தேவையான பொருள்கள்:
தேங்காய்த் துருவல் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3, 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
புளி – சுண்டைக்காய் அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- அத்துடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.
- ஆறியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (அம்மியில் அரைத்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.)
* தேங்காயின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் லேசாக வறுத்துக் கொள்ளலாம்.
* துவரம் பருப்பு 1 டீஸ்பூன் சேர்த்து வறுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். பலருக்குப் பிடித்திருக்கிறது.
* எனக்கு திவசத்தன்று செய்யும் தேங்காய்த் துவையல் பிடிக்கும். அம்மியில் அரைப்பது மட்டுமின்றி அத்துடன் 1 டீஸ்பூன் எள் சேர்ப்பதும் தான் சுவைக்குக் காரணம் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும். இதற்கே முதல் இடம்.
தயிர் சாதம், உப்புமா, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீண்ட பயணங்களுக்குத் தயாரிக்கும்போது, தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளலாம். கெடாமல் இருக்கும்.
செவ்வாய், ஓகஸ்ட் 28, 2007 at 3:03 பிப
?!?!?!?!
என்னங்க மேடம், இன்று அப்பம், வடை, பாயசமெல்லாம் செய்வீங்கன்னு பாத்தேன். 😦 மாமா கயிறு மாத்தலையா? 🙂
வியாழன், ஓகஸ்ட் 30, 2007 at 3:43 பிப
அம்மணீ,
தேங்காய் துகையல் என்றால் அது வெள்ளை கலரில் இருக்கும் என்று நினைத்தேன். அது ஏன் என் கலரில் செய்திருக்கிறீர்கள். இல்லை, இதுதான் ஒரிஜினலா.
அப்புறம், இதுக்கு பொட்டுக்கடலை போட்டுக்கலாமா?
வியாழன், ஓகஸ்ட் 30, 2007 at 10:34 பிப
ஜயராமன்,
அம்மணீ இல்லை ஜெயஸ்ரீ. : )
தேங்காய்த் துவையல் ஒரேயடியா வெள்ளைக் கலர்ல எல்லாம் இருக்காது. கொஞ்சம் கலர் மாறித் தான் இருக்கும். ஆனா நான் வறுத்து வெச்சிருக்கற சாமான்கள், கறிவேப்பிலை, அப்புறம் இந்தத் தடவை வாங்கியிருக்கற காய்ந்த மிளகாய் எல்லாம் அரைச்சதும், துவையலை ரொம்பத் தான் கலர் மாத்திடுச்சு. 😦
மாங்காய்த் தொக்கு செஞ்சுட்டு, அதோட கலருக்கு பயந்தே இங்க போடாம வெச்சிருக்கேன். அவ்ளோ சிகப்பாயிட்டு. என்னவோ பட்டணம் மொளகாயாம். அண்ணாச்சி தலைல கட்டிட்டாரு.
பொட்டுக்கடலை, சட்னிக்குத் தான் நல்லா இருக்கும்னு நான் நினைக்கறேன். இதுக்கு போடறதில்லை.
வெள்ளி, ஓகஸ்ட் 31, 2007 at 10:47 முப
/// பொட்டுக்கடலை, சட்னிக்குத் தான் நல்லா இருக்கும்னு நான் நினைக்கறேன். இதுக்கு போடறதில்லை. ///
ஆகாகா, இந்த சட்னி மிஞ்சினா அதை இளக்கி எங்கம்மா சட்னியாக்கி விடறாங்களே, அதுனால கேட்டேன். இப்பதான் தெரியுது, இவிங்க பண்ணுற குறுக்குவழி. தேங்க்ஸ்.