தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணை – 1 டீஸ்பூன்

தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • அரிசி, துவரம் பருப்பை மிஷினில் அல்லது மிக்ஸியில் ரவை மாதிரி உடைத்துக் கொள்ளவும்.
  • மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடிவிடவும்.
  • 8லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
  • அடுப்பை அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* அரிசி உப்புமா ஒன்றுக்கு மூன்றுபங்கு தண்ணீர் வைத்து, வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானையில் செய்வது மிகுந்த சுவையைக் கொடுக்கும்.

* மிளகு சேர்த்தாலும் காய்ந்த மிளகாயே உப்புமாவிற்கு பிரத்யேகமான மணத்தைக் கொடுக்கும். எனவே அவசியம் ஒரு காய்ந்த மிளகாய் தாளித்தே ஆகவேண்டும். 🙂

* உடைத்த ரவையோடு ஒரு பிடி பயத்தம் பருப்பும் சேர்த்து உப்புமா செய்தால் சுவையாக இருக்கும்.

* விரும்பினால் மோர்மிளகாயும் சேர்த்து தாளிக்கலாம்.

* தைரியமானவர்கள் 🙂 உப்புமா முழுக்கவே தேங்காய் எண்ணையில் செய்யலாம்.  அஞ்சுபவர்கள் மட்டும் சாதாரண சமையல் எண்ணையில் செய்துவிட்டு, ஒரு டீஸ்பூன் மட்டும் பச்சை தேங்காய் எண்ணையை இறுதியில் சேர்த்துக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.

* பிரஷர் பேனில் செய்யலாம். அதை விட குக்கரில் ஒரு உள்பாத்திரத்தில் கலவையைக் கொட்டி வேகவைப்பது இன்னும் வசதியானது. இரண்டு விசில் வரை வைத்துத் திறந்து எண்ணை சேர்த்துக் கிளறினால் பொலபொலவென உதிர்ந்து அருமையான உப்புமா தயாராகி இருக்கும். நமக்கும் இதில் அதிகம் வேலை இல்லை. எண்ணையும் மிகக் குறைந்த அளவு உபயோகித்தாலே போதுமானது.

ஆனால் இந்த முறையில் உப்புமாவிற்கே ஸ்பெஷலான ‘பொறுக்கு’ என்ற, பாத்திரத்தின் அடியில் பிடித்திருக்கும் லேசாகப் பொன்முறுகலாகப் பிடித்துக்கொண்ட பகுதி கிடைக்காது. அதன் ரசிகர்களுக்கு- வாணலி, பிரஷர் பேனில் கூட இது சுமாரான சுவையோடேயே கிடைக்கும்; வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானையே உசிதம்.

* அரிசியோடு கடலைப் பருப்பு சேர்த்து ரவை மாதிரி உடைத்தும் உப்புமா கிளறலாம். மிளகு சீரகத்தையும் சேர்த்தே உடைத்தால் ருசியாக இருக்கும்.

இந்த உப்புமாவை மற்றொரு வழியிலும் செய்யலாம்.

  • அரிசி, பருப்பை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கரகரப்பாக ரவை மாதிரி ஆனால் தோசை மாவு அல்லது அதைவிட நெகிழ்ந்த பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடி கனமான வாணலி அல்லது பிரஷர் பேனில் மேலே குறிப்பில் சொல்லியிருப்பது போலவே தாளித்த பின், இந்தக் கலவை, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, தண்ணீர் வற்றி, மாவு வெந்து எண்ணை பிரியும் வரை, உப்புமாவைக் கிண்ட வேண்டும். அல்லது பிரஷர் பேனை மூடிவைத்தும் தயாரிக்கலாம்.

* பச்சரிசி, இட்லி புழுங்கல் அரிசி இரண்டையும் பாதிப் பாதியாக எடுத்துச் செய்தால் இந்த முறையில் இன்னும் சுவையாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தொக்கு, கத்திரிக்காய் புளிக் கொத்சு, கொத்தமல்லிச் சட்னி.

Advertisements