துவையல்


தேவையான பொருள்கள்:

இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

inji thuvaiyal 1inji thuvaiyal

செய்முறை:

  • இஞ்சியைத் தோல்சீவி, நன்றாகக் கழுவி, சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
  • இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
  • தேங்காயைத் துருவல், புளி, பச்சைமிளகாயைக் கலந்து ஆறவைக்கவும்
  • ஆறியதும், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

* வழக்கமாகச் சொல்வதுதான் என்றாலும்– காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். கல் உப்பு உபயோகிப்பது இன்னும் சுகம்.
 
* இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.

* விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

* பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்லும்போது தேங்காயையும் நன்கு வதக்கியே அரைத்து எடுத்துச் செல்லலாம். சீக்கிரம் கெடாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நல்லெண்ணெய் கலந்த சாதம், தயிர் சாதம், பொங்கல், உப்புமா….

தலை”மை“ப் பண்புக்கு அஞ்சுபவர்கள் அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டிய துவையல். ஆனால் எழுத்துலகின் ‘பிதாமகன்‘ வேடத்திற்குப் பொருந்துவதாக நினைப்பவர்கள், தனக்கும் எழுத்தெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் கெட்டப் மட்டுமாவது வரட்டும் என்று விரும்புபவர்கள், இதைத் தவிர்த்தல் நலம். [பெண்கள் இலக்கியவாதிகளே ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடமாட்டார்கள் என்று நம்புவோம். :)] வயிற்றில் பிரச்சினை, அல்லது உடல்நலமில்லாதிருந்து மீளும்போது பசியை அதிகரிக்கச் செய்யும் அருமருந்து கறிவேப்பிலை.

தேவையான பொருள்கள்:

கறிவேப்பிலை – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு

karuveppilai thuvaiyal

செய்முறை:

  • அதிகம் முற்றலில்லாத கறிவேப்பிலையாக உதிர்த்து 2 கப் எடுத்து, நீரில் அலசி வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் என்ற வரிசையில் சிவக்க வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு, புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை லேசாக மட்டும் வதக்கிக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் கறிவேப்பிலைக் கலவையை தேங்காய்த் துருவல், தேவையான உப்பு, கொத்தமல்லி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • எடுப்பதற்கு முன் வறுத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய், பருப்புகளைச் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி(ஒன்றிரண்டாக உடைபட்டால் போதும்) எடுத்து வைக்கவும்.

* தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள் ஒரு கேரட் சேர்த்துக் கொள்ளலாம். கேரட்டில் உள்ள கேரட்டின் சத்து லேசாக வதக்குவதாலேயே வெளிப்படுகிறது என்பதாலும் லேசாக பச்சை வாசனை போகவும், அதையும் கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்கிவிட்டு அரைப்பது நல்லது. நான் அதிகம் துவையல், அடை மாதிரி உணவுகளில் தேங்காய்க்குப் பதில் கேரட் (அல்லது இரண்டும் பாதிப் பாதி அளவு சேர்த்து) தான் உபயோகிக்கிறேன். தேங்காய் சேர்ப்பதைவிட சுவையாக இருக்கும்.

* தேங்காய் சேர்க்காமல் நன்றாக கறிவேப்பிலையை வதக்கி அரைத்துக்கொண்டால், பிரயாணங்களுக்கு தயிர்சாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பருப்பு சேர்த்த, அதிகம் மசாலா சேர்க்காத கூட்டு வகைகள் தொட்டுக்கொண்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

தயிர் சாதத்துடன் சேரும்.

நன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா.

பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம்.

பிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக் குறிப்பைப் படித்து :), சரியாகவே இருப்பதாகச் சொல்லிவிட்டாலும்– எழுத்தாளர் உஷா, தன்னுடைய சிறப்புக் குறிப்பை இன்னும் அனுப்பவில்லை என்பதை இந்த வேளையிலே நினைவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 🙂
 

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

thakkaalikkai thuvaiyal chutney

செய்முறை:

  • தக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.

தேவையான பொருள்கள்:

புடலங்காய்க் குடல் – 2 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

pudalangaai kudal

செய்முறை:

  • புடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • தனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால், லேசாகச் சுண்டி, தண்ணீர் விட்டிருக்கும்.
  • வறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.

* இதே மாதிரி பரங்கிக்காய்க் குடல், பொடியாக நறுக்கிய சௌசௌ தோல், இளம் பீர்க்கங்காய் தோல், போன்றவற்றிலும் தனித்தனியாகவோ, இவைகளில் இரண்டு மூன்றை சேர்த்தோ செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், தேங்காய் சாதம். தயிர்சாதம்…..

புளி சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தால், சட்னி மாதிரி பொங்கல், உப்புமா, சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3, 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
புளி – சுண்டைக்காய் அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு

thengaai thuvaiyal 1

செய்முறை:

  • வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.
  • ஆறியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (அம்மியில் அரைத்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.)

thengaai thuvaiyal 2

* தேங்காயின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் லேசாக வறுத்துக் கொள்ளலாம்.

* துவரம் பருப்பு 1 டீஸ்பூன் சேர்த்து வறுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். பலருக்குப் பிடித்திருக்கிறது.

* எனக்கு திவசத்தன்று செய்யும் தேங்காய்த் துவையல் பிடிக்கும். அம்மியில் அரைப்பது மட்டுமின்றி அத்துடன் 1 டீஸ்பூன் எள் சேர்ப்பதும் தான் சுவைக்குக் காரணம் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும். இதற்கே முதல் இடம்.

தயிர் சாதம், உப்புமா, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீண்ட பயணங்களுக்குத் தயாரிக்கும்போது, தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளலாம். கெடாமல் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 1/2 கப்
பெருங்காயம்
எண்ணை – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1 (விரும்பினால்)
தேங்காய் – 1 டீஸ்பூன்(மட்டும்)
உப்பு – தேவையான அளவு

paruppu thuvaiyal

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து நிதானமான தீயில் பச்சை வாசனை போக, கருகிவிடாமல் நன்கு கிளறிவிட்டுக் கொண்டே, சிவக்க வறுக்கவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் போட்டு, உப்பு, தேங்காய் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மிகவும் நைசாக அரைக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடாக, தளரக் கலந்த வத்தக் குழம்பு, மிளகுக் குழம்பு அல்லது எந்தக் காரக் குழம்பு சாதத்திற்கு ஏற்றது. மிளகு ரசம் சாதத்துடனும் அருமையாகச் சேரும்.