உப்புமா


நான் திருமணமாகி, மஹாராஷ்டிரா வந்தபோது, ஊருக்கு வந்து இறங்கியதும் ஊர்த்தலைவர் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் கொடுத்ததிலிருந்து இந்த ஆலூ போஹா அறிமுகம். அதற்குப்பின் தொடர்ந்து யார் வீட்டிற்குப் போனாலும் எல்லா உணவுகளோடும் நிச்சயம் இது உண்டு. பத்தே நிமிடங்களில் தயாரித்து, ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கப்படும் இந்த உணவின் சுவை என்னை அவ்வளவு ஈர்த்தது. இதற்காகவே அவர்கள் சூஜி கா அல்வா என்று கொடுக்கும் சர்க்கரைக் குறைவான ரவை கேசரியை மன்னித்திருக்கிறேன். ஆனால் எனக்கு என்னவோ அப்பொழுதெல்லம் எத்தனை பேரிடம் செய்முறை கேட்டும், செய்வதை கூடவே நின்று பார்த்தும், செய்யவே வந்ததில்லை. இனி ஆலூ போஹாவே வாழ்க்கையில் செய்ய முயற்சிக்கக்கூடாது என்று ரங்கமணி சத்தியம் வாங்கும் அளவுக்கெல்லாம் சொதப்பியிருக்கிறேன்.

மீண்டும் இரண்டரை வருடங்கள் முன்பு ஹாங்காங்கிலிருந்து மும்பையில் விடிகாலை 3 மணிக்கு இறங்கியதிலிருந்து எதுவும் ஓடவில்லை. விடிந்ததும் விடியாததுமாக பெண்ணுக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு ஓடிப் போய் அப்ளிகேஷன் வாங்கி, பள்ளிகள் பண்ணும் பாவனைகளை(இந்தியப் பள்ளிகளின் பாவனைகள் எனக்குப் புதிது; அதிர்ச்சி) செரிக்கமுடியாமல் டென்ஷனாகி… “எனக்குப் பசிக்கவேயில்லை. வேலை முடியறவரைக்கும் யாரும் கிட்டயே வராதீங்க,” என்று உட்கார்ந்துவிட்டேன். “அப்படியெல்லாம் உன்னை விட்டுடமுடியுமா? மஹாராஷ்டிரா உன்னை வரவேற்கிறது” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூல் கேண்டீனில் வாங்கிய ஆலூ போஹா தட்டை ரங்கமணி நீட்டியதும், ஒரே ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே…’. வித்யாசமாய் நிலக்கடலை எல்லாம் சேர்த்திருந்தார்கள்.

ஏன் இதைத் தயாரிக்க இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேவையான பொருள்கள்:

சன்ன அவல் – 1 கப்
வெங்காயம் – 1 (பெரியது)
உருளைக் கிழங்கு – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
எலுமிச்சை – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல்

தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – 12, 15 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை

 aloo poha

செய்முறை:

  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை தோல் சீவியோ சீவாமலோ(நான் தோலை நீக்குவதில்லை.) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து, அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • உருளைக் கிழங்கோடு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • உருளை வதங்கும் நேரத்தில், அவலை நீரில் சில நொடிகளுக்குள் அலசி நன்கு வடியவிடவும். அதிகம் தண்ணீரில் அவல் ஊறிவிடக் கூடாது.
  • வடித்த அவலையும் சேர்த்து மென்மையாகக் கிளறிவிடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
  • கேரட் துருவியில் தேங்காயை சன்னமாகத் துருவி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து பரிமாறவும்.

* உப்பு, மஞ்சள்தூளை முதலிலேயே சேர்த்தால்தான் அவலில்  அவை சிரமமில்லாமல் முழுமையாகக் கலக்கும். 

* கெட்டி அவலிலும் செய்யலாம். கெட்டி அவல் 4,5 நிமிடங்கள் ஊறினால் சரியாக இருக்கும். ஆனால் சன்ன அவல் தண்ணீரில் அதிகம் இருந்துவிடாமல் உடனடியாக வடித்து அடுப்பில் சேர்த்துக் கிளறிவிடவேண்டும்.

இப்போதும், “ஆலூ போஹா என்று கேட்காதீர்கள், அவல் உப்புமா என்றேஏ க்கேட்டு வாங்குங்கள்!!” என்று டேபிளுக்கு வரும்போதே ரங்கமணி கிண்டலும் தங்கமினி ‘கிக்கிக்கி’ சிரிப்பும் இருக்கிறது. உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் எதோ குறைகிறது. தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.

ஜவ்வரிசி, ஒரு வகை பனைமரத் தண்டின் உட்புறத்திலிருந்து தயாரிக்கப் படும் பொருள். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. எயிட்ஸ் நோயாளிகளுக்கு வற்புறுத்தப் படும் உணவாகும். நாவிற்கு ருசியாகவும் உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும் இது நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ள முதியோருக்கும் ஏற்ற சத்துணவு என்றும் சொல்கிறார்கள். ஆனால் ஜவ்வரிசிக்கு உடலிலிருந்து நீரைப் பிரிக்கும் தன்மை அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்ற மாறுபட்ட கருத்தும் உலவுகிறது. எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

javvarisi (sabudhana)

கடைகளில் இரண்டு வகை ஜவ்வரிசி கிடைக்கும்; மாவு ஜவ்வரிசி, நைலான் ஜவ்வரிசி. இவை வெவ்வேறு அளவுகளிலும் கிடைக்கும். மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய ஜவ்வரிசியை விட மீடியம் சைஸ் ஜவ்வரிசியே உப்புமா செய்ய சரியான அளவாக இருக்கும்.

-0-

1.
தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி (சுமாரான அளவு) – 1 கப்
தண்ணீர் – 1 கப்
நிலக்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

javvarisi (sabudhana) uppumaa

செய்முறை:

  • ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நிலக்கடலையை தோல்நீக்கி, ரவையை விட பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் டீஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து உடைத்து வைத்திருக்கும் நிலக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.
  • ஊறவைத்த ஜவ்வரிசியும் உப்பும் சேர்த்து அடிப் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கி, அடுப்பை அணைத்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு மூடி வைக்கவும்.
  • திறந்ததும், எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

*  இது முன்பொரு காலத்தில் நடிகர் குமரிமுத்து தொலைக்காட்சியில் ‘நட்சத்திர சமையல்’ நிகழ்ச்சியில் செய்து காண்பித்தது.

* இந்த முறையில் செய்வதால் உப்புமா வாணலியில் ஒட்டாமல் வரும்; நாம் விட்ட சிறிதளவு எண்ணெயையும் வெளியேற்றி பார்ப்பதற்கு அதிக எண்ணெய் விட்டது போல் தோன்றும். ஆனால் தன்னளவில் உதிர் உதிராக இல்லாமல் கொஞ்சம் சேர்ந்தாற்போல் தான் இருக்கும். விரும்பினால் நான் -ஸ்டிக் வாணலியில் அதிக எண்ணை விட்டு நிதானமாக ஜவ்வரிசி translucent ஆகும்வரை வதக்கினால் ஒட்டாத உப்புமா கிடைக்கும். ஆனால் பிரிந்துவிட்ட எண்ணெயை சகிக்கவே முடியாது. [“கொலையும் செய்வாள் பத்தினின்னு இதைத் தான் சொல்லியிருப்பாங்களோ” –  கோவிந்த் :-(]

* பொதுவாக பெரிய சைஸ் ஜவ்வரிசியை வடாம் வற்றல் வகைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். சுமாரான, அல்லது சிறிய மெல்லிய ஜவ்வரிசியே உப்புமாவிற்கு ஏற்றது.

* ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு அதைத் தயிராகச் சேர்த்து ஊறவைத்தால் அதிகம் ஒட்டாமலும் சுவையாகவும் இருக்கும். இதற்கு எலுமிச்சச் சாறு பிழியத் தேவை இல்லை. ஆனால் அநேகமாக இந்த உப்புமாவை வட இந்தியர்கள் விரத நாள்களுக்கே உண்பதால் தயிர் சேர்த்துக் கொள்வதில்லை.

* வறுத்த வேர்க்கடலையாக இருந்தால் இறுதியில் சேர்த்து வதக்கினால் போதுமானது; தாளிக்கும்போது சேர்க்கத் தேவை இல்லை.

2.
தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி (சுமாரான அளவு) – 1 கப்
தண்ணீர் – 1 கப்
கடலை மாவு –  2 டீஸ்பூன்
நிலக்கடலை – 1/4 கப்
உருளைக் கிழங்கு – 1
பச்சை மிளகாய் – 4
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

javvarisi (sabudhana) aaloo  uppumaa

செய்முறை:

  • ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நிலக்கடலையை தோல்நீக்கி, ரவையை விட பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் டீஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். விரும்பினால் குடமிளகாயும் சேர்த்துக் கொள்ளலாம். மணமாக இருக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.
  • உருளைக் கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கியோ, அல்லது வேக வைக்காமல் (தோலோடு அல்லது தோல் நீக்கி) பொடிப் பொடியாக நறுக்கியோ சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அந்த இரண்டு நிமிடங்களுக்கு இடையில் ஊறவைத்த ஜவ்வரிசியில் தண்ணீர் இருந்தால் ஒட்ட வடித்து விட்டு, கடலை மாவும் உப்பும் சேர்த்துப் பிசிறி, வாணலியில் சேர்த்து, கைவிடாமல் அடிப் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • இறக்கும் முன் உடைத்து வைத்திருக்கும் நிலக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பை அணைத்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு மூடி வைக்கவும்.
  • திறந்ததும், எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* இந்த முறையில் எந்த வகை ஜவ்வரிசியிலும் உப்புமா நிச்சயம் உதிர் உதிராக இருக்கும். முதல் முறை செய்யத் தயங்குபவர்கள் நான்-ஸ்டிக் வாணலியில் செய்யலாம்.

* விரத உணவாக இல்லை என்றால் வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.

3. (பருப்பு சேர்த்து)

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 1 கப்
தண்ணீர் – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 1/3 கப்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 1 (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5 அல்லது 5
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • ஜவ்வரிசியை 2 மணி நேரத்துக்கு மிகாமல்  தண்ணீரில்  ஊறவைக்கவும்.
  • ஊறிய ஜவ்வரிசியை நீரை வடித்து, சிறிதளவு எண்ணெயும், அரிசி மாவும் கலந்து உதிர்த்துவிடவும்.
  • பாசிப்பருப்பை அரை வேக்காடு மட்டும் வேகவைத்து, நீரை ஒட்ட வடித்துக் கொள்ளவும்.
  • நிலக்கடலையை தோல்நீக்கி, வறுத்து, ரவையை விட பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.
  • அடிப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • உதிர்த்த ஜவ்வரிசியை சேர்த்து குறைந்த தீயில் கைவிடாமல் ஆனால் மென்மையாக, ஜவ்வரிசி கண்ணாடி மாதிரி ஆகும்வரை கிளறவும்.
  • இறுதியில் உப்பு, பயத்தம் பருப்பைச் சேர்த்து சிறிது வதக்கி, நிலக்கடலைத் துருவலையும் தூவி இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு பிழிந்து, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இதில் பாசிப்பருப்புக்கு பதில் முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்தும் செய்யலாம்.

4. (காய்கறி சேர்த்து ‘கிச்சடி’ வகை)

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை

காய்கறி:
இஞ்சி
பச்சை மிளகாய்
வெங்காயம் (விரும்பினால்)
கேரட்
பீன்ஸ்
பச்சைப் பட்டாணி
கோஸ்
காலிஃப்ளவர்
குடமிளகாய்

தாளிக்க –  எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.

javvarisi (sabudhana)  vegetable uppumaa

செய்முறை:

  • நன்றாகக் கொதிக்கும் நீரை, ஜவ்வரிசி மூழ்கும்வரை ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஊறிய ஜவ்வரிசியை ஒட்டப் பிழிந்து, கடலை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஜவ்வரிசியை அடுப்பில் இடுவதற்கும் முன் மட்டுமே பிழிந்து கடலைமாவு, உப்போடு சேர்க்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதிகமான தீயில் கைவிடாமல் வதக்கவும். (அல்லது சிறிய தீயில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடிவைத்தும் வேக வைக்கலாம்.)
  • காய்கறிகள் 2 நிமிடம் வதங்கியதும், ஜவ்வரிசிக் கலவையைச் சேர்த்து, ஒட்டாமல் கிளறி இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து, சூடாகச் சாப்பிடவும்.

* இந்த வகை உப்புமாவும் நிச்சயம் உதிர் உதிராக வரும். ஆறினாலும் சுவையாக இருக்கும்.

*

javvarisi (sabudhana) vegetable kichchadi

இத்துடன் இரண்டு தக்காளிகளும், ஒரு பச்சை மிளகாய், கால் கப் தண்ணீர் சேர்த்துக் கிளறினால் சுவையான கிச்சடி கிடைக்கும். இதில் எலுமிச்சைச் சாறு தேவை இல்லை. பச்சைப் பட்டாணிக்குப் பதில் கொத்துக்கடலை அல்லது பச்சைப் பயறும் உபயோகிக்கலாம். இது ஏனோ ஓரளவு முழுமையான உணவு மாதிரி எனக்கு எண்ணம். அநேகமாக இந்த முறையிலேயே செய்கிறேன். இதில் ஜவ்வரிசி தனித் தனியாக இருக்கும். ஆனால் உப்புமா உதிராக இல்லாமல் கிச்சடி மாதிரி சேர்ந்தாற்போல் தான் இருக்கும். காய்கறிகளோடு அல்லது காய் இல்லாமல் தனியாக நறுக்கிய கீரை சேர்த்தும் செய்யலாம். விரும்புபவர்கள் ஏதாவது மசாலாப் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். நான் சேர்ப்பதில்லை.

==

* மைக்ரோவேவ் அவனில் இந்த உப்புமாவை சுலபமாகச் செய்யலாம். ஹையில் ஒரு நிமிடம் வைத்து, வெளியே எடுத்து இரண்டு நிமிடம் கழித்துக் கிளறி மீண்டும் ஒரு நிமிடம் வைத்தால் வெந்துவிடும். ஆனால் அதற்கும் தண்ணீர் மற்றும் ஊறும் நேரம் குறித்த கவனம் தேவை.

* உப்புமா குழைந்து போவதற்கு அதிலிருக்கும் அதிக அளவு தண்ணீரே காரணம். நடுவான அளவு இருந்தால் ஒரு கப் ஜவ்வரிசிக்கு ஒரு கப் தண்ணீரும், பெரிய அளவிலான ஜவ்வரிசிக்கு ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீரும் சரியாக இருக்கும். சில சமயம் தரத்தைப் பொருத்து இது மாறலாம். குழைந்தால் அடுத்த முறை இன்னும் கொஞ்சம் தண்ணீரைக் குறைவாக எடுத்து ஊறவைக்கவும்.

* பொதுவாக சின்ன ஜவ்வரிசியை அலசியதும் நீரை வடித்து உடனே உபயோகிக்கலாம். சுமாரான அளவுள்ள ஜவ்வரிசிக்கு ஒரு மணி நேரம் மட்டும் ஊறவைத்தும், பெரிய அளவு ஜவ்வரிசிக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைத்தும் செய்ய வேண்டும். நைலான் ஜவ்வரிசியாக இருந்தால் அதைவிட அதிகத் தண்ணீர், அதிக நேரம் ஊறுவது குறித்து கவலைப்படாமால் செய்யலாம். இது எப்படிச் செய்தாலும் ஒட்டாமல் உதிராகத் தான் இருக்கும். தயங்குபவர்கள் நைலான் ஜவ்வரிசியே முதலில் உபயோகித்துச் செய்து பார்க்கவும்.

* எப்படி இருந்தாலும் ஊறிய ஜவ்வரிசியை நீர் இருந்தால் ஒட்ட வடிகட்டி(அநேகமாக இருக்காது), சமைப்பதற்கு முன் சில துளிகள் எண்ணெய் கலந்தால் ஒட்டாமல் வந்துவிடும். கடலை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து உதிர்த்துக் கொள்வது மேலும் சுலபமாக்கும்.

* இவ்வளவு மெனக்கெட்டும் உப்புமா, குழைந்து போகக் காரணம், மாவு ஜவ்வரிசி சில பல சமயம் பாக்கெட்டிலேயே உடைந்து தூளாகி, அந்த ஜவ்வரிசி மாவும் கலந்திருக்க வேண்டும். எனவே ஊறவைப்பதற்கு முன் சலித்து, முழு ஜவ்வரிசியாக மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. (சலித்துக் கிடைத்த மாவை வீணாக்க வேண்டாம். காலையில் ஓட்ஸ் கஞ்சி போடும்போது சேர்த்துக் கொள்வேன். வடை, போண்டா மாதிரி மாவுகளிலும் சேர்க்கலாம். எண்ணெயில் பொரித்து சூப்பில் சேர்க்கலாம்.) நைலான் ஜவ்வரிசியில் இந்தப் பிரச்சினை இல்லை.

* இந்தப் படங்களில் இருப்பவை மாவு ஜவ்வரிசியில் செய்தவையே. உருளைக் கிழங்கு சேர்த்துச் செய்த உப்புமா மட்டும் என்னிடம் இன்று இருப்பு தீர்ந்து போனதால்- இதற்காக, கடைக்குப் போக சோம்பியதால்- பெரிய சைஸ் ஜவ்வரிசியில் செய்தது.

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி – 3/4 கப்
இட்லி புழுங்கல் அரிசி – 3/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
பச்சை மிளகாய் – 4
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணை – 2 டீஸ்பூன்

தாளிக்க –  எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு(விரும்பினால்), பெருங்காயம். கறிவேப்பிலை.

செய்முறை: 

  • அரிசிகளைக் கழுவி, வடித்து சிறிதுநேரம் துணியில் காயவைத்து ரவை மாதிரி அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம். கறிவேப்பிலை, பச்சை பட்டாணி தாளித்து, மிளகாயையும் நீளவாக்கில் அரிந்து போடவும்.
  • இதில் தண்ணீர், தேங்காய்த் துருவல், உப்பு சேர்க்கவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ரவையைச் சேர்த்து, குறைந்த தீயில் நன்குவேகும் வரை கிளறவும். பிரஷர் பேன் அல்லது குக்கரில் மூடிவைத்து சமைக்கலாம்.
  • தேங்காய் எண்ணை, மல்லித் தழை கலந்து பரிமாறவும்.

* இந்த உப்புமாவில் தண்ணீருக்குப் பதிலாக புளித் தண்ணீர் அல்லது 2 கப் தயிர் சேர்த்தும் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்

தாளிக்க:
தேங்காய் எண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு –  1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு –  1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு –  1 டீஸ்பூன்
பெருங்காயம் –  1 சிட்டிகை
கறிவேப்பிலை –  சிறிது
வெங்காயம் – 2 (விரும்பினால்)

செய்முறை:

  • அரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித் தனியாக சிவக்க வறுக்கவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நீளமாக அரிந்த வெங்காயம் தாளிக்கவும்.
  • அடுப்பில், குக்கர் உள்பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, வறுத்த அரிசி, பருப்பு, தாளித்த கலவை, தேங்காய்த் துருவல், தேவையான உப்பு சேர்த்து மூடி, வெயிட் போட்டு, சுமார் 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
  • சூட்டோடு நெய் சேர்த்து, மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

 * வெங்காயம் சேர்க்க விரும்பாதவர்கள் முட்டைக் கோஸ் இலைகளை மெலிதாக ஆனால் நீளமாக அரிந்தும் செய்யலாம். அல்லது இரண்டும் சம அளவில் கலந்தும் உபயோகிக்கலாம். வெங்காயத்திற்கான மிகச் சிறந்த மாற்று முட்டைக்கோஸ் என்ற அளவில் இப்பொழுதைக்குத் தெரிந்து கொள்வோம்

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கத்திரிக்காய் புளிக் கொத்சு, தக்காளிக் கொத்சு, சாம்பார் வகைகள்.

உண்மையில் உப்புமா செய்வதை விட அதன் ஒன்றுவிட்ட அண்ணா பையனான கிச்சடி செய்வது கொஞ்சம் ரிஸ்க் இல்லாதது. தண்ணீர் அளவு, ரவையின் தன்மை போன்ற நெருக்கடிகள் நம்மை வாட்டுவதில்லை. முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு கலக்கலாக இருக்கும். உப்புமா என்ற பெயர் கொடுக்கும் சலிப்பை இது தருவதில்லை என்பதும் கூடுதல் பண்பு.

(1) ரவைக் கிச்சடி

தேவையான பொருள்கள்:

பம்பாய் ரவை – 1 1/2கப்
வெங்காயம் – 2
உருளைக் கிழங்கு – 1
முட்டைக்கோஸ் – 5,6 இலைகள்
கேரட் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
குடமிளகாய் – 1
பீன்ஸ் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 8
இஞ்சி – சிறிது
எண்ணை – 1/4 கப்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 5 கப்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • வாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து அதிகத் தீயில் வேகமாக அடிப்பிடிக்காமல்  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (*)
  • இப்போது உதிர்த்த பனீர், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைச் சேர்த்து அடுப்பில் நிதானமான சூட்டில் கிளறி, மூடிவைக்கவும்.
  • நன்றாக வெந்ததும் இறக்கி, நெய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

* அதிகத் தீயில், காய்கறிகளை, குறைந்த நிமிடத்தில் வேகமாக அரைவேக்காடு அளவிலேயே வதக்கி நிறுத்துவது சைனீஸ் முறை. கொஞ்சம் ஆரோக்யமானதும் கூட.

* எலுமிச்சை சாறுக்குப் பதிலாக புளித் தண்ணீர் அல்லது க்ரீம் உள்ள கெட்டித் தயிர் உபயோகிக்கலாம்.

* தண்ணீருக்குப் பதில் முழுக்கவே தக்காளிச் சாறு உபயோகித்தும் செய்யலாம். தக்காளி பாத் என்று கர்நாடகத்தில் பெயர். இதற்கு புளி, எலுமிச்சைச் சாறு, தயிர் எதுவும் சேர்க்கக் கூடாது.

* கிச்சடிக்கு, ரவையை வறுக்கத் தேவையில்லை.

(2) சம்பா கோதுமை ரவைக் கிச்சடி

ரவைக் கிச்சடி போலவே புளித் தண்ணீர் உபயோகித்து தயாரிக்கலாம். தண்ணீர் மட்டும் ஒன்றுக்கு மூன்று (1:3). மற்ற குறிப்புகள் ரவைக் கிச்சடிக்குச் சொன்னவையே.

(3) சேமியாக் கிச்சடி

ரவை கிச்சடி செய்வது போலவே; ஆனால் ரவையும் சேமியாவும் பாதிப் பாதி அளவு எடுத்து செய்யவேண்டும்.

ரவைக்கு ஒன்றிற்கு 2 பங்கு(1:2), சேமியாவிற்கு ஒன்றிற்கு ஒரு பங்கு (1:1), மற்றும் காய்கறிகளுக்காக அதிகமாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து செய்யவேண்டும்.

* உப்புமாவிற்குச் செய்வதுபோல், இதில் ரவையை வறுக்கத் தேவை இல்லை. சேமியாவைத் தனியாக வேகவைக்கத் தேவை இல்லை. 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, தக்காளிக் கொத்சு, சாம்பார் வகைகள்.

எந்த ஆயத்தமும் இல்லாமல் உடனடியாகச் செய்யக் கூடிய சுவையான அரிசி உப்புமா இதுவே.

arisi-uppuma2-kathirikkaai-puli-kothsu.JPG

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு –  1/4 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
எண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணை –  1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது.

தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • அரிசி, பருப்பைக் கழுவி, நீரை வடித்து, மிக்ஸியில் ஓரிரண்டு நிமிடம் ஓடவிட்டு, ரவை மாதிரி அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, உடைத்த ரவையைச் சேர்த்துக் கிளறவும்.
  • தண்ணீர் வற்றி, கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • இந்தக் கலவையை இட்லிதட்டில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, குக்கரில் வெயிட் போடாமல் (இட்லி வேகவைப்பது மாதிரி) 10லிருந்து 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும். (உடனடியாகச் செய்ய நினைப்பவர்கள், கைபட முடியாமல் சூடாக இருந்தால் அப்படியே ஒரு கரண்டியால் எடுத்துவைத்து, இட்லிவடிவிலேயே கூட, தட்டி வேகவைக்கலாம்.)
  • வெந்த இட்லிகளை உதிர்த்து, தேங்காய் எண்ணை, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கத்திரிக்காய் புளிக் கொத்சு, தொக்கு.

தேவையான பொருள்கள்:

சேமியா – 200 கிராம் (1 பாக்கெட்)
வெங்காயம் – 1
தக்காளி – 2
குடமிளகாய் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க –  எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • பாக்கெட்டில் சொல்லியிருக்கும்படி சேமியாவை வேகவிடவும் அல்லது ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணை, சிறிது உப்பு சேர்த்து, பின் சேமியாவையும் சேர்த்து வேகவிடவும்.
  • நன்கு வெந்ததும் வடிதட்டில் வடித்து, பின் ஒரு கப் குளிர்ந்த நீர் சேர்த்து வடிய விடவேண்டும்.(*
  • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
  • அதனுடன் நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து, வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும், பொடியாக அரிந்த தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். உதிர்த்த பனீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • மேலே வேகவைத்தை சேமியாவைச் சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கலக்கும்வரை ஓரிரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* எந்த ப்ராண்டாக இருந்தாலும் சேமியாவைத் தனியாக வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி, பின் உபயோகித்தாலே சேமியா ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். நேரிடையாக வாணலியில் சேர்த்து வேகவைத்தால் உதிரியான உப்புமா கிடைக்காமல் களி கிண்டியதுபோல் ஆகலாம். இது மிக முக்கியம்.

* இந்த உப்புமாவை ஃபோர்க் உபயோகித்து சாப்பிடுவதே வசதியானது மற்றும் ருசியானது. 🙂
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணை – 1 டீஸ்பூன்

தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • அரிசி, துவரம் பருப்பை மிஷினில் அல்லது மிக்ஸியில் ரவை மாதிரி உடைத்துக் கொள்ளவும்.
  • மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடிவிடவும்.
  • 8லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
  • அடுப்பை அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* அரிசி உப்புமா ஒன்றுக்கு மூன்றுபங்கு தண்ணீர் வைத்து, வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானையில் செய்வது மிகுந்த சுவையைக் கொடுக்கும்.

* மிளகு சேர்த்தாலும் காய்ந்த மிளகாயே உப்புமாவிற்கு பிரத்யேகமான மணத்தைக் கொடுக்கும். எனவே அவசியம் ஒரு காய்ந்த மிளகாய் தாளித்தே ஆகவேண்டும். 🙂

* உடைத்த ரவையோடு ஒரு பிடி பயத்தம் பருப்பும் சேர்த்து உப்புமா செய்தால் சுவையாக இருக்கும்.

* விரும்பினால் மோர்மிளகாயும் சேர்த்து தாளிக்கலாம்.

* தைரியமானவர்கள் 🙂 உப்புமா முழுக்கவே தேங்காய் எண்ணையில் செய்யலாம்.  அஞ்சுபவர்கள் மட்டும் சாதாரண சமையல் எண்ணையில் செய்துவிட்டு, ஒரு டீஸ்பூன் மட்டும் பச்சை தேங்காய் எண்ணையை இறுதியில் சேர்த்துக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.

* பிரஷர் பேனில் செய்யலாம். அதை விட குக்கரில் ஒரு உள்பாத்திரத்தில் கலவையைக் கொட்டி வேகவைப்பது இன்னும் வசதியானது. இரண்டு விசில் வரை வைத்துத் திறந்து எண்ணை சேர்த்துக் கிளறினால் பொலபொலவென உதிர்ந்து அருமையான உப்புமா தயாராகி இருக்கும். நமக்கும் இதில் அதிகம் வேலை இல்லை. எண்ணையும் மிகக் குறைந்த அளவு உபயோகித்தாலே போதுமானது.

ஆனால் இந்த முறையில் உப்புமாவிற்கே ஸ்பெஷலான ‘பொறுக்கு’ என்ற, பாத்திரத்தின் அடியில் பிடித்திருக்கும் லேசாகப் பொன்முறுகலாகப் பிடித்துக்கொண்ட பகுதி கிடைக்காது. அதன் ரசிகர்களுக்கு- வாணலி, பிரஷர் பேனில் கூட இது சுமாரான சுவையோடேயே கிடைக்கும்; வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானையே உசிதம்.

* அரிசியோடு கடலைப் பருப்பு சேர்த்து ரவை மாதிரி உடைத்தும் உப்புமா கிளறலாம். மிளகு சீரகத்தையும் சேர்த்தே உடைத்தால் ருசியாக இருக்கும்.

இந்த உப்புமாவை மற்றொரு வழியிலும் செய்யலாம்.

  • அரிசி, பருப்பை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கரகரப்பாக ரவை மாதிரி ஆனால் தோசை மாவு அல்லது அதைவிட நெகிழ்ந்த பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடி கனமான வாணலி அல்லது பிரஷர் பேனில் மேலே குறிப்பில் சொல்லியிருப்பது போலவே தாளித்த பின், இந்தக் கலவை, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, தண்ணீர் வற்றி, மாவு வெந்து எண்ணை பிரியும் வரை, உப்புமாவைக் கிண்ட வேண்டும். அல்லது பிரஷர் பேனை மூடிவைத்தும் தயாரிக்கலாம்.

* பச்சரிசி, இட்லி புழுங்கல் அரிசி இரண்டையும் பாதிப் பாதியாக எடுத்துச் செய்தால் இந்த முறையில் இன்னும் சுவையாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தொக்கு, கத்திரிக்காய் புளிக் கொத்சு, கொத்தமல்லிச் சட்னி.

பல ஆண்களுக்கு உப்புமா என்றால் அலர்ஜி. பல பெண்களுக்கு உப்புமா (செய்வது) வரப்பிரசாதம் மாதிரி. சின்ன கேப் கிடைத்தாலும் சுலபமாகச் செய்து, தலையில் கட்டிவிடுவார்கள். மரத்தடியில் ஷைலஜா உப்புமா என்றதும் ‘கூப்டீங்களா?’ என்று ஓடோடி வருவார். பொறாமையாக இருக்கும்.

என்னைப் பொருத்த வரை உப்புமா ஒரு தெய்வம். அல்லது அதற்கும் மேலே. ஏனா? தெய்வத்தைவிட அதிகமாகவே என் வாழ்க்கையை சோதித்த உப்புமாவை வேறு எப்படிச் சொல்வது? மிகவும் அடிபட்டுப் (ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை) போனேன். தொலைப்பேசி என்பதே அரிதாக இருந்த காலத்தில், கஷ்டப்பட்டு அம்மாவைப் பிடித்து ‘என்ன தப்புன்னே தெரியலை, சரியாவே வரலைம்மா’ என்றால், ‘இதைச் சொல்ல வெக்கமா இல்லையா?’ என்று மேம்போக்காகக் கேட்டுவிட்டு வேறு கதை பேச ஆரம்பித்துவிடுவார். கடைசி வரை எனக்கு வெட்கமும் வரவில்லை; அம்மாவிடமிருந்து விடையும் வரவில்லை. 

ரவை சரியில்லையா இருக்கும்  என்றெல்லாம் சொல்லிப் பார்த்து, ப்ராண்ட் மாற்றி ப்ராண்ட் உபயோகித்தும் சரிவராமல், வாணலி சரியில்லை என்று விதவிதமாக மாற்றிப் பார்த்தும் சரிவராமல்– அதற்காக மனைவியையா மாற்ற முடியும்?– உன்னோட ‘வாழறதுக்காக சாகற அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது’ என்ற சொல்லிக்கொண்டு கணவரே சுய நினைவுடன் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்பாவை சமையலறையில் பார்த்தாலே, ‘இன்னிக்கி உப்புமாவா?’ என்று பெண் கிண்டலடிக்கும் அல்லது சலித்துக்கொள்ளும் அல்லது என்னை முறைக்கும் அளவுக்குப் பிரசித்தம்.

எப்பொழுதாவது சில சமயம் எனக்கும் மிகப் பிரமாதமாக வந்து ஆட்டத்தில் அதிர்ச்சி வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் விருந்தினர் யாராவது இருந்தால், எந்த அவசரத்திலும் கூட இந்த முயற்சி எல்லாம் எடுப்பதே இல்லை. ‘சீ, சீ அதெல்லாம் ஒரு டிபனா? நீங்க வராதவங்க வந்திருக்கீங்க!’ என்று கெத்தாகப் பேசி நழுவிவிடுவேன். இப்பொழுதும் உப்புமாவை மட்டும் ஒரு புதுப்பெண் மாதிரி பயத்துடனேயே தயாரிக்கிறேன். :(((

தேவையான பொருள்கள்:

பம்பாய் ரவை – 1 கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிது
எண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 அல்லது 2 1/4 கப்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு (விரும்பினால்), பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.
  • 10 முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • ரவையைச் சேர்த்து மேலும் 2,3 நிமிடங்கள் வறுக்கவும்.
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.
  • அடுப்பை சிம்’மில் வைத்து, வாணலியில் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து, கட்டிசேராமல் கிளறி மூடி வைக்கவும்.
  • உப்புமா வெந்து தண்ணீரில்லாமல் வற்றியதும், நெய்யை விட்டுக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு கலந்து, மல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* இந்த உப்புமாவை வாணலியில் செய்வதை விட பிரஷர் பேனில் செய்வது சுலபம். வாணலிக்குப் பதில் பிரஷர் பேனிலேயே நேரடியாகத் தாளித்து, வறுத்த ரவையில் தண்ணீர் சேர்த்து பிரஷர் பேனை மூடிவைத்து, வெயிட் போட்டு, 5 அல்லது 6 நிமிடங்கள் அடுப்பை சிம்’மில் வைத்தால், உப்புமா தயாராகி இருக்கும். குக்கரைத் திறந்து நெய், எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து பரிமாறலாம். சும்மா கிளறிக் கொண்டே இருக்க வேண்டாம். எண்ணை சிறிது குறைத்தும் உபயோகிக்க முடியும்.

* கடைசியில் எலுமிச்சை சாறு சேர்ப்பதற்குப் பதில் உப்புமாவில் தண்ணீர் சேர்க்கும்போதே இரண்டு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிரும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் செய்யலாம். இது மிகுந்த சுவையாகவும், நிறமாகவும் இருக்கும். அல்லது வெங்காயம் வதங்கியது இரண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

* நெய்யை, தாளிக்கும்போதே எண்ணையுடன் சேர்ப்பதை விட, இறுதியில் சேர்த்துக் கிளறி, பரிமாறினால் நெய் வாசம் மிகுந்து கிடைக்கும். எண்ணை குறைவாக விட்டாலும் வெளித் தெரியாது.

* எல்லாவற்றிற்கும் தேங்காயைத் துருவிப் போட்டுவிடுவேன்; இதற்கும். நன்றாகவே இருந்தது.

* சம்பா கோதுமை ரவை உப்புமாவிற்கு ஏன் குறிப்பு சொல்லவில்லை, என்று சிலர் கேட்கலாம்; அல்லது இனிமேல் சொல்வேனோ என்று சிலர் எதிர்பார்க்கலாம். சம்பா கோதுவை ரவையில் உப்புமா செய்து சாப்பிடுவதை விட சன்யாசம் வாங்கிக்கொண்டு போகலாம் என்பது பெரும்பாலானவர்களின் கோட்பாடாக இருப்பதால் நானும் சாய்ஸில் விடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் ரவை உப்புமா செய்வது போலவே இதையும் தண்ணீர் மட்டும் ஒன்றுக்கு மூன்று (1:3) என்ற விகிதத்தில் சேர்த்து, செய்து பார்த்துக் கொள்ளவும்.  வாழ்க!

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சர்க்கரை :), ஊறுகாய் :)), தேங்காய்ச் சட்னி, தக்காளி கொத்சு, கத்திரிக்காய் கொத்சு.