைவு கூறுவார். “அப்பல்லாம் தோசைப் பொடி முடிஞ்சு நடை சாத்தினதும் கங்காணித் தாத்தா(கண்காணிப்பு?) கோயிலைப் பூட்டி சாவியை உள்ள நீட்டுவார். ஷேத்ர பாலர் கை நீட்டி வாங்கி வெச்சுப்பார்” என்று சொல்வார். நம்பியும் நம்ப முடியாமலும் ஆனால் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கேட்டுக் கொள்வோம். இப்போது தொடர்ந்து நானும் அடுத்த தலைமுறைக்கு அங்கே அதைச் சொல்லி வருகிறேன், மற்றவர்கள் எல்லாம், “ஆமா, பெரிய நாட்டாமை வாரிசு! பரம்பரைக் கதையை எடுத்து விடறா!!” என்று கிண்டல் செய்வதைப் பொருட்படுத்தாமல். அடிக்கடி பெரிய வேன் வைத்துக் கொண்டு கூட்டமாகப் போவது, குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, வெள்ளரி மாங்காய் பத்தைகள் என்று ஏகப்பட்ட சில்லுண்டி ஐட்டங்களை உள்ளே தள்ளிக்கொண்டே மேலே முருகனை தரிசிக்க நடந்தே மலையேறுவது என்று எப்பொழுதுமே அழகர் கோயில் பற்றி இனிமையான நினைவுகள் மட்டுமே…..

kallazagar

“அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்” என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு அரங்கனின் பிரசாதங்கள் தொலை தூரத்திலேயே வாசனையால் இழுக்குமோ அதற்கு நேர் மாறாக அழகருக்குச் சாற்றிய பூவும், நைவேத்தியம் செய்த பிரசாதமும் ஏனோ மணத்தை இழந்துவிடும். 😦 ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே. 🙂 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி –  3 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
மிளகு – 2 டீஸ்பூன்  
சுக்குப் பொடி –  1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை –  சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)
  • உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.
  • மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.
  • நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.

* அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம். 

* வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை. 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். இரவு 9 மணிக்கு நடை சாத்துவதற்கு முன் செய்யப் படுவது. தற்கால சூழல் காரணமாக இரவு 7 மணிக்கே இதைச் செய்து முடித்து நடைசாத்துவதாகச் சொல்கிறார்கள்.

uththappam1.JPG

தேவையான பொருள்கள்:

இட்லி மாவு – 2 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடமிளகாய் – 2
தக்காளி – 2
பச்சைப் பட்டாணி – 1/4 கப்(உரித்தது)
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன்
சீஸ் – துருவியது (விரும்பினால்)

தாளிக்க – நெய் அல்லது எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

இவற்றோடு பொறுமை, பொறுமை, பொறுமை.

uthappam2.JPG

செய்முறை:

  • அதிகம் புளிக்காத இட்லி மாவில் உப்பு, ரவையைக் கலந்துகொள்ளவும். ரவை மொறுமொறுப்பைக் கொடுக்கும்.
  • வெங்காயம், குடமிளகாய், தக்காளியை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை பெரிய அளவில் துருவிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்க அஞ்சுபவர்கள் இரண்டாக மட்டும் கீறிக் கொள்ளவும். ஊத்தப்பம் இடையில் கண்ணில் பட்டால் தூர எறிந்துவிடலாம்.
  • வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.
  • நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, கொத்தமல்லித் தழையை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  • தோசைக் கல்லில் மாவை கனமாகப் பரத்தி, அதன்மேல் காய்கறிக் கலவையில் சிறிது தூவி சுற்றி நிறைய எண்ணை விட்டு, மூடிவைக்கவும்.
  • குறைந்த சூட்டில் வெகு நிதானமாக வேக வேண்டும். மூடிவைப்பதால் மேல்பகுதி காய்கறிகளும் பாதி வெந்து மாவோடு ஒட்டியிருக்கும். திருப்பும்போது பிரச்சினை தராது.
  • 3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு, மீண்டும் சுற்றி எண்ணை விடவும்.
  • இந்தப் பக்கத்தையும் 3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் மூடி வேகவைத்து, திருப்பிப் போட்டு, மூடியில்லாமல் ஒரு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

uththappam4.JPG

* அதீதப் பொறுமையும், பொழுதைப் போக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் சமாளிக்கலாம். அநேகமாக காலை 4.30 மணிக்கு கூள மாதாரி படித்து இலக்கியம் வளர்த்தது நானாகத் தான் இருக்கும்.

* மேலே அங்கங்கே தக்காளி கெட்சப் போட்டு, துருவிய சீஸ், மிளகுத் தூள் (அல்லது பீட்ஸா மசாலா)தூவினால் பீட்ஸாவிற்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் இருக்கும்.

* காய்கறிகளை மொத்தமாக மாவில் கலந்தும் செய்யலாம். இது செய்வது சுலபம். 

* முதலில் செய்பவர்கள் கொஞ்சம் சிறிய சைஸ் ஊத்தப்பங்களாக முயற்சி செய்யலாம்.

* அதிகம் எண்ணைவிட்ட அந்த மொறுமொறுப்பான ஊத்தப்பம் கனமான இரும்பு தோசைக் கல்லிலேயே சாத்தியம்.

uththappam5.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார்.

மேலே தோசை மிளகாய்ப் பொடி தூவிச் செய்தால், தனியாக தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. அல்லது தயிர் தொட்டுக் கொள்ளலாம். ஃப்ளேவர் பிரமாதமாக இருக்கும்.

uththappam6

அடுப்பில், பணியாரக் குழியில் சிறிது எண்ணை விட்டு, மிஞ்சிய 2 கரண்டி காய்கறி-ஊத்தப்பக் கலவையில் பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள் கலந்து குழிகளில் விட்டுச் செய்தது இன்னும் சுவையாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 3 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

கொத்தமல்லிச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி அல்லது புதினாச் சட்னி
உருளைக் கிழங்கு மசாலா.

masala-dosai1.JPG

செய்முறை:

  • அரிசிகளைத் தண்ணீரில் ஊறவைக்கவும். உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தைத் தனியாக ஊறவைக்கவும்.
  • நான்கு மணி நேரம் ஊறியபின் அரிசி பருப்புகளை தனித் தனியாக மிக மென்மையாக நுரை ததும்ப அரைத்து எடுக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துவைத்து, முழு இரவும் பொங்க விடவும்.
  • தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை நடுவில் ஊற்றி, மெல்லிதாக வட்டமாகப் பரத்தவும்.
  • தோசையைச் சுற்றியும் நடுவிலும் எண்ணை விட்டு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • நன்றாக முறுகலாக வெந்ததும், திருப்பிப் போடவும்.
  • இந்தப் பக்கத்தை சில நொடிகள் மட்டும் வேகவைத்து மீண்டும் திருப்பிவிடவும்.
  • நடுவில் மேலே குறிப்பிட்டுள்ள சட்னிகளில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் எடுத்து வட்டமாகப் தேய்த்து, அதன்மேல் உருளைக் கிழங்கு மசாலா ஒரு கரண்டி வைத்து மூடிப் பரிமாறவும்.

masala-dosai2.JPG


 

* சப்பாத்தி, பூரி, தோசைக்கு தனியாகத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது சற்று தளர்வாக இருக்கவேண்டும். இந்தக் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் தோசையின் உள்ளே வைப்பதென்றால் மிகவும் இறுக்கமாக, தண்ணீர்ப் பசை இல்லாதவாறு மசாலா இருக்குமாறு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மைதா – 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை, டால்டா/நெய் –  தேவையான அளவு

செய்முறை:

  • அரிசிகள் இரண்டையும் தண்ணீரில் 3 மணிநேரம் ஊற வைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து, தனியாக ஊறவைக்கவும்.
  • அரிசி, பருப்பை தனித் தனியாக நைசாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மைதாவையும் கலந்து 6,7 மணி நேரம் எடுத்துவைக்கவும்.
  • பொங்கியிருக்கும் மாவில் மேலும் நீர் சேர்த்து தளர இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • தோசைக் கல் காய்ந்ததும் மாவை நடுவில் விட்டு, மிக மெல்லிய தோசைகளாகப் பரத்தவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
  • எண்ணையோடு டால்டா/நெய் கலந்து, தோசையைச் சுற்றிலும், நடுவிலும் விடவும்.
  • ஒரு மூடியால் மூடிவிடவும். (இப்போது தோசைக்கு மூடி கடைகளில் கிடைக்கின்றன.)
  • நன்கு ரோஸ்ட் ஆக வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். திருப்பிப் போடத் தேவை இல்லை. கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

* ஒவ்வொரு தோசைக்கு மாவு விடும் முன்பும் சிறிது நீர் தெளித்தோ அல்லது ஈரத் துணியால் கல்லைத் துடைத்துவிட்டுச் செய்தால் சரியாக வரும். 

* இந்த முறைக்கு தோசைக் கல் கனமானதாக இருக்க வேண்டும். இரும்புக் கல்லில் செய்தால் சுவையாக இருக்கும். நான்-ஸ்டிக் பரவாயில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இங்கே

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
பச்சரிசி – 1 1/2 கப்
முழு உளுத்தம் பருப்பு – 1 கப் (தோல் நீக்கியது)
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசிகள், வெந்தயம், பருப்பை ஒன்றாக 4 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • கிரைண்டரில் அவ்வப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிக மிக மென்மையாக, மாவில் கொப்புளங்கள் வரும்வரை அரைக்க வேண்டும்.
  • அரவை முடிக்கும்போது உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிடவும்.
  • மாவை கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • இந்த மாவில் அடுத்த அரைமணி நேரத்தில் தோசை செய்யலாம். அல்லது ஒரு 6,7 மணி நேரங்கள் வெளியே வைத்து, மாவைப் பொங்கவைத்தும் செய்யலாம்.
  • தோசைக் கல்லை சூடாக்கி, மாவை நடுவில் விட்டு, சுற்றி மெல்லிய வட்டமாகப் பரத்த வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
  • சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, சிவந்ததும் திருப்பிப் போட வேண்டும். சுலபமாகத் திருப்ப முடியும்.
  • அடுத்தப் பக்கம் அதிக நேரம் வேகத் தேவை இல்லை. இதற்கு, கல்தோசை என்று பெயர். கொஞ்சம் மொறுமொறுப்பாக வரும்.  

 * மொறுமொறுப்பில்லாமல் கொஞ்சம் சாஃப்டான தோசை தேவை என்றால் பச்சரிசியை அதிகரித்து புழுங்கலரிசியைக் குறைத்தோ (2:1) அல்லது முற்றிலும் பச்சரிசி மட்டுமே உபயோகித்தோ செய்யலாம். இதற்கு மெதுதோசை என்று பெயர். பச்சரிசி தோசை ஸ்பான்ச் மாதிரி இருக்கும்.

* தோசைக்கான அந்தச் சிவந்த நிறத்தை, வெந்தயம் தருகிறது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, புதினாச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார், தக்காளிக் கொத்சு, இட்லி(தோசை) மிளகாய்ப் பொடி, உருளைக் கிழங்கு மசாலா.

“எல்லாவற்றுள்ளும் இனிய பேரனுபவும் ஒன்று இருப்பதை உணர்ந்தவருக்கு ஒரு நாள் என்பது ஒரு பரிசு. உணவில் அவருக்கு வெறி இல்லை, ஆனால் சாப்பிடும்போது ரசித்துச் சாப்பிடுவார். தோசை அவருக்கு மிகமிகப் பிடித்தமானது. தோசைக்கு கீரை மசியலும் கெட்டித் தயிரும் தொட்டுக்கொள்வதைத் தான் என்னால் கடைசிவரை ஏற்கவே முடியவில்லை.”

இந்த மேட்ச் ஃபிக்சிங் குறிப்பு, யார், யாரைப் பற்றி, எங்கே சொன்னது? :))