பச்சடி


தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1 (சிறியது)
வெல்லம் – 1 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ.

maangaai pachchadi (veppam poo, ugadhi)

செய்முறை:

  • மாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • கரைத்து வைத்துள்ள புளி, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
  • மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நிதானமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும்.
  • வெல்லம் கரைந்ததும் சிறிது நீரில் கார்ன் ஃப்ளோரைக் கலந்து சேர்க்கவும்.
  • சேர்ந்தாற்போல் வந்ததும் ஏலப்பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  • நெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்க்கவும்.

[எனக்கு ஜனவரி மாசம் அவங்கள்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாட்டாலும்கூட [:)] அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம– நம்ப முதல்வர் மாதிரி பெருந்தன்மையாக்கும் நான்– ஆந்திர நண்பர்களுக்கு உகாதி வாழ்த்துச் சொன்னேன். பச்சடி என் ரெசிபியும் கேட்டதால் சொன்னேன். “Good. ஆனா வாழைப்பழம் போடமாட்டியா”ன்னு கேட்டாங்க. “செல்லாது செல்லாது” மாதிரி ஒரு லுக் வேற. ஐயய்யோ, வேலையிருக்குன்னு தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஏதோ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொண்டாடறாரேன்னு நாமளும் உகாதி கொண்டாடினா ரொம்ம்பப் படுத்தாறாய்ங்க…]

* விரும்புபவர்கள் வாழைப்பழம், பலாப்பழத் துண்டுகளும் சேர்த்து, அறுசுவையும் முக்கனியும் சேர்ந்த உணவு என்று அல்டாப்பு விட்டுக் கொள்ளலாம். [முடியலை..]

அனைவருக்கும் உகாதி, குடிபாட்வா (गुढीपाडवा) வாழ்த்துகள்.

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கேரட்
கோஸ் (உள்பாகம்)
தக்காளி
….
….
கறிவேப்பிலை
கொத்தமல்லி
பெருங்காயம்
கருப்பு உப்பு [काला नमक, Black Salt] – (விரும்பினால்)
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய்.

thayir pachchadi (राइता, Raitha)

செய்முறை:

  • வெங்காயம், தக்காளி, கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்
  • வெள்ளரி, கேரட் போன்ற காய்களை துருவிக் கொள்ளவும்.
  • நறுக்கிய, துருவிய காய்கறிகள், பெருங்காயம் கலந்துவைத்துக் கொள்ளவும்.
  • பரிமாறும் நேரத்தில் தேவையான உப்பு, கருப்பு உப்பு (விரும்பினால்), கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.

*  தயிர் சாதத்திற்குச் சொன்னதைப் போலவே தயிர்ப் பச்சடிக்கும் தாளிக்கும்போது அதிக எண்ணெய் அல்லது கலங்கிய எண்ணெய் உபயோகிப்பது பச்சடியின் நிறத்தையும் தரத்தையும் கெடுக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொதுவாக மேத்தி சப்பாத்தி, புளியோதரை போன்ற உணவுகளுக்கு முடிந்தவரை எல்லா காய்களும் கலந்து செய்யலாம்.

வெஜிடபிள் பிரியாணி, புலவு போன்ற காய்கறிகள் உள்ள உணவிற்கு அதில் இல்லாத காய்களாக(வெள்ளரி, தக்காளி..) மட்டும் சேர்த்துச் செய்யலாம்.

ஏற்கனவே அதிகக் காரமாக உள்ள உணவிற்கு, இதில் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவை இல்லை.

தாளிக்காமல் கூட, தினமும் ஏதாவது ஒன்றிரண்டு பச்சைக் காய்கறிகளிலாவது தயிர்ப்பச்சடி செய்து கோடைக் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. 

அனைவருக்கும் சர்வஜித் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! 

தமிழ்ப் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் சேர்ந்த உணவாக மாங்காய்ப் பச்சடி செய்வார்கள்.

1. இனிப்புப் பச்சடி

தேவையான பொருள்கள்:

புளிப்பில்லாத மாங்காய் – 1 (சிறியது)
வெல்லம் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்
ஏலப்பொடி – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
வேப்பம்பூ – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க- எண்ணை, கடுகு, பச்சை மிளகாய்.
 

maangaai pachchadi 1

செய்முறை:

  • மாங்காயை பஜ்ஜிக்குச் சீவுவதுபோல் மெலிதான செதில்களாகச் சீவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய், உப்பு, கால் கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
  • பத்து நிமிடங்களில் மாங்காய் வெந்ததும் (transparentஆகத் தெரியும்) ஒரு கப் மாங்காய்த் துருவலுக்கு ஒரு கப் என்ற அளவில் வெல்லம் சேர்க்கவும்.
  • வெல்லம் கரைந்ததும் தண்ணீர் அல்லது பாலில் கார்ன்ஃப்ளோர் கரைத்துவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
  • நெய்யில் வேப்பம்பூவைப் பொன்னிறமாக வறுத்து, அடுப்பிலிருந்து இறக்கி, அந்த வாணலி சூட்டிற்கே ஓரளவு கருப்பாகும் வரை வைத்திருந்து பிறகு பச்சடியின் மேலே தூவவும்.

maangaai pachchadi 2

* புளிப்பான மாங்காயாக இருந்தாலும் நன்றாக இருக்கும். வெல்லம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே.

* பொதுவாக, அரிசி மாவுதான் கரைத்து விடுவார்கள். ஆனால் கார்ன்ஃப்ளோர் பதார்த்தத்திற்கு கண்ணாடி மாதிரி ஒரு மினுமினுப்பை மேலே தரும்.

* சிலர் வேப்பம்பூவை வறுத்தபின், பொடித்தும் சேர்ப்பார்கள்.

-0-

2. ஒரேயடியாக இனிப்பு பிடிக்காதவர்கள் இதை முயற்சிக்கலாம். இதிலும் அறுசுவையும் இருக்கும்.  ஆனாலும் பண்டிகை என்பதால் அநேகம் பேர் முதலாவதையே தேர்ந்தெடுப்பார்கள். 

தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1 (புளிப்பும் இனிப்பும் கலந்த சிறியது)
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
அரிசி – 1 டீஸ்பூன்
வெல்லம் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிக்க- தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ.

செய்முறை:

  • மாங்காயை பஜ்ஜிக்குச் சீவுவதுபோல் மெலிதான செதில்களாகச் சீவிக் கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், அரிசியை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாங்காய்த் துண்டுகள், கரைத்த புளிநீர், மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து அடுப்பில் வாணலியில் நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • மாங்காய் வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
  • எண்ணையில் கடுகை வெடிக்கவிட்டு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ சேர்த்து பொன்னிறத்திற்கு சற்று அதிகமாக வதங்கியதும் பச்சடியில் கலக்கவும்.

* பொதுவாக மாங்காய்த் துண்டுகளை வேகவைத்து, வெல்லம், சுக்கு, ஏலப்பொடி சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டால் பெருங்குடலுக்கு மிகவும் நல்லது. குடல் புற்றுநோயைப் பெருமளவு வராமல் தடுக்கிறது.

* ஒரு பண்டம் ஒன்று, தித்தித்தேன் என்று இனிப்பாக இருக்க வேண்டும் அல்லது நாவிற்கு சுகமாக காரமாகவாவது இருக்க வேண்டும். இரண்டுமாக இல்லாமல் அல்லது இரண்டும் கெட்டானாக இது போன்ற உணவுவகைகள் எனக்குப் பிடிப்பதில்லை, ஆனாலும் வருடப் பிறப்பு ஒரு நாளாவது வீட்டில் இருப்பவர்களுக்கும் பிடித்ததைச் செய்துவிட்டுப் போகலாமே என்று செய்வேன்.