அதிகம் மசாலா சேர்க்காமல், எளிமையான கூட்டு. அநேகமாக எல்லாக் காய்களிலும் இதைச் செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
காய் – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறி மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- பருப்புகளுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிம்மில் வைத்து மூடி வைத்து பாதியளவு வேக வைக்கவும்.
- இந்த நேரத்தில் காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் காயையும் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும். காய் வெந்திருக்கும் நேரத்தில் பருப்பு இலைப் பதமாக வெந்திருக்கும்.
- கறி மசாலாப் பொடி அல்லது ரசப் பொடி சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவைத்து தளர்வான பதத்தில் இறக்கவும். (ஆறியதும் அதிகம் இறுகும்.)
- மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* பருப்பை குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வெந்தால் கூட்டோடு சேர்க்கும்போது மாவாகக் கரைந்துவிடும். மேலும் வாணலியில் தனியாக வேகவைக்கும்போது மணமும், சுவையும் நிச்சயம் அதிகமாக இருக்கும்.
* பயத்தம் பருப்போடு தான் கடலைப் பருப்பையும் சேர்க்க வேண்டுமென்பதில்லை. நான் தாளிக்கும் போதே அத்தனை கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்துவிடுவேன். நன்றாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
ரசம் சாதம், தயிர் சாதம், துவையல் சாதம், பொடி கலந்த சாதம், பருப்பு சேர்க்காத குழம்பு((மருந்துக் குழம்புகள், மோர்க் குழம்பு தவிர்த்து) சாதங்களுடன் சேரும்.
துவையல் சாதம் தவிர மற்றவற்றிற்குச் செய்யும்போது, இறக்குவதற்கு முன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
ஞாயிறு, செப்ரெம்பர் 30, 2007 at 12:34 பிப
கத்தரிக்காய் கூட்டு என இணையத்தில் தேடியபோது உங்கள் பக்கம் கிடைத்தது.
நல்ல உபயோகமான தகவல்கள்.
நன்றி
ஞாயிறு, ஒக்ரோபர் 7, 2007 at 12:51 பிப
கத்திரிக்காய் கூட்டும் கிடைக்கற மாதிரி செஞ்சுடலாம் சிவா. 🙂 நன்றி.